திருப்புமுனை

1

காலம் கடந்துகொண்டே இருந்தது.

நேரம் செல்லச் செல்ல அருள் பொறுமை இழந்தான். இனியன் வரும் வழியை நூற்றி யொராவது முறையாக ஏறிட்டு நோக்கினான். யார் யாரோ வந்து போய்க்கொண்டிருந்தார்களே தவிர எதிர்பார்த்த இனியன் வருவதாகத் தெரியவில்லை. சலிப்போடு தன்னிடம் இருந்த இனியனின் புத்தகப் பையை அப்படியும் இப்படியுமாக நகர்த்தினான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனம் அன்று மாலை வகுப்பில் நடந்த சம்பவத்தை அசைபோடத் தொடங்கியது. அக்காட்சி அவன் மனத்திரையில் படமாகத் தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த மாணிக்கம் ஒவிய வகுப்பில் படம் வரைந்து கொண்டிருந்தான். கண்ணாயிரம் தனக்குப் படம் வரைந்து தருமாறு மாணிக்கத்தை உதவிக்கழைத்தான். அதற்கு மாணிக்கம் தனது படத்தை வரைந்துவிட்டு பிறகு உதவுவதாகக் கூறினான். பொறுமை இல்லாத கண்ணாயிரம் அவனைப் பார்த்து மோசமான வார்த்தைகளால் திட்டினான். அதைக் கேட்டு கோபத்தால் உணர்ச்சிவசப்பட்ட மாணிக்கம் வழக்கமாக வரும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கைகால்களை இழுத்துக் கொண்டு பெஞ்சியிலிருந்து கீழே விழுந்தான். வாயில் நுரை நுரையாக வர, ஆசிரியரும் வகுப்புத் தலைவன் இனியனும் பதறிப் போய் அவனைத் துாக்கி ஆசுவாசப் படுத்தினார்கள். பிறகு பூரணமாக நினைவு திரும்பிய மாணிக்கத்தை இனியன் கைத்தாங்கலாக அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அப்போது தன் புத்தகப்பையை பார்த்துக் கொள்ளும்படி தன்னிடம் இனியன் ஒப்படைத்துச்சென்றது ஆகிய அனைத்தும் அடுக்கடுக்காக அருளின் மனத்திரையில் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. காத்திருந்தவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து தன் புத்தகப்பையை ஒரு தோளிலும் இனியனின் புத்தகப் பையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தபடி நடையை ஒட்டினான்.

சிறிது தூரம்தான் போயிருப்பான். விளையாட்டு மைதானத்திலிருந்து விரைந்து வந்த மணி அவனோடு சேர்ந்து நடந்தான். இருவரும் மெளனமாக நடந்தார்கள். மணி ஒரு கனைப் புடன் அருளின் மவுனத்தைக் கலைத்தான்.

"அருள்! இன்னிக்கு மாணிக்கம் திடீர்'னு வகுப்பிலே காக்காய் வலிப்பு வந்து கீழே விழுந்ததை நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்குடா."

துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் தன் முகத்தைச் சற்றே வேகமாக வைந்துக்கொண்டு கேட்டான்.

இவர்கன் இருவருக்கும் பின்னால் வந்து கொண்டிருந்த கண்ணாயிரம் இவர்கள் பேச்சின் இடையே புகுந்து பேசினான்.

"ஆமான்'டா, மயங்கி கீழே விழுந்து கை கால்களை இழுத்துக் கொண்டு வாயில் நுரை தள்ள அவன் பட்ட அவஸ்தையை நினைக்கும் போது எனக்குக்கூட ரொம்பக் கஷ்டமாக இருக்குடா."

கண்ணாயிரத்தின் பேச்சில் துக்கத்தைவிட, பாசாங்கு அதிகமாக இருப்பது அருளுக்குத் தெரியாமல் இல்லை.

“அனுதாபம்தான் பெரிசா இருக்கு. அவன் உன்னால்தானே வலிப்பால் மயங்கி விழுந்தான். நீ மோசமான வார்த்தையால் திட்டியதால் தானே அவன் உணர்ச்சி வசப்பட்டான். மாணிக்கம் உணர்ச்சி வசப்பட்டால் அவனுக்கு இப்படி ஏற்படும் என்பது உனக்கும் தெரிந்தது தானே. எல்லாத்துக்கும் நீயே காரணமாய் இருந்துட்டு இப்ப வந்து பெரிசா அனுதாபப்படறியோ!”

