4

வகுப்புகள் தொடங்க இன்னும் சிறிது நேரம் இருந்தது. வகுப்புக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக தங்கதுரை இருந்த பெஞ்சியை நோக்கி விரைந்து சென்றான் கண்ணன். அவன் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

“தங்கதுரை நம்ம மணி பிறந்த நாள் விருந்து ரொம்ப ஜோர்டா! எத்தனை வகை யான ஸ்வீட், சாப்பாடு!!”

“விருந்து மட்டுமா? விதவிதமான அலங்காரம். பாட்டுக் கச்சேரி, எல்லாம் ஒரே அமர்க்களம்'டா”

தன் மகிழ்ச்சியைத் தங்கதுரையோடு பகிர்ந்து கொண்டான் கண்ணன்.

எதையோ நினைவுபடுத்தும் பாவனையில் ஆர்வத்தோடு கையை உயர்த்தியபடி பேசினான் கண்ணாயிரம்.

“கண்ணன் ஒன்றைக் கவனிச்சியா?” கேள்விக்குறி வடிவில் நெற்றியைச் சுழித்தபடி வினா எழுப்பினான் கண்ணாயிரம்.

“முந்திரிப் பருப்பும் திராட்சைப் பழமுமாக இருந்த பாயாசத்தைத்தானே சொல்றே.” அலட்சியமாக கண்ணாயிரத்தைப் பார்த்துக் கூறினான் கண்ணன்.

“நீ சாப்பாட்டு இலையோடவே இரு. சுத்த சமையல்கட்டுடா நீ.” நளினமாகக் கிண்டலடித் தான் கண்ணாயிரம்.

“நம்ம ஆசிரியர் புத்தகப் பாக்கெட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்ததை மணியோட அப்பா ரொம்பவும் அலட்சியமா வாங்கி அப்பாலே போட்டதையும், அதுக்காக நம்ம ஆசிரியர் வருத்தப்பட்டதையும் தானே சொல்றே?” தான் நினைத்ததை சரிபார்த்துக் கொள்ள முயன்றான் தங்க துரை.

“ஆமாடா, பிறந்த நாள் பரிசா பெரிய புத்தகப் பாக்கெட்டை, மணி கையிலே கொடுத்து. ‘நல்லா கஷ்டப்பட்டுப் படிச்சு வாழ்க்கையிலே முன்னேறனும்’னு வாழ்த்தினப்போ மணியோட அப்பா வழிமறிச்சு......” கண்ணாயிரம் முடிக்கவில்லை. அதற்குள் கண்ணன்,

“இடைமறிச்சு என்ன சொன்னார்?” என ஆர்வத் துடிப்புடன் கேட்டான்.

கண்ணாயிரம் தொடர்ந்தான்:

“என் மகன் அதிகமாப் படிக்கக் கூடாதுங்கறது என் கொள்கை. அவனுக்கு வேண்டிய அளவு சொத்து இருக்கு. அவன் வாழ்நாள் முழுக்க சுகமாகவே வாழ முடியும். அவன் ஒண்ணும் அதிகம் படிச்சு உத்தியோகம் அது இதுன்னு அலைய வேண்டிய அவசியம் இல்லே, ஏதோ பாஸ் பண்ற அளவுக்கு படிச்சு முடிச்சா போதும்’னு சொல்லி அலட்சியமாக நம் ஆசிரியர் தந்த புத்தகப் பாக்கெட்டை வாங்கி அப்பாலே போட்டார்.”

“கண்ணாயிரம் கூறிய செய்தியைக் கேட்ட அவன் நண்பர்களுக்கு மணியின் அப்பா போக்கு

பிடித்தமாக இல்லை என்பது அவர்களின் அமைதியே புலப்படுத்தியது. எனினும், அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய தங்கதுரை ஆர்வப்பட்டான்.

“அப்புறம்?' வினா தொடுத்தான் தங்கதுரை

“அப்புறம் என்ன? ஆசிரியர் கோபமா வெளியேறத் தொடங்கினார் உடனே மணி ஓடிவந்து, சமாதானம் சொல்லத் தொடங்கினான். அப்போது அவனுடைய அப்பா வந்து...”

“அப்பா வந்து என்ன சொன்னார்?” ஆர்வ மிகுதியால் கண்ணாயிரத்தை இடைமறித்துக் கேட்டான் கண்ணன்.

“சமாதானம் சொன்னார்.” கண்ணாயிரம் கூறினான்.

“என்ன சமாதானம் சொன்னார்?” ஆர்வப் பெருக்குடன் வினா எழுப்பி கண்ணாயிரத்தின் முகத்தை உற்று நோக்கினான் கண்ணன்.

கண்ணாயிரம் மணியின் அப்பா கூறியதை அப்படியே கூறத் தொடங்கினான்.

“மணியின் அண்ணன் செந்தில் படிப்பில் ரொம்பக் கவனம் செலுத்தி வந்தான். வகுப்பிலே எப்போதும் முதலாவதாக வருவான். எப்பவும் புத்தகமும் கையுமாகவே இருப்பான். இரவு பகலாகப் படிப்பான். அவன் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்னதாக மூளையில் கட்டி வந்து இறந்துவிட்டான். இடைவிடாத படிப்பினால் தான் இந்த இறப்பு ஏற்பட்டதாக இன்னும் நம்பிக் கொண்டிருப்பதாகவும் மணிக்குப் படிப்பில் ஆர்வம் இருந்தாலும் அவனை அதிகமாகப் படிக்கவிடாமல் தான் தடுத்து வருவதாகவும் சொன்னார்.”

