திரும்பி வந்த மான் குட்டி/பொன்னனின் சுதந்தரம்
பொன்னனின் சுதந்திரம்
பொன்னன் அப்போது ஐந்தாவது வகுப்பிலே படித்துக் கொண்டிருந்தான்.
வழக்கமாக, பொன்னன் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பான். ஆனால் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி காலையில் எட்டு மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை.
அவனுக்கு ஏதாவது காய்ச்சலா? இல்லை, தலை வலியா? அதெல்லாம் இல்லை. நன்றாகப் போர் வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் அம்மா அவனை நாலைந்து தடவைகள் எழுப்பிப் பார்த்தும் பயனில்லை.
“ஒ பொன்னா, எழுந்திருடா. ஊரெல்லாம் சுதந்தர தினம் கொண்டாடுது. எதிர் வீட்டு இனியன், பக்கத்து வீட்டுப் பழனி எல்லாரும் குளிச்சு முழுகி, அழகாய் உடை உடுத்தி, கொடி ஏத்துகிறதிலே கலந்துக்கப் போயிட்டாங்க. நீ மட்டும் இப்படி எட்டு மணி வரை தூங்கிறியே!” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.
“சும்மா போம்மா. இன்னிக்கு சுதந்தர தினம். சுதந்தர தினத்திலே சுகமாகத் தூங்கக்கூட எனக்குச் சுதந்தரம் இல்லையா? அதுக்குத்தானே ஸ்கூலிலே லீவு விட்டிருக்காங்க?” என்று சொல்லி விட்டுப் போர்வையை நன்றாக இழுத்து முகத்தையும் மூடிக் கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தான்.
“சரி நல்லாத் தூங்கு. ஒரு வழியா நாளைக் காலையிலே எழுந்திருச்சு பள்ளிக்கூடம் போனாப் போதும்.”
அம்மா அலுப்புடன் கூறிவிட்டு, சமையலைக் கவனிக்கப் போய்விட்டாள்.
பொன்னனின் அப்பா அதிகாலையில் குளித்து விட்டு, அவருடைய அலுவலகத்தில் கொடி ஏற்றப் போய்விட்டார். அவர் வீட்டிலே இருந்தால், பொன்னனை இவ்வளவு நேரத்துக்குத் தூங்க விட்டிருப்பாரா?
சரியாக ‘டாண், டாண்’ என்று மணிக் கூண்டுக் கடிகாரத்திலே மணி பத்து அடித்தது. அதைத் தொடர்ந்து ‘தொப்’, ‘தொப்’பென்று நாலைந்து அடிகள் தொடர்ந்து விழுகிற சத்தமும் கேட்டது.
“டேய் பொன்னா, மணி பத்தடிச்சுடுத்து. இன்னுமா தூக்கம்? ம்... எழுந்திருடா” என்று சொல்லி, பொன்னனின் அப்பா அவனுடைய முதுகிலே அடித்த சத்தம்தான் அது!
‘சுதந்தர தினமாம் சுதந்தர தினம். இந்த வீட்டிலே தூங்கிறதுக்குக் கூட சுதந்தரம் இல்லை’ என்று முனு முணுத்தபடி, முதுகைத் தடவிக் கொண்டு, முகத்தைக் கோண வைத்துக் கொண்டு எழுந்தான் பொன்னன். பாயைச் சுருட்டி மூலையிலே வைத்தான். அடுக்களையை நோக்கி வேகமாக நடந்தான்.
“அம்மா, அம்மா, எனக்கு ரொம்பப் பசிக்குது. மணி பத்தாயிடுச்சு. பலகாரம் தாம்மா” என்று அவசரப் படுத்தினான்.
“பலகாரம் தாரேன். பல் துலக்கிட்டு வா.”
“என்னம்மா இது? ஆடு மாடெல்லாம் பல் துலக்கிட்டா சாப்பிடுது?”
“அப்படியானால், நீ உடனே தோட்டத்துக்குப் போ.”
"தோட்டத்துக்கா?”
“ஆமா, அங்கே நிறையப் புல் இருக்கு இலை தழையெல்லாம் இருக்கு. பல் துலக்காமே, ஆடு மாடு மாதிரி சாப்பிடலாம்.”
