திருவாசகம் சில சிந்தனைகள்-2/நீத்தல் விண்ணப்பம்

6. நீத்தல் விண்ணப்பம்

அந்தாதித் தொடையிலுள்ள நூறு பாடல்களைக் கொண்ட திருச்சதகத்தின் பின்னர், நீத்தல் விண்ணப்பம் என்ற இப்பகுதி வைக்கப்பெற்றுள்ளது. திருப்பெருந்துறையில் குரு வடிவில் இருந்தவர், அடிகளாருக்கு அருள்செய்த பின்னர் மறைந்துவிட்டார் என்பதை முன்னர்க் கண்டோம்.

குருநாதர் 'பொதுவினில் வருக' என ஆணையிட்டு மறைந்த பின்னர், அடிகளாரின் கலக்கம் மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டது. நாட்கள் செல்லச் செல்ல இறைவன் இங்குத் தம்மை விட்டுச் சென்றதற்கு ஒரு காரணம் உண்டு என்பதை உணர்ந்துகொண்டார். ஆதலின், ‘ஏல என்னை இங்கொழித்து அருளி' (திருவாச 2-129) என்று பாடினார். அப்படி ஒழித்தமைக்குக் காரணம் பராஅமுது ஆக்குவதற் காகவே என்பதையும் உணர்ந்துகொண்டார்.

விட்டுச் சென்றமைக்குக் காரணத்தை இவ்வளவு தெளிவாக அகவல்களில் கூறிய அடிகளார் பிரிந்திருப் பதற்கு மீட்டும் கவலை கொள்கிறார். இது ஏன்?

எல்லை மீறிய இன்ப அனுபவத்தைப் பெற்று அது தம்மைவிட்டு நீங்கியமையின் அது மறுபடியும் வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. அன்றியும் 'மீட்டு இங்கு வாரா வினைப்பிறவி சாராமே' அருள்வானைக் (திருவாச 1.87) குருவடிவில் நேரே கண்டு, திருவடி தீட்சையும் பெற்றபின்னரும் இந்த உடம்பும் அதனோடு தொடர்புடைய மனமும் இந்தப் பொறி, புலன்களும் தம்மைவிட்டு நீங்கவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறார்.

‘மீண்டு வாரா வழி அருள் புரிபவ (திருவா. 2-117) னாகிய அவனுடைய தொடர்பு கிடைத்தது; அவன் திருவடிகளை இறுகப் பற்றிக்கொண்டுடாகிவிட்டது.

திருப்பெருந்துறை நிகழ்ச்சி பூத உடலோடு, உடன் இருந்த அனைவரும் காண நேரிடையாக நிகழ்ந்தது. ஆதலின், அடிகளார் தம் பூத உடலில் உள்ள இரண்டு கைகளாலும் குருவின் திருவடிகளைப் பற்றிக்கொண்டார். இக்காட்சி மறைந்தவுடன் கைகளால் திருவடிகளைப் பற்றுகின்ற வாய்ப்பு இல்லை. ஆனால், உடலில் உறையும் நெஞ்சு அத்திருவடிகளை விடாது பற்றிக்கொண்டு அதனுடனேயே சென்றிருத்தல் வேண்டும். அவ்வாறு செய்யவில்லை; உடல்மேலுள்ள பற்றுக் காரணமாகத் திருவடிகளை விட்டுவிட்டு உடம்புடனேயே தங்கிவிட்டது. ஆதலின், கடமையை மறந்த அந்த நெஞ்சின்மேல் சினங் கொண்டார். அதனால் 'பிணநெஞ்சே' (திருவாச. 35) என்றும், துணையிலி 'பிணநெஞ்சே' (திருவாச. 35) என்றும் சாடுகிறார்.

இத்துணை கூறியும் அந்த நெஞ்சு இந்த உடம்பை விட்டுவிட்டுத் திருவடியைப் பற்றுமாறில்லை. எவ்வளவு முயன்றாலும் உடம்போடு பிறந்ததாகிய இந்த நெஞ்சை நம்பிப் பயனில்லை என்றுணர்ந்த அடிகளார், இப்பொழுது இறைவனை நோக்கியே பாடுகிறார்.

நீத்தல் விண்ணப்பத்தில் வரும் ஐம்பது பாடல்களிலும் ‘என்னை விட்டுவிடாதே’ என்ற ஒரே கருத்து மீட்டும் மீட்டும் பேசப்படுகிறது.

நீத்தல் என்ற செயல் இப்பொழுது இறைவனைப் பற்றியதாகும். அடிகளாரை வேண்டாமென்று நீத்தல் செய்யும் ஆற்றலுடையவன், தலைவனாகிய அவன் ஒருவனே ஆவான். ஆதலின், தாம் எவ்வாறு இருப்பினும் தம்மைக் கைவிட்டு விடவேண்டா என்று விண்ணப்பம் செய்கிறார். ஆதலின், இப்பகுதி நீத்தல் விண்ணப்பம் என்ற பெயரைப் பெற்றது.

105.

கடையவனேனைக் கருணையினால்
      கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே விட்டிடுதி கண்டாய்
     விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தரகோச
     மங்கைக்கு அரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான்
      என்னைத் தாங்கிக்கொள்ளே 1

கலந்து-உயிரோடு உள் கலந்து. விடையவன்- இடபவாகனம் உடையவன். விறல் வேங்கை-வலியபுலி. தளர்ந்தேன் அடியேனை மலவாதனைதாக்கத் தளர்ந்தேன்.

இப்பாடலின் முதலிரண்டு அடிகள் ஆழமான பொருளுடையவை. பாடலின் இரண்டாவது அடி ‘விட்டிடுதி கண்டாய்” என்று விண்ணப்பம் செய்கிறது. ‘என்னை விட்டுவிடாதே’ என்று இரண்டு வகையில் வேண்டலாம்.

தலைவன் யாரென்று தெரியாமலும் அவன் தமக்கு இது செய்வதற்குத், தம்பால் என்ன தகுதியுள்ளது என்று தெரியாமலும் விண்ணப்பம் செய்வது ஒருவகை. இந்த முதல்வகை விண்ணப்பத்தின் அடிப்படை, தம் துயரத்தைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில் தோன்றியதாகும்.

இவ்வாறன்றி 'இன்ன இன்ன காரணங்களால் நீ என்னை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். நடுவில் என்னை விடுவதற்கு உனக்கு உரிமையில்லை’ என்பதைக் குறிப்பிட்டு விண்ணப்பிப்பது, இரண்டாவது வகையாகும்.

அடிகளாரின் இந்த விண்ணப்பம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

‘என்னை ஏற்றுக்கொள் என்று உன்னிடம் வந்து கேட்குமளவிற்கு நான் வளர்ச்சியடையவில்லை. நான் கடையவன். நீ யார்? நான் யார்? நம்மிடையே உள்ள உறவு என்ன? நீ என்னை ஏற்றுக்கொண்டாலன்றி எனக்கு நிம்மதியே இல்லை என்பவற்றையெல்லாம் அறிந்து நான் உன்னிடம் வந்து முறையிடவில்லை. இவற்றையெல்லாம் அறியமுடியாத கடையவன் ஆக உள்ளேன் நான். அப்படியிருக்க, நீயே வந்து ஆட்கொண்டாய். அம்மட்டோ! இல்லை, கலந்தல்லவா ஆட்கொண்டாய். நீ ஆண்டான்; நான்அடிமை என்பதை நீ தெரிவித்திருந்தாலே போதுமானது. அதன்மேலும் பல படிகள் சென்று என்னுள் கலந்தாய். இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன். கடையவனாகிய என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி, திருப்பெருந்துறையில் மானிட உருவுடன் வந்து கலந்து ஆட்கொண்டாய்.'

‘இதற்கு ஒரே ஒரு காரணந்தான் தென்படுகிறது. என்பால் தகுதியில்லை, எனவே, நீ என்னைக் கலந்து ஆண்டது உன் அளப்பருங் கருணை காரணமாகவே என்பதை நன்கு புரிந்துகொண்டேன்.'

‘கருணை காரணமாக நீயே வந்து கலந்து ஆட்கொண்டுவிட்டு, இப்பொழுது திடீரென்று என்னை விடுவது முறையன்று.'

‘எதிர்த்துவந்த புலியைக்கூட அழித்ததோடு, நில்லாமல் அதன்மேல் கொண்ட கருணையால் அதன் தோலையே நீ உடுத்துக்கொண்டவன் ஆயிற்றே?'

'ஐயா! நீ ஆட்கொண்டபொழுது நின் பல் கணத்து எண்ணப்பட்டு இறுமாந்து (திருமுறை; 4-9-11) இருந்த நான், இன்று தளர்ந்துவிட்டேன். கருணையினால் கலந்தாண்டுகொண்ட நீ, இன்று தளர்ந்து விழப்போகும் என்னைத் தாங்கிக்கொள்ள வேண்டும்’ என்கிறார்.

106.

கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர்
      கொவ்வைச் செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய்
      நின் விழுத் தொழும்பின்
உள்ளேன் புறம் அல்லேன் உத்தரகோச
       மங்கைக்கு அரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு
      ஆண்டது எக் காரணமே 2

கொள் ஏர் பிளவு அகலாத் தடங்கொங்கை-கொள்ளின் பிளவு அளவுகூட அகலாத கொங்கை. விள்ளேன்-விட்டு நீங்கேன். விழுத்தொழும்பு-பெருமைக்கு ஏதுவாகிய அடிமை. ஒழியவும்-பிரிந்திருக்கவும். விடுதி கண்டாய்-விட்டு விடாதே. கள்ளேன்-கள்ளத்தன்மை உடையவன்.

‘ஐயனே! மகளிர்பற்றிய நினைவு அகலாதவனாக இருந்தும் உன் அடியார் கூட்டத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டேன். ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு புறத்தே உள்ளவன் என்று என்னைக் கூறக்கூடாது. எனவே, என்னை விட்டுவிடாதே’ என்றவாறு.

107.

கார் உறு கண்ணியர் ஐம் புலன்
    ஆற்றங்கரை மரமாய்
வேர் உறுவேனை விடுதி கண்டாய்
     விளங்கும் திருவா
ரூர் உறைவாய் மன்னும் உத்தரகோச
     மங்கைக்கு அரசே
வார் உறு பூண் முலையாள் பங்க
     என்னை வளர்ப்பவனே 3

காருறு கண்ணியர் - கரிய கண்ணினை உடையர்.

என்ன காரணத்தாலோ இரண்டாவது முறையாக இப்பாடலிலும் மகளிர் மயக்கத்தில் தம் மனம் செல்வதை அடிகளார் குறிப்பிடுகின்றார். இந்த இடத்தில் சராசரி மனிதனின் மன நிலையை அடிகளார் ஏறட்டுக்கொண்டு பாடினார் என்று சொல்லமுடியவில்லை.

மிகுதியும் வளர்ச்சியடைந்த மனிதர்களின் மனங்கூட, பழைய பழக்க வசத்தால் ஒரோவழி இத்தகைய எண்ணங்களில் ஈடுபடுவதுண்டு என்று மனித மனத்தின் கூறுபாட்டை நன்கு அறிந்தவர்கள், கூறுகின்றனர். (திருக்குறளில் துறவு என்ற அதிகாரத்தை அடுத்து, பின்னர் அவா அறுத்தல் என்ற அதிகாரம் வருதலின், இவற்றிடையே காணும் பொருத்த மின்மையை அறிந்த பரிமேலழகர் அவா அறுத்தல் அதிகாரத்திற்கு எழுதிய முன்னுரையைக் காணவும்) இத்தகைய எண்ணங்கள் பெரியோர்களிடையே ஒரோவழி, ஒரு கணம் தோன்றினால்கூட, அதை மிகைப்படுத்தி அக்குறையிலிருந்து நீங்கவேண்டும் என்று பாடுவது சரியானதே ஆகும். .

பெருங்குடியில் பிறந்து, ஒரு பேரரசின் அமைச்சராகவும் இருந்த ஒருவர், திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு முன்னர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருத்தல் இயல்பேயாகும்.

இவற்றையெல்லாம் துறக்குமாறு செய்தது திருவடி தீட்சை என்றாலும், ஒரோவழிப் புலன்கள் மேற் செல்லும் இப்பற்று 'தேகப் பிரக்ஞை' இருக்கின்றவரை இருக்கத்தான் செய்யும். என்றோ ஒருகணம் மனத்துள் தோன்றிய இவ்வெண்ணத்தைப் பெரிதாக்கி, மிகைப்படுத்திக் கூறியதால் அடிகளாரின் பெருமை வெளிப்படுகிறதே தவிர, இதனால் இழுக்கொன்றும் அவருக்கு நேரவில்லை என்பதை அறிதல் வேண்டும்.

108.

வளர்கின்ற நின் கருணைக் கையில்
         வாங்கவும் நீங்கி இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்
         வெண்மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோச
          மங்கைக்கு அரசே
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன
          தோற்றச் செழும் சுடரே 4

வாங்கவும்-வளைத்துப் பிடிக்கவும். மிளிர்கின்ற-விளங்குகின்ற.

‘ஐயனே! உய்யவேண்டும் என்ற எண்ணம் ஒரு சிறிதும் இன்றி, உலக வாழ்க்கையில் முழுவதுமாக ஈடுபட்டு வழியோடு சென்றுகொண்டிருந்த என்னை, மேலும் மேலும் வளர்கின்ற கருணையாகிய நின் திருக்கரம் வளைத்துப் பிடித்தது.’

‘கருணையாகிய நீண்ட கரம் வளைத்தும்கூட, துரண்டிலில் சிக்காத மீன்போல், நின் பிடியில் அகப்படாமல் சுற்றிவருகின்ற என்னைத் தயைகூர்ந்து விட்டுவிடாதே’ என்றவாறாம்.

109.

செழிகின்ற தீப்புகு விட்டிலின்
சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய்
வெறிவாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோச
மங்கைக்கு அரசே
வழி நின்று நின் அருள் ஆர்அமுது
ஊட்ட மறுத்தனனே 5

செழிகின்ற-வளர்கின்ற. சின்மொழியார்-சிலவாகிய சொற்களைப் பேசுகின்ற பெண்கள். வெறி-மனம். அறுகால்-வண்டு. ஊட்ட-உண்பிக்க.

இப்பாடலும் முன்னர்க் கூறப்பெற்ற மகளிர் தொடர்புபற்றியே பேசுகின்றது.

இறுதி அடியில் வழியில் நின்று ஆரமுது ஊட்ட குருநாதர் காத்துக்கொண்டு இருந்ததையும் அந்த வாய்ப்பை நழுவவிட்டதையும் பேசுகின்றார்.

‘மறுத்தனன்’ என்ற சொல்லை அடிகளார் சொல்லியிருந்தாலும் உண்மையில் குருவின்பின்னே செல்ல இவர் மறுக்கவில்லை. திருவடியைப் பற்றிய கை நெகிழாமல் இந்த உடலை இங்கே துறந்துவிட்டு அவருடன் போயிருக்க வேண்டுமென்பதே அடிகளாரின் பேரவா ஆகும். உடலை விடமுடியாமையின் மறுத்தனன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அப்படி இருந்தாலும் தம்மைக் கைவிட வேண்டா என்று விண்ணப்பிக்கின்றார்.

