திருவாசகம் சில சிந்தனைகள்-2/திருவெம்பாவை

7. திருவெம்பாவை

சங்க காலம் முதலே தைந்நீராடல் முதலிய பெயர்களில் இடம்பெற்றுவந்துள்ள ஒருவகைப் பாடலே பிற்காலத்தில் பாவைப் பாட்டாக மலர்ந்தது என்று கூறுவதில் தவறில்லை. திருப்பாவை, திருவெம்பாவை என்ற இரண்டிலும் கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் விடியற்காலை நேரத்தில் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு சென்று, குளத்தில் நீராடி, இறைவனை வழிபடுவது பேசப்பெறுகிறது. இப்பாடல்களில் வரும் பாவை என்பதற்குப் பலரும் பல விதமாகப் பொருள் கூறுவர். எது எவ்வாறாயினும் கன்னிப் பெண்கள் எதிர்காலத்தில் தங்கள் மனத்திற்கேற்ற கணவனை அடையவேண்டும் என்று விரும்புவது இயற்கை அன்றியும் நாடு முழுவதிலும் மழை பெய்து நாடு செழிக்க வேண்டும் என்று வேண்டுவதும் பொருத்தமானதே ஆகும்.

தங்களுக்கு நல்ல கணவன் வேண்டும் என்று விரும்புவது தன்னலமாகும். நாட்டில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டுவது பொது நலன் பேணுவதாகும். அந்த இளமைப் பருவத்திலேயே தன்னலத்தோடு பொது நலத்தையும் பேணும் இயல்பு அவர்களுள் வளர்வது சிறப்புடையதாகும்.

மனத்திற்கேற்ற கணவன்மார் வேண்டுமென்று இறைவனை வழிபடும்போதுகூட 'எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' (திருவாச:173) என்று வேண்டுவது ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். இறைவன் மாட்டு அன்பு செய்பவர்கள் தம் கணவராக அமையவேண்டும் என்றால், அதன் பொருள் என்ன? இறைவன்மாட்டு முழு அன்பு செய்யும் அடியார்கள் தன்னலத்தை அறவே துறந்து எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பவர்களாகவும் எல்லா உயிர்கட்கும் அன்பு செய்பவர்களாகவும் இருத்தல் ஒருதலை. எனவே அத்தகையவர்களே தமக்குக் கணவராக அமையவேண்டும் என்று அவர்கள் விரும்புவதிலேயே அவர்கள் மனப்பாங்கை அறிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய கணவன்மார்கள் தங்களுக்கு வேண்டும் என்று கேட்பது தன்னலமாக இருக்கலாம். அத்தகையவர்களை அடைந்த பிறகு இப்பெண்களும் அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்பவர்களாக மலர்வது உறுதியாகும்.

வையை ஆற்றில் தைந் நீராடும் பகுதி பரிபாடலில் பேசப்பெறுகிறது. அப்பகுதியில் சிற்றின்பக் கலப்பு இருப்பதை மறுத்தற்கு இல்லை. அப்படித் தொடங்கிய இந்நீராடற்பாடல் முழு வளர்ச்சி அடைந்து மணிவாசகர் காலத்தில் வேற்றுருவை அடைகின்றது.

'பைங்குவளைக் கார் மலரால்' (திருவாச:167) என்று தொடங்கும் பாடல், அதுவரை அவர்கள் அன்றாடம் நீராடும் குளம், இப்பொழுது, இறைவன்-இறைவி வடிவாகக் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

அம்மானை, ஊசல் போன்று பாவைப் பாடலும் இளஞ்சிறுமியரின் விளையாட்டுப் பாடலாகத்தான் தோன்றியிருக்க வேண்டும். சிறுமியரைப் பொறுத்தமட்டில் அவர்கள் பருவமடைந்த பிறகு வெகுவிரைவில் அறிவு முதிர்ச்சி பெற்றுவிடுகின்றனர் என்பது நாமறிந்த உண்மை. இந்த வளர்ந்த வயதுடையவர்களையே பாவைப்பாட்டு குறிப்பிடுகின்றது என்று நினைப்பதில் தவறில்லை. அதனால்தான் தங்களுக்கு நல்ல கணவர் வேண்டுமென்று தொடங்குகின்ற அவர்களது வேண்டுகின்ற மனநிலை, இறுதியில் எங்கும் எவ்விடத்திலும் உமையொருபாகனைக் காணுகின்ற காட்சியாக மலர்வதைக் காண்கிறோம்.

ஆற்றிலோ குளத்திலோ குளிக்கச்சென்ற இவர்கள் ணலில் ஒரு பாவை வடிவம் அமைத்து அதை வழிபட்ட பின்னர் நீராடலைச் செய்திருக்க வேண்டும். நாளாவட்டத்தில் இந்தப் பழக்கம் விரிவடைந்து சைவம், வைணவம் இரண்டிலும் இரண்டு வேறுபட்ட முறைகளில் வளர்ந்தது போலும். 'நாமும் நம் பாவைக்குச் செய்யும் வரிசைகள் கேளிரோ' என்று வரும் திருப்பாவைப் பாடலும் 'நெய்உண்ணோம் பால் உண்ணோம் மலரிட்டு நாம் முடியோம்' (நாலாயிர: 475) என வரும் அப்பாடல் குதியும் வைணவ சமயத்தில் இப்பாவை வழிபாடு வளர்ந்த முறையைத் தெரிவிக்கின்றன.

சைவத்தைப் பொறுத்தமட்டில் பாவை வழிபாடு வெறும் பெயரளவில் நின்றுவிட்டதை அறிகின்றோம்.

5. ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடம் கண்
மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி தான்
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசு ஏல் ஒர் எம்பாவாய் 1

போதார் அமளி-பூப்படுக்கை. ஏதேனும் ஆகாள்-பயன்படாது கிடந்தாள். ஏல் ஓர் எம்பாவாய்-எம்முடைய பாவைபோல்பவளே அதனை ஏற்றுக்கொள் ஆராய்ந்துபார்.

எவ்வளவு ஆழ்ந்த உறக்கமாயினும் பக்கத்தில் சத்தம் கேட்டால் உடனே எழுந்துகொள்வதுதான் மனித இயற்கை. தூக்கக் கலக்கத்தில் ஒசை வந்த திசையையோ அந்த ஓசையை உண்டாக்கியவர்கள் யார் என்பதையோ அறியமுடியாது. கண்ணாகிய பொறிக்கு இல்லாத சில இயல்புகள் செவிப்பொறிக்கு உண்டு.

சென்று பற்றும் பொறியாகிய கண் சிறப்புடையதே ஆயினும், மூடியிருக்கும் கண் அதனை உடையவன் விரும்பினாலன்றித் திறந்துகொள்வதில்லை. ஆனால், நின்று பற்றும் பொறியாகிய செவி தன் பணியைப் புரிவதற்குக்கு அதனை உடையவன் ஆணை தேவையில்லை.

புறத்தே தோன்றும் ஒலி செவிப்பறையில் வந்து தாக்கும்போது, அச்செவியை உடையவன் அதனைத் தடுத்து நிறுத்த இயலாது. இந்த நுணுக்கத்தை அடிகளார் இங்குப் பேசுகிறார்.

‘கேட்டேயும்’ என்பதிலுள்ள உம்மை, நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்கள் பாட்டின் ஒலி உன் செவிப்பறை வழிப்புகுந்து உன்னை எழுப்பியிருக்க வேண்டுமே. அப்படியிருந்துமா எழவில்லை என்ற பொருளைத் தருகிறது. பார்த்தலுக்கும் கேட்டலுக்கும் உள்ள வேறுபாடு இது என்க.

இவ்வாறு பேசத் தொடங்கிய பெண்கள் உள்ளே உறங்குடவளின் செவிகள் பழுதடைந்துவிட்டனவோ என்று ஐயுற்று, 'வன்செவியோ நின்செவிதான்’ என்கின்றனர்.

நேற்றுவரை மெல்லிதாக இருந்து புறத்தே எழும் ஓசையை உன்னுள் வாங்கித்தந்த அதே செவிப்பறைகள் இன்று வன்செவியாக மாறிவிட்டதோ என்றும் பேசுகின்றனர்.

உறங்குபவளைப் பார்த்து 'வாள் தடங்கண் மாதே’ என்று விளிப்பது சற்று வியப்பைத் தருவதாகும். மூடிய கண்களை வாளுக்கு உவமையாகக் கூறுவதோ அல்லது ஒளி பொருந்தியது என்று கூறுவதோ பொருத்தமற்றதாகும். பலரும் இதனைக் கேலியாகக் கூறியது என்று பொருள் கூறியுள்ளனர். அவ்வாறு கொள்வது பொருத்தமாகத் தெரியவில்லை. அவளுடைய கண்ணுக்குள்ள இயல்பான இந்த இரண்டு சிறப்புக்களையும் நினைவூட்டுவதன் நோக்கம், அவள் கண்களைத் திறந்து வாள்போன்ற கூர்மையையும், ஒளி பொருந்திய தன்மையையும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தவே ஆகும்.

முதலடி ஆழ்ந்து சிந்திப்பதற்குரியதாகும். மணிவாசகப் பெருமான் மிக ஆழ்ந்த விஞ்ஞான அறிவும். வானியல் புலமையும் கொண்டவர் என்பதைத் திருஅண்டப் பகுதியில் விளக்கியுள்ளோம்.

உலகத்தைப் பொறுத்தமட்டில் அனைத்திற்கும் காரணமாக இருப்பவன் கதிரவனே ஆவான் என்பது இன்று பலரும் பேசும் விஞ்ஞானக் கருத்தாகும். ஆனால், இப்பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை இக்கதிரவன் உண்டாகாத காலமும் உண்டு; அதேபோல இவன் அழியப் போகும் காலமும் ஒன்று உண்டு. தன்னுடைய மாபெரும் ஒளியை இழந்து, ஒரு ஒளியிழந்த கோளாக, இக்கதிரவன் சுற்றப்போகும் காலமும் ஒன்றுண்டு. ஆக, இம்மாபெரும் கதிரவனுக்கும் ஒரு தோற்றமும் முடிவும் உண்டு என்பது இன்றைய நாள் வானியலாரும் கூறும் செய்தியாகும்.

பூமியிலிருக்கும் நமக்குக் கதிரவன் ஒளி மிகப் பெரியதாகவும் சிறப்புடையதாகவும் காணப்படுகிறதே தவிரப் பல கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றுவிட்டால் கதிரவன் ஒளி மழுங்கி விண்மீன் போலக் காட்சியளிப்பான் என்றும் வானியலார் கூறுகின்றனர். சுருங்கச் சொல்லுமிடத்து ஒளிப்பிழம்பு என்று நாம் சொல்லும் கதிரவனுக்குத் தோற்றம் உண்டு; முடிவும் உண்டு; தூரம் செல்லச்செல்ல ஒளியின் தீட்சண்யக் குறைவும் உண்டு என்பதை அறிகிறோம்.

பேரொளி வடிவான இறைவனுக்கு இக்குறைகள் எதுவும் இல்லை. இதனை வலியுறுத்தவே அடிகளார் ‘ஆதியும் அந்தமும் இல்லாச் சோதி' என்றும் ‘பெருஞ்சோதி' என்றும் ‘அரும்பெரும் சோதி' என்றும் கூறுகின்றார்.

வேத கால நாகரிகத்தில் கதிரவனுடைய ஒளியைப் பெரிதாக மதித்து, கதிரவனையே முழுமுதல் பொருள் என்று கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் இக்கருத்து வலுவடைந்து அறுவகைச் சமயங்களுள் ஒன்றாகச் ‘செளரம்’ என்று பெயரில் சூரிய வழிபாடு தனியொரு சமயமாக இடம்பெற்றது.

அதனை அடுத்த காலத்தில் ஐம்பெரும் பூதங்களையும் சந்திரன், சூரியன், இயமானன் (ஆன்மா) ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து இவை அனைத்தும் இறை வடிவங்கள் என்ற கருத்தில் 'அட்ட மூர்த்தங்கள்' (எட்டு வடிவங்கள்) என்று பெயரிட்டனர்.

திருஞானசம்பந்தர், நாவரசர், சுந்தரர் ஆகிய மூவர் காலத்திலும் (ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை) இக்கருத்தே வலுப்பெற்றிருந்தது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய அடிகளார். இந்த அட்டமூர்த்தக் கருத்தை அடியோடு மறுத்துவிடுகிறார்.

ஐம்பெரும் பூதங்களும் சூரிய சந்திரர்களும் அவற்றின் இயல்புகளும் இறைவனால் படைக்கப்பட்டனவே தவிர அவை அவனன்று என்ற கருத்தில்

. . . . . . நாடொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானில் கலப்பு வைத்தோன் மேதகு
காலில் ஊக்கம் கண்டோன் நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று

எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன்

(திருவாச. 3:19-28)

என்று பாடியுள்ளார்.

கதிரவன் தன்பாலுள்ள ஹைட்ரஜன் முதலிய வாயுக்களை எரிப்பதன் மூலம், தன்னைத் தானே எரித்துக்கொண்டு இந்த ஒளியையும் வெப்பத்தையும் தருகிறான் என்பது இன்றைய வானியலார் கருத்து. வேதகாலக் கருத்துக்கு மாறுபட்ட இக்கருத்தை எட்டாம் நூற்றாண்டு விஞ்ஞானியாகிய அடிகளார் கூறுகிறார். சூரியன் கடவுள் அல்லன், அவனுக்கென்று தனித்தன்மை எதுவுமில்லை, அவனுக்குத் தோற்றம் மறைவு உண்டு என்ற கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கி 'அருக்கனில் சோதி அமைத்தோன்' (திருவாச. 3-20) என்று பாடுகிறார்.

இறைவனுக்குரிய அட்ட மூர்த்தங்களில் கதிரவனும் ஒரு மூர்த்தம் என்று கூறும் கருத்தை மிக அழகாக மறுத்து, 'சோதி அமைத்தோன்’ என்று கூறுவதன்மூலம் அமைக்கப்பட்டவனாகிய கதிரவன் ஒரு கோள்தான் என்றும் அவனிடம் சோதி அமைத்தவனாகிய இறைவனே தலைவன் என்றும் கூறினாராயிற்று.

இத்தனை கருத்துக்களையும் உள்ளடக்கித்தான் ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி' என்றார்.

பறவை இனங்களில் சில, பாடும் இயல்புடையன. மிக உயர்ந்தவனாகிய மனிதனும் சில சமயங்களில் பாடுகிறான். எப்பொழுது பாட்டு வருகிறது? மகிழ்ச்சி காரணமாகவோ துயரம் காரணமாகவோ மனத்தில் கனிவு ஏற்பட்டு, அக்கனிவு உள்ளத்தைச் சென்று தாக்கும்போது, தன்னையும் அறியாமல் மனிதன் பாடுகின்றான். பாடும் இயல்புடைய பறவைகளும் அவ்வாறே. இதனையே ஞானசம்பந்தப் பெருமான் 'உளங் குளிர்ந்த போதெலாம் உகந்து உகந்து உரைப்பனே’ (திருமுறை. 2.98.9) என்று கூறிச்செல்கிறார். இந்தக் கருத்தை மனத்துட்கொண்டு இப்பாடலின் முதலடியை மறுபடியும் சிந்திக்க வேண்டும். ‘யாம் பாட’ என்று அப்பெண்கள் கூறுவதன் நோக்கமென்ன? உளங்குளிர்ந்த போதுதானே பாடல்வரும்? எனவே, இவர்கள் பாடினார்கள் என்றால் உளங்குளிர்ந்து, உகப்புத் தோன்றிப் பாடினார்கள் என்பது பெற்றாம். இந்தக் குளிர்வும், உகப்பும் எங்கிருந்து வந்தன? இருபத்து நான்கு மணி நேரமும் நிலையாக நிற்கும் உணர்வுகள் அல்ல இவை. இப்பொழுது உள்ளத்தில் குளிர்வும் உகப்பும் தோன்றினமையின் அது பாட்டாக வெளிப்பட்டது. இந்தக் குளிர்வும் உகப்பும் தோன்றக் காரணமாயிருந்தது ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாகும். அந்தச் சோதி எப்பொழுதும் உள்ளதுதானே? அப்படியிருக்க இப்பொழுது திடீரென்று இவர்கள் உள்ளத்தில் குளிர்வையும் உகப்பையும் ஏற்படுத்த என்ன நிகழ்ந்தது? அந்த நுணுக்கத்தைத்தான் இங்கு அடிகளார் கூறுகின்றார்.

'சோதியை யாம் பாட' என்றதால் அந்தச் சோதி இப்பொழுதுதான் இவர்கள் உள்ளத்தைக் குளிர்வித்து உகப்பை உண்டாக்கிற்று. அதாவது அவனருளாலே அவன்தாள் வணங்குவதுபோல, அந்தச் சோதியின் அருளை இப்பொழுது பெற்றார்கள். அந்த அருள் இவர்களுக்குக் கிடைத்ததும் அவன் கருணையினாலேயே ஆகும். 'சோதியை யாம்பாட’ என்று கூறுவதன் அடிப்படை இதுதான். அதாவது, சோதியைப் பாடுவதால் உள்ளம் நிறைந்தது, குளிர்ச்சியும் உகப்பும் தோன்றின. இவை இரண்டும் தோன்றியதால் மறுபடியும் பாடல் பிறந்தது.

இவ்வாறு கூறியதால் இப்பொழுது இந்தப் பெண்கள் பாடும் பாடல் வாலாயமாக இதுவரை இவர்கள் பாடி வந்த பாடல்போல் அல்லாமல், உள்ளக் குளிர்ச்சியும் உகப்பும் வெளிப்படப் பாடுகிறார்கள் என்பது தெளிவாகிறது. எனவே, இப்படி உள்ளக் கனிவிலிருந்து தோன்றும் பாடலைக் கேட்டும்கூட, கண்விழிக்காமல் படுத்திருப்பது, உறங்குகின்றவள் உள்ளத்தில் மலரவேண்டிய குளிர்ச்சியும் உகப்பும் இன்னும் தோன்றவில்லையோ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கின்றது.

‘வளருதியோ’ என்ற சொல்லுக்குக் கண்ணையும் உடன்சேர்த்துக் கண்வளர்தல் அல்லது உறங்குதல் என்று பொருள் கூறியுள்ளனர். அவ்வாறு கொள்ளாமல் எம் பாடலைக் கேட்டுங்கூட வாள் தடங்கண் விழிக்காமல், மென்செவி வன்செவியாக மாற்றப்பெற்று, அகவளர்ச்சி குன்றி, உறக்கத்தின் மூலம் உடம்பை வளர்க்கின்றாய் என்ற பொருளும் பட 'மாதே வளருதியோ’ என்றார்.

படுக்கையில் கிடந்தபடியே உடம்பை வளர்க்கிறாள் இவள். ஆனால் புறத்தே, தெருவில் மற்றொரு வளர்ச்சி நடைபெறுகின்றது. மாதேவனுடைய வார்கழல்களை ஏனையோர் வாழ்த்துகின்றனர். உளங்கனிந்து உவந்து பாடும் அப்பாடலின் ஒலி வீதிவாய்ச் சென்று வளர்கின்றது. இந்த வளர்ச்சி அவளை ஒன்றும் செய்யவில்லையோ என்று ஐயுற்ற பெண்கள் வீதிவாய்க் கேட்டலுமே இவ்வளர்ச்சியில் ஈடுபடாமல் உறங்கித் தன் உடம்பை வளர்க்கிறாளே என்று ஒரு கணம் வருந்தினர்.

என்றாலும், பழைய தோழி ஆதலானும் இதுவரை இறையன்பில் உள்ளங் குழைந்தவள் ஆதலாலும் இப்பொழுது அவள் உறங்குகிறாள் என்று கருதாமல், அவள் எழுந்து வாராமைக்குக் காரணம் வேறு ஏதேனும் இருக்குமோ என்று தம்முள் பேசிக்கொள்ளுகின்றனர்.

