திருவாசகம் சில சிந்தனைகள்-2/திருச்சதகம்

5. திருச்சதகம்

திருவாசகத்தில் அமைந்துள்ள முதல் நான்கு அகவல்கள் இறைவனது பெருமை பேசுதல், அவன் அடிகளாருக்கு அருள் செய்தமைபற்றிப் பேசுதல், அவனுடைய எளிவந்த தன்மைபற்றிப் பேசுதல் ஆகிய வற்றை உள்ளடக்கி நின்றன. நான்காவதாகவுள்ள போற்றித் திருஅகவல் ஆன்ம யாத்திரையின் குறிக்கோள், அவன் அருளைப் பெறுதலே ஆகும் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டு, அந்த அருளைப் பெறுவதற்குரிய வழியையும் 'போற்றி, போற்றி' என்று கூறுவதன்மூலம் எடுத்துக் காட்டுகின்றது.

திருச்சதகம் தொடங்கி, அச்சோப் பதிகம் முடிய உள்ள பகுதிகளில் நான்கு, ஆறு, எட்டு அடிகள் கொண்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சதகப் பாடல்கள் நூறும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பெற்றுள்ளன. இவற்றில் முதல் பத்துப் பாடல்கள் கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. அடிகளாருக்கு ஐந்து நூற்றாண்டுகள் முற்பட்டவராகிய காரைக்கால் அம்மையாரே, தம் 'இரட்டை மணிமாலையில்' கட்டளைக் கலித்துறையைப் பயன்படுத்தி உள்ளார். இன்று கிடைக்கின்ற நூல்கள் அளவில் கட்டளைக் கலித்துறையை முதன்முதலாகக் காண்பது அம்மையாரின் பாடல்களிலேயே ஆகும்.

மன உருக்கம், பக்தி இவற்றை வெளியிடுவதற்குக் கட்டளைக் கலித்துறை, எண்சீர்க் கழிநெடில்அடி ஆகிய நீண்ட பாடல்களே பொருத்தம் உடையனவாகும். வெண்பா, குறட்பாப் போன்றவை கருத்தைச் சொல்லப் பயன்படுமே.தவிர, உணர்ச்சியை வெளியிடப் போதுமானவையல்ல. சங்கப் பாடல்களில் உணர்ச்சியை வெளியிட ஆசிரியப்பா, கலிப்பா என்ற இரண்டும் பயன்படுத்தப் பெற்றுள்ளன. நற்றிணை முதலிய நூல்களில் காணப்பெறும் ஆசிரியப்பா சிறந்த கருத்துக்களை வெளியிடினும் உணர்ச்சிகளுள் சிறந்ததாகிய காதல் உணர்ச்சியை முழுதும் வெளியிடுமாறில்லை. ஆனால், நெய்தற் கலியிலும் மருதக் கலியிலும் வருகின்ற நீண்ட பாடல்கள் மிகச் சிறந்த முறையில் உணர்ச்சியை வெளியிடுகின்றன.

பக்தி உணர்ச்சியும் உணர்ச்சிகளில் சிறந்ததாகலின் அதனை வெளியிடக் கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், எண்சீர் விருத்தம் ஆகியவை ஏற்புடையவை. இந்தக் கருத்திலேயே திருவாசகம் இவ்வகைப் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளது. தேவார காலத்தில் எழுந்த இசைப் பாக்கள், இசையை அடிப்படையாகக் கொண்டு பக்தியைத் தோற்றுவித்தன. திருவாசகம் இசைப்பா அன்று என்றாலும், நாலு சீர், ஆறு சீர், எட்டுச் சீர் என்று இசைப் பாக்களில் வருவதுபோலச் சீர்களை ஏற்றுக்கொண்டாலும் தேர்ந்தெடுத்த சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் பக்தி உணர்ச்சிக்குத் தலையாய இடம் தந்தது.

நூறு பாடல்களுடன் அந்தாதியாகத் தொகுக்கப்பட்டிருத்தலின் திருச்சதகம் என்ற பெயரை முன்னோர் வழங்கினர்போலும், சதகம் என்று கூறினால் ஒரே வகையான பாட்டுக்கள் நூறு அமைந்திருப்பதே முறையாகும். ஆனால், திருவாசகத்தில் உள்ள திருச்சதகத்தில் கட்டளைக் கலித்துறை, தரவு கொச்சகம், எண்சீர் விருத்தம், அறுசீர் விருத்தம், கலி விருத்தம் என்பன போன்ற வேறுபாடுகளுடன் கூடிய பாடல்கள் பத்துப் பத்தாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பத்திற்கும் பழங்காலத்திலேயே ஒவ்வொரு தலைப்புத் தரப்பெற்றிருந்தது. நூறு பாடல்களைக் கொண்ட சதகம் என்று பெயரிட்டுவிட்டுப் பத்துப் பத்தாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பின்கீழ்க் கொண்டுவருவது சரியா என்பது ஆராயத்தக்கது. அன்றியும். ஒவ்வொரு பத்துப் பாடலுக்கும் கொடுக்கப்பட்டுள்ள உள்தலைப்பில் ஒன்றிரண்டு போக ஏனையவை அதன் பின் வரும் பாடல்களோடு ஒரு சிறிதும் பொருந்துமாறு இல்லை. எனினும், அவை இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியத்துள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றில் பத்துப் பத்தாகப் பிரிக்கப் பெற்றுள்ள நூறு பாடல்கள் ஒரு தனித்தலைப்புடன் விளங்குவதைக் காணலாம். அன்று சதகம் என்ற வட சொல் புழக்கத்தில் இல்லை. ஆனாலும், ஐங்குறுநூற்றில் உள்ள நூறு பாடல்கள் ஒரு தலைப்பினுள் வந்ததாலும், அவை பத்துப் பத்தாகப் பிரிக்கப்பட்டிருந்ததாலும் அனைத்துப் பாடல்களும் ஆசிரியப்பாவாகவே அமைந்து உள்ளன. திருவாசகத்தில் அவ்வாறு இல்லை.

மெய்யுணர்தல்

5. மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து
உன் விரை ஆர் கழற்கு என்
கை தான் தலை வைத்து கண்ணி
ததும்பி வெதும்பி உள்ளம்
பொய் தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சய சய போற்றி என்னும்
கை தான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டு கொள்ளே 1

அரும்பி-புளகாங்கிதங்கொண்டு. விரை-மணம், ததும்பி-இமைகளில் வழியக்கூடிய அளவு நிரம்பி. கைதான் நெகிழவிடேன்-ஒழுக்கம் தளரேன். கண்டுகொள்-இயல்பைக் கண்டு அடிமையாகக் கொள்.

ஒருமனிதனுக்குப் புறப்பகுதி, அகப்பகுதி என்ற இரண்டு பகுதிகள் அமைந்துள்ளன. நம் கண்ணால் காணக்கூடிய உடம்பும் பல்வேறு உறுப்புக்களும் புறப்பகுதி எனப்படும். மனம், சித்தம், புத்தி முதலிய அந்தக்கரணங்கள் அகப்பகுதி எனப்படும். கை, கால் முதலிய புறப்பகுதிகளில் தோற்றுவிக்கப்படும் மாறுபாடுகள், அம்மனிதனுடைய மூளையின் கட்டளையால் நிகழ்வன ஆகும். ஆனால், மனம், ஆழ்மனம் என்பவற்றில் தோன்றும் உணர்ச்சிகள் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை. இந்த அகப்பகுதிகள் புறப்பகுதியின்மேல் ஆட்சி செலுத்தக் கூடியவை. ஒருவன் உடலைக் குறுக்கிக்கொண்டு கையைத் தலைமேல் குவித்துக்கொண்டு வாயினால் இறைவன் திருநாமங்களை ஒப்பிக்கலாம். இத்தகையவருடைய மனம் எங்கேயோ சஞ்சரித்துக்கொண்டிருக்கலாம். மனம் வேறு, உடல் வேறாக இருக்கும் இந்நிலையைப் பொய்ந்நிலை என்று கூறவேண்டும்.

இதன் மறுதலையாக, மனத்தில் பக்தி நிரம்பிவழிந்து, அது சித்தத்திலும் சென்று தங்கிவிடும் நிலை ஏற்படுமேயானால் அதன் விளைவாக உடலில் தோன்றும் மாற்றங்கள் பல உண்டு. அத்தகைய ஒரு நிலையைத்தான் திருச்சதகத்தின் முதல் பாடல் குறிக்கின்றது. உடல் விதிர்விதிர்த்தல், கண்ணிர் ததும்பி வழிதல், உள்ளம் பொய்தவிர்தல் ஆகியவை ஆழ்மனத்தில் நிறைந்துள்ள பக்தியின் விளைவாகத் தோன்றும் அடையாளங்களாகும். இந்நிலையில், இறைவன் திருவடிகள் அந்த ஆழ்மனத்தில் பதிகின்றன. அந்தத் திருவடிகளுக்கு வணக்கஞ் செய்யும் முறையில், கைகள் தலைமேல் ஏறிக் குவிகின்றன; வாய் ‘போற்றி சயசய’ என்று பாடுகின்றது.

'கைதான் நெகிழவிடேன்' என்று அடிகளார் பாடுவது, அவனுடைய விரையார் கழல் உள்ளத்துள் பதிந்திருத்தலின் கையை நெகிழவிடமாட்டேன் என்ற கருத்தைக் கூறுவதாகும்.

இப்பாடல் பொய்தவிர்ந்த உள்ளத்தில் இறை உணர்வு தோன்றும்பொழுது நிகழ்கின்ற நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவதாகும். ஆழ்மனத்தில் திருவடி நிறைந்திருந்து, அதன் பயனாக உடலிலே மாறுபாடுகள் தோன்றினாலும் இந்த இறை அன்பர்கள், இந்த அனுபவம் எங்கே தம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாக, 'என்னைக் கண்டுகொள், என்னை விட்டு விடாதே' என்றெல்லாம் பேசுவார்கள்.

திருவாதவூரர் என்ற அமைச்சர், மாணிக்கவாசகராக மாறி, இறையனுபவத்தை முழுவதுமாகப் பெற்று, பின்னர் அந்த அனுபவம் நீங்கிய நிலையில் இப்பாடல்களைப் பாடுகின்றார். தாம் எதிர்பாராமல் இருக்கவும், குருநாதர் தாமே வந்து ஆட்கொண்டு தம்முடைய மனநிலையை மாற்றியதால் 'கைதான் நெகிழ விடேன்' என்கிறார். இத்தகைய உறுதிப்பாடு அவரிடம் தோன்றாத காலத்தில், தாமே வந்து ஆட்கொண்ட குருநாதர், இப்பொழுது உறுதிப்பாடு முழுவதுமாகக் கைவரப்பெற்ற நிலையில் மறைந்துவிட்டார். ஆதலால்தான், அடிகளார் இப்பொழுது குருநாதரிடம் ஒரு விண்ணப்பத்தைச் செய்கிறார். 'ஐயா! உன்னைச் சரணமடைந்து அதன் விளைவாகக் கை நெகிழவிடாமல் இருக்கின்றேன். எனவே, என்னைக் கண்டு கொள்வது உன் கடமை' என்ற கருத்தில் பேசுகின்றார்.

விரையார் கழல் என்ற சொற்கள், நாவரசர் பெருமானின் 'இன மலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடி' (திருமுறை: 6:14-1 என்ற தொடரை நினைவூட்டுகின்றன.

6. கொள்ளேன் புரந்தரன் மால் அயன்
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு
அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருஅருளாலே
இருக்கப்பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது
எங்கள் உத்தமனே 2

புரந்தரன்-இந்திரன். நள்ளேன்-நட்புக்கொள்ளேன். எள்ளேன்-இகழேன். உள்ளேன்-நினைக்கமாட்டேன்

‘இந்திரன் முதலியோர் பதங்களை வேண்டேன். அடியார்களுடன் சேர்ந்திருப்பதாயின் நரகத்திலும் இருப்பேன்’ என்கிறார்.

ஆன்மிகத்தில் முன்னேறுபவர்கள், தாம் செல்லும் வழியில் செல்பவர்களின் நட்பையே விரும்பவேண்டும் என்பதை மிகப் பழங்காலந்தொட்டே இந்நாட்டவர் அறிந்திருந்தனர். புத்ததேவன் ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்று சொல்வதும், 'நல்லார் இணக்கமும் நின் பூசை நேசமும்' (திருவேகம்பமாலை-5) என்று பட்டினத்தார் சொல்வதும், 'துரும்பனேன் என்னினுங் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய்' (தாயு. சுகவாரி-7) என்று தாயுமானார் சொல்வதும் இக்கருத்தை வலியுறுத்தும்.

7. உத்தமன் அத்தன் உடையான்
அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன்
என்ன மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட
ஊர் ஊர் திரிந்து எவரும்
தம் தம் மனத்தன பேச
எஞ்ஞான்றுகொல் சாவதுவே 3

மத்த மனம்-பித்து. ஒத்தன-விரும்பியவாறு.

இந்தப் பாடலுக்கு மரபு நிலையில் நின்று பொருள் கூறியவர்களும் உண்டு. சாதாரண உலகியலில் உள்ளவர்களுக்கு அறிவும் பொறி, புலன்களும் தொழிற்படுவது போல் இறை அனுபவ முதிர்ச்சியில் திளைப்பவர்களுக்கு இந்த அறிவும், பொறி, புலன்களும் தொழிற்படுவதில்லை. உணர்வுக்குக் கட்டுப்பட்ட நிலையில் அறிவு தன் தொழிலைச் செய்யாமல் அடங்கி விடுவதாலும், 'மீதுர்ந்து இன்னது செய்கிறோம்' என்று அறியும் வரம்பைக் கடந்து உணர்வு தொழிற்படுவதாலும் இந்த நிலையை இறைப் பிரேமை (divine ecstacy) என்று சொல்லுகிறோம்.

இருபத்து நான்கு மணி நேரமும் இவர்களுடைய பொறி, புலன்கள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அனைத்தும் இறையனுபவத்தில் மூழ்கி இருத்தலால் கால்கள் போனபடி நடப்பதும், தமக்குத் தாமே சிரித்துக் கொள்வதும், திடீரென்று கைகொட்டி ஆர்ப்பதும், திடீரென்று அழுவதும் இப்பெருமக்களுக்கு இயல்பாகும். இறையனுபவத்தில் மூழ்காமல், அறிவின் தொழிற்பாட்டை இழந்து வாழ்பவர்களை மனநிலை திரிந்தவர் (பயித்தியம்) என்று கூறுகிறோம். மேலே கூறிய செயல்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும். இவ் இருவரிடையே வேறுபாடு காண்பது எப்படி என்ற வினாவிற்கு, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி பாரதி விடை கூறுகின்றார். புதுவையில் வாழ்ந்த குள்ளச்சாமி என்ற சித்தரை, ஊரார் அனைவரும் பயித்தியம் என்றே கூறிக் கொண்டிருந்தனர்; பாரதியும் அதனையே நம்பியிருந்தார். ஒரு நாள் குள்ளச்சாமியின் கண்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு, பாரதிக்குக் கிடைத்தது. அக்கண்களின் கூரிய பார்வையைக் கண்ட பாரதி, உண்மையைப் புரிந்து கொண்டார்.

அடிகளாரைப் பொறுத்தவரை அமைச்சர் பதவியைத் துறந்து ஒற்றை ஆடையுடன் ஊர்கள்தோறும் திரிந்த காரணத்தால், அவர் காதுபடவே, பயித்தியம் என்று பொருள்படப் பல்வேறு சொற்களால் அவரை எள்ளி நகையாடினர்.

இந்த வசைச்சொற்கள் அடிகளாரின் காதுகளில் விழுந்து, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் அளவிற்குப் பயன்பட்டன. ஆனால், தம்மை ஒருவர் வசைபாடும்போது அதனைக் கேட்டுச் சினங் கொள்வதும், எரிச்சல் படுவதும், வெறுப்புக் கொள்வதும் சாதாரண மக்கள் மனநிலை ஆகும். மக்கள் தம்மை பயித்தியம் என்று கூறியபொழுது, அச்சொல் அடிகளாரின் காதில் பட்டதே தவிர, மேலே கூறிய சினம் முதலிய எந்த எதிர்ச்செயலும் அவர் மனத்தில் எழவில்லை.

என்றாலும், அச்சொற்கள் காதில் விழுந்ததும், அவருடைய அறிவில் சென்று பட்டதும் உண்மைதான். அவ்வாறு காதில் விழுந்ததை, இன்ன சொற்கள் என்று புரிந்து கொள்ளும் மனநிலையைக்கூட அடிகளார் விரும்பவில்லை. இத்தனை இறை இன்ப அனுபவத்திலும், மனத்தின் அடித்தளத்தில் எங்கோ ஒரு மூலையில், 'நான்' என்ற ஒன்று செயலிழந்து கிடக்கிறது. பிறர் பயித்தியம் என்று கூறிய சொற்கள் இந்த 'நானை' மெள்ள உசுப்பிவிடுகின்றன. முடங்கிக் கிடந்த 'நான்', தன்னை யாரோ பயித்தியம் என்று சொல்கிறார்கள் என்ற நினைவில் ஒரு விநாடிக்கும் குறைந்த நேரத்தில் தலை தூக்க ஆரம்பிக்கிறது. இச்சொற்களின் தாக்கத்தால், அந்த 'நான்' முழுவதுமாக எழுந்து எதிர்ச்செயலில் ஈடுபடுவதற்கு முன்னர், இறையனுபவ ஆனந்தம் அந்த 'நானை' அமிழ்த்தி விடுகிறது. எனவே, பிறர் கூறும் பயித்தியம் என்ற சொல் அடிகளாரைப் பொறுத்தமட்டில் எந்தத் தாக்கத்தையும், விளைவையும் ஏற்படுத்திவிடவில்லை. ஆனாலும், சொற்களின் பொருளைப் புரிந்துகொள்ளுமாறு செய்தது முடங்கிக் கிடந்த 'நான்' ஆகும். அது தொழிற்பட்ட நேரம் அரை விநாடிக்குக் குறைவாயினும், அதுகூட இருக்கக் கூடாது என்று விரும்புகிறார் அடிகளார். அதாவது அந்த நான் முழுவதுமாக இறந்து விட வேண்டும் என்பதையே 'எஞ்ஞான்றுகொல் சாவதுவே' என்று குறிப்பிடுகின்றார்.

இதே கருத்தை 'நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ' (திருவா:254) என்று அடிகளாரே பின்னரும் குறிப்பிடுகின்றார்.

பிற்காலத்தில் வாழ்ந்த அருணகிரியார்,

சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
(கந்தரனுபூதி -12)

என்றும்,

இறந்தேவிட்டது இவ்வுடம்பே -
(கந்தர் அலங்காரம் -19)

என்றும் பாடியுள்ளமை இங்கு நோக்கற்பாலது.


8. சாவ முன் நாள் தக்கன் வேள்வித்

தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா
இடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும்
எண்ணி விண் ஆண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து
என்ன பாவம் திரிதவரே! 4

அவிதா-முறையீட்டுச்சொல். திரிதவர்-திரிவர். தகர்-ஆட்டுக்கடா.

தேவர் முதலியோர், தக்கன் வேள்வியில் அவிசை உண்டனர். ஆலகால நஞ்சு கண்டவிடத்து 'காப்பாற்று' என்று முறையிட்டனர். இதனை அறிந்திருந்தும், இவ்வுலகிடை வாழும் பூசுரராகிய வேதியர், சிவ பெருமானின் தனித்துவம் தெரியாமல், அவன் மூவருள் ஒருவன் என்று சொல்லிக்கொண்டு இறுமாந்து திரி கின்றனர். ஐயோ பாவம்!


9.

தவமே புரிந்திலன் தண் மலர்
இட்டு முட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அரு வினையேன்
உனக்கு அன்பர் உள் ஆம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்
நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய்
அடியேற்கு எம் பரம்பரனே 5

முட்டாது-குறைவற. அவம்-வீண். ஆம்-அடியார்களிடை உளதாகிய, பவம்-பிறப்பு.

இப்பாடலுக்கு மரபுபற்றிப் பொருள் எழுதியவர்கள் உண்டு. தனித்தனியாக ஒவ்வோர் அடியாக எடுத்து, சரியை, கிரியை என்று பொருள் செய்வதைக் காட்டிலும், பாடல் முழுவதையும் மனத்துள் வாங்கிக்கொண்டு சிந்தித்தால் பின்வருமாறு பொருள்கூறலாம் என்று தோன்றுகிறது.

'தவம் செய்யவில்லை; மலரிட்டு வணங்கவில்லை; உன் அடியார் கூட்டத்தோடு உடனிருக்கும் பேற்றைப் பெறவில்லை; பயனற்ற பிறவியை எடுத்துள்ளேன் என்றாலும், உன் திருவடிக்கண் சேரும் தகுதியை அளித்து அருளுவாயாக எம் தலைவனே!' என்ற பொருள்பட வரும் இப்பாடல், குருநாதரிடம் இறையனுபவம் பெற்று, பின்னர் அது நீங்கியவழி அடிகளாருக்கு உண்டான பெரு வருத்தத்தை வெளியிடுகிறது. தாம் பெற்ற அனுபவம், அடியார் கூட்டத்தின் நடுவே, குருநாதரின் எதிரே இருந்த பொழுது கிடைத்ததாகும். இப்பொழுது அது போய் விட்டதென்றால், அடியார் கூட்டத்தோடு இல்லாமல் தாம் தனியே விடப்பட்டதால் அந்த அனுபவம் போய் விட்டதோ என்று கலங்குகிறார்.

தவம் செய்யவில்லை, மலரிட்டு வணங்கவில்லை எனினும் அந்த அனுபவம் கிடைத்தது. ஆனால், இப் பொழுது அது போய்விட்டது என்றால், இவை இரண்டையும் வாலாயமாகச் செய்யாததனாலோ என்ற ஐயம் மனத்திடை உறுத்துகின்றது.

10.

பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது
அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்
என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே நின் தன்
வார் கழற்கு அன்பு எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை
ஏத்த முழுவதுமே 6

பரந்து-எல்லாத்தலங்களிலும் சென்று. ஆய்மலர்-வண்டு, பூச்சி, புழுக்கடி, சிதைவு, முறிவு முதலியன இல்லாது ஆய்ந்த மலர். இரந்த எல்லாம்-குறையாக வேண்டிற்று எல்லாம். கரந்து-மறைந்து. நிரந்தரம்-எப்பொழுதும்.

இப்பாடல் செல்கின்ற முறையில், 'பரந்து, பல் ஆய் மலிரிட்டு, முட்டாது அடியே இறைஞ்சி இரந்து' என்றதால், சம்பிரதாய வழியில்நின்று பூசனை புரிகின்ற பலரும் ஒன்றை இரந்து நிற்கிறார்கள். அது என்ன வென்றால், 'எல்லாம் எமக்கே பெறலாம்' என்றதால் உலகத்திலுள்ள எல்லா நலங்களும், எல்லாச் சிறப்புகளும் எமக்கே அருள வேண்டும் எனக் கேட்பதாகும். இப்படி ஒரு குறிப்பிட்ட பயன் தமக்கு வேண்டும் என்ற கருத்துடன் வலம்வருதல், மலரிட்டுத் திருவடியைத் தொழுதல் ஆகியவற்றைச் செய்கின்றவர்களை, அன்பர் என்று அடிகளார் குறிப்பிடுவது எதிர்மறைப் பொருள தாகும். அதாவது, உண்மை அன்பு இல்லாதவர்களை 'அன்பர்' என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.

மலரிட்டு வழிபட்டதன் இறுதியில், எல்லாம் எமக்கே பெறலாம் என்று இருந்தால் அந்தப் பூசை மிகவும் குறைபாடுடையது ஆகும். எனவே, அத்தகையவர் உள்ளத்தில் நில்லாதவன் இறைவன் என்கிறார். அப்படியானால்-அவர்கள் உள்ளத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டான் என்றால், இவருடைய பொக்கம் இறைவனால் அறியப்படாமல் போய்விடுமோ என்ற ஐயத்தைப் போக்குபவர்போல, அவர் உள்ளத்தில் கரந்து, கள்வனாக மறைந்து நின்று அவர்கள் பூசையைக் கண்டு நகையாடுகிறான் என்கிறார். உள்ளத்தில் நிற்றல், அந்த உள்ளத்தில் தன்னலமும், ஆசையும் இல்லாதவழியே நடை பெறுவதாகும். அத்தகையவர் உள்ளத்தில் நிலைபேறாக நின்றுவிடுகிறான் என்பது தேற்றம். அவ்வாறில்லாத, பயன் கருதிப் பூசை செய்வோர் உள்ளத்தில், அவன் வெளிப்பட நிற்கமாட்டான். ஆனால், கள்வன்போல் கரந்துநின்று அவர்கள் செயலைக் கண்டுகொள்கிறான் என்று பொருள் கொள்வது சரியென்றே தோன்றுகிறது. 'கரந்து நின்று' என்பது 'மறைவாக நின்று' என்ற பொருளையே தரும். மறைந்து நின்றான் என்றால், நிலையாக நிற்கவில்லை என்பது பொருளாகும்.

இப்பாடலின், பின் இரண்டு அடிகளில் 'உன் திருவடிக்கண் அன்பை, முழுவதும் ஆகவும், நிரந்தரம்' ஆகவும் செலுத்துகின்ற ஒரு தகுதியை அருள்வாயாக என்கிறார்.

நின்னை ஏத்த எனக்கு அருள்புரியாய் என்று சொல்ல வந்த அடிகளார் இரண்டு சொற்களைப் பெய்கின்றார். 'நிரந்தரமாய்' என்ற சொல்லும் 'முழுவதுமே' என்ற சொல்லும் ஆழ்ந்த பொருளுடையவை. நின்னை முழுவதுமாய் ஏத்த என்பதால், ஏத்துதலே வழியாகவும் பயனாகவும் அமையவேண்டும் என்கிறார். அதாவது ஏத்துதலாகிய வழியைக் கொண்டு இறுதியில், இரந்து எல்லாம் எமக்கே பெறலாம் என்ற எண்ணத்தோடு ஏத்துதலை மறுத்து 'முழுவதுமாக ஏத்த' என்கிறார்.

அடுத்து, நிரந்தரமாக என்ற சொல்லும் இக்கருத்தை வலியுறுத்துவதாகும். பயன்கருதி ஏத்துபவர்கள், அப்பயன் கிட்டியவுடன் ஏத்துதலை மறந்துவிடுவர். இது உலகியற்கை, அதனை மறுப்பது கருதியே 'நிரந்தரமாய்' என்றார்.

11.

முழுவதும் கண்டவனைப் படைத்தான்
முடி சாய்த்து முன்நாள்
செழுமலர் கொண்டு எங்கும் தேட
அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம்
ஆடிக் கதி இலியாய்
உழுவையின் தோல் உடுத்து
உன்மத்தம் மேல்கொண்டு உழிதருமே 7

முழுவதுங் கண்டவன்-பிரமன். அவனைப்படைத்தான்-திருமால். அப்பாலன்-அப்பாற்பட்டவன்; அகப்படாதவன். கழுது - பேய். கதியிலி-எல்லாரும் அடையுமிடம் தானாதலன்றித் தனக்கோர் இடமில்லாதவன். உழுவை-புலி.

நான்முகனும் திருமாலும் தேடவும் அவர்களுக்கு அகப்படாமல் அப்பால் நின்றவன், இப்பூவுலகில் புலித் தோலை உடுத்துச் சுடுகாட்டிடைப் பேய்களோடு ஆடுபவனாகவும், உன்மத்தன்போல எங்கும் திரிபவனாகவும் உள்ளான் என்க.

12.

உழிதரு காலும் கனலும் புனலொடு
மண்ணும் விண்ணும்
இழிதரு காலம் எக் காலம் வருவது
வந்ததன் பின்
உழிதரு கால் அத்த உன் அடியேன்
செய்த வல் வினையைக்
கழிதரு காலமும் ஆய் அவை காத்து
எம்மைக் காப்பவனே 8

உழிதரும்-உலாவும். கால்-காற்று. இழிதருகாலம்-ஐம்பெரும் பூதங்களும் தத்தம் தன்மாத்திரையில் ஒடுங்குங் காலம். உழிதரு கால் அத்த-என்றும் ஆடுகின்ற அத்தனே. அவைகாத்து-மீண்டும் என்னைப்பற்றாதே காத்து.

ஐம்பெரும் பூதங்களும் அழிகின்ற சர்வ சங்கார காலத்தையும் நிர்ணயிக்கின்ற காலத்தத்துவமாக நிற்பவனே! யாம் செய்த பழவினைகள் வந்து பற்றாமல் காத்தருள வேண்டுகிறேன் என்கிறார்.


13.

பவன் எம்பிரான் பனி மா மதிக்
கண்ணி விண்ணோர் பெருமான்
சிவன் எம்பிரான் என்னை ஆண்டு கொண்டான்
என் சிறுமை கண்டும்
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன்
என்ன இப் பரிசே
புவன் எம்பிரான் தெரியும் பரிசு
ஆவது இயம்புகவே - 9

கண்ணி-தலையிற்சூடும் மாலை. புவனம்-உலகம்.

‘அனைத்தையும் படைப்பவனும், பிறைமதி சூடியவனு மாகிய பெருமான் மிக அற்பனாகிய என்னையும் ஒரு பொருளாக்கி என் குறைகளைக் கண்டுகொள்ளாமல் என்னை ஆட்கொண்டான். இறப்ப உயர்ந்தவனாகிய அவன், இறப்ப இழிந்தவனாகிய என்னையும் ஆட் கொண்டது அவனது கருணையினாலேயேயாம் என்பதை உலகம் அறிந்து பேசட்டும்' என்கிறார்.


14.

புகவே தகேன் உனக்கு அன்பருள்
யான் என் பொல்லா மணியே
தகவே எனை உனக்கு ஆட்கொண்ட
தன்மை எப் புன்மையரை
மிகவே உயர்த்தி விண்ணோரைப்
பணித்தி அண்ணா அமுதே
நகவே தகும் எம்பிரான் என்னை
நீ செய்த நாடகமே 10

உனக்கு அன்பர்-உன்னன்பர் உருபு முறைப்பொருளில் வந்தது. பொல்லாமணி-முழுமணி. தகவே-தகுதியாகுமா.

'துளையிடப்படாத மணி போன்றவனே! உன் அன்பர் கூட்டத்திடைப் புகுவதற்கு ஒரு சிறிதும் தகுதியில்லாதவன் ஆகிய என்னை, நீ ஆட்கொண்ட தன்மை தகுமோ? பொருத்தமுடையதோ? இப்படித் தகுதி இல்லாதவர் களையும் உயர்த்தி, விண்ணோரையும் தாழும்படியாகச் செய்கிறாயே, நீ ஆடுகின்ற இந்நாடகம் நகைப்பிற்குரியதாக அல்லவா இருக்கிறது' என்க.

அறிவுறுத்தல்


15.

நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து
நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச் சீர் மணிக் குன்றே இடை அறா
அன்பு உனக்கு என்
ஊடு அகத்தே நின்று உருகத் தந்தருள்
எம் உடையானே 11

ஆடகம்-பொன். மணி-மாணிக்கம். என்னோடு அகத்தே எனக்குள் மனத்தே.

நாடகத்தால் என்று தொடங்கும் இப்பாடல் எளிதாகப் பொருள் விளங்கிக்கொள்ளும் நிலையில் அமையவில்லை. திருப்பெருந்துறை நிகழ்ச்சியை மனத்தில் வைத்துக்கொண்டு, இப்பாடலை நோக்கியபொழுது தோன்றிய சில கருத்துக்களைத் தந்துள்ளேன்.

அமைச்சர் கோலத்தில் இருந்தவர் திருவடி தீட்சை பெற்று, முற்றிலும் புதிய மனிதராகி இறையனுபவத்தில் திளைக்கின்ற நேரத்தில், எதிரே, குரு இருக்கின்றார்; இவரைச் சுற்றி அடியார் திருக்கூட்டம் இருக்கின்றது. அந்த அடியார்கூட்டத்தின் இடையே தம்மை இருக்குமாறு பணித்தவர் குருநாதர் என்பதை நன்றாக அடிகளாரால் உணர முடிகிறது. குருநாதரைச் சிவன் என்று தேறிவிட்ட காரணத்தாலும் அவருடைய திருவடி சம்பந்தம் பெற்றதாலும் அடியார் கூட்டத்தினிடையே இருக்கும் வாய்ப்புக் கிடைத்ததாலும் வீடுபேறு தமக்கு உறுதி என்ற நினைவில் இறையனுபவத்தில் ஆழ்ந்துள்ளார் அடிகளார்.

சில விநாடிகள் கழித்துக் கண்களைத் திறந்து பார்க்கையில் குருவும் இல்லை; அடியார்கூட்டமும் இல்லை. திடுக்குற்ற அடிகளாருக்கு, அந்த விநாடி மனத்தில் தோன்றிய எண்ணமே இப்பாடலாக வெளிப்படுகிறது. தம் முடைய அன்பு பொய்; தாமும் பொய் என்ற எண்ணம் வலுவடைகின்றது. பொய்யன்புடன் மெய்யடியார் கூட்டத் துள் நுழைந்து வீடுபேறு கிட்டிவிட்டதாகவே எண்ணி மகிழ்ந்திருந்த நிலையை 'மிகப் பெரிதும் விரைகின்றேன்' என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். தாம் பொய்யன் என்ற எண்ணம் அடிகளாரை வலுவாகப் பற்றியிருந்தது என்பது, திருவாசகத்தில் இருபது இடங்களுக்கும் மேலாகத் தம்மைப் பொய்யனென்று அடிகளாரே, கூறிக்கொள்வதால் தெளிவாகிறது.

