திருவாசகத்தேன்/மழலையின் கையிலே பொற்கிண்ணம்!

மழலையின் கையிலே

பொற்கிண்ணம்!

மாணிக்கவாசகர் துறைதோறும் வளர்ந்தவர். திருவாசகம் ஒரு ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆன்மா அதன் பயணத்தை இறைவனின் கருணையினால், கருவூரில் தொடங்குகிறது. திருவூரில் பயணம் நிறைவுறும். பயணம் செவ்வியதாக அமைந்தால் எளிதில் திருவூரை ஆன்மா அடையும். பல ஆன்மாக்கள் தத்தம் விருப்பம் மேவிய தடத்தின் வழியே மட்டும் பயணம் செய்வதன் விளைவாகப் பயணம் நீட்டிக்கவும் செய்யலாம்.

மானிடப் பிறவியின் தகுதிக்கு ஏற்றவாறு வாழ்ந்திடாவிடில் என்ன நிகழும்? மீண்டும் புழுவின் பிறப்பிலிருந்து தொடங்க வேண்டும் என்று அப்பரடிகள் கூறுகின்றார்.

புழுவாய் பிறக்கினும் புண்ணியா
நின்னடி என்மனத்தே
வலுவா திருக்க வரம்தர
வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க்குக் கிரங்கி இருந்தருள்
செய்யா திருப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
மேல்வைத்த தீவண்ணனே!

என்னும் அப்பரடிகள் திருப்பாடலை ஓர்க. மேலும் மானிடப் பிறவிக்கு மட்டுந்தான நினைக்கும் புலன் உண்டு; திறன் உண்டு. அப்பரடிகள்,

          முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்
                    இம்மூவுலகுக்(கு)
          அன்னையும் அந்தனு மாவாய் அழல்வனா
                    நீயலையோ
          உன்னை கினைந்தே கழியும்என் ஆவி.
                    கழிந்ததற்பின்
          என்னை மறக்கப் பெறாய் என் பிரான் உன்னை
                    வேண்டியதே !

என்று இரந்து வேண்டுகிறார். அதாவது நினைக்கும் தகுதியுடைய மானிடப் பிறப்பில் உள்ளவரை இறைவா, உன்னை நினைப்பேன்! ஒருகால் மானிடப் பிறவியை இழந்து நினைத்தற்கு வாய்ப்பில்லாத புழுப் பிறப்பை அடையின் இறைவா, நீ என்னை மறக்கக்கூடாது என்று வேண்டுவதறிக. ஆதலால் பிறப்பை அறிந்து ஆன்மா தகுதிப்பாடுறுதல் வரை சுற்றும் என்பதறிக.

இறைவனின் கருணையே உயிர்களின் பயணத் தொடக்கத்திற்குக் காரணம். பயணங்கள் நிகழ்வதற்கும் மாறுவதற்கும் முற்றுப்பெறுவதற்கும் ஆன்மாவின் வாழ் நிலையே காரணம். ஒரு ஆன்மா மானுட நிலையை எய்துதலே கூடப் பல பிறவிகளுக்குப் பிறகுதான்! பலப்பல இடர்ப்பாடுகளுக்கும் பிறகுதான்! மனிதன் மிருகமும் அல்லன்; தெய்வமும் அல்லன். மனிதன் மிருகத் தன்மையி லிருந்து விலகி, மானுடத் தகுதியைப் பெற்று மெய்ம்மை நிலையையும் தெய்வத் தன்மையையும் அடைதலே ஆன்மாவின் பயணக் குறிக்கோள்; பயன்! மாணிக்க வாசகரிடம் ஆன்ம வளர்ச்சிக்குரிய தகுதியின்மைகளுக்குக் கழிவிரக்கம் கொள்ளல், ஆராக் காதலுடன் உண்மையை நாடுதல், இறைவனைத் தேடுதல் முதலிய தகுதிகள் அமைந்திருந்தன. தகுதியில்லாதார் தகுதி நோக்கி வளர்தலே. வாழ்வு.

இறைவழிபாட்டின் நோக்கமே தகுதிப்பாடுறுதல் என்பதுதான். வட்டம் வரைய வேண்டுமாயின் காம்பஸ் தேவை. காம்பஸில் நீண்ட முனையை ஊன்றி, சிறிய முனையில் எழுதுகோலைப் பொருத்தி வட்டமிடுகிறோம். இப்படி வரையப்பெறும் வட்டம் கோணல் இல்லாமல் அமையும், அதுபோல ஆன்மா தன் இதயத்தைசிந்தன்னன்யத் திருவருளிடத்தில் நிறுத்தித் தன் செயலைச் செய்யுமாயின் குறையினின்றும் விலகி நிறைவு பெறும்; அறியாமையிலிருந்து விலகி அறிவு பெறும்; வாழ்க்கை வடிவம் பெறும்; நிறைநலம் பெறும்; இன்ப அன்பினை எய்தும். இதற்கு மாணிக்கவாசகர் வரலாறு சான்று.

