திருமுருகாற்றுப்படை - பொழிப்புரை/பொழிப்புரை



பொழிப்புரை

1—3. உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழும்படியாக மேருவுக்கு வலப்பக்கமாக எழுந்து சுற்றுவதும், பலரால் புகழப் பெறுவதும் ஆகிய சூரியன் கீழகடலிலே தோன்றினாற்போல, நடுவிலே நிற்பதில்லாமல் விளங்குவதும் நெடுந் தூரத்திலும் வீசுவதுமாகிய ஒளியையும்;

4—6. தம்பால் வந்து சரண் அடைந்தவர்களைப் பாதுகாக்கின்ற, அறியாமையை உடைக்கும் வலிமையையுடைய திருவடியையும்; எதிர்த்துப் போர்செய்வாரை அடியோடு அழித்த, இடியைப் போன்ற விசாலமான கையையும் உடையவன்; குற்றம் இல்லாத கற்பையும் ஒளிபொருந்திய நெற்றியையும் உடைய தேவயானைக்குக் கணவன்;

7—11. கடலை முகந்த நிறைந்த கருப்பத்தை உடைய கரிய மேகமானது, ஒளியால் போழப்படும் வானத்தில் வளப்பமான நீர்த்துளியைச் சிதறி முதல் மழையைப் பெய்த, குளிர்ந்த நறுமணம் வீசும் காட்டில், இருள் உண்டாகும்படியாகச் செறிந்த பருத்த அடிமரத்தையுடைய செங்கடம்பினது உருளுகின்ற குளிர்ந்த மாலை புரளுகின்ற திருமார்பை உடையவன்;

12—19. பெரிய மூங்கில்கள் வளர்ந்து வானளவும் உயர்ந்த மலையில்—கிண்கிணி சூழ்ந்த ஒளிபடைத்த சிவந்த சிறிய அடி, திரண்ட கால், வளைந்த இடை, பெரிய தோள்கள், இந்திர கோபத்தைப் போன்ற சாயந் தோய்க்காமல் இயற்கையாகவே சிவந்த பூ அலங்காரம் உள்ள துகில், பல மணிகளைக் கோத்த சில வடங்களால் ஆகிய மேகலையை அணிந்த ரகசிய ஸ்தானம், ஒருவர் அலங்கரிக்காமலே அழகு பெற்ற லாவண்யம், நாவல் மரத்தினாற் பெயர் பெற்ற சாம்பூநதம் என்னும் பொன்னால் ஆகிய விளங்குகின்ற ஆபரணம், நெடுந்துாரம் சென்று பிரகாசிக்கும் குற்றமற்ற உடல் வண்ணம், ( இவற்றை உடையவர்களாய்);

20—44. தமக்குத் துணையாக உள்ள தோழிமார், இது அழகிது என்று பாராட்டியதும், ஒத்துவளர்ந்து நெய்ப்போடு கூடியதும் ஆகிய கூந்தலில், சிவந்த காம்பையுடைய வெட்சிப் பூவின் சிறிய இதழ்களை இடையில் வைத்து, பசிய தண்டையுடைய குவளை மலரின் தூய இதழைக் கிள்ளியிட்டு, தெய்வ உத்தியாகிய சீதேவி என்னும் ஆபரணத்தையும் வலம்புரி என்னும் ஆபரணத்தையும் பக்கங்களில் அமைத்து, திலகத்தால் அலங்கரித்த இனிமை பரவிய அழகிய நெற்றியில் மகரவாய் படியும்படியாகச் சீவிச் சிக்கறுத்து நன்கு முடித்த குற்றமற்ற கொண்டையில், பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகி, கரிய மேலிதழையும் பஞ்சு போன்ற கேசரத்தையும் உடைய மருதம் பூங்கொத்துக்களை அமைத்து, குழ உள்ள அரும்புகளுக்குள்ளே அழகு பெற்று மேலெழுந்து நீருக்குள் இருந்த சிவந்த அரும்பைக் கட்டிய மாலையை வளையச் சுற்றி, இரண்டு பக்கத்திலும் ஒத்துத் தோன்றும்படி வளப்ப முள்ள காதுகளில் நிறையச் செருகிய அசோகந் தளிரானது, நுண்ணிய வேலைப்பாடுகளை உடைய, ஆபரணங்களை அணிந்த மார்பிலே அசைய, உறுதியான வயிரமும் வாசனையும் உடைய கட்டையை அரைத்த, பொலிவும் நிறமும் பெற்ற சந்தனக்குழம்பைத் தேன் கமழும் மருதம் பூவைப்போல லேசாகக் கோங்கிலவின் அரும்பைப்போன்ற தனத்திலே பூசி, விரிந்த வேங்கை மலரின் நுண்ணிய மகரந்தப் பொடியை மேலே அப்பி, கண்டு மகிழ்வதற்கு ஏற்றபடி விளா மரத்தின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்து, கோழி ஓங்கியதும் பகைவரை வென்று சங்காரம் செய்யும் வெற்றியை அறிவுறுத்துவதுமாகிய கொடி நெடுங்காலம் வாழ்க என்று வாழ்த்தி, பலர் ஒருங்கேகூடி, சிறப்புத் திகழ்கின்ற மலைப்பக்கமெல்லாம் எதிரொலி செய்யும் படியாகப் பாடி, தெய்வப் பெண்கள் ஆடும் சோலைகளே உடைய, குரங்கும் அறியாத மரங்கள் நெருங்கியுள்ள மலைப்பக்கத்தில் வளர்ந்த வண்டுகளும் மொய்க்காத விளக்கைப் போன்ற காந்தளாலாகிய பெரிய குளிர்ந்தகண்ணியை அணிந்த திருமுடியை உடையவன்;

