2

னியன் வீட்டிற்குச் செல்லும் சாலையில் அருள் திரும்புவதற்கும் இனியன் அங்கு வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது. அருள் சிறிது சலிப்புடன் பேசினான்:

“என்னடா, உனக்காக எவ்வளவு நேரம் காத்துக் கிடக்கிறது. நீ பாட்டுக்கு மாணிக்கத்தைக் கூட்டிக்கிட்டு அவன் வீட்டுக்குப் போயிட்டே. உன் புத்தகப் பையை நான் தூக்கிக்கிட்டு அலையறேன். நல்ல சுமைடா.”

“அருள்! முடிஞ்ச மட்டும் அறிவை நெறையச் சுமக்கனும்’டா.” தன் புத்தகப் பையை வாங்கிக் கொண்டே இனியன் பேசினான்.

“அது சரி! அதுக்காக உனக்கு நான் ஏடு தூக்கியாக இருக்க முடியாதப்பா ! இந்தக் கிழிஞ்ச பையிலே நீ திணிச்சு வச்சிருக்கிற உன் அறிவுச் செல்வம் இன்னும் கொஞ்ச நேரத்திலே பொத்துக்கிட்டு கீழே விழுந்தாலும் விழுந்திடும்!” சிரித்துக் கொண்டே கேலி பேசினான்.

“அறிவு பையைப் பொருத்தது இல்லை அருள். அதைப் பிடிக்கிற கையையும் படிக்கிற மனதையும் பொருத்தது.” வினயமாகக் கூறி முடித்தான் இனியன்.

“பேச்சுப் போட்டிலே முதற்பரிசு வாங்குறவனாச்சே அகப்பட்டா விடுவியா? அது சரி மயக்கம் போட்டு விழுந்த மாணிக்கம் இப்ப எப்படி இருக்கான்?”

பேச்சை மாற்றி ஆவலோடு கேட்டான் அருள்.

“பாவம்'டா. அவன் வலிப்புடன் மயக்கமா விழுந்த சேதியைக் கேட்டவுடனே நோயாளியாய் இருக்கிற அவன் அம்மா எப்படியெல்லாம் அழுது புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா? மாணிக்கத்துக்கிட்டே படிப்புத் திறமையும் இல்லே, அவன் வீட்டிலேயோ வேறு எந்த வசதியும் இல்லை. அவன் நிலைமை ரொம்பப் பரிதாபம்'டா,”

“உண்மைதான்'டா, நம்ப வகுப்பிலே கண்ணனும் மாணிக்கமும் தானே படு மட்டம்: மேலும், எப்பப் பார்த்தாலும் மாணிக்கம் சோர்ந்து போய்த்தான்'டா இருக்கான். போதாக்குறைக்கு வலிப்பு நோய் வேறே" தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

“அவன் சோர்வுக்குக் காரணம் சோம்பேறித் தனம் மட்டுமில்லே, அருள். அவன் வீட்டிலே சாப்பாட்டு வசதியோ, படிக்கிறதுக்கு ஏத்த எந்த ஒரு வசதியுமோ, இல்லை’டா. அவன் அம்மா தன் வறுமையைச் சொல்லி அழுதாங்கடா”.

“அப்படியா?”

ஆமா, அருள். மாணிக்கம் பிறக்கறதுக்கு கொஞ்ச நாள் முன்னதாகவே அவன் அப்பா இறந்துட்டாராம். அவன் அப்பா பட்டிருந்த கடனுக்கு வீடும் போய்விட்டதாம். சாப்பாட்டுக்கு வழியில்லாம அவன் தாயார் தையல் வேலை செய்து மாணிக்கத்தையும் மற்ற மூனு பெண் பிள்ளைகளையும் வளர்த்து வர்றாங்களாம். கடந்த மூணு மாசமா மாணிக்கத்தோட அம்மாவும் படுத்த படுக்கையாயிட்டாங்களாம். மாணிக்கத்துக்குப் படிப்பும் சரியா வரலையே’ன்னு ரொம்பக் கவலைப்படறாங்க அருள்.” மாணிக்கத்தின் குடும்பச் சூழ்நிலையை இனியன் விளாவாரியாக விளக்கிக் கூறினான்.

இனியன் கூறியதை ஆமோதிக்கும் வகையில் அருள் பேசலானான்.

“மாணிக்கம் நோஞ்சானா இருக்குறதுக்குக் காரணம் இப்பத்தான் புரியுது. உடல் வலுவோ, படிப்போ இல்லாத மாணிக்கக்தை நெனச்சு அவன் அம்மா வருந்துறது நியாயம்தானே? நம்ம வகுப்பிலே கண்ணனுக்கு அடுத்தபடியா மாணிக்கம்தானே மக்கு’ன்னு பேரு வாங்கி யிருக்கான்.”

“கண்ணனுக்குப் படிப்பில்லேன்னாலும் பயில்வான் மாதிரி உடம்பிருக்கே! அவன் எந்த வேலையும் செய்து பிழைச்சுக்குவான். மாணிக்கத்தால் அதுகூட முடியாதே அருள்.”

இனியன் தன் அச்சத்தை கவலை தோய்ந்த முகத்துடன் வெளிப்படுத்தினான். இதைக் கேட்ட அருள், மாணிக்கம் இவ்வாறு நோஞ்சானாக இருப்பதற்கான காரணத்தைப் பற்றி ஆராய முற்பட்டான்.

“இளம் வயதிலே நல்ல ஊட்டச்சத்து இல்லாது போனால் மூளை வளர்ச்சி ரொம்பவும் பாதிக்கப்படும்’னு எங்க டாக்டர் ஒருசமயம் அப்பாகிட்டே சொல்லிக் கொண்டிருந்ததை நான்கூடக் கேட்டிருக்கேன். சரி, நேரமாயிட்டுது. எங்கம்மா தேட ஆரம்பிச்சுருவாங்க. இந்தா உன் புத்தகப்பை. நான் போய் வரேன் ‘டா.” என்று கூறியபடி விரைந்து தன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான். மாணிக்கத்

தின் நினைவிலிருந்து முற்றிலும் விடுபடாதவனாக, ஏதேதோ சிந்தனையோடு நடந்தான் இனியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/2&oldid=489829" இலிருந்து மீள்விக்கப்பட்டது