திருப்பெருந்துறையில் குருநாதர் திருவடிகளில் வீழ்கின்ற வரையில் அவர் அமைச்சர் உடையுடன் இருந்த திருவாதவூரரே ஆவார். அப்படியிருக்க 'நாடகத்தால் உன்அடியார்போல் நடித்து நான் வீடகத்தே புகுந்திடுவான் விரைகின்றேன்' என்று கூறியது ஓர் அடியாரின் புறவேடத்தைக் குறிப்பதன்று என்பதை விளங்கிக்கொள்ள முடியும். எனவே, அடியார்போல் நடித்தல் புறவேடத்தைக் குறிக்கவில்லை என்றால் பின்னர் எதனைக் குறித்தது? உண்மை அடியாரின் தலையாய இலக்கணம் அசைக்க முடியாத இறை அன்பாகும். குருநாதரின் தீட்சையும், அடியார்களின் சேர்க்கையும் மெய்யன்பு உடையவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவை கிடைத்துவிட்டதால் தாம் கொண்டிருந்த அன்பு உண்மையானது; அந்த அன்பின் பயனாகத்தான் இவ்வடியார் கூட்டத்தினிடையே இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது என்று கருதியிருந்த அடிகளாருக்கு, அவர்கள் அனைவரும் மறைந்தவுடன் தாம் கொண்டிருந்த அன்பின்மேல் சந்தேகம் வந்துவிட்டது. தம் அன்பு பொய்யானது; ஆதலால்தான் அவர்கள் மறைந்தனர் என்று நொந்த அடிகளார் 'இடையறா அன்பு ஊடகத்தில் நிறைந்து நின்று உருகும் வாய்ப்பைத் தருவாயாக’ என வேண்டிக் கொள்கிறார்.


16.

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்
இறப்பு அதனுக்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன்
மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
சிவனே எம்பெருமான் எம்
மானே உன் அருள் பெறும் நாள்
என்று என்றே வருந்துவனே
12

ஏதும்-சிறிதும். என்கடவேன்-என்ன செய்யவல்லேன். தேனேயும்-தேன் பிலிற்றும்

இப்பாடலில் வரும் பிறப்பஞ்சேன், இறப்பதனுக்கு என்கடவேன் என்ற தொடர்களுக்குப் பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் சிக்குவதைப் பாடியுள்ளதாகப் பொருள் கொள்வது சிறப்புடையதாகத் தோன்றவில்லை. திருப்பெருந்துறை அனுபவத்திற்கு முன்னர் இப்பாடல் பாடப்பெற்றிருப்பின் அவ்வாறு பொருள்கொள்வதில் தவறில்லை.

திருப்பெருந்துறையில் குருநாதரையும், அடியவர்களையும் பார்த்து, குருநாதரின் திருவடி தீட்சை பெற்ற பின்னர் அதுவே வீடு என்று கருதினார். அந்தத் திருவடிகளைப் பார்த்துக்கொண்டு இருப்பதே வீடுபேறு என்று எண்ணினார். அதாவது, அத்திருவடிகளைச் சதாசர்வ காலமும் ஊனக் கண்களால் கண்டு கொண்டிருப்பதே வீடுபேறு என்று கருதினார். இந்த வீடுபேறு அடிகளாரைப் பொறுத்தவரை மானுட உடலோடு, அந்த உடலுக்குரிய கண்களோடு இருக்கும் பொழுதே கிடைத்த பெரும் பேறாகும். அதனால்தான், மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடுற்றேன் (திருவாச:1-32) என்று முன்னரும் கூறியுள்ளார். இதனைப் பெற்றுவிட்ட பிறகு உடலைத் துறந்து வீடுபேற்றைப் பெற வேண்டும் என்ற பழைய நினைவு நீங்கிவிட்டது.

குருவின் திருவடி தரிசனமே வீடுபேறு என்று நினைத்தார் ஆதலின், எத்தனைத் தலங்களுக்குச் சென்று வழிபட்டபோதும் அவன் குருவடிவாகி வந்த அந்தக் காட்சி அவர் மனத்தை விட்டு அகலவில்லை. நாளாவட்டத்தில் இந்த உடம்பு இருக்கும்பொழுதே, இந்த ஊனக் கண்களால் அந்தக் காட்சியை மறுபடியும் பெற வேண்டும் என்ற அவா வளர்ந்து வளர்ந்து, அவரை ஆட்கொண்டதாகலின் அடியார் வேண்டுதலை நிறைவேற்றும் குருநாதர் திருக்கழுக்குன்றத்தில் அடிகளாரின் விருப்பப்படியே குருநாதர் வடிவில் தரிசனம் தருகிறார். 'பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்' என்று தொடங்கி 'கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே' என்று முடிகின்ற, (திருவாச:468) பாடலும்,

துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின்
தூய்ம் மலர்க்கழல் தந்து எனைக்
கயக்க வைத்து அடியார் முனே
வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

(திருவாச. 474)

என்ற பாடலடிகளும் மேலே கூறிய கருத்தை வலியுறுத்தக் காணலாம்.

சாதாரணமாக, பிறப்புக்கு அஞ்சுவதாகவே பெரியோர்கள் பாடியுள்ளனர். ஆனால், அடிகளார் 'யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்' என்று பாடுவதன் நோக்க மென்ன? பிறப்புப்பற்றிய அச்சம் எதனால் போயிற்று என்ற வினாவை எழுப்பினால் பெருந்துறையில் குரு நாதரின் திருவடிக்காட்சியை இப்பிறப்பிலேயே பெற்றதால் பிறப்பு அஞ்சேன் என்று உறுதியாகப் பாடமுடிந்தது. ஆனால், அக்காட்சி நிலைபேறுடையதாக அல்லாமல் ஊனக் கண்களிலிருந்து மறைந்துவிட்டமையின் அது மீண்டும் கிடைக்காமலேயே இறந்துபடும் நிலைமை எய்துமோ என்ற எண்ணம் தோன்றலாயிற்று. அப்படி இறப்பு ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் ஆற்றல் தம்பால் இல்லை என்பதை நினைந்தவுடன் 'இறப்பதனுக்கு என்கடவேன்' என்று பாடுகின்றார்.

இரண்டாவது அடியில் விண்ணுலகம் பெறினும் வேண்டேன், மண்ணுலகம் ஆளும் ஆட்சியும் வேண்டேன் என்று கூறுவதால் அத்திருவடிக் காட்சிக்குப் பதிலாக ஒருவேளை இறைவன் இந்த இரண்டினையும் தருவதாக இருப்பினும் அவற்றை வேண்டேன் என்றார்.

மண் அரசாட்சியையும் விண் அரசாட்சியையும் ஒருசேர ஒதுக்கிய அடிகளார், அடுத்த இரண்டு அடிகளில் வேறு ஒன்றை வேண்டுமென்று கேட்கின்றார். 'உன் அருள்பெறு நாள் என்று? என்றே வருந்துவனே', என்று கூறுவதால் அடிகளாரைப் பொறுத்தமட்டில் குருவின் திருவடி தரிசனமும் இறையருளும் ஒன்றே என்ற அவரது மனோநிலையை விளங்கிக்கொள்ள முடிகிறது.

உண்மை அடியார்களைப் பொறுத்தமட்டில் திருவடி தரிசனமே வீடுபேறாகும் என்ற கருத்து சைவம், வைணவம் என்ற இரண்டிலும் இடம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
(நாலாயிர 936)

என்னும் திருப்பாணாழ்வாரின் பாசுரப்பகுதி மேலே கூறிய கருத்தை வலியுறுத்துவதாகும்.

17.

வருந்துவன் நின் மலர்ப் பாதம் அவை
காண்பான் நாய் அடியேன்
இருந்து நல மலர் புனையேன்
ஏத்தேன் நாத் தழும்பு ஏறப்
பொருந்திய பொன் சிலை குனித்தாய்
அருள் அமுதம் புரியாயேல்
வருந்துவன் அத் தமியேன் மற்று .
என்னே நான் ஆம் ஆரே
13

காண்பான்-காண்பதற்கு. பொற்சிலை-மேருவாகியவில்.

திருப்பெருந்துறையில் குருதரிசனமும், குரு அருளும் கிடைத்த பிறகு அடிகளார், பெரிதும் ஈடுபட்டது குருவின் திருப்பாதங்களிலேயே ஆகும். இனி, குருவானவர் மறைந்த பிறகு அவரின் மறைவுக்கு வருந்துவதைக் காட்டிலும் தம்மைப் பெரிதும் ஈடுபடுத்திய அந்தத் திருப்பாதங்களைக் காணமுடியாமல் போய்விட்டதே என்றுதான் அடிகளார் பெரிதும் வருந்துகிறார். அந்தத் திருவடிகளை நினைந்து நினைந்து பலமுறை பேசியுள்ளதை இதற்கு முன்னரும் கண்டோம்.

இப்பாடலிலும் அதே கருத்து மீட்டும் பேசப் பெறுகிறது. 'நாயடியேன் நின் மலர்ப்பாதம் அவை காண்பான் வருந்துவன்’ என்று கூறிய பிறகு, மீட்டும் அத்திருவடிகளைக் காணும் பேறு பெற்றால் தாம் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை இரண்டாவது அடியில் பேசுகின்றார். திருவடிகளைக் காணுகின்ற நேரத்தில் ஒளிக்கும் இச்சோரன் ஓடிவிடாமல் இருக்க 'நாண் மலர்ப் பிணையலின் தாள் தளை இடுமின்' (திருவாச: 3-142,143) என்று முன்னரும் பேசியுள்ளார். இப்பொழுது அத்திருவடிகளைக் 'காணும் பேறு கிடைத்தால் இருந்து மலர் புனைய வேண்டும், நாத்தழும்பேற ஏத்த வேண்டும் என்று தம் உள்ளக்கிடக்கையைப்' பேசுகின்றார்.

திருவடி தரிசனம் கிடைத்தபொழுது 'யானேதும் பிறப்பு அஞ்சேன்' என்று பாடிய அடிகளார், இப்பொழுது திருவடிகள் மறைந்துவிட்டமையின் தாம் தமியராக இருப்பதாக உணருகிறார்.


18.

ஆம் ஆறு உன் திருவடிக்கே அகம்
குழையேன் அன்பு உருகேன்
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து
உரையேன் புத்தேளிர்
கோமான் நின் திருக்கோயில் துகேன்
மெழுகேன் கூத்து ஆடேன்
சாம் ஆறே விரைகின்றேன்
சதிராலே சார்வானே
14

புத்தேளிர்-தேவர். துகேன்-அலகிடேன். சதிர்-சாமர்த்தியம்

அடிகளார், திருப்பெருந்துறை நாடகம் நடந்து முடிந்த பிறகு முதலில் வருந்தினாரேனும் தாம் எதற்காக உலகிடை விடப்பட்டோம் என்பதைப் புரிந்துகொண்டார். பிறகு பல தலங்களை வழிபட்டுக்கொண்டு செல்கையில் தோன்றிய எண்ணங்களுக்கு வடிவு கொடுக்கிறது இப்பாடல். எந்நேரமும் அகங்குழைந்து உருகிஉருகி ஊற்று எழும் கண்ணிர் அதனால் உடம்பு நனைந்து இருந்தார் ஆயினும், தம்முடைய ஆதர்ச புருஷராகிய கண்ணப்பரை ஒயாது நினைத்தலின், அவர்போன்ற அன்பும் உருக்கமும் தம்பால் இல்லையே என்று வருந்துவதை முதலடி தெரிவிக்கின்றது.

அடிகளார் செல்லுமிடங்களில் உள்ள திருக்கோயில்களில் பல அடியார்கள் திருத்தொண்டில் ஈடுபட்டுள்தைப் பார்க்கின்றார். அவர்களைப்போல, திருக்கோயிலை அலகிட்டு, மெழுக்கிட்டு, பூமாலை புனைந்தேத்தி வழிபட முடியவில்லையே என்ற வருத்தம் இடையிடையே தோன்றுகிறது. இத்தகைய திருப்பணிகளைச் செய்வதால் ஒரு வேளை தம்முடைய உருக்கமும் அன்பும் மிகுதிப்படுமோ என்ற எண்ணம் தோன்றியதால்போலும் இரண்டு, மூன்றாம் அடிகளில் தாம் இவற்றைச் செய்யவில்லையே என்று வருந்துகிறார்.

ஏதோ ஒரு திருக்கோயிலில் தங்கி இத்திருப்பணிகளில் ஈடுபடாமல் அவரைத் தடுத்தது யார்? தாராளமாக அவர் இந்தத் தொண்டுகளில் ஈடுபட்டிருக்கலாம். இவற்றில் ஈடுபடவேண்டும் என்ற விருப்பமும் அவர்பால் ஒரளவு இருந்திருக்க வேண்டும். பின்னர் ஏன் அதனைச் செய்யவில்லை; இந்தத் தொண்டுகளில் ஈடுபடுவதற்காக அவர் படைக்கப்படவில்லை. இத்தகைய தொண்டில் ஈடுபட்டிருந்தால், ஈடுபடும் தொண்டருக்கு ஆன்ம முன்னேற்றம் கிடைக்குமென்பது ஒருதலை, ஆனால் அடியார்களுடன் அவரை அழைத்துச் செல்லாமல் தில்லைக்கூத்தன் அவரை விட்டுச் சென்றதற்குக் காரணம், அவர் மூலம் பராஅமுதாகிய திருவாசகம் வெளிப்பட வேண்டும் என்பதுதானே! எனவே, ஓரிடத்தில் தங்கித் திருக்கோயில் தொண்டில் ஈடுபடவிடாமல் அடிகளாரை உள்ளிருந்து உந்தித் தள்ளுபவன் தில்லைச்கூத்தன் அல்லனோ?

என்றாலும், அடிகளார் எதிர்பார்த்த அளவுக்கு மன உருக்கமும் அவனைப் புகழ்ந்து பாடும் வாய்ப்பும் இன்மையால் 'சாமாறே விரைகின்றேன்' என நொந்து கொள்கிறார்.


19.

வான் ஆகி மண் ஆகி
வளி ஆகி ஒளி ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி
உண்மையும் ஆய் இன்மையும் ஆய்
கோன் ஆகி யான் எனது
என்று அவர் அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே
15

வளி-காற்று. ஊன்-உடல் ஆகுபெயர். கூத்தாட்டுவான்-வினைக்கயிற்றால் அகங்கார மமகாரமுடைய ஆன்மாக்களாகிய பாவைகளை ஆட்டுபவன்.

இப்பாடலில் இரண்டாவது அடியிலுள்ள 'உண்மையுமாய் இன்மையுமாய்' என்பது சிந்திக்கப்படவேண்டிய ஒன்றாகும். உண்மை, இன்மை என்பன முறையே உள்ள பொருள், இல்லாத பொருள் என்ற பொருளையும், உண்டு, இல்லை என்ற பொருளையும் தந்து நிற்பன ஆகும். ஒரு பொருள் உண்டு என்றால், அப்பொருள் இல்லை என்ற மறுதலைக்கு அங்கு இடமில்லை. அதேபோன்று இல்லை என்று கூறிவிட்டால், உண்டு என்ற மறுதலைக்கும் அங்கு இடமில்லை. அப்படியிருக்க இறைவனை ‘உண்மையுமாய்’ என்றும் இன்மையுமாய் என்றும் கூறுவது எவ்வாறு? முற்றிலும் முரண்பட்ட இரண்டை எடுத்துக்கொண்டு, இவை இரண்டுமே இறைவன்தான் என்று சொல்லுகின்ற மரபு தமிழர்களைப் பொறுத்தமட்டில் என்றுமே இருந்துவருகின்ற ஒன்றாகும். உண்மை என்பது ஒரு முனை என்றால், இன்மை என்பது அதன் மறு முனையாகும்.

ஒரு பொருளை உண்டு, இல்லை என்று நாம் கூறுவது கால, தேச, வர்த்தமானங்களுக்கு உட்பட்டே ஆகும். அறிவு ஒன்றால்மட்டுந்தான் இந்த வேறுபாட்டை, முரண்பாட்டை அறிய முடியும். உணர்வு உலகத்தில் செல்லும்பொழுது முரண்பாட்டிற்கு அங்கு இடமேயில்லை. எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற பரம்பொருளை உண்மை என்று கூறுவதோ, இன்மை என்று கூறுவதோ இயலாத காரியம். உணர்வினால் உணர முற்படும்போது அந்தப் பொருள் எங்கும் நிறைந்திருக்கின்றது. உணர்பவர்களின் உள்ளே நின்று உணரப்படு பொருளாய் அது அமைந்துவிடுகிறது. எனவே அது உள்பொருளாய், உண்மையாய் விளங்கக் காண்கிறோம். அதே கடவுட் பொருளை அறிவின் துணைகொண்டு ஆராயத் தொடங்கினால், வெங்கா யத்தைத் தோலுரித்துக்கொண்டே சென்றால், இறுதியில் ஒன்றும் மிஞ்சாததுபோல இந்த ஆய்வாலும் கடவுள் என்ற ஒரு பொருள் இல்லை என்ற முடிவிற்கு வர நேரிடும். வேத காலத்திலேயேகூட இப்படி ஆராயும் கூட்டமொன்று இருந்தது என்பதை அறியமுடிகிறது. எனவே, இன்மையுமாய் உள்ளவனும் அவனே என்ற கருத்துப்பட அடிகளார். பேசுகின்றார்.

‘கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி’ என்பது அடுத்துநிற்கும் தொடராகும். பொம்மலாட்டத்தில் பொம்மைகள் கை, கால், தலை முதலியவற்றை ஆட்டி, பேசுவதுபோலும் இயங்குகின்றன. குழந்தைகள் அதனைப் பார்க்கும்பொழுது திரைக்குப்பின் ஒருவன் இருந்து இவற்றை இயக்குகிறான் என்பது தெரியாமல், பொம்மைகளே இவற்றைச் செய்கின்றன என்று நினைக்கின்றன. அதேபோல வளர்ந்து விட்டவர்கள்கூட, நான் யார் தெரியுமா? இவை எல்லாம் என்னுடைய சொத்துக்கள் என்று கை, கால்களை ஆட்டி நெஞ்சை நிமிர்த்திப் பேசுகின்றனர். இந்த 'யானும்' 'எனதும்' யாரைச் சுட்டுகின்றன? அழிகின்ற உடம்பையா? அழியாது உள்ளே நிற்கும் ஆன்மாவையா? ஆன்மாவைத்தான் என்பது அனைவருக்கும் நன்கு விளங்கும். ஆன்மாவை இவ்வாறு உணரவும், பேசவும் செய்தது யார்? அவன்தான் பொம்மலாட்டக்காரனாகிய கோன்(தலைவன்) என்கிறார் அடிகளார்.

இந்தப் பொம்மைகள் உணர்ச்சியும், அறிவும் பெற்றால் தங்களை ஆட்டுவிப்பவன் பொம்மலாட்டக்காரன் என்பதை எளிதில் உணர்ந்துவிடும். உலகில் வாழ்கின்ற நாம், நம்பாலுள்ள அறிவையும் உணர்வையும் நன்கு வளர்த்துக்கொண்டால், நம்மையும், நம்மை ஆட்டுவிக்கும் தலைவனையும், மறைத்து நிற்கின்ற பொம்மலாட்டத் திரை போன்ற அஞ்ஞானத் திரையை நீக்கி, யான் என்றும் எனது என்றும் நம்மைப் பேசவைப்பவன் தலைவனாகிய இறைவனே என்பதை உணர முடியும்.


20.

வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான் மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை
எல்லாம் தொழவேண்டி
சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை
நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான்
யானும் உன்னைப் பரவுவனே
16

தாழ்த்துதல்-தன்முனைப்பின்றித் தாழச்செய்தல், மதுகரம்-வண்டு. பாழ்த்த பிறப்பு-பயனற்ற பிறப்பு.

பிறப்பு-இறப்பு, சுழற்சியில் சிக்கித் தவிக்கின்றவர்களை வாழ்த்துவதில் பொருளுண்டு. 'இந்தப் பிறப்பு இன்னும் சில காலம் நீண்டு செல்வதாக' என்பதே அவ்வாழ்த்துதலின் பொருளாகும். பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்தாலும் அதற்கொரு முடிவுண்டு. ஆதலின், இவ்வாழ்த்துக்கள் அந்த முடிவை இன்னும் சில காலம் தள்ளிப்போடுவதற்குப் பயன்படுமே தவிர வேறெவ்விதப் பயனையும் தருவதில்லை.

அப்படியிருக்கப் பிறப்பு, இறப்பு இல்லாதவனாகிய இறைவனை வாழ்த்துவது பொருளற்றதாகிவிடும் அன்றோ! ஆனால் தேவர்கள் ஏன் இறைவனை வாழ்த்துகிறார்கள்? சாவாமருந்து என்று நினைத்து அமுதை உண்டபின்னும் சாவு நெருங்கி வருகின்றதென்பதை அறிந்த தேவர்கள், நஞ்சை உண்டும் சாவாதிருக்கின்ற ஒருவனை வாழ்த்தக் காரணமென்ன? உண்மையில் அந்த வாழ்த்து அவனைக் குறித்து எழுந்ததன்று. அவனை வாழ்த்தி வாழ்த்தித் தாம் மேலும்மேலும் வாழவேண்டும்; ஏனையோர் அனைவரும் தம்மை வணங்கிப் பணிபுரியவேண்டும் என்ற ஆவலினாலுமே அவனை வாழ்த்துகின்றனர்.

தேவர்களாக ஆகியும்கூட அவர்கள் எவ்வித வளர்ச்சியும் அடையாமல் தம் வாழ்நாளை நீட்டிக்க வேண்டும்; தம்மை அனைவரும் தொழவேண்டும் என்ற அற்ப ஆசையினால் உந்தப்பெறுகிறார்கள் என்பது குறிப்பெச்சம்.

அதிகாரத்தின் எல்லையில் நின்றவர் ஆதலால், இனித் தம்மைப் பிறர் தொழவேண்டும் என்று அடிகளார் விரும்பவில்லை. சேவடிகள் தீண்டப்பெற்றுப் பிறவிப் பயனைப் பெற்றுவிட்டவர். ஆதலால், வாழ்நாளை நீட்டிக்க வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கில்லை.

அடியார் கூட்டத்தினிடையே இருக்கவும், திருவடிகளைத் தொட்டு வணங்கவும் திருப்பெருந்துறையில் வாய்ப்புக் கிடைத்ததல்லவா? அந்த வாய்ப்புக் கிடைத்தபொழுது திருவாதவூரர் என்ற மனிதர் இந்தப் பரு உடலுடன்தானே இருந்தார்? இந்தப் பரு உடலில் பொருந்திய கண்களால்தானே திருவடிகளைத் தரிசனம் செய்தார்? இறையனுபவத்தில் இந்த உடம்போடு மூழ்கியிருந்த அவர், கண்களைத் திறந்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளானார். காரணம், இவர் ஊனக் கண்களால் கண்ட அந்தக் குருவும் அங்கில்லை; அடியவர் கூட்டமும் அங்கில்லை; இவ்வுடம்பினுள் கிடைத்த இறையனுபவமும் இப்பொழுது இல்லை என்பதே ஆகும். இந்த மூன்றும் மறைந்ததற்குரிய காரணத்தை அடிகளார் நினைந்து பார்க்கிறார். தசைப் பொறியாகிய இந்தப் பரு உடல் அடியவர்களுக்கு இல்லை; குருநாதருக்கும் இல்லை. ஆதலால், அவர்கள் உடனே மறைந்துவிட்டனர். அவர் களோடு சேர்ந்து குருநாதரின் சேவடிகளை எப்போதுமே தரிசித்துக்கொண்டிருக்கும் வாய்ப்பை இழந்ததற்கு ஒரே காரணம், தாம் இந்த உடம்புடன் இருப்பதே என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அடிகளார். ஆதலான் பாழ்த் பிறப்பு அறுத்திட வேண்டும் என விழைகின்றார்.


21.

பரவுவார் இமையோர்கள்
பாடுவன நால்வேதம்
குரவு வார் குழல் மடவாள்
கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின்
அடியார்கள் மேன்மேல் உன்
அரவு வார் கழல் இணைகள்
காண்பாரோ அரியானே
17

குரவு-குராமலர். விரவுவார்-கலப்பார். அரவு வார் கழல் இணைகள்-பாம்பையும் வீரக்கழலையும் அணிந்த திருவடிகள்.

விண்ணுலகில் தேவர்களும் வேதங்களும், மண்ணுலகில் மெய்யடியார்களும் இறைவனுடைய புகழைப் பாடிப் பரவுகின்றனர். இறைவனோ இவர்களில் பலர் காட்சிக்கு அப்பாற்பட்டவனாக, உமை ஒரு கூறனாகத் திகழ்கின்றான். ஆனாலும், தேவர்களோ வேதமோ மெய்யடியார்களோ அத்திருவடிகளை முழுமை யாகக் கண்டதில்லை.

'கண்ணால் யானும் கண்டேன் காண்க' (திருவாச:3.58) என்று அடிகளாரே கூறியுள்ளமையின் இப்பாடலின் முடிவில் 'மெய்யடியார்கள் காண்பாரோ' என்று கூறி உள்ளது சிந்திக்கத் தக்கது. காணுதல் என்ற சொல் கட்புலனால் காண்பதையும், அறிவின் துணைகொண்டு ஆய்ந்து காண்பதையும் குறிக்கின்ற சொல்லாகும். கண்ணால் ஒரு பொருளைக் கண்டுவிட்டால் உடனே அதன் இயல்பு முழுவதையும் அறிந்துவிட முடியாது. இக்கருத்தை வலியுறுத்திப் 'பூதங்கள் தோறும்' என்று தொடங்கும் திருப்பாடலில் 'கேட்டு அறியோம் நினைக் கண்டு அறிவாரை' (திருவாச:372) என்று அடிகளார் பாடியுள்ளமை நோக்கத்தக்கது.

'கண்டறிவாரை' (கேட்டு அறியோம்) என்று ஒருசொல் நீர்மைத்தாய்ப் பொருள் கொண்டால் 'கண்ணால் யானும் கண்டேன் காண்க' என்பதனோடு மாறுபடும். இறை வடிவை ஊனக் கண்களாலும் கண்ட மகான்கள் பலர் உண்டு. ஆனால் அவர்கள் கண்டார்களேதவிர அவன் இயல்பை யாரும் முழுதாக அறியவில்லை. காரணம், இறைவனே 'தம் பெருமை தான் அறியாத் தன்மையன்' (திருவாச 274) ஆதலால், அவனுடைய இயல்பை அவனால் படைக்கப்பட்ட ஏனைய உயிர்கள், எத்துணை உயர்ந்த நிலையை அடைந்திருப்பினும், அறிதல் இயலாத காரியம். எனவேதான் கண்டு, அறிவாரைக் கேட்டு அறியோம் என்று பாடினார் அடிகளார்.

இப்பாடலிலும், மெய்யன்பின் அடியார்கள் காண்பரோ என்று கூறியது அறிவாலும் உணர்வாலும் அவன் இயல்பைக் காணமுடியாது என்றபடி,

'மெய்' அன்பர் என்று அடைகொடுத்துக் கூறிவிட்டு ‘இமையோர்கள்’ ‘நால்வேதம்’ என்ற இரண்டிற்கும் அடைகொடுக்காமல் கூறியமை கருத்துடையதாகும். இமையோர்களுக்கு மெய்யன்பு இல்லை என்பது பண்டுதொட்டே இந்நாட்டார் கண்ட உண்மையாகும். பாடுவன நால்வேதம் என்பதிலும் வேதத்தின் தனித்தன்மை பேசப்பெற்றுள்ளது. வேதத்தின் மந்திரங்கள், சொற்கள் என்பவை ஒலி அளவால் (Phonetic Value) பயன்தருபவையே தவிர அவற்றிற்கு வேறு தனிச்சிறப்பு இல்லை. இறைவனிடத்து அன்பு கொள்ள இந்தச் சொற்கள் உதவி செய்வதில்லை. எனவேதான் 'பாடுவன நால்வேதம்' என்றாரே தவிர அன்போடு பாடுவன என்று கூறவில்லை.


22.

அரியானே யாவர்க்கும்
அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை
ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரை ஆர்ந்த மலர் துவேன்
வியந்து அலறேன் நயந்து உருகேன்
தரியேன் நான் ஆம் ஆறு என்
சாவேன் நான் சாவேனே!
18

அம்பரவா-ஞானாகாசத்தில் விளங்குபவனே. நயந்து-விரும்பி. அறியானே-அறியப்படாதவன்.

இப்பாடலின் முதலடி சூக்குமத்தில் தொடங்கித் தூலத்திற்குச் செல்கின்றது. 'யாவர்க்கும் அரியானே' என்றதற்குப் புறப்பொருள்கள், கருவி, கரணங்கள் ஆகியவற்றின் துணையில்லாமல், அறிவு ஒன்றையே துணையாகக் கொண்டு உள்ளேயுள்ளே தேடிச் சென்ற போதும் கிட்டாதவனாய், அரியனாய் உள்ளான் என்க. இந்த நுண்மை நிலையை விட்டு, அகண்ட பேரண்டப் பெருவெளியைக் கண் முதலிய பொறிகளின் துணை கொண்டு காண்டல், கருதுதல் முதலிய துறைகளில் சென்று அவனை அறியவோ, தெரியவோ, காணவோ முற்பட்டாலும் அவன் அதிலும் சிக்குவதில்லை. அவன் சிக்குவதில்லை என்ற காரணத்தால் அவன் இல்லையோ என்று நினைந்துவிட வேண்டா. அவன் அம்பரமாய் உள்ளான். அதாவது எங்கும் நிறைந்த பெருவெளியாய் உள்ளான்.

அம்பரம் அல்லது பெருவெளி என்று கூறியவுடன் நம்முடைய பொறி, புலன்களுக்குப் புறத்தேயுள்ள பெரு வெளியையே நினைக்கின்றோம். ஆனால், அகமுகமாக நோக்கத் தொடங்கினால் உள்ளேயும் ஒரு பெருவெளி இருப்பதையும் புறத்தே உள்ள பெருவெளிக்குள்ள அனைத்தியல்புகளும் உள்ளேயுள்ள பெருவெளிக்கும் உண்டு என்பதையும் அறிதல் கூடும். இதனைக் கூறவந்த நம் முன்னோர் 'அண்டத்திலுள்ளது பிண்டத்திலும், பிண்டத்திலுள்ளது அண்டத்திலும் உள்ளது' என்று கூறிப்போயினர். உள்ளத்து உணர்வால் காணமுடியாத போது அகத்தும் புறத்தும் பெருவெளியாய், அம்பரமாய் நிற்கின்றவனை இந்த இரண்டாவது முயற்சியாலும் காணமுடியவில்லை என்கிறார்.

மூன்றாவதாக உள்ளது 'அம்பலத்து எம்பெரியானே' என்பதாகும். அம்பலத்தில் ஸ்தூல, சூக்கும வடிவோடு இறைவன் இருக்கின்றான். மந்திர சொரூபமாகச் சூக்கும வடிவுடன் தில்லையில் உள்ளான். அதே தில்லையில் ஸ்துல வடிவுடன் நட்டம் பயின்றாடும் நாதனாகவும் உள்ளான். அரியனாகவும் அம்பரனாகவும் உள்ள நிலையில் அவனைப் பற்றிக்கொண்டு உறவு கொண்டாட முடியாது. ஆனால், தில்லையில் ஸ்தூல வடிவுடன் நட்டம் பயில்கிறவனைப் பற்றிக்கொண்டு உறவு கொண்டாட முடியும். ஆதலால் ‘எம் பெரியானே’ என்றார்.

தில்லையில் உள்ள ஸ்தூல வடிவிலும் அடிகளார் மிகுதியும் ஈடுபாடு கொண்டது அந்தத் திருவடியிலேயே ஆகும். காரணம் திருவாதவூரர் என்ற மனிதரை ஒரே கணத்தில் மணிவாசகராக மாற்றியது அத்திருவடியே ஆதலால், அதன்மாட்டுத் தனி ஈடுபாடு கொண்டார். அதன் பயனாகவே 'சிறியேனை ஆட்கொண்ட பெய் கழல்’ என்ற தொடர் அடுத்து வருகின்றது.

தம்மை மாற்றிய இப்பெய்கழலுக்கு எவ்விதம் நன்றி பாராட்ட முடியும் என்று நினைத்த அடிகளார், வேறு ஒன்றும் செய்ய முடியாவிடினும் மணம் நிறைந்த மலர்களை இட்டாவது தம் நன்றிப் பெருக்கினைக் காட்டவில்லையே என்று வருந்துகிறார். அதுதானும் முடியாவிட்டாலும் அந்தத் திருவருளை நினைந்து 'வியந்து அலறேன்' என்கிறார். எதிர்பாராத ஒன்று ஒருவரை எதிர்ப்படும்போது அங்கு வியப்புத் தோன்றும். மனத்தில் தோன்றிய வியப்பு ஒ! ஆ! என்ற ஒலிகள் மூலம் வெளிப்படும். இந்த ஒலிகள் நீளும்பொழுது அலறலாகப் பரிணமிக்கும். கனவேயும் தேவர்கள் காண்பு அரிய கனை கழலோன். நனவே எனைப்பிடித்து ஆட்கொண்ட (திருவாச244) நினைவு தோன்றுந்தோறும் நன்றிப் பெருக்கால் அந்தக் கழலுக்கு மலர் துரவி, அலறவேண்டும் என்று தோன்றுகிறது. இவை இரண்டையும் செய்யஇயலாமையின் 'விரையார்ந்த மலர்துவேன் வியந்து அலறேன்' என்று கூறுகின்றார்.

