திருவாசகத்தேன்/பணிவேண்டிப் பணிவோம்!

பணிவேண்டிப் பணிவோம் !


மிழில் உவமை, சிறப்புடைய ஒன்று. ஒன்றை எளிதில் விளக்குவதற்கு உவமையைப் போல் உதவி செய்வது பிறிதொன்றில்லை. மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்தில் உள்ள உவண்மகள் பலப்பல. அவையுள் எளிதில் விளங்கும் உவமைகள் மிகுதி. "ஊர் ஆ" "ஊர் நாய்" போன்ற உவமைகள் மிகமிகப் பொருட் செறிவுடைய உவமைகள் மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் கண்டு அனுபவிப்பவைகளே உவமைகளாகி யுள்ளன.

இறைவன்- சிவன் அம்மையப்பன், நெருப்பும் சூடும் போன்ற்து. அம்மையப்பன் தத்துவம்; பொருளும் ஆற்றலும் (Matter and Energy) போன்றது. பரசிவம் இயங்குநிலையில்- தொழிற்படு நிலையில் சக்தியாகப் பரிணமிக்கிறது. நெருப்பையும் சூட்டையும் பிரிக்க இய்லாதது போல அம்மையையும் அப்பனையும் பிரிக்க இய்லாது. அதனாலேயே மங்கைபாகம் என்ற திருவுருவத்தில்- திருநாடித்தில் வழிபடும் வழக்கம் தோன்றியது; தோன்றி வளர்ந்தது. இறைவன்- சிவன் பெண்பால் உகந்தமையை வினாவாக்கி விடையளிக்கிறது திருவாசகம். திருச்சாழலில்,

தென்பா லுகந்தாடும் தில்லைக்கம் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் கனேடி

பெண்பா லுகந்தினேற் பேதாய் இரு நிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ

(திருச்சாழல்-9)

என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். இறைவன் அம்மையப்பராக இருத்தலினாலேயே இந்த உலகம் இயங்குகிறது. உயிர்க்குலம் வளர்கிறது.

மாயிருஞ்சகம் ஆணொடு பெண்ணாய்
வயக்க முற்றன அகிலகா யகியும்
பாயும் வெள் விடைப் பாகரை
மணந்து"

(காஞ்சிப். தமுபக்குழைந்த படலம் 14)

என்று காஞ்சிப் புராணம் கூறும். சிவத்தை அம்மையப்பராகவே வழிபடவேண்டும். சிவம், அருளுவதெல்லாம் அம்மையப்பர் திருக்கோலத்திலேயாம். சிவத்தின் ஒரு கூறே அருள் செய்யும் அம்மை! என்றாலும் பெரிய புராணத்தில் வரும் அடியார் பெருமக்களுக்கு அருள் வழங்கிய பொழுதெல்லாம் அம்மையப்பன் திருக்கோலத்திலேயே நிகழ்ந்தது. அதனாலேயே அருள்பாலித்த திருத்தலங்களில் எல்லாம் கருவறையில் சிவலிங்கத்திற்கு முன் அம்மையப்பர் திருமேனியும் விளங்கிக் காட்சியளிக்கிறது. ஆற்றல் இளமையோடிருக்கவேண்டும். ஆற்றலை நாளும் இளமை நலத்துடன் பேணவேண்டும். ஆற்றலை இழப்பின் அனைத்தும் போகும். ஆற்றல் வளரும் தன்மையது; என்றும் இளமையோடிருக்கும் இயல்பினது; படைப்பாற்றலுடையது. அதனால் அம்மையைக் கூறும் பொழுதெல்லாம் இளமை நலம் பொருளைக் குறிப்பிடுவர்; போற்றுவர்.

"மையிலங்கு கற்கண்ணி பந்கள்"

கண்ணிற்கு மை, இளம் பெண்கள் தான் இட்டுக் கொள்வர். ஆதலால், உமாதேவியை "மையிலங்கு நற்கண்ணி" என்றார். "மையிலங்கு" என்ற சொற்றொடருடன் "நற்கண்ணி" என்றது அம்மையின் மையிட்ட கண் காமக் கவர்ச்சியுடையதல்ல என்றும் அது நலம் பயப்பது, இன்பம் தந்தருளி இறவாத அன்பு நெறியில் உய்த்துச் செலுத்துவது என்றும் பொருள்படும்.

கருணை- உதவுதல் என்பது கேட்டுச் செய்வதல்ல. தாமே எளிவந்து செய்வது. மாணிக்கவாசகர், இறைவன்- சிவன் தானே வந்தாட்கொண்டதாகவே பாடுகின்றார். அந்த எளிவந்த கருணையை நினைந்து நினைந்து மகிழ்கின்றார்; போற்றுகின்றார்.