45—61. பாரில் முதிர்ந்த குளிர்ச்சியையுடைய கடலானது கலங்கும்படியாக அதனுள்ளே புகுந்து, சூரனாகிய அசுரர் தலைவனைக்கொன்ற சுடர் விடுகின்ற இலையை உடைய நெடிய வேலாலே, உலர்ந்த மயிரையும் கோணியுள்ள பல்லையும் ஆழமான வாயையும் சுழல்கின்ற விழியையும் பசிய கண்ணையும் பயத்தைத் தரும் பார்வையையும் சுழன்றாற் போன்ற கண்ணையுடைய கோட்டானோடு கூடிய பாம்பு தொங்கப் பெரிய தனத்தை மோதுகின்ற காதையும் சொர சொரப்பை உடைய உடம்பையும் அச்சம் உண்டாக்கும் நடையையும் உடைய பயங்கரமான பேய்மகள் ரத்தம் அளைத்த கூரிய நகத்தையுடைய விரலாலே கண்ணைத் தோண்டி உண்ட மிக்க நாற்றத்தை யுடைய கரிய தலையை ஒள்ளிய வளையை அணிந்த வளைந்த கையால் எந்திக் கண்டார் அஞ்சும்படியாக, வென்று அட்ட போர்க்களத்தைப் பாடித் தோளை வீசி நிணத்தைத் தின்னும் வாயையுடையவளாய்த் துணங்கைக் கூத்து ஆடும் படியாக, இரண்டு பெரிய வடிவை உடைய ஒரு பெரிய சூரனது உடம்பானது அஞ்சும்படி ஆறு வேறு உருவத்தோடு சென்று, அசுரர்களுடைய நல்ல வெற்றி கெட்டுப் போகும்படி, தலைகீழாகக் கவிழ்ந்த பூங்கொத்துக்களை உடைய மாமரத்தை அழித்த, குற்றமற்ற வெற்றியையும், யாராலும் அறிதற்கரிய நல்ல புகழையும் உடைய செவ்வேற் சேய் (ஆகிய முருகனுனுடைய);

62—66. சிவந்த திருவடியிலே செல்லும் பெருமையை உடைய உள்ளத்தோடும், நன்மை செய்கின்ற தீர்மானத்தோடும், உன் நாட்டைப் பிரிந்து தங்குவதற்குரிய பிரயாணத்தை நீ விரும்பினாயானால், நல்ல நெஞ்சில் எண்ணிய இனிய விருப்பங்கள் யாவும் ஒருங்கே நிறைவேற, நீ நினைத்த காரியம் இப்போதே கைகூடப் பெறுவாய்;

67—71. போருக்கு வருக என்று அறை கூவிக் கட்டிய, நெடுந்தூரம் உயர்ந்த கொடிக் கருகே, வரிந்து புனையப் பட்ட பந்து பாவையோடு தொங்க, யுத்தம் செய்பவரை ஒடுக்கிய போர் இல்லாத வாயிலையும், திருமகள் வீற்றிருந்த குற்றமற்ற அங்காடி வீதியையும், மாடங்கள் மலிந்த வீதியையும் உடைய கூடல்மா நகரத்துக்கு மேற்கே;

72—77. கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து மலர்ந்த முள்ளையுடைய தண்டைப் பெற்ற தாமரை மலரில் தூங்கி, விடியற் காலையில்தேன்பரந்த நெய்தல் மலரை ஊதி, சூரியன் உதயம் ஆனவுடன் கண்ணைப்போல மலர்ந்த அழகிய சுனைகளில் உள்ள மலர்களிலே சிறைகளையுடைய வண்டினது அழகிய கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங்குன்றத்தில் (முருகன்) வீற்றிருத்தலையும் உடையவன்; அது மட்டும் அன்று.