110.

மறுத்தனன் யான் உன் அருள்
அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்
வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோச
மங்கைக்கு அரசே
பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு
நாய்கள் தம் பொய்யினையே
  6

ஒறுத்து - அடக்கி

பெருமானே! பெரியோர் என்பவர்கள் சிறியோர் பிழையைப் பொறுப்பதனால்தானே பெரியோர்கள் ஆயினர். 'சிறு நாய்கள்தம் பொய்யினையே’ என்று பன்மையால் கூறியது ஒரு பழமொழி போல இதனைக் கூறுவதற்கேயாம்.

நாய்கள் என்று பன்மையால் கூறினும், நாய் என்று ஒருமையால் கூறினும், நாய்க்கும் பொய்க்கும் எவ்விதத் தொடர்புமில்லை. நாயின் வாழ்க்கையில் பொய்க்கு வாய்ப்பே இல்லை. தம்மை நாயாக உருவகித்துக் கொண்ட பின்னருங்கூட, தாம் பொய்யர் என்ற எண்ணம் அடிகளாரைவிட்டு நீங்கவில்லை. எனவே தான், தம்மை ஆட்கொள்ள வந்த இறைவன், தாம் பொய்யர் என்ற காரணத்தால் விட்டுவிடக் கூடாது, ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.

111.

 
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு
      ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே விட்டிடுதி கண்டாய்
     விடம் உண் மிடற்று
மையவனே மன்னும் உத்தரகோச
     மங்கைக்கு அரசே
செய்யவனே சிவனே சிறியேன்
     பவம் தீர்ப்பவனே 7

பொத்திக்கொண்ட- மறைத்துக்கொண்ட ஒன்று-முத்தி. பவம் -பிறவி.

‘யான் பொய்யன் என்பது அறிந்திருந்தும் என்னை ஆண்டுகொண்டாய். என்னைக் கைவிட்டுவிட வேண்டா’ என்று விண்ணப்பிக்கின்றார்.

சென்ற பாடலிலும், இந்தப் பாடலிலும் அவர் உள்ளத்தைக் குடைந்துகொண்டிருந்த 'தாம் பொய்யன்’ என்ற கருத்து ஊசலாடுவதைக் காணலாம்.

112.

தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள்
           என் கொல் என்று

வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய்
      விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தரகோச
     மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
    வினையேனை இருதலையே 8

வேர்க்கின்ற-மனம் புழுங்குகின்ற, விரவார்-பகைவர். தார் விடை-கிண்கிணிமாலை அணிந்த இடபம்.

‘ஐம்பொறிகளும் ஆசை காட்டித் தம் வழியே இழுக்க, அதில் செல்ல வேண்டுமென்று விரும்பினாலும் அதனால் என்ன விளையுமோ என்ற அச்சம் மறு பக்கம் இழுக்க, இப்படி இரு வகையிலும் இழுக்கப்பட்டு அலமருகின்ற என்னை ஏன் கூவி அழைக்கவில்லை. என் பிழைகளை எவ்வாறு பொறுத்து ஆட்கொள்ளப் போகிறாயோ என்று அஞ்சுகிறேன். எனினும், என்னைக் கைவிடவேண்டா’ என்கிறார்.

113.

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து
     நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய்
    வியன் மூஉலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தரகோச
     மங்கைக்கு அரசே
பொருது அலை மூஇலை வேல் வலன்
     ஏந்திப் பொலிபவனே 9

இருதலைக் கொள்ளி எறும்பு என்பதே முதுமொழி ஆகும். ஆனாலும் இதில் ஒரு குறை இருக்கிறது. ஒரு குச்சியின் இரண்டு பக்கங்களிலும் நெருப்புப் பற்றியிருப்பதால் (குச்சியின் மேலே உள்ள) எறும்பு இரண்டு பக்கங்களாலும் வெளியேற முடியாது. ஆனால், இரு பக்கங்களிலும் நெருப்பு நெருங்கி வரவர வெப்பம் தாங்காத எறும்பு துடிப்பதால் கீழே விழுந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பழமொழியில் உள்ள இக்குறையைப் போக்க, அடிகளார் ‘இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து’ என்கிறார்.

உள்ளீடு இல்லாமல் குழாய் போன்று இருக்கும் குச்சியில் இரண்டு பக்கமும் நெருப்புப் பற்றிக்கொண்டால் அந்நெருப்பு நெருங்கி வரவரக் குழாயின் உள்ளேயுள்ள எறும்பு சாவது தவிரத் தப்பிக்க வழியே இல்லை.

114.

பொலிகின்ற நின் தாள் புகுதப் பெற்று ஆக்கையைப்
        போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய்
        அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம்பொழில் உத்தரகோச
        மங்கைக்கு அரசே
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய்
        புரம் மாறுபட்டே 10

அளி-வண்டு. விளரி-ஏழு இசையில் ஒன்று. வலிநின்றதிண் சிலை-வளைக்கப்படாத வலிய வில்.

இப்பாடலின் முதலடியில் மிக அற்புதமான ஒரு தத்துவத்தை அடிகளார். பேசுகின்றார். 'பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று’ என்பது திருப்பெருந்துறை நிகழ்ச்சியைக் குறிப்பதாகும். தாள் புகுதப் பெற்று என்பது சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். திருவடிகளில் தஞ்சமாகப் புகுந்து என்று பலரும் உரை கண்டுள்ளனர்.

புக்கு என்ற வினைக்கு ஒரு வினை முதல் வேண்டும். திருவடிகளில் ஒருவர் தலைவைத்து வணங்கலாமே தவிர, பருப்பொருளாகிய உடம்புடன் திருவடிகளில் புகுதல் என்பது இயலாத காரியம். ஒலிதரு நின்தாள் வணங்கப்பெற்று என்றோ, இறைஞ்சப் பெற்று என்றோ கூறியிருக்கலாம். மாபெரும் கவிஞராகிய அடிகளார் சொற்பஞ்சம் உடையவரல்லர். அப்படியிருந்தும் அடிகள் பாடினார் என்றால், அதற்கு ஏதோ ஓர் உட்பொருள் இருத்தல் வேண்டும். சற்று நின்று நிதானித்தால் அந்த உட்பொருளையும் விளங்கிக்கொள்ள முடியும்.

இப்பொழுது குருவின் திருவடிகளை நம் மனத்தில் கொண்டு வரலாம். திருவடிகள் பருப்பொருளாக அமைந்துள்ளன. திருவாதவூரர் என்ற அமைச்சர் அந்தப் பதவிக்குரிய உடைகளுடன் அந்தத் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகிறார். இதையும் நம் மனத்தில் கொண்டுவரலாம். திருவடிகள் ஒரு பருப்பொருள்; திருவாதவூரர் உடல் ஒரு பருப்பொருள். எனவே, திருவடிகளுள் வாதவூரர் உடல் என்ற பருப்பொருள் நுழையுமாறில்லை. மேலும், திருவடிகளில் புகுதல் என்பது சற்றும் பொருத்தமில்லாத ஒன்றாகும்.

ஆனால் கவிஞர் மிகத் தெளிவாக, 'பொலிகின்ற நின் தாள் புகுதப் பெற்று’ என்கிறாரே என்றால், புகுந்தது உண்மை. அடிகளாரின் பருவுடலையே நாம் மனத்தில் கொண்டிருப்பதால் எப்படிப் புகுத முடியும் என்ற ஐயம் மனத்தில் தோன்றுகிறது.

திருவடி என்பது வீடுபேறு என்பதன் பரியாய நாமம் ஆகும். அந்த வீடுபேற்றுக்குள் மணிவாசகர் என்பவருடைய ஆன்மா புகுந்தது உண்மை. அந்த ஆன்மாவுக்கு உரிய பருவுடல் வெளியேதான் கிடக்கிறது. திருவடிகள் என்ற பருப்பொருளும் வெளியேதான் உள்ளது. உள்ளே புகுந்த இவர் 'தேகப் பிரக்ஞை’ இல்லாதவராக, எனை நான் என்பது அறியாதவராக, சில நேரம் இருந்துவிட்டதும் உண்மை.

தேகப்பிரக்ஞை இல்லாதிருந்த அந்த நேரத்தைத்தான் “நின்தாள் புகுதப் பெற்று’ என்று பேசினார்.

இக்காட்சி முடிந்தவுடன் திருவடிகள் மறைந்தன. அதனுள் புகுந்து ஆனந்த லயத்தில் மூழ்கியிருந்த அடிகளாரின் ஆன்மா, மீட்டும் உடலுக்குள் புகுந்துவிட்டது. அதாவது, அடிகளாருக்குத் தேகப் பிரக்ஞை வந்து விட்டது. அப்பொழுது இந்த உடல் தம்முடைய முன்னேற்றத்திற்குத் தடை என்று அடிகளார் நினைக்கின்றார். இந்த உடல் இருந்ததனால்தானே ஆனந்த லயத்திலிருந்த அந்த ஆன்மா மீட்டும் வந்து இதனுள் புகமுடிந்தது. இதனை நினைந்தவுடன் இந்த ஆக்கையைப் போக்கப்பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றார். ஆனால், அவர் விருப்பப்படி ஆக்கை போவதாகத் தெரியவில்லை. அதனாலேயே 'மெலிகின்ற என்னை’ என்று பாடினார்.

115.

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப
யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய்
வினையேன் மனத்தே
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே
நீறுபட்டே ஒளி காட்டும் பொன் மேனி
நெடுந்தகையே 11


அஞ்சு-பஞ்சேந்திரியங்கள். மட்டே-தேனே. நீறுபட்டு-திருநீற்றிற்பொருந்தி, வேறுபட்டேனை-பிரிந்த என்னை.

சென்ற பாடலில் ஆக்கையைப் போக்கப்பெற்று என்று பாடினார் அல்லவா? இந்த ஆக்கை இருந்ததால்தானே திருப்பெருந்துறைக்கு வரவும், குருதரிசனம் கிடைக்கவும், திருவடி தீட்சை பெறவும் வாயப்புக் கிடைத்தது! அப்படியிருக்க ஆக்கையைப் போக்கப்பெற்று என்று பாடியதன் நோக்கம் என்ன? அதனைப் போக்க இயலாமையின் மெலிகின்றேன் என்று பாடியதன் நோக்கம் என்ன ?

இந்த வினாக்களுக்கு விடை இப்பாடலின் முதலடியில் தரப்பெறுகிறது.

'அஞ்சு என்று சொல்லப்பெறும் ஐம்பொறிகளும் எனக்கு உதவுவதுபோலக் காட்டி, உன் திருவடியிலிருந்து பிரியாமல் இருக்க வேண்டும் என்ற என் குறிக்கோளுக்கு மாறுபட்டு, வஞ்சனை செய்துவிட்டன. திருவடியில் வீழ்ந்து வணங்கிய அந்த நேரத்தில் இந்த ஐந்தும் அடங்கி ஒடுங்கி எனக்கு உதவிபுரிந்தன. ஆனால், இப்பொழுது மாறுபட்டு என்னை வஞ்சித்துவிட்டன.'

'ஐயா! இந்த ஐந்தின் துணை கொண்டுதான் உன் திருவடிகளில் வணங்கினேன். இவ்வுடம்பிலிருந்து என் ஆன்மா உன் திருவடிகளில் புகும்போது, தேகப் பிரக்ஞை இல்லாதிருந்தபோது இந்த ஐந்தும் வலியிழந்து செத்துக் கிடந்தன.'

‘ஆனால் இப்பொழுது அவை வலுப்பெற்று என்னை அடக்கி ஆளத் தொடங்கிவிட்டன. உன் மணிமலர்த்தாளோடு இணைந்து சென்றிருக்க வேண்டிய என்னை அதனை விட்டுப் பிரியுமாறு செய்துவிட்டன.'

'ஐயா! திருவடிக் காட்சி தந்தும், தீட்சை கொடுத்தும், ஏற்றுக்கொண்டும் உதவியிருக்க, நின்னோடு இணையாமல் இந்த ஆக்கையில் மறுபடியும் புகுந்து திரிகின்றேன் என்றால், தயைகூர்ந்து என்னைக் குறை கூறாதே. நீ கொடுத்த அஞ்சும் எனக்கு உதவுவதற்குப் பதிலாக நின் மலர்த்தாளில் இருந்து மாறுபட்டுச் செல்லுமாறு செய்துவிட்டன. இந்த அஞ்சு வஞ்சகர்களின் வலையில் சிக்குண்ட என்னை விட்டுவிடாதே என்கிறார்.

116.

நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள
யான் ஜம்புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய்
விரவார் வெருவ
அடும்தகை வேல் வல்ல உத்தரகோச
மங்கைக்கு அரசே
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர்

அமுதப் பெரும் கடலே
12

விரவார்-பகைவர். அடுந்தகை-கொல்லுந்தன்மை. கடுந் தகையேன்-தீயகுணமுள்ள யான்.

'பெரியோனே! நீ என்னைத் தேடிவந்து இழுத்து அருள் செய்யவும் அதன் அருமைப்பாட்டை அறியாமல் அந்த இன்ப அனுபவத்தை விட்டுவிட்டேன். மழக் கை இலங்கு 'பொற் கிண்ணமாக நீ இருந்தாய், ஆனால், பொற் கிண்ணத்தின் அருமையறியாத மழக் கையாக (இளம் குழந்தையின் கையாக) நான் இருந்துவிட்டேன். என்னை விட்டுவிடாதே’ என்பதாம்.

பாடலின் நான்காவது அடி ஒரு சிறப்பை உள்ளடக்கியிருக்கின்றது. 'நீ தெண்ணிர் அமுதப் பெருங்கடலாக உள்ளாய் பெருங்கடலாக நீ இருத்தலின் திருப்பெருந்துறை, திருஉத்தரகோசமங்கை என்ற இரண்டு இறங்குதுறை மட்டும் அல்லாமல் வேறு எந்த இடத்தில் வேண்டு மானாலும் கடலுள் இறங்கி, தெண்ணீரைக் குடிக்கமுடியும். ஆனாலும், என்ன? நான் கடுந்தகையேனாக இருத்தலின் இறங்கிக் குடிக்கும் ஆற்றலை இழந்து நிற்கின்றேன். எனினும், என்னை விட்டுவிடாதே’ என்கின்றார்.

117.

கடலினுள் நாய் நக்கிஆங்கு உன் கருணைக்
கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய்
விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே
மடலின் மட்டே மணியே அமுதே
என் மது வெள்ளமே

13

உடல் இலமே மன்னும் உடலை வீடாகக்கொண்டு நிலை பெற்ற, மடலின் மட்டு-பூவிதழிலுள்ள தேன்; குடித்தலில்லாத தேன். எனினும் ஆம்.

'ஆறு நிறையத் தண்ணிர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்’ என்பது இந்நாட்டு முதுமொழி. அதுபோலத் திருப்பெருந்துறையில் குருவின் கருணை வெள்ளம் கடல்போல் பரந்துநின்றபோதும், நாய் நக்கிக் குடிப்பது போல் ஒரு சிறுபொழுதே அதனை அனுபவித்தார். ஆற்றுத் தண்ணீரை நக்கிக் குடித்த நாய் ஆற்றைவிட்டு வெளியேறி வீட்டுக்கு வந்தபிறகும், சிறிதளவுதானே குடித்தோம்; இன்னும் கொஞ்சம் குடித்திருக்கலாமே என்று நினைப்பதுபோல் திருப்பெருந்துறையில் கருணைக் கடலில் ஒரு சிறுபொழுதே மூழ்கியிருந்த அடிகளார், அந்த அனுபவத்தில் நிலைக்கவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் தவிக்கின்ற மனநிலையை இங்குப் பேசியுள்ளார்.