வீதிவாய்க் கேட்டலும் விம்மினாள்; மேலும் மேலும் விம்மினாள்; அதன் முடிவில் மெய்ம்மறந்தாள். அதன் பயனாக அவளுடைய உடம்பு அநிச்சைச் செயலாக அமளியின்மேல் இங்கும் அங்குமாகப் புரள்கின்றது. இறையனுபவத்தில் ஆழ்ந்து 'மெய்ம்மறந்து ஏதேனும் ஆகாள் கிடந்தாள்’ என்பதனால் சமாதி நிலையை அடைந்துவிட்டாளோ என்று பொருள்கொள்ளவும் இது இடந்தருகிறது. இந்தக் கோணத்தில் நின்று, திருவெம்பாவை முழுவதற்கும் புதிய முறையில் எழுந்த சிந்தனையை இந்நூலின் பின்னுரையில் காணலாம்.


156.

:பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப் பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையிர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஒர் எம்பாவாய்
2


பாசம்-அன்பு.

சராசரி மனிதர்கட்கும், ஆன்மீகத் துறையில் முன்னேற வேண்டுமென்று விரும்பி அதற்குரிய முயற்சியில் ஈடுபடுபவர்கட்கும், திருக்கோயில் முதலியவற்றிற்குக் செல்வதன் மூலம் தமது பக்தியை வளர்த்துக்கொள்ள முடியுமென்று நம்புபவர்கட்கும் பொதுவான சில இயல்புகள் உண்டு. இரண்டாம் வகையினர் பிறரிடம் பேசும்போது தம்முடைய முயற்சியை வெளிப்படையாகக் கூறவே மாட்டார்கள். மூன்றாம் வகையினர் எப்பொழுது யாரிடம் பேசினாலும், தம்முடைய மனம் முழுவதும் இறைவன் திருவடிகளிலேயே பதிந்துள்ளது என்றும், அவனையே சரணமென்று கருதியிருப்பதாகவும் வெளிப்படையாக கூறிக்கொள்வர். ஆனால், தனியே இருக்கும்பொழுது, அல்லது சுகபோகங்களை அனுபவிக்கும்போது, இவர்கள் மனம் இறைநாட்டம் கொள்ளாமல் சுகபோகங்களில் மூழ்கி விடுதல் இன்றும் நாம் காணும் இயல்பாகும்.

தங்களுடைய இந்த மனநிலையை மறைக்க, எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் தங்கள் மனம் இறைவன்பால் உள்ளது என்றே கூறிக்கொண்டிருப்பர்.

இந்த ஒன்று, மூன்றாம் வகையினரின் மனோநிலை தான் இப்பாடலின் முதலிரண்டு அடிகளில் பேசப் பெறுகின்றது. உறங்குபவளை எழுப்பக் கூட்டமாக வந்து வீட்டின்வெளியே நின்று கொண்டு, உள்ளே இருப்பவள் இன்னும் உறங்குவதைக் கண்டு இவ்வாறு பேசுகின்றனர்.

'நேரிழையாய்' என்று விளித்ததால் இரவில் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றக்கூட மனம் இல்லாமல் அவற்றுடனேயே உறங்குகிறாள் என்பது பெறப் பட்டது. உறங்கும்பொழுதுகூடப் பொன் ஆபரணங்களை விட்டுவிட மனமில்லாதவள் எங்ஙனம் ஈசன்பால் பற்று வைக்கமுடியும் என்பது குறிப்பெச்சம்.

‘பெண்ணே பகல், இரவு எந்த நேரத்திலும் நாம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் உன்னுடைய பற்று முழுவதும் பரஞ்சோதிக்கே என்று வாய் ஓயாமல் பேசும் நீயா, இப்பொழுது இந்தப் போதார் அமளியை விட்டு எழாமல் இருக்கின்றாய்'. 'போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ' என்று அவர்கள் கூறியதால் முன்னர்ப் பரஞ்சோதிக்கே தன் பாசம் என்று கூறியது எவ்வளவு பொருத்தமற்றது என்பது இப்பொழுது விளங்குகின்றது.

புறத்தே நின்றவர்கள் இவ்வாறு பேச, உறக்கத்திலிருந்து விழித்தவள் இதோ பேசுகிறாள். 'தோழிகளே! பகலிலும் இரவிலும் நாம் கூடியிருக்கும்போது இவ்வாறு விளையாட்டாக ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்ளுதல் முறையாகும். இந்த விடியற்காலை நேரத்தில், இறைவனை உன்னி வழிபடவேண்டிய நேரத்தில் இப்படி விளையாட்டுப் பேச்சுப் பேசலாமா? அதுவும் வீட்டின் முகப்பில் நின்றுகொண்டு இவ்வாறு விளையாடுவது முறையன்று’ என்கிறாள்.

'ஏசும் இடம் ஈதோ’ என்பதில் ஒரு குறிப்புப் பொருளும் உண்டு. நம் முன்னோர் வீட்டை அகம் என்றும் வீட்டிற்கு வெளியேயுள்ள பகுதியைப் புறம் என்றும் கூறினர். புறப்பகுதியிலிருந்து அகப்பகுதிக்கு நுழையும்போது வாயிற்படியைக் கடக்க நேரிடுகின்றது. புறத்தேயுள்ள பல்வேறு தொல்லைகளைத் தாங்கிநிற்கும் மனம், அகத்தே சென்றவுடன் அமைதி அடைகின்றது. எனவே, வாயிற்படி இரண்டு உலகங்களைப் பிரிக்கினற ஓர் இடமாகும். இன்றும்கூட வாயிற்படியில் அமர்ந்துகொண்டு வெட்டிப் பேச்சு அல்லது வேடிக்கைப் பேச்சு பேசுபவர்களை வீட்டிலுள்ள முதியோர் ஏசுவர். ‘வாயிற்படியில் அமர்ந்துகொண்டு விளையாடாதே; வீண்பேச்சுப் பேசாதே’ என்று கூறுவர். இவற்றையெல்லாம் உள்ளடக்கித்தான் வாயிற்படியில் நிற்கும் பெண்களைப் பார்த்து 'விளையாடி ஏசும் இடம் ஈதோ’ என்று கேட்கிறாள்.

புறத்தே நின்றவர்கள் தாங்கள்தாம் பக்தி மார்க்கத்தில் செல்பவர்கள் என்றும், உறங்குபவள் அவ்வழி வாராதவள் என்றும் பொருள்படப் பேசினர். உள்ளே இருப்பவள் இவர்களுக்குச் சற்றும் குறைந்தவள் அல்லள் என்பதை அவள் பேசும் பேச்சு வெளிப்படுத்துகின்றது.

'தோழிகளே! நாம் அனைவரும் ஈசனுக்கு அன்பர்கள் என்பதை நான் உணர்கின்றேன். நம்மால் வழிபடப்படும் ஈசன் எத்தகையவன் என்பதை அறியாதவள் அல்லள் நான். அவனுடைய பாதங்களை எளிதாக நாம் பற்றிக்கொண்டதால் அவனுடைய சிறப்புக்களையும், பெருமைகளையும் நாம் மறந்துவிடவில்லை. அத்திருவடிகள் விண்ணோர்களும் ஏத்துதற்கு எளிதில் கிடைக்காத திருவடிகளாம். என்ன அதிசயம்! அத்தகைய திருவடிகள் நம்மைப்போன்ற சாதாரணப் பெண்களும் வழுத்துதற்கு எளிதாய் இதோ நம் முன்னர் உள்ளன. இது எவ்வாறு முடிந்தது? விண்ணோர்களுக்கே கிடைக்காத ஒன்று. நமக்குக் கிடைத்துவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தேன்; உண்மை விளங்கிவிட்டது. நம் தகுதி நோக்கி இத் திருவடிகள் கிட்டவில்லை. அன்பில் ஏழைகளாகிய நம்மாட்டுக் கொண்ட பரம கருணையால் அத்திருவடிகளை நமக்குத் தந்து அருள, தேஜோமயமான அவ்விறைவன் நம்மாட்டு வந்தருளினன்’ என்கிறாள். அருள என்ற சொல் ஒரே தொடரில் 'தந்தருள வந்தருளும்' என இருமுறை பயன்படுத்தப்பெற்றதன் நோக்கம் இதுவேயாகும்.

‘அருள்செய்ய வேண்டும் என்று கருதியவன், நாம் அவனிடம் செல்லமுடியாது என்பதை அறிந்து கொண்டான்; எனவே வந்தருளினான். அத்திருவடிகளைப் பெறுவதற்குரிய எவ்விதத் தகுதியும், உரிமையும் நம்மாட்டு இல்லை என்பதைப் புரிந்துகொண்ட அவன், கருணை காரணமாக நாம் இருக்குமிடம் தேடிவந்து தந்து அருளினான்’ என்றும் கூறினாள்.

‘ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம்' என்ற தொடரில் ‘கூசும்’ என்ற சொல் இடைநிலைத் தீவகமாக அமைந்து உள்ளது. தேவர்கள் தம் தகுதியின்மையை அறிந்த காரணத்தால் அத்திருவடிகளை ஏத்தக் கூசுகிறார்கள்.

அன்றியும் தேவர்கள் தன்னலமே வடிவானவர்கள் ஆதலால், மலர்ப்பாதம் அவர்களுக்குக் காட்சி தரக் கூசுகின்றது.

157.

முத்து அன்ன வெள் நகையாய் முன் வந்து எதிர் எழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்து உன் கடை திறவாய்
பத்து உடையீர் ஈசன் பழ அடியிர் பாங்கு உடையீர்
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எம்க்கு ஏல் ஓர் எம்பாவாய் 3

அள்ளூறி-வாயூறி. கடைவாயில். பத்துடையீர்பற்று என்பது எதுகைநோக்கிப் பத்து என ஆயிற்று. பாங்கு-மேன்மை.

சென்ற பாடலைப் போலவே இப்பாடலிலும் எழுப்ப வந்து புறத்தே நிற்பவர்களுக்கும் உள்ளே படுத்துக் கிடப்பவளுக்கும் இடையே நடைபெறுகின்ற உரையாடல் பேசப்பெறுகின்றது.

புறத்தே நிற்பவர்கள் முன்னரே எழுந்து இறைவன் புகழைப் பாடிக்கொண்டு வீதியில் வந்தவர்கள்; ஆதலின், உள்ளே இருப்பவளைவிடத் தாங்கள் ஒருபடி முன்னேறியவர்கள் என்ற எண்ணம் உடையவர்கள் ஆகின்றனர். அதன் பயனாகவும், விளையாட்டாகவும் அவர்கள் ஏச்சில் ஓர் அழுத்தம் காணப்படுகிறது.

‘முத்துப்போன்ற பற்களை உடையவளே! நேற்று நீ என்ன பேசினாய் என்பது நினைவிலுள்ளதா? எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே நின்றுகொண்டு நாங்கள் வரும்போது இறைவனை அத்தன் ஆனந்தன் அமுதன் என்று சொல்லி உங்களை வரவேற்பேன் என்று கூறினாயே, அது மறந்துவிட்டதா? ஆனாலும் நேற்று நீ பேசும்போது, அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அவன் பெயரைச் சொல்லும்பொழுது உன் உள்ளத்தில் நிறைந்திருந்த அன்பு காரணமாக வாயில் எச்சில் ஊறிற்று. எனவே, நேற்று நீ பேசியது உள்ளன்போடு பேசியதுதான் என்பதை உன் வாயில் அள்ளுறியதால் அறிகின்றோம். ஆகவே, உன்னைக் குறைத்து மதிப்பிட நாங்கள் தயாராக இல்லை. இப்பொழுது வந்து உன் வாயிலைத் திறப்பாயாக’ என்றார்கள்.

‘முத்து அன்ன வெண் நகை’ என்று கூறியதால் உள்ளிருப்பவளின் அகமும் புறமும் தூய்மையாக உள்ளன என்பதை அவர்கள் குறிப்பால் சுட்டினாராயிற்று. ஆழ்ந்து சிந்திக்கும்போது இப்பொருள் தென்படுமேனும் மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்கள். எள்ளி நகையாடியதாகவே இந்தத் தொடருக்குப் பொருள் கொள்ளமுடியும். 'முத்தன்ன வெண்ணகை' என் தூய்மையில்லை; பல் மட்டும்தான் வெண்மை உடையதாக உள்ளது என்ற எள்ளற்பொருளையும் தந்து நிற்கும்.

புறத்தே நின்றவர்கள் பேசியதைக் கேட்டு, உள்ளே இருந்தவள், அவர்கள் சொற்களுக்கு மேலோட்டமாகப் பொருள் செய்துகொண்டு, தன்னை அவர்கள் எள்ளி நகையாடியதாகக் கருதி, சற்று மனம் வருந்தினாள் என்றும் தெரிகிறது. அதனால் 'இறைவன்மாட்டுப் பற்று மிகுதியாக உடையவர்களே! பரம்பரையாகப் பழமையாக அடியார்களாக உள்ளவர்களே! உங்களைப் போல ஆழமான அன்பு என்மாட்டு இல்லையாயினும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். புது அடியாராக வந்துள்ள என் குற்றங் குறைகளைப் போக்கி உங்கள் பழ அடியார் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டால் என்ன இழுக்கு நேர்ந்துவிடப் போகிறது’ என்ற கருத்தில் அவள் பேசினாள்.

புறத்தே நின்று இப்பேச்சைக் கேட்டவர்கள் அவள் மனம் வாடிவிட்டதைப் புரிந்துகொண்டு, அவள் மனம் தேறும்படியாக இதோ பேசுகின்றனர்: 'தோழி! நின் அன்புடைமை எத்தகையது என்பதை நாங்கள் எல்லோரும் நன்றாக அறிவோம். தூய்மையான சித்தமுடைய நீயும் நாங்களும் செய்யவேண்டியது ஒன்றுண்டு. சிவனைப் பாடுவதுதான் அச்செயலாகும். இது தவிர வேறெதுவும் தேவையில்லையாதலால் இத்துணையே வேண்டும்’ (அவனைப் பாடுதலாகிய தொழில்மட்டும் எமக்குப் போதுமானது) என்று கூறி முடிக்கலாயினர்.


158.

ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப் பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய் 4


நித்திலம் - முத்து. மருந்து - அமுதம். அவம் வீண்.

இப்பாடல் முன்னைய பாடல்களைப் போலவே புறத்தே நிற்பவர்களுக்கும், உள்ளே இருப்பவளுக்கும் இடையே நடைபெறும் உரையாடலாக அமைந்துள்ளது.

‘ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?' என்பது எழுப்பவந்தவர்கள் கூற்றாகும். இதன் மறுதலையாக 'வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?’ என்று வினவுகிறாள். அவ்வினாவிற்கு விடை கூறத் தொடங்கிய புறத்தே நிற்கும் பெண்கள் சற்றுப் பொறு, வந்தவர்களை எண்ணி இத்தனை பேர் என்று விடை கூறுகின்றோம் என்ற கருத்தில் 'எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்' என்றனர். இச்சொற்களைக் கூறிய உடனேயே அவர்கள் மனத்தில் ஓர் ஐயம் பிறந்தது. தாங்கள் எண்ணி விடை கூறுகின்றவரை, அந்த இடைநேரத்தில் ஒரு சிறு தூக்கம் போட்டுவிடுவாளோ என்று அஞ்சியவர்களாய்த் 'தோழி நாங்கள் இங்குள்ளவர்களை எண்ணி இத்தனை பேர் என்று சொல்வதற்குச் சிறிது காலதாமதம் ஆகும். அந்த இடைநேரத்தில் நீ சிறு தூக்கம் போட்டுக் காலத்தை வீணடித்துவிடுவாய். அதுமட்டும் அன்று, நாங்களும் விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப்பொருளை, கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம் உருகவேண்டிய நேரம் இது. இந்த நேரத்தை ஆள் எண்ணும் பணியில் செலவிடமாட்டோம். நீயே வந்து எண்ணிக்கொண்டு யாரேனும் வாராதிருப்பின் மறுபடியும் சென்று உறங்குவாயாக’ என்று முடித்தனர்.

‘எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்' என்று கூறியவர்கள், அச்சொற்களைக் கூறிய பிறகு எண்ணும் தொழிலைத் தொடங்கினால் அதனால் விளையப்போகும் இரண்டு பயன்களைச் சிந்திக்கலாயினர். ஒன்று, உறங்கியவள், எண்ணி முடிகின்றவரை மறுபடி உறங்கச் சென்றுவிடுவாள். இரண்டு, தங்களைப் பொறுத்தவரை விண்ணுக்கொருமருந்தை... எண்ணிக் கசிந்து உருக வேண்டிய நேரத்தை ஆள் எண்ணும் பணியில் செலவழிக்க விரும்பவில்லை. ஆதலால், 'எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்’ என்று தொடங்கியவர்கள் ‘யாம் மாட்டோம் நீயே வந்து எண்ணிக் குறையில் துயில்’ என்று கூறிமுடித்தனர்.

சென்ற பாடலிலும் இப்பாடலிலும் புறத்தே நிற்பவர்கள் உள்ளே இருப்பவளை விளிக்கும்பொழுது 'வெண்ணகையாய்’ என்றும் 'நித்தில நகையாய்’ என்றும் கூறுவது உள்ளே இருப்பவளின் பண்பாட்டைக் குறிப்பதற்குரிய விளியாகும். எப்பொழுதும் பற்கள் தெரியவாய்விட்டுச் சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் உள்ளத்தில் கள்ளமில்லாதவர்கள் என்று மனவியலார் கூறுவர். ஏனையோர் விளித்துக்கொண்டு வெளியே நிற்கும்போதும், உள்ளே இருப்பவள் அரை உறக்கத்தில் இருந்தாலும் அவள் சோம்பேறி அல்லள், இறையன்பில் குறையாதவள், தூய்மையான உள்ளம் படைத்தவள், எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பவள், உள்ளத்தில் கள்ளமில்லாதவள் என்பவற்றையெல்லாம் உள்ளடக்கி ‘நகையாய்’ என்றே விளித்தனர்.

159.

மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய்ப் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவு அரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏலக்குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய் 5

நாம் அறிவோம் போல் என்று-நாம் அறிந்துவிடுவோம் போல என்று. பொக்கம்-பொய். படிறீ-வஞ்சகீ. ஏலம்-மயிர்ச்சாந்து. கோதாட்டும்-குற்றங்களிலிருந்து நீக்கும்.

முதல் நான்கு பாடல்களில் உள்ளே உறங்குபவளின் உள்ளத் தூய்மையை நினைந்து நன்முறையில் விளித்தவர்கள், இவ்வளவு கூறியும் அவள் எழுந்து வராமையால் ஓரளவு சினந்து பேசத் தொடங்குகின்றனர். ‘பால் ஊறு தேன் வாய்ப் படிறீ' என்பது முரண்பட்ட சொற்கனையுடைய தொடராகும். பாலுறு தேன்வாய் என்றதால் உள்ளே இருப்பவள் விழித்திருக்கும் நிலையில் பேசும் பேச்சு, பாலும் தேனும் கலந்ததுபோல இனிமையுடையதாக இருந்தது என்பது பெறப்பட்டது. ஆனால், இப்பொழுது அவள் செயல், அந்த இனிய சொற்களுக்கு முரணாக இருத்தலின், புறத்தே இனிமையாகப் பேசி உள்ளத்தில் வஞ்சகம் உடையவள் என்று கருத்துத் தொனிக்கப் 'படிறீ’ என்ற அவளை விளித்தனர். அம்மட்டோடு இல்லாமல் தோழியருடன் சேர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது நேற்று இவ்வாறு கூறினாள். 'மலைஇலக்குப்போல் உயர்ந்து நிற்கும் சிவபெருமானை, நான்முகனும் திருமாலும் காணாமல் போனது விந்தைதான். என்போன்றவர்கள். அவனை நன்கு அறிவோம்’ என்று இப்போது துயில்பவள் பலமுறை பேசியுள்ளாள். அப்பொழுது அவளுடைய பேச்சு, பாலும் தேனும் கலந்ததுபோல இனிமை உடையதாக இருந்தது. ஆதலின், தோழிமார்கள் அவளை முற்றிலும் நம்பினர். அவள் பேசிய சொற்களுக்கும் இப்பொழுது அவள் செயலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமையால் ‘உலகிலுள்ள பொய்களை யெல்லாம் ஒருங்கிணைத்துப் பேசும் படிறீ வந்து கதவைத் திறப்பாயாக’ என்று கூறினர்.