நேரடியாக நெத்தியடிபோல் பொரிந்து தள்ளினான் அருள். கனமாக இருந்த அவன் மனம் லேசானதுபோல் தோன்றியது.

மேலும் தொடர்ந்தான் அருள்:

“மாணிக்கம் மயக்கமா விழறப்போ நீ பக்கத்திலேதானே இருந்தே; அப்போ நீ பயந்து போய் விலகிப் போனியே தவிர ஓடிப்போய் உதவலையே. மூணாவது வரிசையிலே இருந்த இனியன் எவ்வளவு வேகமாக விரைந்துபோய் தூக்கினான்.”

அருள் கூறியதை ஆமோதிப்பவன் போல் மணியும் ஒத்துப் பேசினான்:

“அதோட மயக்கம் தெளிந்த மாணிக்கத்தை அவன்தானே வீட்டுக்கும் அழைச்சிட்டுப் போயிருக்கான்.” 

கண்ணாயிரத்துக்குக் கைகொடுக்கும் முறையில் அவன் நண்பன் தங்கதுரையும் வந்து பேச்சில் கலந்து கொண்டான். கேலியும் கிண்டலும் கலந்த முறையில் நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி,

“ஒருவேளை இதுக்கும் ஏதாவது பரிசு தருவாங்க’ன்னு ஓடிப்போய் உதவியிருப்பான்!” என்று கூறிச் சிரித்தான் தங்கதுரை.

“சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?” என்று கூறிவிட்டு கண்ணாயிரமும் அவனுடன் சேர்ந்து சிரித்தான்.

இவர்களின் ஏளனச் சிறிப்பைக் கண்ட அருளுக்கு இருவர் மீதும் வெறுப்பும் எரிச்சலும் ஏற்படவே செய்தது.

"ஏன்'டா, இப்படி எப்பப் பார்த்தாலும் இனியன்மேலே பொறாமைப்படறீங்க. நம்ம கிட்ட இல்லாத எத்தனையோ நல்ல குணங்கள் அவன்கிட்ட இருக்கு. வேண்டிய அளவுக்குத் திறமையும் இருக்கு. அதனாலே அவனை எல்லாரும் பாராட்டறாங்க; பரிசு தந்து புகழ்றாங்க!!

இதைக் கேட்கப் பிடிக்காதவனாகத் தங்கதுறை எதிர்ப்புக் குரல் கொடுத்தான்:

“என்னடா, பெரிய திறமை? நம்மகிட்ட மட்டும் இல்லைய?”

தங்கதுரையின் பேச்சில் ஆணவம் தெரிந்தது.

“பள்ளிக்கூடத்தின் எல்லாப் பரிசுகளையும் இனியனே வாங்குறதுக்குக் காரணம் திறமையும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே. அதுக்கு ஒரு பெரிய ரகசியமே இருக்குடா!”

தங்கதுரையின் பேச்சை இடைமறித்து மர்மமாகப் புதிர் போட்டான் கண்ணாயிரம்.

பரிசு பெறும் மர்மத்தை அறிந்து கொள்ளத் துடித்தான் தங்கதுரை. பொறுமை இழந்தவனாக “அதென்ன அவ்வளவு பெரிய ரகசியம்?” என வினா தொடுத்து விடைக்காக கண்ணாயிரத்தின் முகத்தை நோக்கிக் காத்திருந்தான்.

“சொல்லுடா, நாமும் அதன்படி நடந்து பரிசும் பாராட்டும் வாங்கலாம்.” துரிதப்படுத்தினான் மணி.

மர்மத்தை நீடித்துத் தன் நண்பர்களைக் காக்க வைக்க விருமடாத கண்ணாயிரம் புதிரை அவிழ்க்கத் தொடங்கினான்:

“அவன் ஆசிரியர்கள்'ட்டே குழைஞ்சு குழைஞ்சு அவங்களையெல்லாம் நல்லா காக்கா பிடிச்சு வச்சிருக்கான்'டா!”