இறைவன் எங்கே தங்குகிறான் என்பதை இரண்டாவது அடி பேசுகிறது. 'விடலில் அடியார்’ என்றதால் ஒரு கணநேரமும் அவன் நினைவினை விட்டுநீங்காத அடியார் என்பது பொருளாகும். அப்படிப்பட்டவர்கள் உள்ளக் கோயிலில் தங்கியிருப்பவன் என்பதே கருத்தாகும்.

118.

வெள்ளத்துள் நா வற்றிஆங்கு உன் அருள் பெற்றுத்
துன்பத்தின் நின்றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்
விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத
களி எனக்கே

14

விள்ளக்கிலேன்-விலகும் ஆற்றலிலேன். நாவற்றி-நீர்மேல் மிதக்கும் ஒரு வகை பூச்சி. களியாத களி-இதுவரை அனுபவித்தறியாத ஆனந்தம்.

இப்பாடலின் முதலடி பலருக்கும் குழப்பத்தைத் தருவதாகும். நீர்ப்பெருக்குள்ள கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய ஒரு செய்தி இங்குப் பேசப்பெறுகிறது. 'நாவற்றி' என்பது நீரில் மிதந்து கொண்டே, இங்கும் அங்கும் திரியும் ஒரு பூச்சியின் (எட்டுக்கால் பூச்சி போன்றது) பெயராகும். நாள் முழுவதும் நீரின்மேல் மிதந்தாலும் இந்த நாவற்றிப் பூச்சி நீரினால் எப்பயனையும் அடைவதில்லை.

இந்த உவமையைக் கூறுவதன் மூலம், கருணைக் கடலுள் புகுமாறு வாய்ப்பளித்துங்கூடத் தாம் அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விளக்குகிறார்.

அருளை நன்கு பயன்படுத்திக் கொள்வதாவது உலகத் துன்பங்களிலிருந்து விடுபடுதலாகும்.

‘நாவற்றி' என்பதைப் பூச்சியின் பெயராகக் கொண்டால் 'ஆங்கு' என்ற உவம உருபு பெயரோடு பொருந்தாமையின், நாவற்றி அலைந்தாங்கு என்று ஒரு சொல் வருவித்து பொருள் கொள்ள வேண்டும். இப்பாடலில் ‘வெள்ளம்’ என்பது அருளுக்கு உவமையாயிற்று. நாவற்றிப் பூச்சி அடிகளாருக்கு உவமையாயிற்று. நாவற்றிப் பூச்சி வெள்ளத்தில் மிதந்தும் அதன் பயன் கொள்ளாமை, அருள் வெள்ளத்தில் புகுந்தும் துன்பம் நீங்குதலாகிய பயன் கொள்ளாமைக்கு உவமையாயிற்று.

119.

களிவந்த சிந்தையொடு உன் கழல்
     கண்டும் கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய்
     மெய்ச்சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோச
     மங்கைக்கு அரசே
எளிவந்த எந்தை பிரான் என்னை
     ஆளுடை என் அப்பனே 15

ஒளிவந்த-ஒளிமிகுந்த , ஒளியைத் தந்த எனினுமாம்.

‘ஐயனே! உன் திருவடிகள் இரண்டையும் இரண்டு கண்களாலும் கண்டேன். அந்தக் கணமே என் சிந்தையில் இருந்த எண்ணங்களெல்லாம் மாறி, ஆனந்த பரவசம் (களி) நிரம்பிற்று. அப்படி நெஞ்சு முழுவதும் பரவசம் நிரம்பினாலும் அதனை முற்றிலுமாக அனுபவிக்க வேண்டுமானால் பொறிகளோடு கூடிய யாக்கையை விட்டிருக்க வேண்டும். காரணம், உடம்பு இருக்கின்ற வரையில் பொறி, புலன்கள், அந்தக்கரண்ங்கள் ஆகியவற்றின் சேட்டைகள் ஒரளவேனும் இருந்துகொண்டுதான் இருக்கும். அவை இருக்கின்ற வரை இன்ப அனுபவம் பூரணமாக நிரம்ப முடியாது’ என்றவாறு 'கலந்தருள வெளிவந்திலேன்' என்பதன் பொருள் இதுவாகும்.

இப்பொழுது ஒரு நியாயமான ஐயம் தோன்றினால் தவறில்லை. குருவினிடம் இருக்கும்போது அந்த இன்ப அனுபவம் உடல் முழுதும் நிரம்பி மயிர்க்கால்தோறும் நின்றது என்று அடிகளாரே முன்னர்க் கூறியுள்ளார். அம்மட்டோடு அல்லாமல் அமுத தாரைகள் ஏற்புத் துளைதொறும் ஏற்றப்பட்டன என்றும் அவரே கூறியுள்ளாரே! இவை இரண்டும் உடலுடன் இருக்கும் போதுதானே நடைபெற்றன?

அப்படியிருக்க, இப்பொழுது ‘கலந்தருள வெளிவந்திலேன்’ (உடம்பைவிட்டு நீங்கினேனில்லை) என்று கூறுவது சரியானதா என்ற ஐயம் நியாயமானதே ஆகும். ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்கிவிடும்.

உடம்போடு இருக்கும்பொழுதே இந்த அனுபவம் கிடைத்தது உண்மைதான். ஆனால், எப்பொழுது? அனைத்தையும் வைத்து வாங்கும் பரம்பொருள் குருவடிவில் எதிரேயுள்ளார். அவர் திருவடி பட்டதால் உடம்பு தன் பழைய நிலை மாறிப் புதுத் தன்மை பெற்றுவிட்டது. அனுபவத்தைத் தருகின்றவர், தம் திருவடி மூலம் நேரடியாக அனுபவத்தை உள்ளே செலுத்துகிறார். அந்தப் பேராற்றலின் எதிரே உடம்பின் இயல்புகள் முற்றிலுமாக மறைந்துவிட்டன. அன்றியும் அனுபவத்தை முற்றிலும் பெற்றபொழுது அடிகளாருக்குத் தேகப் பிரக்ஞை இல்லை எனவே, அப்பொழுது உடம்புடன் இருக்கும்போதே அனுபவம் கிடைத்தது.

இப்பொழுது நிலமை முற்றிலும் மாறிவிட்டது. குரு எதிரே இல்லை. அடிகளாரின் உடலும் தன் இயல்பான நிலைமைக்குத் திரும்பிவிட்டது. இந்த உடலுடன் அந்த அனுபவத்தைப் பெற முடியாது. ஆகவேதான், 'கலந்தருள வெளிவந்திலேன்’ என்கிறார்.

120.

என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி
       நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய்
       உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச
       மங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய்
       என் அரும் பொருளே 16

திருவடியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; திருப்பெருந்துறை அனுபவத்தைத் தந்தருள வேண்டும். அதற்குத் தடையாகவுள்ன இந்த உடலைப் போக்கியருள வேண்டும் என்றெல்லாம் இதுவரை அடிகளார் கூறிக் கொண்டிருந்தார். இவை ஒன்றும் நடைபெறாதபோது, தம் வாழ்க்கையே பயனற்றதாகிவிடுமோ என்ற மிகப்பெரிய அச்சம் அவரை ஆட்கொண்டது. அந்த மனநிலையில் இப்பாடல் தோன்றுகிறது.

தம்மை அஞ்சல் என்று சொல்லக்கூடியவர்கள் யார்? தாய், தந்தை முதலியவர்கள்தாமே. எனவே, 'எனக்கு அன்னையும் அத்தனும் நீதானே! நீ அஞ்சாதே என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லக்கூடாதா' என்ற கருத்தில் பேசுகிறார்.

'எய்த்து அலைந்தேன்’ என்பது ஊர்ஊராகச் சென்றும் கோயில் கோயிலாகச் சென்று வழிபட்டும் ‘அஞ்சேல்' என்ற சொல்லை அவன் சொல்லவில்லை என்பதாகும்.

இதே கருத்தை 'அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் யாரிங்கு (திருவாச: 385) என்றும் ‘அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய்' (திருவாச: 427) என்றும் பின்னரும் பாடியுள்ளமையைக் காணலாம்.

121.

பொருளே தமியேன் புகல் இடமே
      நின் புகழ் இகழ்வார்
வெருளே எனை விட்டிடுதி கண்டாய்
      மெய்ம்மையார் விழுங்கும்
அருளே அணி பொழில்
      உத்தரகோச மங்கைக்கு அரசே
இருளே வெளியே இக பரம்
      ஆகி இருந்தவனே 17

வெருள்-அச்சம். மெய்ம்மையார்-ஞானிகள். இருள்-தன்னடி கூடாத வன்கணாளர்க்கு இருளாயிருப்பவன்.

‘அனைவர்க்கும் மெய்ப்பொருளாய் உள்ளவனே! துணையின்றித் தவிக்கும் உயிர்கட்குப் புகலிடமாய் உள்ளவனே! அன்பொடு அமுதுாட்டும் தாயைக்கூட நீ என் தாயல்ல என்று கூறும் அறியாமை நிறைந்த குழந்தைகள் உண்டு. அனைத்திற்கும் தாயாக இருக்கும் உன் புகழை அக்குழந்தைகள்போல் இல்லையென்றோ, இகழ்ந்தோ பேசுபவர்களும் உண்டு. அத்தகையவர்கள் அச்சம் (வெருளே) அடைவதற்குக் காரணமாக உள்ளவனே! என்னை விட்டுவிடாதே’ என்கிறார்.

முரண்பாட்டின் இடையே முழுமுதலைக் காண்டது தமிழர்களின் தனிச்சிறப்பு என்பது முன்னரும் குறிக்கப் பெற்றுள்ளது. 'இருளே, வெளியே' என்பதும் முரண்பட்ட இரு முனைகளாம். இருள் (அஞ்ஞானம்) உள்ள இடத்தில் வெளிவிளக்கம்) இராது; வெளி உள்ள இடத்தில் இருள் இராது என்றுதான் நாம் நினைக்கிறோம். அதனால் இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றும் கருதுகிறோம். முரண்பாட்டைக் கடந்தவன் முழுமுதல் என்பதை 'இருளே வெளியே’ என்றும் 'இக பரமாகி இருந்தவனே' என்றும் அடிகளார் கூறுகிறார்.

122.

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள்
     ஒற்றி வை என்னின் அல்லால்
விருந்தினனேனை விடுதி கண்டாய்
      மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே மன்னும் உத்தரகோச
      மங்கைக்கு அரசே
மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு
      மடங்கினர்க்கே 18

ஒற்றி-முதலுக்கு ஈடாக வைக்கப்பட்ட சொத்து மடங்கினார்க்கு-தாழ்ந்தவர்க்கு.

'ஐயா! முன்பின் வாராமல் இப்பொழுது புதிதாக வந்த விருந்தினரைப்போல் உன்பால் அடைக்கலப்பட்டேன். நான் விரும்புவதெல்லாம் நீ என்னுள் தங்கி இருந்து, பிறகு, விருப்பத்தோடு என்னை ஆட் கொண்டாலும் சரி; நான் உனக்குப் பயன்படமாட்டேன் என்று விற்றுவிட்டாலும் சரி, ஆட்கொள்ள, இப்பொழுது எனக்குத் தகுதியில்லை, அந்தத் தகுதி வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நீ கருதினால் அதுவரை ஆரிடமாவது என்னை ஒற்றியாக வைத்தாலும் சரி. இம் மூன்றில் எதை வேண்டுமானாலும் செய்துகொள். ஆனால் தயை கூர்ந்து என்னை விட்டுவிடவேண்டாம்' என்றவாறு.

123.

மடங்க என் வல் வினைக் காட்டை
     நின் மன் அருள் தீக் கொளுவும்
விடங்க என்தன்னை விடுதி கண்டாய்
      என் பிறவியைவே
ரொடும் களைந்து ஆண்டுகொள் உத்தரகோச
      மங்கைக்கு அரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய்
      வஞ்சிக் கொம்பினையே 19

மடங்க-எல்லாம். விடங்க-சுயம்புமூர்த்தியே.

‘ஐயனே! வலிவு பொருந்திய என் வினைகள் ஆகிய காட்டை மேலும் வளராதபடி மடக்கி வேரோடும் எரியூட்டும் ஆண்மை பொருந்தியவனே! தயைகூர்ந்து என்னை விட்டுவிடவேண்டா என்றவாறு.

'கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே’ என்ற தொடர் இறைவன் கயாசுரனை அழித்த வரலாற்றை உட்கொண்டதாகும்.

காட்டைப் பல வகையில் அழிக்கலாம். வளரவிடாமல் நுனிப்பகுதியை வெட்டிக்கொண்டே இருக்கலாம். அடி மரத்தோடு வெட்டிச் சாய்க்கலாம். இந்த இரு முறையிலும் காடு அந்நேரத்திற்கு அழிக்கப்படும். ஆனால், வேர் வலுவாக இருக்கின்றவரை மறுபடியும் அம்மரம் துளிர்ப்பதைத் தடுக்கமுடியாது. அதேபோல வினையை அனுபவித்துத் தீர்த்துவிடலாம் என்றால், அது நடவாத காரியம். பிராரத்துவத்தை அனுபவிக்கும்பொழுதே அது ஆகாமியமாக மாறி, இறப்பு வரும்போது அதுவே சஞ்சிதமாக மாறிவிடும். இந்த வினைச் சுழற்சியிலிருந்து விடுபடுதல் இயலாத காரியம். எனவேதான், அடிகளார் வல்வினை ஆகிய காட்டை தீவைத்துக் கொளுத்தி அடியோடு அழிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

பருப்பொருளாக உள்ள காட்டை அழிக்க, பருப்பொருளாகிய தீ தேவைப்படுவதுபோல, நுண்மையான வினைக்காட்டை அழிக்க மிக நுண்மையான இறைவன் அருள் என்ற தீ தேவைப்படுகிறது.

124.
கொம்பர் இல்லாக் கொடிபோல்
அலமந்தனன் கோமளமே
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்
விண்ணர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே

அம்பரமே நிலனே அனல் காலொடு

அப்பு ஆனவனே
20

அலமந்தனன்-கலங்கினேன். கோமளம்-அழகு. உம்பருள்ளாய் மேலான இடத்துள்ளவனே. விண்ணவர்-தேவர்கள்.

இறைவன் ஐம்பெரும்பூதங்களாகவும் உள்ளான் என்பதை 'அம்பரமே (ஆகாயம்) நிலனே அனல் (நெருப்பு) காலொடு (காற்று), அப்பு (நீர்) ஆனவனே’ என்கிறார்.

'கொழுகொம்பு ஒன்றைப் பற்றியே கொடி வளர முடியும். அதுபோல உன் திருவடியாகிய கொழுகொம்பைப் பற்றியே நான் வாழமுடியும். ஆதலால் என்னை விட்டுவிடாதே’ என்கிறார்.

