திருமுருகாற்றுப்படை - பொழிப்புரை/வெண்பாக்கள்
வெண்பாக்கள்
குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய்
புள்தலைய இதப் பொருபடையாய்—என்றும்
இளையாய் அழகியாய் ஏறுர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத்து உறை.
கிரவுஞ்ச மலையை வேலால் எறிந்து அழித்தவனே, முழங்கும் கடலிலே புகுந்து ஒளித்த சூரபதுமனைச் சங்காரம் செய்தவனே, சிவந்த தலையையுடைய பூதங்களாகிய போர் புரியும் சேனையை உடையவனே, என்றும் இளமையை உடையவனே, என்றும் அழகாக இருப்பவனே, இடபத்தை வாகனமாகக் கொண்டு உலாவரும் பரமசிவனுடைய ஆண் சிங்கம் போன்ற குமாரனே, நீ என்றும் என் உள்ளத்திலே தங்கியிருப்பவனாக வாசம் செய்வாயாக. (1)
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங்கு அமரர்இடர் தீர்த்ததுவும்—இன்றென்னைக்
கைவிட நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும்
மெய்லிடா வீரன்கை வேல்.
கிரவுஞ்ச மலையை எறிந்து பொடிபடுத்தியதும், பகைவரது வலிமை குன்றும்படியாகப் போர் செய்ததும், சூரனால் துன்புற்ற அக்காலத்தில் தேவலோகத்தில் இருந்த தேவர்களின் துன்பத்தைப் போக்கியதும், இன்று என்னைக் கைவிடாமல் நின்றதும், நக்கீரர் முதலியவர்களை மலைக்குகையிலே பாதுகாத்ததும் சத்தியத்தை நீங்காமல் இருக்கும் வீரணாகிய முருகனது திருக்கரத்தில் உள்ள வேலே யாகும். (2)
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்—வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
வீரத்தையுடைய வேல்; நீளமான வேல் தேவர்களைச் சிறையினின்றும் விடுவித்த தீரம் பொருந்திய வேல்: செவ்வேளின் திருக்கரத்திலுள்ள வேல்; சமுத்திரத்திலே புகுந்து மூழ்கிய வேல்; வெற்றியைத் தரும் வேல்; சூரனுடைய மார்பையும் கிரவுஞ்ச மலையையும் துளைத்த வேல் எனக்குத் துணையாக உள்ளது. (3)
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா—முன்னம்
பணிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.
கொலைத் தொழிலிலே பயின்ற வேலையுடைய குரனைச் சங்காரம் செய்த தலைவனே. முன்பு பனியால் மூடப் பட்ட உயர்ந்த கிரவுஞ்சகிரியின்மேல் பட்டு ஊடுருவும் படியாகப் பிரயோகம் செய்த ஒப்பற்ற நினது வேலாயுதத்தை, இன்னும் ஒருமுறை என்னுடைய துன்பமாகிய மலை பட்டுருவும்படியாகவும் பிரயோகம் செய்வது பொருத்தமாக இருக்கும். (4)
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்ன ஒருவரையான் பின்செல்லேன்—பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே.
பன்னிரண்டு திருக்கைகளோடு கோலங்கொண்ட அப்பனே, தேவர்களுடைய கொடிய பாவங்களைப் போக்கி அருள் செய்யும் வேலாயுதக் கடவுளே, செந்தூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, அடியேன் உன்னையன்றி வேறு ஒருவரையும் எனக்குத் துணையாக நம்பமாட்டேன்; வேறு ஒருவரையும் வழிபடமாட்டேன். (5)
அஞ்சு முகம்தோன்றின் ஆறு முகம்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும்—நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாவென்று ஓதுவார் முன்.
முருகா என்று எப்போதும் ஓதுகின்ற அடியார்களுக்கு முன்னாலே, அவர்கள்பால் பயப்படுகின்ற முகம் காணப்படின் முருகனுடைய ஆறுமுகமும் அதனைப் போக்கத் தோன்றும்; கொடிய போரில் பயப்படாதே என்று வேலாயுதம் தோன்றும்; மனத்தில் ஒரு முறை தியானித்தாலும் முருகனுடைய இரண்டு திருவடிகளும் தோன்றும். (6)
முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே—ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
முருகா, திருச்செந்தூர் ஆண்டவனே, திருமால் மருகனே, சிவகுமாரனே, துதிக்கையை முகத்திலே உடைய விநாயகருக்கு இளவலே, அடியேன் உன்னுடைய தண்டையை அணிந்த திருவடியையே பற்றுக்கோடாக நம்பி எப்பொழுதும் கும்பிடுவேன். (7)
காக்கக் கடவியநீ காவாது இருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா—பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.
ஷண்முகா மலர்ந்த கடம்ப மாலையை அணிந்தவனே, முருகா, சுடர் விடும் வேலாயுதக் கடவுளே, என்னைக் காப்பாற்றும் கடமையையுடைய நீயே காவாமல் இருந்து விட்டால், என்னைக் காக்கும் பொறுப்பு யாருக்கு உரியதாகும்? இரங்கி அருளுவதற்கு ஏற்ற பாத்திரமாகிய நல்ல இடம் இது. இனிமேல் கருணைபுரிவாயாக. (8)
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு—சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.
நெஞ்சே, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் பன்னிருகைப் பெருமாளாகிய முருகன் திருவடிகளைக் கரங்குவித்துக் கும்பிட்டுக் கண் குளிரும்படியாகத் தரிசித்து, குறைவில்லாமல் பெருகிய ஆர்வத்தோடு அழகையுடைய திருமுருகாற்றுப்படையை, பூசையாக எண்ணிக் கொண்டு பாராயணம் செய்வாயாக. (9)
நக்கீரர் தாம்உரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால்—முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும்.
நக்கீரர் திருவாய்மலர்ந்த நல்ல திருமுருகாற்றுப்படையைத் தன்னைப் பாதுகாக்கும் பொருட்டுத் தினந்தோறும் ஒருவன் பாராயணம் செய்தால், பெருமையையுடைய முருகக்கடவுள் முன்னாலே பாதுகாக்க எழுந்தருளி வந்து உள்ளத்துயரத்தைப் போக்கியருளி, அவன் கருதிய எல்லாவற்றையும் வழங்கியருள்வான். (10)