மாணிக்கவாசகர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தவ வாழ்க்கை அல்ல. மாணிக்கவாசகருக்கு வாய்த்தது அரசியல் வாழ்க்கை; அமைச்சியல் வாழ்க்கை. அரசியல்அமைச்சியல் வாழ்க்கையில் தவம் மேவுதல் இயற்கை யன்று; மரபும் அன்று. அரசியல்- அமைச்சியல் வாழ்க்கையில் வினைகளும் வினைகளின் பயனாகிய அதிகாரங்களும் அமையும். ஒரோவழி பத்திமை பொருந்தி அமைதலும் கூடும். இது விதிவிலக்கு. ஆயினும் மாணிக்க வாசகர் அமைச்சியல் வாழ்க்கையையே த்வ வாழ்க்கையாக நடத்திய அருமை அறிதலுக்குரியது. அதனாலேயே மாணிக்கவாசகர் பாண்டியனின் ஆணைவழி குதிரை வாங்க நாட்டமில்லாமல் திருக்கோயில் கட்டினார். மாணிக்கவாசகர் செய்தது தவறா? உலகியல் முறைப்படி தவறு; அறநெறி விதிகளின்படி தவறன்று. அரசன் அறநெறியறிந்து உணர்வான் என்று மாணிக்கவாசகர் நம்பினார். தகுதி இல்லாதாரை- நெறிமுறை தவறுகிறவர்களைத் திருத்தும் பாங்குகள் பலப்பல. திருத்தங் காணும் முயற்சி, நெறிமுறை தவறுகிறவர்களின் தகுதிப்

பாட்டிற்கேற்ப அமையும். கயவர் ஒறுத்துத் திருத்தப் படுவர். சான்றோர் சொல்லத் திருந்துவர். மிக உயர்ந்தோர் குறிப்பாக, அரசியலில் ஏவினது ஒழிந்து பிறிதொன்று செய்தலாலே ஏவினது தவறு. என்று உணர்ந்து திருத்துவர் என்பது மரபுவழி வந்த வழிமுறை. மாணிக்கவாசகர் அரசன் ஏவியவழி, குதிரை வாங்காது திருக்கோயில் கட்டியமையால் குதிரை வாங்குதல் தவறு, திருக்கோயில் கட்டியது நன்று என்று உணர்வான் என்று நம்பினார். ஆனால், பாண்டியன் தவமின்மையின் காரணமாக அங்ங்னம் உணரவில்லை. நடைமுறை வேறு விதமாக அமைந்துவிட்டது!

அமைச்சியல் வாழ்க்கையில் இருந்த மாணிக்கவாசகர் திருப்பெருந்துறைக்குக் குதிரை வாங்கப் போன நாள் முதல் அவர்த்ம் வாழ்க்கையில் அற்புதமான மாற்றம் ஏற்பட்டது; தவமே மேலிட்டது. ஊராரை மறந்தார்; உற்றாரை மறந்தார்: இறைபணியில் நின்றார். திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரைத் தேடி வந்து ஆட்கொண்டான்! ஆம்! இதுவே சிவபெருமான் வழக்கம். சிவபெருமானுக்கு எப்போதும் அடியார்களுக்குப் பஞ்சம்! அதனால் தேடிவந்து தகுதியானவர் களை அழைத்துக் கொள்வான். மாணிக்கவாசகரை, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஞானாசிரியனாக வந்தருளி ஐந்தெழுத்தருளி ஆட் கொண்டருளினன். இதனை,

"நானேயோ தவம் செய்தேன்;
சிவாயநம எனப் பெற்றேன்"

என்று வியந்து கூறுகின்றார். மாணிக்கவாசகருடைய தவம் ஐந்தெழுத்தைத் தரவில்லை; சிவபெருமானுடைய கருணையே தந்தது என்பது கருத்து. .

ஒரு ஆன்மா அதன் தகுதியைத் தானே வியந்து கூறுதல் ஆணவத்தின் பாற்படும். அவ்வழி, தகுதியின்மையே மேவும். சிவநெறி ஒழுக்கத்திற்குரிய தகுதிப்பாடுகளுள் ஒன்று "தாழ்வெனும் தன்மை", அதாவது, அடக்கம், நிலத்தினைக் கிண்டிக் கொண்டு விண்நோக்கி வளரும் மரம் நிலத்தடியிலும் வேர் பாவும். நிலத்தடியில் பாவும்' வேரின் வலிமையில்தான் மரத்தின் வலிவு இருக்கிறது. அதுபோல ஆன்மாக்களின் வளர்ச்சி- நிலைப்பாடு ஆரவாரத்தில் இல்லை; அடக்கத்தில்தான் இருக்கிறது. தாழ்ந்து பழகும் இயல்பில்தான் வளர்ச்சியின் அமைவு: இருக்கிறது.