125.

ஆனை வெம் போரில் குறும் தூறு
       எனப் புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய்
       வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும்
       அமுதத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற
        ஒண்மையனே

21

குறுந்துறு-சிறு புதர். கன்னல்-கருப்பஞ்சாறு. ஒண்மையன்-ஒளியையுடையவன்.

ஒவ்வொரு புலனும் மீதூர்ந்து பணிபுரிகையில், ஒரு யானை மற்ற யானைகளொடு போர்புரிவதையே அடிகளார் குறிக்கின்றார் என்று கொள்ளுதல் நலம். போர் புரிகின்ற யானை கீழேயுள்ள சிறு புதர்களை மிதிக்க வேண்டுமென்று விரும்பவோ கருதவோ இல்லை. யானை போர் புரிதலாகியத் தன் பணியைச் செய்ய, ஒரு பாவமும் அறியாத புதர் நசுக்கப்படுகிறது.

அதேபோன்று ஆன்ம முன்னேற்றத்தைத் தடைசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எந்தப் பொறிக்கோ புலனுக்கோ இல்லை. அந்தப் பொறி, உலகியலில் ஈடுபட்டுச் செயற்படும்போது மூலமாகிய மனத்தையும் உடன் இழுத்துச் செல்கிறது. இப்பொறிகளின் சேட்டையால் மனம் மிதிபடுதலின் அதனோடு தொடர்புடைய ஆன்ம முன்னேற்றமும் தடைப்படுகிறது.

126.

ஒண்மையனே திருநீற்றை உத்துளித்து
ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய்
மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு
அறிதற்கு அரிதுஆம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே
அலிப் பெற்றியனே

22

உத்துளித்து-பொடியாகப்பூசி.

இறைவன், அடியவர்கட்கு நெருக்கமானவனாகவும் அல்லாதவர்க்குச் சேயோனாகவும் உள்ளான் என்பதை மீட்டும் கூறுகிறார்.

‘அலிப்பெற்றியன்’ என்றதால் தன்மையைக் கூறுகின்றார் என்பதில் தவறில்லை. அதாவது பெண்தன்மை, ஆண்தன்மை, அலித்தன்மை என்றவாறாம். பெண்தன்மை மிகும்பொழுது உற்பத்தி நடை பெறுகிறது. ஆண்தன்மை மிகும்பொழுது அழிவு நடைபெறுகிறது. அலித்தன்மை மிகும்பொழுது உற்பத்தி, அழிவு என்ற இரண்டிலும் ஈடுபடாது இருத்தல் நடைபெறுகிறது. கூறப்பெற்ற மூன்றும் ஏகமாக இருக்கின்ற பரம்பொருள், சக்தியை வெளப்படுத்திப் பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பதையும், அச்சக்தியையும் உள்ளடக்கி அழித்தல் தொழில் செய்வதையும் குறிப்பதாகும். பெண், ஆண், அலி என்று கூறியவுடன் உலகத்தில் காணப்பெறும் பெண், ஆண், அலி என்று பொருள் செய்து கொள்ளவேண்டாம்.

அலித்தன்மை என்று சொல்லும்போது உலகியலில் காணப்படும் அலிகளை நினைந்து அவதிப்படத் தேவையில்லை. ஒர் உதாரணத்தின் மூலம் இதனைப் புரிந்து கொள்ளலாம். ஸ்ரீமந் நாராயணனின் அவதாரமே கிருஷ்ணன் என்று பாகவதம் பேசுகிறது. அந்தக் கிருஷ்ணன் பாண்டவர்களுக்குத் துணையாக இருந்த போதும் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செய்ய நேரிட்டது ஏன்? இயற்கை, தன் செயலைச் செய்யும்போது கடவுளும் அதில் தலையிடுவதில்லை. ஆனால், தேவை ஏற்பட்டபோது இதே கிருஷ்ணன் அழித்தலையும் படைத்தலையும் செய்துள்ளான். ஆகவே, துவாரகையைப் படைக்கும்போது பெண்தன்மையும், அசுரர்களை வதைக்கும்போது ஆண்தன்மையும், ஒன்றிலும் தலையிடாமல் இருக்கும்போது அலித்தன்மையும் செயல்பட்டன.

பிரபஞ்சத்தைப் படைத்துவிட்ட இறைவன் அதற்குரிய சில சட்டதிட்டங்களை நியமித்தபிறகு, அப்பிரபஞ்சம் அந்தச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தன்போக்கில் தொழிற்படுகையில் அதில் அவன் தலையிடுவதில்லை. இத்தன்மைகளே இங்குப் பேசப்பெற்றவை ஆகும்.

127. பெற்றது கொண்டு பிழையே பெருக்கி
சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய்
விடிலோ கெடுவேன்
மற்று அடியேன்தன்னைத் தாங்குநர் இல்லை
என் வாழ் முதலே
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன்
எனக்கு உள்ளவனே

23
பெற்றது-பிராரப்த கன்மத்தை நுகரும்பொருட்டு அளிக்கப் பெற்ற உடல். பிழை-ஆகாமிய வினைகள். உற்று-திருவடியைப் பொருந்தி. எனக்குள்ளவன்- என்னை உரிமையாகவுடையவன்.

இப்பாடலுக்கு வாலாயமாகப் பொருள் கூறுகின்றவர் கூற்றுச் சரியாகத் தோன்றவில்லை.

'உலகியலில் ஈடுபட்டுப் பிழையே பெருக்கினேன். இது பெருகப் பெருக, உன்மாட்டு உள்ள அன்பு சுருங்கி விட்டது.’

இந்த நிலையில் அடியேன் திருப் பெருந்துறையில் உன்னை அடைந்ததால் (உற்று) மிகுதியும் மனத் திண்மையோடு வீடுபேற்றை நோக்கிச் செல்வதற்குச் சித்தமாக இருந்தேன் (தேறி நின்றேன்).

'இப்பொழுது நீ என்னைவிட்டு நீங்கியமையின் என் மனம், சித்தம் முதலியவை மீட்டும் பிழையே பெருக்கத் தொடங்கியமையின் அன்பு சுருங்கலாயிற்று.'

‘திருப்பெருந்துறையில் முற்றடியானாக இருந்த யான், இப்பொழுது வெற்றடியானாக ஆகிவிட்டேன். எங்குத் தேடினும் என்னைத் தாங்குநர் இல்லை என்பதைக் கண்டுகொண்டேன். எனது வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் மூலதனமாக உள்ளவனே! (வாழ் முதலே!) என்னை விட்டுவிடாதே’ என்க.

128. உள்ளனவே நிற்க இல்லன செய்யும்
மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய்
வியன் மாத் தடக் கைப்
பொள்ளல் நல் வேழத்து உரியாய்
புலன் நின்கண் போதல் ஒட்டா
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடம்
தன்னை எறும்பு எனவே 
24

மையல்-மயக்கம். துழனி வெள்ளன்-ஆரவார வெள்ள முடையவன். வியன்-பெரிய பொள்ளல்-ஒட்டை.

எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்கொரு பயன் இருத்தல் வேண்டும். பயனில்லாத ஒரு சொல்லைக்கூடச் சொல்லாதே என்று அறநூல் (குறள்) சொல்கிறது. எனவே, பயனுள்ளவற்றைச் செய்யாமல் பயனில்லாத செயல்களை மிக்க ஆரவாரத்தோடு செய்யும் உள்ளீடற்றவராகிய தம்மை விட்டுவிடவேண்டா என்று வேண்டுகிறார்.

‘நீ எனக்கு அளித்த ஐந்து பொறிகளும் என் ஆன்மா உன்னை வந்து அடையவொட்டாமல், நெய்க்குடத்தை எறும்புகள் சுற்றி வருவதுபோலச் சுற்றிவந்து அல்லல் விளைக்கின்றன.”

நெய்க் குடம் தன்னை மொய்க்கும் எறும்பு என, என் பொறி புலன்கள் சுற்றிவருகின்றன. என்பதே இந்த உவமையின் விரிவாகும். இதனோடு நிறுத்திவிட்டால் இந்த உவமையின் பயன் நன்கு விளங்குமாறு இல்லை.

எறும்புகள் நெய்க் குடத்திற்கு வெளியே தரையில் சுற்றிவருகின்றன. 'மொய்க்கும்’ என்று கூறினமையின் தரையை அன்றிக் குடத்தின்மேலும் ஏறிப் புறப்பகுதியில் சுற்றுகின்றனவே தவிர அவை நெய்யை உண்ணுமாறில்லை என்பது பெற்றாம். அன்றியும் குடத்தைச் சுற்றியும் குடத்தின் புறத்தேயும் மொய்க்கின்ற எறும்புகள் அக்குடத்தைப் பிறர் எடுக்கவோ, அதிலுள்ள நெய்யை எடுத்துப் பயன்படுத்தவோ முடியாமல் செய்கின்றன. சுற்றிவருகின்ற எறும்புகள் தாமும் நெய்யை உண்ணவில்லை, பிறர் எடுத்து உண்ணவும் இடம் கொடுக்கவில்லை.

‘நெய்க் குடம் தன்னை மொய்க்கும் எறும்பு’ என்று கூறியதன் உட்பொருள் இதுவேயாகும்.

இவ்வாறு கூறியமையின் இந்த உவமையில் கூறப்பட்ட அனைத்தும் உவமேயத்திற்கு ஏற்றப்பட வேண்டும். நெய்க்குடமாக இருப்பது இறை அனுபவம், அதனை எடுத்துப் பயன்படுத்த விரும்பியவர் அடிகளார். அதனை எடுக்கவும் பயன்படத்தவும் முடியாமல் செய்கின்ற எறும்புகளை ஒத்தவை பொறிபுலன்கள்.

குடத்திலுள்ள நெய்யை எறும்புகள் உண்ணப் புகுந்தால் உண்ண முடியாததோடு, தாமும் நெய்யுள் வீழ்ந்து அழிந்துவிடும். அந்த அச்சத்தினாலேயே எறும்புகள் குடத்தைச் சுற்றி மொய்க்கின்றனவே தவிர நெய்யின் அருகே செல்வதில்லை.

அடிகளாரின் ஆன்மா இறையனுபவம் என்ற நெய்க்குடத்தைப் பயன்படுத்தச் சித்தமாக உள்ளது. ஆனால், பொறிபுலன்கள் ஆகிய எறும்புகள் அக்குடத்தை எடுக்கவோ பயன்படுத்தவோ இடங்கொடுக்கவில்லை.

நெய்யை உண்ண விரும்பி, அதனுள் புகுந்த எறும்புகள் அதில் மூழ்கி அழியுமாப்போலே, இப்பொறி புலன்கள் இறையனுபவத்தில் மூழ்கினால் தம்மை முற்றிலுமாக இழக்க நேரிடும். இவை தம்மை இழக்கச் சித்தமாக இல்லை.

தாம் உண்ணாவிடினும் பயன்படுத்துபவர் நெய்க் குடத்தை எடுக்க விரும்பினால் அதற்கும் இடங்கொடாமல் குடத்தைச் சுற்றி மொய்க்கும் எறும்புகளைப்போல இப் பொறிபுலன்களும் செயல் புரிகின்றன.

அடிகளாரின் ஆன்மா, இறையுணர்வு ஆகிய நெய்க் குடத்தை எடுத்துப் பயன்படுத்த விரும்பினாலும், இப்பொறி புலன்கள் ஆன்மாவின் முயற்சிக்கு இடங் கொடாமல் எறும்புகளைப்போல் சுற்றி வந்து மொய்த்து இடர் விளைவிக்கின்றன என்பதாம்.

129. எறும்பிடை நாங்கூழ் எனப் புலனால்
அரிப்புண்டு அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய்
வெய்ய கூற்று ஒடுங்க
உறும் கடிப் போது அவையே உணர்வு
உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே அடியார் பெயரா
பெருமையனே
25


நாங்கூழ்-சிறு பூழு அலந்த-வருந்திய கடிமணம். உம்பர் உம்பர்-தேவலோகத்தின் மேலுள்ள இடம். பெறும்பதமே-வீடுபேறு. அரிப்பு-அரிக்கப்பட்டு.

கிராமங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி பார்க்கின்ற ஒரு காட்சி இங்கே பேசப்பெறுகிறது. நாங்கூழ் என்பது புழுக்களுக்குப் பொதுப்பெயர். மண்புழுவிலிருந்து பச்சை, சிவப்பு நிறங்களோடு, பெருத்த வடிவுடன் காணப்பெறும் புழுக்களுக்கும் இப்பெயர் பொருந்தும். இப்புழுக்கள் தம் வழியே செல்லும்போது எறும்புகள் கூட்டமாக வந்து இப்புழுக்களைச் சுற்றிநின்று தாக்கும். எறும்பின் கடி பொறுக்கமாட்டாமல் புழு எப்படித் துடித்தாலும் புரண்டு வீழ்ந்தாலும் அங்கிருக்கும் எறும்புக் கூட்டத்தை விட்டு வெளியேற வாய்ப்பே இல்லை. அரிப்புண்டு எனக் கூறியதால் எறும்புகள் புழுவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தமக்கு இரையாக்கிக் கொள்கின்றன என்பது பெற்றாம்.

இங்கே ஆன்மா புழுவாகவும், பொறி புலன்கள் எறும்பாகவும் உவமிக்கப்பெற்றன. 'வெறுந்தமியேன்' என்று கூறியதால் ஐவரின் எதிரே வேறு துணையின்றி இருக்கும் தன்மையைக் கூறினாராயிற்று.

இவ்வாறு அரிப்புண்டு அலமருகின்ற தம்மை விட்டுவிடாதே என்கிறார்.

கூற்றை உதைத்ததாகிய மணம் நிறைந்த மலர்போன்ற அத்திருவடிப் பதம், இறையுணர்வுடையோர், தேவதேவர் ஆகியோர், சென்று அடையத்தக்க வீடு பேறாகும் என்க.

130. பெரு நீர் அற சிறு மீன் துவண்டாங்கு
நினைப் பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய்
வியன் கங்கை பொங்கி -
வரும் நீர் மடுவுள் மலைச் சிறு தோணி
வடிவின் வெள்ளைக்
குரு நீர் மதி பொதியும் சடை வானக்
கொழு மணியே
26


வெள்ளைக் குருநீர்-வெள்ளைநிறத் தன்மையுடைய சிறிதளவு நீர். துவண்டாங்கு-வாடினாற் போல.

'குளத்தில் நிறைந்திருந்த நீர் வற்றியபோது அதிலுள்ள மீன்கள் நீரின்மையால் துடிப்பதைக் கண்டுள்ளோம். அதேபோல் திருப்பெருந்துறையில் நிறைகுளத்து நீர் போன்று உன் அருள் நிறைந்திருந்தபொழுது என்னை மறந்து துளையமாடினேன். இப்பொழுது அந்த அருளாகிய நீர்ப்பெருக்கு இங்கு இல்லை. எனவே, மீன் துடிப்பதுபோல் உள்ளிடு அற்றவனாகிய நான் துடிக்கின்றேன். என்னை விட்டுவிடாதே’ என்கிறார்.