78—82. அங்குசத்தின் கூர்மையான நுனி பதிந்தமையால் உண்டான தழும்பு உள்ள வரிகளையுடைய நெற்றியில், வாடாத பொன்னரி மாலை பட்டத்தோடு அசைய, மணிகள் மாறி ஒலிக்கும் பக்கங்களையும், வேகமாகிய நடையையும், யமனைப்போன்ற தடுப்பதற்கரிய வலிமையையும் உடைய, காற்று எழுந்தாற் போன்ற யானையின் மேலே ஆரோகணித்து;

83—88. ஐந்து வேறு உறுப்புக்களை உடையதும், செய்யவேண்டிய வேலைப்பாடுகள் நிரம்பியதுமாகிய கிரீடத்தில், விளங்கும் நிறத்தால் வெவ்வேறாக மாறுபட்ட அழகிய மணிகள் மின்னல் விட்டு விளங்கி மின்னுவதைப் போல முடியிலே பிரகாசிக்க, ஒளி தங்கி அசையும், கூறுபாடுகள் அமைந்த பொன்னால் ஆகிய மகர குண்டலங்கள், வானத்திலே விளங்கும் தன்மையையும் ஒளியையும் உடைய சந்திரனைச் சூழ்ந்து அகலாத நட்சத்திரங்களைப்போல விளங்கி மின்ன;

89—102. கேடில்லாத விரதத்தையுடைய தம் தவமாகிய தொழிலை நிறைவேற்றும் ஆற்றல் பெற்ற முனிவர்களுடைய மனத்திலே பொருந்தித் தோன்றுகின்ற ஒளியும் நிறமும் பொருந்திய முகங்களுக்குள்—பெரிய இருள் படைத்த உலகம் குற்றம் இல்லாமல் விளங்கும் படியாகப் பல கிரணங்கள் விரிந்து விளங்குவது ஒருமுகம்; ஒருமுகம், அன்புடையவர் துதிக்க, அவர்களுக்கு ஏற்கும்படியாகப் பொருந்தி இனிதாகச் சென்று விருப்பத்தோடு மகிழ்ந்து வரத்தைக் கொடுத்தது; ஒரு முகம், வேதமந்திரமுறைப்படியே சம்பிரதாயத்தினின்றும் வழுவாத அந்தணர்களுடைய யாகங்களை நன்கு நிறைவேற்றத் திருவுள்ளங் கொள்ளும்; ஒருமுகம், நூல்களாலும் ஆசிரியர்களாலும் விளக்கமுறாமல் எஞ்சிய பொருள்களை, அவற்றை உணரப்புக்க ஞான வேட்கை உடையார் இன்பம் அடையும்படியாக ஆராய்ந்து, சந்திரனைப் போலத் திசையெலாம் விளக்கும்; ஒருமுகம் செறுகின்றவர்களை அழித்து, வந்தபோர்களைப் போக்கிக் கறுவுதல் கொண்ட உள்ளத்தோடே கள வேள்வியைச் செய்தது; ஒருமுகம் குறவர் மடமகளும் கொடிபோன்ற இடையையுடைய மெல்லியலாளும் ஆகிய வள்ளி நாச்சியாரோடு இன்பம் புணர்ந்து மகிழ்ந்தது;

103—118. அவ்வாறு அந்த ஆறு திருமுகங்களும் தமக்குரிய கடமைகளைப் பயின்று செய்து வருவதனாலே (அவற்றிற்கு ஏற்ப அமைந்து) பொன்னாரம் தொங்கும் அழகிய பெருமையை உடைய மார்பிலே உள்ள சிவந்த வரிகள் தம்வரையில் வர அவற்றை ஏற்றுக் கொண்டனவும், வலியையுடையனவும், ஒளிவீசி, கொடுத்தலால் பெற்ற புகழ் நிரம்பி, கண்டார் உள்ளத்தை வசமாக்கி, உள்வாங்கி மேலே நிமிர்ந்தனவுமாகிய தோள்களில்—ஆகாயத்திலே சூரியனது வெம்மையைத் தாங்கிச் செல்லுகின்ற கடமையை உடைய, முனிவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு உயர்த்தியது ஒரு கை; இடையிலே வைத்தது ஒரு கை; ஒரு கை அங்குசத்தைச் செலுத்த மற்றொரு கை அழகைப் பெற்ற ஆடையை உடுத்த துடையின் மீதே கிடந்தது; இரண்டு கைகள் வியப்பையும் கருமையையும் உடைய கேடயத்தையும் வேலாயுதத்தையும்வலமாகச் சுழற்ற, ஒருகை திருமார்பில்(மோனமுத்திரையோடு)விளங்க, மற்றொரு கை மாலையோடு விளங்க, ஒரு திருக்கை கீழே நழுவுகின்ற வளையோடே மேலே சுழல, மற்றொரு கை இனிய ஓசையை உடையதாக ஒலிக்கும் மணியை மாறி மாறி ஒலிக்கும்படி செய்ய, ஒரு கை நீலகிற வானத்திலிருந்து மிக்க மழையைப் பொழியும்படியாகச் செய்ய, மற்றொரு கை தேவப் பெண்களுக்கு மண மாலையைச் சூட்ட—அவ்வாறு அந்தப் பன்னிரண்டு திருக்கரங்களும் முகங்களுக்கு ஏற்ற வகையிலே பொருந்தச் செயல்களைச் செய்து;