மலர் தூவுதலும் வியந்து அலறுதலும் ஒரோவழி நடக்கக்கூடிய செயல்களே தவிர, இருபத்து நான்கு மணி நேரமும் நடைபெறக்கூடியவை அல்ல. ஆனால், சதா சர்வகாலமும் அந்த நன்றியை நினைந்து நினைந்து உருகலாம் அல்லவா? அதுவும் நடைபெறவில்லையே என்று வருந்தும் அடிகளார் ‘நயந்து உருகேன்’ என்றார். இம்மூன்றானும் முறையே மெய், மொழி, மனம் என்பவற்றால் செய்யப்பெறவேண்டியவற்றைக் கூறினாராயிற்று.

'பெரியானே. சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல்’ என்றதால் இறைவனுடைய எளிவந்த தன்மையைப் பெய்கழலின்மேல் ஏற்றியவாறு காண்க

23.

வேனில் வேள் மலர்க் கணைக்கும்
வெள் நகைச் செவ்வாய்க் கரிய
பாணல் ஆர் கண்ணியர்க்கும்
பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருகப்
புகுந்து ஆண்டான் இன்று போய்
வான் உளான் காணாய் நீ
மாளா வாழ்கின்றாயே
19

வேனில் வேள்-மன்தன். பானல்-குவளை.

இப்பாடலின் முதலிரண்டு அடிகள், மனித மனத்தின் இயல்பைக் கூறுகின்றன. பசி, தாகம் போன்ற இயற்கை உணர்ச்சிகளைப்போல் அல்லாமல் பாலுணர்ச்சி மிக ஆழமானதாகும். பசி போன்றவை உணவைப் பெற்றவுடன் அந்த நேரத்திற்கு அடங்கிவிடுதல் கண்கூடு. அவ்வாறின்றிப் பாலுணர்ச்சி எந்த நிலையிலும் அடங்காததாய் மேலும்மேலும் விரிவதாய் இருப்பதை மனவியலார் எடுத்துக் கூறுவர். வயது முதிர்ந்த நிலையிலும் இது மீதுார்ந்து நிற்குமென்பது விசுவாமித்திரன், யயாதி முதலியோர் கதைகளால் நன்கு அறியப்படும்.

இதற்குப் புறநடையாக, எண்பது வயதைக் கடந்த அப்பர் பெருமான் எதிரே, திருப்புகலூரில், அரம்பை ஊர்வசி முதலானவர்கள் வந்து நட்டம் ஆடினபோதும் பெருமானுடைய மனத்தில் எவ்விதச் சலனமும் ஏற்படவில்லை என்ற செய்தி பெரிய புராணத்தில் பேசப் பெற்றுள்ளது.

அனுபவிக்கப்படும் பொருளும் அனுபவிக்கும் ஆற்றலும் இல்லாத நிலையிலும் மனத்தில் இந்த எண்ணப் பேயாட்டம் நடைபெறுவதை மனவியல் அறிந்தவர்கள் கூறுவர். இத்தகைய சராசரி மனித மனநிலையை ஏறட்டுக் கொண்டு பாடிய அடிகளார். இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்திருந்தமையின் ‘பதைத்து உருகும் பாழ்நெஞ்சே' என்று கூறினார்.

‘பதைத்து உருகும்’ என்ற சொற்கள் சிந்திக்கத் தக்கன. பதைத்தலும் உருகுதலும் காம வயப்பட்ட மனத்திற்கும் பேரின்ப அனுபவத்திற்கும் பொதுவாக அமைந்துள்ளன. இக்கருத்துச் சரியானதே என்பதை விளக்கும் முறையில் இப்பாடலின் மூன்றாவது அடியில் 'ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான்' என்று வருவதைக் காண்க அவன் புகுந்து ஆண்டபொழுது ஊனெலாம் நின்று உருகிற்று. இங்கேயும் பரு வடிவினனாக வந்து புகுந்து ஆளவில்லை. அவன் வந்தான் என்பதைக்கூட அறிய முடியவில்லை. அப்படியானால் புகுந்ததையும் ஆண்ட தையும் அடிகளாரால் எவ்வாறு தெரிந்துகொள்ள முடிந்தது? 'ஊனெலாம் நின்று உருக' என்ற தொடர், அவன் ஆண்டபொழுது, அதன் பயனாக விளைந்த மெய்ப்பாட்டைக் கூறுகின்றது.

சராசரி மனிதர்களுக்குப் பாழ் நெஞ்சு பதைத்து உருகுவதற்குக் காரணமாய் இருப்பது மகளிர்மேல் கொண்ட காம இச்சையேயாகும். அந்த இச்சை உள்ளே புகுந்தவுடன் நெஞ்சு பதைத்து உருகிற்று. அடிகளாருக்குக் குருநாதர் அருள் செய்தவுடன் ஊனெல்லாம் நின்று உருகிற்று. ஒன்று சிற்றின்பத்தால் விளைந்தது, ஏனையது பேரின்பத்தால் விளைந்தது. இவை இரண்டிலும் உருகுதல் பொதுத்தன்மை என்றாலும், நுண்மையான ஒரு வேறுபாட்டையும் அடிகளார் இரண்டு சொற்களில் வைத்துக் காட்டுகின்றார். சிற்றின்பத்தில் நெஞ்சுமட்டும் உருகிற்று. அதுவும் நிலை இல்லாத காம இச்சையால் தோன்றியமையின் நுண்மையான நெஞ்சை மட்டும் உருக்கிற்று. பருப்பொருளான உடலை உருக்கும் ஆற்றல் அதன்பால் இல்லை என்பதை அறிவிக்கப் 'பதைத்து உருகும் பாழ்நெஞ்சே' என்றார். ஆனால், பேரின்ப அனுபவத்தில் ஊனெலாம் நின்று உருக என்றமையின் பருப்பொருளான உடம்பின் உருக்கத்தைக் கூறினார். எனவே, நெஞ்சின் உருக்கம் சொல்லாமலே பெறப்பட்டது. அன்றியும் “நின்று உருக’ என்று கூறியமையின் பேரின்பத்தால் வரும் உருக்கம் நிலைபேறானது என்பதும் பெறப்பட்டது. இதற்குமட்டும் நின்று என்று அடை கொடுத்தமையின் சிற்றின்ப உருக்கம் நிலைபேறுடையதன்று என்பதும் பெறப்பட்டது.

திருப்பெருந்துறையில் பருவடிவுடன் அமர்ந்திருந்த குருநாதர் இவரை ஆட்கொண்டதைச் சுற்றி நின்றோர் அனைவரும் கண்டனர். அவர்களைப் பொறுத்தவரை குருநாதர் என்ற பருவடிவம், திருவாதவூரர் என்ற பருவடிவம் என்ற இரண்டும் இருந்ததை மறுப்பதற்கில்லை. திருவடி தீட்சை செய்தமையின் 'ஆண்டான்' என்று அவர்கள் கருதியதிலும் புதுமையில்லை.

ஆனால், அவர்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சி அங்கு நிகழ்ந்தது என்பதை ஒரு சிறு சொல்லின் மூலம் அடிகளார் விளக்குகிறார். அந் நிகழ்ச்சி யாது? திருவடி தீட்சை செய்து ஆட்கொண்ட வெளிப்படையான நிகழ்ச்சி நடைபெறும்பொழுதே, குரு வடிவில் இருந்த இறைவன் பிறர் அறியாமல் இவருள் புகுந்துவிட்டான். தம்மை ஆட்கொண்ட செய்தியைப் பல இடங்களில் கூறும் அடிகளார். 'புகுந்து ஆண்டான்' என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார்.

எடுத்துக்காட்டாக,

பொருளா என்னைப் புகுந்து ஆண்ட பொன்னே (திருவாச:385)

என்றும்,


ஆடுவித்து என் அகம் புகுந்து ஆண்டது (திருவாச:573)


என்றும்,


ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
மால் அமுதப் பெருங்கடலே

(திருவாச 30)

என்றும் கூறியுள்ளமை நோக்கத்தக்கது.

'புகுந்து' என்ற சொல்லை 'ஆண்டான்' என்ற சொல்லோடு சேர்த்தே அடிகளார் பயன்படுத்தும் காரணமென்ன? புறத்தே இருந்து ஆட்கொண்டால் அதனை அனுபவிக்கின்ற மனித மனம் எவ்வளவுதான் அந்த அனுபவத்தில் ஈடுபட்டாலும் அது தன்னை மறந்துவிடுவதில்லை. அன்றியும், அனுபவம் என்பது அலைபோல் ஏறி இறங்கும் தன்மையுடையது ஆதலின், இறங்கிய நிலையில் மனத்தின் சேட்டைகள் ஒரோவழி வெளிப்படுதலும் இயல்பு. திருப்பெருந்துறை நாடகத்தின் பின்னர் அடிகளாரின் மனச்சேட்டை ஒரு விநாடிகூட வெளிப்படவில்லை. 'அது எதனால்' என்று நினைக்கின்றார். ஒரே ஒரு காரணத்தால்தான் அது முடியும், குரங்காட்டியைப்போலப் புறத்தே நின்று ஆட்கொண்டால் ஒருசில விநாடிகளேனும் மனக்குரங்கு தன் வேலையைச் செய்தே தீரும். அவ்வாறு நடைபெறமுடியவில்லை என்றால், ஆட்கொண்டவன் புறத்தே நின்று இவ்வனு பவத்தைத் தரவில்லை, தம்முள் புகுந்துவிட்டான். அதனாலேயே மனக்கோட்டம் தவிர்ந்தது; உள்ளம் உருகிற்று; ஊன் உருகிற்று. அதுவும் நிலைபேறுடையதாக உருகிற்று என்பதைக் கூறவே ஊனெலாம் நின்று, உருக 'புகுந்து' ஆண்டான் என்கிறார் அடிகளார்.

அவன் புகுந்து இறையனுபவத்தில் முழுவதுமாக அடிகளாரை மூழ்கடித்தான் என்பது உண்மை. அப்படியிருக்க 'இன்றுபோய் வானுளான் காணாய்’ என்று பேசுவதன் நோக்கமென்ன? அவன் புகுந்ததை, புகுந்த பின்னரே, நிறைந்த அனுபவத்தின் விளைவாக இவர் அறிந்தார். அனுபவத்தில் நிறைந்து மூழ்கியிருந்தபொழுது அங்குப் புகுந்தவனும் தனியே இல்லை; அடிகளாரும் தனியே இல்லை; அனுபவம் ஒன்றுமட்டுமே எஞ்சி நின்றது. இந்த அனுபவம் முழுவதுமாக நிறைந்து நிற்பதற்குக் காரணமே அவன் தம்முள் புகுந்ததுதான் என்று அடிகளார் கருதினார்.

இப்பொழுது அனுபவம் வடியத் தொடங்கிவிட்டது. அனுபவத்தில் மூழ்கியிருந்த அடிகளார் அனுபவ வெள்ளத்திலிருந்து வெளிப்பட்டு நிற்கின்றார். புதிய சிந்தனை பிறக்கின்றது. வெள்ளம் ஏன் வடிந்தது? தாம் ஏன் வெளிப்பட்டு நிற்கவேண்டும்? இவை இரண்டும் நிகழக் காரணம் என்ன என்ற எண்ணம் தோன்றியவுடன் அடிகளாருக்கு விடை கிடைக்கின்றது. புகுந்து ஆண்டவன் இப்பொழுது தம்மைவிட்டு வெளிப்பட்டுத் தம்மைத் தனியே விட்டுவிட்டு வானிற் சென்று தங்கிவிட்டான். அதனால்தான் தம் அனுபவம் வடிந்து தாம் வெளிப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டது என்று உணர்ந்து பாடுகின்றார்.

'புகுந்து ஆண்டான்’ என்ற தொடர் கொஞ்சம் சிக்கலானது. புகுந்து என்ற வினையெச்சம் ஆண்டான் என்ற வினை கொண்டு முடிந்ததேனும் ஆளுதல் ஆகிய செயலுக்குப் புகுதலாகிய செயல் துணையாக நிற்பதையே இந்த வினையெச்சம் உணர்த்துகிறது. புகுந்து என்றுமட்டும் கூறினால் அதுவரையில் அந்த இடத்தில் இல்லாத ஒருவர் புறத்தே நின்று இப்பொழுது உள்ளே புகுந்தார் என்ற பொருளையே அறிவிக்கும். இறைவன் ஒருவனைத் தவிர வேறு நிலையியற்பொருள், இயங்கியற்பொருள் அனைத்திற்கும் இது பொதுவாகும். காரணம், பொருள் புறத்தே நிற்கும்போது அகத்தே இல்லை; அந்தப் பொருள் அகத்தே புகுந்த பிறகு புறத்தே இருக்க வாய்ப்பில்லை. எனவே, புகுந்தான் என்று கூறினால் இதுவரையில் அங்கில்லாமல் இருந்த ஒருவன் இப்பொழுது புதிதாகப் புகுந்தான் என்ற பொருளையே தரும்.

ஆனால், புகுந்து ஆண்டான் என்று மணிவாசகர் கூறும்போது இறைவனை அல்லவா குறிப்பிடுகின்றார்? எங்கும் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கின்ற ஒரு பொருளல்லவா இறைவன்! அப்படியானால் மணிவாசகரின் உள்ளத்தில் புகுந்து ஆண்டான் என்றால் அதற்கு முன்னர் அந்த உள்ளத்தில் அவன் இல்லையா? உள்ளத்திலும் அவன் முன்னரே இருக்கிறான் என்றால், புகுந்தான் என்ற சொல் பொருளின்றி வற்றும். பாடுபவர் மணிவாசகர் ஆயிற்றே! அப்படிப் பொருளின்றி வற்றும் ஒரு சொல்லைப் பல இடங்களில் அவர் பயன்படுத்துவாரா? எனவே, இதற்கொரு உட்பொருள் இருத்தல் வேண்டும். இறைவன் உள்ளே இருப்பினும் அவன் இருக்கின்றான் என்ற நினைவு அவர்பால் முன்னரில்லை. திருவடி தீட்சை பெற்ற பிறகு கிடைத்த புதிய அனுபவத்திற்குக் காரணம் புறத்தே குருவடிவில் இருக்கின்ற இறைவன் இப்பொழுது தம்முள் புகுந்ததாக அவர் உணர்கின்றதே ஆகும். புகுந்து என்ற சொல்லைக் கேட்டவுடன் கை, கால்களோடு கூடிய நாம், காலின் உதவி கொண்டு, ஒரிடத்தில் புகுவதை மனத்தில் வைத்துக்கொண்டு, அடிகளார் கூறும் புகுந்து என்ற சொல்லுக்குப் பொருள் காண்பது தவறாக முடிந்துவிடும்.

உள்ளே மறைந்து நிற்கும் பொருள் இதுவரை அவருக்குத் தெரியாமல் இருந்துவந்தது உண்மை. இப் பொழுது அப்பொருள் புறத்தேயிருந்து உள்ளே புகுந்ததாக அவர் நினைக்கின்றார். உள்ளத்தைக் கடந்தும் அதன் உள்ளேயும் இருப்பதால் 'கடவுள்' என்ற பெயரைப் பெற்ற அப்பொருள் மறுபடியும் உள்ளே புகுவதாக நினைப்பதில் தவறொன்றும் இல்லை.

கால்களின் உதவிகொண்டு புகுதல் அன்று இது. இதனையே கம்பநாடன் 'வாராதே வரவல்லாய்': (கம்பர்: விராதன்-54) என்று கூறுகின்றார். வருதலாகிய செயல் நடைபெறாமலும், வந்துவிடும் ஆற்றல் அப்பொருளுக்கு உண்டு. எனவே, அடிகளார் கூறும் புகுந்து’ என்ற சொல் இப்புதிய பொருளில் பொருள் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.

என்றும் உள்ளேயுள்ள பொருளைப் புதிதாகப் புகுந்து ஆண்டான் என்று பேசிய அடிகளார், இப்பொழுது அப்பொருள் தம் உள்ளத்தை விட்டு நீங்கி வானத்திற்குச் சென்றுவிட்டது என்று நினைத்துப் பேசுகின்றார். இவை இரண்டு கூற்றுக்களும் உள்ளத்து உணர்ச்சியின் ஏற்றம், இறக்கம் என்ற அடிப்படையில் அடிகளாரின் உள்ளத்துள் தோன்றிய எண்ணங்களே தவிர, இறைவன் உண்மையில் புதிதாக அவர் உள்ளத்தில் புகவும் இல்லை, அவ் உள்ளத்தை விட்டு நீங்கி வானத்திற் சென்று தங்கிவிடவும் இல்லை. இறைவனின் இலக்கணத்தை நன்கு அறிந்த அடிகளார். இவ்வாறு கூறுவது அவருடைய மனத்துள் தோன்றிய மகிழ்ச்சியாலும் துயரத்தாலுமே தவிர உண்மையில் நடைபெற்ற ஒன்றன்று.

24.
              வாழ்கின்றாய் வாழாத
                  நெஞ்சமே வல் வினைப் பட்டு
              ஆழ்கின்றாய் ஆழாமல்
                  காப்பானை ஏத்தாதே
              சூழ்கின்றாய் கேடு உனக்குச்
                  சொல்கின்றேன் பல்காலும்
              வீழ்கின்றாய் நீ அவலக்
                  கடல் ஆய வெள்ளத்தே 20

வாழாத நெஞ்சம்-வாழவேண்டிய முறைப்படி வாழாத நெஞ்சம். அவலக்கடல்-துன்பக்கடல்.

இப்பாடல், மேலோட்டமாகப் பார்ப்பதற்கு அடிகளார் தம் மனத்தை முன்னிலைப்படுத்திப் பேசி உள்ளதுபோல் தோன்றும். ஆழ்ந்து நோக்கினால், மனித சமுதாயம் முழுவதையும் முன்னிலைப்படுத்தி, மிகத் தேவையானதும் இன்றியமையாததுமான ஒரு கருத்தைச் சொல்ல விழைந்த அடிகளார், அதற்குப் பதிலாகத் தம் மனத்தை முன்னிலைப்படுத்திச் சொல்கிறார் என்பது தெளிவாகும்.

'மனமே நீ அவனிடம் ஆட்படுவாயேயானால், நீ வீழ்ச்சியடையாமல் காத்துக் கைதுக்கிவிட ஒருவன் இருக்கின்றான். அவனை மறந்ததால் இப்பிறப்பில் இவ் உலகிலும், மறுபிறப்பில் ஏனைய உலகிலும் அவலக்கடலில் வீழ்கின்றாய்’ என்பதே இப்பாடலின் பொருளாகும்

சுட்டறுத்தல்

பின்வரும் பத்துப் பாடல்களுக்கும் சுட்டறுத்தல் என்று முன்னோர் தலைப்பிட்டுள்ளனர். பின்னர் வந்த

உரையாசிரியர்கள் இத்தொடருக்குப் பல்வேறு வகையாகப் பொருளுரைத்துள்ளனர். இவ்வாசிரியனுக்குத் தோன்றிய சிந்தனை வருமாறு:

ஒரு பொருளைச் சுட்டுதல் என்பது ஒருவருடைய அறிவின் துணை கொண்டு செய்யப்பெறுவதாகும். அறிவின் துணையால் செய்யப்பெறும் எந்தச் செயலுக்கும் அடிப்படையில் ‘நான்’ என்பது நின்றே தீரும் அறிவின் அடிப்படையில் நிற்பதே ‘நான்’ தான். பிரபஞ்சத்தையோ அதிலுள்ள பொருள்களையோ கடந்து நிற்கின்ற இறைவனைச் சுட்டிக் கூறத்தொடங்கினால் சில அடிப்படைகள் வெளிப்பட்டே தீரும். சுட்டுபவனாகிய நான், சுட்டப்படுவதாகிய பொருள், சுட்டுகின்றதாகிய செயல் என்ற மூன்றும் அங்கு இடம்பெறும். சுட்டு அறுபட வேண்டுமேயானால் அதற்கு மூலமாகிய ‘நான்’ அறுபட வேண்டும். ‘நான்’ அற்றுவிட்டால் அறிவால் செயற்படும் சுட்டும் அறுபட்டுப் போய்விடும். ‘நான்’ இருக்கின்றவரை அறிவு உண்டு; அறிவிருக்கின்றவரை ‘நான்’ உண்டு. இங்குச் சுட்டறுத்தல் என்று பெரியோர் கூறியது சுட்டுக்கு மூலமாகிய ‘நானை’ யும் அதன் விளைவாகிய அறிவையும் அறுப்பதாகும். இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. உணர்வு உலகத்தில் ‘நானு’ம் இல்லை; அதன் விளைவாகிய அறிவுமில்லை. இவை இரண்டும் இன்மையால் சுட்டுதலாகிய செயலும் இல்லை. சுட்டறுத்தல் என்பதற்கு உணர்வு உலகில் மூழ்கி விடுதல்’ என்று பொருள் கூறலாமோ என்று தோன்றுகிறது.


25.

வெள்ளம் தாழ் விரி சடையாய் விடையாய் விண்ணோர்
         பெருமானே எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
    பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேலாகப்
         பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு
    உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
         உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
    வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்
         கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே
21

வெள்ளம்-கங்கைநீர். வேட்ட-விரும்பிய. பள்ளந்தாழ் உறுபுனல்-பள்ளத்தைநோக்கி ஒடுகின்ற நீர். உள்ளந்தாள்- உள்ளங்கால்

இப்பாடலின் முன் இரண்டு அடிகள் அடிகளாரின் குறிக்கோளையும், பின் இரண்டு அடிகள் அவரது விருப்பத்தினையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

முதலிரண்டு அடிகளில் கூறப்பெற்றுள்ளவர்களைப் பற்றிச் சிந்திப்பது நலம். எல்லையற்ற இறையனுபவத்தில் மூழ்கித் திளைத்து, ஊனும் உயிரும் உள்ளமும் உருகும் நிலையை அடிகளார் பெற்றாரேனும் அதன் அடிப்படை வேறுவகையானது. திருப்பெருந்துறையில் குருவைக் காண்கிறார்; அவரிடம் செல்கிறார்; வீழ்ந்து வணங்குகிறார்; திருவடி தீட்சை பெறுகிறார். அமுத தாரைகள் அவர் எற்புத் துளைதொறும் ஏற்றப்பெற்றன. உருகுவதோர் உள்ளங்கொண்டு உருச்செய்தாங்கெனப் புதியதோர் பிறவி எடுக்கின்றார். இத்தனை நிகழ்ச்சிகளுக்குப் பிறகுதான் இந்த நிலை அடிகளாருக்கே வருகின்றதே தவிர அதற்கு முன்னர் இந்நிலை அவருக்குக் கிட்டவில்லை.

‘வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே’ என்று கேட்ட அளவில் 'வேட்ட நெஞ்சோடு பள்ளந்தாழ் உறுபுனலில் தலைகீழாக' வீழும் இயல்பு அவருக்கு இதற்கு முன்னர் இல்லை. திருப்பெருந்துறைக்குப் பின்னரே அது நிகழ்ந்தது.

அப்படியானால் கேட்டவுடன் 'உருகும் அவர் நிற்க என்று பாடுவதன் நோக்கம் யாது? பொதுவாகவோ சிறப்பாகவோ 'அவர் நிற்க' என்ற சொற்கள் யாரையும் குறிப்பிடவில்லை.

அப்படியானால் இந்த இரண்டடிகள், அவருடைய குறிக்கோள் என்று கூறியமைக்குக் காரணம் என்ன என்று சிந்திப்பதில் தவறில்லை. கண்டு, சென்று, வணங்கி அருள்பெற்ற நிலையில் உள்ள உருக்கமும் கண்ணீர்ப் பெருக்கமும் நிகழ்ந்ததென்னவோ உண்மை. இந்த அனுபவத்தைப் பெற்ற பிறகு, இந்தக் காட்சி, செயற்பாடு என்ற எதுவுமில்லாமல் அவன் பெயரைக் காதுகளால் கேட்ட அளவில், பதைத்து உருகுகின்ற நிலை வாராதா என்று அடிகளார் நினைத்திருத்தல் வேண்டும். காதால் கேட்ட அளவில், தமக்கு இந்த உருகும் அனுபவம் இல்லை யென்று ஏன் நினைக்கின்றார் அடிகளார்? 'உருகுவது (ஆகிய) உள்ளங்கொண்டோர் உருச்செய்தாங்கு எனக்கு அள்ளூறு ஆக்கை அமைத்தனன்' (திருவாச: 3-175) என்று பாடிய அடிகளார். இப்பொழுது அவர் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உருகும் அனுபவம் தமக்கு இல்லையென்று கூறக் காரணம் என்ன? கேட்ட மாத்திரத்தில் உருகும் அனுபவம் கிடைத்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று அடிகளாரே சிந்திக்கின்றார். அந்த அனுபவம் கிடைத்திருந்தால் உள்ளந்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய் உருகியிருக்கும்; உடம்பெல்லாம் கண்ணாய் வெள்ளம் பாய்ந்திருக்கும். அப்படி நடைபெறவில்லையே! ஆதலால், தம் நெஞ்சைக் கல் என்றும் தம் கண்களைக் காய்ந்த மரம் என்றும் கூறிக் கொள்கிறார். முதலிரண்டு அடிகள் இத்தகைய நிலை தமக்கு வரவேண்டும்; அதுவே தம் குறிக்கோள் என்ற கருத்தில் சொல்லப்பெற்றவை ஆகும்.

26.

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
      போது, நான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை
      ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ
      அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆன ஆறு
      முடிவு அறியேன் முதல் அந்தம்ஆயினானே 22

போது-வா. வினைக்கேடன்-வினையை நீக்குபவன். ஆவிசோரேன்-உயிர்த்தன்மையை வற்றச்செய்கிலேன். முனைவன்-வினையின்நீங்கி விளங்கிய அறிவன்.

சராசரி மனிதர்கள் வினையில் கட்டுண்டு கிடப்பதைப்போல அமைச்சர் பதவியில் இருந்தபோது தாமும் வினையிலே கட்டுண்டு கிடந்ததாகக் கூறுகிறார் அடிகளார்.

எதிர்பாராத திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் மிகச் சிறப்புடைய இரண்டு செயல்கள் நடைபெற்றன. குருவாக இருந்தவர், வாய் திறக்கவில்லை என்றாலும் அவருடைய திருவடி சம்பந்தம் பெற்றவுடன் இரண்டு உண்மைகளை அடிகளார் உணர்கின்றார். ஒன்று - தாம் இதுவரை தாங்கியிருந்த வினைகளை, குருவடிவிலுள்ள அந்தப் பெருமான் ஒரே விநாடியில் போக்கக்கூடியவர் என்பதை அடிகளார் உணர்ந்தது. இரண்டு - உணரச் செய்த செயலின் மூலமே அந்தக் குரு தாம் யாரென்பதை அடிகளாருக்கு உணர்த்தியது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் குருவோ, அடிகளாரோ வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.

இக்கருத்தையே, வினையிலே கிடந்த எனக்கு நீ வினைக்கேடன் என்பதையும், நீ இன்னார் என்பதையும் என்னுள் புகுந்து நின்று அறிவித்தாய் என்று இப்பாடலில் அடிகளார் கூறுகின்றார்.

புகுந்து நின்று அறிவித்தார் என்றதால் இருவரிடையே உரையாடல் இன்மை அறிக.

27.

ஆய நான்மறையவனும் நீயே ஆதல்
       அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
       நாதனே நான் உனக்கு ஒர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய்
      அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர்
பேயனேன் இதுதான் நின் பெருமை அன்றே
      எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே 23

தம்மை ஆண்டுகொண்ட குருநாதர் யார் என்பதை அறிந்துகொண்ட பிறகு அடிகளார் மனத்தில் தோன்றிய வியப்பு, அச்சம் என்பவற்றின் அடிப்படையில் பிறந்த கழிவிரக்கம் காரணமாக வெளிப்பட்டதாகும் இப்பாடல்.

‘நால்வேதத் தலைவனாகிய அவன், யாவரினும் கடையனாகிய என்னை, என் குறைகளை அறிந்தும் ஆண்டுகொண்டான் என்றால் ஏன் என்று புரியவில்லை. அடியார்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதா? அன்பன் என்று யான் சொல்லிக்கொண்டதால் என்னை ஏற்றுக் கொண்டானா? என்ற முறையில் மனத்தில் பல மாறுபட்ட எண்ணங்கள் தோன்ற இறுதியாக ஒரு முடிவுக்கு வருகிறார். அவன் தம்மை ஆட்கொள்வதற்கு மேலே கூறிய காரணங்கள் எதுவும் பொருந்தவில்லை. எல்லையற்ற பெருமை உடையவனாகிய அவன், தம்பால் கொண்ட கருணையினாலேயே ஆண்டுகொண்டான் என்ற முடிவிற்கு வருகின்றார்.

28.

பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை
     பெருமானே என்று என்றே பேசிப் பேசிப்
பூசின் தாம் திருநீறே நிறையப் பூசிப்
       போற்றி எம்ருெமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை

     ஆண்டானே அவா வெள்ளக் கள்வனேனை
மாசு அற்ற மணிக் குன்றே எந்தாய் அந்தோ
      என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே 24

பேசில் தாம்-தாம் பேசில் எனமாற்றுக. பின்றா-பின்னடையாத.

‘திருநீற்றை நிறையப் பூசி இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லிப் பிறவிக்கடலில் நீந்தும் அடியார்களை ஆட்கொண்டு அவர்கள் பிறப்பைப் போக்கும் பெருமானே! ஆசை என்னும் பெருவெள்ளத்தில் அமிழ்ந்து நிற்கும் என்னையும் ஆட்கொண்ட வண்ணம் எத்தகையது' என்று அவன் கருணையை வியந்தவாறு.

29.

வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று
     அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
      எய்தும் ஆறு அறியாத எந்தாய் உன் தன்
வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி
     மலர்க் கழல்கள் அவை காட்டி வழி அற்றேனைத்
திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்
     எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக்கேனே 25

சேயதன்று-சிவந்ததன்று. இறந்தாய்-கடந்தாய். திண்ணம் தான் பிறவாமல்-உறுதியாக- அடியேன் பிறவி எடுக்காமல்.

மானிட குரு வடிவில் இருந்த ஒருவரைச் ‘சிவன் என யானும் தேறினன்’ என்று அடிகளார் குறித்ததை முன்னர்க் கண்டோம். இந்த முடிவிற்கு அவர் வரக் காரணமாய் இருந்தது குருவினிடம் இருந்து புறப்பட்ட தெய்விக அலைகள் என்றும் முன்னர்க் கூறியுள்ளோம்.

இப்பொழுது அடிகளார் அந்த முடிவிற்கு வர மற்றொன்றும் துணைபுரிந்தது என்றும் அறிய முடிகிறது.

ஒரு மனிதரைத் தூரத்தில் காணுவோமேயானால் அவருடைய பருவடிவம் மட்டுமே முதலில் தோன்றும்; இன்னும் சற்று நெருங்கிச் சென்றால் அவருடைய உறுப்புக்கள் தோன்றும்; மேலும் சிறிது நெருங்கிச் சென்றால் அவருடைய நிறம் தோன்றும்; இது மனிதக் காட்சியின் இயல்பாகும்.

இதன் மறுதலையாக இறைக்காட்சியில் முதலில் தெரிவது நிறமே ஆகும். அதனை ஒளி என்று கூறுவர். அதன் பிறகே வடிவு தோன்றும். குருவை மனிதரென்று கருதியிருந்தால் வடிவுதான் முதலில் தெரிந்திருக்குமே தவிர வண்ணம் தெரிய நியாயமில்லை. ஒளி வடிவை முதலில் கண்டாராதலின் வண்ணந்தான் அது காட்டி, வடிவு காட்டி, மலர்க்கழல்கள் அவை காட்டி’ என்று வரிசைப்படுத்திக் கூறுகிறார்.

மனிதக் காட்சிக்கும் இறைக் காட்சிக்கும் உள்ள வேறுபாட்டைப் பாடலின் மேலே கூறிய பகுதி நன்கு விளக்குகின்றது. இக்கருத்தை முதலில் கூறியவர் ‘பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியார் அவர்களாவார்.

30. சிந்தனை நின் தனக்கு ஆக்கி நாயினேன்தன்

கண் இணை நின் திருப்பாஆதப் போதுக்கு ஆக்கி

வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்

மணி வார்த்தைக்கு ஆக்கி ஐம் புலன்கள் ஆர

வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை

மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்

தந்தனை செம்தாமரைக் காடு அனைய மேனித்

தனிச்சுடரே இரண்டும் இல் இத் தனியனேற்கே 26

வந்தனை-வழிபாடு வார்த்தை-அழகியவார்த்தை. வந்தனை-வந்தனையாய், முற்றெச்சம். விச்சை-வித்தை. மாலமுதம்- தன்னையன்றி வேறொன்றையும் விரும்பச் செய்யாமை யாகிய மயக்கத்தை அளிக்கும் அமுதம். இரண்டு மிலித் தனியேனேற்கு-இரண்டுங்கெட்டானாகிய எனக்கு (துன்ப இன்பங்களை அறியும் ஆற்றலில்லாத எனக்கு).

திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் அடிகளார் பெற்ற வளர்ச்சியும் மாற்றங்களும் இப்பாடலில் பேசப் பெறுகின்றன. சிந்தனை” என்று தொடங்கி ஆர வந்து’ என்பதுவரை ஒரு நிலை ‘உள்ளே புகுந்த விச்சை மால் அமுதப் பெருங்கடலே’ என்பதுவரை இரண்டாவது நிலை. ‘மலையே உன்னைத் தந்தனை” என்பது மூன்றாவது நிலை.

“தனியனாகி நின்ற எனக்கு, என் வசத்தில் நில்லாமல் தொழிற்படும் ஐம்பொறிகளையும் அவற்றின் செயலுக்குக் காரணமான உள்ளத்தையும் உன் பணியில் அவை தொடர்ந்து ஈடுபடக் குருவடிவாக வந்தனை” என்பது முதல் நிலையின் விளக்கம்.

குருவின் காட்சி, தம் பொறி, புலன்களை அடக்கி ஆண்டதைக் கண்டு வியப்புற்ற அடிகளாருக்கு அடுத்து மிகப் பெரிய அனுபவம் வாய்க்கின்றது. இந்தக் குருவின் திருவருள் உள்ளே புகுந்தது. அவ்வாறு சொல்லிவிட்டால் அந்தத் திருவருள் ஏதோ ஒரு சிறிய பொருளென்றும், அது அடிகளாரின் உள்ளத்தில் புகுந்து ஒரு மூலையில் தங்கிவிட்டது என்றும் பொருள் கொண்டுவிடக் கூடாது என்று கருதிய அடிகளார் உள்ளே புகுந்த திருவருள் கடல்போன்று பெரியது என்றும், அது அமுதக் கடல் என்றும் பல்வேறு விச்சைகளை(வித்தைகளை) செய்யக்கூடிய ஆற்றல் பெற்றது என்றும் கூறினாராயிற்று. இது இரண்டாம் நிலையின் விளக்கம்.

கடல் என்று கூறினால் அதற்குள்ள சில இயல்புகளும் மனத்தில் தோன்றத்தான் செய்யும். ஓயாது ஒழியாது சலிப்பதும், ஏறி இறங்குவதும் கடலின் இயற்கை ஆதலால் புகுந்த இத் திருவருளும் இயல்புகளைப் பெற்றிருக்குமோ என்ற அச்சத்தைப் போக்க, கடலின் மாறான இயல்புகளையுடைய மலையை அடுத்துக் கூறினார். சலித்தலோ, ஏறி இறங்கும் இயல்போ இல்லாதது மலை. புகுந்த திருவருள் விருந்தினர்போல வந்து, தங்கி, சென்றுவிடும் இயல்பை மறுப்பான் வேண்டி ‘உன்னைத் தந்தனை” என்றார்.

பின்னரும் தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை (திருவாச. 397) என்று பாடுவதால் தன்னை முழுவதுமாகத் தந்தான் என்ற கருத்தைப் பெற வைக்கிறார்.

செந்தாமரைக் காடு’ என்று கூறியதால் வடிவு, உருவு ஆகியவற்றைக் கடந்து எங்கும் வியாபித்திருக்கும் இறை இயல்பைக் கூறினாராயிற்று வேனி என்ற சொல் இங்கே காணப்பெற்றாலும் சர்வ வியாபியாய் நிறைந்துள்ள இறைவனின் வடிவு என்ற பொருளையே தரும்.

31. தனியனேன் பெரும் பிறவிப் பெளவத்து எவ்வம்

தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்

கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால்

கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு

இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி

அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை

முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல்

கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே 27

கனி-கொவ்வைக் கனி. துவர்-சிவப்பு. கால்- காற்று; வான்சுறவு-சுறா மீன். புணை- தெப்பம். மல்லல்-வளப்பம்.

பெளவம்-கடல், எவ்வத் தடந்திரை - பிறவி என்னும் துன்பம் தருகின்ற தீராநோயான அலைகள், இப்பாடல் ஐந்தெழுத்தின் பெருமை கூறுகிறது.

32.கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான்

கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான்

நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே

நாயினுக்குத் தவிசு இட்டு நாயினேற்கே

காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும்

கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை

மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான்

எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே28


கேட்டு-வண்ணங்களைப் பிறர்சொல்லக் கேட்டு. அறியாதான்-முழுதும் உணரப்படாதவன். கிளை-கற்றம். கேளாதே கேட்டான்- பொறிகளாலுணராது என்றும் எல்லாம் உணர்பவன். தவிசு- ஆசனம்.

இத்திருப்பாடலிலும் திருப்பெருந்துறை நிகழ்ச்சியையே அடிகளார் நினைவுகூறுகின்றார். ‘நாட்டார்கள் விழித் திருப்ப’ என்றதால் தம்முடன் வந்தவர்களையும் திருப் பெருந்துறையில் கூடி நின்றவர்களையும் நினைக்கின்றார். அப்பெருங்கூட்டத்துள் தம்மைவிடப் பல்லாற்றானும் தகுதி உடையவர்கள் பலர் இருந்திருக்கலாமே? அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டுத் தம்மைமட்டும், அவர்கள் எதிரே ஆட்கொண்டார் என்று நினைந்தவுடன் குருவின் செயல், நாய்க்குத் தவிசிட்டது என்ற பழமொழியை நினைவூட்டியது.

நாய் போன்ற தம்மை ஆட்கொண்டதோடு மட்டும் இன்றிப் புறக் கண்களாலும், அகக் கண்களாலும் காண முடியாதவற்றை யெல்லாம் (அதாவது ஜோதி தரிசனத்தை) ஒரே விநாடியில் காணுமாறு செய்தான். கேளாதன எல்லாம் கேட்பித்து’ என்றதால் குருவானவர் வாய் திறந்து பேசாமல் மெளன. சம்பாஷணையின் மூலமே இதுவரை தாம் கேட்டிராத நாத தரிசனம் கிடைக்குமாறு செய்தார் என்று பாடுகிறார்.

33, விச்சை தான் இது ஒப்பது உண்டோ கேட்கின்
மிகு காதல் அடியார் தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி
அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி
ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற
செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே 29

அச்சன்-தந்தை. செச்சை-வெட்சி. மலர்புரை-மலரை ஒத்த.

அமைச்சராக இருந்த அடிகளார் சாதாரண செப்பிடு வித்தைக்காரர்களையும், உயர்ந்த நிலையில் அட்டமா சித்திகள் கைவரப்பெற்ற பெரியோர்களையும் கண்டிருத்தல் கூடும். ஆனால், இவர்களுள் எவரும் செய்ய முடியாத ஒரு வித்தையைத் திருப்பெருந்துறைக் குரு ஒரு விநாடியில் செய்துவிட்டார் ஆதலால் ‘விச்சைதான் (வித்தை) இது ஒப்பது உண்டோ என்று பேசுகிறார். அப்படிச் செய்யப் பெற்ற வித்தை யாது?

ஒரு கனியை உண்ணவேண்டுமானால் கையில் கிடைத்த காய், கனியாக மாறும்வரை காத்திருந்து உண்ண வேண்டும். அதுபோலத் திருவாதவூரார் என்ற சராசரி மனிதரைப் பல்வேறு பிறப்புக்கள் எடுக்குமாறு செய்து அடியாராக மாற்றியிருத்தல் வேண்டும். காய் கனியாவதற்குக் காத்திருத்தல்போல், அது இயல்பான நிலை. ஆனால், திருப்பெருந்துறைக் குரு, மாபெரும் வித்தைக்காரர் ஆதலால் காய் கனியும்வரை காத்திராமல், ஒரே விநாடியில் காயைக் கனியாக்கிவிட்டார். அதனையே ‘மிகுகாதல் அடியார்தம் அடியனாக்கி’ என்கிறார் அடிகளார். .

அடியாராக ஆக்கியதோடு குரு நின்றுவிடவில்லை. எந்த நிலையிலும் உயிரைவிட்டு நீங்காத, 'உயிர் அச்சத்தை' ஒரு விநாடியில் போக்கினார்; போக்கி, ஆட்கொண்டார். இந்த அளவோடு நில்லாமல் குருநாதர் மற்றொன்றும் செய்தார். அன்பு கூர, அகம் நெக, அமுதம் ஊற உள்ளே புகுந்து ஆட்கொண்டார். அதாவது அன்புகர்தல், அகம் நெகுதல், அமுதம் ஊறுதல் ஆகிய வினைகள் அனைத்தும் குருநாதர் உள்ளே புகுந்த அந்த விநாடியே ஒருசேர நிகழ்வதாயின.

34.
தேவர் கோ அறியாத தேவ தேவன்
செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான்
யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவன் அடியார் அடியாரோடு
மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே 30

தேவர்கோ-இந்திரன். பொழில்-உலகம். மூவர்-பிரம விஷ்ணு ருத்திரர். பயந்து-பெற்று. மூவர்கோனாய் நிற்றல்-மூவர்க்குந் தலைவனாக நிற்றல். யாவர்கோன்-யாவர்க்கும் கோன் என முற்றும்மையும் குவ்வுருபும் விரிக்க.

மூவர்க்கும் முதல்வனாக நின்ற இறைவன் தம்மைக் குருவாக வந்து ஆட்கொண்ட பின்னர் அடிகளார் பெற்ற பல்வேறு பேறுகளுள் தலையாய பேறு ஒன்று இங்கே பேசப்பெறுகிறது.

‘யாமார்க்கும் குடியல்லோம்' என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசுகின்ற பெருமித நிலை இறையருள் பெற்ற அடியார்களுக்குமட்டுமே உரியதாகும். அந்த நிலை அடிகளாருக்கு வந்துவிட்டது என்பதை இப்பாடல் அறிவிக்கின்றது.

சூலை நோயால் அவதியுற்று 'ஆற்றேன் அடியேன்' என்று திருவதிகையில் பாடிய நாவரசர் பெருமான் இறையருள் கிட்டிய பின்னர் அதே திருவதிகையில் பல்லவனின் பணியாளர்களைப் பார்த்து, நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் என்று அடிகளாருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்ப் பாடியது நினைவு கூரத்தக்கது.

ஆத்தும சுத்தி

இனி வரும் பத்துப் பாடல்களுக்கும் ஆத்தும சுத்தி என்று முன்னோர் தலைப்பிட்டுள்ளனர். இந்தப் பத்துப் பாடல்களையும் படிக்கும்போது இரண்டு கருத்துக்கள் இங்கு முக்கியமாகப் பேசப்பெறுதலைக் காணலாம்.

‘ஆடுகின்றிலை' முதல் அடுத்துவரும் ஐந்து பாடல்களும் தம்முடைய மனத்தை நோக்கி, 'நீ இன்னின்னது செய்திருக்க வேண்டும்; அவற்றைச் செய்யாமல் இருக்கின்றாய்' என்று கண்டிப்பதுபோல அமைந்துள்ளன.

எஞ்சியுள்ள பாடல்களில், வழியோடு சென்ற தம்மைப் பிடித்து இழுத்து இன்னருள் புரிந்தவரைப் பற்றிக்கொண்டு அவர் பின் செல்லாமல் தங்கிவிட்டதற்கு வருந்தி, 'தீயில் வீழ்கிலேன், திண்வரை உருள்கிலேன், ஊனை யான் இன்னும் இருந்து ஓம்புகின்றேன்’ என்று பாடியுள்ளார்.

இந்த நிலையில் இப்பகுதிக்கு ஆத்தும சுத்தி என்ற தலைப்பு எவ்வாறு பொருந்தும் என்பது விளங்கவில்லை.

35.

ஆடுகின்றிலை கூத்துஉடையான் கழற்கு
     அன்பு இலை என்பு உருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை
     பணிகிலை பாத மலர்

சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை
     துணை இலி பிண நெஞ்சே
தேடுகின்றிலை தெருவுதோறு அலறிலை
     செய்வது ஒன்று அறியேனே 31

பாதமலர்-பாதமாகிய மலர், பாதத்தில் மலரை என விரித்து, சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை என்பனவற்றோடு இயைத்துப் பொருள்காண்க.

திருப்பெருந்துறையில் திருவடி சூட்டப்பெற்றபொழுது அடிகளார் பேரானந்தத்தில் மூழ்கினார். செயலிழந்து சமாதி நிலையில் இருந்தார். பின்னர் அந்த அனுபவம் குறையக் குறைய அதனையே நினைந்து இறைப்பிரேமை கொண்டு ஆடுதல், பாடுதல், பதைத்தல் முதலிய செயல்களில் ஈடுபட்டார். அதன்பிறகு பல இடங்களிலும் அன்பர்கள் மலர் கொண்டு இறைவனை வழிபடுதலைக் கண்ட அடிகளார், திருக்கோயில் பணிகளில் தாம் ஈடுபடாமல் இருப்பதை நினைந்து வருந்தினார்.

ஆடுதல், பாடுதல் முதலிய செயல்கள் இறைப்பிரேமையில் அழுந்தி வெளிவரும்போது நடைபெற்ற செயல்கள் அல்லவா? இப்பொழுது அந்தப் பிரேமையும் குறைந்துவிட, ஆடுதல் முதலிய செயல்கள் நின்றுவிட்டன. அதாவது முன்னர் நிகழ்ந்த ஆடுதல், பாடுதல் என்பவை இவருடைய முயற்சியின்றித் தாமாக நிகழ்ந்தனவாம். எனவே, அந்தப் பிரேமை குறைந்தவுடன் அவையும் நின்றுவிட்டன.

இந்த நிலையை நினைந்து அடிகளார் வருந்துவதை இப்பாடல் விளக்குகின்றது.

‘உடையான் கழற்கு அன்பில்லை' அதனால் நீ கூத்து ஆடவில்லை. ஆடத்தான் இல்லை என்றாலும் பாடவாவது செய்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை. மெய், மொழி என்ற இரண்டினாலும் செய்யப்பெறுகின்ற கூத்து, பாடல் என்பவை செய்யப்பெறவில்லை என்றாலும் மனத்தில் அன்பும் உள்ளத்தில் உருக்கமும் நிறைந்துள்ளதா என்றால், அதுவும் இல்லை.

'செயலற்றுப்போன பிணமாகிய நெஞ்சே மேலே கூறிய எதனையும் செய்யாமல் தனியே நிற்கின்ற உன்னை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்?' என்கிறார்.

இப்பாடலில் இறையனுபவத்தில் மூழ்கி நின்று வெளிப்பட்டவர்களின் மூன்று நிலைகள் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கூறப்பெற்றுள்ளன.

முற்றிலும் அனுபவத்தில் மூழ்கிய நிலையில் மனம், மொழி, மெய் ஆகிய கருவி, கரணங்கள் அனைத்தும் செயல் இழந்துவிடுகின்றன என்று கூறியவுடன் ஆழ் மயக்க நிலை (coma state) என்று நினைத்துவிட வேண்டா. மேலே கூறிய அனைத்தும் தத்தமக்கு உரிய நிலையில் அனுபவம் வேறு, தாம் வேறாக இல்லாமல் ஒன்றியிருந்துவிடும் நிலை அதுவாகும். இந்த முற்றனுபவமே (சமாதிநிலை) முதல்நிலை எனப்படும்.

வெள்ளம் வடிவதுபோல் இந்த இறையனுபவம் வடியவடிய மேலே கூறிய கருவி, கரணம் முதலியவை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவத்திலிருந்து விடுபடுகின்றன. விடுபட்ட அவை தத்தமக்குரிய பணிகளைத் தொடங்குவதன் முன்னர், தம்மை மறந்தும் மறவாமலும் கூத்து ஆடுதல், பாடுதல், கண்ணீர் பெருக்குதல், வீழ்ந்து புரளுதல் முதலிய செயல்களில் ஈடுபடுகின்றன. இறைப் பிரேமையில் நடைபெறுகின்ற செயல்களாகும் இவை. இந்த இறைப்பிரேமையே இரண்டாவது நிலை எனப்படும்.

பின்னர் இந்த அனுபவ நிலையிலிருந்தும், இறைப் பிரேமை நிலையிலிருந்தும் விடுபட்டுக் கருவி கரணங்கள் தத்தமக்குரிய இயல்பான பணிகளில் ஈடுபடுகின்றன. அந்த நிலையில் மனம்மட்டும் இரண்டாம் நிலையில் 'குறிப்பிடப்பெற்ற செயல்களைச் செய்யாமல் காலத்தை அவமே போக்குகின்றோமே' என்று நினைத்து வருந்துகிறது. அது இரண்டாம் நிலையில் நடைபெற்ற ஒவ்வொரு செயலையும் தனித்தனியே நினைத்து 'ஐயோ இது நடைபெறவில்லையே! இனி நாம் என்ன செய்யப் போகிறோம்?' என்று வருந்துகின்ற கழிவிரக்க நிலையே மூன்றாவது நிலை எனப்படும்.

இந்த மூன்றாவது நிலையிலெழுந்த பாடலாகும் மேலேயுள்ள பாடல்.

36.

அறிவு இலாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு
      அறிவதை அருளி மேல்
நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையைப்
      பந்தனை அறுப்பானைப்
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும்
      மாறு ஆடுதி பிண நெஞ்சே
கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய்
      என்னைக் கெடுமாறே 32


மேல்நெறி-வீட்டுநெறி. புலமாக்கிய-அறிவகத்தே விளங்கச் செய்த கிறி-பொய். மாறாடு-மாறுகொண்டு நிற்றல்.

இப்பாடலின் முதலடி இறைவன் திருவடி தீட்சையின் பயனால் நிகழ்ந்த இரண்டாவது செயலைக் குறிக்கிறது. திருவடி தீட்சையால் நடந்த முதற்செயல் அறிவை அழுத்தி அனுபவம் மேம்பட்டு நின்ற நிலை. அந்தத் திருவடி தீட்சை தந்த இரண்டாவது பயன் உண்மை அறிவை அருளியதாகும். அறிவிலாத ஒரு பொருளிடத்து அறிவைட் புகுத்தினால், அது பொய்யறிவாகவும் போய்விடலாம் அல்லவா? அவ்வாறில்லாமல் மெய்யறிவைப் புகுத்தியவர் எவ்வாறு அதனைச் செய்தார்? அறிவிலாத ஒருவரிடம் புகுந்து ஆண்டுகொண்டு, பின்னர் அறிவைப் புகட்டினார் ஆதலின், அது மெய்யறிவு ஆயிற்றென்க. இங்கேயும் புகுந்து ஆண்டு என்ற சொற்களை அடிகளார் பயன்படுத்தியதன் உட்கருத்தை அறிதல் வேண்டும்.

'அறிவதை அருளி நெறியெலாம் புலமாக்கிய எந்தை' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். மெய்யறிவை அருளியதோடு நின்றுவிட்டிருந்தால் அவர் குருவாக இருந்திருப்பாரேதவிரத் தந்தையின் பணியைச் செய்தவராக இருந்திருக்கமாட்டார். ஆனால், பெருந்துறைக் குரு மெய்யறிவை அருளியதோடு நின்றுவிடாமல், இனிச் செல்லவேண்டிய வழிகளையும் புலப்படுத்தினார் என்க. ‘நெறியெலாம் புலமாக்கிய' என்ற தொடர் மெய்யறிவின் துணைகொண்டு இனிச் செல்லவேண்டிய நெறிகளை யெல்லாம் படிப்படியாக அறிவித்தார் என்று கூறுகின்றது. ஆதலின், அவ்வாறு செய்தவரை ‘எந்தை’ என்று கூறுகின்றார்.

‘பந்தனை அறுப்பானை’ முதல் 'நெஞ்சே' வரை ஒரு தொடராக எடுத்துக்கொண்டால், பின்வருமாறு பொருள் கொள்ளலாம். பந்தங்களை அறுக்கின்றவனைப் பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும் என்று கூறும் பகுதி கழிவிரக்கத்தின் உச்ச கட்டமாகும்.

யாருடைய இன்னருளைப் பெற்றிருந்ததாகக் கூறுகிறார்? அவரோ பந்தங்களை அறுப்பவர். பந்தங்கள் அறுபடாதவரையில் அவரை அணுகமுடியாது. பந்தங்கள் நம்மால் அறுக்கப்படக்கூடியவை அல்ல. அவர் ஒருவரே பந்தங்களை அறுக்கக்கூடியவர். அப்படிப்பட்ட ஒருவருடைய அருளைப் பெறுவது எளிதான காரியமன்று.

நல் ஊழ் வசத்தால் ஒரோவழி அந்த அருளைப் பெற்றுப் பின்னர் அது விட்டு நீங்கிற்று என்ற நிலை இல்லாமல் ஒரு கணமும் அவரை விட்டுப் பிரியாத நிலைமை தரப்பெற்றமையின் அந்த அருளை ‘இன்னருள்கள்’ என்றார்.

பந்தனை அறுபட்டமையின் பிறிவிலாத இன்னருள் கை கூடிற்று என்க. (பிறிவு-பிரிவு).

மிகமிக அரிதில் கிடைக்கக்கூடிய இன்னருளைப் பெற்றாகிவிட்டது; பந்தனை அறுபட்டுவிட்டது; புகுந்து ஆண்ட அவர் மெய்யறிவைத் தந்ததோடு அல்லாமல் மேல் செல்ல வேண்டிய நெறிகளையும் புலப்படுத்தி விட்டார். இத்தனை இருந்தும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறாமல் அவமே கிடத்தலின் ‘பிண நெஞ்சே’ என்றார்.

‘செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு’ என்பது இந்நாட்டுப் பழமொழி இறந்தவன் கையிலுள்ள வெற்றிலை பாக்கு அவனுக்கு எப்பயனையும் தாராமல் பொருள் மாத்திரையாக நின்றுவிட்டதுபோல் குருநாதர் தந்த மெய்யறிவு, புலப்படுத்தப்பெற்ற நெறிகள், பந்தம் அறுபட்ட நிலை, அவருடைய இன்னருள் ஆகிய அனைத்தும் நெஞ்சைப் பொறுத்தவரையில் செத்தவன் கை வெற்றிலை பாக்காக அப்படியே இருந்துவிட்டமையின் பிண நெஞ்சே என்றார் அடிகளார்.

புகைவண்டியில் பின்னருள்ள பெட்டிகளை இழுத்துச் செல்லும் என்ஜின்போன்று உள்ளது நெஞ்சம். அடிகளாரின் மனம், மொழி, மெய் என்ற மூன்றையும் நன்னெறிக்கண் இழுத்துச்செல்லவேண்டிய கடப்பாடு உடையது நெஞ்சம்.

பழுதுபட்ட என்ஜினை நம்பிப் புறப்பட்ட பெட்டிகள், போகவேண்டிய இடம் செல்ல முடியாமல் நடுவழியில் நிற்பதுபோல், அடிகளாரை அழைத்துச் செல்லவேண்டிய நெஞ்சு பிணமாகிவிட்டமையின் ‘கெடுத்தாய் என்னை’ என்று தம் நெஞ்சைக் கூறுகிறார் அடிகளார்.

37.மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை
எம் மதி இலி மட நெஞ்சே
தேறுகின்றிலம் இனி உனை சிக்கெனச்
சிவன் அவன் திரள் தோள்மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும்
நெக்கிலை இக்காயம்
கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது
கேட்கவும் கில்லேனே 33


காயம்-உடல். சிக்கென உறுதியாக. கில்லேனே-ஆற்றாமையை உணர்த்தும் எதிர்மறை இடைச்சொல்.

‘இறைவனின் திருமேனியின்மேல் பூசப்பெற்ற திருநீறு அவன் திரண்ட தோளின்மேலும் இருக்கின்றதே. அத் திருநீறு என்றால் என்ன? சிந்தித்திருந்தால், ஊழிக் காலத்தில் அனைத்தையும் நீறாக்கினாலும், பின்னரும் அதனைத் தன் தோள்மேல் தாங்குகின்றான் என்பது தெரியும்.

அழித்தவர்களையும் நீறாக்கித் தன் தோளில் சுமக்கும் பரம கருணாமூர்த்தி அவன் என்பதை அறிந்தபின்னும் அவன்பால் நீ ஈடுபாடு கொண்டிலை, அறியாமை நிரம்பிய என் நெஞ்சமே கெட்டுப்போவதென்று முடிவு செய்து விட்டாய். உன்னோடு இருக்கின்ற நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.

38. கிற்ற வா மனமே கெடுவாய்
உடையான் அடி நாயேனை
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன்
விரை மலர்த் திருப்பாதம்
முற்று இலா இளம் தளிர் பிரிந்திருந்து
நீ உண்டன எல்லாம் முன் -
அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும்
அளவு அறுக்கில்லேனே 34

கிற்றவாகெடுவாய்-முடிந்தவரை கெடுவாய்.

மனம் விரும்பும் எண்ணிலடங்கா இன்பங்களை ஒன்றுவிடாமல் அனுபவித்தாலும் இம்மனத்தில் தோன்றும் ஆசை அடங்குமாறில்லை. இதனைக் குறிக்கவே 'கிற்றவா (வல்லவாறு) கெடுவாய் மனமே' என்றார்.

திருப்பெருந்துறை அனுபவத்தின் பெரும்பகுதி மறைந்துவிட்ட நிலையில் அந்த அனுபவத்தைத் தந்தவரையும் அவரது சிறப்பையும் எண்ணிப்பார்க்கிறார் அடிகளார். அவரிடம் ஆட்படவேண்டுமானால் தம்மை முழுவதுமாக விற்க வேண்டும் என்ற நிலை வந்தாலும், அதற்கும் தகுதியுடையவர் குருநாதர் என்கிறார்.

தம்மை விற்றுக்கூட ஆட்படுவதற்கு உரியவரின் தளிர்போன்ற திருவடிகளை மறந்துவிட்டு, இந்தப் பாழும் மனம், விஷய சுகங்களில் ஈடுபட்டு நிலையில்லாத திருப்தியை அடைந்து மகிழ்கின்றது. இது என்ன வேடிக்கை!

39.

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு
      அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள்
       கசிந்து உணர்ந்திருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும்களன்
       செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை
        பரகதி புகுவானே 35

களவு-வஞ்சம் முதலிய களவு ஒழுக்கங்கள். உள கறுத்து-உள்ளனவற்றை வெறுத்து; அதாவது பொறி நுகர்ச்சிகளாகிய போகங்களை வெறுத்து. பெருங்களன்-இறைவன் தங்குதற்குரிய பெரிய இடம். பளகு-குற்றம்.

சூக்கும சரீரத்துடன் வாழும் தேவர்களும்கூட இத்தகையவன் என்று அளவிடமுடியாத பெருமையன் ஆயினும் அடியவர்களுக்கு எளியவனாகவும் அருள் செய்பவனாகவும் உள்ளான். தாங்கள் தேவர்கள் என்ற தன்முனைப்போடு அவனை ஆராய முற்பட்டதால் அவர்கட்கு அரியனாயினான். அடியவர் என்றாலே முனைப்பு அற்றவர் என்பது பொருளாதலின் அவர்கட்கு எளியனாயினான் என்க.

“மனமே உன்னை அவன் ஆட்கொள்கின்ற அந்த நேரத்தில் உன்பால் எத்தனையோ குற்றங்கள் மலிந்து இருந்தன. அவற்றை அறுத்து உன்னை மன்னித்து அவன் ஆட்கொண்டான் என்பதை நீ நினைக்க வில்லையா? நினைத்திருந்தால் உள்ளத்திலுள்ள அறுவகைக் குற்றங்கள் என்ற குப்பைகளையெல்லாம் போக்கி அந்த உள்ளத்தில் அவன் வந்து தங்குவதற்குரிய துய்மையான சிறந்த இடமாக நீ செய்திருக்கவேண்டும். அங்ஙனம் செய்தாய் இல்லை என்கிறார்.

இதே கருத்தைப் பட்டினத்துப்பிள்ளையார் திருக் கழுமலமும்மணிக்கோவையில் பின்வருமாறு பேசுவதைக் காணலாம்.

கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என்சிந்தைப்
பாழறை உனக்குப் பள்ளியறை ஆக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந் தவிசு
எந்தை நீ இருக்க இட்டனன்.....
(திருக்கழுமல- கோவை 4-10-13)

‘பரகதி புக நீ விரும்பியிருப்பின் குற்றங்களை அறுத்துப் போக்குபவன் திருவடிகளை ஒயாது நினைத் திருக்க வேண்டும்’ என்கிறார். (பளகு-குற்றம்).

40. புகுவது ஆவதும் போதரவு இல்லதும்
பொன் நகர் புகப் போதற்கு
உகுவது ஆவதும் எந்தை எம்பிரான்
என்னை ஆண்டவன் கழற்கு அன்பு
நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு

     தேனொடு பால் கட்டி
மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு
      என் செய்கேன் வினையேனே? 36

போதரவு-மீட்சி. பொன்னகர்-சிவபுரி. உகுவது-சுழலுவது. நெகுதல்-உருகுதல்.

பொன்னகர் என்று கூறப்பெறும் வீடுபேற்றில் புகுந்தவர்கள் அதிலிருந்து மீள்வதில்லை. அதில் புக வேண்டுமாயின் அவ்வுயிர் தன்னோடு ஒட்டிக்கொண்டு உள்ள அறுவகைக் குற்றங்களையும், ஆணவம் முதலிய மும்மலங்களையும் முற்றிலும் நீக்க(உகுக்க) வேண்டும்.

இக்குற்றங்களைப் போக்குதல் எதிர்மறை இயல்புகளே யாதலால், இவற்றோடு நின்றுவிடின் பொன்னகர் புகுதல் இயலாது என்பதைக் கூறவந்த அடிகளார், இவற்றை நீக்குவதோடு அல்லாமல் இறைவன் கழற்கு அன்பு நெகுவதாக இருத்தல் வேண்டும் என்கிறார்.

மேலே கூறிய பல்வகைக் குற்றங்களும் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நிலையற்ற சுவையையும், இன்பத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்றனவே. அவற்றைப் போக்கிவிட்டுக் கழற்கு அன்பு செய்தால் வீடுபேறு கிடைக்கலாம். ஆனால், இப்பொழுது சுவை ஏதேனும் கிடைக்குமோ என்று ஐயுறுவார்க்கு விடைகூறுவதுபோல அன்பு செலுத்தப்பெற்ற உடனேயே அமுது, தேன், பால், கட்டி என்பவற்றின் சுவை கிடைக்கும் என்கிறார்.

தேனும், பாலும், கட்டியும் உண்ணும்பொழுது பெருஞ்சுவை தருகின்றன. தேன் உண்ணும்பொழுது சுவை தருவதுடன் பின்னர் மருந்தாகி நோய் தீர்க்கவும் செய்யும். இறைவன் கழல் அன்பு செய்யும்போது சுவை தந்து பின்னர்ப் பிறவிப்பிணிக்கு மருந்தும் ஆதலின் தேன் என்றார்.



மிகச் சிறந்ததான நெய், பாலில் மறைந்திருப்பதுபோல் அத்திருவடியினுள் வீடுபேறு என்ற நெய் மறைந்திருத்தலின் பால் என்றார்.

கரும்பை ஆலையுள் பெய்து சாறாக்கிப் பின்னர் அதனைத் தீயிலிட்டுக் காய்ச்சிய பிறகு கிடைப்பது கட்டியாகும். திருவடியை நினைத்து அன்பு செய்வார்க்கு எவ்விதத் துன்பமும் இல்லாமல் வீடுபேற்றை அருளுதலின் கட்டி என்றார். அதாவது கரும்பு ஆலையில் பிழிபடுவது போலவும், அதன் சாறு தீயிலிட்டுக் காய்ச்சப்படுவது போலவும் விரதம், பட்டினி, சடங்குகள் ஆகியவற்றால் இவ் உடம்பை வருத்தி, பின்னர் வீடுபேற்றை அடைவதற்குப் பதிலாகத் திருவடியில் அன்புசெய்வார் உடனே வீடு பேற்றை அடைதலின் அந்தத் திருவடியைக் கட்டி என்றார்.

41.

வினைஎன் போல்உடையார் பிறர்ஆர்
       உடையான்அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு
       அன்றுமற்று அதனாலே
முனைவன் பாத நல்மலர் பிரிந்து இருந்து நான்
       முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி
      இன்னது என்று அறியேனே 37

தினையின்பாகம்-தினையளவு இடமும் தினையளவுகாலமும். முட்டிலேன்-மோதிக்கொள்ளேன். தலைகீறேன்-தலையைப் பிளந்து கொள்ளேன். பாவனை-நினைவு.

ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள் திடீரென்று அப்பொருள் தம்மை விட்டு நீங்கியபோது என் விதி அதனை அனுபவிக்க விடாமல் நீக்கி விட்டது என்று கூறுவர். இந்த உலக வழக்கை அனுசரித்துத் தம்முடைய அனுபவம் விட்டுப் போனபொழுது 'என்னைப்போல வினையுடையார் யார்’ என்று வருந்துகிறார் அடிகளார்.

ஒருவேளை அந்த அனுபவத்தைத் தந்தவனே அது வேண்டா என்று மீட்டும் எடுத்துக் கொண்டு விட்டானோ என்ற ஐயம் மனத்திடைத் தோன்றவே, மிக அழகாக அந்த ஐயம் தவறானது என்பதற்கு விளக்கம் கூறுகிறார் அடிகளார். 'உடையானை அடிநாயேன் ஒரு தினையளவு காலமும் பிரிந்திருக்கவேண்டும் என்று அவன் கருதவில்லை. கருதியிருப்பின் இதனைத் தந்தே இருக்க மாட்டான். எனவே, இப்பொழுது அனுபவம் என்னை விட்டு நீங்கிற்று என்றால், அதற்கு நானும் என் வினையுந்தான் காரணம். இப்படி ஒரு தீவினை உடையார் பிறர் யாரும் இல்லை' என்கிறார்.