131. கொழு மணி ஏர் நகையார் கொங்கைக்
குன்றிடைச் சென்று குன்றி

விழும் அடியேனை விடுதி கண்டாய்
மெய்ம் முழுதும் கம்பித்து
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து
ஆட்கொண்டருளி என்னைக்
கழுமணியே இன்னும் காட்டு கண்டாய்
நின் புலன் கழலே
27


கொழுமணி-முத்து.. குன்றி-குறைந்து.. கம்பித்து-நடுங்கி. ஆர்த்து வைத்து-கட்டி வைத்து.. புலன் கழல்-ஞானமாகிய திருவடி. கழுமணி-கழுவப் பெற்ற மணி.

‘மகளிர் மோகத்தில் சிக்குண்டு மீள வழி தெரியாது இருக்கின்ற என்னை விட்டுவிடாதே'.

'பேரன்பு காரணமாக உடல் முழுவதும் நடுங்குகின்ற அடியார் கூட்டத்திடையே திருப்பெருந்துறையில் என்னை இருத்தித் திருவடி தரிசனம் தந்தாய். அத்தரிசனத்தை மீண்டும் பெற விழைகின்றேன்’ என்றவாறு.


132. புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து
இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய்
விண்ணும் மண்ணும் எல்லாம்
கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்
கருணாகரனே
துலங்குகின்றேன் அடியேன் உடையாய்
என் தொழுகுலமே 28

திகைப்பிக்க-மயக்க. தொழுகுலம்-தொழத்தக்க இனம். முந்நீர்-கடல். துலங்குகின்றேன்-நடுங்குகின்றேன்.

‘திருப்பெருந்துறை அனுபவத்தில் இப்புலன்கள் அடங்கி ஒடுங்கிச் செயலிழந்து நின்றமையின் யான் அப்பொழுது உன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்கினேன்'. ‘என் வினை காரணமாக அது நீடிக்கவில்லை. அந்த நிலை மாறியவுடன் புலன்கள் பொங்கி எழுந்து என்னைக் கெளவிக்கொண்டமையின் போகும் வழியறியாமல் செந்நெறியிலிருந்து விலகிவிட்டேன். ஐயனே! என்னைக் கைவிட்டு விடாதே. -

‘விண்ணும் மண்ணும் அஞ்சிய ஆலகாலத்தை ஏற்றுக்கொண்டவனே! பொறி புலன்கள் இவ்வளவு துன்பத்தைச் செய்தும், செந்நெறியிலிருந்து என்னை விலகுமாறு செய்தும்கூட, அன்று திருப்பெருந்துறையில் நீ வழங்கிய அருளார் அமுதம் என் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் மறைந்து நிற்பதால், இப்பொழுதும் நடுங்குகின்றேன்’ என்றவாறு,

133.

குலம் களைந்தாய் களைந்தாய் என்னைக்
குற்றம் கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய்
பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம்தாமரை மேனி அப்பா
ஒப்பு இலாதவனே
மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில்
பொரு மத்து உறவே 29


குலம்-குடிப்பிறப்பு கூட்டம் என்பாரும் உளர். குற்றம்-அறியாமையால் யான் இயற்றும் குற்றங்கள். சிலை-வில். விலங்கல்-மலை. அலங்கள்-மாலை.

‘மானிடக் குலத்திற்கு இயல்பாக உள்ள குற்றங்கள் என்பாலும் இருந்துவந்தன. இக்குற்றங்கள் தோன்றுவதற்குரிய என் தலைமீது உன் திருவடி பட்டமையின், என் பிறப்பால் வரும் குற்றங்கள் அனைத்தையும் போக்கினாய். என்னை விட்டுவிடாதே’ என்கிறார்.

'ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்(வைந்தவம்), திரோதாயி என்ற ஐந்து குற்றங்களாலும் சூழப்பெற்று, தயிரின் இடைப்பட்ட மத்துப்போல் இங்கும் அங்குமாய்ச் சுழல்கின்றேன்’ என்கிறார்.

மத்துறு தயிர் என்று கூறாமல் 'தயிரிற் பொரு மத்து’ என்று அடிகளார் கூறியமையின் மத்தையே உவமையாக்குகின்றார். அதாவது, தூய்மையான மத்து தயிரைக் கடைய முற்பட்டதால் அத்தயிர் மத்து முழுவதிலும் ஒட்டிக்கொள்கிறது. அன்றியும் ஒரு முறை இடமிருந்து வலமும், மறுமுறை வலமிருந்து இடமும் சுழலும் இயல்புடையது தயிரிற் பொரு மத்து. இந்த உவமையின் மூலம் மற்றொன்றையும் பெறவைக்கின்றார். மத்தில் தயிர் ஒட்டிக்கொள்வதுபோலத் துரய்மையான ஆன்மாவில், மேலே கூறிய ஐந்து குற்றங்களும் (மலங்களும்) ஒட்டிக்கொள்கின்றன. அன்றியும் இடம், வலம் என்று மாறிமாறி மத்துச் சுற்றுவதுபோல் உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு முன்னேற முயலும் ஆன்மா ஒரளவு சென்றுவிட்டு மறுபடியும் இந்த ஐந்து குற்றங்களுக்கே திரும்பிவிடுகிறது.

முன்னேறுதல், தளர்ந்து வீழ்தல் என்ற இரண்டையும் நினைவூட்டவே தயிரில் பொரு மத்து என்றார்.

134.

மத்து உறு தண் தயிரின் புலன் தீக்
கதுவக் கலங்கி
வித்து உறுவேனை விடுதி கண்டாய்
வெண்தலை மிலைச்சிக்
கொத்துஉறு போது மிலைந்து
குடர் நெடு மாலை சுற்றித்
தத்துஉறு நீறுடன் ஆரச் செம் சாந்து
அணி சச்சையனே 30

வித்துறுதல் - ஒளியடைதல்; அதாவது தீப்பற்றுதல். மிலைச்சி-சூடி. தத்துறு-தவழுகின்ற. ஆரம்-சந்தனக்கட்டை, சச்சையன்-நுட்பமானவன்.

‘மத்து உறு தண்தயிர்' என்றதனால், கலக்கமில்லாமல் அமைதியாக இருந்த தயிர் மத்தின் தொடர்பு ஏற்பட்டவுடன் தானும் கலங்கி அம்மத்திலும் ஒட்டிக்கொண்டது போல், 'ஐம்புலன்கள் நான் கிடைத்தவுடன் தீப்போல் என்னைப் பற்றிக்கொண்டன. என்னைக் கைவிட்டு விடாதே’ என்கிறார்.

135.

சச்சையனே மிக்க தண் புனல் விண்
     கால் நிலம் நெருப்பு ஆம்
விச்சையனே விட்டிடுதி கண்டாய்
      வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனே
     ஒண் பட அரவக்
கச்சையனே கடந்தாய் தடம் தாள
     அடல் கரியே 31

மிக்க-வெளிப்பட்ட விச்சை-வித்தை தடந்தாள் அடல் கரி. பருத்தகாலினையுடைய வலிய யானை.

‘வெட்சிப்பூப் போன்ற நிறத்தை உடையவனும், வெண்மை, கருமை, பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களைப் பெற்றுள்ளவனும், ஐம்பெரும் பூதங்களைத் தோற்றுவிக்கும் வித்தையை அறிந்தவனும் ஆகிய பெருமானே என்னைக் கைவிட்டுவிடாதே’ என்கிறார்.

136.

அடல் கரிபோல் ஐம் புலன்களுக்கு
     அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய் விட்டிடுதி கண்டாய்
    விழுத் தொண்டர்க்கு அல்லால்

தொடற்கு அரியாய் சுடர் மா மணியே
     சுடு தீச் சுழலக்
கடல் கரிதுஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும்
     கறைக்கண்டனே 32

அடல்-வலிமை கொல்லுந்தன்மையுமாம். கறை-விடம்.

'போரிடுகின்ற யானைகளைப் போன்று பேராற்றல் படைத்த ஐம்புலன்களும், என்பால் போரிடுதலின், அவற்றுக்கு அஞ்சுகிறேன். ஐயா, விழுப்பம் பொருந்திய தொண்டர்களை அல்லால் பிறரால் தொடரப்பட முடியாதவனே! என்பால் இரங்கி, விட்டுவிடாமல் ஏற்றுக்கொள்’ என்கிறார்.

137.

கண்டது செய்து கருணை மட்டுப்
    பருகிக் களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்
     நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால்போல் பணித்துப்
      பணி செயக் கூவித்து என்னைக்
கொண்டு என் எந்தாய் களையாய்
    களை ஆய குதுகுதுப்பே 33

மட்டு-தேன். மிண்டுகின்றேனை-செருக்கால் துடிக்கின்ற என்னை. குதுகுதுப்பு-பரபரப்பு.

திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த அனுபவம் தம்மை விட்டுநீங்கியமைக்குக் காரணம் தம் நல் ஊழ் இன்மையே என்றும், தம் நெஞ்சமே இது நடைபெறக் காரணமாயிருந்தது என்றும் இதுவரை பேசிக்கொண்டிருந்த அடிகளார் இப்பொழுது ஒரு புதிய திசையில் செல்கிறார்.

பாடலின் முதலடி நன்கு சிந்தித்துப் பொருள்கொள்ள வேண்டியதாகும். 'கண்டது செய்து' என்று வரும் இரண்டு சொற்களுக்கும் மனம்போன போக்கில் விருப்பமானவற்றைச் செய்து என்று பொருள் கூறினால், அது பொருந்தாது. அடுத்து வருகின்ற 'கருணை மட்டுப் பருகிக் களித்து' என்ற தொடரின் பின்னர், 'கண்டது செய்து' என்ற சொற்களைச் சேர்த்துப்பார்த்தால் உண்மைப் பொருள் விளங்கும்.

கருணை மட்டுப் (தேன்) பருகியது எங்கே? பருகியதால் நெஞ்சம் களித்தது எங்கே மிண்டுகின்ற நிலை வந்தது எங்கே? இவையெல்லாம் ஒரே நேரத்தில் திருப்பெருந்துறையில் குருவின் திருவடி தீட்சை பெற்றபிறகு கிடைத்த அனுபவங்கள் அல்லவா? எனவே, பாடலைப் பின்வருமாறு கொண்டுகூட்டுச் செய்து பொருள் காண்பது நலம.

‘கருணை மட்டுப் பருகிக் களித்து, கண்டது செய்து மிண்டுகின்றேனை' என்று இயைத்துக் கொள்க. இங்கே வரும் கண்டது செய்து என்ற தொடருக்கு, ‘என்னுடைய எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் அப்பாற்பட்டவற்றை, ஏன் செய்கிறோம் என்று தெரியாதவற்றைச் செய்து' என்று பொருள்கொள்ள வேண்டும். அதாவது தேகப்பிரக்ஞை அற்று, தற்போதம் இழந்த நிலையில் செய்த செயல்களையே இங்கே குறிப்பிடுகின்றார். கண்டது என்ற சொல்லின் முன்னர் இறையனுபவத்தில் என்றதைச் சேர்த்துக்கொண்டால் பொருள் எளிதாக விளங்கும்.

இந்தக் கருத்துப் பின்னரும்,

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ

(திருவாச. 502)

என்று பாடுவதால் வலிமை பெறுதலைக் காணலாம். கண்டது செய்த பின்னரும் மிண்டுகின்ற நிலை ஏற்பட்டது என்றால், கண்டது செய்தலுக்குக் காரணம் அவன் திருவருளே என்பது பெறப்பட்டது.

தேகப் பிரக்ஞை இல்லாமல் பணிகளைச் செய்து வந்தாலும் ஒரோவழிச் சுயநினைவும், பொறிகளின் வெறியாட்டமும் வந்து தொல்லை தருதலை நினைந்து வருந்திய அடிகளார், பழைய திருப்பெருந்துறை அனுபவத்தை மீட்டும் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் முறையில் 'பண்டு தந்தாற்போல் பணிசெய்யப் பணித்து என்னை ஆட்கொள்வாய்’ என்று வேண்டுகிறார்.

திருப்பெருந்துறையில் குருநாதர் நேரே எழுந்தருளி இவற்றைச் செய்தார். அதனையே மறுபடியும் வேண்டுகின்ற அடிகளார், ‘ஐயனே! நேரே வந்து அருள்செய்ய வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. அதற்குப் பதிலாக நின் தொண்டர்கள் யாரேனும் ஒருவர் மூலம் என்னை அழைத்தாலும் போதுமானது’ என்பார்போலக் ‘கூவித்து’ என்றார்.

‘ஐயனே! என் மனத்தில் தோன்றியுள்ள குதுகுதுப்பு (குறுகுறுப்பு), அம்மனம் ஒருநிலைப்படாத காரணத்தால் என் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது. அதனைக் களைந்தருள்க’ என்கிறார்.


138.

 
குதுகுதுப்பு இன்றி நின்று என் குறிப்பே
      செய்து நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய்
      விரை ஆர்ந்து இனிய
மது மதுப் போன்று என்னை வாழைப்
      பழத்தின் மனம் கனிவித்து
எதிர்வது எப்போது பயில்விக்
     கயிலைப் பரம்பரனே 34

விதுவிதுத்தல்-விரைந்து ஆசைப்படுதல்.

‘கயிலையில் உள்ள பரம்பரனே! தவறு செய்கிறோம், நின் குறிப்பின்வழி வாழவில்லை என்ற குறுகுறுப்பு நெஞ்சில் இல்லாமல், என் விருப்பம்போல் செயல்களைச் செய்துவிட்டு, உன் ஆணையின்படியே வாழ்கின்றேன் என்று நெஞ்சைச் சமாதானம் செய்துகொண்டு உன்னை அடைவதற்கு விழைகின்றேன்! இத்தகைய போலியான என்னை விட்டுவிடாதே".

‘அன்று திருப்பெருந்துறையில் மிக எளிமையாக வந்து காட்சியளித்து, தேன்போன்ற இனிமையைப் புகட்டினாய். அதன் பயனாகக் கல்லாய் இருந்த என் மனம் கனியாய்க் கனிந்தது'.

'இன்றோ நீ வரவுமில்லை; அனுபவமாகிய தேனைத் தரவும் இல்லை. அதனால் என் மனம் மறுபடியும் கல்லாயிற்று. இதனைப் போக்க ஒரே வழிதான் உண்டு. நீ மதுமதுப்போன்று அதாவது நீரில் இனிய சுவையுடைய தேள் கலந்தது போன்று. என் எதிரே வந்து, என் மனத்தை வாழைப்பழம் போலக் கணிவித்தல் வேண்டும்’ என்கிறார்.

‘நீரும் தேனும்போல வரவேண்டும் என்பது நுண்மையான கருத்தை உட்கொண்டதாகும். நீர் எங்கும் எப்பொழுதும் முயற்சியின்றிக் கிடைப்பதாகலின் நீர்போன்று என்றார். அதாவது நான் எங்கு, எப்பொழுது, எந்நிலையில் உன் அருளை வேண்டினாலும் அங்கு, அப்பொழுது, அந்நிலையில் நின் அருள் நீர்போன்று கிடைக்கவேண்டும். இதன் மறுதலையாகத் தேன் குறிப்பிட்ட இடத்தில்தான் கிடைக்கும். அது எங்கோ மரத்தின்மேல் ஒரு கிளையில் இருக்கும். யாரோ ஒருவர் பெரு முயற்சியை மேற்கொண்டு இத்தேனை எடுத்து உண்பவருக்கு வழங்கவேண்டும். அதேபோன்று கயிலைப் பரம்பரனாக உள்ள நீ, ஒருவர் முயற்சியால் எட்ட அரிதானவன். ஆதலால், நீயே அருள்கூர்ந்து என் எதிரே வரவேண்டும்.

