திருவாசகத்தேன்/புறம் புறம் திரிந்த செல்வம்!
தாய்!- உயிர்க்குலத்தில் தாய்க்கு நிகரான படைப்பு ஏது? இந்த உலகத்தில் தாய் கடவுள்! தாய், கடவுளை நினைப்பிப்பவள். தாய், கடவுளின் பிரதிநிதி. ஆம், குழந்தையின் உருவாக்கத்தில் தாயின் பங்கு மிகுதி. கடவுளின் கருத்தை முடித்துத் தருபவள் தாய். கருவில் மட்டுமன்று; மண்ணிற்கு வந்த பிறகும் குழந்தையின் வளர்ப்பில், காப்பில் தாயின் பங்கு அதிகம். குழந்தையின் நோய்க்குத் தாய் மருந்துண்கிறாள்! பத்தியம் பிடிக்கிறாள்! உறக்கத்திலும் தன் குழந்தையின் மீது விழும் பூங்கொத்தை ஒதுக்கித் தள்ளும் தாயை, பாரதிதாசன் படைத்துக்காட்டுகிறான். திருமுறைகள் "அம்மையே! அம்மையே!" என்று போற்றுகின்றன. "அம்மையப்ப்ரே உலகுக்கு அம்மையப்பர்” என்று திருக்களிற்றுப்படியார் பேசும். "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என்று ஐங்குறு நூறு வழுத்தும். மாணிக்கவாசகரின் திருவாசகம் முழுதும் தாயன்பு பரிணமித்துள்ளது. "அன்னைப் பத்து" என்றே.ஒரு பதிகம், திருவாசகத்தில் உண்டு.
தாய்!- மகவைப் பெற்று வளர்ப்பவள் தாய்! ஆனாலும் மகவைப் பெறுபவர்கள் எல்லாரும் நல்ல தாயாகிவிடுவதில்லை. தாயிலும் தரங்கள் உண்டு. ஈன்றெடுத்த மகவு அழுதாலும் பாலூட்டாத தாயும் உண்டு. இந்தக் காட்சியைப் பெரும்பாலும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏழைகள் வீட்டில் காணலாம். தாயும் உடலுழைப்பில் ஈடுபட்டுப் பொருளிட்ட வேண்டும்; வீட்டிலும் வேலை பார்க்க வேண்டும். களியாட்டமோ பொழுதுபோக்கே இல்லாத நிலையில் பல குழந்தைகளுக்குத் தாயாகிறாள். அதனால் உடலில் சோர்வு; வாழ்வின் சுமை ஆன்மாவில் அழுத்தும் போக்கு; அலுத்தும் சலித்தும் வாழும் நிலை! இந்தச் சூழ்நிலையில் வாழும் தாய்மார்கள் விரும்பினாலும் நற்றசயாக வாழமுடிவதில்லை. இது ஏழைத் தாயின் நிலை! இது அவள் குற்றமல்ல. சமூகத்தின் குற்றம். இனி, தான் பாலூட்டாமல் மாற்றுத் தாயின் மூலம் பாலூட்டும் தாயும் உண்டு. இது செல்வச் செழிப்பில் நிகழ்வது. இது வாழும் கலையறியாத குடும்பங்களில் காணப்படும் காட்சி! இளமை- அழகில் உள்ள கவர்ச்சியின் விளைவு. இது அடாவடித்தனம்; இயற்கையை இகழ்ந்த வாழ்வு. சில தாய்மார்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வந்து பாலூட்டுவர். இது வேறு பல பணிகளில் ஈடுபடுவதின் விளைவு: கவனத்தில் சோர்வு! சில தாய்மார்கள் குழந்தைகள் அழாமலே காலக் கணிப்புடன் குழந்தைக்குப் பசிக்கும் என்றெண்ணிப் பாலூட்டுவர். இந்த மண்ணில் இவர்களே தாய்மார்கள்- நல்ல தாய்மார்கள்! வணக்கத்திற்குரிய தாய்மார்கள்! வரலாற்றில் இடம் பெறும் தாய்மார்கள்!