ஞாலம், விண் என்பவை அவ்வவற்றிற்குரிய உலகங்களைக் குறித்து நின்றன. அண்டத்தைப் பொறுத்த வரை இந்த மண்ணுலகம், விண்ணுலகம்போன்ற பல. உலகங்கள் இருத்தலின் அவற்றையும் உள்ளடக்கிப் 'பிறவே’ என்றார். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தன்னைப் படைத்த தலைவனை அறிய முயன்றாலும் அறிய முடியாதவன் என்றார்.

அப்படி அறிவரியானாக இருந்தாலும் சிற்றுயிர்கள் ஆகிய நம்மாட்டுக் கருணை கொண்டவன்; இயல்பாகவே நம்மிடமுள்ள குற்றங்களைக் களைந்து, ஆட்கொள்ளும் தன்மையுடையவன் என்று அவன் பெருமையைத் தெருவுதோறும் ஓலமிட்டுக்கொண்டே வருகின்றோம். நாம் அறிவோம் என்று நேற்றுப் பேசிய நீ, எங்கள் ஓலங்களைக் கேட்டும் எழுந்து வரவில்லை என்றால் தோழி! நின் பரிசு இருந்தவாறு என்னே! என்றார்கள்.

ஓலமிடும் சத்தங் கேட்டதால் காதின்வழி புகும் அந்த ஓசை, ஓய்வெடுத்துக்கொள்ளும் மனத்தைத் தட்டி எழுப்புகிறது. விழித்து எழும் மனம் அது என்ன ஓலம் என்று அறிய அறிவின் உதவியை நாடுகின்றது. அறிவு தொழிற்படவே ஓலத்தின் சொல்லையும் பொருளையும் ஆய்கின்றது. இறைவன் புகழைப் பாடும் ஓலம் என்பதை அறிந்துகொண்ட அறிவு, அச்சொல்லையும் பொருளையும் கிரகித்து, அவற்றை மெல்ல உணர்வினிடம் செலுத்து கின்றது. இறையருளை அனுபவிக்க மனத்திற்கோ அறிவிற்கோ, தகுதியோ வாய்ப்போ இல்லை. ஓலத்தில் தோன்றும் சொற்களும் அவற்றின் பொருளும் உணர்விற்கு விருந்தாக அமைந்திருத்தலின், இச்சொற்களைக் கேட்ட வுடன் உணர்வு இறையனுபவத்தில் மூழ்கியிருத்தல் வேண்டும். அவ்வாறு அவள் மூழ்கவில்லை; ஆதலால், ‘ஓலமிடினும் உணராய் உணராய் காண்’ என்று கூறினர்.

160.

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணோமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவு அரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய் 6

நென்னல்-நேற்று. தலையளித்து-கருணைசெய்து. வான் வார் கழல்-ஆகாயத்து விளங்கும் அழகிய திருவடி.


மேலைப் பாடல்கள்போல் அல்லாமல் இப்பாடல் முழுதும் புறத்தே நின்றவர்கள் கூற்றாகவே முடிகின்றது. சராசரி மனிதர்களின் உரையாடலில் யாரோ ஒருவர் திடீரென்று முனைத்தெழுந்து 'போனது போகட்டும் நாளைக்கு நான் என்ன செய்யப் போகிறேன் பார்' என்று கூறுவது மரபு.

இந்த அடிப்படையிலேயே இங்கு உள்ளே உறங்குபவள் முதல் நாள் இரவு பேசிய பேச்சை இப்பொழுது அவளுக்கு நினைவூட்டுகின்றனர். மான்போன்றவளே! நேற்று நீ என்ன சொன்னாய் தெரியுமா? நாளைக் காலையில் நான் ஒருத்தியாகவே வந்து உங்களை எழுப்பப்போகிறேன் பாருங்கள் என்று சொன்னாயே, அப்படி நீ கூறிய சொற்கள் எந்தத் திசையில் காற்றோடு போயின என்று சொல்ல முடியுமா? சொல்விய சொல்லைக் காவாது விட்டால் அதற்கு வெட்கப்பட வேண்டும். நீயோ நாணத்தையும் விட்டுவிட்டாய். இன்னும் பொழுது விடியவில்லையா? என்றனர்.

‘பெண்ணே நாங்கள் வெறும் பேச்சுப் பேசிக் கொண்டு இங்கு வந்து நிற்கவில்லை. விண்ணும் மண்ணும் பிறவும் அறிய முடியாதவன், அற்ப மனிதர்களாகிய நம்மாட்டுக் கொண்ட கருணையால், தானே இறங்கி வந்து நம்மை ஆட்கொண்டருளித் தன் திருவடிகளை நமக்குத் தந்துள்ளான். அப்படிப்பட்ட திருவடிகளை அல்லவா நாங்கள் புகழ்ந்துகொண்டு நிற்கின்றோம். நீ எழுந்து வந்து வாயிலைத்தான் திறக்கவில்லை என்றாலும், படுக்கையில் கிடந்தபடியே வாய்திறந்து ஒரு வார்த்தையேனும் பேசாமல் இருக்கின்றாய்’ என்றும் கூறுகின்றனர். இவ்விடத்தில் 'மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்' (திருப்பாவை:10) என்ற ஆண்டாளின் சொற்கள் நினைவு கூரத் தக்கவை.

‘நீ வாய் திறவாவிட்டாலும் வாசல் திறவாவிட்டாலும் உனக்கும், அவன் புகழைப் பாடும் எமக்கும், இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் தலைவனாக உள்ளவனைப் பாடுவோமாக’ என்கின்றனர்.

161.

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்ன முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் 7

சின்னங்கள்-சங்கு தாரை முதலிய விடியற்கால இசைக் கருவிகள். ஆனை-எனக்கு ஆனை போன்றவன்.

இப்பாடல் முழுவதும், எழுப்ப வந்தவர்கள் கூற்றாகவே அமைந்துள்ளது. 'தாயே! அமரர் பலரும் நினைக்கவும் முடியாதவன், ஒப்பற்றவன், மாபெருஞ் சிறப்பை உடையவனாகிய அத்தகையவனை நினைந்து, விடியற்காலை நேரத்தில் திருச்சின்னங்கள் ஒலிக்கத் தொடங்கியவுடன், அந்த விநாடியே சிவசிவ என்று கூறுவாயே! தென்னாட்டுக்கு உரியவனே என்று யாரேனும் கூறினால், அவர்கள் கூறி முடிப்பதற்குள் தீயிற்பட்ட மெழுகுபோல் மனம் உருகுவாயே! நேற்றுவரை இவ்வாறிருந்த உனக்கு இன்று என்ன நிகழ்ந்துவிட்டது? இதோ நாங்கள் அனைவரும் உன் வீட்டு வாயிலில் நின்று எங்கள் அன்பிற்குரியவனே! எங்கள் தலைவனே! என்று ஒன்றுசேர்ந்தும் தனித்தனியாகவும் அவன் புகழைப் பாடுகின்றோமே! இத்தனையிலும் உறக்கத்திலிருந்து விழிக்காமல் அதிலேயே ஆழ்ந்துள்ளாயே! துயிலின் பெருமை இத்தகையது என்று அறிந்துகொண்டோம்’ என்கின்றனர்.

திருச்சின்னங்களைத் தெருவூடே வாசித்துக்கொண்டு செல்வார்கள். தனிப்பட்ட முறையில் யார் வீட்டின் எதிரேயும் நின்று ஊதமாட்டார்கள். அப்படி இருந்தும் தூரத்தே கேட்கும் அவ்வொலி காதில் பட்டவுடன் எழுந்து சிவசிவ என்று கூறுவாய் என்கின்றார்கள்.

‘தென்னா’ என்ற சொல் தென்னாட்டவன் என்ற பொதுப் பொருளையும், தென்னாடுடைய சிவன் என்ற சிறப்புப் பொருளையும் தந்துநிற்கும் சொல்லாகும். இதில் தென்னா என்று கூறுபவர்கள் எந்தப் பொருளில் கூறினார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படி இருந்தும் அந்தச் சொல்லைக் கூறி முடிப்பதற்குள் உருகுவாய் என்கின்றனர்.

தூரத்தே சின்னங்கள் கேட்கும்போது உருகுவதும் தென்னா என்ற பொதுச் சொல்லைக் கேட்டவுடன் உருகுவதும் இறையன்பில் மிக முதிர்ந்த நிலையில் உள்ளவர்களின் செயலாகும். இவ்விரண்டு பண்புகளையும் உள்ளே உறங்குபவளுக்கு ஏற்றிக் கூறுவதால், இப்பொழுது உறங்கிக்கொண்டிருந்தாலும் அப்பெண்ணரசி இறையன்பில் மிக உயர்ந்த நிலையில் உள்ளவள் என்பதைக் கூறிவிட்டனர்.

திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் சேக்கிழார் பெருமான் இக்கருத்தை அற்புதமாக எடுத்து ஆளுகிறார். 'தேர் ஒலிக்க மா ஒலிக்க' என்று தொடங்கும் திருக் குறிப்புத் தொண்டர் புராணப் பாடலில் அடியார்களின் இலக்கணத்தைக் கூறவந்த காப்பிய ஆசிரியர்,

நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார் பேர் ஒலிக்க உருகும் அவர்....

(பெ. பு. திருக்குறிப்பு தொயு-113)

என்று பாடுகிறார். இறைவன் பேர் ஒலித்த உடனேயே உருகுகின்றவர்கள் சிறந்த அடியார்கள் என்று இங்குப் பேசப்பெறுகிறது. ஒலிக்க என்று கூறியதால், இதனைச் சொல்பவர்கள் இறைச்சிந்தனையோடு இறைவன் பெயர்களைக் கூறினார்கள் என்று சொல்வதற்கில்லை. ஒலித்தல் என்ற சொல்லுக்கு, பொருள் கருதாது ஒலியளவில் பேசப்பெறும் சொற்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். சேக்கிழார் இங்ஙனம் கூறியதற்குத் 'தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்’ என்ற திருவாசக அடியே வழிகாட்டியது போலும்.

திருச்சின்னங்களிலிருந்து எழுகின்ற ஓசையும் ஒலியே ஆகும். தென்னா என்று கூறுபவர்களும் ஒலியளவில் கூறினார்களே அன்றிக் குறிப்பாக இறைவன் பெயரைக் கூறினார்கள் என்பதற்கில்லை. அப்படி இருந்தும் சின்னங்களின் ஒலியும் தென்னா என்ற சொல் ஒலியும் காதில் பட்டவுடன் உருகுதல் இப்பெண்ணின் இயல்பு என்பது தெரிவிக்கப்படுகிறது.

அத்தகைய ஒருத்தியின் வீட்டு வாயிலில் பலர் நின்று ஒலியளவில் இல்லாமல், இறையன்பின் வெளிப்பாடாகப் பொருள் பொதிந்த சொற்களான ‘என்னானை' என் அரையன் 'இன்னமுதன்’ என்பவற்றைத் தனித்தும், கூடியும் கூறியபோதும் அப்பெருமாட்டி எழவில்லை. ஆதலால், இதுவோ துயிலின் பரிசு என்று வியக்கின்றார்கள். 'இத்தகைய மனப்பான்மை உடைய உன்னை எங்கள் சொற்கள் எழுப்பவில்லை என்றால், உன்னை ஆட்கொண்ட துயிலின் பரிசை எங்களால் ஊகிக்க முடிகிறது’ என்பதாம்.

162.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்
கேழ் இல் பரஞ்சோதி கேழ் இல் பரங்கருணை
கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை - ஏழை பங்காளனையே பாடு
ஏல் ஓர் எம்பாவாய் 8

குருகு-நாரை, பறவைப் பொதுப் பெயருமாம். ஏழில்-ஏழு துளைகளையுடைய துளைக்கருவி; நாத சுரம். கேழில்-ஈடு இணையற்ற, வாய்-வாயில். ஆழியான்-ஆக்ஞாசக்கரமுடைய இறைவன். ஏழை-உமை.

சென்ற இரு பாடல்களைப் போலவே இப்பாடலும் புறத்தே நிற்பவர்கள் கூற்றாகவே அமைந்துள்ளது. வீட்டில் வளர்கின்ற கோழி, உறக்கம் கலைந்து கூவியவுடன் மரங்கள் முதலியவற்றில் வாழும் பறவையினங்கள் விழித்து ஒலியெழுப்பத் தொடங்கின. பறவையினங்கள் இவ்வாறு ஒலியெழுப்ப, மக்கள் விழித்தெழுந்து 'ஏழில்’ என்று சொல்லப்படும் நாதஸ்வரத்தையும் வெண் சங்குகளையும் இசைக்கத் தொடங்கினர்.

‘சொற்கள் இல்லாமல் ஓசை அளவிலும் இசை அளவிலும் மேலே கூறிய குருகுகளும் வெண் சங்குகளும் ஒலிக்கின்ற அதே நேரத்தில், ஒப்பு உவமை இல்லாத மாபெரும் கருணையின் வடிவே என்றும், ஒப்பு உவமை இல்லா விழுப்பொருளே என்றும் பொருள் பொதிந்த சொற்களால் அவன் புகழைப் பாடினோம். தோழி! சங்கு முதலியவற்றின் ஓசைக்காவது நீ எழுந்திருந்திருக்கலாம். அதுதான் இல்லையென்றாலும் எங்கள் பாட்டிற்காவது எழுந்திருந்திருக்கலாம். இவை அனைத்தும் சேர்ந்த பொழுதும் நீ எழவில்லை என்றால், இது எப்படிப்பட்ட உறக்கம்! நீ வாழ்வாயாக’

‘விழித்திருக்கின்றபொழுது இறைவனிடத்து ஆழியான் கொண்டிருந்த அன்புக்கு என்னுடைய அன்பு குறைந்ததன்று. ஆழியானாவது ஏதோ ஒரு பொருளை இறைவனிடம் வேண்டி அன்புசெய்தான். இறைவனது அருளைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை. அன்பை அன்புக்காகவே செய்கின்றேன் என்றெல்லாம் சொல்லுவாயே, உனது அன்பு எத்தகையது என்று இப்பொழுது புரிந்துகொண்டோம்.'

'தோழி! அனைத்தையும் அழிக்கும் மகா பிரளயத்தின் போதும், தான் ஒருவனாகவே நின்று அப்பிரளயத்தை ஏவுகின்ற முதல்வன், நாம் வணங்கும் இறைவன். அவ்வளவு பெரியவன் நமக்கு எங்கே அருள்செய்யப் போகின்றான் என்று கவலை கொள்ளாதே. நம்மைப் போன்ற பெண்ணாகிய ஒருத்திக்குத் தன் உடம்பிலேயே பாதியைத் தரும் வள்ளல் அவன். அத்தகையவனைப் பாடுவோம் வா’ என்றனர்.

19ஆம் நூற்றாண்டில் தோன்றிய வள்ளலார் திருவாசகத்தில் நான் என்பதைக் கரைத்துக்கொண்டு மணிவாசகரிடம் ஈடுபட்டு, பன்னாளும் இப்பாடல்களைப் பாடி, இறுதியாகத் திருவாசகம் ஆகிய பழத்தைப் பிழிந்து சாறாக எடுத்தது 'அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை என்பதாகும். இந்தத் தொடர் முழுவதும் மேலேயுள்ள திருவெம்பாவைப் பாடலில் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை’ என்ற அடியில் அமைந்திருப்பதைக் காணலாம்.

கோழி சிலம்புவதும், குருகுகள் சிலம்புவதும் ஏதோ தங்களுடைய குரலை வெளிப்படுத்துகின்றன என்று கொள்ளாமல், கோழியும் குருகும் நாதஸ்வரமும் வெண்சங்கும் தங்களுக்கே உரிய முறையில் இறைவன் புகழைப் பாடுகின்றன என்று குறிப்புப்பொருள் காண்பதில் தவறொன்றுமில்லை.

163

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்

இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய் 9

பிரானாக-தலைவனாக. பாங்கு-உரிமை. தொழும்பு-அடிமை.

சென்ற எட்டுப் பாடல்களும் உறங்கியவள் கூற்றாகவும் அவளை எழுப்புவோர் கூற்றாகவும் அமைந்துள்ளன. அவ்வாறு அமையாமல் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இறைவனை வேண்டுதலை இப்பாடல் பேசுகிறது. உள்ளே இருப்பவள், வெளியே இருப்பவர் என்ற வேறுபாடற்று ஒரு நோக்கத்துடன் ஒரே குரலில் அனைவரும் ஒன்றாகவே பேசுவதை இப்பாடல் வெளியிடுகின்றது.

பாடலின் முதலடி இறை இலக்கணத்தை மிகச் சிறப்பாகப் பேசுகின்றது. பழமை, புதுமை என்ற சொற்கள் ஒப்புநோக்குச் சொற்களே அன்றித் தனித்துவம் வாய்ந்தவை அல்ல. காலம் என்ற ஒன்று இடையீடின்றிச் செல்வதாகும். காலத்திற்குத் தோற்றமோ முடிவோ இல்லை. அதனாலேயே இறைவனைக் காலமே! உனை என்றுகொல் காண்பதே (திருவாச:47) என்று முன்னரும் அடிகளார் கூறியுள்ளார்.

இந்தக் கால ஓட்டத்தில் நேற்றுத் தோன்றியவை இன்று பழமையாகவும், இன்று தோன்றியவை அடுத்த விநாடியே பழைமையானவையாகவும், நாளை தோன்றப் போகின்றவை புதுமையானவையாகவும் பேசப் பெறுகின்றன. வேறு வகையாகக் கூறினால், பழமையை இறந்த காலம் என்றும், புதுமையை எதிர்காலம் என்றும் கூறுவதில் தவறில்லை. எந்த ஒன்றும் இந்த விநாடி தோன்றுகிறது என்றால், அது தோன்றிவிட்ட நிலையில் இறந்த காலமாகவும், தோன்றுவதற்கு முன்னர் எதிர் காலமாகவும் இருத்தலின் பழமை, புதுமை என்பன இந்த இரண்டு காலங்களுள் அடங்கிவிடுகின்றன.

இந்த அடிப்படையை மனத்துள்கொண்டே பெளத்தர்கள் நிகழ்காலம் என்ற ஒன்றை மறுத்து, இறந்த காலம், எதிர்காலம் என்ற இரண்டை மட்டுமே கொண்டனர்.

அடிகளார் 'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே' என்று கூறியது சிந்திக்கத் தக்கது. பொதுவாகப் பொருள் என்று கூறினால், அது திண்மையும் வடிவும் உடையதாக இருத்தல் வேண்டும். இவை இரண்டும் இல்லாத காற்றை, ஒரோவழிப் பொருள் என்று கூறினார்களேனும், அதனைப் பொருள் என்று கூறும் மரபு இல்லை. ஆனால், அடிகளார் விஞ்ஞானி ஆதலால் காற்றையும், காலி இடத்தையும் (empty space) பொருள் என்றே கொள்கிறார்.

