3

பள்ளிக்கூடம் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் மணி அடித்து ஓய்ந்தது. அவிழ்க்கப் பட்ட மூட்டைக்குள்ளிருந்து நெல்லிக்காய்கள் சிதறி ஒடுவதைப்போல் வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் ஒட்டமும் நடையுமாக உற்சாகத் தோடு வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் ஆராவாரம் அடங்கி அமைதி குடிகொள்ளத் தொடங்கியது.

வகுப்பறையிலிருந்து வெளிவந்த கண்ணாயிரம் தன் நண்பர்களை எதிர்நோக்கியவனாக வழக்கமான மரத்தடி வேரின் மீது சென்று அமர்ந்தான். ஒருவர்பின் ஒருவராகத் தங்க துரையும் மணியும் அங்கு வந்து சேர்ந்தார்கள். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தில் கவனம் செல்கிறதோ இல்லையோ இந்த மரத்தடியில் கூடி ஊர் வம்பளப்பதில் கவனம் செலுத்தத் தவறுவதே இல்லை. கண்ணாயிரத்தின் நண்பர் குழாம் வகுப்புக்கு வராமல் போனாலும் இந்த மரத்தடி மாநாட்டில் கலந்துகொள்ளத் தவறுவதே இல்லை. பாடத்தைத் தவிர்த்து மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் இங்கே விரிவான விவாதம் நடைபெறும்.

வழக்கப்படி வம்பளப்பைத் தொடங்கி வைத்தான் கண்ணாயிரம்.

“எங்கடா நம்ம கண்ணனை ரெண்டுமூணு நாளா காணோம். லீவு லெட்டர்கூடவரலை’ன்னு வாத்தியார் சொன்னார்.” கண்ணன் வகுப்புக்கு வராத கரிசனத்தை வெளிப்படுத்தினான் கண்ணாயிரம.

கண்ணனின் இயல்பை நன்றாகவே புரிந்து வைத்திருந்த தங்கதுரை தன் கருத்தை வெளிப் படுத்தினான்:

“அவன் காடாறு மாசம் வீடாறு மாசம்’கிற கொள்கையைக் கண்டிப்பா கடைப்பிடிக்கிற வன்’டா. அவனுக்கு வெளியிலே பொழுது போக வழி இல்லை’ன்னாதான் பள்ளிக்கூடத்துக்கு வருவான்.”

பள்ளிக்கூடம் வருவதில் கண்ணனுக்கு நாட்டமில்லை என்பதைக் குறிப்பாக வெளிப் படுத்தினான் தங்கதுரை.

அதற்கு மேலும் விளக்கம்தர முன்வந்தான் மணி.

“அவன் என்ன'டா பண்ணுவான். தப்பித் தவறிப் பள்ளிக்கு வந்தாலும் இருக்கிற நேர மெல்லாம் பெஞ்சு மேலேயே நிற்கும்படியாயிடுது.”

நேரத்திற்கு வராததையும் படிப்பில் மோசமாக இருப்பதையும் நாசூக்காகச் சொன்னான் மணி. இதனை வலுப்படுத்தும் வகையில் மேலும் அடுக்கினான் கண்ணாயிரம்:

“படிக்கிறதுதான் பழக்கமில்லே. பள்ளிக்குப் புத்தகமோ நோட்டோ எடுத்து வர்றதுகூட அவனுக்குப் பழக்கமில்லாப் போயிடிச்சேடா!”

கண்ணாயிரம் கூறியதைக் கேட்ட மூவரும் சிரித்துக் கொண்டார்கள்.

“அவன் அப்பா வாங்கிக் கொடுக்கறதில்லையோ என்னவோ?”

தன் ஐயப்பாட்டை வெளிப்படுத்தினான் தங்கதுரை. அதை அடியோடு மறுக்க முனைந்தான் மணி.

“நல்லா இருக்குடா கதை? அவன் ரொம்ப நல்லா படிக்கனும்’னு அவன் அப்பா எவ்வளவு ஆசைப்படறார் தெரியுமா? பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், தின்பண்டம் அது இது’ன்னு அவன் எதைக் கேட்டாலும் மறக்காம வாங்கித் தர்றார்.”

அதை அப்படியே ஆமோதித்தான் கண்ணாயிரம். கண்ணனோடு மிகவும் நெருங்கிப் பழகியதால் அவன் நிலைமைகள் அனைத்தும் கண்ணாயிரத்துக்கு அத்துப்படி. அவன் கூறினான்.


“கண்ணன் வாய் எப்பவும் எதையாவது அரைச்சபடியேதான்’டா இருக்கும். அவன் இப்படி பள்ளிக்கூடம் வராம ஊர் சுத்தறதைக் கண்டிச்சு அவன் அப்பாவும் எவ்வளவோ திட்டிப் பார்க்கிறார்; அடித்துப் பார்க்கிறார்; அவன் திருந்தவே இல்லை. அவன் பாதை யிலேதான் அவன் போயிட்டிருக்கான்”.