மாணிக்கவாசகர் இந்த நற்றாயினும் சிறந்த தாயை அறிமுகப்படுத்துகிறார். நினைந்தூட்டும் தாய் குழந்தையை மறப்பதுண்டு. மறதியைத் தொடர்வது தானே நினைப்பு. மறத்தல் இல்லையெனில் நினைப்பும் இல்லை. மாணிக்கவாசகர் அறிமுகப்படுத்தும் தாய், குழந்தையை மறப்பது இல்லை. ஆதலால் நினைத்தல் வினை. நிகழ்வு இல்லை. எப்போதும் இந்தத் தாய்க்குக் குழந்தையின் நினைவே; இந்தத் தாய் யார்? சிவசக்தி யாகிய தாய்! இந்தத் தாய் ஆன்மாக்களை மறப்பதில்லை. அதனால் நினைவும் நிகழ்வதற்குரிய வாயில் இல்லை. சிவசக்தியாகிய தாய், குழந்தை மறுத்தாலும் மிகவும் பரிவுணர்வுடன் பாலூட்டுவாள். குழந்தை பாலின் தேவையை அறியாது. குழந்தையின் தேவை தாய்க்குத் தானே தெரியும். ஆதலால், குழந்தை மறுத்தாலும் இந்தத் தாய் விடுவதில்லை. மிகவும் பரிவுணர்வுடன் இழுத்துப் பிடித்துப் பாலூட்டுவாள்; பால் மட்டுமா? உணவினால் மட்டுமே வாழ்ந்து விடுவதில்லை; மருந்தும் தேவை! பாலுண்ணும் குழந்தை மருந்துண்ண மறுக்கும் தாய் மருந்தும் தருவாள்! சிரிப்பினால் மருந்தும் கதையினால் கருத்தும் வழங்குபவள் தாய்!
தாய், தனது பிள்ளையின் தகுதி கருதி அன்பு காட்டுவதில்லை. தகுதியிருந்தால் மகிழ்வாள். தகுதி இல்லையானாலும் தன் பிள்ளையைச் சீராட்டவே எந்தத் தாயும் விரும்புவாள். ஆனாலும் தாயின் அறிவு, காரண காரியத்துடன் இயங்கும். தன் குழந்தை பாவச் செயல் செய்வதாயிருந்தால் எந்தத் தாயும் தாங்கிக் கொள்ளமாட்டாள்! எந்தத் தாயும் தன் மகவை "சான்றோன்" என்று கேட்கவே விரும்புவாள். அதேபோழ்து தன் குழந்தையைப் 'பாவி' என்று தாய் வெறுத்து ஒதுக்கவும் மாட்டாள்! தாயின் அன்பு தன் குழந்தையின் அறியாச் செயல்களுக்கு - அவை அறியாச் செயல்கள் என்று அறிந்தாலும் உடன் படுவாள்! உடன் போவாள்! அன்பைப் பெருக்கி, நம்பிக்கையை வளர்த்து, பைய நன்னெறிக்கு அழைத்து வந்துவிடுவாள்! உடைப்பது எளிது; ஒறுப்பது எளிது; அழிப்பது எளிது; திருத்தம் காண்பது அரிய பணி! இதற்கு நிலத்திலும் பொறுமை தேவை. நலம் நோக்கித் திருத்தும் பணியாதலால் "பைய" என்ற சொல், வழக்கிற்கு வருகிறது. "பையவே சென்று பாண்டியர்க்கு ஆகுக!” என்ற சேக்கிழார் வாக்கு, அனுபவத்தின் முதிர்ச்சியில் பிறந்தது, மாணிக்கவாசகரும் "பையத் தாழுருவி" என்பார். இத்தகு திருத்தப்பாட்டுப் பணியில் நிற்க, சராசரி மனிதரால் இயலாது. சான்றாண்மைக்கு ஆழி எனப்படுபவர்களாலேயே முடியும்!
மிகவும் பாவம் செய்வதற்குக் காரணம் அந்த மகவின் உடல்! உடல் வளர்ந்த அளவு ஆன்மா வளரவில்லை. ஆன்மாவை ஆட்டிப்படைக்கும் உடல் வலிமை தானே பாவம் செய்கிறது! ஆதலால், தாய் ஊன்பொதி உடலைத் திருத்துவாள். உடலின் ஆதிக்கம் ஆன்மாவின் மேலிருந்து பணி கொண்டால் பாவம் வளரும். உடலை, ஆன்மா பணிகொண்டால் புண்ணியச் செயல்கள் நிகழும். உடல், ஆன்மாவை வேலை வாங்கினால் உடலின் ஏவலை ஆன்மா செய்யும் நிறைவேற்றும்! இதனால் மிகுதியான உணவைத் தின்றால் உடல் கொழுக்கும்; பருமனாகும்; முரட்டுத்தனம் மேவும்! இது உடல் நலத்திற்கு