நீருக்கு ஒரே ஒரு சுவைதான் உண்டு. அன்றியும் குடிக்கின்ற நேரத்தில் தாகத்தைத் தணிப்பது தவிர அருமருந்து ஆவது இல்லை. ஆனால், உண்ணும்போதும் பெருஞ்சுவை தந்து பின்னர் அதுவே மருந்தாகி உடலுக்கு நலன் பயப்பது தேன். நீ எதிரே வந்தால் அந்த நேரத்தில் உண்டான ஆனந்தம் தவிரப் பிறவிப் பிணியைப் போக்கும் மருந்தாகவும் உள்ளாய் என்ற கருத்தில் தேன் என்றார்.

வாழைப் பழம்போன்று கனிவித்து என்று சொல்வதிலும் ஓர் அருமைப்பாடு உண்டு. வாழைப் பழங்கள் பலவகைப்படுமேனும், பொதுவாகப் பச்சை, மஞ்சள் என்ற இரண்டு நிறங்களை உடையன. நன்கு பழுத்த நிலையிலும் பழுக்காத நிலையிலும் தோல்பகுதி பச்சையாகவோ மஞ்சளாகவோ இருக்கும். நன்கு கனிந்த நிலையிலும் உள்ளே உள்ள சதைப்பகுதி மென்மைத் தன்மை பெற்றுச் சுவை கூடிவிடுமே தவிர, புறப்பகுதியின் நிறத்தில் மாறுபாடு தோன்றுவதில்லை.

இந்த உவமையைக் கூறியதால் திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு முன்னும், திருப்பெருந்துறை நிகழ்ச்சியின் போதும், அது நிகழ்ந்து சிலகாலம் கழிந்த இப்பொழுதும் திருவாதவூரர் என்ற மனிதரின் உடலமைப்பில் எவ்வித மாறுபாடும் தோன்றவில்லை. ஆனால், பழம் கனிந்தது போலத் திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் அவர் மனம் கனிந்து விட்டது. பின்னர் அந்நிலைமை மாறியதால் இப்பொழுது அந்நிலை மீட்டும் வேண்டும் என்ற கருத்தை ‘வாழைப் பழத்தின் மனங்கனிவித்து’ என்று பாடுகிறார்.

139.

பரம்பரனே நின் பழ அடியாரொடும்
         என படிறு
விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய்
        மென் முயல் கறையின்
அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய்
        பிறவி ஜவாய் அரவம்
பொரும் பெருமான் வினையேன் மனம்
        அஞ்சிப் பொதும்பு உறவே 35

பரம்பரன்-மேலானவற்றிற்கெல்லாம் மேலானவன் முயற்கறையின் அரும்பு-முயலாகிய களங்கத்தினையுடைய பிறைமதி. அர-பாம்பு. நேர் வைத்து அணிந்தாய் என்றது பகை நீங்கத் தரித்தாய் என்பது குறித்து. ஐவாயரவம்- ஐந்தலைப்பாம்பு. பொதும்பு-மரச்செறிபு.

திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் மீட்டும் அடிகளாரின் மனம் தோய்கின்றது. தில்லைக் கூத்தனே குருவடிவுடன் அமர்ந்திருக்கும் அந்தச் சூழலில், எதிரே இருந்தவர்கள் அக்கூத்தனின் பழைய அடியார்கள் அல்லரோ அக்கூத்தன் மானுட வடிவுடன் வந்ததுபோல இந்தப் பழைய அடியார்களும் அந்த நாடகத்திற்கு ஏற்ப மானுட வடிவுதாங்கி அடியார்களாக வந்திருந்தார்கள்.

தம்மை வந்து வணங்கிய அடிகளாரைக் குருவானவர் அந்த அடியார்களிடையே அமர்வித்தார் அல்லவா? அதை நினைந்து இங்கே பேசுகிறார் அடிகளார்.

எதிரே இருந்த அடியார்கள் தூய்மையே வடிவானவர்கள்; இறைவன் திருவடியை விட்டு நீங்காதவர்கள். அவர்களிடையே, பூத உடலுடன் அமைச்சராக இருந்து எத்தனையோ காரியங்களைச் செய்த ஒருவர் அமர்த்தப்படுகிறார். அந்த விநாடியில் இவர் அமைச்சர் வேடத்தில் இருந்தாரே தவிர அடியார் வேடம் கூட இல்லையே! அவற்றையெல்லாம் நினைந்து 'பழ அடியாரொடும் என் படிறு விரும்பு அரனே’ என்றார். படிறு என்பது வஞ்சகம் பொய் முதலியவற்றைக் குறிப்பதாகும். இவற்றை உடைய தம்மையும், தம்மோடு இவற்றையும் சேர்த்து ஏற்றுக்கொண்டதால் என் படிறு விரும்பு அரனே’ என்றார். விரும்பு என்ற சொல் ஏற்றுக்கொள்ளல் என்ற பொருளைமட்டும் இங்கே தந்து நிற்கிறது.

ஐந்து பொறிகளும் ஒரே மனத்தின் உதவி கொண்டு செயற்படுதலின் 'ஐவாய் அரவம்’ என்றார்.

140.

பொதும்பு உறு தீப்போல் புகைந்து எளிய
       புலன் தீக் கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய்
       விரைஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று
       மந்தம் முரல் வண்டு
அதும்பும் கொழும்தேன் அவிர் சடை
      வானத்து அடல் அரைசே 36


நறவம்-தேன். தாரம்-ஓர்வகைப் பண். மந்தம்- தாழ்த்திப் பாடும் ஓசை. அதும்பும்-அழுந்தும்.

‘பொதும்புறு தீ' என்பது காட்டுத்தீயைக் குறிப்பதாகும். 'உள்ளத்தை ஐம்புலன்களும் காட்டுத்தீப் போல் பற்றிக் கொள்ள, அத்திக் கொடுமை தாளாமல் யானும் என்னுள்ளமும் வெதும்புகின்றோம். என்னை விட்டு விடாதே’ என்கிறார்.

வெறும் தீ என்று கூறாமல் பொதும்புறு தீ என்று கூறியதில் நுணுக்கம் ஒன்றுண்டு, காட்டுத் தீயைப்பற்றி அறிந்தவர்களே அடிகளாரின் இந்த உவமையை நன்கு அனுபவிக்க முடியும். காட்டுத் தீக்கு ஒரு தனி இயல்பு உண்டு. ஓர் இடத்தில் பற்றி எரிகின்ற தீ, திடீரென்று அணைந்துவிடும். அணைந்துவிட்டதாகவும், இனி அதனால் தீங்கொன்றும் இல்லை என்பதாகவும் நாம் அமைதி அடைந்துள்ள நிலையில், திடீரென்று அதே இடத்தில் மறுபடியும் பற்றிக்கொண்டு எரியும். ஓரிடத்தில் பற்றி அது பரவாமல் இருக்க, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்து இடைவெளியை உண்டாக்குவார்கள். அகன்ற இடைவெளி இருத்தலின் தீ தொடர்ந்து எரிந்து அப்பகுதி வந்தவுடன் பற்றுவதற்கு வேறு மரமின்மையின் அணைந்துவிடும் என்று நினைப்பர். ஆனால், இங்கிருந்த ஒரு தீப்பொறி யார் கண்ணுக்கும் படாமல் காற்றின் உதவி கொண்டு, நெடுந்துரத்தில் சென்று வீழ்ந்து அந்தப் பகுதியும் பற்றி எரியுமாறு செய்யும்.

இந்த இயல்புகளையெல்லாம், சேட்டை செய்யும் பொறி புலன்களுக்கும் ஏற்றிக் காண முடியும். துன்பம் செய்யும் ஒரு பொறி அல்லது புலன் திடீரென்று செயலிழந்து நிற்கும். அது அடங்கிவிட்டது என்றும் அதனால் நமக்கினித் தொல்லையில்லை என்றும் நினைத்து அமைதி அடைகின்ற நேரத்தில், திடீரென்று மிக்க உக்கிரத்தோடு அப்பொறியோ, புலனோ பெரும் துன்பத்தை விளைக்கும்.

தொடர்புடைய பொருளைக் கண்டோ, கேட்டோ, தொட்டோ, முகர்ந்தோ, சுவைத்தோ அனுப்விக்கின்ற வேளையில்தான் இத்துன்பம் விளைகின்றது என்று நினைத்தால், அது தவறு. மிக நீண்ட தூரத்தில், அடைய முடியாத இடத்திலுள்ள ஒரு பொருளைப் பற்றிக்கொண்டு இப் பொறி, புலன்கள் துன்பம் தருவதும் உண்டு. இவற்றை எல்லாம் மனத்திற் கொண்டே அடிகளார் இந்த உவமையைப் பயன்படுத்தினார்.

வண்டு பாடும்பொழுது தார ஸ்தாயையிலும் மந்தர ஸ்தாயையிலும் பாடும் இயல்புடையது. எனவே, 'தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு’ என்றார்.

141.

அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கு
      அஞ்சல் என்னின் அல்லால்
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய்
      வெள் நகைக் கரும் கண்
திரை சேர் மடந்தை மணந்த
      திருப் பொன் பதப் புயங்கா
வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல் வினை
      தான் வந்து அடர்வனவே 37


திரைசேர்மடந்தை-அலையோடு கூடிய கங்கை, புயங்கம்-பாம்பு. மணந்த-வணங்கிப்பொருந்திய. அடர்ந்து-நெருக்கி.

‘அரைசே! அறியாச் சிறியேனாகிய என் பிழையை மன்னித்து நீயே அஞ்சேல் என்று சொல்லாவிட்டால் என்னைச் சுற்றியுள்ள அவ்வினைகள் தாமே என்னை வந்து அடர்ந்துவிடும். ஆதலால், என்னை விட்டுவிடாதே’ என்றார்.

142.

அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி
       அம் சொல் நல்லார் அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய்
       விரிந்தே எரியும்
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே
       தொழும்பர்க்கு அமுதே
தொடர்வு அரியாய் தமியேன் தனி நீக்கும்
       தனித் துணையே 38

நல்லார்-மகளிர். விடர்-பிளவு.

‘அடர்புலன்’ என்பது வினைத்தொகை. இவ்வாறு கூறுவதன் நோக்கம் பிறவிகள்தோறும் அடர்த்த (நெருக்கிய) இப்புலன்கள், இப்பிறவியிலும் அடர்கின்றன என்பதைக் குறிப்பதற்கே ஆகும். இதே நிலையில் மறுபிறவி எடுத்தாலும் அப்பொழுதும் என்னை அடர்க்கும் என்ற கருத்தில் அடர்புலன் என்று வினைத்தொகையாகக் கூறினார்.

இனி 'நிற்பிரிந்து' என்பது அடர் புலனுக்கும் அச்சத்திற்கும் இடையே நிற்கின்றது. குருநாதரைப் பிரியாது இருக்கும்போது அடர்புலன்கள் செயலிழந்தன. எனவே, உயிரோடு கூடிய அச்சம் என்பதும் அங்கு இல்லை. இனி இவை இரண்டும் அற்றம் பார்த்திருக்கும் கள்வர்போல் குருநாதர் திருவடியை விட்டு இவர் எப்பொழுது வரப்போகிறார் என்று புறத்தே காத்து நின்றன.

திருவடி சம்பந்தம் நீங்கியவுடன் இவை இரண்டும் தம்மைப் பற்றிக்கொண்டன என்று அழகாக எடுத்துக் கூறுகிறார் அடிகளார்.

புலன்கள் ஐந்தாயினும் அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து பணிபுரிகின்ற இடம் காமத்திலேயே ஆகும். எனவே, திருவடி சம்பந்தம் நீங்கியவுடன் இதுவரை காத்துநின்ற ஐம்புலன்களும் ஒன்றுகட்டி அடிகளார் உள்ளத்தில் பெண்ணிச்சையைத் தோற்றுவித்தன. ஏனைய உணர்ச்சிகளைக் காட்டிலும் பாலுணர்ச்சி வலிமையானதும், தவிர்க்க முடியாததும் ஆகும். ஆதலால், அதனை விளக்கமாகவே அடிகளார் கூறுகிறார்.

‘சார்ந்ததன் வண்ணம் உயிர்' என்பது இந்நாட்டுச் சமயவாதிகள் கொள்கையாகும். இதனால் உயிர் என்பது ஏதாவது ஒரு பொருளைச் சார்ந்து நிற்குமே தவிரத் தனித்து நிற்கும் இயல்புடைத்தன்று என்பது அருத்தாபத்தியால் பெற்றாம். தனு, கரண, புவன, போகங்களை உண்டாக்கிய இறைவன், இவற்றைப் பயன்படுத்திகொண்டு ஆன்மா முன்னேற்றம் அடையவேண்டும் என்ற கருத்தில் மனம், பொறி, புலன்களோடு கூடிய உடம்பை அதற்குத் தந்தான். மனம், பொறி, புலன்கள் என்பவற்றை அடக்கித் தன் வசப்படுத்தித் தன்னுடைய முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய உயிர், பெரும்பாலும் அவ்வாறு செய்வதில்லை. இது நடைபெற வேண்டுமானால் இறையருளின் துணை இருந்தாலொழிய இதனைச் செய்யமுடியாது. ஆதலின், தனித்து நிற்கும் தம்மைத் 'தமியேன்' என்றார்.

மனம், பொறி, புலன்கள் ஆகிய இத்தனையும் அந்த உயிரைச் சுற்றியிருப்பினும் உயிரின் முன்னேற்றத்திற்கு இவை உதவவில்லை; ஆதலால், இவை உடனிருந்தும் பயனில்லை என்ற கருத்தில் 'தமியேன்' என்றார்.

இறைவனைத் தனித்துணை என்று கூறியுள்ளது ஆழ்ந்த பொருளை உடையது. ‘தனி’ என்ற சொல்லுக்கு ஒப்பற்ற என்ற ஒரு பொருளும், வேறொரு துணையில்லாமல் ஒற்றையாக நிற்கும் என்ற ஒரு பொருளும் உண்டு. பொறி, புலன்களின் அலைப்புத் தாங்காமல் நிற்கும் ஒருவருக்குத் துணையாக வரும் ஒருவர், எவ்வித அலைப்புக்கும் உட்படாமல் தனியராக இருப்பது சாலச் சிறந்ததாகும். எனவேதான், 'தமியேன் தனித் துணையே’ என்றார்.

பொறி, புலன்கள் என்ற பெரும் பகைகளுக்கு அஞ்சி, தமியராக நிற்கும் ஒருவர் இரண்டை வேண்டி நிற்பர். முதலாவது தம் தனிமையைப் போக்கிக்கொள்ள ஒரு துணைவேண்டும் என்பதாகும். இரண்டாவது அத் துணையின் உதவி கொண்டு தம் பகையை வெல்ல விரும்புவதாகும்.