"வான் பழித்து இம்மண் புகுந்து
மனிதரை ஆட்கொள்ளும் வள்ளல்"

என்று போற்றுவார்; போற்றிப் புகழ்வார். சிவன் திருப்பெருந்துறைக் குருந்த மரத்தடிக்கு எழுந்தருளி வந்து ஆட்கொண்டார்; ஆட்கொள்ளுதல் என்றால் பொன்னும் பொருளும் போகமும் எடுத்த எடுப்பில் அருளுவதல்ல. ஞானிகள், நல்லவர்கள் பொன் முதலியவற்றை முதலில் விரும்பமாட்டார்கள். அவர்கள் இறைவன் பணி கொள்ளுதலையே விரும்புவார்கள். பணி கொள்ளுதலே, அருளிச்செய்தது போல்த்தான்!

"எது எமைப் பணிகொளுமாறது கேட்போம்!"

என்பது உம் திருவாசகம், பணியில் செலுத்திய தாய் தந்தையை- -

"நல்ல தாய் தந்தை ஏவ
நானிது செய்யப் பெற்றேன்"

என்று கூறும் சேக்கிழார் வாக்கு சிந்தனைக்குரியது. நமது வாழ்விலும் முயற்சிக்கு- உழைப்புக்குப் பணம் தூண்டுதல் சக்தியாக இல்லாமல் பணி செய்தலே தூண்டுதல் சக்தியாக இயங்கினால் நாம் வளர்வோம்! நமது நாடு வளரும். பணி செய்வதில் ஆர்வம் வேண்டும்' விருப்பம் வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்தல் வேண்டும்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே"

என்றார் அப்பரடிகளும். பணியைப் பணிக்காகவே விருப்பார்வத்துடன் செய்தல் வேண்டும். பணியின் விளைவுகள்-எதிர்-விளைவுகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. ஏன்? பணியின் பயனைக்கூட எதிர்பார்க்கக் கூடாது. 'கிடத்தல்' என்பது அஃறிணை நிலை. அஃறிணைப் பொருள்கள் காலத்தொடு இசைந்து நின்று பணி செய்யும் பாங்கினை அறிக. பூத்துக் காய்த்துப் பயன் தரும் மரங்களை நோக்குக. அம்மரங்கள் வரவேற்புரையையும் எதிர்ப்பார்ப்பதில்லை; நன் கூறலையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், மனிதன் வேலை செய்ய விரும்புவதில்லை. ஒரோவழிச் செய்தாலும் விருப்பார்வத்துடன் செய்வதில்லை. வேண்டா வெறுப்பாகச் செய்கிறான். கூலியையே குறியெதிர்ப்பாக உடைய உழைப்பு, பூரண பலன் தராது. ஆதலால், நமக்கு உற்றார் உறவினர் நண்பர்கள் நமக்கு முதலில் வேலை தரட்டும்; பணிகள் வழங்கட்டும். எவரொருவர் பணிகளை வழங்கித் திறமையையும் அனுபவத்தையும் பெற உதவி செய்கிறார்களோ அவர்களே நமக்கு மிகவும் வேண்டியவர்கள்: நல்லது செய்பவர்கள். பணிகளை வழங்காது சோறும் துணியும் வழங்கினால் அது உதவியாகாது; வாழ்விப்பதாகாது. அதனாலேயே சேக்கிழார், "கைத் திருத்தொண்டினை'ப் போற்றிப் புகழ்கிறார். இன்றோ வேலையைக் கண்டால் அஞ்சி ஓடுவது, வேலையை ஒத்திப்போடுவது, தட்டிக் கழிப்பது, அல்லது வேலை செய்வதற்கு சோம்பற்பட்டுக்கொண்டு விடுப்புகள் எடுப்பது போன்ற தீய பழக்கங்கள் இந்தியர்களை ஆட்கொண்டிருப்பதனாலேயே இந்தியா விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும் முன்னேறவில்லை, வறுமையும் ஏழ்மையும் அகலவில்லை. என்று, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தனது பணியை- வேலையை ஊக்கத்துடனும் விருப்பத்துடனும் ஆர்வக் கிளர்ச்சியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்கின்றானோ அன்றே இந்தியா வளரும்; தமிழ்நாடு வளம் கொழிக்கும்.