பொன்னனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“சேச்சே! பல் துலக்காம பலகாரம் சாப்பிடக் கூடாதாம். சுதந்தர தினத்திலே சுதந்தரமா எதுவும் செய்ய முடியல்லியே! அப்புறம் எதுக்கு இதை சுதந்தர தினம்கிறது? இன்னிக்குக்கூட என்னை இப்படி அம்மாவும், அப்பாவும் அடிமை போலே நடத்துறாங்களே!”
மிகுந்த சலிப்போடு, பல்லைத் துலக்கினான்; பல காரம் சாப்பிட்டான், பிறகு ஊருக்குள் நடந்து சென்றான். வழியிலே ஒரு நாயைப் பார்த்தான். உடனே தெரு ஓரமாகக் கிடந்த ஒரு கல்லை எடுத்தான்; நாயைக் குறி பார்த்து எறிந்தான். நாயின் காலிலே கல் பட்டுவிட்டது. உடனே, அந்த நாய் ‘வள்’, ‘வள்’ என்று குரைத்துக் கொண்டே பொன்னன் மேலே பாய்வதற்கு ஓடி வந்தது.
“ஐயோ! அப்பா” என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினான் பொன்னன். பக்கத்துத் தெரு முனையிலிருந்த ஒரு வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.
‘சே, என்ன கதந்தரம் ஒரு நாய் மேலே கல் எறியக்கூட சுதந்தரம் இல்லையே!’ என்று அலுத்துக் கொண்டான்.
அரை மணி நேரம் ஆனது. தெருவிலே அந்த நாயினுடைய தலை தெரிகிறதா என்று சுவர் ஓரமாக நின்று எட்டி எட்டிப் பார்த்தான். தெரியவில்லை. மெதுவாக வெளியிலே வந்தான்.
கடைத் தெரு வழியாக நடந்து போனான். அப்போது, அவன் பின்னாலே ஒரு கார் வந்ததது.
‘பாம், பாம்... பாம், பாம்’ என்று ஒலி எழுப்பினார் அந்தக் கார் டிரைவர். பொன்னன் நடுத் தெருவிலே நடந்து போய்க் கொண்டிருந்தான். காருக்கு வழி விடவில்லை. டிரைவருக்கு இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ ஒதுங்கிப் போகவும் வழியில்லை. திரும்பத் திரும்ப ஒலி எழுப்பினார். பொன்னன் கவலைப்படாமல், மிகவும் கம்பீரமாக நடுத்தெருவில் மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அந்தக் கார் மெதுவாக ஊர்ந்து வந்ததால், அதற்குப் பின்னாலே வந்த கார்களும் ஊர்ந்தே வந்தன. இதனால், கடைத்தெருவில் நெருக்கடி ஏற்பட்டது.
“ஏ பையா, என்ன, வீட்டிலே சொல்லிட்டு வந்திட் டியா? எருமை மாட்டை விட மெதுவா, நடுத் தெருவில் நடக்கிறியே!”
டிரைவர் என்ன சொல்லியும் பொன்னன் ஒதுங்க வில்லை. “இன்றைக்கு சுதந்தர தினம். என் விருப்பம் போல் சுதந்தரமா நடுத் தெருவிலே நடப்பேன்; நகராமலே நிற்பேன். என்னை யாரு கேட்கிறது?” என்று சொல்லிவிட்டு, வேண்டுமென்றே மிக மிக மெதுவாக நடந்தான்; இல்லை, நகர்ந்தான்.
பொன்னனைப் பயமுறுத்துவதற்காக அந்த டிரைவர், காரை அவன் அருகிலே கொண்டுபோய், அவன் முதுகிலே மெல்ல ஓர் இடி இடித்தார். முதுகிலே கார் இடித்ததும், பொன்னன் பயந்து போனான். அப்படியே ஒரு துள்ளுத்துள்ளிப் பக்கத்திலே தாவினான். அப்போது அவன் கால் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டான். விழுந்த இடத்திலே கிடந்த கல்லிலே அடிபட்டு இரத்தம் குபுகுபுவென்று வெளியே வந்தது.
உடனே, கூட்டம் கூடிவிட்டது.
“நல்லா வேணும் இந்தப் பையனுக்கு. எவ்வளவு நேரமா ஹாரன் அடிச்சாரு! வழியை மறைச்சுக் கிட்டு நகரவே இல்லியே” என்று அங்கேயிருந்த கடைக்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.
அடிபட்ட பொன்னனைக் காரிலே தூக்கிப் போட் டுக்கொண்டு, அந்தக் கார் டிரைவரும் அதன் உள்ளேயிருந்த இருவரும் பக்கத்திலேயிருந்த ஓர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள்.