அடிகளாரைப் பொறுத்தமட்டில் இறைவனின் திருவடி, தனிமையைப் போக்கும் துணையாகவும், அவரது பகைகளை வெல்ல உதவும் உறுதுணையாகவும் இருந்தமையின் தனி நீக்கும் தனித் துணையே என்றார்.

143.

தனித் துணை நீ நிற்க யான் தருக்கித்
      தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய்
      வினையேனுடைய
மனத் துணையே என்தன் வாழ்முதலே
      எனக்கு எய்ப்பில் வைப்பே
தினைத்துணையேனும் பொறேன்
      துயர் ஆக்கையின் திண் வலையே 39


தருக்கிசெருக்குற்று. வினைத்துணையேன்-வினையைத் துணையாகக்கொண்ட யான்.

இப்பாடலின் முதலடிக்கு வாலாயமாகக் கூறும் பொருளை விட்டுவிட்டு வேறுவகையில் சிந்திக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆன்மாக்களுக்கு என்றுமே இறைவன் துணையாக உள்ளான் என்பது பொதுவாகப் பலரும் அறிந்த ஒன்றாகும். தோன்றாத் துணையாக உள்ள அந்த இறைவன் திருப்பெருந்துறையில் தோன்றும் துணையாக வந்து தோன்றினான்.

குருவாக நின்றவர் 'கோலம் ஆர்தரு பொதுவினில் வருக' என்று ஆணையிட்டு மறைந்தார். மறைந்தவர் எங்கே சென்றார்? புறத்தே காட்சி தந்த குரு மறைந்து, அடிகளாரின் அகத்தே தோன்றினார். தோன்றியவர், அடிகளாரின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தம் ஆணையின்படி நடக்குமாறு செய்தார்.

இப்படி இருந்துங்கூட, இதனை அடிகளார் அறிந்திருந்துங்கூட, சில நேரங்களில், சில விநாடிகள் இவை அனைத்தும் மறக்கப்பட்டுவிட்டன. உள்ளத்தில் ஏற்பட்ட நிறைவுகூடத் தம் கல்வியாலும் முயற்சியாலும் வந்தது என்ற நினைவு அடிகளார் உள்ளத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

இத்தனை விபரங்களையும் குறிக்கவே 'தனித்துணை நீ நிற்க (என்னுள் நிலையாக நீ நிற்கவும், அதனை மறந்து) யான் தருக்கித் தலையால் நடந்தேன்’ என்று பேசுகிறார்.

'துணையாக நீ நிற்கின்றவரையில் வினைகள் என்னை நெருங்க அஞ்சி ஒளிந்துகொண்டன. இப்பொழுது உன் துணையை மறந்தவுடன் ஒளிந்துகொண்டிருந்த வினைகள் என்னை நெருங்கி எனக்குத் துணையாக அமைந்த விட்டன என்பதை அறிவிக்கவே வினைத்துணையேன்' என்றார்.

வினைகளால் சூழப்பெற்று, இனி என்னே உய்யுமாறு என்று எண்ணி நொந்த நிலையில், தாம் தனியன் என்பதை உணர்ந்த அடிகளார். இந்த இக்கட்டிலிருந்து விடுபடக் குருவின் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டார். அத்திருவடிகள் இவர் தனிமையைப் போக்கும் துணையாகவும், வினைகளை வெல்ல உதவும் தனித் துணையாகவும் நின்றன.

ஆனாலும் என்ன கொடுமை! மனித மனத்தின் அடித்தளத்தில் நிற்கும் ஆணவம், தமியன் என்று நினைத்து அஞ்சியபொழுது செயலிழந்து அடங்கிக் கிடந்தது. தனிமை போக்கத் துணை வந்தவுடன் தனிமை என்ற அச்சம் போய்விட்டது. அச்சம் போனபின் அந்த ஆணவம் லேசாகத் தலைதூக்கிற்று. அச்சம் போனதால், தான் மெள்ளத் தலைதூக்க முடிந்தது என்பதை இந்த ஆணவம் மறக்கலாயிற்று. அம்மட்டோடு இல்லை. அச்சம் போகத் தனித்துணை செய்த உதவியையும் மறக்கலாயிற்று. எல்லாவற்றையும் மறந்து, தானே தலைவன் என்ற எண்ணம் ஆணவத்திற்கு வளர்ந்தது. அனைத்தையும் செய்யவல்லவன் தான் என்ற நினைவு வளர்ந்து உறுதிப்படலாயிற்று. ஆணவத்தின் இந்த வெளிப்பாட்டைத் ‘தலையால் நடத்தல்’ என்று இன்றும் உலக வழக்கில் கூறுவதுண்டு.

திருவாதவூரர் மணிவாசகராக மாறி இறைப் பிரேமையில் தம்மை மறந்து நிற்கும்பொழுதே இதற்குரிய காரணத்தை எளிதில் புரிந்துகொண்டார். குதிரை வாங்கச் சென்ற அமைச்சர், அதிகாரத்தின் உச்சிக் கொம்பிலிருந்த அமைச்சர், எல்லாவற்றையும் மறந்து திருவருள் பெற்றவுடன் தாம் தமியர் என்பதை உணர்ந்தார். இதுவரை அவருடன் இருந்த கல்வி, செல்வம், அதிகாரம், இவற்றால் ஏற்படும் ஆணவம் முதலியவை கரைந்து ஒழிந்தமையால், தாம் தமியர் என்பதை உணரமுடிந்தது. இது எவ்வாறு நடைபெற்றது என்பதை நினைக்கத் தொடங்கியவுடன் இவை அனைத்திற்கும் காரணம் தனித்துணை அவன் என்பதை உணர்ந்துகொண்டார் என்பதே. அந்த நிலையைத்தான் இதற்கு முந்திய பாடலின் இறுதி அடி விளக்கமாகக் கூறிற்று.

மனித மனத்தின் விந்தைதான் என்னே! வெகு விரைவில் எதனையும் மறந்துவிடும் ஆற்றல் அந்த மனத்திற்கு உண்டு. அதுவும், ஆணவம் அழிவதற்குக் காரணமாக உள்ளவற்றை மனம் வெகுவிரைவில் மறந்துவிடும். மனத்தின் இந்தத் திருவிளையாடலுக்கு ஆணவமும் உதவி புரிகிறது.

பழமை மறக்கப்பட்ட நிலையில் ஆணவம் தலைதூக்கி நடனம் புரிகின்றது. ஆன்மாவின் வளர்ச்சிக்கு உதவிய தனித்துணையை, பொறி, புலன்களை வெல்வதற்கு உதவிய தனித்துணையை இந்த ஆணவம் அழிவதற்கு உதவிய தனித்துணையை, மறந்துவிட்டது.

தன்னை அடக்கி ஆண்டு நிலைகுலையச் செய்த தனித் துணையை ஆணவம் பழிவாங்க நினைத்ததுபோலும். அதனாலேயே தனித்துணையை மறக்க இந்த ஆணவமும் உதவிற்று.

இதனால் தனித்துணைக்கு எவ்விதக் கேடும் இல்லை. அது என்றும் தன் நிலை மாறாது. ஆதலின், 'தனித்துணை நீ நிற்க’ என்றார். அது மறக்கப்பட்ட நிலையில் ஆணவம் விஸ்வரூபம் எடுத்தது; ஆதலின், ‘யான் தருக்கித் தலையால் நடந்தேன்’ என்றார்.

குருவருள் பெற்ற அடிகளாருக்கு, என்றோ ஒருநாள் ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒருபகுதி நேரத்தில், இது நிகழ்ந்தது போலும். தனித்துணையை மறந்தவுடன் மனம் விழித்துக்கொண்டது. பொறி, புலன்கள் துள்ளி எழுந்தன. இவற்றின் துணை கிடைத்தவுடன் ‘யான்' என்ற அகங்காரம் விஸ்வரூபம் எடுத்துத் தலையால் நடக்கலாயிற்று.

விநாடியின் ஆயிரத்தில் ஒரு பாகத்தில் நடைபெற்று முடிந்த இச் செயலைச் சென்ற பாடலின் கடைசி அடியிலும், இந்தப் பாடலின் முதலடியிலும் அடிகளார் பேசியுள்ளார்.

144.

வலைத் தலை மான் அன்ன நோக்கியர்
        நோக்கின் வலையில் பட்டு
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்
         வெள் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய் கருணாகரனே
         கயிலாயம் என்னும்
மலைத் தலைவா மலையாள் மணவாள
        என் வாழ் முதலே 40


மிலைத்து-மருண்டு ; கதறி எனவுமாம்.

இப்பாடலின் முதலடி சற்றுக் குழப்பத்தைத் தருவதாகும். வலையின்கண் அகப்பட்ட மானைப்போன்ற நோக்கியர் என்று பலரும் பொருள் கண்டுள்ளனர். இவ்வாறு பொருள்கொள்வதில் ஒரு சிக்கல் எழுகின்றது. மானுக்குள்ள மருண்ட பார்வை நீங்கிவிட, வலையில் பட்ட மானின் பார்வை பரிதாபத்தையும், ஆற்றறாமை யையும் வெளிப்படுத்துகின்ற பார்வையாகும். இத்தகைய பார்வையுடைய பெண்கள் என்று பொருள் கூறினால், அது பொருந்தாமை எளிதில் விளங்கும். இச்சிக்கலைப் போக்கப் பின்வருமாறு சொற்களை அமைத்துக் கொள்வது பொருத்தமுடையது போலத் தோன்றுகிறது:

‘மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு, வலைத்தலை மான் அன்ன மிலைத்து அலைந்தேனை' என்று கொள்வதில் ‘மான் அன்ன' என்ற சொற்கள் இருமுறை பயன்படுத்தப்பெறுகின்றன. முதல் மான் அன்ன’ என்பது பெண்களுக்கும் இரண்டாவது ‘மான் அன்ன’ என்பது அடிகளாருக்கும் சென்று பொருந்துவதாகும்.

'நோக்கின் வலையிற்பட்டு’ என்பதால் இப் பெண்களின் நோக்கம், நோக்கப்படுபவரைச் சுற்றி வலைபோல் பின்னி அவரைச் செயலிழந்து நிற்கச் செய்கிறது என்பதாம். அவ்வாறு செய்யப்பெற்றமையால் வலையிற்பட்ட மானாக அடிகளார் ஆகி, மீண்டுவரும் நெறி அறிய முடியாமல் பரிதாபமாக விழிக்கின்றார் என்பதாம்.

'வாழ்முதல்' என்பது வாழ்க்கையின் மூலதனம் என்ற கருத்தைக் குறிப்பதாகும்.

145.

முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கை
      வெந்நீரில் கடிப்ப மூழ்கி
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய்
      விடக்கு ஊன் மிடைந்த
சிதலைச் செய் காயம் பொறேன் சிவனே
       முறையோ முறையோ
திதலைச் செய் பூண் முலை மங்கை பங்கா
       என் சிவ கதியே 41

முதலைச் செவ்வாய்ச்சியர்-முதலைபோல கொண்டதை விடாது பற்றிநிற்கும் மகளிர். வேட்கை வெந்நீர்-காமநீர். வெம்-விருப்பம்; கொடுமை. கடிப்ப-இதுவும் அங்ஙனமே மனப்ப வெறுக்க என இருபொருள் தருதல் காண்க. விதலை-நடுக்கம். விடக்கு ஊன்-தசைத்திரள். சிதலை-நோய். காயம்-உடல். திதலை -தேமல்.

‘சிவந்த வாயினையுடைய மகளிராகிய முதலை கடிக்க, அவர்கள்மேல் கொண்ட வேட்கை என்னும் நீர்ச்சுழலில் அகப்பட்டு நடுங்குகின்றவனாகிய என்னை விட்டுவிடாதே' என்கிறார்.

146.

கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும்
      ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய்
      வெள் தலை முழையில்
பதி உடை வாள் அரப் பார்த்து இறை
      பைத்துச் சுருங்க அஞ்சி
மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும்
       சடை மன்னவனே 42

ஊன்-உடல். வெண்டலை முழை-கபாலத்திலுள்ள ஓட்டைகள். பதியுடை வாளர-மறைந்திருக்கின்ற பெரும்பாம்பு. இறை பைத்து-படமெடுத்து.

‘என் உயிருக்குக் கதியாகவுள்ள உன் திருவடிகளைத் திருப்பெருந்துறையில் நீ எனக்கு அருள் செய்தபொழுதே, இந்த ஊன் உடம்பை நான் அழித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனினும் இப்பொழுது என்னை விட்டுவிடாதே’ என்றவாறு.

147.

மன்னவனே ஒன்றும் ஆறு அறியாச்
      சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய்
      மிக்க வேத மெய்ந் நூல்
சொன்னவனே சொல் கழிந்தவனே
      கழியாத் தொழும்பர்
முன்னவனே பின்னும் ஆனவனே
       இம் முழுதையுமே 43

ஒன்றுமாறுறியா-பொருந்துதலை அறியாத ஒன்றும் மாறு அறியா-ஒன்றும் மாறுபடுதலை அறியாத எனினுமாம். சொல்சொல்லின் எல்லையை கழியாத் தொழும்பர்-விட்டு நீங்காத அடியார்கள்.

'மன்னவனே! திருப்பெருந்துறையில் உன்னைக் கண்டும், அடியார்கள் உன் திருவடியோடு ஒன்றியிருத்தலைக் கண்டும்கூட உன் திருவடிகளில் ஒன்றிவிடும் வழியை அறியாமல், இவ்வுலகிலேயே இந்தப் பூத உடலுடன் தங்கிவிட்ட எனக்கும், ஒரு சிலநேரம் மின்னல்போல் தோன்றி மகிழ்ச்சியைத் தந்தவனே, என்னை விட்டுவிடாதே'.

வேதத்தைச் சொற்களால் அருளியவனே! எனினும், அச்சொற்களுக்கும் அவை குறிக்கும் பொருள்களுக்கும் அப்பாற்பட்டு நிற்பவனே! உன் திருவடியை விட்டுப் பிரியா அடியார்களுக்கு முன் நின்று அவர்களை வழிநடத்துபவனே! அஞ்ஞான இருள் சூழ்ந்த மந்த மதிகளுக்கும் பின்னே நின்று அவர்களைத் தாங்குபவனே! அனைத்துமாகி இருப்பவனே! என்னைக் கை விட்டுவிடாதே’ என்கிறார்.

148.

முழுது அயில் வேல் கண்ணியர் என்னும்
      மூரித் தழல் முழுகும்
விழுது அனையேனை விடுதி கண்டாய்
      நின் வெறி மலர்த் தாள்
தொழுது செல் வானத் தொழும்பரில் கூட்டிடு
      சோத்தெம் பிரான்
பழுது செய்வேனை விடேல் உடையாய்
      உன்னைப் பாடுவனே 44

விழுது-நெய். சோத்து-வணக்கம். தோத்திரம் சோத்திரமாகி, சோத்தமாகி, அம்கெட்டு, சோத்து என நின்றது.

‘வேல்போன்ற கண்ணினை உடைய மகளிர்மேல் கொண்ட ஆசையென்னும் நெருப்பு என்னை முழுவதுமாக அமிழ்த்திவிட அந்நெருப்பில் வெண்ணெய்போன்று உருகுகின்றேன். என்னை விட்டுவிடாதே'.