பல கோடி ஆண்டுகளின் முன்னர்த் தோன்றிய பிரபஞ்சம், இந்த உண்டைகளின் நடுவே உள்ள காலி இடம் என்பவை என்று தோன்றின என்று கூறும் ஆற்றல் இற்றை நாள் விஞ்ஞானத்திற்கு இல்லை. ஆனாலும், இந்தப் பிரபஞ்சத்திற்குத் தோற்றம் உண்டு என்றே மெய்ஞ்ஞானிகளும் விஞ்ஞானிகளும் கூறியுள்ளனர். எந்த ஒன்றும் தோன்றிற்று என்றால், அது மறைந்தே தீரவேண்டிய கடப்பாடுடையது.

அடிகளார் முன்னைப் பழம் பொருள் என்று குறிப்பிட்டது முக்கூட்டுப் பரிமாணம் உடைய இந்த அண்டத்தையே ஆகும். ஒரு கர்த்தாவால் அண்டம் படைக்கப்பட்டது என்றால், படைக்கப்பட்ட பொருளைக் காட்டிலும் படைத்தவன் முற்பட்டவனாக (பழமையானவனாக) இருத்தல் உறுதி.

இந்தப் பழம் பொருள்கள் அனைத்தும் என்றோ ஒரு காலத்தில் படைக்கப்பட்டவை என்றால், அதற்கு முன்னர் என்ன இருந்திருக்கும் என்ற வினாத் தோன்றுமன்றோ?

அவ்வினாவிற்கு விடை கூறுவார்போல 'உண்மைதான்! கண்ணாலும் கருத்தாலும் காணப்படுகின்ற இப்பிரபஞ்சத்திற்கு முன்னரே ஒரு பழம்பொருள் இருந்தது; இருக்கின்றது; என்றும் இருக்கும் என்கிறார். இப்பிரபஞ்சம் ஒரு காலத்தில் இல்லாமலிருந்தது; இப்பொழுது இருக்கின்றது; என்றோ ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். அதாவது தோற்றம், இருப்பு, மறைவு ஆகிய மூன்று இயல்புகளும் பிரபஞ்சத்திற்கு இயல்பு. இந்த மூன்று இயல்புகளும் இல்லாத ஒரு பழம்பொருளும் உண்டு. இதனைக் குறிப்பிடவே ‘முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே’ என்றார்.

என்றோ ஒரு காலத்தில் தோன்றிய பிரபஞ்சம் நாள்தோறும் புதுமைகள் பல பெற்று விளங்குகிறது. வளர்ச்சி என்பதே புதுமைதான். விரிந்து செல்கின்ற பிரபஞ்சத்தில் பூமி, கதிரவன் போன்ற கோள்கள் நேற்று இருந்த இடத்தில் இன்று இல்லாமல் இடம் மாறி விரிந்து கொண்டே செல்கின்றனவே, அதுவும் புதுமைதானே! இந்தப் புதுமைகளைத் தொடர்ந்து தோற்றுவிக்கின்ற கர்த்தா, புதுமைக்கும் புதுமையன் என்று பேசப்படுகிறான். அவன் என்றும் ஒருநிலைப்பட்டவனாகவே உள்ளான். என்றும் வளர்கின்ற புதுமையிலும் அவன் இடம் பெறுகிறான். ஆதலால், 'புதுமைக்கும் அப்பெற்றியனே’ என்றும் கூறுகிறார்.

‘உறைசேரும்' என்று தொடங்கும் திருவீழிமிழலைப் பதிகத்தில் காழிப் பிள்ளையார் இக்கருத்தைச் சற்று விளக்கமாகவே பேசுகிறார். ‘நிறைசேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிராய், அங்கங்கே நின்றான்’ (திருமுறை: 1-132-4) என்று சொல்லுகின்றார். நிறைசேரப் ‘படைத்து’ என்பதால் படைக்கப்பட்ட பழைய பொருள்களுக்கு முன்னே உள்ளான் என்பது பெற்றோம். ‘உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான் என்று கூறியதால் தோன்றி, வளர்ந்து, மறையும் உயிர் பல்வேறு உடல்களை எடுக்கிறது, அவ்வாறு எடுத்தாலும் உயிர் ஒன்றாகவே உள்ளது. என்றாலும் புல்லாய்ப் பூடாய் என்று கூறுவதுபோல உடம்பு மாற்றம் காரணமாக அந்த உயிர், வளர்ச்சியை அடைகிறது என்பது தெளிவு. எனவே, அந்தந்த உடலிலும் அந்தப் பழைய உயிர் புதிய வளர்ச்சியைப் பெறுதலின் புதுமையாகவே உள்ளது. உயிர் பெற்ற இவ் வளர்ச்சியையே ‘புதுமை’ என்று கூறுகின்றோம். அந்த உயிருக்கு உயிராய் அதனுள் இருக்கும் இறைவன் இந்தப் புதிய வளர்ச்சியில் தானும் இடம் பெறுகிறான் ஆதலின், புதுமைக்கும் புதுமையனாகவே இருக்கிறான்.

தருக்க முறையில் இவ்வாறு சிந்தித்தால் 'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே’ என்று அடிகளார் பாடியது எவ்வளவு பொருத்தமானது என்பது விளங்கும்.

அடுத்து உள்ள ‘உன்னைப் பிரானாக...... பணி செய்வோம்’ என்ற பகுதி பொதுவாக அனைவருக்கும், சிறப்பாக அடியார்களுக்கும் மிகவும் தேவையான பகுதியாகும்.

‘எண்ணித் துணிக கருமம்' (திருக்குறள்: 46) என்றும் இதனை இதனால் இவன் முடிக்குமென்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல் (திருக்குறள்:517) என்றும் அனுபவ ரீதியான ஒரு முடிவைக் குறள் பேசியுள்ளது. இந்தக் கன்னிப் பெண்களைப் பொறுத்தமட்டில் தாங்கள் யார் என்பதை நன்கு யோசித்து, ஒரு முடிவுக்கு வந்து, ‘உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்' என்று கூறியுள்ளார்கள். தாங்கள் யார் என்பதை ஐயம் திரிபுக்கு இடமின்றித் தெளிந்த சிந்தனையுடன் முடிவாக உன் ‘சீரடியோம்’ என்று கூறிவிட்டனர்.

எனவே, அடுத்துச் செய்யவேண்டியதை எண்ணித் துணிகின்றார்கள். சீரடியார்களாகவும் மகளிராகவும் உள்ள அவர்கள் வாழ்க்கை முன்னேறி, முழுப்பயன் தரவேண்டும் என்றால், அதற்கு இன்றியமையாத தேவை ஒன்றுண்டு. வாழ்க்கை முழுமை அடைய ஒரு கணவன் வேண்டும். அப்படிக் கணவனாக வருகின்றவன் இவர்களின் வாழ்க்கைக் குறிக்கோளை ஏற்றுக்கொண்டவனாகவும், அதற்குத் துணை நிற்பவனாகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய ஒருவனைத் தங்கள் சிற்றறிவு கொண்டு தேடியடைதல் இயலாத காரியம். ஆதலால், இதுவரை தங்களுக்கு அருள்செய்து இந்த மனநிறைவோடு வளர்த்து விட்ட இறைவனிடமே இந்த வேண்டுகோளையும் வைக்கின்றனர்.

தங்களுக்கு இறைவன் தரப்போகின்ற கணவனிடம் என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை இதோ பேசுகிறார்கள். 'நின் அடியார் தாள் பணிவோம்’ என்றதால், வருகின்ற அவர்கள் எத்தகையவர்கள், அவர்கள் தங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடியவர்களா என்ற ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கவில்லை. ஏன்? வரப் போகின்றவர்கள் அடியார்கள் ஆதலின் மேலெதுவும் பேசாமல் அவர்கள் தாள் பணிவோம் என்று கூறிவிட்டனர்.

'ஆங்கவர்க்கே பாங்காவோம்’ என்றதால், அடியார்களிடமே சரண்புகப்போவதால் தங்கள் தனித்துவத்தை விட்டுவிட்டு அவர்களோடு ஒன்றிவிடுவோம் என்கிறார்கள்.

இதனைக் கூறியவர்கள் அத்தகைய ஒருவரே தங்கள் கணவராக வரவேண்டுமென்றும் வேண்டுகின்றனர்.

அடுத்து உள்ளது 'அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்’ என்பதாகும். இந்த அடியில் 'உகந்து’ என்ற சொல்லை, உகந்து சொன்ன பரிசு என்றும், சொன்ன பரிசே உகந்து பணிசெய்வோம் என்றும் இரண்டு இடங்களிலும் கூட்டிப் பொருள் செய்வது நலம். அடியார்களாகிய தமக்கு இறையடிமை பூண்ட ஒருத்தியே மனைவியாகக் கிடைத்துள்ளமையின், அவளிடம் எதைக் கூறினாலும் மன மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள் என்பதை உகந்து சொன்ன பரிசு என்பதற்குப் பொருளாகக் கொள்ளலாம்.

ஒருவர் தம் விருப்பத்தை எவ்வாறு கூறினாலும், மனைவியாக இருப்பவள் அதனைச் செய்யும் கடப்பாடுடையவள் என்பது, இந்நாட்டில் ஒரு காலத்தில் இருந்த கொள்கையாகும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தல் என்பது இந்தக் கொள்கையாளரின் அடிப்படைத் தத்துவம். இந்த அடிப்படையை மாற்றிப் புதிய முறையில் பேசுகிறார்கள் இப்பாடலில் வரும் பெண் அடியார்கள். உகந்து பணி செய்வோம் என்று அமைத்துக்கொண்டால் இப்புதிய பொருள் கிட்டும். அதாவது, அடியார்களாகிய கணவன்மார்கள் எந்தக் கட்டளை இட்டாலும் மனம் ஒப்பி மிக்க மகிழ்ச்சியோடு அப்பணியை நிறைவேற்றுவோம் என்றால், கணவன்மாரிடத்து உள்ள நம்பிக்கையும், அவர்கள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் இம்மகளிருக்கு இருந்த மகிழ்ச்சியும் இதனால் பேசப்பெற்றன.

மனித மனத்தின் இயல்பு வினோதமானது. 'அரிது பெற்றிடினும் பெற்றதில் விருப்பம் அறப் பெறாதன விரும்பும் உயிர்கள்' என்றார் ஒரு பெரியவர். குறை இல்லாத மனம் இவ்வுலகில் இல்லை. அப்படியிருக்க இந்தச்சீர் அடியார்களாகிய பெண்கள், அடியிார்களாகிய கணவன்மார்கள் தங்களுக்குக் கிடைத்துவிட்டால் எவ்விதக் குறையும் இலோம் என்று சொல்வது அவர்கள் மன நிறைவையும் பண்பாட்டையும் விளக்குகின்றது. அடியார்களுக்குக் குறையென்பதே இல்லை என்பதைக் 'கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்' (பெ.புரா திருகூட்டச் சிறப்பு-8) என்ற தொண்டர்சீர் பரவுவாரின் அடி விளக்கமாகச் சொல்கிறது.

164.

பாதாளம் ஏழினும் கீழ் சொல்கழிவு பாத மலர்
போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன்(ம்) தொண்டர் உளன்
கோது இல் குலத்து அரன்தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏது அவன்பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் 10

சொற்கழிவு-சொல்லெல்லையைக் கடந்த இடம். வேதமுதல் பிரணவம். பிணாப்பிள்ளை-பெண்பிள்ளைகள். ஓத உலா சொல்லில் அடங்காத. பாடிக்கொண்டு நீராடச் செல்கின்ற பெண்கள் குளத்திற்குச் சென்றபோது, தங்களுக்கு முன்னரே ஒரு மங்கையர் கூட்டம் அங்கிருப்பதைக் கண்டனர். இவர்களைப்போலத் தனித்தனி வீடுகளிலிருந்து வந்தவர்கள் அல்லர், பிணாப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் அப்பெண்கள்.

கன்னிமாடங்களில் இருந்துகொண்டு திருக்கோயில் பணியையே தம் முழுநேரப் பணியாகக் கொண்டவர்கள் அப்பிணாப் பிள்ளைகள். கன்னிப் பருவத்திலேயே திருக்கோயில் பணிக்கென்று தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இவர்கள், தம் போன்றவர்கள் தங்குமிடமாகிய கன்னிமாடத்தில் முழுமையாகத் தங்கிவிட்டனர்.

நம்பியாரூரர் திருமணம் செய்துகொண்ட பரவையாரும் சங்கிலியாரும் இவ்வகையைச் சேர்ந்தவர்களே ஆவர். இங்ஙனம் கன்னி மாடங்களில் தங்கியவர்களில் ஒருசிலர் தாங்களாகவே அடியார் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணம் செய்துகொண்டு அவருடனேயே வாழ்வதும் உண்டு. அத்தகையவர்களையே 'பிணாப்பிள்ளைகாள்’ என்று அடிகளார் குறிப்பிடுகின்றார்.

நாம் காணக்கூடிய பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒலி வடிவும் பொருள் வடிவும் கொண்டனவாகும். இவ்வடிவுகள் இரண்டும் அவற்றின் இயல்புகளாகும். வெற்றிடம் என்று சொல்லப்படுகின்ற ஆகாயத்திலும் அநாதியான சப்தம் உண்டு என்று இன்றைய விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது. இதனையே அடிகளார் ‘சொற்கழிவு' என்றும் ‘பொருள் முடிவு’ என்றும் கூறினார்.

'சொற்கழிவு' என்றதால் சப்தப் பிரபஞ்சத்தையும் ‘பொருள்முடிவு’ என்றதால் அர்த்தப் பிரபஞ்சத்தையும் கூறினார். இதன் மூலம் இறைவன் சப்த, அர்த்தப் பிரபஞ்சங்களைக் கடந்து நிற்பவன் என்பதையும் கூறினார் ஆயிற்று.

பாதமலர் கீழுலகம் ஏழையும் கடந்து, சுட்டப்படும் சொல்லையும் கடந்து இன்னும் கீழே சென்றுள்ளது. அவனுடைய திருமுடி நிலையியல் பொருள், இயங்கியல் பொருள், வன்பொருள், நுண்பொருள் ஆகிய அனைத்துப் பொருள் வடிவையும் கடந்து நிற்பதாயுள்ளது.

உண்மையைக் கூறுமிடத்து ஒரு சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஒரு குறிப்பிட்ட சொல் குறிப்பிட்ட பொருளைப் பண்டு தொட்டு மரபுபற்றிக் குறிப்பதாகவே நம் முன்னோர் கருதினர்; அதனை இடுகுறி என்றே கூறினர். சில சமயங்களில் இச்சொல் அப்பொருளைச் சுட்டாமல் போவதும் உண்டு. இவற்றையெல்லாம் மனத்திற்கொண்ட தொல்காப்பியனார் 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன (தொல்:சொல்-5-1) என்று கூறிப்போனார்.

இந்த அடிப்படையை மனத்துட்கொண்டு பார்த்தால், பாதமலர் சொற்கழிவு என்று கூறுவதன் அடிப்படையை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். பாதம் என்ற சொல் திருவடி ஆகிய பருப்பொருளையும், 'பாதாளம் ஏழினும் கீழ் என்ற தொடர் நீட்டல் அளவையையும் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருத்தமாகத் தெரியவில்லை. அதேபோலப் ‘புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே' என்பதும் உயரத்தின் அளவையோ வடிவத்தையோ குறிப்பதாகக் கொள்வதும் சரியாகத் தோன்றவில்லை. பாதாளம் ஏழினும் கீழ் என்றதால் இவ்வாறு பொருள் கூறினர்போலும்.

மனத்தில் தோன்றும் எண்ணம், கற்பனை ஆகியவற்றிற்குச் சொல் ஒரளவு வடிவு கொடுக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், உணர்வின் அடிப்படையில் தோன்றும் எண்ணங்களுக்குச் சொல் வடிவு கொடுக்க இயலுவதில்லை. 'கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும், நாடனொடு நட்பு நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆர் அளவின்று (குறுந்தொகை:3) என வரும் சங்கப்பாடல் உணர்விற்கு அளவு கூற முடியாமையை நன்கு உணர்த்துகின்றது. கண்ணால் காணக்கூடியதை வைத்துக்கொண்டு காண முடியாத பருப்பொருளல்லாத நட்பின் பெருமையை இப்பாடல் குறிக்கின்றது.

சொல்லின் மூலம் எவ்வளவு அடுக்கிக் கூறினாலும் அது எல்லையுடையதாக ஆகிவிடுகின்றது என்பதை மறுத்தற்கில்லை. இந்தப் பிரச்சினையைப் போக்கிக் கொள்ள ஒரே வழிதான் உண்டு. அந்த அடிப்படையில் ‘சொற்கழிவு’ என்று கூறுவதன்மூலம் எல்லை கடந்து என்ற பொருளை அடிகளார் பெறவைக்கின்றார்.

எங்கும் நிறைந்துள்ளதும் வடிவு கடந்ததுமாகிய பரம்பொருளுக்கு, மக்கள் மனத்தில் பதியவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வடிவு கற்பிக்கின்றார் அடிகளார். அதனாலேயே பாதமலர், புனைமுடி என்ற சொற்கள் மூலம் அவ்வடிவிற்கு ஒரு எல்லை காட்ட முயல்கிறார். எல்லையாக ஒன்றைக் கூறிவிட்டால் அனைத்தையும் கடந்து நிற்கும் அந்தப் பொருளின் இயல்பிற்கு இழுக்கு வந்துவிடும் என்ற நினைவு தோன்றவே, பாதமலர் சொற்கழிவு என்றும் புனைமுடி பொருள்முடிவே என்றும் கூறினாராயிற்று.

'பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்’ என்ற தொடரில் மிக நுண்மையான பொருள் அமைந்திருத்தலை அறிதல்வேண்டும். திருமேனி ஒன்றல்லன் என்றதால், உலகிலுள்ள எல்லாப் பொருளும் அவன் திருமேனி ஆகும். அதாவது, அவன் வடிவே ஆகும் என்பது கருத்து.

இவ்வாறு கூறியவுடன் ஒரு திருமேனி என்றால், அவன் ஒருவனுடைய வடிவையே அது குறிக்கும் என்று நினைந்துவிட வேண்டா. அந்த ஒரு திருமேனியிலும் ஒரு பகுதி சக்தியின் வடிவாகும் என்று கூறுகிறார்.

பொருள் (matter) , சக்தி (energy) என்ற இரண்டின் கூட்டாகவே அனு முதல் அண்டம்வரையுள்ள அனைத்தும் அமைந்திருக்கின்றது என்பதை இற்றைநாள் விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கின்றது. பொருளிலிருந்து சக்தியைத் தனியே பிரிப்பது ஏறத்தாழ இயலாத காரியம். இந்த அரிய கருத்தையே, திருமேனி ஒன்றல்லன் பேதை ஒருபால் உண்டு என்கிறார்.

அடுத்துள்ள அடி 'வேதம் முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா'தவன் என்பதாகும். வேதம் யாராலும் இயற்றப்படாதது என்ற பொருளில் அபெளர்ஷேயம் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. வேதத்தை அடுத்து, நுண் உடம்புடன்(சூக்கும சரீரத்துடன்) உள்ள விண்ணோரைக் கூறினார்; அதனை அடுத்துப் பருப்பொருளாக உள்ள மண்ணோரைக் கூறினார். இவ்வாறு கூறியதன் நோக்கம் ஒன்று உண்டு. மண்ணோர், காலம், இடம் (time and space) என்ற இரண்டிற்கும் கட்டுப்பட்டவர் ஆவர். தேவர்கள் காலத்திற்குக் கட்டுப்பட்டாலும் இடத்திற்குக் கட்டுப்படாதவர் ஆவர். வேதம், காலம் இடம் இரண்டையும் கடந்து நிற்பது. ஒன்றுக்கொன்று நுண்மைத்தாய மண் முதல் வேதம் வரையுள்ள அனைத்தையும் கடந்து நிற்கின்றான் என்ற கருத்தைத்தான் ‘ஓத உலவா' தவன் என்றார்.