119—125. வானத்து இசைக் கருவிகள் முழங்க, திண்ணிய வயிரத்தையுடைய கொம்புகள் உச்ச ஒலியோடு ஒலிக்க, வெண்சங்குகள் சப்திக்க,வன்மையைத் தன்னிடத்திற் கொண்ட இடியைப் போன்ற முரசம் ஒலிப்பதோடு பல பீலிகளையுடைய மயிலாகிய வெற்றிக்கொடி அகவ, ஆகாயமே வழியாக விரைந்து செல்லுதலைத் திருவுளத்தே கொண்டு, உலகம் புகழ்கின்ற மிக உயர்ந்த மேலான சிறப்பையுடைய அலைவாய்க்குச் சென்று தங்குதல் அவனுக்கு நிலை பெற்ற இயல்பு; அதுமாத்திரம் அன்று.

126—137. மரவுரியை உடையாக அணிந்தவர், அழகோடு வலம்புரியை ஒத்த வெண்மையை உடைய நரைமுடியை உடையோர், மாசு இல்லாமல் விளங்கும் திருமேனியை உடையோர், மான் தோலைப் போர்த்த தசைகெட்ட மார்பில் எலும்புகள் மேலே தோன்றி அசையும் உடம்பை உடையோர், நல்ல நாட்கள் பலவற்றில் ஒருங்கே உணவை உண்ணாது விட்டவர், பகையும் ஹிம்சையும் நீக்கிய மனத்தினர், கற்றவர் சிறிதும் அறியாத பேரறிவினர், கற்றவர்களுக்கு எல்லையாக நிற்கும் தலைமையுடையோர், காமமும் மிக்க சினமும் நீத்த அறிவுடையோர், சிறிதளவேனும் இடும்பை என்பதை அறியாத இயல்புடையோர் மனம் பொருந்த வெறுப்பில்லாத ஞானம் பெற்றவர் ஆகிய முனிவர் முன்னாலே புக;

138—142. புகையை முகந்தாற் போன்ற மெல்லிய அழுக்கு இல்லாத தூய உடையையும், மொட்டு அவிழ்ந்த மாலையை அணிந்த மார்பையும் உடையவர்களும், காதிலே பொருத்தி வைத்துப் பார்த்துச் சுருதி கூட்டிய நரம்புக் கட்டையுடைய நல்லயாழிலே பயிற்சியுடையவர்களும் அன்புடைய நெஞ்சையும் மெல்லிய மொழிகளையும் உடையவர்களும் ஆகிய கந்தருவர் இனிய நரம்பை மீட்டிப் பாட;

143—147. நோய்களே இல்லாமல் அமைந்த உடம்பை உடையோர், மாமரத்தின் விளங்கும் தளிரை ஒத்த மேனி உடையோர், விளங்குக்தோறும் பொன்னை உரைத்தாற்போன்ற தேமலை உடையோர், இனிய ஒளியை உடைய மேகலையைத் தாங்கியதும் தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ளதுமாகிய அல்குலை உடையோராகிய குற்றமற்ற மகளிரோடு, அப் பாடல் குற்றம் இல்லாமல் விளங்க;

148—159. விஷத்தோடே உறைக்குள்ளே கிடந்த துவாரத்தையுடைய வெண்மையான பற்களையும், நெருப்பைப்போல மூச்செறியும் பயங்கரமான மிக்க வலிமையையும் உடைய பாம்பு இறக்கும்படியாக அடிக்கும் பல கோடுகளையுடைய வளைந்த சிறகைப் பெற்ற கருடனை அணிந்த உயர்ந்த கொடியை உடைய திருமாலும், வெண்மையான இடபத்தை வலப்பக்கத்தே துவசமாகத் தாக்கியவனும் பலர் புகமும் திண்ணிய தோளை உடையவனும் உமாதேவியார் ஒரு பாகத்தே தங்கி விளங்குபவனும் இமையாத முக்கண்ணை உடையவனும் திரிபுரத்தை அழித்த வலிமை மிக்கவனுமாகிய சிவபிரானும், ஆயிரம் கண்களையும் நூறாகிய பல வேள்விகளை முடித்து அவற்றினிடையே வந்த பகையை வென்று கொன்ற வெற்றியையும் உடையவன், நான்காக உயர்ந்த கொம்பும் அழகிய நடையும் உடையதும் தாழ்ந்த பெரிய வளைந்த கையை உயர்த்தியதுமாகிய ஐராவதத்தின் பிடரியிலே ஏறிய ஐசுவரியம் மிக்கவன் ஆகிய இந்திரனும்;

160—165. நான்கு பெரிய தெய்வங்களின் பாதுகாப்பை உடையதும், நல்ல நகரங்கள் நிலை பெற்றதுமாகிய உலகத்தைப் பாதுகாக்கும் ஒன்றுபட்ட சங்கற்பத்தை உடையவர்களும் பலராலும் புகழப்பெறுபவர்களும் ஆகிய அயன் அரி அரன் என்னும் மூவரும் பழையபடியே தலைவராகும் பொருட்டு, இன்பத்தை மிகுதியாக உடைய பூவுலகத்திலே தோன்றித் தாமரையினாற் பெறப் பெற்றவனும் நான்முகனுமாகிய ஒருவனைக் குறித்து, தன்னை வந்து தரிசனம் செய்ய:

166—176. சூரியனைப் போலத் தோன்றும் மாறுபாடு இல்லாத தோற்றத்தையும், நான்காக வேறுபட்ட இயல்பினையும் உடைய முப்பத்து மூவரும் பதினெண் கணத்தினராகிய உயர்ந்த பதவியைப் பெற்றவர்களும் விண்மீன்கள் தோன்றினாற் போன்ற தோற்றத்தை உடையவர்களாய், காற்றிடத்தே நெருப்பு எழுந்தாற்போன்ற வலிமையை உடையவர்களாய், நெருப்பு உண்டாகும்படி இடி இடித்தாம் போன்ற குரலை உடையவர்களாய், மேலானதாகிய தம் வேண்டுகோளினால் தாம் பெறவேண்டிய முறைமையினைக் கொள்ளும் பொருட்டு ஆகாயத்தே சுழற்சியை உடையவர்களாய், வந்து ஒருங்கே தரிசிக்க, கேடில்லாத கற்பையுடைய மடந்தையாகிய தெய்வயானையுடன் சில காலம் ஆவினன்குடியிலே இருத்தலும் உரிமையாக உடையவன்; அது மட்டும் அன்று.

177—189. ஆறு தொழில்களென்று அமைந்த இயல்பினின்றும் பிறழாமல், தாய் தந்தை யென்னும் இருவரைச் சுட்டிய பல் வேறு பழைய கோத்திரத்தை உடையவர்களும், நாற்பத்தெட்டு ஆகிய நல்ல இளமைப் பருவத்து ஆண்டுகளை நிற்கவேண்டிய நெறியிலே நின்று கழித்தவர்களும், தர்மத்தையே சொல்லிக் கொண்டிருக்கும் விரதத்தை உடையவர்களும், மூன்று வகையாகச் சொல்லப்பட்ட மூன்று வேள்வித்தீயையே செல்வமாக உடைய இருபிறப்பாளர்களும் ஆகிய அந்தணர், முருகனைத் துதிக்கும் சமயம் அறிந்து தோத்திரம் கூறவும், ஒன்பது நூலை முறுக்கிய மூன்று புரிகளாகிய நுண்ணிய பூணூலை அணிந்து, உலராத ஈர ஆடையைக் கிடந்தவாறே உலரும்படி உடுத்து, தலைமேலே கையைக் குவித்துக்கொண்டு, முருகனைப் புகழ்ந்து, ஆறெழுத்துக்களைத் தன்பாற்கொண்ட அரிய உபதேச மந்திரத்தை நாக்குப்புரளும் மாத்திரத்திலே பலமுறை கூறி, மணம் மிக்க நறுமலர்களை ஏந்தி (வழிபடவும்), அதற்கு மிகவும் மகிழ்ந்து திருவேரகத்திலே எழுந்தருளியிருப்பதற்கும் உரியவன்; அது மாத்திரம் அன்று.