“நல்லவேளை, தலையிலே ஒண்ணும் அடியில்லை. நெத்தியிலேதான் கல் குத்தியிருக்கு” என்று சொல்லி டாக்டர் ஊசி போட்டு, மருந்து கொடுத்தார். தலையைச் சுற்றி ஒரு கட்டும் போட்டு விட்டார்.
வீட்டிலே பொன்னனைக் கொண்டு வந்து சேர்த்ததும், அவன் அம்மாவும், அப்பாவும் அலறித் துடித்தார்கள். நடந்ததைக் கேட்டு, “நல்ல நாளிலே இப்படியா நடக்கணும்” என்று வேதனை அடைந்தார்கள்.
அன்று மாலை பொன்னனுடைய அப்பா அவன் அருகிலே வந்து அமர்ந்து கொண்டு, “பொன்னா, இப்ப வலி எப்படி இருக்குது” என்று கேட்டார்.
“வலி தெரியல்லே. நல்லவேளை நெத்தியிலே பட்டுது. தலையிலே பட்டிருந்தால்...?”
“ஆபத்துத்தான்... நல்ல காலம். ஆனாலும் பொன்னா, நீ சுதந்தரம்னா என்ன அர்த்தம்னு சரியாப் புரிஞ்சுக்கல்லே. சுதந்தரநாளிலே ஒவ்வொருத்தரும், தான் நினைக்கிறதைச் செய்தால் என்ன ஆகும்? நீ உன் இஷ்டம் போலே நாயைக் கல்லாலே அடிச்சாய். அதே மாதிரி இன்னொருத்தர் தடியை எடுத்துக்கிட்டு வந்து, தெருவிலே சும்மா போகிற உன்னை அடிக்கிறார்னு வச்சுக்கோ, அதுக்குப் பேர் சுதந்தரமா? கடைத் தெருவிலே நீ ஒரு காரை வேகமாகப் போக விடாமத் தடுத்தியே, அதனாலே எத்தனை கார்கள், வண்டிகளுக்குத் தொல்லை! அதிலே இருந்தவங்களெல்லாம் எவ்வளவு சங்கடப் பட்டிருப்பாங்க? எத்தனை பேரு வேலை கெட்டுப் போயிருக்கும்? இப்படிச் செய்யறதுதான் சுதந்தரமா?”
“நான் செய்தது தப்புத்தாம்பா.”
“சுதந்தரம்னா என்னன்னு தலைவருங்க சொல்லி யிருக்காங்க. விளக்கமாச் சொல்றேன். கேள்:
சோம்பி யிருப்பது சுதந்தரமில்லை
தொல்லை கொடுப்பதும் சுதந்தரமில்லை
வீம்பு செய்வதும் சுதந்தரமில்லை
வேறே எதுதான் சுதந்தரமாகும்?
மற்றவங்களை மதிக்கிறது சுதந்தரம். பேசுகிற பேச்சிலே, செய்கிற செயலிலே சுத்தமாயிருக்கிறது சுதந்தரம். உரிமைகள், கடமைகள்னு சொல்றோமே, அந்த ரெண்டையும் நல்லா உணர்ந்து நடந்தால், அதுதான் சுதந்தரம். பெரியவனானதும் உனக்கு இதெல்லாம் நல்லாப் புரியும்...”
அப்பா, சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் பொன்னன்,“இப்பவே எனக்கு நல்லாப் புரியுதப்பா. இனிமேல் வீண் வம்புக்குப் போகாமே நல்லதையே செய்கிறேனப்பா" என்று அப்பாவின் இரு கைகளை யும் பிடித்துக்கொண்டு கண் கலங்கக் கூறிக் கொண்டே மெல்ல எழுந்தான்.
“பொன்னா, பேசாமப் படுத்துக்கோ. நாளைக் காலையிலே பூரண குணமாயிடும். அப்புறம் எழுந்து நடக்கலாம், ஓடலாம்; விளையாடலாம்” என்றாள் அம்மா.
பொன்னன் எதுவும் பேசாமல், மெல்ல நடந்து, அருகில் இருந்த மகாத்மா காந்தி படத்தின் எதிரே சென்றான். இரு கைகளையும் சேர்த்து, கண்களை மூடி வணங்கினான்.
மகனின் மனம் திருந்தியதைக் கண்டு அம்மாவும் அப்பாவும் ஆனந்தம் அடைந்தார்கள்.