"தாழ்வெனும் தன்மை நோக்கித்
சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது"

என்று அருணந்திசிவம் கூறுவார். "கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை" என்று கூறுவார் மாணிக்க வாசகர், திருத்தொண்டத் தொகையின் தோற்றமே இதற்கு ஒரு சான்று. தொண்டர்நாதனைத் துரதனுப்பிய நம்பியாரூரர், "அடியார்க்கும் அடியேன்" என்று பாடும் நிலை அடக்கத்தின் அருமையை- பயனை விளக்கத்தானே! ஆதலால் மாணிக்கவாச்கர் தம்மை வியந்து பாராட்டிக் கொள்வதில்லை. திருவாசகம் முழுதும் தாழ்வின் தன்மையே பரவிக்கிடக்கிறது. மாணிக்கவாசகர் தனது தகுதியை அங்கீகரித்து ஒப்புக்கொண்டதில்லை! வியந்து பாராட்டிக்கொண்டதும் இல்லை. இறைவனின் அளப்பரும் கருணையே ஆட்கொண்டது. என்பார். ஆயினும் மாணிக்கவாசகர் இறைவனின் அருமையை- ஆட்கொண்டருளிய அருமையை உணரவில்லை; அறிந்து கொள்ளவில்லை என்கிறார்.

மழலை மொழி பேசும் குழந்தை; விளையாட்டுப் பிள்ளை, பிள்ளை கையில் தங்கக் கிண்ணம் கிடைத்தது. குழந்தைக்குத் தங்கக் கிண்ணம் தேவையா? விளையாட்டுப் பொம்மை தேவையா? தின்னும் மிட்டாய் தேவையா? பருவத்தின் இச்சையே தேவை! அதுவே வெளிப்படும். குழந்தை தங்கக் கிண்ணத்தின் மதிப்பறியாது. தங்கக் கிண்ணத்தைத் தந்து அதற்கு ஈடாக ஒரு பொம்மையை அல்லது ஒரு மிட்டாயை வாங்கினாலும் வியப்பில்லை. அதுபோல மாணிக்கவாசகர் செய்யவில்லை. ஆனால் மாணிக்கவாசகர் இந்த உண்மையைத் தமது ஆன்மிக வாழ்க்கைக்குச் சான்றாகக் காட்டுகிறார். ஏன்? மாணிக்க வாசகரைப் போல இறைவனின் அருமையை உணர்ந்தவர்களும் இல்லை; தேடினவர்களும் இருந்ததில்லை. அந்தண வாழ்வைத் துறந்து அமைச்சு வாழ்விற்குச் சென்றமையை எண்ணிப் பாடுகின்றாரா? வாழ்க்கையின் குறிக்கோள் ஆன்டிாவைப் பூரணத்துவமாக்கும் 'தவ வாழ்க்கையை மேற்கொள்ளுதலேயாம். அஃதில்லாமல் அமைச்சு வாழ்க்கையை ஏற்றதை எண்ணி வருந்துகின்றார் போலும்!