190—217. பச்சிலைக் கொடியால் நல்ல மணத்தையுடைய சாதிக்காயை நடுவிலே வைத்து, பூசாரியானவன், அதனோடு அழகையுடைய பொருளைப் பொதிந்து வைக்கும் புட்டிலைப்போன்ற தக்கோலக்காயையும் கலந்து, காட்டுமல்லிகையுடன் வெண்கூதாளம் பூவையும் தொடுத்துக்கட்டிய கண்ணியை அணிந்தவனாகி, வாசனை வீசும் சந்தனத்தை அணிந்த, நிறம் எடுத்துக்காட்டும் மார்பையும் கொடுமையான செயலையும் உடையவரும், வலிய வில்லால் கொலைபுரிகின்றவருமாகிய கானவர், உயர்ந்த மூங்கிற்குழாயில் முற்றி விளைந்த தேனால் ஆகிய கள்ளின் தெளிவை மலையில் உள்ள சிற்றுாரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து, தொண்டகம் என்னும் சிறிய பறைக்கு ஏற்பக் குரவைக்கூத்து ஆட; விரலால் வலிய மலர்த்துதனாலே மலர்ந்தனவும் வெவ்வேறு வகையாக இருப்பனவும் காம்போடு கூடியனவும் மணம் வீசுகின்றனவும் ஆழமான சுனைகளிலே மலர்ந்தனவும் வண்டுகள் மொய்ப்பனவும் ஆகிய மலர்களால் ஆன கண்ணி, இரட்டையாகக் கட்டிய மலர்மாலையில் அணைத்துக் கட்டிய கூந்தல், முடித்திருக்கின்ற கஞ்சாவின் இலையோடு கூடிய மணமுடைய பூ இவற்றை அணிந்து, சிவந்த அடிமரத்தை உடைய வெண்கடம்பின் வெள்ளையான பூங்கொத்துக்களை இடையிலே வைத்து வண்டு வந்து உண்ணும்படியாக (மலர்களையும் சேர்த்துத்) தொடுத்ததும் மிக்க குளிர்ச்சியை உடையதுமாகிய பெரிய தழையாடையைக் குற்றமறத் திருந்திய வடங்களை உடைய ரகசிய ஸ்தானத்தில் அசையும்படியாக உடுத்து, மயிலைக் கண்டாற்போன்ற தோற்றத்தைப் பெற்ற, மெத்தென நடக்கும் நடையையுடைய மகளிரோடு; சிவந்த நிறம் உடையவன், சிவந்த ஆடையை அணிந்தவன், சிவந்த அடிமாத்தையுடைய அசோகினது குளிர்ந்த தளிர் அசைகின்ற காதை உடையவன், கச்சை அணிந்தவன், கழலைக்கட்டியவன், வெட்சிக்கண்ணியைச் சூடியவன், குழலை ஊதுபவன், கொம்பை வாசிப்பவன், வேறு பல சிறிய வாத்தியங்களை இசைப்பவன், ஆட்டுவாகனத்தான், மயிலில் ஏறுபவன், குற்றம் இல்லாத சேவற் கொடியைப்பிடித்தவன், நெடிய உருவம் படைத்தவன், வளையணிந்த தோளையுடையவனாக, யாழ்நரம்பு ஒலித்தாற்போன்ற இனிய குரலேயுடைய மகளிர் கூட்டத்தோடு, சிறிய புள்ளிகளை உடையதாய் மணமும் தண்மையும் மென்மையும் உடையதாய் இடுப்பிலே கட்டிய, நிலத்திலே புரளும் துகிலை உடையவனாகி முழவைப் போலப் பெருத்த விசாலமான கைகளால் ஏற்ற வண்ணம் ஏந்திக்கொண்டு மெல்லிய தோளையுடைய மான் போன்ற பல மகளிரைத் தழுவி, அவர்களுக்கு முதற்கை கொடுத்து, மலைகள் தோறும் விளையாடுதலும் நிலைபெற்ற அவனது குணமாகும்; அது மட்டும் அன்று.

218—226 சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து வைத்து, ஆட்டை அறுத்து, கோழிக் கொடியோடு விழாவுக்குரிய களத்தை நிறுவி, ஒவ்வோர் ஊரிலும் நடத்த மேற்கொண்ட சிறப்புப்பொருந்கிய விழாக்களிலும் , அன்பர்கள் துதித்து வழிபட, விரும்பிச் செல்லும் அவ்விடங்களிலும் ; பூசாரி அமைத்த வெறியாடுகின்ற இடத்திலும்; காட்டிலும் சோலையிலும் அழகுடைய ஆற்றிடையிலுள்ள தீவிலும் ஆற்றிலும் குளத்திலும் வேறு பல இடங்களிலும்; நான்கு தெருக் கூடும் சதுக்கத்திலும் வேறு சந்திகளிலும்; புதிய பூக்களையுடைய கடம்பமரத்திலும், மன்றத்திலும் பொதியிலிலும் கந்த உடைய இடங்களிலும்;

227—249. மாட்சிமைப்பட்ட தலையையுடைய கோழிக்கொடியோடு பிற அலங்காரங்களையும் செய்து பொருத்தமாக அமையும்படி நெய்யோடு கலந்து வெள்ளைக் கடுகை அப்பி, மந்திரங்களை மெல்லச் சொல்லிக் கும்பிட்டுக் கொழுவிய மலர்களைத் தூவி, ஒன்றோடு ஒன்று மாறுபட்ட நிறத்தையுடைய இரண்டு ஆடைகளை ஒருங்கே உடுத்து, சிவந்த நூலைக் கையிலேகட்டிக்கொண்டு, வெண்மையான பொரியைத் தெளித்து, மிக்க வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுத்த ஆட்டுக்கிடாயின் ரத்தத்தோடு கலந்த தூய வெள்ளை யரிசியைச் சிறு பலியாக இட்டு, பல கூடை நிறையப் பிரப்பரிசி வைத்து. சிறிய பசு மஞ்சளோடு நறிய வாசனைப்பொருள்களைத் தெளித்து, பெரிய குளிர்ந்த செவ்வலரியினது நறிய குளிர்ந்த மாலையை ஒரே அளவாக அறுத்து அங்கங்கே தொங்கும்படி கட்டி, செறிந்த மலைச்சாரலில் உள்ள நல்ல நகர்களை வாழ்த்தி, நறிய தூபத்தைக் காட்டி, குறிஞ்சிப் பண்ணைப் பாடி, ஒலிக்கின்ற இன்னொலியை உடைய அருவியோடு இனிய வாத்தியங்கள் சேர்ந்து முழங்க, பல நிறங்களையுடைய மலர்களைத் தூவி, கண்டோர் அஞ்சும்படியாக ரத்தத்தோடு கலந்த சிவந்த தினையைப் பரப்பி, குறமகளானவள் முருகனுக்கு உவந்த வாத்தியங்களை வாசிக்கச் செய்து, தெய்வம் இல்லையென்ற முரண்பட்ட கொள்கையை உடையவர்களும் அஞ்சும்படியாக, முருகனை வரும்படி செய்த அழகு மிக்க அகன்ற திருக்கோயிலில், வெறியாடுகின்ற இடத்தில் சிலையோடும்படியாகப் பாடி, பல கொம்புகளை ஒன்றாக ஊதி, ஒலியாற் கொடுமையையுடைய மணிகளை ஒலித்து, புறங்காட்டி ஓடாத வலிமையையுடைய பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்தி, தமக்கு விருப்பமானவற்றை வேண்டும் அடியவர் வேண்டியபடியே அடைந்து வழிபட்டுக் கொண்டிருக்க (முருகன்) அங்கங்கே தங்கியிருத்தலும் நான் அறிந்ததே யாகும்:

250—277. நான் கூறிய அவ்விடங்களானாலும் (பிற இடங்களானாலும்) தரிசனத்துக்குப் பொருத்தமாக முக்தி நீ கண்ட இடத்தில் முகம் விரும்பித் துதித்து, கை குவித்துப் புகழ்ந்து காலில் விழுந்து நமஸ்காரம் செய்து, "உயர்ந்த பெரிய இமாசலத்தின் உச்சியில் நீல நிறமுடைய தருப்பை வளர்ந்த பசிய சுனையிலே, ஐம்பூதத் தலைவருள் ஒருவன் தன் கையிலே ஏற்றுக் கொடுக்க, ஆறு முனிவருடைய மனைவியர் பெற்றெடுத்த ஆறு திருவுருவத்தோடு அமர்ந்த செல்வனே! ஆலமரத்தின் அடியிலே வீற்றிருக்கும் தமூர்த்தியின் திருமகனே! பெருமையையும் பக்க மலைகளையும் உடைய இமாசலத்தின் மகளுக்கு மகனே! பகைவர்களுக்கு யமனைப் போன்றவனே! வெற்றியையும் வெல்லும் போரையும் உடைய துர்க்கையின் புதல்வனே! ஆபரணங்களை அணிந்த பெருமையையுடைய பழையவளாகிய பராசக்தியின் குழந்தையே! தேவர்கள் வணங்குகின்ற வில்லைக் கையிலே பிடித்த படைத்தலைவனே! போகத்துக்குரிய மாலையை அணிந்த திருமார்பை உடையவனே! எல்லா நூல்களையும் அறியும் பேரறிவுடையவனே! போரில் ஒப்பில்லாத ஒருவனாக விளங்குபவனே! பொருகின்ற வெற்றியினையும் இளமையையும் உடைவனே! அந்தணர்களுடைய செல்வமாக இருப்பவனே! மெய்யை உணர்ந்தவர்களுடைய சொற்களெல்லாம் தொக்க தொகுதியாக விளங்குபவனே! தெய்வயானை வள்ளியாகிய மங்கையர்தம் கணவனே! வீரம் மிக்காருள் ஆண் சிங்கம் போன்றவனே! வேல் பொருந்திய பெரிய கைகளால் அமைந்த பெரிய செல்வத்தை உடையவனே! கிரவுஞ்ச மலையை அழித்த, என்றும் குறையாத வெற்றியையுடைய, வானத்தை முட்டும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரிமை பூண்டவனே! சாதியாலும் சமயத்தாலும் வேறுபட்ட பலரும் புகழும் நல்ல மொழிகளையுடைய, புலவர்களுக்குள் ஆண்சிங்கம் போன்ற தலைவனே! அருமையாகப் பெறுதலாகிய முறையையுடைய பெரிய பொருளாகிய முக்திச் செல்வத்தையுடைய முருகனே! தன்பால் விரும்பி வந்தவர்களுக்கு அவர் விரும்பியதைத் தந்து நிரம்ப நுகரச் செய்யும் பெரிய புகழை உடையவனே! துணையின்றி வருந்தியவர்களுக்கு அருள் புரியும், பொன்னாபரனங்களை அணிந்த சேயே! மேல் நெருங்குகின்ற போர்களை முடித்து உன்னுடைய வென்று அடுகின்ற மார்பினாலே பரிசிலர்களை ரக்ஷிக்கின்ற, பயங்கரமான நெடிய வேளே! தேவரும் முனிவருமாகிய பெரியவர்கள் துதிக்கின்ற திருநாமத்தை உடைய தலைவனே! சூரனது குலத்தை அழித்த வீரம் பொருந்திய மார்பத்தையும் மிக்க வலிமையையும் உடையவனே! போரிலே சிறந்து நிற்கும் வீரனே! தலைவனே!" என்று பலவகையாக நான் அறிந்த அளவிலே சொல்வனவற்றை விடாமற் சொல்லி;