பிரிந்தது அவன் திருக்குறிப்பன்று. தம்முடைய வினையே என்று தெரிந்தபின்னர், அந்த வினைக்குக் காரணமான இந்த உடம்பைக் கல்லில் மோதியிருக்க வேண்டும்; தலையைக் கீறிக்கொண்டிருக்க வேண்டும். இவற்றைச் செய்யாமைக்குக் காரணம் தம் உடல் இரும்பாலானது; மனம் கல்லால் ஆனது; தம்முடைய செவிகளை இன்னதென்றே தம்மால் சொல்ல முடியவில்லை என்கிறார். (பிறிவது - பிரிவது).

42.

ஏனை யாவரும் எய்திடல் உற்று மற்று
      இன்னதுஎன்று அறியாத
தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறை
     சிவனைஎன் சிவலோகக்
கோனை மான் அன நோக்கிதன் கூறனை
     குறுகிலேன் நெடும் காலம்
ஊனை யான்இருந்து ஒம்புகின்றேன் கெடு
     வேன் உயிர் ஓயாதே 38

திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடைபெற்றுச் சில காலம் கழிந்த பின்னரும் அடிகளார் மனத்தை விட்டு அது நீங்கவில்லை. அவன் விட்டுச் சென்றதற்கு உரிய காரணத்தைத் திருஅண்டப்பகுதியில் விளக்கினாரேனும், தம் ஒருவரைமட்டும் இங்கு ஒழித்துவிட்டுப் போன செயலுக்குத் தாமே காரணம் என்ற நினைவு அவரை விட்டு நீங்கவில்லை. முதலடியில் 'ஏனை யாவரும் எய்திடல் உற்று’ என்று குறிப்பதற்குரிய காரணம் இதுவேயாகும். இன்னதென்று அறியாத தேனை, ஆன் நெய்யை, கரும்பின் தேறலை என்று கூறுவதன் அடிப்படை யாது? இன்னது என்று அறிய முடியவில்லை என்று கூறியபிறகு தேனென்றும், நெய்யென்றும், தேறலென்றும் கூறுவது எவ்வாறு பொருந்தும்?

ஒரு பொருளை இது தேன் என்றோ, நெய் என்றோ அறிவது வேறு, சுவைப்பது வேறு. அறியாத என்ற சொல்லைப் பயன்படுத்தினாரேனும் உடன் போயினவர்கள்தவிரத் தாம் உள்ளிட்ட பிறர் அனைவரும் முழுவதுமாய்ச் சுவைக்கமுடியாத தேனாய், நெய்யாய், கரும்பின் தேறலாய் அவன் உள்ளான் என்பதே பொருளாகும்.

ஒரே இன்சுவையைத் தரினும் அந்தச்சுவை தரும் பொருள் தேனாகவும், நெய்யாகவும், தேறலாகவும் இருப்பதுபோல இவனும் சிவனாகவும், சிவலோகத்தை ஆள்பவனாகவும், குவளைக்கண்ணி கூறனாகவும் உள்ளான் என்க.

பெருந்துறை நிகழ்ச்சி நடந்து சிறிது காலமே ஆயினும் உணர்ச்சிப் பெருக்கால் அது நெடுங்காலம்போலத் தோன்றுதலின் ‘குறுகிலேன் நெடுங்காலம்’ என்றார். பிரிந்திருப்பவர்க்கு, ஒரு கணமும், ஊழியாகத் தோன்றும் என்பது பலரும் கண்ட உண்மையாகும்.

இதே கருத்தை,

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே

(திருவாச. 327)

என்று பின்னரும் பாடியுள்ளமை காண்க.

43.

ஓய்வு இலாதன உவமனில் இறந்தன
       ஒண்மலர்த் தாள்தந்து
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும்
       என்னைத் நல் நெறி காட்டி
தாயில் ஆகிய இன் அருள் புரிந்தஎன்
        தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்
        செழும்கடல் புகுவேனே 39

ஓய்வு-அழிவு. உவமனிலிறந்தன-உவமான உவமேயங்களுள் உவமேயத்தைக் காட்டிலும் உவமானம் தன்மையால் விஞ்சியிருக்கும்; அங்ஙனமாகவும் திருவடியாகிய உவமேயம் உவமானங்களைக் காட்டிலும் சிறந்துள்ளதென்பதாம்.

பிரபஞ்சத்தில் படைக்கப்பெற்ற உயிர்கள் அனைத்தும் உய்கதியை நாடி அவன் திருவடிகளில் ஓயாது வந்து வீழ்கின்றன. அங்ஙனம் வீழும் உயிர்களை ஒய்வு ஒழிவின்றிக் காத்து அருள் செய்தலின் அத்திருவடிகளை 'ஓய்விலாதன' என்றார்.

'ஒண்மலர்த் தாள்’ என்று கூறவந்த அடிகளார் அச்சொல்லுக்கு முன்னர் 'உவமனில் இறந்தன' என்று கூறுவதை நோக்க வேண்டும். தாளுக்கு ஒண்மலர் உவமையாக நின்றது. மலர் என்று தவறியவுடன் மொக்கு விரிதல், மலர்தல், கூம்புதல், வீழ்தல் ஆகிய இயல்புகள் நம் மனத்திடைத் தோன்றுமன்றே? அதனைப் போக்குவதற்காக 'உவமனில் இறந்தன' என்ற சொற்களை முன்னர்ப்பெய்கின்றார். அத்திருவடிகள் எப்பொருளோடும் உவமிக்கப்பட முடியாதபடி தன்னேர் இல்லாமல் விளங்குகின்றன. அப்படியிருப்பினும் அதன் இயல்பை வேறுவழியாகக் கூறமுடியாது ஆதலின் ஒண் மலர் என்ற உவமையைப் பெய்கின்றார்.

‘நாயிலாகிய குலத்தினும் கடைப்படும் என்னை' என்றதால் பல்வேறு பண்புடைய நாய்களின் குலத்தில் மிகத் தாழ்ந்த நிலையிலுள்ள ஒரு நாயைத் தமக்கு உவமையாக்கிக் கூறுகிறார் அடிகளார். தம்மை நாய் என்று கூறிய பிறகுதான் ஒண்மலர்த் தாள் தந்து என்ற உவமையின் சிறப்பை அறிய முடிகிறது. எவ்வளவு சிறப்புடைய மலராயினும் நாய் அதன் அருமைப்பாட்டை அறிய முடியாதன்றோ!

அந்த முறையில் அந்தத் தாள் உயர்ந்ததுதான். என்றாலும் என்ன? நாய்போன்றவராகிய தாம் அந்த ஒளி பொருந்திய மலரை அறிந்து அனுபவிக்கும் ஆற்றல் பெறவில்லை என்ற குறிப்புப் பொருளும் இவ்விரு அடிகளிலும் புதைந்துள்ளது.

பொதுவாக நாய்களுக்குச் சில இயல்புகள் உண்டு. ஒரு முறை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டால் மறுமுறை பிறர் உதவியின்றி அந்த இடத்தைத் தேடிச் சென்று அடையும் இயல்புடையது நாய். ஒரு முறை உணவிட்டு, அதன் பசியைப் போக்கிவிட்டால் எத்தனை காலமாயினும் அவர்கள் மாட்டு நன்றி பாராட்டும் இயல்பும் உடையது நாய்.

‘நாயிலாகிய குலத்தினும் கடைப்படும் என்னை' என்று அடிகளார் கூறியதில் நாய்க்குலத்திற்கு உரிய இவ்விரு இயல்புகளும் தம்பால் இல்லை என்று நொந்து கொள்கிறார்.

நன்னெறி காட்டினான். அவன். அவ்வழிச் செல்ல வில்லை என்பதால் நாயின் முதல் இயல்பு தம்பால் இல்லை என்பதை அறிவுறுத்தினார். தாய்போன்று இன்னருள் சுரந்தான் அவன்; அதற்கு நன்றி பாராட்டும் இயல்பும் தம்பால் இல்லை என்றாராயிற்று.

இழிந்த பிறவியாகிய நாயிடம்கூடக் காணப்படும் நல் இயல்புகள் இல்லாத தாம் வாழ்ந்து பயனில்லை. தீயில் வீழ்ந்தோ, மலையில் உருண்டோ, கடலில் புகுந்தோ தம்மை மாய்த்துக்கொள்ளவும் இல்லை என்கிறார் அடிகளார்.

44.

வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும்
      அதுதனை நினையாதே
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை
      மத்துஇடு தயிர்ஆகித்
தேன் நிலாவிய திருஅருள் புரிந்தஎன்
      சிவன்நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஒம்புதல் பொருட்டுஇனும்
       உண்டுஉடுத்து இருந்தேனே 40

வேனில்வேள்-மன்மதன். மதிசுடும்-குளிர்ந்த மதியும் வெய் தாய்ச் சுடும். படிறு-வஞ்சகம்.

திருப்பெருந்துறையில் குருவின் எதிரே அமர்ந்திருந்து, குரு மறைந்தபொழுது மறைந்துவிட்ட அடியார்களை நினையுந்தொறும் தாம் அவர்களைப்போல் இல்லையே என்ற வருத்தம் அடிகளார் மனத்தில் அடிக்கடி ஊசலாடுகிறது.

இந்நிகழ்ச்சி நடைபெற்றுச் சில காலம் சென்ற பின்னர், திருவாசகம் பாடப்பெறுவதற்காகவே குரு தம்மை இங்கு இருத்திச் சென்றார் என்பதை நன்கு அறிந்திருந்தும், அந்த அனுபவத்தை மறுபடியும் பெறாத ஒவ்வொரு விநாடியும் வீண் காலம் என்று வருந்துகிறார் அடிகளார். இடைக்காலத்தில் ஏனைய நாட்களைப் போல உண்டு உடுத்தி இருக்கின்றார்; எனினும் இவை இரண்டும் தேவையற்ற செயல்கள் என்று கருதிப் பேசுகின்றார்.

முதல் இரண்டு அடிகளில் வரும் கருத்து, திருவருள் பெறுவதற்கு முன்னர் அமைச்சராக இருந்த காலத்தில் நிகழ்ந்தவைபற்றி இருக்கலாம்.

இங்குமட்டுமன்றி 'வெஞ்சேல் அனைய கண்ணார் தம்' (திருவாச: 427) என்று தொடங்கும் பாடலிலும் இதே கருத்துப் பேசப்பெறுதலின் அடிகளாரின் பழைய வாழ்க்கையைக் குறித்தது என்றோ, ஆன்மாக்களின் பொதுவான இயல்பை ஏறட்டுக் கொண்டு பாடியது என்றோ பொருள் கொள்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

கைம்மாறு கொடுத்தல்

45.

இரு கை யானையை ஒத்து இருந்து என் உளக்
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே 41

இருகை யானை ஒத்திருந்தேன்-ஒருகையால் உண்டு போதாமையால் இருகையால் உண்ட யானையை ஒத்தேன். உள்ளம்-ஆன்மா. எவ்வம்-துன்பம். கிற்றிலேன்-ஆற்றலில்லேன். (உண்ணவே) கிற்பன்-வல்லேன்.

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்த குருநாதர் வழியோடு சென்ற தம்மை வருக எனப் பணித்து ஆட்கொண்டார். அந்த நேரத்தில் குருவாக அமர்ந்து இருந்தவர் சிவன்தான் என்பதைத் தாமே தேறி அறிந்து கொண்டதாக அடிகளாரே முன்னர்க் கூறியுள்ளார்.

அப்படியிருக்க என் ‘உள்ளக் கருவை யான் கண்டிலேன்’ என்ற இத்தொடர் ஒரு புதிய சிந்தனையைத் தூண்டுகிறது. குருவை இவர் கண்டது உண்மை. ‘கண்ணால் யானும் கண்டேன் காண்க' (திருவாச:3.58) என்று முன்னரே கூறியுள்ளார். அப்படியிருக்க, ‘என் உள்ளக் கருவை நான் கண்டிலேன்’ என்று கூறுவது, உள்ளத்தின் ஆழத்தில் உயிர்க்குயிராய் மறைந்து நிற்கும் ஒருவனைக் கண்டிலேன் என்று கூறுவது, என்ன பொருளைக் கருதிக் கூறப்பெற்றது?

புறத்தே பருவடிவுடன் இருந்த குருவைப் புறக் கண்களால் கண்டது உண்மை. மானிட வடிவுடன் இருந்த அவர் உண்மையில் யார் என்பதை அடிகளாரின் உள்ளுணர்வு உணர்த்தியது. என்றால், கண்களால் கண்டது மானிட உடலை கண்ணின் பார்வை எல்லைக்கு அப்பாற்பட்டுக் கருத்தளவில் இருக்கும் ஒருவனை உணரலாமே தவிர, அனுபவிக்கலாமே தவிர, கண்ணால் காண முடியாது என்பது உண்மை. 'உள்ளக் கருவை யான் கண்டிலேன்’ என்று சொல்லும்பொழுது, ‘புறத்தே பருவடிவுடன் இருந்த குருவைக் கண்டேன்; அவரே ஆழ்மனத்தின் அடியில் நுண்மையாய் நிற்கும்போது கண்ணால் அவரைக் காணமுடியவில்லை' என்பது பொருளாகும்.

புறத்தே இருந்த ஒருவர் 'வருக' எனக் கூஉய் ஆட்கொண்டு, திருவடி தீட்சை செய்து அமுத தாரைகளை என்புத் துளைதொறும் ஏற்றினார். 'அப்படி மாபெரும் உபகாரம் செய்த ஒருவருக்கு நான் என்ன கைம்மாறு செய்தேன்? இரு கை யானையை ஒத்திருந்தவனாகிய நான் பொறி, புல இன்பங்களை நுகர்வதையே பெரிதாகக் கருதி இருந்துவிட்டேன்’ என்கிறார்.

இங்கு அடிகளார் தம்மை யானையோடு உவமித்தது ஒரு நுண்மையான உட்கருத்தைக் கொண்டதாகும். ஒரு கை யானைக்கே இரண்டு கெட்ட குணங்கள் உண்டு. ஒன்று - நன்றி மறப்பது; இரண்டு - குளித்துவிட்டுத் தூய்மையாக வரும்பொழுதே மண்ணை வாரித் தன் தலையில் போட்டுக் கொள்வது.

மாபெரும் உபகாரம் செய்த குருவிற்குத் தாம் நன்றி பாராட்டவில்லை ஆதலால் நன்றி கொல்லும் யானை யோடு உவமம் செய்தார்.

வழியோடு சென்ற தம்மை வலிய அழைத்து இறையனுபவத்தைக் குருநாதர் நெஞ்சில் நிறைவித்தார். பழைய, பசுகரணங்களைப் போக்கிப் பதிகரணங்களாக மாற்றி அருளினார். இது குளித்துவிட்டு வரும் யானைக்கு உவமை. இவ்வளவு பெரிய நலங்களை விட்டுவிட்டுப் பொறிகளின் இன்ப நுகர்ச்சியில் மறுபடியும் தம் மனம் செல்வது குளித்துவரும் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போலாகும். அதனாலேயே இருகை யானையை ஒத்திருந்து என்று பாடுகின்றார்.

என்னால் அறியாப் பதந் தந்தாய்
யான் அது அறியாதே கெட்டேன்

உன்னால் ஒன்றும் குறைவில்லை

(திருவாச. 644)

என்ற பாடலிலும் இதே கருத்துப் பேசப்பெற்றிருப்பதைக் காணலாம்

46.

உண்டு ஒர் ஒள்பொருள் என்று உணர்வார்க்கு எலாம்
பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை
தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்
கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே 42

உணர்வார்-தன்முனைப்பால் உணரத் தொடங்குகின்ற பாச பசு ஞானிகள். தொண்டனேற்கு-சிவஞானத்தைத் திருவருள் வாய்ப்பால் பெற்ற அடியேனுக்கு. கண் மாயம் என்ன- கண்ணைப் பற்றியிருக்கும் மயக்கம்தான் என்ன.

நாம, ரூபம் கடந்து நிற்பது என்பதே இறைவனுக்குச் சொல்லப்படும் இலக்கணமாகும். அப்படி நாம, ரூபம் கடந்த பொருளைப் பொறி, புலன்களால் காண்பது இயலாத காரியம். அவ்வாறானால், கருத்தளவையின் மூலமாகவாவது காண முடியுமா என்றால், அது கருத்திற்கும் அப்பாற்பட்ட பொருளாகும் என்று கூறியுள்ளனர் பெரியோர் காட்சி அளவையின் மூலமோ கருத்து அளவையின் மூலமோ இறைவனை 'அறிதல்’ இயலாத காரியம். எனவே, அடிகளார் 'உணர்வார்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அப்பொருள் உண்டு என்றால், காட்சியளவையிலும், கருத்தளவையிலும் பட்டுத் தானே தீரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுமன்றே? அதனைப் போக்குதற்கு, உண்டு என்று அறிவார் என்றோ கண்டார் என்றோ தெரிவார் என்றோ கூறாமல் ‘உணர்வார்க்கு எலாம்’ என்று கூறினார்.

உணரப்படும் பொருள் அனுபவிக்கப்படுமே தவிர அதனை அறிவு கொண்டு ஆராய்தல் கடினம். உண்டு என்று உணர்ந்தவர்கள் அதனை அனுபவிப்பதை விட்டுவிட்டு, ‘அனுபவப்பொருளாக நிற்கும் இது, ஆணோ, பெண்ணோ, அலியோ’ என்று ஆராயத் தொடங்கினால் அது பயனற்ற முயற்சியாகும்.

அனுபவிக்கும் பொருளை ஏன் ஆராயக்கூடாது என்று ஒரு வினாவை எழுப்பினால் இதன் விடையை எளிதில் புரிந்து கொள்ளலாம். அனுபவிப்பது என்பது அகமனம், ஆழ்மனம் ஆகியவற்றின் தொழிலாகும். அனுபவ நிலையின் தொடக்கத்தில், தான் என்ற ஒரு பொருளும் அனுபவம் என்ற ஒரு பொருளும் நெருங்கி வந்து, இறுதியில் 'தான்’ அனுபவத்துள் புகுந்துவிடும். அங்கே அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்ற இரண்டும் அனுபவத்தினுள் இணைந்துவிடும். அந்த அனுபவம் உணர்வின்பாற்பட்டதாகும்.

இதன் எதிராக, அறிதல் என்பது மூளையின் செயலாகும். அந்தத் தொழில் தொடங்கும்போதே 'நான்’ முன்னர் நிற்கும். நான் ஆராய்கிறேன், நான் அறிய முற்படுகிறேன் என்று பேசும்பொழுது, அறிதல் ஆகிய செயல் 'நானு’ள் அடங்கியிருக்கும் அறிவின் செயலாகும். இந்த ஆராய்ச்சியில் எத்தனை தூரம் சென்றாலும், எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் ‘நான்' இருந்து கொண்டேயிருக்கும். எனவே, உணர்தல்போல் அல்லாமல் அறிதல் முற்றிலும் மாறுபட்ட செயலாகும்.

உணர்வில் 'நான்' அமிழ்ந்துவிடுகிறது; அறிதலில் ‘நான்' தலைதூக்கி நிற்கின்றது. பெண், ஆண், அலி என்று ஒருவரைப் பிரித்துக் காணுதல் அறிவின் செயலாகும். அறிவிற்கு அப்பாற்பட்டவனாகிய இறைவனை, வடிவு கடந்தவனாகிய இறைவனைப் பெண், ஆண், அலியென்று வடிவிற்கு உரிய அடையாளங்களோடு அறிய முற்படுவது பொருந்தாது. இதனைக் கூறவந்த அடிகளார் 'பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை' என்று கூறுகின்றார்.

நிர்க்குண, நிராமய, நிராலயம் ஆனது அப்பொருள் என்றால், அதனை அடைய முயல்வதோ, அதற்குரிய வழிகளை மேற்கொள்வதோ பயனற்ற காரியம் என்ற எண்ணம் தோன்றிவிடுமன்றே? அதனைப் போக்குவதற்கு அடுத்த அடியிலேயே 'இவ்வளவு பெரிய பொருளாக இருப்பினும் இறைவன் தொண்டர்களுக்கு உள்ளவாறு காட்சி தருவான்’ என்ற அமைதிகிட்டுமாறு ‘தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்’ என்று கூறினார். உண்டு ஒர் ஒண்பொருள் என்று உணர்பவர் கட்குக்கூடப் பெண், ஆண், அலியென்று பிரித்துக் காண முடியாத நிலையில் காட்சி, கருத்து அளவைகட்கு அப்பாற்பட்டு நிற்கும் பொருள் இப்போது அடிகளார் தம் எதிரே தோன்றிற்று என்று கூறுகிறார். 'தோன்றினாய்’ என்று முன்னிலை ஒருமை வாய்பாட்டாற் கூறியமையின் அப்பொருள் அடிகளாரின் கட்புலனுக்கும் விருந்தாகத் தோற்றிற்று என்பது அறியப்படும். எனவே, குருவடிவாக வந்ததையே அடிகளார். இங்கும் பேசுகிறார்.

நான்காவது அடி நன்கு சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். முரண்பட்ட இரு கருத்துக்களை அடுத்தடுத்த சொற்களால் அடிகளார். பேசுகின்றார். கண்டும் கண்டிலேன் என்றால் என்ன பொருள்? இரண்டும் உண்மையானவை. மானிட வடிவுடன் இருந்தக் குருவை கண்டது உண்மை. தீட்சை பெற்ற பிறகு அனுபவத்தில் மூழ்கி எழுகின்ற நிலையில் மானுட வடிவுடன் இருந்த குரு, உண்மையில் யார் என்ற சிந்தனை தோன்றிற்று. மறுபடியும் கண்களால் அவரைக் கண்டு ஒரு முடிவிற்குவர விழைந்த அடிகளார், மூடியிருந்த கண்களைத் திறந்து காணும்போது அங்கே குரு இல்லை. எனவே, கண்டும் என்றும் கண்டிலேன் என்றும் சொல்வது உண்மையானவையாம்.

எங்கும், எப்பொழுதும் இடையீடின்றி நிற்கும் ஒரு பொருளை, மறைந்துவிட்டார் என்று சொல்ல விரும்பாத அடிகளார், இப்பொழுது அவரைக் காணமுடியாமைக்குக் காரணம் தம் குறையே என்ற கருத்தில் ‘கண்டிலேன் என்ன கண் மாயமே' என்று பாடுகிறார். காணாமைக்குக் காரணம், அவர் எங்கும் போய்விடவில்லை என்றாலும் என்ன மாயத்தாலோ கண் அவரைக் காணும் ஆற்றலை இழந்துவிட்டது என்கிறார்.

காட்சிப் புலனுக்குக் கிடைக்கக்கூடிய எந்த வடிவும், அஃறிணையில், நிலையியல் பொருளாக இருந்தாலன்றி ஏனையவற்றை ஆண் பெண் என்று பிரித்துக் காண முடியும். இந்தப் பிரிவினைக் காட்சிக்கு அடிப்படையாக இருப்பது அறிவாகும். ஆகவே, அறிவின் துணை கொண்டு காணமுயன்றால் பெண், ஆண், அலி என்று பிரித்துக் கண்டுகொள்ள முடியாத பொருள் என்று கூறிவிட்ட பிறகு ‘தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்’ என்று பாடியுள்ளாரே, 'உள்ளவா வந்து தோன்றினாய்’ என்பதன் பொருளென்ன என்ற வினாவை எழுப்பினால், நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்பதுதான் விடையாகும். ‘உள்ளவா'று என்று அடிகளார் குறிப்பிட்டுக் கூறுவதால் அவருக்குக் கிடைத்த காட்சியில் பெண், ஆண், அலி என்று இனம்பிரிக்க முடியாத ஒரு பொருளாக இறைவன் காட்சி தந்திருக்க வேண்டும்.

'வந்து தோன்றினாய்’ என்று கூறுவதால், இது திருப்பெருந்துறை நிகழ்ச்சியையே சுட்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அங்கிருந்தது மானிட, ஆண் வடிவம்தானே? அந்த வடிவத்தைக் கண்டுவிட்டு உள்ளவா தோன்றினாய் என்று அவர் கூறிய சொற்களுக்கு, நாம் பொருள் கூறத் தொடங்கினால் சிக்கல் ஏற்பட்டுவிடும். கட்புலனுக்கு விருந்தாகவுள்ள குருவின் வடிவைப் பெண், ஆண், அலி அல்லன் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும் என்ற வினாவை எழுப்பினால் விடை கிடைத்துவிடும். குதிரையிலிருந்து இறங்குகின்றவரை, மானிட ஆண் வடிவில் இருந்த குருவை அடிகளார் கண்டது உண்மை. அவரிடம் சென்று தீட்சை பெற்றபிறகு அடிகளாருக்கு ஒரு காட்சி கிடைத்திருக்க வேண்டும். அக்காட்சியில் பெண், ஆண், அலி வடிவுகளையெல்லாம் கடந்த அப்பொருள் தன்னுடைய சிவ சொரூபத்தை அடிகளாருக்கு வழங்கியிருக்க வேண்டும். ‘உள்ளவா வந்து தோன்றினாய்’ எனபதன் பொருள் இதுவேயாகும்.

தோன்றிய அப்பரம்பொருள் கட்புலன் காணுமாறு தோன்றிற்றா அல்லது உள்ளத்து ஒளியாய் உள்ளே 'தோன்றிற்றா’ என்ற வினாவை எழுப்பினால், விடை கூறுவது கடினம். தோன்றினாய் என்ற சொல் கட்புலனுக்கு விருந்தாகவா அன்றி உள்ளத்து ஒளியாகவா என்று நம் மனத்திடைத் தோன்றும் வினாவிற்கு விடை கூறுவதுபோல நான்காம் அடியின் முதற்சொல் நிற்கின்றது. ‘கண்டும்’ என்று கூறியதால் புறத்தே அப்பொருள் காட்சியளித்தது என்பது தேற்றம். தன் உண்மையான 'வடிவை', அடிகளாரின் புறக்கண்களுக்கு விருந்தாகக் காட்டி உடன் மறைந்துவிட்டது. அதனாலேயே 'கண்டும் கண்டிலேன்’ என்கிறார் அடிகளார்.

47.

மேலை வானவரும் அறியாதது ஓர்
கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே
ஞாலமே விசும்பே இவை வந்து போம்
காலமே உனை என்றுகொல் காண்பதே 43

கோலம்-திருவுருவம். வானவர்கள்-குருவாக வந்து மல நீக்கும் உபதேசம் பெற்றிலராதலின் வானவரறியாத கோல மென்றார்.

இப்பாடலின் பின் இரண்டு அடிகள் இன்றைய உலகம் ஏற்றுக்கொண்டுள்ள ஐன்ஸ்டினின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகிய ஒரு விஞ்ஞானக் கருத்தைக் கூறுவதாகும். இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானியின் கருத்தை எட்டாம் நூற்றாண்டில் ஒரு மெய்ஞ்ஞானி உள்ளுணர்வால் கண்டு கூறியுள்ளார். இதன் விரிவை ‘திருவாசகம் சில சிந்தனைகள் - முதற் பகுதி' என்ற நூலின் பின்னுரை என்ற தலைப்பில் கண்டுகொள்ளலாம்.

48.

காணல் ஆம் பரமே கட்கு இறந்தது ஓர்
வாள் நிலாப் பொருளே இங்கு ஓர் பார்ப்பு எனப்
பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு உனைப்
பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே 44

வாள் நிலா மிக்கஒளி, பார்ப்பு-குஞ்சு. படிறு-பொய். பாணனேன்-பாழானவனாகிய நான்.

'ஞானக் கண்ணால்மட்டும் காணக்கூடிய பரம்பொருளே! ஒளி பொருந்திய நிலவைப்போல குளிர்ந்த ஒளிவடிவானவனே! முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவரும் குஞ்சைப்போலப் புலன்கள்மேல் பற்று வைத்திருக்கும் இவ்வுடம்பை விட்டு உன்னை அடைதல் எந்நாளோ? என்க.

49.

போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று
ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்
ஏற்று வந்து எதிர் தாமரைத் தாள் உறும்
கூற்றம் அன்னது ஓர் கொள்கை என் கொள்கையே 45

உள்ளன்புடையார் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து நின்று, புரண்டு, அலறி, ஆற்றல்மிக்க அன்புசெய்து அவனது திருவடியைப் பெறுவர்.

இதன் எதிராக மார்க்கண்டனை வெளவ வேண்டி இறைவனையே எதிர்த்து நின்ற காலதேவன் இறைவனால் உதைக்கப்பெற்றமையின் அத்திருவடி சம்பந்தம் பெற்றான். ஆற்றல் மிக்க அன்பு தம்பால் இல்லையாதலால் காலனைத் தண்டித்ததுபோல் தம்மையும் தண்டிக்கும் பொழுதுதான் அவன் திருவடிப்பேறு கிட்டுமோ-என்கிறார்.

50.

கொள்ளும் கில் எனை அன்பரில் கூய்ப் பணி
கள்ளும் வண்டும் அறா மலர்க் கொன்றையான்
நள்ளும் கீழ் உளும் மேல் உளும் யா உளும்
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே 45

நள்-நடு. கொள்ளும் கில்லெனை-எனை ஏற்றுக் கொள்வானோ. கூய்-கூவி. நள்ளும்-நெருங்குதல்.

‘தேன் நிறைந்த கொன்றை மலர்களை அணிந்த பெருமான் ஏனைய அடியார்களைப்போல என்னையும் கூவி அழைத்துப் பணிகொள்ள வல்லவன்(கொள்ளுங் கில்) 'கொள்ளும் கில்' என்ற பாடத்திற்கு மாறாகக் ‘கொள்ளும் கொல்’ எனப் பாடங்கொண்டு என்னையும் பணி செய்யுமாறு ஏற்றுக்கொள்வானோ என்று பொருள்கூறலும் ஒன்று. (உளும் உள்ளும்).

51.

எந்தை யாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவு அரும் செல்வனே 47

தோற்றம், ஈறு அற்றவனாகிய பெருமான்-ஏனையோர் யாவரும் சிந்தையாலும் சிந்திப்பதற்கரிய பெருமான், தானே வந்து தம்முடைய உள்ளம் புகுந்து அருள்செய்தான் என்கிறார்.

பின்னரும் ‘நானேயோ தவஞ் செய்தேன்’ (திருவாச: 555) என்று தொடங்கும் பாடலில் தானே வந்து எனது உள்ளம் புகுந்தருளி அடியேற்கு அருள் செய்தான்’ என்று கூறுகிறார்.

52.

செல்வம் நல்குரவு இன்றி விண்ணோர் புழுப்
புல்வரம்பு இன்றி யார்க்கும் அரும் பொருள்
எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன்
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே 48

நல்குரவு-வறுமை. எல்லையில்கழல்-சொல்லெல்லையும் கருத்தெல்லையும் கடந்துநின்ற திருவடி. கட்டம்-துன்பம்.

அஃறிணைப் பொருள்களாகிய புல் முதல், உயர்திணை என்று கூறப்பெறும் தேவர்கள், செல்வர், வறியர் எனப் பிரிக்கப்பெறும் மக்கள் ஆகிய யார்க்கும் அறியொனாதவன்.

மேலே கூறப்பெற்ற அஃறிணை, உயர்திணை என்ற இரு வகுப்பிலும் காணப்பெறும் அனைத்திலும் அந்தர்யாமியாய் அவன் இருப்பினும் அவர்கள் யார்க்கும் இவன் அறியொணாதவன் என்றார். 'அத்தகைய பெருமான் எல்லையில்லாத தன் திருவடிகளை எனக்குக் காட்டினான். அவற்றைக் கண்டபிறகும் அதனோடு இணைந்துவிடாது பிரிந்தனன். அதன் காரணம் என் மனம் அன்பால் உருகாமல், பல்வகைக் கற்களில் வலிதாய கருங்கல்போல், இருந்தமையினால் ஆகும். அதனால் யான்பட்ட துன்பம் சொல்லும் தரத்ததன்று'.

53.

கட்டு அறுத்து எனை ஆண்டு கண் ஆர நீறு
இட்ட அன்பரொடு யாவரும் காணவே
பட்டிமண்டபம் ஏற்றினை
ஏற்றினை எட்டினோடு இரண்டும் அறியேனையே 49

பட்டிமண்டபம்-வாத சபை..

திருப்பெருந்துறையில் திருவருள் பெற்று அமர்ந்திருந்த அடியார்களிடையே, தம்மையும் ஒருவராக்கி அமர்த்தியமையை நினைக்கின்றார் அடிகளார். சிவஞானம்(பர ஞானம்) கைவரப்பெற்ற அவர்கள் எங்கே? உலக ஞானம்(அபர ஞானம்) கூடப் பெறாத தாம் எங்கே?

இந்த நினைவு வந்தவுடன் தம்முடைய அறியாமைக்கு ஓர் எல்லை வகுக்கும் முறையில் எட்டும், இரண்டும் எவ்வளவு என்று அறியாத தாம் என்கிறார்.