சிவன், வலியவந்து வாழ்தலுக்கும் உய்தலுக்கும் உரிய பணிகளை வழங்கி ஆட்கொண்டருளிய அருமையை மாணிக்கவாசகர் உணரவில்லை. வளரும் குழந்தை: பொருள்களின் தராதரம் அறியாப் பருவம் தங்கக் கிண்ணத்திற்கும் தகரக் குவளைக்கும் இடையில் மதிப்பீட்டு வேற்றுமைகளை அறிந்துகொள்ள இயலாத பருவம் போற் கிண்ணத்திற்கும் பொட்டுக் கடலைக்கும் மதிப்பீடு பிரித்தறியா நிலை தின்னும் பொருளாதலால் பொட்டுக் கடலையிலேயே ஆர்வம் தலைகாட்டும். அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைக்குப் பொற் கிண்ணத்தின் மதிப்பீடு தெரியாமல் பொட்டுக்கடலையை வாங்கிக் கொண்டு பொற்கிண்ணத்தைத் தருதல் வியப்பில்லை. அதுபோல, இறைவனின் திருவருள் சார்ந்த வாழ்க்கை வழங்கப்படுகிறது: உலகியற் கவர்ச்சியால் இழுக்கப் படுகிறது. ஆன்மா- உலகியற் கவர்ச்சியிலேயே சுழல்கிறது. திருவருளை- வலிய வந்தாட் கொண்ட பெருமானின் எளிவந்த கருணையை அருமை என்று அறிந்து போற்றுவதில்லை. நெடுந்தவம் புரிந்தும் காண முடியாத இறைவன் தாமே வந்து தலையளித்து ஆட்கொண்டருளிய கருணையின் அருமை அறியாத பேதைமையை மழக்கை விலங்கு பொற்கிண்ணம்’ என்றருளிச் செய்யும் துட்பம் சிந்தனைக்குரியது; உணர்தலுக்குரியது.

இறைவன்- சிவன் வெண்ணிறு சண்ணித்த, திருமேனியையுடையவன். திருவெண்ணிறு சிவநெறியின் புனிதச் சின்னம். கடையூழிக் கூத்தில் எழுந்த பொடியின் சின்னமே திருநீறு. சிவநெறியைச் சார்ந்தலுக்குத் திருநீறணிதலே முதற் சாதனம்.

என்னை ஆண்டிட்டு என்னையும் தன்
சுண்ண வெண்ணி றணிவித்துத்
தூயதெறியே சேரும் வண்ணம்

என்ற திருவாசக வரிகளையும் எண்ணிக் கொள்க. திருநாவுக்கரசருக்கு, திலகவதியார் "திருவாளன் திருநீறு" வழங்கித்தான் சைவத்தில் சேர்த்தார். ஆன்மாக்கள் திருநீறு அணிந்தால் அவற்றின் வினை நீங்கும்; பாவமும் அகலும்; அமர நிலையும் அருளது நிலையும் எய்தலாம்: ஆனால் இறைவன் திருமேனியில் திருநீறு ஏன்? தாய்ப்பாலுண்ணும் குழந்தைக்குத் தாய் மருந்து கொடுப்பதில்லை. குழந்தைக்குப் பத்தியமும் இல்லை. குழந்தையின் நோய்க்கு தாயே மருந்துண்கிறாள்; பத்தியம் பிடிக்கிறாள். அதுபோல இறைவன் தன்னைத் தொழுது எழும் பக்தர்களுடைய வின்ை வளம் செடத். திருநீறு அணிகின்றான் என்று திருக்கோவையார் கூறும்.

"மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேவினார்"என்றார் அடிகள். பொய், கொடுமையினும் கொடுமையானது. அதனாலன்றோ தமிழ்மறை,

"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை கன்று"

என்று கூறியது. பொய்- இல்லாதது. புனைவுகளை ஒட்டிக்கொண்டு பொய் வரும். மாணிக்கவாசகர்,

"யானும் பொய் என் கெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே!"

என்று அருளிச் செய்துள்ளமையை அறிக. பொய்ம்மையற்ற மெய்ம்மை வாழ்வு தேவையென்றால் பொய்யைப் பொய் என்று அறியும் அறிவு வேண்டும். பொய்ம்மையைப் பெருக்கிப் பொய்யில் கிடந்துழலும் பொய்யாய மாய வாழ்க்கையை நினைந்து அழக் கற்றுக்கொண்டால் தான் பொய்ம்மை அகலும்; மெய்ம்மை மேவும்.

மெய்ம்மை, உண்மையானது; நிலையானது; மெய்ப் பொருள் சார்பு நிறைந்தது. மெய்ப்பொருளைச் சார்ந்து வாழும் அன்பர்கள் மெய்ம்மை அன்பர்கள். மெய்ம்மை அன்பர்கள் தாம் மெய்ப்பொருளாகிய இறைவனைச் சார்தல் இயலும்; கூடும். மெய்ம்மை மேவாதாருக்கு இவ்வுலகும் இல்லை; அவ்வுலகும் இல்லை.