“இதுக்கு நம்ம ஆசிரியர் எதுவுமே சொல்லலையா? கண்ணாயிரத்தின் பதிலைத் தொடர்ந்து கேள்வி கேட்டான் தங்கதுரை.

“மணியோட அப்பாவின் முடிவு ஒருவித மூடநம்பிக்கை'ன்னும், மூளையிலே ஏற்பட்ட கட்டிக்கும் படிப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’ன்னும் எடுத்துச் சொல்லி விளக்கினார். அதோட, பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாததாலேயும் வீட்டில் நல்ல சூழ்நிலை இல்லாததுனாலேயும் மணி திறமைசாலியா வர முடியா மல் போச்சு’ன்னும் ஒரு குட்டி வகுப்பே நடத்தி முடிச்சிட்டார்.”

எதையோ நினைவுபடுத்திக் கொண்டவனாக கண்ணன் வேறொரு விஷயத்தைச் சொல்ல முனைந்தான்.

“இதையெல்லாம்விட சுவையான சம்பவம் ஒண்னு அங்கே நடந்தது உங்களுக்குத் தெரியுமா?” கண்ணன் கேள்வி அவன் நண்பர்களி டையே ஆர்வத்தைத் தூண்டியது. அவன் சொல்லப் போகும் விஷயத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டார்கள். தங்கள் காது களைத் தீட்டிக் கொண்டு அவன் வாய் அசைவையே உற்று நோக்கினார்கள்.

“என்ன அது?” கண்ணாயிரம் முந்திக் கொண்டு கேட்டான்.

“நம்மைப் போல இனியன் விருந்துக்கு வந்தும் விருந்து சாப்பிடலேடா.” கண்ணன் பூடகமாகச் சொல்லி முடித்தான்.

“ஏன்’டா? ஒருவேளை ஆசிரியருக்குப் பரிஞ்சு கோவிச்சுக்கிட்டு போயிட்டானோ?” தன் அனுமானத்தை வெளிப்படுத்தினான் தங்கதுரை.

“அதெல்லாம் இல்லை.” தங்கதுரை அனுமானத்தை நிராகரித்தான் கண்ணன்.

“பின்னே? என்ன’ன்னு சொல்லு'டா” கண்ணாயிரம் பொறுமை இழந்தவனாகக் கண்ணனைத் துரிதப்படுத்தினான்.

மேலும் மர்மத்தை நீடிக்காமல் புதிரை விடுவிக்க முனைந்தான் கண்ணன்.

“தனக்குச் சாப்பிடத் தந்த சாப்பாட்டை யாருக்கும் தெரியாமல் ஒரு பொட்டலமாகக் கட்டி கையிலே எடுத்துக்கிட்டு போனான்’டா,” ஒரு வழியாகக் கண்ணன் சொல்லி முடித்தான்.

இதைக் கேட்டபோது கண்ணாயிரமும் தங்கதுரையும் முகத்தைச் சுழித்தார்கள் இனியனைப்பற்றி ஏளனமாக அவர்கள் உள்ளம் நினைப்பதை முகக்குறிப்பு வெளிக்காட்டத் தவறவில்லை.

இவர்கள் மூவரும் இனியனைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை செவி மடுத்தவாறே அருள் கேட்டுககொண்டே அங்கே வந்து சேர்ந் தான். இனியனின் இணைபிரியாத் தோழன் ஆதலால் அவனைப்பற்றி ஏளனமாக எள்ளி நகையாடிப் பேசுவதை அவனால் பொறுக்க முடியவில்லை. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலே வந்ததும் வராததுமாகப் பேசினான்:

“நீங்க நெனைக்கிற மாதிரி தன் வீட்டுக்கு அவன் அதை எடுத்துச் செல்லவில்லை. நானும் சந்தேகப்பட்டு அவன் பின்னாலேயே போ னேன். அவன் அதை நோயோடு பட்டினி கிடக்கிற மாணிக்கம் தாயாரிடம் கொண்டு போய்க் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினான். நான் அதைக் கேட்டு நெஞ்சு நெகிழ்ந்திட்டேன். எனக்குக் கண்ணீரே வந்திருச்சு. இனியனின் அன்பையும் மனிதாபிமான உணர்ச்சியையும் இரக்க சிந்தையையும் கண்டு அந்த அம்மா கண்ணிர்விட்டு அழுதுட்டாங்க.”

அருள் தன் நண்பன் இனியனின் இனிய செயலை விளக்கும்போது அவன் கண்களில் உணர்ச்சி மேலீட்டால் நீர் சுரந்து நின்றது. இதைக் கண்ட தங்கதுரையும் கண் கலங்கினான். அவன் தன் உணர்ச்சியை அடக்க முடியாதவனாக வெளிப்படுத்தினான்.

“என்னடா, கண்ணாயிரம் நம்ம அருள் சொல்றது நெஞ்சை உருக்குற கதையாயிருக்கே?”

“அதான் நீயே சொல்லிட்டியே.”

“என்ன?ன்னு?”

“கதை’ன்னு!”

கண்ணாயிரத்தின் பேச்சு அருளுக்குப் பிடிக்காததால் அவன் சட்டென்று அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினான். அடுத்து அவர் களும் புறப்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/4&oldid=489831" இலிருந்து மீள்விக்கப்பட்டது