எட்டினோடு இரண்டும் என்ற தொடருக்கு அகர(8) உகரம்(2) என்றும், இவை இரண்டும் கூட்டிய பத்துக்கு யகரம் என்றும் பொருள் கூறுவாரும் உளர். இவ்வாறு எல்லாம் பொருள் கொள்ள இடந்தந்து நிற்பதுதான் அடிகளாரின் பாடற்சிறப்பு (தமிழ் எண் வடிவில் அகரம் எட்டையும் உகரம் இரண்டையும் குறிக்கும். பத்து என்பதை யகரம் போன்ற எழுத்துக் குறிக்கும்).

54.

அறிவனே அமுதே அடி நாயினேன்
அறிவன் ஆகக் கொண்டோ எனை ஆண்டது

அறிவு இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அருள் ஈசனே {
{gap}}50

‘அறிவு வடிவானவனே! நீ என்னை ஆட்கொண்ட பொழுது நான் பேரறிவு படைத்தவனென்றோ கருதினாய்? முற்றறிவினனாகிய நீ, நான் மெய்யறிவு இல்லாதவன் என்பதை அறிவாய் அல்லவா?'

‘நீ ஆண்டுகொண்ட பிறகும் இப்பொழுதாவது நான் பேரறிவு படைத்தேன் என்றோ இல்லையென்றோ எனக்குத் தெரியவில்லை. என்னை நான் உணர்ந்து கொள்ளவும் நீதான் அருள் செய்ய வேண்டும்’ என்கிறார்.

அநுபோக சுத்தி

55.

ஈசனே என் எம்மானே
       எந்தை பெருமான் என் பிறவி
நாசனே நான் யாதும் ஒன்று
      அல்லாப் பொல்லா நாய் ஆன
நீசனேனை ஆண்டாய்க்கு
      நினைக்கமாட்டேன் கண்டாயே
தேசனே அம்பலவனே
      செய்வது ஒன்றும் அறியேனே 51

தேசன்-ஒளியையுடையவன்.

பொல்லா நாயான நீசனேனை ஆண்டாய் என்று கூறுவது ஓர் உட்பொருளைக் கொண்டதாகும். நாய் என்று தம்மைப் பல முறை அடிகளார் கூறிக்கொள்வது பல பாடல்களில் காணப்பெறும். இந்த இடத்தில் நாய்க்கு இரண்டு அடைமொழிகள் தரப்பெறுகின்றன. பொல்லா (நாய்) என்பது ஓர் அடை; நீசனான (நாய்) என்பது மற்றோர் அடை. கக்கியதை மீட்டு உண்ணும் நாயின் செயலை வெறுத்த நம் முன்னோர், நாயை இழிபிறவி என்று கூறினர். எத்துணை இழிபிறவியானாலும் மனிதரிடம்கூட அதிகம் காணப்பெறாத நன்றியறிதல் நாயினம் முழுவதற்கும் உண்டு. ஆதலின் அந்த இயல்பை நீக்குவதற்குப் 'பொல்லா நாய்’ என்றார்.

நீசனான நாய் என்று கூறுவது நாய் இனத்திற்குரிய காத்தல் தொழிலையும் செய்யாத நாய் எனப் பொருள் தந்துநிற்கிறது. இருக்கவேண்டிய இயல்பைப் பெற்றிராமல் இருப்பவர்களை நீசன் என்று கூறுவது மரபு. நீசனேனை என்றதால் மனிதர்க்குரிய பொதுப்பண்பும் தம்மிடம் இல்லை என்றவாறு.

இவ்வாறு இருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் நீ என்னை ஆண்டாய். ஆண்ட பிறகாவது நீ செய்த பேருப காரத்தை நினைந்திருக்க வேண்டும். நினையாமல் இருந்து விட்ட நான் சராசரி மனிதரிலும் நீசனாகி விட்டேன்

‘இந்த நிலையில் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதவனாக இருக்கின்றேன்’ என்கிறார்.

56.

செய்வது அறியாச் சிறு நாயேன்
       செம் பொன் பாத மலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும்
       பெறுதற்கு உரியேன் பொய் இலா
மெய்யர் வெறி ஆர் மலர்ப் பாதம்
        மேவக் கண்டும் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு
         இருப்பது ஆனேன் போர் ஏறே 52

வெறி-மணம்.

‘அற்ப நாய்போன்றவனாகிய நான் மாபெரும் பேறு பெற்றும் இப்பொழுது செய்வதறியாது திகைக்கின்றேன். காரணம், நான் மெய்யனாக இருந்திருப்பின் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்கும். எனவே, 'செய்வதறியாச் சிறு நாயேன்' என்றார்.

அப்படியானால், தம் உண்மைநிலை என்ன? தமக்குக் கிடைத்த பேறு தம் தகுதியால் வந்தது அன்று என்பார், ‘பொய்யர் பெறும் அத்தனையும் பெறுதற்கு உரியேன்' என்றார்.

உலகியலில் சராசரி மனிதர்கூட, இன்றியமையாத ஒன்றைக் கண்டாலும் அல்லது கேட்டாலும் அதை மனத்திற் கொண்டு அதன்வழி நிற்க முயல்வர். மெய்யன்பு உடையவர்கள், மனம் பொருந்திய மலர்போன்ற திருவடிகளை அடைவதைக் கண்டும், கேட்டும் உள்ளேன். அப்படியானால், சராசரி மனிதனாக நான் இருந்தாற்கூட அம்மெய்யரின் முன்னேற்றத்திற்குக் காரணம் அவர்கள் மெய்யன்பே என்பதை அறிந்திருப்பேன். அதன் பயனாக என் பொய்யன்பை மாற்றிக்கொண்டு நானும் மெய்யனாக மாறியிருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் உண்டு உடுத்திப் பொறி, புலன்களுக்கு இடமான இந்த உடம்பினை ஓம்பி இங்கு வாழ்கின்றேன்’ என்கிறார். ஏறு போன்ற பெருமானே! உடம்பினை ஓம்பும் இந் நிலையிலிருந்து மாறுவதற்கு நீயே அருள் செய்ய வேண்டும் என்பது குறிப்பெச்சம்.

57.

போர் ஏறே நின் பொன் நகர்வாய்
       நீ பேந்தருளி இருள் நீக்கி
வார் ஏறு இள மென் முலையாளோடு
       உடன் வந்தருள அருள் பெற்ற
சீர் ஏறு அடியார் நின் பாதம்
       சேரக் கண்டும் கண் கெட்ட
ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ
       கொடியேன் உயிர்தான் உலவாதே 53

ஊரேறு-ஆள்வாரில்லாத ஊர்க்காளை. உலவாதே-நீங்காதே.

திருப்பெருந்துறை நிகழ்ச்சியை அடிகளார் மீண்டும் இங்கு நினைக்கின்றார். குருவின் எதிரே இருந்த அடியார்கள் அனைவரும் இவர் எதிரேயே குருவோடு சென்று மறைந்தனர். சென்றவர்கள் பொன்னகர் புக்கு அவர் திருவடி நீழலை அடைந்தனர்.

இரண்டாவது அடியில் உமையம்மையோடு வந்தருள என்ற தொடர் வருகிறது. குருமட்டும் இருந்தாராதலின் இறைவியோடு என்ற தொடருக்கு இறைவனது மறைந்து நிற்கும் அருட்சக்தி என்று பொருள் கூறுவர். அது ஏற்புடையதாகத் தெரியவில்லை. திருப்பெருந்துறையில் வாதவூரர் கண்ணில் முதலிற் பட்டது குருவின் திருவுருவே ஆகும். திருவாதவூரரைக் குருவினிடம் இழுத்துச் சென்றது அவரிடம் இருந்து புறப்பட்ட அருள் அலைகளே என்று முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். அந்த அருள் அலைகளால் ஈர்க்கப்பட்ட வாதவூரர் இறைவனுடைய தீட்சை பெற்ற பின்னர் அங்கே குருவடிவம் மறைந்து உமையோடு உடையனாகிய இறைவன் காட்சியளித்ததை ஊனக் கண்ணாலும் காண முடிந்தது. இதை முன்னருங் கூறியுள்ளார் (திருவா:3-64-86) இந்த நூல் வரிசையில் முதல் நூல் பக். 189 காண்க. ஆதலின் இறைவன், இறைவியோடும் அடியார்களோடும் பொன்னகர் புகுந்தான் என்று கூறுகின்றார். எனவே, இங்குக் கூறியது மறைந்து நிற்கும் அருட்சக்தியை அன்று; உமையொரு பாகனாகக் காட்சி அளித்த பெருமானையே குறிப்பிடுகிறார்.

பொதுவாக ஊரிலுள்ள மாடுகள் யாரேனும் ஒருவரைச் சார்ந்தே இருக்கும். (மாடு என்ற சொல் செல்வத்தையும் குறிப்பது) உரிமையாளர் இல்லாத மாடுகள் எங்கும் இரா. மாடுகளைக் குறிக்கும்போது இன்னாருடைய மாடுகள் என்று இன்றும் சொல்வதைக் கேட்கலாம். இதற்குப் புறனடை கோயில் மாடுகளே ஆகும். உரிமையாளருடைய மாடுகளைப்போலக் கோயில் மாடுகள் எங்கும் கட்டப்படுவது இல்லை. கோயில் மாடுகள் என்ற காரணத்தால் பலரும் உணவு தருவர் என்றாலும், கட்டுத்துறை இல்லாத காரணத்தால் கோயில் மாடுகள் ஊரைச் சுற்றி வரும். அதிலும் குருடாக இருக்கும் மாடு ஒதுங்கும் இடம் தெரியாமல் எங்கும் சுற்றிவரும். இதனையே கருத்துட் கொண்ட அடிகளார் ‘கண்கெட்ட ஊரேறாய் இங்கு உழல்வேனோ’ என்றார்.

58.

உலவாக் காலம் தவம் எய்தி
       உறுப்பும் வெறுத்து இங்கு உனைக் காண்பான்
பல மாமுனிவர் நனி வாட
        பாவியேனைப் பணி கொண்டாய்
மல மாக்குரம்பை இது மாய்க்க
       மாட்டேன் மணியே உனைக் காண்பான்
அலவாநிற்கும் அன்பு இலேன்
      என் கொண்டு எழுகேன் எம்மானே 54

உலவாக் காலம்-எல்லையற்ற காலம். அலவா-வருந்தி. குரம்பை-குடிசை.

‘இறைவா உனைக் காணவேண்டிக் காலமெல்லாம் தவஞ்செய்து உடம்பை உருக்கிக்கொள்பவர்கள் அப்படியே நிற்கின்றார்கள்.

‘இத்தகைய முயற்சியொன்றும் யான் செய்யவில்லை; உன்பால் அன்பும் இல்லை. அப்படியிருந்தும் எனைக் கூவிப் பணிகொண்டாய். உடனடியாக என் உடலை மாய்த்து உன்னோடு வந்திருக்க வேண்டும். அஃதொன்றும் செய்திலேன்’ என்கிறார். 59.

மான் நேர் நோக்கி உமையாள்
      பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே அமுதே கரும்பின்
        தெளிவே சிவனே தென் தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக்
        கூடுவார் நின் கழல் கூட
ஊன்ஆர் புழுக்கூடு இது காத்து இங்கு
      இருப்பது ஆனேன் உடையானே 55

இப்பாடலின் முதலடி திருப்பெருந்துறை நிகழ்ச்சியை நினைவு கூர்வதாகும். அந்த நிலையில் குருமட்டும் இருந்தாரே தவிரப் பிறர் காணும்படி வேறு யாரும் அங்கில்லை. அடிகளார் முதலில் குருவைப் பார்த்தாரேனும் சில விநாடிகளில் உமை ஒரு பாகனைக் கண்டுவிட்டார் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். 'மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட தேனே’ என்ற அடி, மேலே கூறிய கருத்தை வலியுறுத்துவதாகும்.

60. உடையானே நின்தனை உள்கி
      உள்ளம் உருகும் பெரும் காதல்
உடையார் உடையாய் நின் பாதம்
     சேரக் கண்டு இங்கு ஊர் நாயின்
கடைஆனேன் நெஞ்சு உருகாதேன்
      கல்லா மனத்தேன் கசியாதேன் முடைஆர்.
புழுக்கூடு இது தூத்து இங்கு
      இருப்பதுஆக முடித்தாயே 56

முடை-நாற்றம்.

‘உன்னை நினைத்த மாத்திரத்தில் ஊனும் உயிரும் உருகும் அடியார்கள் பலரை உன் அடிமைகளாகக் கொண்டுள்ளாய். புழுக்கள் நிறைந்த இவ்வுடலோடு கூடிய நான், நின்பால் அன்பு செய்யவில்லை; உருகவில்லை. அதனால்தான் போலும் இவ்வுலகிலேயே நான் இருக்கு மாறு செய்துவிட்டாய்” என்கிறார்.

கல்லா மனம் என்பது எத்தனை நன்னெறிகளைக் கேட்டாலும் அதனைக் கற்று அதன்படி நடவா மனம் என்ற பொருளைத் தரும். கல் ஆம் மனம் என்று பாடம் கொண்டால், கருங்கல் போன்று இறுகிய மனம் என்ற பொருளைத் தரும்.

61.

முடித்த ஆறும் என்தனக்கே
        தக்கதே முன் அடியாரைப்
பிடித்த ஆறும் சோராமல்
        சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்த ஆறும் துகில் இறையே
      சோர்ந்த ஆறும் முகம் குறு வேர்
பொடித்த ஆறும் இவை உணர்ந்து
      கேடு என்தனக்கே சூழ்ந்தேனே 57

சோராமல்-கைநழுவவிடாமல். குறுவேர்-சிறுவியர்வை. துகில்ஆடை. இறை-சிறிது.

தெளிவாகப் பொருள் காண முடியாதபடி மிகச் சிக்கலாக அமைந்துள்ள பாடலாகும் இது. இங்கு ஒருத்தி வாய் என்பது தொடங்கி ‘இவை உணர்ந்து' என்பது வரையில் வரும் தொடர்களுக்கு, திருமணம் ஆனவர், மனைவியை விட்டு வந்தபோது இக்குறிப்புகள் அவர் மனைவிபால் தோன்றின என்று உரை கூறியுள்ளனர்.

அடிகளார் மண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தவர் என்று, இவைபோன்ற பாடல்களை வைத்துக்கொண்டு பலரும் உரை கூறியுள்ளனர். வரலாற்று அடிப்படையில் திருவாதவூரரைப்பற்றி நாம் ஒன்றும் அறிய முடியவில்லை. இந்த நிலையில் தம்முடைய பழைய வாழ்க்கையை நினைந்து இங்குப் பேசுகிறார் என்று கொள்வதில் தவறில்லை. எந்த வயதிலும் எந்த நிலையிலும் இவ் வெண்ணங்கள் ஒரோவழி மனத்திடைத் தோன்றுவது இயல்பே ஆகும்.

முற்றத் துறந்த நிலையிலும், இறையருள் பெற்ற நிலையிலும்கூட, மனக்குரங்கு முழுவதுமாக அடங்கி விடுவதில்லை. ஒரோவழித் தலைகாட்டும் அதனை நினைந்து வருந்தி, இறைவனிடமே இக்குறையைப் போக்க வேண்டும் என்று அழுது வேண்டி, நற்பயன் பெற்றவர்கள் பலர்.

ஒரோவழி இப்பழைய நினைவுகளில் செல்லுகின்ற மனம், உடனடியாக அடக்கப்பட வில்லையானால் ஒருவனைப் படுகுழியில் தள்ளிவிடும் என்ற கருத்தை உணர்த்தவே 'கேடு என்றனக்கே சூழ்ந்தேனே’ என்று பாடியுள்ளார்.

இப்பாடலும் இதுபோன்ற கருத்துடைய சில பாடல்களும் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளன. இவை அடிகளாரின் மனத்தில் ஒரோவழித் தோன்றிய எண்ணங்களின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.

இவ்வாறு கூறுவதால் அடிகளாரின் உயர்வுக்கு இழுக்கு நேர்ந்துவிடும் என்று பலர் கருதினர் போலும்! நம்மிடம் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவதற்காகவே இக்குறைகள் தம்மாட்டு உள்ளது போல் அடிகளார் பாடியுள்ளார் என்று அவர்கள் கருதினர். இவற்றை ஏறட்டுக்கொண்டு பாடினாரே தவிர, இக்குறைகள் அவர்மாட்டு இருந்தன என்று நினைப்பதோ பேசுவதோ பெரும் தவறாகும் என்றே பலரும் கருதுகின்றனர்.

இவர்கள் நினைப்பதுபோல் எவ்விதக் குறைபாடும் இன்றிப் பண்பாட்டின் உறைவிடமாக இப்பெருமக்கள் இருந்திருப்பின் அவர்கள் வாழ்க்கையோ அன்றி அவர்கள் பாடல்களோ நமக்கு முன் மாதிரியாக அமைவது எளிதன்று. காரணம், அவற்றை ஓரளவு புரிந்துகொள்ளலாமே தவிர, பின்பற்றுவது மிகக் கடினம்.  இறைவனைப் போலக் குறைவிலா நிறைவாக இவர்கள் இருந்திருப்பின், இவர்கள் வாழ்க்கையை முன் உதாரணமாகக் கொண்டு நம் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை.

இதன் எதிராகச் சராசரி மனிதர்களாகக் குறைவு நிறைவுகளோடு இப்பெருமக்கள் வாழ்ந்தார்கள்; இப் பிறப்பிலேயே இறையருளை முழுவதுமாகப் பெற்றுவிட வேண்டும் என்ற குறிக்கோளை முன் வைத்துக் கொண்டார்கள். அதை அடைவதற்காகவே ஒயாமல் இறைவனை வேண்டினார்கள்; குறிப்பிட்ட நேரத்தில் பூசை செய்துவிட்டு மற்ற நேரங்களில் எல்லா வகைத் தவறுகளையும் செய்பவர்கள் போல் அல்லாமல் இவர்கள் மாறுபட்டவர்கள்.

தம் குறைகளையும் மனக் கோட்டங்களையும் இறைவனிடம் முறையிடுவதன் மூலம் இப்பிறப்பிலேயே தம் குறைகளைப் போக்கிக்கொண்டு உய்கதி அடைந்தவர்கள்; ஆதலால் இவர்கள் பாடல்கள் நம் மனத்தைத் தொட்டு இழுக்கின்றன. இப்பெருமக்கள் என்றோ ஒருமுறை, ஒரு விநாடிநேரம் மனத்தில் தோன்றிய கோட்டங்களுக்கு வடிவு கொடுத்துப் பாடினர். ஆகவேதான், இப்பெருமக்களுடைய வாழ்வும் வாக்கும் இன்றும் நமக்கு வழிகாட்டியாக அமைகின்றன; என்றும் இப்பணியை இப்பாடல்கள் செய்யும்.

நம்முடைய வாழ்வில் நிறைவு என்பது ஒரு மிகச் சிறிய பகுதி; குறைவு என்பது மிகப் பெரிய பகுதி. அடிகளார் போன்ற பெரியோர்கள் வாழ்க்கையில் நிறைவு என்பது மிகப் பெரிய பகுதி; குறைவு மிக மிகச் சிறிய பகுதி. என்றாலும் என்ன? நம்மிடம் சிறிதாக இருப்பது அவர்களிடம் பெரிதாக இருப்பினும் இருவர்கள் வாழ்க்கையிலும் இது பொதுத்தன்மை உடையதாகும். ஆதலால் இவர்களை முன்மாதிரியாகவும் குறிக்கோளாகவும் வைத்துக்கொண்டு நாம் முன்னேற முடியும்.

இவர்களை முன்மாதிரியாக நாம் அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே, இறைவன் அடிகளார் போன்றவர்களைப் படைத்துள்ளான். பெரும் கல்வியாளராக வளர்ச்சி பெற்று, மாபெரும் பதவியில் அமர்ந்து, உலகியல் அனுபவங்களை முற்றிலுமாகப் பெற்றிருந்த இவர், திடீரென்று மாறி அனைத்தையும் துறந்து இறை அனுபவத்தில் திளைத்துத் திருவாசகம் பாடும் நிலையை அடைந்தார்.

எனவே, பிறந்தது முதல் கல்வி கற்றுப் பெரும் பதவியில் அமர்கின்றவரை அடிகளார் போன்றவர்களுக்கும் நம் போன்றவர்களுக்கும் ஒரு பொதுத்தன்மை இருப்பதை எளிதில் அறியலாம். இந்தப் பொதுத்தன்மையில் பங்கு கொண்ட நாம் அடுத்தபடியாக அவர்கள் சென்ற வழியில் ஏன் செல்லக்கூடாது? இந்த எண்ணத்துடன் வாழத் தொடங்கினால் அடிகளார் அடைந்த அந்தத் தன்னேரில்லாத் தன்மையை இப்பிறப்பில் அடைய முடியா விட்டாலும் அவ்வழியில் பல படிகள் முன்னேறலாம் அல்லவா? அவர்கள் நம் முன்மாதிரியாக அமைகின்றார்கள் என்று கூறுவதில் தடையென்ன?

இன்று நம்மில் பலர் அடிகளார் போன்றவர்களை நம்மில் வேறுபடுத்தி எங்கேயோ உயர்த்தி வைத்துவிட்டு, அவர்கள் அடைந்த நிலையை நாம் அடைய முடியாது; அப்படி நினைப்பது கூடப் பாவம் என்று பேசி வருகின்றனர்.

இப்படிப் பேசும் இவர்கள், அடிகளார் மூலமாகத் திருவாசகத்தை உலகிற்கு இறைவன் ஏன் தந்தான் என்ற வினாவிற்கு விடை கூற முடியாமல் விழிக்க நேரிடும்.

திருவாசகம் தோன்றியது நம்பிக்கையூட்டி, நம்மை வளர்ப்பதற்காகவே, நம்மை நம்பிக்கை இழக்கச் செய்வதற்கு அல்ல. இதைத் தவறாமல் மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.

62.

தேனைப் பாலைக் கன்னலின்
      தெளியை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருககும உடையானை
      உம்பரானை வம்பனேன்
நான் நின் அடியேன் நீ என்னை
      ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானும் சிரித்தே அருளலாம்
       தன்மை ஆம் என் தன்மையே 58

கன்னல்-கரும்பு. தெளிந்தார்-அநுபவஞானிகள். ஊன்ஊனாகிய உடல்.

‘ஐயனே! புதிதாக வந்துசேர்ந்தவன் ஆகிய நான் உனக்கு அடியனாகிவிட்டேன். நீயே என்னை ஆட்கொண்டாய் என்று நான் கூறினால், அது உனக்குச் சிரிப்பை விளைவிக்கும். அந்தச் சிரிப்பின் காரணமே, நான் கூறுவது பொருந்தாக் கூற்று என்பதாலாகும். என்றாலும், மறுபடியும் என்னை மன்னித்து ஆட்கொள்வாய்' என்றவாறு.

63.

தன்மை பிறரால் அறியாத
      தலைவா பொல்லா நாய் ஆன
புன்மையேனை ஆண்டு ஐயா
      புறமே போக விடுவாயோ
என்னை நோக்குவார் யாரே
      என் நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழும் திருமேனி
      எந்தாய் எங்குப் புகுவேனே 59

பிறரால் அறியாத தலைவா-பலதிறப்பட்ட ஆன்மாக்களின் அறிவால் அறியப் பெறாத தன்மையையுடைய தலைவனே.

மாபெரும் சான்றோரும் அறிவாளியுமான அடிகளார் தம் நூலறிவு கொண்டு இறைவனை அடைய முயன்றிருத்தல் வேண்டும். எத்தனையோ பிறவிகளில் முயன்றும் கிட்டாத அது திருப்பெருந்துறையில் ஒரு விநாடியில் கிட்டி விட்டது. அந்த அனுபவத்தில் மூழ்கித் திளைத்த பிறகு ஒர் உண்மையை அடிகளார் கண்டார். எத்தனை பிறப்புக்களில் எவ்வளவு முயன்றாலும், அறிவின் துணை கொண்டு அவனை அறியமுடியாது. ஆனால், அவன் அருள் கிட்டினால் ஒரே விநாடியில் அவனை உணர்ந்து அனுபவிக்க முடியும். அனுபவத்தில் இந்த உண்மையைக் கண்ட பிறகு 'தன்மை பிறரால் அறியாத தலைவா’ என்று பாடுகிறார். அறியாத என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம் அறிவால் அறிய முடியாதவன் என்பது பெறப்பட்டது.

இந்த அனுபவம் மறைந்த நிலையில், மீட்டும் தம் முயற்சியால் அதனைப் பெறவேண்டும் என்று அவர் முயன்றிருக்க வேண்டும். அது இயலாமற்போகவே 'ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ?' என்று பேசுகிறார். தம்மால் முடியாதபோது அவனும் தம்மை ஒதுக்கி விடுவானோ என்ற அச்சம் தோன்றவே ‘போக விடுவாயோ’ என்று அரற்றுகிறார்.

இப்பாடலில் முதன்முதலாகத் தோன்றிய இவ் வெண்ணம் நீத்தல் விண்ணப்பத்தில் விரிந்து செல்வதைக் காணலாம்.

64. புகுவேன் எனதே நின் பாதம்
போற்றும் அடியார் உள் நின்று
நகுவேன் பண்டு தோள் நோக்கி
நாணம் இல்லா நாயினேன்
நெகும் அன்பு இல்லை நினைக் காண
நீ ஆண்டு அருள அடியேனும்

தகுவனே என் தன்மையே
     எந்தாய் அந்தோ தரியேனே 60

நகுவேன்-சிரிப்பேன். பண்டு-உடல் வனப்பிலும் இளமையிலும் ஆசைவைத்த அன்றைக்கு. புகுவேன்-சேர்வேன்.

திருப்பெருந்துறையில் அடியார் கூட்டத்தினிடையே இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அக்கூட்டத்தில் இருந்துதான் குருவின் தோள்களைக் காணவும் அதனால் மகிழ்ச்சிப் பூரிப்பு ஏற்படவும் ஒரு சூழ்நிலை உருவாயிற்று.

இப்போது தோள்களைக் காணும் வாய்ப்பு இல்லை. அந்த அடியாரிடையே சொல்லலாம் என்றால் அவர்களும் இப்போது இல்லை.

அந்த அடியார் கூட்டம் இல்லாவிடினும் ஒருவேளை உள்ளம் உருகும் அன்பு (நெகும் அன்பு) இருந்திருப்பின் அவனைக் காண முடிந்திருக்கும். இரண்டும் இல்வழி இறைவனால் ஆளப்படும் தகுதி தம்பால் உண்டோ என்று ஐயுறுகின்றார்.

காருணியத்து இரங்கல்

65.

தரிக்கிலேன் காய வாழ்க்கை
    சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
     விடலையே போற்றி ஒப்பு இல்
ஒருத்தனே போற்றி உம்பர்
     தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
     நின்மலா போற்றி போற்றி 61

வானம்-பரவெளி. ஒப்பில் ஒருத்தன்-ஒப்பில்லாமையால் தான் ஒருவனேயானவன். விடலை-இளையோன்.

இதற்கு முந்திய பாடலில் 'நினைக் காண நெகும் அன்பில்லை' என்று வருந்தினார் அல்லவா? அன்பு என்பது, தானே பிறக்கவேண்டிய ஒன்றாகும். அந்த அன்புதானும் நெகும் அன்பாக, அதாவது மனத்தையும் உள்ளத்தையும் உருக்கும் அன்பாக இருத்தல்வேண்டும். எதுபற்றி இந்த அன்பு தோன்ற வேண்டும்? ‘நினைக்காண' என்று கூறினார். ஆதலின், அவரைக் காணவேண்டும் என்ற ஒரே கருத்தில் பொறி, புலன்கள், மனம், சித்தம் ஆகிய அனைத்தும் ஈடுபடவேண்டும். அவை ஈடுபட்டன என்பது எப்படித் தெரியும்? மனமும் உள்ளமும் உருகும் நிலை ஏற்பட்டால் அவை ஈடுபட்டன என்பது நன்கு தெரியும். அந்த நிலை வந்தவுடன் இறைவன் வெளிப்பட்டு நிற்பான்.

திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை மறுபடியும் காணவேண்டும் என்ற ஒரே எண்ணம், முழுவதுமாக அடிகளாரை ஆட்கொண்டிருக்கவேண்டும். அது சித்திக்காத நிலையில் தம் குறையை நினைந்து வருந்துதலும் என்ன செய்தால் அது கிட்டும் என்று ஏங்குதலும் சென்ற ஐம்பது பாடல்களில் பேசப் பெற்றுள்ளன.

அடிகளாரின் ஏக்கம்கண்ட இறைவன், நெகும் அன்பு அவர்பால் வந்துவிட்டமையின், குரு வடிவில் இல்லாமல் தன் சுய வடிவில் காட்சியளித்தான் போலும். அந்தக் காட்சியைக் கண்டு உருகிய அடிகளார் 'போற்றி, போற்றி' என்று அவனை வழுத்தத் தொடங்குகிறார்.


66. போற்றியோ நமச்சிவாய
புயங்கனே மயங்குகின்றேன்
போற்றியோ நமச்சிவாய
புகல் இடம் பிறிது ஒன்று இல்லை
போற்றியோ நமச்சிவாய

புறம் எனைப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சிவாய
சய சய போற்றி போற்றி

62

போக்கல்-போக்காதே. புயங்கனே-பாம்பை அணிந்தவனே.

சென்ற பாடலைப் போலவே இப்பாடலிலும் அவர் இறைவனைப் போற்றும் செய்தி தொடர்கின்றது.

சிவபுராணத்தின் முதலடியில் வரும் ‘நமச்சிவாய' என்ற சொல்லுக்குப் பொருள் எழுதும்போது இது இறைசொரூபம் என்று விளக்கப்பெற்றது. ஒளி வடிவான அந்தச் சொரூபத்தை எழுத்துக்களின் அதிர்வு அலைகளாக மாற்றினால், நமச்சிவாய என்ற எழுத்துக்களில் அடங்கும் என்றும் கூறியுள்ளோம். இங்கும் 'போற்றியோ நமச்சிவாய புயங்கனே' என்று கூறப்பெற்றதால் அந்தச் சொரூபத்தை முன்நிறுத்திப் 'புயங்கனே' (பாம்பை அணிந்தவனே) என்று விளிக்கின்றார். போற்றி என்ற வழுத்துதற் சொல்லை முன்னே பெய்துள்ளமையின் இவருடைய அன்பின் ஆழம் வெளிப்படுகிறது.

‘போற்றியோ' என்பதற்கு பதில் 'போற்றி ஓம்' எனப் பாடங்கொள்வாரும் உண்டு.

‘மயங்குகின்றேன். புகலிடம் பிறிதொன்றில்லை' என்ற சொற்கள் முழுவதுமாகச் சரணாகதி அடைதலைக் குறிப்பனவாகும். பின்னரும்,

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை
ஆட் கொண்டபோதே கொண்டிலையோ

(திருவாச. 502)

என்று கூறியுள்ளமையின் இங்குக் கூறப்பெற்றது முழுச் சரணாகதி என்று கூறுவதில் தவறில்லை.

67.போற்றி என் போலும் பொய்யர்

தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்
போற்றி நின் பாதம் போற்றி
நாதனே போற்றி போற்றி போற்றி
நின் கருணை வெள்ளப்
புது மதுப் புவனம் நீர் தீக்
காற்று இயமானன் வானம்
இரு சுடர்க் கடவுளானே

63

வள்ளல்-கைம்மாறு கருதாது உபகரிப்பவன். கருணை வெள்ளப் புதுமது-இதுவரையில் நுகர்ந்தறியாத கருணை வெள்ளமாகிய அமுதம்.

இப்பாடலில் இறைவனை வள்ளல் என்றும், அட்ட மூர்த்த வடிவாய் உள்ளான் என்றும் பேசுகிறார்.

திருஅண்டப் பகுதியின் 20 முதல் 26ஆம் அடிவரை உள்ள பகுதிக்கு விளக்கம் எழுதும்போது அட்ட மூர்த்தங்கள் இறைவடிவம் என்ற பழைய கருத்தை அடிகளார் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன் என்பவற்றில் ஒவ்வொன்றுக்குமுள்ள தனித்தன்மையை எடுத்தோதி, அந்தத் தனித் தன்மையை அவற்றுக்குத் தந்தவனே சிவபெருமான்தான் என்று அடிகளார் கூறியுள்ளமையையும் விளக்கிக் காட்டி யுள்ளோம்.

அங்கு 'அமைத்தோன், வைத்தோன், செய்தோன்' முதலிய சொற்கள் அமைத்தல் முதலிய தொழில்களைச் செய்விக்கும் ஏவுதற் கர்த்தாவாக இறைவன் உள்ளான் என்பதை விளக்கின. இறைவன் இச்சா மாத்திரதில் எதனையும் செய்விப்பவன் ஆதலின் ஏவுதற் கர்த்தாவாக ஆயினன். அமைத்தோன் என்பதால் அமைப்பை ஏற்றுக் கொள்ளும் பொருள், அமைத்தலாகிய செயல், அதனைச் செய்யும் கர்த்தா என மூன்றாக விரிந்து நிற்றலின் அவனே அட்ட மூர்த்த வடிவம் என்று சொல்வது பொருந்தாமை புலப்படுகிறது.

ஆனால், மேலோட்டமாகப் பார்க்கும்போது இப்பாடலின் பின் இரண்டு அடிகள் இக்கருத்துக்கு முரண் பட்டதுபோல் தோன்றுகின்றன. சற்று நின்று நிதானித்தால் முரணின்மை வெளிப்படும்.