இவ்வாறு கூறியவுடன் மிகத் தாழ்ந்தவர்களாகிய நமக்குக் காலம், இடம் என்பவற்றைக் கடந்து நிற்கும் அவன் பயன்பட மாட்டான் என்ற அச்ச உணர்ச்சி தோன்றுதல் இயல்பே ஆகும். இந்த அச்சம் காரணமாகவே அவனை வழுத்துவதைச் சாதாரண மக்கள் விட்டுவிடுவர். மனித மனத்திற்கு ஓர் இயல்பு உண்டு. தன் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றை அது சிந்திப்பது கடினம், அந்த ஒன்று தனக்கு உதவும், பயன்படும் என்ற நினைவு தோன்றினால் அந்தப் பொருளை மனித மனம் நாடிச்செல்லும், இக்குறைபாட்டினை நன்கு அறிந்த அடிகளார், நம் அச்சத்தைப் போக்க ஒன்றைச் சொல்கிறார். ஓத உலவாதவன் அவன் என்பது உண்மைதான்; ஆனால், அவனிடம் மற்றோர் இயல்பும் உண்டு. உயிர்கள்மாட்டுக் கொண்ட கருணையால் கரிக்குருவிக்கும் பன்றிக் குட்டிக்கும் அருள் சுரப்பவன் என்பதை நமக்கு நினைவூட்டுவார்போல 'ஒரு தோழன்’ என்றார். தோழனாக வரினும் என்றோ ஒரு முறை வந்து சில நேரம் உடனிருந்து பிறகு பிரிந்து சென்றுவிடுவானோ என்ற அச்சம் தோன்றாதிருக்கத் 'தொண்டர் உளன்’ (தொண்டர்களிடையே எப்போதும் உள்ளான்) என்றும் கூறினாராயிற்று. 'ஒரு தோழம்’ என்ற பாடமும் உண்டு. தோழம் என்ற சொல் மிகப் பெரிய பேரெண்ணை ஆதாவது 'எண்ணிலி’ என்பதைக் குறிப்பதாகும் இச் சொல். 'ஓத ஒரு தோழம்’ என்றதால் அவனைப் பற்றியும், அவன் பெருமைகளைப் பற்றியும் ஓதத் தொடங்கினால் எண்ணிலடங்காதவனாவான் என்ற பொருளைத் தந்து நிற்கும்.

நீராட வந்துநின்ற பெண்கள் கோயில் பிணாப் பிள்ளைகளைக் கண்டவுடன் தங்களையும் அவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். காலை நேரத்தில் ஒன்றுகூடி இறைவன் புகழைப் பாடிக்கொண்டு நீராடுகின்ற இவர்கள் அப்பணி முடிந்து வீடு திரும்பியதும் தத்தம் பணிகளில் ஈடுபடுவர். இறைவனைப்பற்றிச் சிந்திக்கவோ அவன் இயல்புகளை ஆராயவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. ஆனால், கன்னி மாடங்களில் தங்கி இறை பணியிலேயே நாள் முழுவதையும் செலவிடும் இப்பிணாப் பிள்ளைகள், அவனைப்பற்றிச் சிந்திக்க மிகுந்த வாய்ப்புடையவர்கள் ஆயிற்றே. எனவே, தங்கள் மனத்தில் தோன்றிய ஐயங்களை அவர்கள்பால் கேட்டுத் தெளியலாம் என்ற எண்ணத்தில் இதோ பேசுகின்றனர்.

'கோயில் பிணாப் பிள்ளைகாள்! ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? (அவனுக்கு) உற்றார் யார்? அயலார் யார்? அவனைப் பாடும் பரிசு எது?’ என்று தம் மனத்தில் இதுவரை முடங்கிக் கிடந்த ஐயங்களை வெளியிடுகின்றனர்.

அதிகம் பழக முடியாமல், ஆனால், நம்மால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒரு பெரியவரிடம் நெருங்கிப் பழகுகின்றவர்களைக் கண்டவுடன், அப்பெரியவரைப்பற்றி அறிந்து கொள்ள நாம் முயல்வது இயல்பன்றோ? இந்த இயல்பை அடிப்படையாகக் கொண்டே பிணாப் பிள்ளைகளிடம் நீராட வந்தவர்கள் வினாக்களைத் தொடுக்கின்றனர்.

இவ்வினாக்களைச் சற்றுச் சிந்தித்தால் இப்பெண்களின் மனநிலையை ஒருவாறு புரிந்துகொள்ள முடியும். எங்கும் எல்லாவற்றிலும் நிறைந்தும் அவற்றை கடந்தும், கால தேச வர்த்தமானங்களைத் தாண்டி நிற்கும் பொருள் அது என்ற பொருள்பட இதுவரை பாடிக்கொண்டு வந்தவர்கள் இவர்கள். அவ்வாறு பாடுகின்றவரையில் அப்பொருளினிடத்து அச்சம் கலந்த பக்தி தோன்றிற்றே தவிர நெருக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. இப்பொழுதுதான் அவன் ‘தொண்டருளன் ஒரு தோழன்’ என்ற புதிய சிந்தனை தோன்றிற்று. திருவருட் பயனாகத் தோன்றிய இந்தப் புதிய சிந்தனை மனத்திடை வந்ததும், அவனிடம் நெருக்கம் மிகுதியாயிற்று; நெருக்கம் மிகுதியானவுடன் அவன்பற்றிய சில கூறுகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இவ்வினாக்கள் வெளிப்பட்டன.

இந்த எண்ணம் தோன்றியவுடன் எல்லா உயிரிலும், எல்லா உடம்பிலும் நீக்கமற நிறைபவன் அவன் என்ற எண்ணம் பின்னடைந்துவிடுகிறது. எனவே, அவனுக்கு நண்பர்கள் யார்? அவனை அறியாமல், அறிய முயலாமல் இருக்கும் அயலார் யார்- என்ற வினாக்களைத் தொடுக்கின்றனர்.

இதுவரை அவர்கள் பாடிவந்தது, கற்பனைக்கு அப்பாற்பட்டுள்ள ஒருவனின் பெருமையைக் குறிப்பிடு வதாகும். இப்பொழுது தம்முள் ஒருவனாக நெருங்கிவிட்ட அவனைப் பழைய முறையில் வாழ்த்திப் பாடுவது பொருந்தாதோ என்று ஐயுறுகின்றனர். எனவேதான், அவனைப் பாடும் பரிசு எது என்று பிணாப்பிள்ளைகளை வினவுகின்றனர்.

165.மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போல்
செய்யா வெள் நீறு ஆடி செல்வா சிறு மருங்குல்
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஒர் எம்பாவாய்
11


மொய்-(வண்டுகள்) மொய்க்கின்ற. மருங்குல்-இடை. எய்யாமல்-இளைக்காமல்.

அகன்ற பெரிய பொய்கையிடத்து முகேரெனப் பாய்ந்து கையால் குடைந்து முன்னேறிச் செல்லுதல் உடம்பின்வசப்பட்டதாகும். இந்தச் செயலில் கை, கால் முதலிய உறுப்புகள் பல்வேறு தொழில்களைச் செய்வதால் குளத்தில் பாய்தலும் முன்னேறிச் செல்லுதலும் இயன்றது என்க.

இந்த நிலையில் வாய் தனக்கென ஒரு பணியை மேற்கொண்டுள்ளது. சாதாரணமாக நீரில் குளிப்பவர் ஆ...ஊ... என்று ஆரவாரித்துத் தம் மகிழ்ச்சியை வெளியிடுவர். நீராடுவதால் உடலுக்கு ஏற்படும் இன்பத்தை, அவர்களின் வாய் ஆரவாரம் வெளிப்படுத்தும்.

இந்தச் சராசரி இயற்கைக்கு மாறாக, இப்பெண்கள் நீரில் துளையமாடும்போதும், அவர்கள் வாய், ஆரவாரம் செய்யாமல் இறைவன் திருவடிப் புகழைப் பாடகின்றது என்ற கருத்தை 'உன் கழல்பாடி' என்ற சொற்களால் பெறவைத்தார்.

தம்மாட்டு உள்ள இறையன்பு வலுப்பெற்றதற்குரிய காரணம் தங்கள் பரம்பரைச் சிறப்பே என்பதை நினைவூட்டவே 'வழியடியோம்’ என்றனர்.

கழலைப் பாடும் இந்தப் பணி, அவர்கள் நீராடும் பொழுதுதான் நடைபெறுகிறது போலும் என்று கருத வேண்டா. 'கழல்பாடி' என்ற தொடரை அடுத்துவரும் 'வாழ்ந்தோம் காண்’ என்பதனோடு சேர்த்தல் வேண்டும். பாடி என்ற வினையெச்சம் வாழ்ந்தோம் என்ற வினைகொண்டு முடிகிறது. வாழ்தலாகிய இக்காரியம் நடைபெற, பாடுதலாகிய காரணம் உதவிற்று என்க. வாழ்ந்தோம் என்ற சொல்லுக்கு உடல் அளவில் வாழ்கின்றோம் என்று பொருள் கூறல் சரியன்று. மேலும் மேலும் ஆன்ம வளர்ச்சியடைகின்ற தன்மையையே வாழ்வு என்ற சொல் குறிப்பிடுகின்றது.

நின் கழல்பாடி வாழ்ந்தோம் என்று கூறுவதால் உன் திருவடிகளைப் பாடப்பாட எங்கள் வாழ்வு மேலும் மேலும் வளர்ச்சி அடைகின்றது என்பதே இதன் உண்மைப் பொருளாகும். பாடி என்ற இறந்தகால வினையெச்சத்திற்கு ஏற்ப, வாழ்ந்தோம் என்ற இறந்த கால வினைமுற்று வந்ததேனும், பாட வாழ்கின்றோம் என்பதே இதன் பொருளாகும்.

‘ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்’ என்ற தொடர் பல்வேறு வகையாகப் பொருள்கொள்ள இடந்தந்து நிற்கின்றது. சைவ சித்தாந்த அடிப்படையில் பலரும் இதற்குப் பொருள் கூறியுள்ளனர். இத்தொடருக்கு வேறு வகையாகப் பொருள்காண்டலும் கூடும் எனத் தோன்றுகிறது.

படைத்தல், காத்தல் முதலிய ஐந்தொழில்களையும் இறைவன் விளையாட்டாகச் செய்கிறான் என்பதைத் தமிழர் தொன்றுதொட்டே கூறிவந்தனர். சைவர்கள்மட்டுமல்லாமல் வைணவர்களும் இக்கருத்தைக் கூறியுள்ளனர் என்பதை 'அலகிலா விளையாட்டு உடையார்’ என்ற கம்பன் பாடல் அறிவுறுத்தும்.

இவ்விளையாட்டின் பயன் ஒன்று உண்டு என்பதை அடிகளார் இங்குக் குறிப்பிடுகின்றார். பொதுவாக விளையாட்டில் ஏற்படும் இன்பம் விளையாடுபவனுக்கே நிகழ்வதாகும். ஆனால், இறைவன் விளையாட்டு அவனுக்கு எவ்வித இன்பத்தையோ வேறு எதனையோ தருவதில்லை. எதனாலும் பற்றப்படாதவன் ஆதலால், அவன் ஏன் இந்த விளையாட்டை நிகழ்த்த வேண்டும் என்ற வினாத் தோன்றுமன்றே? அதற்கு விடையாக, 'ஆட்கொண்டு அருளும் விளையாட்டு’ என்றார். இறைவன் ஆற்றும் ஐந்தொழில்களும் அவன் அருள் காரணமாக உயிர்களை ஆட்கொள்வதற்கே நிகழ்த்தப்பெறுகின்றன என்பது பெற்றாம்.

விளையாட்டு ஒன்றே ஆயினும் அதனால் பயன்பெறுவோர் அனைவரும் ஒரே நேரத்தில், ஒரே பயனை அடைவார்கள் என்பது உறுதியில்லை. அவரவர் மன நிலைக்கும் தகுதிக்கும் ஈடுபாட்டிற்கும் ஏற்ப அவர்கள் அடையும் பயன் மாறுபடுகின்றது.

அதனைக் கூறவந்த அடிகளார் 'உய்வார்கள் உய்யும் வகை எல்லாம்' என்று கூறினார். உய்பவர்கள் பலராயினும் ஒருவர் பெற்ற உய்வு மற்றவருடைய உய்வைப்போல் அன்று என்பது பெற்றாம். ஒரே உயிர் பிறவிகள்தோறும் இந்த உய்வைப் பெற்று, மேலும் மேலும் வளர்ச்சியடைகின்றது என்பதை ‘வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்’ என்று கூறினார்.

இதிலும் ஒரு சிறப்புண்டு. படைத்தல் முதலிய தொழில்கள் அனைவருக்கும் பொதுவாகவே நடைபெறுகின்றன. அவனுடைய அருளும் பொதுவாகவே அனைத்து உயிர்களுக்கும் வழங்கப்பெறுகின்றது. அப்படியானால் இந்த உயிர்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அந்த அருளைப் பெற்று உய்யலாமே என்றால், அது இயலாத காரியம் என்கிறார். ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் குவளை, செம்பு, தவலை என்பவற்றைக் கொண்டுசெல்பவர்கள் அப்பாத்திரங்களுக்கு ஏற்பத்தான் நீரை முகக்க முடியும். இதே கருத்தை அடிகளாரும்,

வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை

வாரிக்கொண்டு


விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் விதி

இன்மையால்


(திருவாச:417)

என்று பாடியுள்ளதில் காணலாம்.

‘உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்’ என்பதால் நின் அருள் காரணமாகப் பல படிகளில் முன்னேறுபவர்கள்போல நாமும் அந்தப் படிகளைக் கடந்து, இப்பொழுது இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்’ என்பதும் பொருளாயிற்று.

உய்ந்தொழிந்தோம் என்று கூறியதால், நாங்கள் உய்ந்துவிட்டோம் என்று கூறுவது, தற்புகழ்ச்சியின் பாற்பட்டதாகிவிடுமோ என்று ஐயுறத் தேவையில்லை. ‘இறுமாந்து இருப்பன் கொலோ ஈசன்தன் பல்கணத்து எண்ணப்பட்டு’ (திருமுறை:49.11) என்று நாவரசர் கூறியது இங்கு நோக்கத்தக்கது. அவன் திருவருளால் உய்கதி அடைந்துவிட்டோம் என்று பேசும்போது அங்குத் தற்புகழ்ச்சிக்கோ தருக்கடைவதற்கோ இடமில்லை என்க.

அடுத்து நிற்பது ‘எய்யாமல் காப்பாய்' என்பதாகும். ‘ஐயனே! எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தேன்; இனிப் பிறப்பெடுத்து அடையவேண்டியது ஒன்றுமில்லை. மறுபடியும் பிறப் பெடுத்து இளைத்துவிடாமல் எம்மைக் காப்பாயாக’ என்று வேண்டுகின்றனர்.

166. ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல்மேல் வண்டு ஆர்ப்பப்
பூத் திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன் பாதம்
ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் 12

ஆர்த்த-கட்டிய. ஆர்த்த ஆடும்-ஆரவாரித்து ஆகின்ற. தீர்த்தன்-தூய்மையானவன். குவலயம்-உலகம். கரந்தும்-மறைந்தும். விளையாடி-விளையாடுபவனே. வார்த்தையும்-புகழ்.

நாம் விரும்பினும் விரும்பாவிடினும் நம்மைப் பிடித்திருக்கின்ற இப்பிறவித் துயர் கெடவேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. தில்லைச் சிற்றம்பலத்து, தீயைக் கையிலேந்தி ஆடும் இறைவனை, தீர்த்தம் எனக் கருதி அவனிடத்து மூழ்கி எழவேண்டும் என்க.

தீர்த்தன் என்ற வடசொல்லுக்குத் தூய்மை வடிவானவன் என்ற பொருள் இருத்தலின் மாசுடைய பிறப்பைக் கழுவ இறைவனாகிய தீர்த்தத்தில் ஆடுதல் ஒன்றே வழி என்கின்றார்.

தீயாடும் தீர்த்தன் என்றமையின் ஒன்றுக்கொன்று முரண்பட்டதும் ஒன்றையொன்று அழிக்கக்கூடியதுமாகிய நீரையும் தீயையும், அவற்றின் இயல்பை மாற்றித் தன்பால் கொண்டவன் என்ற கருத்தும் பெறப்படுகிறது.

அன்றியும் தீயாடும் தீர்த்தன் என்று கூறியது முரண்பாட்டினிடையே முழுமுதலைக் காணும் சிறப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

சென்ற பாட்டில் கூறியது போலவே உடம்பு நீருள் நனையும்போது, நனைபவர்களின் மனமும் சொல்லும் இறைவன் திருவருளில் நனையவேண்டும் என்பதைக் கூறினாராயிற்று.

அவனைப் பற்றிப் பேசும் வார்த்தைகள் எவையாக இருத்தல் வேண்டும் என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல, இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் விளையாட்டாகப் படைத்து, காத்து, கரப்பவனைப்பற்றிய வார்த்தைகளாக இருக்க வேண்டும் என்பதையும் கூறினார்.

167. பைம் குவளைக் கார் மலரால் செம் கமலப் பைம் போதால்
அங்கம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்
தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எம் கோனும் போன்று இசைந்த
பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் 13

குருகு-நாரை, வளையல். அரவம்-பாம்பு ஒசை. அங்கம்அவயவம் ; அழகு. பின்னும்-மேலும், பின்னிக்கிடக்கும். மலம் அழுக்கு, ஆணவமலம். சிலம்ப-ஒலிக்க.

சென்ற 165ஆம் பாடலில் 'எமை எய்யாமல் காப்பாய்’ என்று வேண்டினார்கள். எய்யாமல் காக்க வேண்டும் என்று வேண்டுதற்கு உரியு காரணத்தையும் அப்பாடலிலேயே கூறிவிட்டனர். 'வழியடியோம்' என்று கூறிவிட்டமையின் தங்களை எய்யாமல் காக்கவேண்டிய பொறுப்பு அவனுடையதாகும் என்று உறுதிபடக் கூறினர்.

இந்த வேண்டுதலின் பின்னர் அவர்கள் மனநிலையில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருத்தல் வேண்டும். அந்த வளர்ச்சியின் பயனாக எதிரே உள்ள குளத்தைப் புதிய நோக்குடன் காண்கின்றனர். இதுவரையில் முகேரெனப் பாய்ந்து விளையாடுவதற்கு இடமாக இருந்த அக்குளம், இப்பொழுது ஒரு புதிய காட்சியை நல்கத் தொடங்கிற்று. பல்லாண்டுகளாக அவ்வூரில் அக்குளம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறது. தாமரைப் பூ கருங்குவளைப் பூ பறவைக் கூட்டங்கள், நீர்ப் பாம்புகள் என்பவை அக்குளத்தில் என்றுமே இருந்துவருகின்றன.

ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு குளத்தருகே வந்ததை 163ஆம் பாடல் முதல் பார்க்கிறோம். அந்த நிலையிற்கூட இந்தப் பழைய குளம் புதுக் காட்சியை அவர்களுக்கு நல்கியதாகத் தெரியவில்லை.