இனம், இனத்துடன் சேரும். இஃது இயற்கை. மாணிக்கவாசகருடன் பலர் இருந்தனர். அவர்கள் மெய்யன்பர்கள். அவர்கள் சிவபெருமானிடம் எளிதில் சேர்ந்தனர்; மெய்ம்மை ஆயினர். ஆனால், மாணிக்க வாசகர் பின்தங்கி விட்டார்! ஏன்? இறைவனை அடைதலுக்கு மெய்ம்மை தேவை. மாணிக்கவாசகரிடம் மெய்ம்மை இல்லை. பொய்ம்மையே இருந்தது!- இது, மாணிக்கவாசகரின் சொந்த விமர்சனம்! உண்மை உணர்வது நமது கடமை, மாணிக்கவாசகர் திருப்பெருந்: துறையிலும் செயல் மாள விடவில்லை. திருப்பெருந் துறைத் திருக்கோயிலைக் கட்டினார். அல்லவா? அது ஒரு பணி செயல் ஆதலால், செயல் அடங்கவில்லை என்று எண்ணினால் தவறில்லை! தவக்கோலம்! பத்திமைப் பரவசம்! ஆயினும், செய்வினைகளும் இருந்தன. வினை நீக்கம் பெற்ற வாழ்க்கை வந்தமையவில்லை. அதனால் 'பொய்யிலங்கெனை' என்று கூறினார் போலும். இறைவன் - மெய்ப்பொருள்! மெய்யன்பர்கள் மெய்ம்மை மேவினார். தகுதியுடையார்க்கு வழங்குவதில் என்ன சிறப்பு இருக்கிறது. தகுதி இல்லாதாரைத் தகுதியுடையாராக்கி ஆட்கொள்ளுதலே சான்றோருக்கு அழகு தகுதி மிகுதியும் உடையோருக்குக் கடன்! இறைவன் வெண்ணிறு சண்ணித்த மேனியன். இறைவன் ஏன் வெண்ணிறணிகின்றான்? ஆன்மாக்கள் தாம் செய்த வினை கெட நீறணிகின்றான். இது இயல்பு; மரபு. இயல்பிலேயே வினையின் நீங்கி விளங்கிய அறிவினன் இறைவன் அப்படியானால் இறைவன் உடம்பில் திருநீறு எதற்கு? இந்த வினாவுக்கு விடை திருக்கோவையார் தருகிறது. குழந்தைக்கு நோய்! குழந்தை மருந்துண்ண இயலாது. ஏன்? குழந்தையின் பசுங்குடல் மருந்தைத் தாங்காது. அதுபோல, ஆன்மாக்களின் வினைவளம் நீறெழ நீறணிவான் அம்பலவன் என்று கூறுகிறது திருக்கோவையார். இறைவா! நின்னைத் தொழுதெழுவார் வினைவளம் நீறாய்ப் போக நீறணிந்து நிலவும் நின் கருணையால் என் பொய் கெடட்டும் என்பது கருத்து. ஆட்கொண்டருளும் கடப்பாடுடைய இறைவன் பாய்ம்மையை அல்லவா மெய்ம்மையாக்க வேண்டும்? அதுதானே பிறவா யாக்கைப் பெரியோனுக்குப் பொருத்த மானது என்பது மாணிக்கவாசகர் எண்ணம்.

"இறைவா! அம்மையப்பனே! அருளே உருவமாகிய சிவசக்தியைப் பாகத்தில் கொண்டருளியவனே! நீயே வந்து என்னைத் திருப்பெருந்துறையில் வாவென்றருளினை! பணி கொண்டருளினை! திருப்பெருத்துறை சிவனே, நின்னை அடைவதற்கு முன் உன்னை மூவர்கோனாய், மூவர் தலைவனாய்க் கண்டனன். அருமையில் எளிய அழகெனக் கண்டனன். ஆனால் நீயே வந்தெனைத் தலையளித்து ஆட்கொண்டருளிய பின் நின்னருமை உணர்கிலேன்! மழலையின் கையில் பொற் கிண்ணம் போலாயிற்று! நின்னருள் என்வசம்! திருப் பெருந்துறை சிவனே! காலகாலனே! ஊழி முதல்வனே! ஊழிப் புழுதியே திருநீறாகக் கொண்டருளும் பெருமானே! என்றும் உள்ளவன் நீ! மெய்ப்பொருள் நீ! நின் திருமேனியில் படிந்துள்ள திருநீறு, ஆன்மாக்களின் வினைவளம் நீறாக அணிந்தருளிய மாண்பு உண்மை அன்பர் நின்னை மேவினார்! நானோ பொய்யன்! நீயோ அன்பருள் புக வைத்தாலும் போய் உய்யும் தரமறியேன்! தகுதியிலேன்! நெறியறியேன்! ஆயினும் நீ பெரியோன்! சிறியேன் பிழையெலாம் பொறுத்தருளும் பெரியோன்! ஆதலால், என்னை இடையில் விட்டுவிட்டுப் போவது அழகா? பொருத்தமா? அருள்கூர்ந்து சொல்லுக" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.

இத்திருப்பாடலில் "போவதோ சொலாய்" என்பது நினையத்தக்கது. அடைக்கலப் பொருளைப் பாதுகாக்காமல் வறிதே விட்டுச் செல்லல் பெரியோருக்குப் பொருத்தமல்ல என்று எடுத்துக் கூறிய அருமையை அறிக.

          மையி லங்கு கற் கண்ணி பங்கனே
              வந்தெனைப் பணி கொண்ட பின், மழக்
          கையி லங்குபொற் கிண்ண மென்றலால்
              அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்
          மெய்யி லங்கு வெண் ணீற்று மேனியாய்
              மெய்மை அன்பருள் மெய்மை மேவினார்
          பொய்யி லங் கெனைப் புகுத விட்டு நீ
              போவதோ சொலா பொருத்த மாவதோ?

(திருச்சதகம்-96)