‘புவனம், நீர், தீ, காற்று, இயமானன், வானம், இருசுடர்க் கடவுளானே' என்ற தொடரில், கடவுளானே என்ற சொல் நுண்மையான பொருளோடு அமைக்கப் பெற்ற சொல்லாகும். 'புவனம், நீர், தீ, காற்று, இயமானன், வானம், இருசுடர் ஆகியவற்றைப் படைத்து, அவற்றின் உள்ளே ஊடுருவியும், புறத்தே அவற்றைக் கடந்தும் உள்ளவனே' என்பது பொருளாகும்.

கட+உளானே என்பதால், படைக்கப்பட்ட இவற்றின் உள்ளேயும், - இவற்றைக் கடந்தும் உள்ளான் என்பது பொருளாகும். இப்பொருளை அறிந்துகொண்டால் முரணின்மை நன்கு வெளிப்படும்.

தகுதி பாராமல் அள்ளித் தருபவர்களை வள்ளல் என்று அழைப்பது உலக வழக்கு. தம் தகுதி பாராது திருவடிகளாகிய வீட்டையே தந்தார் ஆதலின் அவரையே வள்ளல் என்கிறார்.

68.கடவுளே போற்றி என்னைக்
கண்டுகொண்டு அருளு போற்றி
விட உளே உருக்கி என்னை
ஆண்டிட வேண்டும் போற்றி
உடல் இது களைந்திட்டு ஒல்லை .
உம்பர் தந்து அருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி 64

கண்டுகொண்டருளு-எப்பொழுதும் திருவருணோக்கம் செய். விட-இருவகைப்பற்றுக்களும் அகல. உள்-மனம். உம்பர்-வீட்டுலகம், ஒல்லை-விரைவாக.

கிடைத்த இன்ப அனுபவம் தம்மைவிட்டு நீங்கிப் போனதற்கு இந்தப் பூதவுடலே காரணம் என்ற எண்ணம் வலுவாக அடிகளாரைப் பற்றியிருத்தது போலும்.

இப்பாடலின் முதலடியில் வரும் 'கண்டுகொண்டு அருளு போற்றி' என்ற தொடர் உலகியலில் அன்றும் இன்றும் வழங்கிவரும் ஒரு தொடராகும். கண்டு கொள்வாயாக என்ற தொடர், 'என் குறை தீர்ப்பாயாக' என்ற பொருளைத் தருவதாகும்.

‘விட உள்ளே உருக்கி' என்ற சொற்கள் இரண்டு தனிப்பட்ட பொருளைத் தருவன. உள்ளே உருகுமாறு செய்தல் வேண்டும் என்பது ஒரு பொருள். அவ்வாறு உருக்கம் நிகழ்ந்தால் உலகியற் பந்தம் விடுபடும். அதாவது உலக பந்தம் விடும்படியாக என் உள்ளத்தை உருக்கி ஆண்டுகொள்வாயாக என்பது மறுபொருள் ஆகும்.

69. சங்கரா போற்றி மற்று ஓர்

சரண் இலேன் போற்றி கோலப்
பொங்கு அரா அல்குல் செவ்வாய்
வெள் நகைக் கரிய வாள் கண்
மங்கை ஓர் பங்க போற்றி
மால் விடை ஊர்தி போற்றி
இங்கு இவ் வாழ்வு ஆற்றகில்லேன்
எம்பிரான் இழித்திட்டேனே

65

சரண்-பாதுகாப்பு. கோலம்-அழகு. பொங்கு அரா-சினத்தாற் சீறியெழும் பாம்பு.

இப்பாடலிலும் தமக்கு வேறு சரணில்லை என்றும் இவ்வுலகவாழ்வை வெறுத்துவிட்டதாகவும் (இழித்திட்டேன்) கூறுகிறார்.

70.இழித்தனன் என்னை யானே

எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை
ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம்
பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடு இவ்வாழ்வு போற்றி
உம்பர் நாட்டு எம்பிரானே

66

'உம்பர்நாடு-வீட்டுலகம்.

தம்முடைய இப்போதைய நிலையைக் கண்டு, தாமே தம்மை வெறுத்துக்கொள்வதாகக் கூறுகிறார் அடிகளார். இறையனுபவம் தம்மைவிட்டு நீங்கியமைக்குத் தாமே காரணம் என்ற குற்ற உணர்வு மேலிட, இப்பொழுது இறைவனை நோக்கிச் சாலப் பெரியவனாகிய அவன் சிறியவர்கள் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும் என்று வேண்டுகிறார். அவ்வாறு பொறுப்பது பெரியவன் ஆகிய அவனுக்குக் கடமை என்றும் நினைவூட்டுகிறார்,

இந்தக் குற்ற உணர்வு அவரிடம் ஆழப் படிந்திருந்தது என்பதைத் திருவாசகத்தின் பல இடங்களிலும் காணலாம். 'பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே' (திருவாச: 110) என்றும் 'வெறுப்பனவே செய்யும் என் - சிறுமையை நின் பெருமையினாற் பொறுப்பவனே' (திருவாச: 409) என்றும் கூறியுள்ளமை இக்கருத்தை வலுப்படுத்தும்.

71.எம்பிரான் போற்றி வானத்தவர்

அவர் ஏறு போற்றி
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை
கூறவெள் நீற போற்றி
செம் பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம்பலவ போற்றி
உம்பராய் போற்றி என்னை .
ஆளுடை. ஒருவ போற்றி

67

கொம்பர் ஆர்-பூங்கொம்பை ஒத்த மருங்குல்-இடை, கூறஇடப்பாகத்தில் உடையவனே. நீற-நீற்றினை உடையவனே.

‘காருணியத்து இரங்கல்’ என்று தலைப்புத் தரப்பெற்றுள்ள இப்பகுதியின் இரண்டு பாடல்களில் (திருவாச 69, 7) அன்னையை இடப்பாகத்து உடையவன் என்ற குறிப்பு வருகிறது. 69ஆம் பாடலில் 'இவ்வாழ்வு ஆற்றகில்லேன்’ என்றும் 70ஆம் பாடலில் 'ஒழித்திடு இவ்வாழ்வு’ என்றும் வேண்டுதலில் ஒரு குறிப்பு உள்ளது போலும்.

ஒருவன் தாயினிடம் சென்று 'இந்த வாழ்வை ஒழிக்க உதவி புரிவாயாக’ என்று கூறினால் தாய் ஒரு நாளும் அதற்கு உடன்பட மாட்டாள். இவ்வாறு வாழ்வை வெறுத்து நொந்துபோனதற்குரிய காரணத்தை அறிந்து அக்காரணத்தைப் போக்க முயல்வதே தாயின் சிறப்பாகும்.

இந்த அடிப்படையிலேயே இந்த இரண்டு பாடல் களிலும் (திருவாச 69, 71) அன்னையை நினைவுகூர்ந்து அடிகளார். பேசுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

72.

ஒருவனே போற்றி ஒப்பு இல்
     அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள்
     கோமளக் கொழுந்து போற்றி
வருக என்று என்னை நின்பால்
     வாங்கிட வேண்டும் போற்றி
தருக நின் பாதம் போற்றி
     தமியனேன் தனிமை தீர்த்தே 68

வானோர் குருவன் - தேவர்களின் ஆசாரியன்.

திருப்பெருந்துறை அனுபவத்திற்கு முன்னர், நூற்றுக் கணக்கானவர் இருபத்து நான்கு மணி நேரமும் அடிகளாரைச் சூழ்ந்து இருந்திருப்பர். அந்தக் களேபரத்திலிருந்து விடுபட்ட பின்னர், அடியார் கூட்டமும் இறையனுபவமும் கிடைத்தன. இப்பொழுது அடியார் கூட்டம் இல்லை. இவர் வாழ்வுமுறை மாறிவிட்டதை அறிந்த அதிகார வர்க்கமும் இவரைவிட்டு நீங்கிவிட்டது; புறத்தே தனிமை சூழ்ந்துவிட்டது. அனுபவம் மீட்டு வாராமையால் அகத்தேயும் தனிமை சூழ்ந்துவிட்டது. அந்த நிலையில் ‘தமியனேன் தனிமை' தீர்த்து (மீட்டும்) தருக நின் பாதம் என்று வேண்டுகிறார்.

இறைவனின் பாதம்மட்டும் கிடைத்தால் அகத்தனிமை, புறத் தனிமை என்ற இரண்டும் நீங்கிவிடும் என்ற மிக நுண்மையான கருத்து, இப்பாடலிற் பொதிந்துள்ளமை நோக்கற்குரியது. அதாவது, இறைவன் திருவடியால் அகத் தனிமை போய்விடுகிறது. திருவடி சம்பந்தம் கிடைத்தவுடன் உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் இறை சொரூப மாகவே காட்சி அளித்தலின் புறத் தனிமையும் இல்லை என்க.

73.

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு
     அவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு
     அருளிடும் பெருமை போற்றி
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு
     அமுதம் ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு
     அருளிட வேண்டும் போற்றி 69

தீர்ந்த அன்பு-முறுகிவளர்ந்த தலையன்பு. வார்ந்த-ஒழுகிய.

இப்பாடலின் இரண்டாவது அடியில் வரும் 'பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிட வேண்டும்’ என்ற தொடர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு பகுதியாகும். மெய்யான வாழ்க்கையை விட்டுப் பல காலம் பொய்யான உலக வாழ்க்கையில் ஈடுபட்டதையே ‘பொய்ம்மை' என்ற சொல் குறிப்பதாகப் பலரும் உரை கூறியுள்ளனர்.

இவ்விடத்தில் பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியார் அவர்கள் கூறிய கருத்தைச் சுருக்கமாக அடியில் தந்துள்ளேன். எது சரியானது என்பதைப் படிப்போர் முடிவு செய்துகொள்ளலாம்.

திருவாசகத்திலுள்ள அறுநூற்று ஐம்பத்தெட்டுப் பாடல்களில், பொய்யன் என்றும், பொய்க்கு விதை என்றும் ஏறத்தாழ இருபத்தெட்டு இடங்களில் தம்மை அடிகளார் பாடியுள்ளார். இவ்வாறு குறிப்பிட வேண்டுமானால் அடிகளாரின் வாழ்க்கையில் அவருக்கு அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சியொன்று நிகழ்ந்திருக்க வேண்டும். அது என்ன என்பதை அறுதியிட்டுக் கூறுவதற்குரிய விளக்கமான சான்றுகள் இன்றேனும், நம்பியின் திருவிளையாடற் புராணத்தில் வரும் ஒரு பாடல் உலகியலுக்குப் பொருத்தமாக அமைகின்றது. தம்மையும் தமது பூர்வ வாழ்க்கையையும் மறந்து இறைபணியில் ஈடுபட்டிருந்த அடிகளாரைப் பாண்டிய மன்னனின் காவலர் வந்து, மன்னன் அவரை அழைப்பதாகக் கூறினர். அப்பொழுது தம்மை மறந்த நிலையிலிருந்த அடிகளார் இவ்வுலகியலுக்கு இறங்கி வந்தபோது அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இப்பொழுது அவர் கூறியதாக நம்பியின் திருவிளையாடலில் பின்வரும் பாடல் இடம் பெற்றுள்ளது.

தென்னவன் அமைச்சனே யான்
என்ன காரியம் செய்தேன் இவுளி கொள்வதற்கே வந்தேன்
பொன்னினை அளித்தேன் அந்தோ புகல ஓர்
மாற்றம் உண்டோ?

என்ற முறையில் பேசிய அடிகளார், இறைவனை வேண்டிக்கொண்டு அரச ஆணையை விண்ணப்பித்திருக்க வேண்டும். அப்பொழுது அவர் மனத்திடை ஒரு குறிப்புத் தோன்ற அதன்படியே அரசனிடம் வந்து ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும்’ என்று கூறிவிட்டார். ஆனால், ஆவணி மூலத்தில் குதிரைகள் வரவில்லை. பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பலரும் அறிந்தவையே ஆகும்.

தம்முடைய மனத்தில் தோன்றிய குறிப்பு இறைவன் திருவுளப்படி வந்தது என்று அடிகளார் தவறாகக் கருதிவிட்டார். எனவே, ஆவணி மூலத்தில் குதிரை வரும் என்று கூறினார். தம்முடைய மனக்குறிப்பை இறைவன் மேல் ஏற்றிக்கூறியது சரியன்று என்பதைப் பின்னர் உணர்கின்றார். அதனாலேயே தம்மைப் பொய்யன் பொய்யன் என்று பல இடங்களிலும் குறிப்பிடுகின்றார். இதுவே சரவண முதலியார் அவர்களின் கருத்து.

இக்கருத்தை ஏற்றுக்கொள்வதாயின் பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி’ என்று பாடியதற்கு நேரான பொருள் கிடைத்து விடும்.

இக்கருத்து வலுவுடையது என்பதற்கு அடிகளாரின் ‘விச்சுக்கேடு பொய்க்கு ஆகாதென்று இங்கு எனை வைத்தாய்'(திருவாசகம் 85) என்ற தொடர் பெரிதும் அரண் செய்வதாக உள்ளது.


74.

போற்றி இப்புவனம் நீர் தீக்

காலொடு வானம் ஆனாய்

போற்றி எவ்வுயிர்க்கும் தோற்றம்

ஆகி நீ தோற்றம் இல்லாய்

போற்றி எல்லா உயிர்க்கும்

ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய்

போற்றி ஐம் புலன்கள் நின்னைப்
புணர்கிலாப் புணர்க்கையானே

70


புலன்கள் புணர்கிலாப் புணர்க்கையான்-மாயையின் காரியமாகிய விஷயங்கள் சென்று பற்றாத சேர்க்கையுடையவன்.

ஐம்பெரும் பூதங்களாக ஆனவன்; உயிர்கள் தோன்ற, தான் காரணமாக இருந்தும் தனக்கென ஒரு தோற்றம் இல்லாதவன்; எல்லா உயிர்கட்கும் ஈறாய் இருந்தும் தனக்கோர் ஈறில்லாதவன். ஐம்புலன்கள் தாமே விரும்பிக் சென்று அவனைப் புணர முடியாது என்க. ஆனால் கருணை காரணமாகப் பொறி, புலன்கள்மாட்டு இரக்கம் காட்டினால் - அதாவது அவற்றோடு புணர்ந்து நின்றால் அவை பதிகாரணங்களாக மாறும் வாய்ப்பு உண்டு.

ஆனந்தத்து அழுந்தல்

75.

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை

ஆண்டு பூண நோக்கினாய்

புணர்ப்பது அன்று இது என்ற போது

நின்னொடு என்னொடு என்இது ஆம்

புணர்ப்பது ஆக அன்று இது ஆக

அன்பு நின் கழல்கணே -

புணர்ப்பது ஆக அம் கணாள

புங்கம் ஆன போகமே

71


புணர்ப்பது-சேர்த்துக்கொள்வது. புங்கம்-உயர்வு.

‘ஐயனே! என்னை ஆண்டுகொண்டு என்னை உன்னிடம் முழுவதுமாகப் புணர்த்தினாய். அன்றியும் உன் அருள் பூரணமாகக் கிடைக்கும்படி உன் திருக்கண்களால் நேர்க்கினாய்.

‘உன் அருள் என்னையும் நின்னையும் புணர்த்த வில்லை, நான் இங்கேயும் நீ அங்கேயும் ஆக ஆகிவிட்டோம் நின் அருள் உன்னை அடைவதற்குரிய உபாயம் என்றிருந்தேன். ஆனால் அந்த அருள்வழிச் சென்று புணர்ப்பு ஏற்படவில்லை. ஆதலால், அந்த அருளாகிய உபாயம் உனக்கும் எனக்கும் என்ன பயனைச் செய்தது? இவ்வாறு கூறியதால் அருளைக் குறை கூறுவதாக நினைத்துவிடக் கூடாது. அருள் ஈடிணையற்றதாக இருப்பினும் அதனைப் பெறுபவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவராக இருந்துவிடின் அருளும் செய்யவேண்டியதைச் செய்யாமல் விட்டுவிடும். எனவே, இங்கு அடிகளார். இந்த அருளாகிய உபாயம் என்னிடையும் நின்னிடையும் என்ன பயனைத் தந்தது என்ற முறையில் சிந்திக்கின்றார். அந்த அருள் பயன்பட வேண்டுமேயானால் அருளைப் பெறுபவரிடம் உள்ளன்பு நிறைந்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்துவிட்டார். ஆதலின் மூன்றாம், நான்காம் அடிகளில் அந்த அன்பு இறைவனுடைய திருவடியிடத்து வேண்டும் என்று பேசுகிறார்.

அன்பு, இறைவன் திருவடிக்கண் செலுத்தப்பட வேண்டுமேயானால் அதற்கும் அவன் அருள வேண்டும். ஆதலால் ‘அன்பு நின் கழற்கணே புணர்ப்பதாக' என்று வேண்டுகிறார்.

76.

போகம் வேண்டி வேண்டிலேன்
       புரந்தர ஆதி இன்பமும்
ஏக நின் கழல் இணை அலாது
      இலேன் என் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து
      குஞ்சி அஞ்சலிக்கணே
ஆக என் கை கண்கள் தாரை
       ஆறு அது ஆக ஐயனே 72

புரந்தரன்-இந்திரன். ஆகம்-உடல். குஞ்சி-முடி. தாரை ஆறதாக-கண்ணீரே இடைவிடாத நீர்ப்பெருக்குடைய ஆறாக. கம்பம்-நடுக்கம்.

‘ஐயனே! இந்திரர் முதலியோரின் பதங்கள் கிடைப்பினும் அந்த நுகர்ச்சியை நான் வேண்டவில்லை. ஏகனே! நின் கழலிணை அல்லாமல் வேறு பற்றுக்கோடு எதுவும் எனக்கில்லை.'

‘இந்திர லோகத்தை விழைந்திலேன் என்றாலும் நான் விழைவது ஒன்றுண்டு. உள்ளம் உருகி உடம்பு நைந்து, கைகள் இரண்டும் தலைமேற் குவிய, கண்கள் ஆறாகப் பெருகவேண்டும். இதுவே என் வேண்டுகோள்’ என்றவாறு,


77.

ஐய நின்னது அல்லது இல்லை
      மற்று ஓர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை
      பொய்ம்மையேன் என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க
      வந்து நின் கழல்கணே
மெய் கலந்த அன்பர் அன்பு
      எனக்கும் ஆக வேண்டுமே 73


‘ஐயனே! நின் திருவடிக்கண் அன்றி மற்றோர் பற்று இல்லை என்பதை அறிந்திருந்தும் வஞ்சகனும், பொய்யனுமாகிய யான் நின்மாட்டு உண்மை அன்பு செலுத்தவில்லை. மெய் கலந்த அன்பருடைய அன்பு, எப்படி உன்னிடம் கொண்டுசேர்க்கும் உபாயமாக உள்ளதோ, அந்த அன்பை எனக்குத் தந்தருள வேண்டும்’ என்கிறார்.


78.

வேண்டும் நின் கழல்கண் அன்பு
      பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டுகொண்டு நாயினேனை
      ஆவ என்று அருளு நீ
பூண்டுகொண்டு அடியனேனும்
      போற்றி போற்றி என்றும் என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து,
     மன்ன நின் வணங்கவே 74

'ஐயா! நின் கழற்கண் பொய்க்கலப்பு இல்லாத மெய்யன்பு பூண்டிருத்தல் வேண்டும்.

அத்தகைய மெய்யன்பு எனக்கு இப்பிறவியில் கிட்டாதாயினும் மாண்டு மாண்டு, பிறந்து பிறந்து நின்னை வணங்கவும் அவ்வாறு வணங்கும்போதெல்லாம் என் விருப்பம் நிறைவேறவும் வேண்டும்’ என்று இறைஞ்சுகிறார்.

'மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன! நின் வணங்கவே நாயினேனை ஆண்டுகொண்டு ஆவ என்று அருளு நீ' என்று கொண்டுகூட்டுச் செய்தால் ‘ஆவ’ என்ற சொல்லின் சிறப்புப் பொருள் விளங்கும். பல பிறவிகள் எடுத்து மாண்டு மாண்டு வளர்ச்சி அடைந்து நின் கழற்கண் மெய்யன்பு செய்ய வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்ளும்பொழுது 'அது அங்ஙனமே ஆகட்டும்’ (ஆவ என்று அருள) என்று என்பால் இரங்கி, இச்சொற்களைச் சொல்லி என் அச்சத்தைப் போக்கு வாயாக. இக்கருத்தையே 'ஆவ’ என்ற சொல்லின் மூலம் பெறவைக்கிறார் என்றலுமாம்.

வடமொழியில் திருக்கோயிலில் வழிபாடு நடைபெற்ற பின்னர், தங்களுக்கு என்ன என்ன வேண்டும் என்று இறைவன்முன் விண்ணப்பம் செய்வது மரபு. இவ் விண்ணப்பத்தை ஒருவரோ அன்றி ஒரு சிலரோ சேர்ந்து சொல்லியதன் பின்னர், தனியொருவர் தம் குரலை உயர்த்தி “ததாஸ்த் து’ என்று கூறுவதை இன்றும் திருக்கோயில்களில் காணலாம். இதே கருத்தில்தான் அடிகளாரும் தம் விண்ணப்பத்தை இரண்டு அடிகளில் கூறிவிட்டு 'ஆவ என்று அருளு நீ' என்று பாடிச் செல்கிறார்.

79.

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும்
     வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று
      மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கி யாம் விடேங்கள் என்ன
       வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க
       என்கொலோ நினைப்பதே 75


உணங்கும்-நாவற்றும். விடேங்கள்-விடமாட்டோம். ஓலம்-அபயம்.

‘மண், விண் ஆகியவற்றில் வாழ்வோருடன் வேதங்களும் சேர்ந்து உன்னைத் துதித்து நிற்கின்றன. மெய்யடியார்கள் உன் திருவடிகளைப் பற்றிக்கொண்டு விடமாட்டோம் என்று உறுதியாக நிற்கின்றனர். இந்தக் காட்சிகளைக் கண்டும் எங்களுக்கு வந்து அருள் செய்யாமல் என்ன ஆராய்ந்து கொண்டிருக்கிறாய்' என்றவாறு.

இப்பாடலில் இறைவியை உடன் சேர்த்துக் கூறியதன் நோக்கம் நாங்கள் வணங்கும்போது கருணை வடிவான இறைவி உடனிருத்தலின், எங்கள்மாட்டுக் கருணை காட்டியே தீரவேண்டும் என்ற கருத்தை உட்கொண்டதாகும்.


80.

நினைப்பது ஆக சிந்தை செல்லும்
      எல்லை ஏய வாக்கினால்
தினைத்தனையும் ஆவது இல்லை
      சொல்லல் ஆவ கேட்டவே
அனைத்து உலகும் ஆய நின்னை
      ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்தது
     எந்தை பாதம் எய்தவே 76

‘ஐயனே! சொல் செல்ல முடியாத அளவிற்கு மனம் செல்லுமேனும் அச்சொல்லாலோ அன்றி மனத்தாலோ நின்னைக் காண்பதும் எய்துவதும் அரிதாகும். உன்னைப் பற்றிச் சொல்லப்பெறுகின்ற சொற்கள்கூடப் பிறர் கூறுவதைக் கேட்டுக் சொல்லப்பட்டனவே தவிர, நேரடியாக அறிந்து சொல்லப்பட்டவை அல்ல. ஐம்பொறிகள் என்று எடுத்துக்கொண்டால், அவையும் அவற்றோடு ஒட்டிய புலன்களும் நின்னை என்றும் நெருங்கமாட்டா. ஐயனே நின் பாதம் எத்தன்மைத்து, எங்குளது, யான் அதனை அடையுமாறு எங்ஙனே? உன்னிடத்திலன்றி எனக்கு உய்தி இல்லை. வஞ்சமும் பாவமும் மிகுந்த என் துன்பத்தை அறிந்து, நீயாக மனம் இரங்கி என்னைப் பாதுகாப்பாயாக. அப்படிச் செய்யாவிடின் நான் உன்னோடு ஒன்ற வாய்ப்பே இருக்காது. ஆனால், திருவடியைக் காண வேண்டும் என்ற எண்ணம் ஓயாது மனத்திடை இருக்குமே யாயின் என்றாவது ஒரு நாள் அவ்வெண்ணம் கைகூடும்’ என்கிறார்.


81.

எய்தல் ஆவது என்று நின்னை
     எம்பிரான் இவ் வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன்கண் அன்றி
      மற்று ஓர் உண்மை இன்மையின்
பைதல் ஆவது என்று பாது
     காத்து இரங்கு பாவியேற்கு
ஈது அலாது நின் கண் ஒன்றும்
     வண்ணம் இல்லை ஈசனே 77


உய்தல்-பிறவித் துன்பம் நீங்கித் திருவடிக்கண் இன்புறுதல். பைதல்-துன்பம். ஒன்றும் வண்ணம்-பொருந்தும் படியாக.

ஐயனே! நான் உன்னை அடைவது எப்போது? ஏனென்றால் நான் உய்ய வேண்டுமானால் இது தவிர வேறு வழியே இல்லை. பாவியேனாகிய எனக்குத் துன்பம் மிகுந்துள்ளது என்பதை அறிந்து என்னைப் பாதுகாப்பாயாக. பாவியாகிய நான் உய்ய வேண்டுமானால் இது தவிர வேறு வழியே இல்லை என்கிறார்.


82.

ஈசனே நீ அல்லது இல்லை
     இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை
     பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட
     நின்மலா ஓர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை
     சிந்தியாது சிந்தையே 78


பேதம்-வேறுபாடு. நீசன்-இழிந்தவன்.

‘பெருமானே! வீட்டுலகிலும் அதனை அல்லாத பிற உலகங்களிலும் உன்னையன்றி வேறு எதுவுமில்லை. பேதையேனாகிய யான்கூட, எல்லாப் பொருள்களிலும் நீயே உள்ளாய் ஆதலால், அவற்றிடைப் பேதமில்லை என்று பேசியுள்ளேன். இச்சொற்களின் ஆழம் தெரியாமல் கிளிப் பிள்ளைபோல் இச்சொற்களைப் பேசும் இத்தகைய என்னையும் வலிதில் வந்து ஆண்டுகொண்ட நின்னை அல்லால் வேறு யாரையும் என் மனம் சிந்தியாது' என்றபடி,


83.

சிந்தை செய்கை கேள்வி வாக்குச்
     சீர் இல் ஐம் புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை
     எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என்
      உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம்
    எய்தல் உற்று இருப்பனே 79

‘இறைவா! இப்பிறவி எடுத்தபொழுதே மனம், கன்மேந்திரியங்கள், கேள்வி, வாக்கு, ஐந்து பொறிகள் ஆகிய இவற்றையெல்லாம் தந்தாய். இவற்றை வைத்துக்கொண்டு நன்முறையில் செயற்படுத்தி உன்னை அடைய முயன்று இருக்க வேண்டும். ஆனால், இம்முயற்சியில் ஈடுபடாமல், நீயாக வந்து என்னை ஆட்கொள்கின்றவரையில் நின்னை அடைதற்கு எவ்வித முயற்சியும் செய்யாத மூர்க்கனாகிய நான் தீயில் விழுந்திருக்க வேண்டும். நாணத்தால் உள்ளம் வெடித்திருக்க வேண்டும். அவற்றையும் செய்யவில்லை.

‘திருப்பெருந்துறையில் நீ ஆட்கொண்ட பிறகுதான் அதுவரையில் நின்னை அடைய முயலாமல் என் வாழ்நாளில் பெரும்பகுதியை வீணே கழித்துவிட்டேன் என்று நினைத்துப் பார்க்க முடிகிறது.

‘இப்பொழுது உன்னைவிட்டுப் பிரிந்து நின்றாலும், எந்தை! இன்றில்லாவிடினும் நாளை நின்னை எய்தலுற்று இருப்பேன் என்ற உறுதிப்பாடுடையேன்' என்கிறார்.

‘எந்தை நின்னை எய்திடாத காலம்' என்று சொல்வது எய்திய நிலையில் நின்று இதுவரை வீணாகக் கழிந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்த்துச் சொல்லியதாம்.

திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடைபெறுகின்றவரையில் கழிந்த காலம், சராசரி மனிதர்கள் சாதாரணப் பணிகளைச் செய்து பொழுதைப் போக்குகின்ற காலமாகும். அந்த நிலையில் அதனை வீணான காலம் என்று யாரும் சொல்வதில்லை. புதிய அனுபவம் கிடைத்த பொழுதுதான் இதனோடு ஒப்பிட்டுப் பார்த்து இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு முந்தைய காலத்தை வீணான காலம் என்ற முடிவிற்கு வருவதுண்டு. இக்கருத்தைப் பின்னரும்,

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே

(திருவாச: 327)

என்று பாடுவதைக் காணலாம். எனவே, முந்தையான காலமென்பது திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு முந்தையான காலமென்றே பொருள்கொள்ள வேண்டும்.

முதலடியில் மனம், கர்மேந்திரியங்கள் என்பவற்றோடு கேள்வி, வாக்கு என்று கூறிவிட்டு மறுபடியும் ஐம்புலன்கள் என்று கூறுவதில் ஒரு சிறு குழப்பம் நேரலாம். இங்கே கூறப்பட்ட கேள்வி(செவி, வாக்கு(வாய்) என்பவை ஐம்பொறிகளில் காணப்படும் செவி, வாய் என்பவற்றிலிருந்து வேறுபட்டனவோ என்று நினைக்கத் தோன்றும். உண்மையில் கேள்வி என்று கூறியது எல்லாவற்றையும் கேட்கும் செவியின் தொழிலில், இறைவன் புகழைமட்டும் கேட்கும் பணியைப் பிரித்துக் கூறியதாம். அதேபோல வாக்கும் பயனற்ற பேச்சுக்களைப் பேசுவதை விட்டு இறைவன் புகழைப் பேசுவதைமட்டும் குறிப்பதற்காக விதந்தோதினார் என்க.

அடிகளாருக்கு முன்னர் வாழ்ந்த நாவரசர் பெருமானும் 'செவிகாள் கேண்மின்களோ' (திருமுறை: 4-9-3) என்றும், 'வாயே வாழ்த்துகண்டாய்' (திருமுறை: 4-95) என்றும் கூறியமை இங்கு நோக்கத்தக்கது,

ஐம்பொறிகளிலும் மனத்தின் கட்டுப்பாட்டை மீறித் தொழிற்படும் இயல்பு செவிக்கும் வாய்க்கும் மட்டுமே உண்டு.

84.

 
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை
     ஆண்டுகொண்ட நின்ன தாள்
கருப்பு மட்டு வாய் மடுத்து
     எனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டிருந்தது
      உண்டு அது ஆயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண்
     என்பது என்ன விச்சையே 80

கருப்பு மட்டு-கருப்பஞ்சாறு.

‘ஐயனே! நின் திருவடிப் பேறு எனக்குக் கிடைத்தது, அந்த நேரத்தில் கருப்பஞ் சாறுபோல இனிமையுடையதாய் இருந்தது. என் நெஞ்சம் பண்புடையதாக இருந்திருப்பின் அப்பொழுதே அதில் கரைந்திருக்க வேண்டும். அத் திருவடிகள் என்னை விட்டு நீங்கவும் அதனால் ஒரு சிறிதும் கலக்கமுறாமல் யான் இருக்கின்றேன் என்றால், வஞ்சகனாகிய என் நெஞ்சம் இரும்பால் ஆகியது’ என்பது தெளிவு.

‘நீ பிரிந்த பிறகும் இப்பரந்த உலகிடை நெருப்பும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது, நானும் இருந்து கொண்டுதான் இருக்கிறேன்; அதில் வீழ்ந்து மடியவில்லை. இப்படிப்பட்ட யான் உன்னை அடைய வேண்டுமென்ற விருப்பமுடையேன் என்று கூறிக்கொள்வது விந்தையாக இல்லையா?' என்கிறார்.

‘என்ன விச்சையே’ என்ற சொற்களை 'என் அவிச்சையே' என்று பிரித்து, என்னுடைய அஞ்ஞானம் (அவிச்சை) காரணமாகவே தீயில் விழுந்து இறவாமல் இருக்கின்றேன் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆனந்த பரவசம்


85.

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது
       என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும்
       வந்து உன் தாள்சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன்
       ஆரூர் எம்
பிச்சைத் தேவா என் நான்
      செய்கேன் பேசாயே 81

விச்சுக்கேடு-விதையினழிவு. இச்சைக் கானார்- கருணைக் கிலக்கானார்.

இப்பாடலுக்கு உரை காணுமுன் முன்னருள்ள 73வது பாடலுக்கு எழுதப்பட்ட குறிப்பைத் தயைகூர்ந்து நினைவில் கொள்ளவும். இல்லாவிட்டால் ‘பொய்க்கு விச்சுக்கேடு ஆகாது என்று கருதி எனை இங்கு வைத்தாய்’ என்ற அடிக்குப் பொருள் காண்பது கடினம். பொய் என்பதற்குப் பிறர் கூறும் முறையில் பிறவி முதலிய எந்தப் பொருளைக் கொண்டாலும், ‘யானே பொய் என் நெஞ்சும் பொய்' (திருவாச. 94) ‘பொய் கலந்தது அல்லது இல்லை பொய்ம்மையேன்' (திருவாச77) என அடிகளார் கூறும் இடங்களில் அப்பொருள் பொருந்தாது என்பதை அறிதல் வேண்டும்.