தாங்கள் வழியடியார்கள் என்ற நினைவு அவர்கள் மனத்திடைத் தோன்றலாயிற்று. பரம்பரையாகச் சில பண்புகள் தொடர்ந்து வருகின்றன என்பதும் இவற்றைத் தாங்கிநிற்கும் ஜீன்கள் ஒவ்வொருவர் உடம்பிலும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றிற்குரிய பண்புகள் மிகுந்து காணப்படும் என்பதும் விஞ்ஞானத்தால் கண்ட உண்மை. இதனை நம் முன்னோர் என்றோ அறிந்திருந்தனர். ஆதலால்தான், ‘பழ அடியார்' என்றும் 'வழி அடியோம்’ என்றும் பாடல்களில் அடிக்கடி பேசப்பெறுகிறது.

வழி அடியோம் என்ற நினைவு இப்பெண்களுக்கு வரும்வரை துளையமாடுகின்ற குளமாகவே அக்குளம் காட்சியளித்தது. இந்நினைவு வந்தவுடன் குளம், குளமாக மட்டும் காட்சி அளிக்கவில்லை. மாதொரு கூறனாகவும் காட்சியளிக்கத் தொடங்கிற்று.

ஒரே பொருள் மாறுபட்ட இரண்டு பொருள்களாகக் காட்சியளிப்பது உண்டா என்ற வினாத் தோன்றும். இவ்வினா நியாயமானதே. காண்பானுடைய மனபபக்குவத்திற்கு ஏற்பக் காணப்படுபொருள் காட்சியளிக்கும். இம்மகளிர், உலகியல் நிலையில் நின்றபொழுது வெறும் குளமாகவும், மலர்கள் குருகுகள் பாம்புகள் முதலியவை இருந்தபடியேயும் காட்சியளித்தன. வழி அடியார்களுக்கு உரிய மனப்பக்குவம் வளரத் தொடங்கியவுடன் அதே குளம் இறைவன் இறைவியாகவும் காட்சி அளித்தது.

இவர்கள் இன்னும் ஓரளவு வளர்ந்திருப்பார்களேயானால், அவர்கள் பார்வையில் குளம் தென்பட்டிராது. அதற்குப் பதிலாக இறைவன் இறைவியாகவே காட்சியளித்திருக்கும்.

பொருள்களையெல்லாம் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே மறைந்து நிற்பவனல்லவா அவன்? சாதாரணப் பார்வையில் பொருள்கள்மட்டும் கண்ணில் படுகின்றன. பக்தி மீதுர்ந்தவர் பார்வையில் பொருள்கள் மறைந்து உள்ளே உறையும் இறைவன் காட்சி நல்குகின்றான்.

பொருள், பொருளாகத் தெரிவது முதல்நிலை; பொருள் மறைந்து, இறைவன்மட்டுமே தெரிவது இறுதிநிலை. பொருளும் உள்உறையும் இறைவனும் தெரிவது இடைப்பட்ட நிலை.

‘பார்க்கின்ற மலர் ஊடு நீயே இருத்தி’ என்று தாயுமானவ அடிகள் பேசுவது இந்த இடைப்பட்ட மனநிலையைக் குறிப்பதாகும். அவர்க்கு மலரும் தெரிகிறது; அதனுள் இருக்கும் இறைவனும் தெரிகின்றான். அதனாலேயே ‘மலரூடு’ என்று பாடினார்.

இப்பெண்களைப் பொறுத்தமட்டில் ஓரளவு வளர்ச்சியடைந்து இந்த நிலையை எய்திவிட்டனர் ஆதலால், குளம் 'எங்கள் பிராட்டியும் எங்கோனு'மாகக் காட்சி அளிக்கிறது.

செங்கமல மலர் இறைவனது திருமேனியைக் காட்டி நிற்கின்றது, பைங்குவளை மலர் நீலமேனி வாலிழையைக் காட்டி நிற்கின்றது; 'குருகினம்’ என்ற சொல் பறவைக் கூட்டங்களையும், அன்னை கையில் அணிந்துள்ள வளையல்களையும் காட்டி நிற்கின்றது; ‘அரவம்’ குளத்திலுள்ள பாம்புகளையும், மகளிர் தம்முள் எழுப்பும் பேச்சு ஒலியையும், இறைவன்மேலுள்ள பாம்புகளையும் காட்டி நிற்கின்றது.

மனிதர்களுக்கு உடம்புபற்றிய புற அழுக்கும், உயிர் பற்றிய அக அழுக்கும் இயல்பாகவே அமைந்துள்ளன. புற அழுக்கைப் போக்கக் குளம் உதவுகிறது; அக அழுக்கைப் போக்கிக்கொள்ள இறைவன் உதவுகிறான்.

‘எம்கோனும் போன்று இசைந்த பொங்கு மடு' என்ற தொடரில் போன்று என்ற உவமை உருபு வருவதால் குளத்தை இறைவனுக்கு உவமையாகக் காட்டி, அவ்வாறே பலரும் பொருள் கூறியுள்ளனர்.

இவர்கள் மன வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு பார்த்தால், ஒரே நேரத்தில் குளம் குளமாகவும், இறைவன் இறைவியாகவும் காணப்படுதலை அறிய முடியும். இவ்வாறு பொருள் செய்யும்போது 'எம்கோனும் போன்றிசைந்த மடு’ என்பதற்கு எம்கோனோடு பொருந்தி இசைந்துள்ள மடு என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.

168. காது ஆர் குழை ஆடப் பைம் பூண் கலன் ஆடக்
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல் ஆடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப் பொருள் ஆமா பாடிச்
சோதி திறம் பாடிச் சூழ் கொன்றைத் தார் பாடி
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய்
14

குழை-காதணி. கலன்-அணி. கோதை-மாலை. அப்பொருள் ஆமாபாடி-இறைவன் அகரப் பொருளாய் இருப்பதைப் பாடி; அந்தம் ஆமாபாடி-இறுதியாயிருப்பதையும் பாடி. பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை-இரும்பைப் பொன்னாக்கினாற் போலச் சிவஞானத்தின்னமுதம் ஊட்டி,

இப்பாடலின் தனிச்சிறப்பு மனம், மொழி, மெய் என்ற மூன்றிற்கும் ஒருங்கிணைந்த பணியைத் தருதலேயாகும். நீருள் குதித்து முங்கிமுங்கி எழும்பொழுது குழை முதலியன மேலும் கீழுமாக ஆடுதல் இயல்பு. உடலிலுள்ள பல்வேறு உறுப்புக்களோடு தொடர்புடைய அணிகலன்கள் ஆடஆட என்பதால், இவை மேலும் கீழுமாக அசைந்து ஒருவகை ஒலியை எழுப்புகின்றன. ('காதார் குழையாட' என்பது முதல் 'கோதை குழலாட' என்பதுவரை உள்ள பகுதி மேலே குறிப்பிட்டுள்ள ஆடலைக் குறிப்பதாகும்).

இந்த அணிகலன்களின் அசையும் தாளகதிக்கு ஏற்ப வாய் பாடத் தொடங்குகிறது. மேலேயுள்ள நான்கில் குழை, கலன், குழல் என்பவை உயிரற்ற பொருள்களாகும். தாமே ஆடும் ஆற்றல் அவற்றிற்கு இல்லை. அவை சேர்ந்த உறுப்புக்கள் ஆடுதலால் இவற்றை ஆட என்றார். நான்காவதாகவுள்ள வண்டு, பாடும் இயல்புடையது. ஆனால் இவர்கள் குழல்மேலுள்ள பூவில் பாட்டை மறந்து அமர்ந்திருந்தன. அந்தக் கூந்தல் நீரில் மூழ்கும்போது எழுந்தும் எழும்போது அமர்ந்தும் வண்டுகள் ஆடுகின்றன. இந்த மலர்களில் அமர்ந்துவிட்ட காரணத்தால் வண்டுகள் பாட்டை மறந்தன.

அதேபோல மக்களாகிய நாமும் உலக இன்பங்களில் தோய்ந்துவிட்டமையின் இறைவன் புகழைப் பாட மறந்துவிட்டோம். கூந்தலிலுள்ள வண்டுகள் அமைதியாக இருக்க முடியவில்லையே! அந்தக் கூந்தல் நீருள் மூழ்கும்போது எழுந்தும் அக்கூந்தல் வெளிவரும்போது அதன்மேல் அமர்ந்தும் நிலையற்ற இன்பத்தை அனுபவிப்பதைப் போலத்தானே நாமும் நிலையற்ற உலக இன்பத்தை அனுபவிக்கின்றோம்.

நீருள் மூழ்கிய கூந்தல் வெளியே வரும் என்ற நம்பிக்கையில் எழுந்த வண்டுகள் வேறிடம் செல்லாமல் அங்கேயே சுற்றுகின்றன. அதேபோல நாம் அனுபவிக்கும் இன்பம் நம்மை விட்டுப் போய்விட்டாலும் இன்றில்லா விடினும் நாளை அது நமக்கு மீண்டும் கிடைக்கும் என்ற இச்சையால் நாமும் அதைச் சுற்றிச் சுற்றி வருகின்றோம்.

கூந்தலிலும் மலரிலும் நாட்டம் கொண்ட வண்டு, அடுத்துள்ள சீதப் புனலில் குளிக்கவேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல், கூந்தலை எதிர்பார்த்து நிற்பதுபோல, இறைவன் திருவருள் சீதப்புனல்போல் நம்மைச் சுற்றியிருக்கவும் அதில் மூழ்கமாட்டாமல் நிலையற்ற இன்பத்தை என்று வரும் என்று காத்து நிற்கின்றோம். இத்தனை பொருளும் அடங்குமாறு அடிகளார். இப்பாடலை அமைத்துள்ளார்.

‘சிற்றம்பலம் பாடி’ என்பது தொடக்கம் 'பாதத் திறம்பாடி' என்பது வரை உயிர்கள் பாட வேண்டியவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் அடிகளார்.

இறைவழிபாடு என்பது உருவ வழிபாட்டில் தொடங்கி மேலேமேலே சென்று எல்லாப் பொருளிலும் அருவமாய் நிற்கும் பரம்பொருளைச் சிந்திப்பதே ஆகும். ஆனால், அடிகளார். இம்முறையைத் தலைகீழாக மாற்றுகின்றார்.

சிற்றம்பலம் என்பது வெளியைக் குறிப்பது ஆகும். ஆக, சொல் பொருள் கடந்து நிற்கும் அப் பரவெளியைப் பாடுக என்கிறார். இப்பரவெளிக்குக் கீழே இறங்கினால் அடுத்து நிற்பது ‘சப்தப் பிரபஞ்சம்' ஆகும். அபெளர்ஷேயம் எனப்படும் வேதம், ஒலிக் களஞ்சியம் ஆதலால் அதனை முன்னர்க் கூறி, அதனை அடுத்து நிற்பது அர்த்தப் பிரபஞ்சம் ஆதலால் அதனைக் குறிக்கப் பொருள்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். வேதப்பொருள் பாடி என்ற தொடர் வேதமாகவும், அது குறிக்கும் பொருளாகவும் அதாவது சப்த, அர்த்தப் பிரபஞ்சங்களாகவும் உள்ளான் என்பதைக் குறித்து நிற்கின்றது.

அடுத்து உள்ளது 'அப்பொருள் ஆமா பாடி’ என்பதாகும். வேதப் பொருள் என்ற தொடருக்குப் பின்னர் அப்பொருள் என்று வருவது சிந்திக்கத்தக்கது. வேதம் என்பது பல்வேறுபட்ட பல்வேறு வகையான ஒலிக் கூட்டங்களின் தொகுதியாகும். அதுபோல அச்சொற்கள் குறிக்கும் பொருள்களும் பல்வேறுபட்டனவாகும். இவ்வேறுபாடுகளின் இடையே ஒருமைப்பாட்டைக் காண்பதே 'அப்பொருள்’ என்ற சொல்லின் பொருளாகும்.

பல்வேறு ஒலிகளும், பல்வேறு பொருள்களும் வேதத்தில் குறிப்பிடப்படினும், அவை அனைத்தும் அவன் ஒருவனே என்பதை அறிவிக்கவே 'அப்பொருள் ஆமா பாடி' என்றார்.

காளிதாசன் ரகுவம்சத்தின் முதல் பாடலில் இக்கருத்தை மிக அழகாக 'வாக்காகவும்(சொல்லாகவும்) அர்த்தமாகவும் (பொருளாகவும்) விளங்குகின்ற உமா காந்தனை வணங்குகிறேன்’ என்று கூறியுள்ளது அறியத்தக்கதாகும்.

அடுத்து நிற்பது 'சோதி திறம்பாடி' என்பதாகும். சோதியின் திறம் என்று கூறியமையின் புறத்தே காணப்படும் புற ஒளியை அல்லாமல் அகத்தின் ஆழத்தே தோன்றும் அக ஒளியையே குறிப்பிடுகின்றார் என்பதை அறிதல் வேண்டும்.

‘ஆதித்த ஹ்ருதயம்' போன்ற நூல்கள் புற உலகின் இருளைப் போக்கும் சூரியனைச் சோதி என்று புகழ்ந்து பாடின. ஆனால், அடிகளார் ஆதித்தன் இறைவனால் படைக்கப்பட்டவன்; அவனுடைய ஒளியும் இறைவனிட்ட பிச்சையே ஆகும் என்பதைக் குறிக்க 'அருக்கனில் சோதி அமைத்தோன்’ (திருவாச:3-20) என்று பாடியுள்ளார். எனவே, சோதி திறம் என்று இங்கு அடிகளார் குறிப்பிடுவது அக மனத்தின் ஆழத்தில் தோன்றும் ஒளிவடிவான இறைவனையே ஆகும்.

மிக நுண்மையானதாகிய பர வெளியில் தொடங்கி ஒரளவு கட்புலன்களுக்குத் தட்டுப்படும் சோதிவரையில் கூறியபிறகு சாதாரண மக்களின் நினைவு அடிகளாரின் உள்ளத்தில் தோன்றுகிறது. 'சூழ் கொன்றைத் தார்பாடி’ என்றதால் கட்புலனுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய கொன்றை மாலையை நுண்மையில் ஈடுபட முடியாதவர்களுக்கு கூறினார் ஆயிற்று.

கொன்றை மாலையைக் கூறியவுடன் அதனை அணிந்திருப்பவனுடைய நினைவு மனத்தில் தோன்றும், அந்நினைவும் மானிட வடிவு தாங்கிய இறைவனைப் பற்றியதாகவே இருக்கும். மானிட வடிவு பற்றிய அந்த நினைவு தொடராமல் இருக்க ‘ஆதி திறம் பாடி’ என்றார். அந்தமாக உள்ளதும் அதுவே என்பதை 'அந்தம் ஆமா பாடி' என்றார்.

இவ்வாறு கூற ஒரு காரணம் உண்டு. மானிட வடிவு கற்பித்தவுடன், மனித மனம் இறைவன் திருமேனிக்கு அடி முடி கற்பித்துக்கொண்டு அந்த எல்லைக்குள் அவனை நிறுத்திவிட முயலும், அத்தவறு நிகழாதிருக்கவே அனைத்திற்கும் ஆதியாக உள்ளவனும் அந்தமாக உள்ளவனும் அவனே என்ற கருத்தை மனத்தில் பதிக்க வேண்டிச் 'சூழ்கொன்றைத் தார்பாடி' என்றதன் பின் இதனை வைத்தார்.

சூழ்கொன்றை என்று கூறியவுடன் எளிமையாக மனத்தில் அவன் வடிவைப் பதித்துக்கொண்ட நாம், ஆதி, அந்தம் என்றவுடன் கலங்கிவிடுகிறோம். ஆதி, அந்தம் அற்ற இப்பொருள் நம் மன எல்லைக்குள் வந்து நமக்குப் பயன்படாதோ என்ற கலக்கம் வருதல் இயல்புதானே? அதனைப் போக்கவே 'பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை’ என்கிறார்.

‘வளர்த்தெடுத்த பெய்வளை’ என்பதால் தாய் என்று கூறினாராயிற்று. தாய் உடம்பை வளர்க்கின்றாள். அகத்தில் உள்ளவை தாமே வளர்கின்றன. மானிடத் தாய்க்கும் இறைவிக்கும் உள்ள வேற்றுமையைப் 'பேதித்து' என்ற ஒரு சொல்லால் விளக்குகிறார் அடிகளார். பேதித்தல்’ என்பது நிலையை மாற்றுதல் என்ற பொருளைத் தருவதாகும்.

கணந்தோறும் அறிவு வளர்கின்றது. ஒவ்வொரு வளர்ச்சியின்போதும் சென்ற கணத்தில் சூழ்ந்திருந்த அறியாமை வெளிப்படுகின்றது. இங்கே 'பேதித்தல்’ என்பது புதிய வளர்ச்சியில் பழைய அறியாமையைப் போக்குதல் என்ற பொருளைத் தருவதாகும். 'வளர்த்து எடுத்த’ என்பது உடல் வளர்ச்சியை மட்டுமன்றி உள்ள வளர்ச்சி, அறிவு வளர்ச்சி என்பனவற்றையும் குறிப்பதாகும்.

உடலை வளர்க்கும் தாயே முதலில் அறியப்படுகின்ற தெய்வம் என்றால், அறிவையும் மனத்தையும் வளர்த்தெடுக்கின்ற பெருமாட்டி அன்னையினும் சிறந்தவள் என்பதால், அவள் 'பாதத் திறம்பாடி’ என்றார்.


169. ஒர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே நம் பெருமான்
சீர் ஒரு கால் வாய் ஒவாள் சித்தம் களி கூர
நீர் ஒரு கால் ஒவா நெடும் தாரை கண் பனிப்பப்
பார் ஒரு கால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண் முலையீர் வாய் ஆர நாம் பாடி
ஏர் உருவப் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

15

வாய் ஓவாள்-வாய் ஒழியாமல் பேசுவாள். ஒவா-இடைவிடாத தாரை-நீர்த்துளி. பார் ஒருகால் வந்தனையாள்-பூமியின்கண் ஒரே முறையாக விழுந்து வணங்குதலையுடையவள். வார்-கச்சு. ஏர்-எழுச்சி.

இப்பாடலில் கூறப்பெறும் செய்திகள் அந்த நங்கையர் கூட்டத்தில் யாரோ ஒருத்திக்கு நிகழ்ந்த இறையனுபவத்தை விளக்கிக் கூறுவதாகும். என்றோ ஒருநாள் நடந்த அந்நிகழ்ச்சியைக் கண்ட ஒருத்தி, அச்செய்தியைத் தன் தோழிமாருடன் இன்று பகிர்ந்துகொள்கிறாள். பாடலின் சரிபாதி தோழிக்கு நிகழ்ந்தவற்றைக் கூறுவதாயினும் பாடலின் உயிர்நாடிப் பகுதி இது அன்று.

நம்முள் ஒருத்தியாக உலக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருத்தியை, ஒரு விநாடியில், பெருமாற்றம் செய்தான்; அவளுடைய பொறி, புலன்களையும் மடை மாற்றம் செய்தான்; அவள் தன்னை மறந்து, தன் நாமம் கெட்டுப் பித்தியானாள் என்றால், இம்மாபெரும் மாற்றத்தைச் செய்யக்கூடியவன் எத்தகையவன்? அத்தகையவனைப் பாடவேண்டும் என்று கூறும் பின் அடிகளே பாடலின் உயிர்நாடியாகும்.

இதிலுள்ள சிறப்பைச் சற்றுச் சிந்தித்தல் வேண்டும். இளமை பொருந்திய ஒருத்திக்கு, எத்தனையோ கற்பனைகளுடன் இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இன்பமாக வாழலாம் என்று கனவுலகில் சஞ்சரிக்கும் ஒருத்திக்கு, இம்மாற்றம் வருகிறது. தொடர்ந்து பல பிறவிகள் எடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் பல பயிற்சிகளைச் செய்து, இறுதியாகப் பெறவேண்டிய மாற்றமாகும் இது. அந்த மாற்றம் இப்பிறவியிலே இந்த இளம் வயதிலேயே இவளுக்கு வந்தது என்றால், இவளெடுத்த முற்பிறவிகளின் பயனாக, அப்பிறவிகளில் மேற்கொண்ட தவப்பயனாக, இந்நிலை வந்தது என்று தோழிகள் நம்பத் தயாராக இல்லை. இம்மாற்றம் இவளுடைய ஆற்றலால் வந்ததன்று. எனின், பின்னர் எவ்வாறு வந்தது என்ற வினாத் தோன்றுமன்றோ? அதற்கு விடையாகத்தான் ஆர் ஒருவர் இவ்வண்ணம் இவளை மாற்றி ஆட்கொண்டார் என்ற வினாவை எழுப்புகிறார்கள்.