நல்லதல்ல; சமூகத்திற்கும் நல்லதல்ல. வன்முறையின் தாயே, ஆன்மாவை மறுத்த உடலின் ஆதிக்கம்! “ஊனினைப் பெருக்கி உயிரை இழந்தேன்" என்பார் சுந்தரர். ஆதலால்! ஆன்மாவின் ஆளுமைக்குள் உடல் இருக்க வேண்டும். உடலின் எடை குறைதல், உடலுக்கும் நல்லது; ஆன்மாவுக்கும் நல்லது. உடலின் தேவைகள் குறைதல் வேண்டும். ஆன்மாவின் தேவைகள் பெருகி வளர வேண்டும். அதனால், சக்தியாகிய தாய் உடலை உருக்கி இளைக்க வைக்கிறாள். அதனைத் தொடர்ந்து ஆன்மாவின் ஞானஒளியைப் பொருத்துகிறாள். ஆம்! ஒளி, ஞானத்தின் சின்னம்! முகம்மது நபி, எல்லாம் வல்ல இறைவனிடம் "ஒளியை. என் உடலில் நிரப்பு" என்று கேட்டுப் பிரார்த்தனை செய்கிறார். இத்தகு ஒளியால் உடலின் எடை குறைகிறது. உடல், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆன்மா ஞான ஒளியைப் பெற்றிருக்கிறது! இதனால் இன்பம் மேவுகிறது. சாதாரண இன்பமன்று அந்தம் ஒன்றில்லாத இன்பம்! ஆனந்தமாய இன்பம்! இடையீடில்லாத இன்பம்! ஆன்மா ஆனந்தமயமான இன்பத்தின் அருமை தெரியாமல் அதனை இழந்துவிடலாம். அல்லவா? ஆன்மாவை ஆதியில் பற்றிய அறியாமை எதைத்தான் செய்யாது? இந்த உலக வரலாற்றின் பக்கங்களை நிரப்பியிருப்பது! அறியாமையின் நிகழ்வுகளே! ஏன்? அறியாமையே கூட அத்தாணி மண்டபமேறி அரசோச்சியிருக்கிறது! ஐயோ பாவம் அறிவு- ஒடுங்கி இருந்த காலமும் உண்டு. அறிவு பெற்ற ஒரே காரணத்தால் ஒறுக்கப்பட்டதும் உண்டு. அறியாமையால் ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பத்தைத் துறந்து, மண்ணின் மேல் 'நான்' 'எனது' என்றும் மாயை கடித்த வாயிலேயே நின்று நடித்திட ஆன்மா விரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அறியாமையின் கொடுமை எழுதும் தரத்ததன்று. ஆன்மாவுக்கு அறியாமை கொடுத்துள்ள வினை குறைவா, என்ன? ஆதலால், சிவமாகிய சக்தி, ஆன்மாவைப் பின்தொடர்கிறது. ஆன்மா, செல்லுமிடமெல்லாம் ஆன்மாவின் பின்னே சிவமாகிய சக்தி தொடர்கிறது! ஏன்? ஆன்மா ஆனந்தமாகிய இன்பத்தை இழந்துவிடாமல் அனுபவிக்குமாறு செய்வது சிவசக்தியின் குறிக்கோள்!
வழிபாட்டுக்குரிய சிவசக்தி, புறம் புறம் திரிவானேன்? முன்பே போகக் கூடாதா? அது மரபு; மதிப்பு; மரியாதை ஆனாலும் முழுதும் கடமையின் வழிப்பட்டதாகாது. முன்னே போனால் வழிகாட்டலாம்; தவறில்லை. வழி தவறிப்போகாமல் நெறிவழிச் செலுத்திக் காப்பாற்றலாமே என்று வாதிடலாம். இதில் உண்மை இருக்கிறது. மறுப்பில்லை. ஆனால், கீழே விழுந்தால் உடன் தூக்க இயலாது. பின்னே வந்தால் இடறியவுடனே காக்கலாம்; வழியும் காட்ட இயலும். உலகியலில் வழிகாட்டுவோர் பலர் இருந்தனர். இன்றும் பலர் உள்ளனர். ஆனால் பயன் என்ன? பொறுப்புணர்வுடனும் தயாவுடனும் எடுத்து வளர்ப்பதற்கு- ஆளாக்கு வதற்கு முன்வருவோர் எவர்? உபதேசிப்போர் பலர் உள்ளனர். இடுக்கண் வருங்கால் காப்பாற்றுவோர் யார்? காப்பாற்றுவோர் தானே வேண்டும் உபதேசத்தின் வழி உலகம் சென்றுவிடாது எடுத்தாண்டு இட்டுச் செல்வார். பின் உலகம் செல்லும்; உய்யும். காப்பாற்றுவோர் பின்னே வந்தால் தான் விழுந்தவுடன் தூக்கலாம்; எடுக்கலாம்.
திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரை ஆட்கொண்டருளினன். அந்தம் ஒன்றில்லா இன்பத்தை வழங்கியருளினன். இந்த இன்பத்தை மாணிக்கவாசகர் இடையீடின்றி அனுபவிக்க, திருப்பெருந்துறையுறை சிவன் மாணிக்கவாசகரைப் பின் தொடர்கிறான்; திரு ஆலவாய் வரையில் பின் தொடர்கிறான்; மாணிக்கவாசகருக்காகக் குதிரைச் சேவகன் ஆகிறான். கொற்றாளாகி மண் சுமந்து பிரம்படி படுகிறான். எல்லாம் மாணிக்கவாசகரைக் காப்பாற்றத்தானே காத்தாள்பவருக்குக் காத்தல் கடமைதானே! கடமை வாழ்வு எளிதன்று! காத்தாளும் கடமை எளிதன்று என்பதற்கு மாணிக்கவாசகர் வரலாற்றில் சிவபெருமானுக்குற்ற அனுபவங்களே சான்று.
நமது திருக்கோயில் திருவிழாக்களில் சுவாமியின் முன்னே நாம் போவோம்! சுவாமி பின்னே வருவார்! "போ, முன்னே போ! முன்னேறிப் போ! நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்று அறிவித்தல்தானே இது! ஏன்? நமது உலகியலில் கூட அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்கு வரும் காவலர்கள், அமைச்சர்களுக்குப் பின்னேதான் வருவார்கள்! காவல் செய்வோர், காத்து வருவீர் பின்னே!
இறைவன் தாய்! நினைத்துட்டும் தாயிலும் நனி "நல்லன்! ஊனை இளைக்க வைத்து, உயிரை ஒளியூட்டி வளர்க்கிறான்! ஆனந்தமாய் இன்பத்தைப் பொழிந்து கருணை செய்கிறான்! பொழிந்த ஆனந்தமாய இன்பத்தை ஆன்மா இழந்துவிடாமல் தொடர்ந்து அனுபவிக்கப் பின்தொடர்கிறான். சிவசக்தி பிறப்பும் இறப்பும் நீங்கும் வரை தொடர்கிறாள். நரகொடு சொர்க்கம் எங்கு புகினும் தொடர்கின்றாள். இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் அம்ம்ம, சிவசக்திக்கு உள்ள மகிழ்ச்சி எழுதியும் பேசியும் விவரிக்க இயலாதது! சிவசக்திக்கல்லவா ஆன்மாவின் அருமை தெரியும்
ஆன்மாவுக்கு அறிவு ஒளி ஏற்றுவர். அவர்தம் வாழ்க்கையின் தேவைகளை நிறைவு செய்வர். அவர்களின் பொறிபுலன்களுக்குப் பொருள் கற்பிப்பர். அதற்கு மேலும் ஆன்மாவை வளர்த்து ஞான நெறியை அறிமுகப்படுத்துவர். இங்ங்ணம் செய்த பிறகும் மனம் நிறைவுபெறாது. பழ்க்க வாசனையில் பெற்றதை இழந்து விடக்கூடாதே என்ற கவலையில் தொடர்ந்து கண்காணிப்பார். எந்த ஒரு பணியிலும் நிர்வாகத்திலும் கண்காணித்தல் (Follow up) என்பது அவசியம் தேவை. நிர்வாக அறிவியலில் பின் தொடர்தல், கண்காணித்தல், கணக்கெடுத்தல், பயன்பாடுகளைக் கண்க்கிட்டு ஆய்வு செய்தல் என்ற செயல்முறைகள் வற்புறுத்தப்படுகின்றன.
இந்தப் பாடலில் 'நினைந்து' என்ற சொல்வழி தேவைகளை ஆய்வு செய்து திட்டமிட்ல்ைக் குறிக்கிறது. திட்டமிட்ட பணியில் ஆர்வம் தலையெடுத்தல் வேண்டும் என்பதனை "தாயினும் சாலப் பரிந்து" என்ற வரி நினை ஆட்டுகிறது. பணி செய்ய அறிவு தேவை என்பதனை "உள்ளொளி பெருக்கி" என்ற சொற்றொடர் உணர்த்துகிறது. "தேனினைச் சொரிந்து" என்ற சொற்றொடர் செயற்பாட்டையும் அதனால் விளைந்த பயனையும் பற்றிக் குறிப்பிடுகிறது. "புறம் புறம் திரிந்த" என்ற சொற்றொடர் பின்தொடர்தலையும் கண்காணித் தலையும் வலியுறுத்துகிறது. "செல்வமே" என்று ஆக்கத்தை உணர்த்துகிறது. சமூக இயல் பாங்கில் இங்ஙனம் பொருள்கொள்ளலாம். ஆனால், திருவாசகம் உலகியல் கடந்த ஆன்ம அனுபவம்; திருவருள் அனுபவம்!
பால்கினைக் காட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெரு மானே!
யானுல்னத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!
(திருவாசகம், பிடித்தபத்து-9)