278—317."உன் பெருமைகளை அளவிட்டு அறிதல் உலகத்தில் உள்ள உயிர்களுக்கு அருமையாக இருத்தலின், நான் நின் திருவடி தரிசனத்தின் பொருட்டு அதை நினைந்து வந்தேன். நின்னோடு ஒப்பார் இல்லாத ஞானமுடையவனே!" என்று தொடங்கி, நீ உள்ளத்தே கொண்ட எண்ணத்தைச் சொல்வதற்கு முன்னே நீ நினைத்ததை உணர்ந்து உடனே வேறு பல உருவங்களை யுடைய குறிய பல ஏவலாளர், விழா நடத்தும் களத்தில் சிறப்புண்டாகும்படியாகத் தோன்றி, "இவன் இரங்கத் தக்கான், அறிவு வாய்ந்த யாசகன்; ஈகையால் வந்த நின் புகழைக் கேட்டு விரும்பி இனியனவும் நல்லனவுமாகியதிருநாமங்களை நனேறாகப் பலபலவாகச் சொல்லித் துதித்து வந்தான், பெருமானே!" என்று சொல்ல, தெய்வத்தன்மை அமைந்த வலிமை விளங்கும் திருவுருவத்தோடு ஆகாயத்தை அளாவிய உயரத்தையுடைய அப் பெருமான், உனக்கு அருள் செய்யும்பொருட்டு அங்கே வந்து, காண்பாருக்கு வருத்தத்தைத் தரும் அந்த நெடிய உருவத்தை மறைத்துப் பழையதாக உள்ள தன் மணம் கமழும் தெய்வத் தன்மையும் இளமையும் அழகும் உடைய வடிவத்தைக் காட்டி, "அஞ்சுவதை விட்டுவிடு;உன் வரவை முன்பே அறிவேன்" என்று அன்புடைய நல்ல வார்த்தைகளைச் சொல்லி, என்றும் அழிவில்லாமல் இருக்கும்படியாக, இருண்ட கரிய நிறம்பெற்ற உலகத்தில் நீ ஒருவனே தலைவனாகத் தோன்றும்படி, யாவற்றினும் சிறந்த, பெறுவதற்கரிய பரிசிலாகிய வீடுபேற்றை வழங்குவான்; பல சிற்றருவிகள் ஒருங்கே பல வெவ்வேறு துகிற்கொடிகளைப்போல வளைந்து அசைந்து, அகிலைச் சுமந்து, சந்தன மரத்தை உருட்டி, சிறு மூங்கிலின் பூவுடைய அசைகின்ற கொம்பு பூவில்லாமல் தனிப்பஅதன் வேரைப் பிளந்து, வானுலகத்தைத் தொடுகின்ற உயர்ந்த மலையில் சூரிய மண்டலத்தைப்போல ஈயால் வைக்கப்பட்ட தண்ணியவாய் மணக்கின்ற பரந்த தேன் கூடுகள் சிதைய, நல்ல பல வேர்ப்பலாவின் முற்றிய சுளை விழுந்து கலக்க, மேலே உள்ள சுரபுன்னை மரத்தின் வாசனை மிக்க மலர்கள் உதிர, கருங்குரங்குகளோடு கரிய முகத்தையுடைய முசுக்கலைகள் நடுங்கவும் பூவைப்போன்ற புள்ளிகளையுடைய மத்தகத்தைப் பெற்றகரிய பெண்யானைகள் குளிர்ச்சி அடையவும் வீசி, பெரிய களிற்றினது முத்தையுடைய வெள்ளிய தந்தங்களை வாரிக்கொண்டு, குதித்து, நல்ல பொன்னும் மணியும் தம் நிறம் வெளிப்படத் தோன்றுமாறு செய்து, பொன்னைக் கொழித்து, வாழையின் அடிமரம் முறியவும், தென்னையின் பெரிய இளநீர்க் குலைகள் உதிரவும் தாக்கி, மிளகு கொடியின் கறிய காய்க்கொத்தானது சாயும்படியாக, பொறிகளை மேலே உடையனவும், மெல்ல நடக்கும் நடையை உடையனவுமாகிய மயில்கள் பல ஒருங்கே அஞ்சவும், காட்டுக் கோழியின் வலிமையையுடைய பெடை ஒடிப் போகவும், காட்டுப் பன்றியோடு கரிய பனையின் உள்ளீட்டில் உள்ள மெல்லிய சிலாம்பைப் போன்ற நிறம் பெற்ற மயிரையுடைய உடம்போடு கூடிய வளைந்த அடியைப் பெற்ற கரடிகள் பெரிய பாறையின் பிளப்பிலே உள்ள குகையிலே புகுந்து அடங்கவும், கரிய கொம்பையுடைய காட்டுப் பசுவின் நல்ல காளை முழங்கவும் மலையின் உச்சியிலிருந்து இழுமென்ற ஒசையோடு இறங்கி வருகின்ற அருவியையுடைய பழமுதிர்சோலை மலைக்கு உரியவனாகிய முருகன்.