இவர்கள் கண்ணனைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கும்போதே, கண்ணன் இவர்களைத் தேடிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தான். எப்போதும் குதூகலமாக வரும் அவன் இன்று கவலையே உருவானவனாக அங்கே வந்தான். அவன் தோற்றம் அவன் நண்பர்களைத் துணுக்குறச் செய்தது. ஏன் இந்தக் கோலத்துடன் வந்திருக்கான் எனப் புரியாது திகைத்தவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு நிமிடம் அவர் களுக்கிடையே மயான அமைதி நிலவியது அமைதியைக் கலைத்தான் கண்ணாயிரம்.

“என்னடா கண்ணா, கையிலேயும் முகத் திலேயும் பிளாஸ்திரி போட்டிருக்கே. உதடு வேறே வீங்கியிருக்கு. யார் கூடவாவது சண்டை போட்டியா?”

அக்கரையும் அனுதாபமும் பின்னிப் பிணைய கண்ணாயிரம் கேட்ட கேள்வி கண்ணன் மனதுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. கண்ணாயிரத்தை ஒரு முறை வாஞ்சையோடு பார்த்தான். தான் சொல்லப் போகும் பதிலை ஆவல் பொங்க எதிர்நோக்கிக் காத்திருக்கும் தன் நண்பர்களை ஒருமுறை நோட்டமிட்டான். ஒரு கனைப்புக் கனைத்துத் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு பேசினான்:

“என் கிட்ட யார்’டா சண்டைபோடமுடியும்? எங்கப்பா...... ” கண்ணன் முடிப்பதற்கு முன் தன் அனுமானத்தை வெளிப்படுத்த முனைந்தான் மணி. கண்ணாயிரத்தைப் போலவே அவனும் கண்ணனோடு நெருங்கிப் பழகியவன் ஆதலால் இடைமறித்துப் பேசினான்:

“அப்போ சரி, வழக்கமா நடக்கிற அப்பா பூஜை! இன்னிக்குக் கொஞ்சம் உக்கிரமா நடந்திருக்கும் போல இருக்கு இல்லேடா கண்ணா!”

மணியின் இடைமறிப்புக் கேள்வியில் இருந்த கேலியும் கிண்டலும் கண்ணனின் ஆத் திரத்தை மேலும் அதிகப்படுத்தியது அவன் ஒருவித வன்ம உணர்வுடன் பேசினான்.

“எல்லாம் அந்த இனியனாலேதான் எனக்கு இந்த நிலை.”

கண்ணன் அப்பாவிடம் அடிபட்டதற்கும் இனியனுக்கும் என்ன சம்பந்தம். நண்பர்கள் அவரவர்கள் போக்கில் அனுமானிக்கத் தொடங்கினார்கள்.

“உன்னைப் பற்றிய உண்மைகளையெல்லாம் உங்கப்பாகிட்டே சொல்லிட்டானா?” மணி தன் யூகத்தை வெளிப்படுத்தினான்.

“அவனுக்கு ஏதுடா அவ்வளவு தைரியம்? இனியன் ஏழைப் பையனாக இருந்தாலும் எவ்வளவு நல்லாப் படிக்கிறான். எல்லாருகிட்டேயும் நல்ல பையன்’னு பேரு வாங்குறான். போட்டி, பரிசு அது இது'ன்னு எவ்வளவு பெருமை'ன்னு அவனோடு ஒப்புக் காட்டியே என்னை அடிச்சு நொருக்கிட்டார்'டா.”

கண்ணனுக்கு ஆறுதலும் தேறுதலும் தரும் வகையில் அவனுக்கு உற்சாக வார்த்தைகள் கூற முனைந்தான் கண்ணாயிரம்.

“எல்லாத்துக்குமே அந்த இனியன் போக்குத் தான்’டா காரணம். அவன் கொட்டத்தை எப்படியும் அடக்கணும், அவன் பெருமையைத் தரை மட்டமாக்கனும். ஊரெல்லாம் அவனைப் பழிக்கும்படியாச் செய்யனும். இதுதான்’டா இனி நம்ம லட்சியம்”

கண்ணாயிரத்தின் பேச்சில் வன்ம உணர்ச்சி வலுவாக வெளிப்பட்டது. அவன் கூறிய பழிவாங்கும் போக்கை அவன் நண்பர்கள் மணியும் தங்கதுரையும் முழு மனதோடு ஏறகவில்லை என்றாலும் மறுப்பேதும் கூற முனையவில்லை. ஆனாலும் அவன் கருத்தை முழுமையாக ஏற்கும் பாவனையில், “உன் லட்சியம் தான் என் லட்சியம். இதுக்காக நான் எதையும் செய்யத் தயார்!’ எனத் தன் முழுமனதான ஆதரிப்பை உறுதியாக வெளிப்படுத்தினான் கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/3&oldid=489830" இலிருந்து மீள்விக்கப்பட்டது