மேலே கூறியவை எல்லாம் ஒருபுறம் நிற்க, இப்பாடலின் முதலடியில் அடிகளார் கூறியதை ஆழ்ந்து சிந்தித்தால் ஏதோ ஒரு பொய் அவர் வாழ்வில், உள்ளத்தின் அடித்தளத்தில், போக்க முடியாத பெருந் துயரத்தை உண்டாக்கியுள்ளது என்பதை அறிய முடிகிறது. அதன் தாக்கம் அடிக்கடி அவர் மனத்தை உறுத்திற்று என்பதையும் அறிய முடிகிறது.

குருவானவர், மணிவாசகரைவிட்டு நீங்குவதற்கு முன்னர், 'கோலம் ஆர்தரு பொதுவினில் வருக' (திருவாச 2-128) என்று கூறிவிட்டுத்தானே சென்றார். அன்றியும் ‘அருளொடு பரா அமுது ஆக்கினன்' (திருவாச 3-18) என்று அடிகளாரே கூறியுள்ளாரே. அப்படியிருக்கக் குருவின் திருவடி தம்மை விட்டுநீங்கியதற்குத் தாமே காரணம் என்று அடிகளார் நினைக்கக் காரணமென்ன? அங்கேதான் மனத்தின் அடித்தளத்திலுள்ள பொய்யின் தாக்கம் வெளிப்படுகிறது.

பொய்யர் நெஞ்சில் நில்லான் ஈசன் என்பது முதுமொழி. ஒருவர் நெஞ்சில் ஈசன் நிற்கவில்லையானால் அவர் பொய்யுடையார் என்று தருக்க ரீதியாகச் சொல்ல முடியும். தாமே வந்து தண்ணளி செய்த குருவானவர் தாமே நீங்கிவிட்டார் என்றால், 'தாம்' பொய்யராக இருப்பதே காரணம் என்ற வருத்தம் அவர் மனத்தில் ஆழ்ந்து நிற்கின்றது. இந்த முன்னுரையோடு பாடலின் முதலிரண்டு அடிகட்குப் பொருள் காண வேண்டும்.

‘ஐயனே! (உன்) இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார். ஒரு வேளை உன் இச்சைக்கு ஆனவர்களில் எனக்கு இடமில்லை என்று கருதுவதானால் அதுவும் சரியாகப் படவில்லை’.

இச்சைக்கு ஆனவர்களில் இவருக்கு இடம் இல்லையென்றால் திருப்பெருந்துறை நிகழ்ச்சி எதற்காக? அந்த நிகழ்ச்சி ஒன்றே இச்சைக்கு ஆனவர்களில் அடிகளாரும் ஒருவர் என்பதை நிரூபிக்கும். அப்படியென்றால் தாள் சேர்ந்தாரோடு இவரையும் அழைத்துச் செல்லாமல் ஏன் விட்டுவிட்டுப் போனார்? இந்த வினாவை எழுப்பிக் கொண்ட அடிகளார், தம் ஆழ் மனத்தில் புதைந்துகிடந்த எண்ணத்தை விடையாகத் தருகின்றார்.

பொய் என்ற ஒன்று உலகத்தில் இல்லாமல் போய்விடுமே என்று கருதிய இறைவன் அந்தப் பொய் புதிதாக முளைப்பதற்கு விதையாகத் தம்மை இங்கு விட்டுச் சென்றார்’ என்று கூறுகிறார்.


86.

பேசப்பட்டேன் நின் அடியாளில்
    திருநீறே
பூசப்பட்டேன் பூதலரால் உன்
    அடியான்
என்று ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது
    அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன்
    உன் அடியேனே 82

பூதலர்-பூமியிலுள்ள மக்கள். பேசப்பட்டேன்-புகழ்ந்து பேசப்பட்டேன்.

இப்பாடலில் அடிகளாரின் சுயசரிதத்தில் ஒரு பகுதி பேசப்பட்டுள்ளது. திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு பொதுமக்கள் தத்தம் வளர்ச்சிக்கேற்ப அடிகளாரைப் பற்றிப் பேசினார்கள். -

ஒரு சிலர் சொக்கநாதனின் உண்மையான அடியவர் என்று பேசினார்கள். ஒரு சிலர் அடிகளார் நிட்டையில் இருக்கும்போது அவர்மேல் திருநீற்றைப் பூசிச்சென்றனர் போலும், இன்னும் சில மந்தமதிகள் அமைச்சர் பதவியைத் துறந்து ஆண்டி வேடம் மேற்கொண்டதை ஏசினார்கள் என்றவாறு.

87.

அடியேன் அல்லேன்கொல்லோ தான் எனை
    ஆட்கொண்டிலைகொல்லோ
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்
    தாள் சேர்ந்தார்
செடி சேர் உடலம் இது நீக்க மாட்டேன்
    எங்கள் சிவலோகா
கடியேன் உன்னைக் கண் ஆரக் காணும் -
    ஆறு காணேனே

83

செடி-முடைநாற்றம் : தும்பமுமாம். கடியேன்-கொடியவன்.

பெருமானே! நான் உனக்கு அடியன் அல்லனோ? நீ என்னை ஆட்கொண்டிலையோ? அப்படியிருந்தும் நின்னைப் பிரிந்து வாழும் நான், குற்றங்கள் நிறைந்த இவ்வுடம்பைப் போக்கிக் கொள்ளாமல் இருக்கின்றேன் என்கிறார்.

88.

காணும் ஆறு காணேன் உன்னை
   அந்நாள் கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப் படுத்தது
   என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா
   செத்தே போயினேன்

ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு
எழுகேன் எம்மானே 84

பாண்-இச்சகம். ஏண்-ஆற்றல். நாண்-நாணம். என்தன்னைப்படுத்தது-என்னை ஆட்கொண்டது.

‘திருப்பெருந்துறையில் உன்னை உள்ளவாறு கண்டேன். ஆனால் இப்பொழுது உன்னைக் காணும் வழியை அறிந்திலேன். அங்கு நின்னைக் கண்டபொழுது ‘கோலம் ஆர்தரு பொதுவினில் வருக (திருவாச: 2-128) என நீ இனிமையாகப் பேசவில்லையா? நெஞ்சு உரமும் வலிமையும் இல்லாத நாய்போன்ற நான் எதனைக் கொண்டு முன்னேற முடியும்?


89.

மான்நேர் நோக்கி உமையாள் பங்கா
     மறை ஈறுஅறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய்
      சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிது என் கொடுமை பறைந்தேன்
      சிவ மா நகர் குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும்
     புறமே போந்தோமே 85

மறையிறு-உபநிடதம். பறைந்தேன்-சொன்னேன்.


இந்தப் பாடலிலும் பொய்பற்றி அடிகளார் பேசுவதை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். ‘சிவ மாநகர் குறுக’ அடியார்கள் அனைவரும் சென்றுவிட்டனர். இதனை நினைக்கும்போதே, இறைவன் குருவடிவில் வந்து தம்மை ஆட்கொண்டதை நினைக்கின்ற அடிகளார், சிறியேன் பிழை பொறுக்கும் கோனே’ என்கிறார். ஆட்கொள்வதற்கு முன்னர் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பிழைகளை =யெல்லாம் மன்னித்து அவரை ஆட்கொண்டார். அப்படிப் பட்டவர் அடியாரோடு இவரையும் ஏன் அழைத்துச் செல்லவில்லை? பிழைகள் பொறுக்கப்பட்டுவிட்டமையின் அழைத்துச் செல்லப்பட அனைத்துத் தகுதியும் வந்துவிட்டதே! அப்படியிருந்தும் ஏன் விடப்பட்டார்? விடப்பட்ட அந்த நேரத்தில் அந்தத் துயரம் தாங்காமல் சில கடுமையான வார்த்தைகளைப் பேசியுள்ளார்போலும். அதனையே 'சிறிதே கொடுமை பறைந்தேன்’ என்கிறார்.

மனவருத்தம் காரணமாகக் கொடுமை பறைந்த பின்னர், விடுபட்டதற்குரிய காரணத்தை அமைதியாகச் சிந்திக்கிறார். அப்பொழுதுதான் அடிமனத்தில் இருந்த நினைவு மேலே வருகின்றது. அவர் விடப்பட்டதற்குக் காரணத்தை இதோ பேசுகிறார். சிவ மாநகர் குறுக அடியார் எல்லாம் போனார்கள். ஆனால் நான்மட்டுமா புறம்போந்தேன்? இல்லை, என் மனத்தை அழுத்தி நிற்கின்ற பொய்யும் அல்லவா என்னுடன் வந்தது என்ற பொருள்பட 'யானும் பொய்யும் புறமே போந்தோமே' என்கிறார்.


90.


புறமே போந்தோம் பொய்யும்
     யானும் மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா
     வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார்
     மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழி வந்து சிவனே
     நின் தாள் சேர்ந்தாரே 86

சிறவு-சிறப்பு மற்றொன்று-பொய்.

இப்பாடலும் 'புறமே போந்தோம் பொய்யும் யானும்' எனத் தொடங்குகிறது. திருச்சதகம் அந்தாதியாக அமைந்திருத்தலின் இதற்கு முன்பாடல் ‘புறமே போந்தோமே என்று முடிவதால் இப்பாடல் புறமே போந்தோம்’ என்று தொடங்குகிறது என்று பொருள் கொண்டால் மிக இன்றியமையாத ஒரு கருத்தை இழந்து விட்டவர் ஆவோம். அந்தாதிமட்டும் அடிகளார் கருத்தாக இருப்பின் புறமே போந்தோம் என்பதற்கு அடுத்தபடியாக ‘பொய்யும் யானும்’ என்று கூறியிருக்கமாட்டார். முதற் பாடலின் இறுதி அடியின் பெரும் பகுதியை இப்பாடலின் தொடக்கத்தில் பயன்படுத்துகிறார் என்றால், அதில் ஒரு கருத்து இருக்கவேண்டும். அவருடைய வாழ்க்கையில் குருவருள் பெற்ற பின்னர் ஒரே ஒரு முறை அவரோடு உறவுகொண்டாடிய பொய் எந்த அளவிற்கு அவரின் மனத்தை உறுத்துகிறது என்பதை அறிய இந்த அடி உதவுகிறது.

முதற்பாட்டின் இறுதி அடியில் 'யானும் பொய்யும்’ என்று கூறியவர், இங்குப் 'பொய்யும் யானும்' என்று கூறவது அந்தப் பொய் தனக்குச் செய்த பெருங்கேட்டை அவர் மறக்கவில்லை என்பதை அறிவிக்கவே. இவ்வாறு கருதுவதற்குக் காரணம், 'புறமே போந்தோம்’ என்பதற்கு மோனையாக பொய்யை இங்கு முன்னுரிமைப் படுத்தவில்லை என்பதை உணர்த்தவே. சிவ மாநகருள் நுழைய விடாமல் செய்தது இந்தப் பொய்யோ என்ற நினைவு மனம் முழுதும் நிறைந்திருந்தது. 'புறமே போந்தோம்' என்று கூறியவுடன் யானும் பொய்யும் என்று கூறாமல் பொய்யும் யானும் என்று கூறியது இக்கருத்தை வலியுறுத்தும்.


91.

தாராய் உடையாய் அடியேற்கு
       உன் தாள் இனை அன்பு
பேரா உலகம் புக்கார் அடியார்
      புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு
      உன் தாள் இணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே
      மயல் கொண்டு அழுகேனே 87

மிலைக்க கனைக்க ஆரா - பொருந்தாத.

இப் பாடலில் வரும் 'ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு' என்பதற்கும் பலர் பலவாறாகப் பொருள்கூறுவர். காளை மாட்டின் புணர்ச்சியை விரும்புகின்ற பசுமாடு, அந்த நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ஒசையை உண்டாக்குதலை, தென்பிராந்தியங்களில் ‘மிலைத்தல்’ என்ற சொல்லால் குறிப்பிடுவர். அதாவது காளை மாட்டை எதிரே கண்டவுடன், புணர்ச்சியை வேண்டி நிற்கும் பசு, தன் குறிப்பை அந்தக் காளைக்கு உணர்த்த மிலைத்தலைச் செய்யும். பசுமாடு மிலைத்தாலே எதிரே, எங்கோ ஒரு காளை இருக்கிறது என்பதைக் கிராமத்தில் உள்ளவர்கள் அறிந்து கொள்வர்.

காளை மாட்டைக் கண்டபோதுதான் ஊர்ப் பசு மிலைக்கின்றது. ஆனால், பாவம் குருட்டுப் பசு, எதிரே காளை இருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும். காளையைக் கண்ட பசுமாடு எங்கோ ஓர் இடத்தில் மிலைக்க, அந்தக் குரலைக் கேட்ட இந்தக் குருட்டுப் பசு, எதிரே காளை இல்லாதபோதும் மிலைக்கின்றது. இந்த அருங்கருத்தைத்தான் அடிகளார் இங்கு உவமையாகப் பயன்படுத்துகிறார்.

இறையருளை முழுமையாகப் பெற்ற அடியார்கள் அவனைக் குருவடிவிலோ வேறு வடிவிலோ கண்டவுடன் அருகில் கண்டதால் தோன்றும் எல்லை மீறிய மகிழ்ச்சி பொங்க அவன் புகழைப் பாடுகின்றனர். காளை இருக்கும் இடந்தெரியாத குருட்டுப் பசு மிலைத்தல்போலத் தாமும் அவன் புகழ் பாடுவதாக அடிகளார் பாடுகிறார்.

குருவானவர் இருக்குமிடம் தெரியாமல் மறைந்த பின்னர்ப் பாடப்பட்டது. ஆதலின் ‘குருட்டு ஆ மிலைத் தாங்கு’ என்று சொல்லிய உவமை முற்றிலும் பொருத்தமாகின்றது.

இறுதி அடியில் வரும் அயலே மயல்கொண்டு அழுகேனே’ என வரும் தொடர், மேலே கூறிய கருத்தை வலியுறுத்துவதாகும்.

92.

அழுகேன் நின்பால் அன்புஆம்
    மனம்ஆய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின்ஆர்
     பொன்ஆர் கழல் கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தா
      ரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு
     உன்னைப் பணிகேனே 88

பழுதே பிறந்தேன்-பயனின்றிப் பிறந்தேன்.

அழல் சேர்ந்த மெழுகுபோன்று உருகுகின்ற அடியார்களைக் கண்டு, அவர்களோடு சேர்ந்து சிவ மாநகர் புகாமல் வீணே உழல்கின்றேன் என்றபடி

93.

பணிவார் பிணி தீர்த்தருளி
      பழைய அடியார்க்கு உன்
அணிஆர் பாதம் கொடுத்தி
      அதுவும் அரிது என்றால்
திணிஆர் மூங்கில் அனையேன்
      வினையைப் பொடி ஆக்கி
தனிஆர் பாதம் வந்து ஒல்லை தாராய்
       பொய் தீர் மெய்யானே 89

திணியார் மூங்கில் - கல் மூங்கில் (வலிய மூங்கில்) கல்மூங்கில் முட்களால் யாரும் அணுக ஒட்டாமல் தடுப்பதுபோல கடமை என்கிறார். கணி - குளிர்ந்த.

பழைய அடியார் பணிவார் என்றதால், அந்த அடியார்களுடைய இயல்பு, தன்முனைப்போடு நிமிர்ந்து நில்லாமல், எப்போதும் பணிந்தே இருக்கும் என்பதைக் கூறினார். அப்படிப்பட்டவர்களுக்குக் காட்டப்படும் திருவடி 'திணியார் மூங்கிலைப்போல' நிமிர்ந்து நிற்கும் தமக்குக் கொடுப்பது இயலாதென்றால் அதற்கும் ஒரு வழி கூறுகின்றார் அடிகளார்.

மூங்கிலில் இருவகை உண்டு. ஒருவகை மூங்கில் உள்ளீடு இல்லாமல் புறப்பகுதி மட்டும் இருக்கும். அதனை எளிதாக வளைத்து விருப்பம்போல் பயன்படுத்தலாம். மற்றொருவகை மூங்கிலின் உள்ளே, திண்மை பெற்ற பொருள் நிறைந்திருக்கும். உதாரணமாகக் காவலர்கள் வைத்திருக்கும் தடிக்கம்பையும், குண்டாந்தடி என்று சொல்லப் பெறும் ஆறடி உயரமும் கனமுமுள்ள ‘பத்தராசன்கழி'யையும் இங்குச் சிந்திக்கலாம். பத்தராசன்கழி என்பது வட்டார வழக்கு. இந்த மூங்கிலை என்ன செய்தாலும் ஒரு தினையளவுகூட வளைக்க முடியாது. சூடேற்றினால் வளைக்கலாம் என்று தவறாகக் கொள்ள வேண்டா. நெருப்பிலிட்டால் இம்மூங்கில் வெந்து பொடியாகுமே தவிர வளையுமாறில்லை.

இந்த அற்புதத்தைத் 'திணியார் மூங்கில் அனையேன்' என்றார். அடியார்களுக்குக் காட்டப்படும் திருவடி திணியார் மூங்கிலைப்போல நிமிர்ந்து நிற்கும் தமக்குக் கொடுப்பது இயலாதென்றால் அதற்கும் ஒரு வழி கூறுகிறார் அடிகளார். அது வளைந்தால்தானே திருவடி கிட்டும் என்பதை நினைந்து வளைக்க முடியாத ஒன்றை ‘பொடிாக்கி’ என்றார்.

94.

யானே பொய் என் நெஞ்சும்
             பொய் என் அன்பும் பொய்
         ஆனால் வினையேன் அழுதால்
             உன்னைப் பெறலாமே
         தேனே அமுதே கரும்பின்
             தெளிவே தித்திக்கும்

          மானே அருளாய் அடியேன்
                    உனை வந்து உறுமாறே 90

உண்மையை உணர முயலாமல் பாண்டியனிடம் சென்று, ஆவணி மூலத்தில் குதிரை வரும் என்று கூறி விட்டார் அடிகளார். திருப்பெருந்துறையில் தம் மனத்திடைத் தோன்றிய இந்த எண்ணம் இறைவனுடைய கூற்று என்று தவறாக நினைந்து கூறிவிட்டாரே தவிரப் பொய்யுரைக்க வேண்டும் என்று கருத்திலன்று. ஆனால், அன்று குதிரை வாராமையின் அவர் உரைத்தது பொய் என்று அரசன் முதலியோர் கருதினர். அதற்குரிய தண்டனையும் வழங்கப்பட்டது. எனவே, ஏனை யோரைப்போல அடிகளாரும் தாம் உரைத்தது பொய் என்ற முடிவிற்கு வந்துவிட்டார். அந்த எண்ணம் வலுப்பெற வலுப்பெற இருபத்தெட்டு இடங்களில் தம்மைப் பொய்யனென்று அவர் கூறிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. அந்த எண்ணத்தின் முதிர்ச்சியில் விளைந்தது இப்பாடல்.

பொய் என்று தெரிந்தும் அதைக் கூறுபவர்கள்கூடத் தம் பிழையை நினைந்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டின், அவன் மன்னிப்பான் என்ற கருத்தில் 'ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே' என்று பாடுகிறார்.

- இதே கருத்தை ‘என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய்' (திருவா:154) என்றும் பாடியுள்ளதைக் காணலாம்.

பெருந்தவறு செய்தவர்கள் பிராயச்சித்தம் என்ற பெயரில் சில சடங்குகளைச் செய்தால் தம் பாவங்களிலிருந்து விடுபடலாம் என்று கூறும் வடநாட்டுத் தரும சாத்திரங்களைத் தமிழ்நாட்டவர் பலரும் ஏற்றுக்கொண்டதேயில்லை. தாம் செய்த பிழைக்கு உண்மையாக மனம் வருந்தாமல், அதனால் வரும் பாவம் தனக்கோ தன் குடும்பத்திற்கோ தீங்கு தரும் என்ற அச்சத்தால், அந்தப்பாவத்தைப் போக்கிக்கொள்ளச், செய்யப்படுவதே பிராயச்சித்தமாகும். மனுநீதி கண்ட புராணத்தில் அரசகுமாரன் பசுக்கன்றைக் கொன்ற பாவத்தைப் போக்கப் பிராயச்சித்தம் செய்தால் போதுமானது என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆகவே, இந்தத் தரும சாத்திரக் கருத்தும் தமிழகத்தில் வழங்கிவந்தது என்பதையும் அறிய முடிகிறது.

பிழைக்கு உண்மையாக வருந்தினால் மன்னித்து அருள்பாலிக்கக் கூடியவன் இறைவன் ஒருவனே என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியவர் மணிவாசகரே ஆவார்.

ஆனந்தாதீதம்
95.


மாறு இலாத மாக் கருணை வெள்ளமே
வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை
வேறு இலாப் பதப் பரிசு பெற்ற நின்
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து
ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே

91

கீறிலாத-பதியாத.
பாடலின் முதலிரண்டு அடிகளில் உண்மை அடியவர் பெருமை கூறப்பெற்றுள்ளது. இதைக் கூறுவதன் காரணம் இதன் எதிராக எவ்விதச் சிறப்பும் இல்லாத தமக்கு எளியனாக மானிட வடிவம் தாங்கி அருள் செய்த குருவின் பெருமையைக் கூறுவதேயாகும்.

மானிட உடம்பிற்கு இயற்கை ஒளி இல்லை. குருவாக வந்தவரின் மேனி ஒளியுடன் இருந்தது. அதனைக் கூறுவதாக இருப்பின் ஒளி உமிழ் மானிடம் அல்லது ஒளி திகழ் மானிடம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறின்றி 'ஒளி செய் மானிடம்' என்று அடிகளார் கூறியிருத்தலின் குருவின் பரு உடல், தான் மட்டுமன்றிச் சுற்று வட்டாரத்தையும் ஒளி திகழச் செய்தது என்பது பெறப்படுகிறது. இவ்வாறு பொருள்கொள்வதற்கு ‘ஈறிலா நீ எளியை ஆகி, ஒளிசெய் மானிடம் ஆக வந்து' (என்னை) நோக்கியும் என்று கொண்டுகட்டுச் செய்க.

96.

மை இலங்கு நல் கண்ணி பங்கனே
       வந்து எனைப் பணிகொண்ட பின் மழக்
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்
       அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்
மெய் இலங்கு வெள் நீற்று மேனியாய்
        மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய்யில் இங்கு எனைப் புகுதவிட்டு நீ
        போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே 92

மழக்கை-குழந்தையின் கை. அரியை-அருமையை யுடையை.

இப்பாடலில் மிக அற்புதமான உலகியல் உவமை ஒன்றைக் கூறுகிறார். 'மழக்கை’ என்றதால் மிக இளங் குழந்தை என்றபதாயிற்று. அத்தகைய குழந்தையின் கையில் பொற்கிண்ணத்தைத் தந்தால் அதன் பெருமையை ஒரு சிறிதும் அறியாது கீழே போட்டு விளையாடும். அது போலக் குருவடிவாக வந்த இறைவனின் பெருமையைத் தாம் அறிந்துகொள்ளாமல் எளிதாகக் கருதிவிட்டதாகக் கூறுகின்றார்.

இறுதி அடியில், தாம் பொய்யோடு பொருந்தியவராக இருப்பினும் தம்மை இவ்வுலகிடை விட்டுவிட்டுக் குருவானவர் மறைந்தது பொருத்தமாகுமோ என்று கேட்கின்றார். இங்குப் 'பொய் இலங்கு’ என்ற பாடத்தைவிடப் ‘பொய்யில் இங்கு’ என்ற பாடமே சிறப்புடையதாக அமைகிறது.


97. பொருத்தம் இன்மையேன் பொய்ம்மை உண்மையேன்

போத என்று எனைப் புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்
மாண்டிலேன் மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும்
நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை
இருத்தினாய் முறையோ என் எம்பிரான்
வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே 93


பொருத்தம்-தகுதி. போத-வருக. அரத்தம்-சிவப்பு. வம்பனேன்-வீனன். பொய்ம்மை யுண்மையேன்-பொய்மை நிரம்ப உடையவன்.

இப்பாடலிலும் உடனிருந்த அடியவர்களுடன் குரு மறைந்ததை நினைக்கின்றார். குரு புன்முறுவலோடு ‘சென்று வருக' என்று பொருள்படும்படி 'புரிந்து நோக்கவும்' அதை மறுத்து உன்னுடன் வருவேன் என்று சொல்லாமலும் சிறிதும் வருத்தப்படாமல் இருந்து விட்டதையும் நினைக்கிறார். உண்மையில் பொய்ம்மையே உண்மைப் பொருளாகக் கொண்டிருந்ததாகவும், வஞ்சகத்தையே மனத்திடைக் கொண்டிருந்ததாகவும், அதனால்தான் அடியவர்களுடன் செல்ல முடியவில்லை என்றும் வருந்துகிறார்.


இறுதி அடியில் தாம் அப்படி இருந்தாலும் தம்மை விட்டுச் செல்வது முறையோ என்று குருவை நினைந்து அரற்றுகின்றார்.

98. இல்லை நின் கழற்கு அன்பு அது என்கணே

ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு
என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான்
ஏது கொண்டு நான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறுஇல் வானனே 94

கல்லை மென்கணியாக்கும் விச்சை-சுவையற்ற வலிய தொன்றைச் சுவையுள்ள மெலியதாக்கும் வித்தை. மறுவில் வானன்-குற்றமில்லாத ஞானாகாய வடிவினன்.

திருவாசகத்தில் பின்னரும் பல இடங்களில் கூறப்பெறும் ஒரு கருத்து இங்கு முதன்முதலில் இடம் பெறுகிறது. தம்முடைய மனம் கல் என்றும், அதனைக் குருவானவர் தம் பேராற்றலால் மென்மையான கனி போன்று மாற்றித் தம் திருவடிக்கண் ஈடுபடுமாறு செய்தார் என்றும் கூறுவதால் குருவின் பெருமையைக் கூறுனாராயிற்று.

தம் மனத்தைக் கனியாக மாற்றியமைக்குக் காரணம் குருவினுடைய எல்லையற்ற கருணையே என்று கூறிய அடிகளார், இப்பொழுது தாம் எதனைச் செய்தாலும் அதனைப் பொறுத்துக்கொண்டு மறுபடியும் திருவடியைத் தரவேண்டும் என்று இறைஞ்சுகிறார்.

99. வான நாடரும் அறி ஒணாத நீ

மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ
என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா
உருகி நான் உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா
நைய வையகத்துடைய விச்சையே 95 ஏனைநாடர்-வான்நாடு நீங்கிய ஏனைய நாட்டிலுள்ளவர்கள். இன்னிதாய்-இனிமையாய். ஊனை நாடகம் ஆடுவித்தவா-உடலைத் தந்து உலக அரங்கில் வினைக்கீடாக நடிக்கச்செய்த விதம். வையகத்துடைய இச்சை-உலக வித்தைகள். நையவே-அழிந்து இல்லையாம்படியே. மறையில் ஈறு-ஈறு இல் மறை முடிவில்லாத வேதம்.

எந்த உலகத்தில் உள்ளவர்களும் அறிய முடியாதவனாகிய அவன், அடிகளாரின் ஊனினை உருக்கி உள்ளொளி பெருகுமாறு செய்தான். அம்மட்டோடு நில்லாமல் உலக பந்தங்களில் ஈடுபட்டிருந்த அவர் மனத்தை மாற்றி, அவன் திருவருளைப் பருகுமாறு செய்தான்.

‘ஊனை நாடகம் ஆடுவித்தல்' ஊனினை உருக்குதல் ஆகும். ஞான நாடகம் ஆடுவித்தவா என்பது உள்ளொளியைப் பெருகச் செய்து, அதனால் சிவஞானம் கைவரப் பெற்று, ஞான வடிவினனாகிய அவனை அறிந்து கொள்ளுமாறு செய்ததாகும்.

100.

விச்சுஅது இன்றியே விளைவு செய்குவாய்
      விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
       புலையனேனை உன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு
       உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர்
நச்சு மா மரம் ஆயினும் கொலார்
       நானும் அங்ஙனே உடைய நாதனே 96

வைச்சு வாங்குவாய்-நிலைபெறுத்தி அழிப்பாய். கொலார்கொல்ல மாட்டார்.

இதுவரை திருவடியைப் பிரிந்து வாழும் கொடுமையான நிலை தமக்கு ஏற்பட்டதை உன்னி, மனம் வருந்தி, எவ்வாறாயினும் குருநாதர் தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிவந்த அடிகளார், இப்பொழுது அடி நாதத்தையே மாற்றுகின்றார்.

'விதையில்லாமல் விளைவை உண்டாககக் கூடியவன் நீ எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கின்றவன் நீ. உலக பந்தங்களிலும், அரசியல் வாழ்விலும் ஈடுபட்டு வஞ்சகம் பொய் முதலியவற்றை உறுதுணையாகக் கொண்டு வாழ்ந்த கடையவனான என்னையும் உன் திருமுன்னர் எல்லாவற்றையும் துறக்குமாறு செய்தாய். அம்மட்டோடு நில்லாமல் உன்னால் ஏற்றுக்கொள்ளப் பட்ட அடியவர்களின் கூட்டத்தில் ஒரே விநாடியில் சம உரிமை பெற்றவனாகப் புகுத்தினாய். இவ்வளவையும் செய்துவிட்டு இப்பொழுது என்னைக் கைவிட்டு விட்டாயே, இது முறையா? பெருமானே! எங்களிடம் வழங்கும் ஒரு பழமொழி உனக்குத் தெரியுமா? தாமே வளர்த்த மரம், வளர்ந்த நிலையில் நச்சுத்தன்மை உடையதாக மாறிவிட்டாலும் மரத்தை வளர்த்தவர்கள் அதனை வெட்டமாட்டார்கள். சிந்தித்துப் பார்த்தால் நானும் உனக்கு அப்படித்தான். எனவே, என்னைக் கைவிடுதல் என்பது உனக்கு அழகன்று என்பது குறிப்பெச்சம்.

101.

உடைய நாதனே போற்றி நின் அலால்
      பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ பணி போற்றி உம்பரார்
      தம் பராபரா போற்றி யாரினும்
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்
      கருணையாளனே போற்றி என்னை நின்
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்
      அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே97

பணி-கட்டளையிடு. உம்பரார்-தேவர்.

முந்தைய பாட்டில் கூறிய பழமொழி நினைவு வந்தவுடன் இறைவனுக்கு எச்சரிக்கை விடுவதுபோன்ற அக்கருத்தைச் சொல்லியிருக்கக் கூடாதோ என்று நினைக்கின்றார் அடிகளார். அவன் பெருமை எங்கே, யாரினும் கடையனான தம் நிலைமை எங்கே என்ற நினைவு வந்தவுடன் போற்றி போற்றி என்று கூறிச் சரணாகதி அடைகிறார்.

102.

அப்பனே எனக்கு அமுதனே
    ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன்
ஒப்பனே உனக்கு உரிய அன்பரில்
     உரியனாய் உனைப் பருக நின்றது ஓர்
துப்பனே சுடர் முடியனே துணையாளனே
     தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே எனை வைப்பதோ சொலாய்
      நைய வையகத்து எங்கள் மன்னனே 98

துப்பன்-உணவாயுள்ளவன். தொழும்பாளர்-அடியார். எய்ப்பினில் வைப்பு-இளைத்த காலத்தில் உதவும் சேமநிதி.

இப்பாடலிலும் இறைவன் பெருமைகளைப் புகழ்ந்து கூறிவிட்டு, 'இத்துணைப் பெருமை உடையவனாகிய நீ எண்ண மனம் நையுமாறு இவ்வுலகிடை விட்டுச் சென்றது முறையோ' என்று அரற்றுகின்றார்.

103.

மன்ன எம்பிரான் வருக என் எனை
     மாலும் நான் முகத்து ஒருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என் எனை
      முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன எம்பிரான் வருக என் எனைப்
      பெய்கழற்கண் அன்பாய் என் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என் எனைப்
       பாவநாச நின் சீர்கள் பாடவே 99

முன்ன-முன்னவனே. பின்ன-பின்னே. பன்ன-பலகாலும் சொல்ல.

‘உயிர்களின் பாவ நாசனே! மூவருக்கும் முதல்வனே! நின் சீர்கள் பாட நீ இருக்கும் இடத்திற்கு வருக என்று என்னை அழைப்பாயாக’ என்றவாறு.

104.

பாடவேண்டும் நான் போற்றி நின்னையே
பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு
ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
ஆடும் நின் கழல் போது நாயினேன்
கூடவேண்டும் நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கு எனைப் போற்றி பொய் எலாம்
விட வேண்டும் நான் போற்றி விடு தந்து
அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே 100

விட அழிய, புழுக்கூடு-புழுக்களுக்கு உறைவிடமாகிய உடல்.

‘அன்பருக்கு அன்பனே நின் புகழைப் பாடவேண்டும் நான். வெறும் வாயில் இருந்துமட்டும் பாடல் வராமல் நெஞ்சு நெக்குநெக்கு உருகவேண்டும். அந்த உருக்கத்தின் பயனாக என்னை மறந்து ஆடவேண்டும். அம்பலத்தில் ஆடுகின்ற உன் மலர்போன்ற திருவடிக்கீழ் இணைய வேண்டும். உன் திருவடியில் இணையவேண்டுமாயின் அதற்கு இடையூறாக இருப்பது புழுக்கள் நிறைந்த இவ்வுடலே ஆகும். ஆகவே, இதனைப் போக்கி அருள்வாயாக என்பாலுள்ள பொய்களை யெல்லாம் நான் களையவேண்டும். உன் திருவடியாகிய வீடுபேற்றைத் தந்து அருள்வாயாக’ என்கிறார்.