மலையைக் கெல்லி எலியைப் பிடித்தது போல் இருந்தது. கண்ணாயிரம் கூறிய காரணம் 'சப்'பென்று இருந்தாலும், அதிலும் உண்மை இருப்பதுபோல் மணியும் தங்கதுரையும் கருதி அதை ஆமோதிக்கும் பாவனையில் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் போக்கைக் கண்டு அருளுக்குச் சிரிப்பு வந்தது.

“பசி எடுத்த பறவை பழ மரத்தை நாடிப் போறதிலே என்ன தப்பு? அறிவுப் பசி கொண்ட இனியன் ஆசிரியர்களைத் தேடிப் போறான் இது எப்படித் தவறாகும்? அதுவே ஒரு திறமை தானே!”

அருளின் காட்டமான பதில் அவர்கள் வாயை அடைத்தது; என்ன பேசுவது எனத் தெரியாது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அருள் எப்பவும் இனியனை ஒசத்தியே தான்'டா பேசுவான்”. மெதுவாக முணுமுணுத்தான் மணி.

“என்ன ஆனாலும் சரி. இந்த ஆண்டு பள்ளிப் போட்டி எல்லாத்திலேயும் நாமும் பங்கு

பெறணும். இனியனை எந்தப் பரிசும் வாங்க விடக்கூடாது, எல்லாம் நாமேதான் வாங்கணும்.” தன் ஆசையை வீராப்பாக வெளிப்படுத்தினான் தங்கதுரை. பெருமித உணர்வு பொங்க மற்றவர்களின் முகத்தை ஏறிட்டு நோக்கினான்.

தங்கதுரை கூறியதை ஆமோதிப்பவன் போல் மணி தலையை ஆட்டியபடி பேசினான்:

“நல்ல யோசனைதான். ஆனால், அதுக்கு ரொம்ப அறிவும் திறமையும் வேணுமே. அதுக்கு நாம எங்கேடா போறது!”

இவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அருளுக்கு இதைக் கேட்டபோது சிரிப்பு வந்துவிட்டது. கேலி செய்யும் பாவனையில்,

“அறிவும் திறமையும் எங்கேயாவது கடையில் விற்குமா என்று தேடிப் பார்த்து வாங்கினா போச்சு!” என்று வேண்டுமென்றே கிண்டல் செய்தான் அருள்.

இதைக் கேட்டபோது கண்ணாயிரத்துக்கு ‘சுரீர்’ என்றது. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு வன்ம உணர்ச்சியோடு பேசினான்:

“நம்மாலே பரிசு வாங்க முடியாவிட்டாலும் அவனை வாங்கவிடாமல் தடுத்திட்டா அதுவே நமக்கு வெற்றிதாண்டா.”

கண்ணாயிரம் பேசியதன் உட்கருத்து மற்றவர்களுக்குத் தெளிவாகப் புலப்படவில்லை.

“அதெப்படிடா முடியும்?” கேள்விக் கனை தொடுத்தான் தங்கதுரை.

“தங்கதுரைக்கு எப்பவும் எதிலேயும் அவநம்பிக்கைதான். முயன்றால் முடியாதது உண்டா? பொறுத்துப் பார், எல்லாம் தெரியும்?”

கண்ணாயிரத்தின் பேச்சு ஏதோ விபரீதத்துக்கு வழி வகுப்பது போல் அருளுக்குத் தோன்றியது. தவறான நோக்கும் போக்கும் உள்ள அவர்களோடு தொடர்ந்து பேசவே அவனுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் செல்ல முனையும் பாதை மிகத் தவறானது எனச் சுட்டிக்காட்டும் வகையில் சரியான பாதையைக் காட்டிப் பேசலானான்:

“உங்க முயற்சியை படிப்பிலேயும் நல்ல செயல்கள்’லேயும் திருப்பினால் உங்களுக்கும் பரிசும் பாராட்டும் தானாக வரும். அடுத்த வனுக்குத் தீங்கு செய்யறதிலே சிந்தனையைச் செலுத்தினா பழியும் தண்டனையும்தான் மிஞ்சும். உங்க வழிக்கு நான் வரலேப்பா, நூலகத்துக்கு நான் போகனும் நேரமாச்சு.” எனக் கூறி நடக்கத் தொடங்கினான் அருள்.

அருளின் அறிவுரையைக் கேட்க பிடிக்காதவர்கள்போல ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவர்களும் கலைந்து சென்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/1&oldid=489828" இலிருந்து மீள்விக்கப்பட்டது