பலருடைய மனத்திலும் தோன்றிய இவ்வினாவிற்கு விடை, ஆட்கொண்ட வித்தகர் ஒருவருண்டு என்பதாகும். இப்பெண்ணுக்குக் கிடைத்த வளர்ச்சியை நாமும் பெறவேண்டுமேயானால் அந்த வித்தகனைக் கண்டுபிடித்து அவன் தாள் பணிய வேண்டும் என்று முடிக்கின்றார்கள்.

அப்பெண்ணுக்குக் கிடைத்த அனுபவம் பாடலின் முற்பகுதியில் பேசப்பெறுகிறது. ஒரு முறை எம்பெருமான் என்று சொல்லத் தொடங்கியவள் பிறகு அதை நிறுத்தவேயில்லை. எம்பெருமான் சீர்களை அடுக்கடுக்காகக் கூறிக்கொண்டேயிருக்கின்றாள். இவள் எதிரே நின்று இவள் கூறுவதைக் கேட்டவுடன், ஒன்று நன்றாக விளங்கிவிட்டது. இவளுடைய பொறி, புலன்களில் வாய் தவிர வேறொன்றும் பணிபுரியவில்லை. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற இவளுடைய அந்தக்கரணங்கள் நான்கில் மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும் செயலிழந்துவிட்டன. சித்தம் ஒன்றுமட்டும் விழித்திருக்கிறது. அந்தச் சித்தம் முழுவதும் ஆனந்தம் நிறைந்திருக்கிறது. மகிழ்ச்சி, இன்பம் போன்ற உணர்வுகள் நிலையில்லாதனவாய் மனத்திடைத் தோன்றி மறையும் இயல்புடையன. ஆனால், இவள் சித்தத்தில் ஏற்பட்ட ஆனந்தமோ இறையனுபவத்தில் கிடைத்ததாகலின் நிலைபேறு உடையதாய் அடிமனத்தின் ஆழத்தில் உள்ள சித்தத்தில் நிரம்பி வழிகின்றது என்பதை எதிரே உள்ள பெண்கள் அறிந்திருந்தார்கள் ஆதலின், 'சித்தம் களி கூர’ என்றார்கள்.

அடிமனத்தின் ஆழத்தில் நிறைந்து வழிகின்ற ஆனந்தம் நுண்மையிலும் நுண்மையானது ஆயிற்றே! அதை எப்படி இவர்கள் அறிந்தார்கள் என்று ஐயுறுவார்க்கு, அவர்களே இதோ விடை கூறுகின்றனர்.

உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு நிலையான உணர்வு தோன்றினாலொழிய, கண்ணில் வழியும் நெடுந்தாரை ஓவா நெடுந்தாரையாக இராது. மனம் முதலியவற்றில் தோன்றும் உணர்வு காரணமாகக் கண்ணீர் பெருகினால், அது விட்டு விட்டுப் பெருகுமே தவிர ஓவா நெடுந்தாரையாக இராது. ஆனால், இவளைப் பொறுத்தமட்டில் 'நீர் ஒருகால் ஓவா நெடுந்தாரை கண் பனி'க்கின்றது. ஆதலாலும், எம்பெருமான் சீரை விடாமல் பேசிக்கொண்டே இருத்தலாலும், இந்தப் புறச் செயல்களைக் கண்டு, இவள் சித்தம் களி கூர்ந்து உள்ளது என்பதை உறுதி செய்தனர்.

இவ்வாறு உறுதி செய்துகொண்ட பின்னர் அந்தத் தோழியர்கள் இவளை மீண்டும் உன்னிப்பாகக் கவனித்தனர்.

இப்பெண், மண்ணில் வீழ்ந்து வணங்கியபடியே கிடக்கின்றாள். இளம்பெண் ஆகிய இவள், இந்திரன் முதலிய பல சிறு தெய்வங்கள்பற்றியும் அறிந்திருப்பாளோ? தன் வாழ்வு சிறக்கவேண்டும் என்பதற்காக வேதம் கூறுகின்ற முறையில் இந்திரன் முதலிய தெய்வங்களை வழிபடுபவளோ என்று நினைத்தால், இல்லை இல்லை என்கிறார்கள் தோழிமார்கள். எங்கள் தலைவி ‘விண்ணோரைத் தான் பணியாள்’ என்று அறுதியாகக் கூறுகின்றார்கள்.

விண்ணோரைப் பணியாள் என்று கூறியிருந்தாலே போதுமே! 'தான் பணியாள்’ என்று அதிகப்படியாகக் கூறவேண்டிய காரணம் என்ன? 'தான்மட்டு மல்ல, அவளோடு சேர்ந்த எங்களையும்கூடச் சிறு தெய்வங்களைப் பணிய விடமாட்டாள்' என்ற பொருள், ‘தான்’ என்ற சொல்லில் தொக்கி நிற்கின்றது.

இவ்வளவு நிகழ்ந்த பின்னர், 'இளம் வயதுடைய எங்கள் தோழியை ஒரு விநாடி நேரத்தில் இப்படி ஒருவன் ஆக்கினான்’ என்றால், அவன், பேர்அரையனாகவே இருத்தல் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இப்படி இவளைப் பித்தியாக ஆக்கியிருக்க முடியாது. இந்த மாபெரும் செயற்கு அரிய செயலைச் செய்த அவன், ஒரு வித்தகனாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர்.

170. முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன் அம் சிலம்பில் சிலம்பித் திருப் புருவம்
என்னச் சிலை குலவி நம்தம்மை ஆள் உடையாள்
தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய் 16

சுருக்கி-வற்றச்செய்து. உடையாள் என்ன-எம்மை உடைய உமையம்மையின் திருமேனியின் நிறம் போல. இட்டிடை-மிகச்சிறிய இடை. பொன்னஞ் சிலம்பு-பொன்னாலாகிய சிலம்பு. சிலம்பி-ஒலித்து. சிலை குலவி-வில்லை வளைத்து. முன்னி-முதலில்.

சங்கப் பாடல்களில் காணப்பெறும் தைந் நீர் ஆடலிலும், மகளிர் மழையை வேண்டிநிற்கும் பகுதி காணப்பெறுகிறது. அப்பாடல்களின் வளர்ச்சியே திருவெம்பாவை ஆதலின், இதிலும் மகளிர் மழை வேண்டிநிற்கும் பாடல் இடம்பெறுகிறது.

திருவண்டப் பகுதியில் மாபெரும் உருவகம் ஒன்றைச் செய்த மணிவாசகர் என்ற மாபெருங் கவிஞர், இப்பாடலில் மழையைமட்டும் இறைவியோடு உவமை செய்கின்றார். உலகில் உயிர்களை மழை புரத்தல்போல அன்னையும் உயிர்களைப் புரக்கின்றாள் ஆதலின், இந்த உவமையில் இறைவியையே உவமைப் பொருளாகக் கொள்கிறார். பல உவம உருபுகளைப் பெற்று, மேகமும் மழையும் அன்னையோடு உவமிக்கப்பட்டாலும், இதனை உருவகமாகக் கொள்வதில் தவறொன்றும் இல்லை. என்ன என்ற உவமை உருபு மும்முறை பயன்படுத்தப்பெறினும் உருவகம் என்றே கொள்வதில் தவறில்லை.

வெள்ளை மேகம் கடல் நீரை முகந்துகொண்டு மேலே எழும்பி, அன்னையைப்போல நீல நிறம் பெற்று, அன்னையின் இடையைப்போல மின்னி, திருவடிச் சிலம்பைப்போல இடித்து முழக்கி, அவள் திருப் புருவத்தைப்போல வானவில்லை உண்டாக்கி, கண்ணுக்குப் புலப்படாமல் நமக்குக் கிடைக்கும் அவள் அருளைப் போல, கண்ணுக் தெரியும்படியாகவே அவள் அருள் போன்ற மழை பொழிவதாக! என்பதாம்.

திருவெம்பாவையின் முதல் பாடல்கள் ஒருவரை ஒருவர் எழுப்புவதாகவே அமைந்துள்ளன. அதனை அடுத்து வரும் பாடல்களில் அப்பெண்கள் தம் வாழ்க்கை வளம் பெறத் தேவையான கணவன், குழந்தைகள் என்பவர்களைப்பற்றி பேசினர். இதுவரை அவர்கள் ஈடுபாட்டின் அடித்தளத்தில் தம் வாழ்வு, தம்முன்னேற்றம் என்ற தன்னலம் இழையோடி இருப்பதைக் காணமுடிகிறது.

ஈடுபாட்டின் மிகுதியால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னலம் மறைந்து, நீராடும் குளத்தை இறைவன் இறைவி வடிவாகக் காணும் வளர்ச்சி வந்தது. இந்த வளர்ச்சியின் முடிவில் எங்கும் எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு உணரக்கூடிய வளர்ச்சி வந்தது. இந்தத் தலையாய உணர்வு ஏற்பட்டவுடன், தாம், தம் வாழ்வு, தன்னலம் என்பவை மங்கத் தொடங்கிவிட்டன. இறைவியின் திருவருள், அவ்வருளை வேண்டி நிற்கும் தங்களை அல்லாமல், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கருதினர். இவ்வெண்ணத்தின் முடிவில் மழை நினைவுக்கு வருகின்றது. நல்லவர், தீயவர், உடையவர், இல்லாதவர் என்ற வேறுபாடின்றி நன்கு பொழிந்து மக்களை உய்விக்கின்ற அந்த மழையின் தன்மை நினவுக்கு வருகின்றது.

இப்பாடலில் அப்பெண்கள் அனைவரும் ஒருசேரத் தம்மையும் தன்னலத்தையும் மறந்துவிட்டனர். அதன் பயனாகவே பாடலின் இறுதியில் மிக நுண்மையான ஒரு கருத்து பேசப்பெறுகிறது. வேறுபாடு பாராட்டாமல் அனைவருக்கும் பொழிகின்றது மழை, இது மழையின் தனிச் சிறப்பாகும். இந்த நினைவு வந்தவுடன் அன்னையின் அருள் வேறுபாடின்றி அனைவரையும் புரத்தலின் மழை அருளுக்கு உவமை ஆகிறது. அதனாலேயே, “அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய்” என்று பாடுகின்றனர். இப்பாடல் முழுவதிலும் தம்மைப் பற்றிய நினைவு எதுவும் இல்லாமல், எல்லா உயிர்களும் அவள் அருளைப் பெற்று உய்ய வேண்டும் என்ற பிறர் நலம் பேணுவதைக் காண முடிகின்றது.

இன்னருளே என்னப் பொழியாய் என்பதில் 'என்ன' என்பதை உவம உருபு ஆக்காமல் 'என்று சொல்லும் படியாக’ என்று பொருள் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அன்னையின் இன்னருள் என்று சொல்லும் படியாக மழையே பொழிவாய் என முடிக்கலாம்.

மேலோட்டமாகப் பார்ப்பவர்கட்கு இந்த உவமையில் ஒரு சிறு குறை தோன்றாமல் இராது.

வேறுபாடின்றிப் பொழிந்தாலும் மழை ஆக்கல், அழித்தல் என்ற இரண்டையும் செய்கின்றது. ஆழ்ந்து சிந்தித்தால் அந்த அழிவும் பின்னர் நலத்தைப் பயப்பதாகவே உள்ளது. மழைநீர் வெள்ளமாக வந்து வயலில் நின்றுவிட்டால் அதன் அடியிலுள்ள பயிர் அழிவது உறுதி. ஆனால், அடுத்த ஆண்டு பயிர் செய்வதற்கு வண்டல் உரம் வயலுக்கு மிகுதியாகக் கிடைத்துவிடுகிறது.

அதேபோல அன்னையின் அருள் சில சமையங்களில் துன்பத்தைத் தருவது உண்மைதான். நாம் செய்த வினைக்கு ஏற்பத் தரப்பெற்றாலும், துன்பத்தை அனுபவித்து முடிந்த பிறகு மனம் தூய்மை அடைந்து மேல் வளர்ச்சி அடைகிறது. மழையின் அழித்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுபோல, அன்னையின் இன்னருளும் துன்பத்தைத் தந்து பின்னர்த் தூய்மை அடைய உதவுகிறது.

171. செம் கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கரும் குழலி நம் தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளிச்
செம் கமலப் பொன் பாதம் தந்தருளும் சேவகனை
அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் 17

செங்கணவன்-திருமால், கொங்கு-மணம். சேவகன்-வீரன். ஆர் அமுது-நிறைந்த அமுது ; கிடைத்தற்கரிய அமிர்தமுமாம்.

164ஆம் பாட்டில் தொண்டரிடையே வந்து ஒரு தோழனாகவும் காட்சியளித்து. அருள் செய்பவன் இறைவன் என்று குறித்த செய்தியை, விரிவுபடுத்தும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.

செங்கண்ணவனாகிய திருமாலும், திசைமுகனாகிய நான்முகனும் தேவர்களும் வேறு எவ்விடத்தோரும் பெறுதற்கு அரியதாகிய இறையின்ப அனுபவத்தை, நம்பாலதாகத் தந்து அருள்கின்ற சேவகன் என்றார்.

இந்த இன்பத்தைத் தருபவன் அவன் என்றாலும், அவனை அடைய விரும்பிய நாம் அவனை நாடிச்சென்று இதனைப் பெறவேண்டும் என்று நினைத்தால், அது இயலாத காரியம் என்பதை அனைவரும் அறிவோம். நான்முகன், தேவர்கள் முதலியோர்க்கும் கிட்டாத, இன்பம் என்றால், அந்த இன்பத்தைத் தருபவன் அவர்களையும் தாண்டி எங்கோ மேலே இருக்கின்றான், இன்பத்தைப் பெறுமாறு எங்ஙனம் என்று வருந்துவோமல்லவா? வருந்தும் நம்மை நோக்கி ‘அஞ்ச வேண்டா; அவரவர்கள் வீடு தேடி எழுந்தருளி வந்து அவனே அதைக் கொடுக்க முன்வந்துள்ளான்' என்று கூறுகிறார் அடிகளார்.

மிகச் சிறந்த இனிய உணவாயினும் மஞ்சட் காமாலை நோயுடையார் அதனைச் சுவைத்து உண்ண இயலாது. அவ்வாறு உண்ண வேண்டுமாயின் முதலாவதாக அந்நோயைப் போக்க வேண்டும். அதேபோல அறுவகைக் குற்றங்களையும் மனத்தில் நிரப்பிக்கொண்டு உழலும் நமக்கு, நம் வீட்டுப் படியேறி வந்து எங்கும் இலாத இன்பத்தை அவன் தந்தாலும், அதனை அனுபவிக்க முடியாது. எனவே, வைத்திய நாதனாகிய அவன் நம்முடைய நோயை முதலில் போக்குகிறான் என்ற கருத்தைக் 'கோதாட்டி' என்ற சொல் மூலம் அடிகளார் பெற வைக்கிறார். 'இல்லங்கள்தோறும் எழுந்தருளி, நம் தம்மைக் கோதாட்டி எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாச்' செய்கின்றான்.

172. அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றால்போல்
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண் ஆர் ஒளி மழுங்கித் தாரகைகள்தாம் அகலப்
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய்ப் பிறங்கு ஒலி சேர்
விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகிக்
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே இப் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் 18

வீறு அற்றல் போல்-தனித்தனியாகச் சிதறியதுபோல. கண் ஆர் இரவி-இடங்கள்தோறும் நிறைந்திருக்கின்ற சூரியன். கரப்ப- மறைக்க. தாரகைகள்-நஷத்திரங்கள். கண்ணாரமுதம்-அறிவில் நிறைந்த அமுதம். கண்அறிவு.

இப்பாடலின் முதல் இரண்டு அடிகள், பொழுது ஏறத்தாழ புலர்கின்ற தன்மையை ஓர் அழகிய உவமை மூலம் கூறுகின்றன. இறைவனிடம் செல்வதற்கு முன்னர் இத்தேவர்கள் அணிந்திருக்கின்ற முடிகளிலுள்ள நவரத்தின மணிகள் ஒப்பற்ற ஒளியை வீசிக்கொண்டிருக்கின்றன. இதே தேவர்கள் அண்ணாமலையான் திருவடிகளில் சென்று தங்கள் முடியுடனேயே வீழ்ந்து வணங்குகின்றனர். என்ன அதிசயம்! சற்று நேரத்திற்கு முன், பேரொளிக் கதிர்களை அள்ளி வீசிக்கொண்டிருந்த இம்மணிமுடிகள் இறைவன் திருவடியின் ஒளியின் எதிரே தங்கள் ஒளியை இழந்து மங்கிப்போய்விடுகின்றன.

மணி முடியைக் கூறினாரேனும், அதனை அணிந்துள்ள தலையையும், அதிலுள்ள அறிவையும் குறிப்பால் உணர்த்தியவாறாயிற்று. அமுதம் உண்டு இறவா நிலை பெற்றோம் என்ற அகங்காரம் அத்தலைகளினுள் பொதிந்து கிடக்கின்றது. அறிவு, அகங்காரம் என்ற இரண்டும் தம்மைவிட மேம்பட்டவர் யாரும் இல்லை என்ற எண்ணத்தில் குடியிருத்தலின், அவர்கள் முடிமணி ஒளி வீசி நிற்கின்றது. இது எவ்வளவு நேரம்? இறைவன் திருவடியைச் சென்று அடைகின்றவரை இந்நிலை நீடிப்பது உண்மைதான். அடிக்கமலம் சென்று இறைஞ்சியவுடன் தேவர்களின் தலையினுள் மீதுர்ந்திருந்த அறிவும் ஆணவமும் செயலிழக்கின்றன. திருவடியாகிய அருள் ஒளியின் எதிரே இவர்கள் ஆணவம் அழிக்கப்பட்டு ஒளி இழந்து நிற்பதை, இந்த உவமை மூலம் பெறவைக்கிறார் அடிகளார்.

இத்தகைய ஒரு காட்சியை மனத்துட்கொண்டு விடியற்கால நேரத்தில் ஒளி உமிழ்ந்துகொண்டிருக்கின்ற தாரகைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். மிக அற்புதமாக இந்த விண்மீன்கள் ஒளியை உமிழ்ந்துகொண்டு இருக்கின்றன. பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக விண்மீன்களின் ஒளியாட்டம் மங்கத் தொடங்கிவிடுகின்றது. உலகைச் சூழ்ந்துள்ள இருள், இத்தாரகைகள் ஒளி உமிழ்ந்து மின்னப் பின்புலமாக அமைந்துள்ளது. எங்கோ ஒரு மூலையில் கதிரவன் தோன்றுகிறான். அவன் வருவதற்கு முன்னர், அவனுடைய ஒளிக் கதிர்கள் முதலில் இப்பின்புலத்தை அழிக்கின்றன. இந்தப் பின்புலம் அழிய அழிய மின்னிக்கொண்டிருந்த தாரகைகள் தம் ஒளியை இழக்கின்றன. அதாவது, பொழுது விடிய விடியத் தாரகைகளின் ஒளியாட்டம் இருந்த இடம் தெரியாமல் மங்கிவிடுகின்றது. பொழுது விடிகின்ற சிறப்பை மிக அற்புதமான உவமையின் மூலம் விளக்குகின்ற அடிகளார், அந்த உவமையிலேயே ஓர் அருங்கருத்தையும் பொதித்துள்ளமை நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும்.