இறைவா, நான் பொய்யன் தான்! நான் அப்படியே பொய்யனாகவே வாழ்ந்து செத்துப் போனால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? காத்தாளக்கூடிய கங்காளன் காக்கத் தவறிவிட்டானே என்று இகழ்ந்து பேசமாட்டார்களா? பழிக்க மாட்டர்களா? இறைவா, நானும் பொய்யும் நின் கருணை கிடைக்காமையால் புறமே வந்துவிட்டோம்! என்னை எவ்வாறேனும் ஆகுக என்று வாளாவிட்டு விட்டுப் போய்விட்டாய்! இது நின் கருணைக்கு இசைந்த அறமா? பிறைசூடிய பெருமானே! பொய் நீக்கி என்னை ஆளாமை நினக்குப் பெருமைதானா? நல்லவும் தீயவும் அல்லாத எருக்கம் பூவினும் நான் கடைகெட்டவனா? இறைவா, பொய்மையை நீக்கு மெய்ம்மையை அருள் செய்க! என் பொய்யெலாம் நீயே ஏற்றருள் செய்க! நான் உன்னை அரியை என்று கருதாதது பிழைதான்! நீ எளிவந்தாட்கொண்ட அருளைப் போற்றிக் கொள்ளாதது குற்றம்தான்! தேவர்களே இந்தத் தவற்றினைச் செய்திருக்கிறார்கள். அகந்தையினால்- பதவிப் பித்தால் தேவர்கள் செய்த பிழையெலாம் பொறுத்தருள் செய்தாய்.

இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று கண்டு அறிய இயலாத சிவத்தினைக் காண முயன்றனர். அது, 'பழச்சுவை' என்றனர்; 'அமுது' என்றனர் 'அறிதலுக்கு அறிது' என்றனர். 'அறிதலுக்கு எளிது' என்றனர். இங்ஙனம் அமரர்கள் தம்முள் முரண்பட்டு நின்று பேசினர்; விளக்கினர். ஆயினும் சிவம் உயிர்க் குலமெல்லாம் உய்தல் வேண்டி சிலைகளில் எழுந்தருளினன். இது அவன் திருவுரு. இறைவன் எழுந்தருளியுள்ள திருவுருவம், உருவமன்று. இலக்கியங்களில் அகரம் முதலிய நெடுங் கணக்கு இருப்பினும் பயன் படுமாற்றால் இலக்கியம் என்றே போற்றுகின்றோம். இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளை, இரும்பு என்று. கூறுவதில்லை. பயன்படு நிலை கருதி, 'ஒலி பெருக்கி', 'மண்வெட்டி' என்று கூறுவதே மரபு. அதுபோல இறைவன் எழுந்தருளியுள்ள திருவுருவம். சிலையாக இருக்கலாம். ஆயினும் பயன்பாடு வழிபாடு ஆதலால் அது திருவுருவம் அல்ல. இறைவனேதான்!

"திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைச் சிவன் எனவே கண்டவர்க்கு சிவன் உறைவன் ஆங்கே!"- இது: சாத்திரம் காட்டும் உண்மை. இறைவன் எண்ணற்ற ஆன்மாக்களை ஆட்கொள்ளும் பணிக்காகவே. திருவுருவத்தில் எழுந்தருளுகின்றான். திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் முன்னிலையில் பணிகேட்டு விண்ணப்பித்தலே மரபு. அண்மைக் காலமாக இந்த மரபு அறவே மாறி நுகர்பொருள்களை இரந்து கேட்கும். பழக்கம் தோன்றிவிட்டது. இன்று. நமது சமயப் பிரார்த்தனைகளில் பணிசெய்ய விரும்பும் விண்ணப்பம் அறவே இல்லை. மாணிக்கவாச்கர் திருப்பெருந்துறை. மன்னனிடம் “எது எமைப் பணிகொளுமாறது கேட்டோம்" என்றே வேண்டுகிறார். பணி செய்தலே உய்யும் நெறி. "கொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை" என்று திருமுறை கூறும். இந்நெறியை உணர்த்தும் மாணிக்கவாசகர் பாடலை நினைத்து இறைவனை வேண்டுவோம்.

அது பழச் சுவையென அமுதென அறிதற்கு

அரிதெள எளிதென அமரரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டு கொண்டு இங்கெழுந் தருளும்

மதுவளர் பொழில் திரு வுத்தர கோச

மங்கையுள் ளாய் திருப் பெருந்துறை மன்னா

எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம்

எம் பெருமான் பள்ளி எழுந்தருளயே}}

(திருப்பள்ளியெழுச்சி-7)