‘அடியேன் உன்னைப் பாடுகின்ற காரணத்தால், பல குற்றங்களைச் செய்பவன் ஆயினும், விட்டுவிடாதே’ என்கிறார்.

இப்பாடலில் மூன்றாவது அடியில் வரும் 'சோத்தெம் பிரான்’ என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை உடையன. ஈ, தா, கொடு என்ற சொற்கள் கொள்வோர் கொடுப்போர் வேற்றுமையை உணர்த்துகின்றன. அதுபோல, வணக்கம் என்ற பொருளையுடைய 'சோத்து’ என்ற சொல் இழிந்தோர், தம் தலைவனுக்குச் செய்யும் வணக்கத்தைக் குறிப்பதாகும்.

149.

பாடிற்றிலேன் பணியேன் மணி நீ
     ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்
     வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன் சிவன் எவ் இடத்தான்
     எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன் கிடந்து உள் உருகேன்
     நின்று உழைத்தனனே 45

பச்சூன்-பசிய ஊனாகிய உடல். உழைத்தனன்-வருந்தினேன்.

‘ஐயனே! ஒளி பொருந்திய மணிபோன்று குருவாகி நின்ற நீ மறைந்தபொழுது இந்த உடம்பை விட்டேனில்லை' என்கிறார்.

150.

உழைதரு நோக்கியர் கொங்கைப்
      பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
விழைதருவேனை விடுதி கண்டாய்
      விடின் வேலை நஞ்சு உண்
மழை தரு கண்டன் குணம் இலி
      மானிடன் தேய் மதியன்
பழைதரு மா பரன் என்று என்று
      அறைவன் பழிப்பினையே 46

உழை-மான். மழைதரு கண்டன்-மழைபோலக் கரியகண்டன். மானிடன்-மானை இடப்பக்கமுடையவன். தேய்மதி-பிறைமதி. பழைதரு மாபரன்-பழைமையைத் தருகின்ற பெரிய ஆண்டி.

பலாவின் பெரிய சுளையில் சிக்கிக்கொண்ட ஈ, உண்ணுமளவு உண்டபிறகு வெளியே புறப்பட நினைத்தாலும் புறப்பட முடியாதபடி அதன் கால்கள் பழத்தின் பசைத்தன்மையில் ஒட்டிக்கொள்கின்றன. மகளிரிடம் ஈடுபாடு கொண்டவர்கள், அனுபவித்த பிறகும் அந்த எண்ணத்திலிருந்து விடுபடாமல் அதிலேயே சிக்கித் தவிப்பர். அத்தகைய தம்மை விட்டுவிடவேண்டாம் என்கிறார் அடிகளார்.

சென்ற நாற்பத்தைந்து பாடல்களில் தம் சிறுமையைக் கூறி எந்த நிலையிலும் தம்மைக் கைவிட்டுவிடவேண்டாம் என்று அடிகளார் வேண்டிக்கொண்டதைக் கண்டோம்.

பலமுறை வேண்டியும் ஒருவர் இரங்கவில்லையானால் மனத்தில் ஓரளவு சலிப்புத்தட்டுதலும், அவரைக் குறை கூறுதலும் மனித இயற்கை.

அடிகளார் சராசரி மனித மனோநிலையிலிருந்து பலப்பல படிகள் மேலே சென்றுவிட்டவர். ஆதலின், தமக்கு இரங்காத இறைவனைக் குறை கூற அவரால் முடியாது. அதே நேரத்தில் குறை கூறவும் வேண்டும் என்ற எண்ணமும் மனத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளித்திருக்க வேண்டும். இத்தகைய நிலையில் இரட்டுற மொழிதல் என்னும் உத்தியைக் கையாண்டு மிக அற்புதமாகப் பாடலின் பின்னிரண்டு அடிகளை அமைக்கின்றார்.

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இறைவனைப் பழித்துப் பேசுவதுபோலக் காணப்பெற்றாலும் சற்று நின்று நிதானித்தால் குறைகூறுவதாகக் காணப்பெறும் இச்சொற்கள் உண்மையில் அவனுடைய பெருமையைக் கூறுவனவாகவே அமைந்துள்ளதை அறியமுடியும்.

வேலை நஞ்சு உண்(பவன்) என்பது நஞ்சையுண்ணும் பயித்தியக்காரன் என்ற பொருளைத் தருகிறது. அதன் உண்மைப் பொருள் ஆலகாலத்தை உண்டு பிரபஞ்சத்தைக் காத்தவன் என்பதாகும்.

‘மழைதரு கண்டன்’ என்பது சிவந்த மேனியில் கரிய நிறமாகிய அழுக்கை வைத்திருப்பவன் என்பது முதலாவதுபொருள். 'நீலகண்டாய’ என்று வேதமே கூறும் நீலகண்டன் என்பது இரண்டாவது பொருள்.

'குணமிலி என்பதற்கு எந்த நற்குணமும் இல்லாதவன் என்பது முதலாவதுபொருள். தாமச, இராஜச, சத்துவ என்ற முக்குணங்களையும் கடந்து நிற்பவன் என்பது உண்மைப்பொருள்.

‘மானிடன்’ என்பதற்கு குணங்குறி கடந்த மூலப் பொருளைத் தாழ்ந்த மானிடன் என்று குறிப்பது முதலாவது பொருள். இறப்ப உயர்ந்தவர் கருணை காரணமாக மானிட குருவாக வந்தார் என்பது ஒரு பொருள்; மான்போன்ற உமாதேவியை உடையான் என்பது ஒருபொருள்; மானை இடக்கையில் உடையானை என்பதும் ஒரு பொருள். இவை மூன்றும் அவன் பெருமையைக் கூறியவாறாயிற்று.

'தேய்மதியன்’ என்பதற்கு புத்தி குறைந்தவன் என்பது முதலாவது பொருள். மூன்றாம் பிறைச்சந்திரன் தன்பால் சரணமடைய, அவனை ஏற்றுத் தலையில் குடிக் கொண்டான் என்று, சரணாகதன் என அவன் பெருமை கூறியது இரண்டாவது பொருளாகும்.

‘பழை தரு மாபரன்' என்பதற்கு மா அபரன் என்று பிரித்துப் பொருள் கொண்டால் பழமையான, மிகக் கீழானவன் என்பது முதலாவதுபொருள். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய், மிக உயர்ந்த பரத்தின் தலைவன் ஆகவும் உள்ளான் என்பது உண்மைப் பொருளாகும்.

151.

பழிப்பு இல் நின் பாதப் பழம் தொழும்பு
       எய்தி விழ பழித்து
விழித்திருந்தேனை விடுதி கண்டாய்
       வெண் மணிப் பணிலம்
கொழித்து மந்தார மந்தாகினி
       நுந்தும் பந்தப் பெருமை

தழிச் சிறை நீரில் பிறைக் கலம்
      சேர்தரு தாரவனே 47

பணிலம்-சங்கு. வெண்மணி-முத்து. மந்தாகினி-கங்கை. நுந்தும்-செலுத்தும். தழிச்சிறைநீரில்-தழுவிய பக்கங்களையுடைய தேவகங்கையில். பிறைக்கலம்-பிறையாகிய தோணி. பழிப்பு இல் நின் பாதப் பழந் தொழும்பு-புகழப்படுகின்ற நின் திருவடிக்கு அடிமை. மந்தாரம்-மந்தார மலர்

திருவடிப்பேறு எய்த முடியாதவர்கள்கூட, தம் வினையை நொந்துகொள்வார்களே அன்றி, அத் திருவடியைப் பழிப்பதில்லை. ஆதலின் 'பழிப்பு இல் நின் பாதம்’ என்றார்.

‘பழம்தொழும்பு’ என்ற தொடரால் குருநாதருடன் இருந்த பழைய அடியார்களைக் குறிப்பிடுகின்றார்.

‘தொழும்பு எய்தி’ என்றதால் அந்த அடியார் கூட்டத்தினிடையே சில நேரம் இருக்கச்செய்த சிறப்பைக் கூறினாராயிற்று.

‘விழப் பழித்து விழித்து இருந்தேனை' என்றதில் உள்ள ‘விழ’ என்ற சொல் அந்த அடியார் கூட்டத்தின் உடன் செல்லாமல் தாம் தனியே விடப்பட்டமையைக் குறிப்பதாகும்.

விடுபட்டுப்போனதற்குத் தாமும், தம் பொய்யுமே காரணம் என்று நினைந்து பாடியுள்ளமை காண்க. எனவே, தம்மைத் தாமே பழித்துக்கொண்டமையைப் 'பழித்து’ என்ற சொல்லால் கூறினார்.

‘விழித்திருந்தேனை' என்பதற்குச் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தேன் என்பது ஒரு பொருள். அன்றியும் விழித்துக்கொண்டே இருந்தும்கூடத் தம் கவனக் குறைவால் விழ நேரிட்டது என்றதால், தம்மைத் தாமே பழித்தல் இயல்பாயிற்று என்பது மற்றொரு பொருளாகிறது.

152.

தாரகை போலும் தலைத் தலை மாலை
      தழல் அரப் பூண்
வீர என்தன்னை விடுதி கண்டாய்
      விடின் என்னை மிக்கார்
ஆர் அடியான் என்னின் உத்தரகோச
      மங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான் என்று
      நின்னைச் சிரிப்பிப்பனே 48

தாரகை-நக்ஷத்திரம். சிரிப்பிப்பன்-நகைக்கும்படி செய்வேன். ‘விண்மீன்களைப்போன்ற கபாலங்களையும், தழல் போன்ற கொடிய பாம்புகளையும் அணிந்த வீரனே' பயித்தியக்காரன்போல் திரியும் என்னைப் பார்த்து, நீ யாருடைய அடியவர் என்று பெரியோர்கள் 'மிக்கார்' கேட்டால், திருஉத்தரகோசமங்கையில் உள்ள சிவபெருமானின் அடியவர்கட்கு அடியவன் என்று நான் சொன்னவுடன் அவர்கள் சிரிப்பார்கள்’.

‘உன் அடியவனாகிய நான் இந்த நிலையில் இருப்பது உனக்குத்தான் அவமானம். ஆகவே, அவர்கள் சிரிப்பதற்கு நான் காரணமாக இருப்பேன்’ என்றவாறு.

153.

சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பை
     தொழும்பையும் ஈசற்கு என்று
விரிப்பிப்பன் என்னை விடுதி கண்டாய்
      விடின் வெம் கரியின்
உரிப் பிச்சன் தோல் உடைப் பிச்சன் நஞ்சு
       ஊண் பிச்சன் ஊர்ச் சுடுகாட்டு
எரிப் பிச்சன் என்னையும் ஆளுடைப்
       பிச்சன் என்று ஏசுவனே 49

கரியின் உரிப்பிச்சன்-யானைத்தோலைப் போர்த்திய பித்தன். தோலுடைப் பிச்சன்-புலித்தோலை உடுத்த பித்தன். நஞ்சு ஊண் -நஞ்சாகிய உணவு.

முந்தைய பாட்டில் 'சிரிப்பிப்பன்’ என்று கூறியவர் அதைக் கேட்டு நாணித் தனக்கு அருள்செய்வான் என்று கருதினார். அது நடைபெறவில்லை ஆதலின் உன்னை நேரடியாக ஏசுவேன் என்று மனக்குமுறலை வெளியிடுகின்றார்.

‘ஐயனே! என்னை விட்டுவிடுவாயேயானால் நான் என்ன செய்வேன் தெரியுமா? திருப்பெருந்துறையில் பலருங் காண என்னை ஏற்றுக்கொண்டு, பின்னர் வெறுத்து ஒதுக்கினாய். இப்பிழையைப் பலருக் கேட்கச் சொல்லிச் சிரிப்பிப்பேன்'.

‘என்னுடைய அடிமைத்திறம் முழுவதும், என் பணி முழுவதும் ஈசனுக்குத்தான் என்று சொல்வேனேயானால், அதைக் கேட்பவர்கள் அப்படியிருந்தும் “உன் நிலை இப்படி உள்ளதே” என்று சொல்லி, என்னைப் பணிகொண்ட உன்னைத்தான் எள்ளிச் சிரிப்பார்கள்’.

'இத்தோடு நில்லாமல் யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்த பயித்தியக்காரன்; புலித்தோலை அணியும் பயித்தியக்காரன்; நஞ்சையே உணவாகக் கொள்ளும் பயித்தியக்காரன், ஊர்ச் சுடுகாட்டில் எரியின் இடைநின்று ஆடும் பயித்தியக்காரனாகிய இவன்தான் என்னையும் ஆண்டுகொண்டான் என்று ஊரறிய உன்னை ஏசுவேன்’ என்கிறார்.

154.

ஏசினும் யான் உன்னை ஏத்தினும்
      என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய்
      செம் பவள வெற்பின்
தேசு உடையாய் என்னை ஆளுடையாய்
      சிற்றுயிர்க்கு இரங்கிக்
காய் சின ஆலம் உண்டாய் அமுது
     உண்ணக் கடையவனே 50

குழைந்து-இளகி. வேசறுவேன்-வருந்துவேன். தேசு-ஒளி, காய்சின ஆலம்-எல்லாரையும் வருத்திய கோபத்தையுடைய விஷம். கடையவன்-எல்லார்க்கும் இறுதியாக அழியாது கடைசியாக இருப்பவன்.

‘ஐயனே! உன்னை ஏத்தியபோதும், இடையில் சில பாடல்களில் ஏசியபோதும் என் மனத்தின் அடித்தளத்தில் நின்மாட்டு நிறைந்த அன்பிருந்ததே தவிர வேறில்லை. அன்பின் அடிப்படையில் சொல்லளவில் ஏசினாலும் ஏத்தினாலும் எவ்விதத் தவறுமில்லை.'

'நின் அடியார் கூட்டத்தோடு செல்லாமல் இவ்வுலகிடை உடலோடு தங்கிவிட்ட என் தவற்றை நினைந்து மனங்குழைந்து வேசறுகின்றேன் (பெருந்துயரம் அடைகின்றேன்)' என்கிறார்.

‘தம் பிழையை நினைந்து வருந்தும் ஒருவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல் பெரியோனாகிய நினது கடமையல்லவோ' எனவே, என்னை விட்டுவிட வேண்டா.

‘ஐயனே! எப்பிழை செய்தாலும் மன்னிப்பதுதான் உன் இயல்பு என்பதை நீ நஞ்சுண்டதால் அறிகின்றேன். நின்னை மதியாது அமுதைக் கடைய முற்பட்ட தேவர்கள் (சிற்றுயிர்), நஞ்சைக் கண்டு அலறி அடித்துக்கொண்டு நின்னைச் சரணமடைய, அவர்கள் செய்த பெரும்பிழையை மன்னித்தாய். அவர்கள் அமுது உண்பதற்காக, நீ அந்த நஞ்சை உண்டாய். அத்தகைய கருணைக் கடலான நீ, யான் செய்த சிறு பிழைகளைக் கண்டு வெகுள மாட்டாய் என்றே நம்புகிறேன். அன்றியும் என் பழைய பிழைகளை நினைந்து வருந்தி மனங்குழைந்து அழுகின்றவனாகிய என்னை மன்னித்து ஏற்றுக்கொள்வது உனது கடமையன்றோ!’ என்று முடிக்கின்றார்.