அடியார்கள் வேண்டும் இடத்து, வேண்டும் வடிவில் அவர்கள் கண்களுக்கு விருந்தாய் நிற்கின்றான் இறைவன். கண்ணுக்கு அமுதாய் நின்றான் என்றதால் அவரவர்கள் கண்ணுக்கு அவரவர் விரும்பும் வடிவைக் கொண்டு காட்சி அளிக்கின்றான் என்றவாறு.

வேண்டுவார் மன நிலைக்கு ஏற்ப வேண்டுருக் கொண்டான் ஆயினும், அவன் ஒருவனே என்பது திண்ணம். அந்த ஒருவன் யார்?

உலகத்திலுள்ள நிலையியல், இயங்கியல் உயிர்கள் அனைத்தும் பெண்ணுருக் கொண்டும் ஆண் உருக்கொண்டும், அலி உருக் கொண்டும் விளங்குகின்றன. எத்தனை வகைப் பெண்ணுரு எத்தனை வகை ஆணுரு ! என்ற வியப்புத் தோன்றுகிறது அல்லவா? இந்த உயிர்கள் மேற்கொண்ட வடிவுதான் வெவ்வேறே தவிர மூலத்தில் வேறுபாடு இல்லை. எனவேதான், 'பெண்ணாகி, ஆணாய், அலியாய் நின்றான்' இவன் ஒருவனே என்கிறார்.

இந்த ஐயம் தீர்ந்த பிறகு, பெண் ஆண் பேதம் இல்லாமல் காணப்படும் இயற்கையின் வடிவுகள் ‘விண்ணாகி மண்ணாகி' இருக்கும் நிலை விளங்கத் தொடங்குகிறது.

பெண், ஆண் என்று வேறுபட்டு நின்றும் விண், மண் என்று வேறுபட்டு நின்றும், காட்சி தருகின்ற நிலையைக் கண்டு, இவை பல அல்லது, அவன் ஒருவனே வேறுபட்ட இந்த வடிவுகளாகக் காட்சி தருகின்றான் என்பதைக் குறிக்கவே 'பிறங்கு ஒலிசேர் விண்ணாகி மண்ணாகி நின்றான் ஒருவன்’ என்று கூறினார்.

'பிறங்கு ஒளி சேர்' என்றே பலரும் பாடங் கொண்டுள்ளனர். விண்ணுக்கு இலக்கணம் ஒலியே தவிர ஒளியன்று. 'பிறங்கு ஒலி சேர்’ என்றே பாடங்கொள்ள வேண்டும். பிறங்கு என்ற சொல்லுக்கு விரிதல் என்பது பொருளாகும். 'உண்டைப் பிறக்கம்' (திருவாச. 3.) முன்னரும் அடிகளார் கூறியது நோக்கத்தக்கது. இங்கு பிறங்கு ஒலி என்றது, ஆகாயத்தில் எப்பொழுது எங்கும் நிறைந்து நிற்கும் ஆதி நாதத்தையே (Premordial Sound) ஆகும்.

மேலே கண்ட பொருள்களுள் கட்புலனுக்கும் தெரியும்படி அமைந்துள்ளவை பெண், ஆண், அலி, மண் என்பவையாம். கருத்துக்கு மட்டும் புலப்பட நிற்பது விண்ணாகும். கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்பட நின்ற இவை அனைத்தையும் ஒன்று சேர்ப்பதன் மூலம் அனைத்தும் ஒருவனே என்ற கருத்தைத் தெளிவாக்கி விட்டார்.

இத்தோடு நிறுத்தியிருப்பின் ஒரு பெருங்குறை நேர்ந்துவிடும். இவையனைத்தும் எல்லையுடைய பொருள்களாகும். இவைமட்டும் அவன் வடிவுகள் என்றால் அவனும் எல்லைக்கு உட்பட்டவன் என்று நினைக்கும் தவறு நேர்ந்துவிடும் அல்லவா?

கடவுள் என்ற சொல்லின் ‘கட’ என்ற முற்பகுதி அனைத்தையும் கடந்து நிற்பவன் என்றல்லவா கூறுகிறது. மேலே அடிகளார் கூறியவை கடவுள் என்ற சொல்லின் ‘உள்’ என்ற பிற்பகுதியின் பொருளாகும்.

இக்குறைபாட்டை நீக்கவும் ‘கட’ என்ற சொல்லின் பொருளும் விளங்கவும் இத்தனையும் வேறாகி என்றார். அதாவது, இவைகளாகவும் இவற்றின் வேறாகவும் இருப்பவன் 'கண்ணார் அமுதமாய் நின்றான்' ஒருவன் என்றார்.

இதே கருத்தை காழிப் பிள்ளையார்,

ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய்
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறு ஆர்சுவை ஏழு ஒசையொடு எட்டுத் திசை தானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் விழிம் மிழலையே

(திருமுறை: 1-11-2)

என்ற தேவாரத்தில் 'வேறாய் உடன்' ஆனான் என்று கூறுவதிலிருந்தும் காணமுடிகிறது.

173. உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் 19

பழஞ்சொல்-பழமொழி. கங்குல் இரவு

இப்பாடலின் முற்பகுதி பொருள் செய்வதற்குச் சற்றுக் கடினமாக உள்ளது என்பது உண்மைதான். 'பழஞ்சொல்’ என்பது பழமொழி என்று இந்தநாட்டில் வழங்கப்படும் சொல்லே ஆகும். அப்படியானால் இங்கு வழங்கப்பெற்ற பழமொழி யாது? 'உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்பதே அப்பழமொழி ஆகும். ‘கையில் பிள்ளை’ என்பதால் பிள்ளை என்பது மிகச் சிறிய குழவியையே குறிக்கும். ஒருவருடைய கையில், தன்னைத் தான் காத்துக்கொள்ள இயலாத குழவியைக் கொடுத்தால், அந்த விநாடியிலிருந்து அக்குழவியைப் பெற்றுக் கொண்டவர், அதனைக் காக்கும் பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறார் என்பதே பொருளாகும். அப்படிக் குழந்தையைக் கொடுத்த பின்னர், இதனை உம் அடைக்கலப் பொருளாகப் பாதுகாப்பீராக என்று கூறுவது, வேண்டா கூறுவதோடு அன்றி, குழந்தையினை வாங்கிக் கொண்டவரது தரத்தைக் குறைத்து மதிப்பிடுவதும் ஆகும். இவ்வாறு கூறினால், குழந்தையைக் கையில் பெற்றுக் கொண்டவர் என் பொறுப்பு என்ன என்பது எனக்குத் தெரியும்; உன் உபதேசம் தேவையில்லை என்று கூறவும் வாய்ப்புண்டு ஆதலின், அப்பழஞ்சொல்லை மறுபடியும் புதுக்குவதுபோன்று இம்மகளிர் பேசத் தொடங்கியவுடன் அவர்களுடைய மனத்தில் ஓர் அச்சம் தோன்றியது. என்றாலும், இறைவனே ஆயினும் அவனிடம் தங்கள் முடிவான கருத்தை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் உள்ளிருந்து உந்தியதால் ‘பழஞ்சொல்லை மீட்டும் சொல்வதில் ஏற்பட்ட அச்சம் காரணமாக, அதை விட்டுவிட்டு வேறு ஒன்றைக் கூறுகிறோம் கேட்பாயாக எம் தலைவனே!’ என்று அவர்கள் பேசத் தொடங்கினர்.

முன்னர் 163-ஆம் பாட்டில் 'அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்’ என்று கூறியவர்கள் அதே கருத்தை எதிர்மறைமுகமாக இப்பொழுது இங்கே கூறத் தொடங்குகின்றனர்.

இவ்வாறு கூறக் காரணம் என்ன? ஒன்றை வேண்டும் என்று கூறிவிட்ட பின்னர், அவர்கள் வினை வேறுவிதமாக இருப்பின் அவ்வினைக்கு ஏற்ப, வேண்டும் என்று விரும்பியதைத் இறைவன் தாராது இருந்துவிடுவான் அல்லனோ? இம்மகளிர் இவ்வாறு அச்சம் கொள்வது நியாயமானது என்பதைக் காரைக்கால் அம்மையார் வரலாற்றில் காண்கிறோம் அல்லவா? 'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்’ (அற்புதத் திருஅந்தாதி:1) என்று பாடிய அம்மையாருக்கு எத்தகைய கணவன் கிடைத்தான்? இரண்டாவது மாம்பழம் கிடைத்தது ஈசன் அருள் என்று அம்மையார் கூறியவுடன், அவன் குழம்புகிறான். அவனுடைய வரவு செலவுக் கணக்கில் 'ஈசன் அருள்’ என்ற பொருளை அவன் கண்டதேயில்லை. அதனால், அம்மையார் வார்த்தை அவனுக்குப் பிடிபடவேயில்லை. இதனைக் கூறவந்த சேக்கிழார் 'ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்' (பெ.பு:காரை.புரா:29) என்று கூறுகிறார். இத்திருமணம் பொருந்தாத் திருமணம் என்பதை, 'தளிர் அடி மென் மயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்குக் கலியாணம் செய்தார்கள்’ (பெ.பு:காரை.புரா-1) என்று பாடுகிறார்.

இத்தகைய கணவன் கிடைத்தும் அவனோடு பல காலம் இல்லறம் நடத்தி, இறுதியாக அவன் பிரிந்தபோது தம் உடம்பை நீத்துப் பேய் வடிவு பெற இறைவனை வேண்டிய அம்மையார் சொல்லிய சொற்கள் ‘இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து... பேய் வடிவு வேண்டும்' (பெ.பு.காரை.புரா-49) என்பதாகும்.

இத்தகைய ஒருவனுடன் பல காலம் இல்லறம் நடத்துவது என்பது புனிதவதியாருக்கு இயன்றதே தவிர ஏனையோர்க்கு இயல்வதன்று.

குளத்தில் நீராட வந்த மகளிர் காரைக்காலம்மையார் வரலாற்றை நன்கு அறிந்திருப்பர்போலும், மனத்தளவில் தம் நிலைமை ஒரு சிறிதும் மாறாது இருந்துகொண்டே, தம் உடம்பைமட்டும் கணவனுக்கு அர்ப்பணிக்கின்ற பேராற்றல் காரைக்கால் அம்மையார்போல் தங்கள்பாலில்லை என்பதை உணர்ந்த அப்பெண்கள், ‘ஐயனே! பழமொழியைக் கூறுவது பொருத்தமில்லை ஆயினும் என்ன நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் உன்னிடம் ஒன்று வேண்டிக்கொள்கின்றோம். தயை கூர்ந்து அதனைக் கேட்பாயாக’ என்று பெரியதொரு முன்னுரையுடன் தங்கள் கருத்தை வெளியிடுகின்றனர்.

அடியாரே கணவராக வேண்டும் என்று கேட்டிருந்தால் போதாதோ? அப்படியிருக்க 'எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க; எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க; எம் கண் மற்றொன்றும் காணற்க’ என்று பன்னிப் பன்னி இவர்கள் பேசுவதன் நோக்கமென்ன? யாருடன் இவர்கள் பேசுகிறார்கள்! இறைவனிடம் அல்லவா? முற்றறிவினன் ஆகிய அவனிடம் வரம் வேண்டும் இவர்கள், கொங்கை, கை, கண் என்று தனித்தனியாகப் பிரித்துப் பேசுவதன் காரணமென்ன ?

இவ்வினாவிற்கு விடை ஒன்றே ஒன்றுதான். காரைக்கால் அம்மையார், அவர்கள் கண்முன் நிற்கின்றார். இறுதியில் இறைவனால் ‘அம்மையே' என்று அழைக்கப் பெறும் பேற்றைப் பெற்றார் ஆயினும், மானுட உடம்புடன் இருக்கும்போது இறையன்பு இல்லாத ஒருவன் தோளில் அவர் கொங்கை சேர்ந்தது; அவனுக்கே அவர் கைகள் பணிபுரிந்தன; தனித்திருக்கும் பொழுதெல்லாம் அவனையே அம்மையாரின் கண்கள் கண்டன.

இத்தனை இருந்தும் இவற்றை வெற்றிகொள்ளும் ஆற்றல் அம்மையார்பால் இருந்தது. அத்தகைய ஆற்றல் எம்மிடம் இல்லை என்ற அச்சத்தால், பழைய பழமொழியை இப்போது புதுக்கிக்கொண்டு, உன்னிடம் ஒரு விண்ணப்பம் செய்கின்றோம் என்ற கருத்தில்தான் ‘எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேட்பாயாக’ என்ற பெரிய முன்னுரையுடன், தம் அச்சத்தை வெளியிடுகின்றனர். காரைக்கால் அம்மையார் நினைவு அவர்கள் மனத்தில் ஊசலாடியதால் தான் 'சேரற்க, செய்யற்க, காணற்க’ என்று எதிர்மறை முகத்தால் பேசுகின்றனர். இறைவனிடம் எதிர்மறை முகத்தால் பேசுவது சரியன்று என்றாலும், அவர்கள் அச்சம் காரணமாகப் பேசினர் என்க.

174. போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத மலர்
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை அடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் 20

போற்றி-போற்றப்படுபவனே. செந்தளிர்கள்-தளிர் போன்ற திருவடிகள். போகம்-பாதுகாப்பு. புண்டரிகம்-தாமரை.

தைந் நீராடல் என்ற சங்ககால வழக்கு அடிகளார் காலத்தில் மாறி, மார்கழி நீராடல் எனப் பயின்று வந்தமையை, இப்பாடலின் இறுதி அடி விளக்குகின்றது.

'போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்’ என்பதை முதலில் வைத்து, 'போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்’ என்பதை இறுதியிலுள்ள 'மார்கழி நீர் ஆடேல் ஓர் எம்பாவாய்’ என்பதற்கு முன்னர் வைத்துக்கொண்டால் அடிகளார் கூறவந்த கருத்தை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். பாடல் முழுவதும் திருவடிப் பெருமையைத்தான் பேசுகின்றது. அந்தத் திருவடியே 'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய் உள்ளது' என்பதை ‘ஆதியாம் பாத மலர்’ என்ற சொற்களால் கூறினார்.

அடுத்து, அந்தத் திருவடி விளையாட்டாக நிகழ்த்தும் ஐந்தொழிலையும் வரிசைப்படுத்திப் பேசுகின்றார். 'எல்லா உயிர்க்கும் தோற்றமாம்' என்றதால் நிலையியல் பொருள், இயங்கியல் பொருள் ஆகிய அனைத்தும் தோன்றுதற்கு மூலமாக இருப்பது அந்தத் திருவடி என்கிறார். இது படைத்தல் தொழிலைக் கூறியவாறாயிற்று.

‘பூங்கழல்கள் எல்லா உயிர்க்கும்’ போகமாம் என்றதால் அத்திருவடி தனு, கரண, புவன, போகம் என்பவையாய் அமைந்து உயிர்கள் வாழ்வதற்குக் காரணமாய் உள்ளது என்பதை வலியுறுத்தினார். இதனால் ‘காத்தல்' தொழிலைக் கூறினாராயிற்று.

'இணை அடிகள் எல்லா உயிர்க்கும் ஈறாம்’ என்றதால் எல்லா உயிர்களும் அழிவதற்குக் காரணமான முடிவாக உள்ளவையும் அத்திருவடிகளே என்ற கருத்தைப் பேசினார். இதனால் 'அழித்தல்’ தொழிலைக் கூறினாராயிற்று.

‘நான்முகனும் காணாத புண்டரிகம்' என்றதால் பிரமனுக்கும் தன்னை மறைத்துக்கொள்ளும் திருவடி என்கிறார். நான்முகன் என்ற சொல் ஒரு கருத்தோடு அமைக்கப்பெற்றுள்ளது. ஒரு முகம் உடையார் முன்புறம் காண வல்லரே அன்றி ஏனைய மூன்று திசைகளையும் காணாராயினர். இவன் நான்முகனாக இருந்தும், ஒரு நேரத்தில் எல்லாத் திசைகளையும் காண வல்லவனாயிருந்தும், தாமரை மலர்போன்ற இத்திருவடிகளைக் காணவில்லை என்றால், அவை தம்மை மறைத்துக் கொண்டன என்ற பொருளைத் தந்து நின்றது. இதனால் ஐந்தொழிலில் ‘மறைத்தல்’ தொழிலை குறிப்பிட்டாராயிற்று.

எஞ்சியுள்ளது ‘யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்’ என்பதாகும். நான்முகனுக்குத் தம்மை மறைத்துக்கொண்ட அத்திருவடிகள் எம்போன்றவரும் உய்கதி அடையும்படி வந்து ஆட்கொள்ளுகின்றன என்பதால் ‘அருளல்’ தொழிலைக் கூறினாராயிற்று.

‘ஆதியாம் பாதமலர்’ என்று தொடங்கியவர் ஐந்தொழிலையும் வரிசைப்படுத்திக் கூறிவிட்டு, இதற்கு அப்பால் வேறு ஒன்றும் இல்லையாதலால், அந்தமாம் செந்தளிர்கள் என்றார். அந்தம் என்று கூறியவுடன் நம் அறிவு கொண்டு காணும் எல்லையை மனத்துட் கொண்டு இதுதான் முடிவு இதற்கு அப்பால் ஒன்றுமில்லை என்று நினைந்துவிடுவோமோ என்று கருதிய அடிகளார், அந்தம் என்பது ஐந்தொழிலின் அந்தம் என்றுமட்டுமே கொள்ள வேண்டும் என்ற கருத்தைக் குறிப்பிடுகிறார். அத்திருவடிகட்கு அந்தம் என்று ஒன்று இல்லை; வாக்கு, மனோலயம் கடந்து நிற்கும் ஒன்றிற்கு அந்தம் கூறுவது எப்படி? எனவே, அந்தம் என்று இங்கு குறிப்பிட்டது ஐந்தொழிலின் அந்தமேயன்றித் திருவடிக்கு அந்தமொன்றில்லை என்பதைக் குறிக்க 'அந்தமாம் செந்தளிர்' என்றார். செந்தளிர் என்ற சொல் வளர்ச்சியைக் குறிக்கும் சொல்லாகும். முடிவு என்ற ஒன்று இல்லை. வளர்ந்து கொண்டேயுள்ளது என்பதை அறிவிக்க 'அந்தமாம் செந்தளிர்’ என்று கூறினார்.

சிவபுராணத்தில் தொடங்கிய திருவடிபற்றிய விளக்கம் நான்கு அகவல்களிலும் நீண்டு, திருச்சதகத்திலும் நுழைந்து, நீத்தல் விண்ணப்பத்தில் விரிந்து, திருவெம்பாவைக் கடைசிப் பாடலில் முழுவதுமாக மலர்ந்து நிற்கின்றது.

உலகில் தோன்றிய பல்வேறு சமயங்களும் தாம் தாம் கருதிய கடவுட் பொருளுக்கும் பல்வேறு வகையாகப் பெருமை சேர்த்தன. ஆனால், ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லாத ஒருவனுக்கு, வடிவு கற்பித்து, அதிலும் சிறப்பாகத் திருவடியைப் போற்றிய பெருமை சைவர்களுக்கே உரியதாகும்.

அடுத்தபடியாக வைணவர்களும் சில இடங்களில் திருவடிப் பெருமை பேசியுள்ளனர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியின் முதல் பாடலின் நான்காவது அடியில் 'துயர் அறு சுடர் அடி தொழுது எழல் என் மனனே’ (நாலாயிர திருவாய்மொழி -1) எனப் பாடியுள்ளமை இங்கு நோக்கத் தக்கது.

ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரைக் குறிப்பிடாமல், பொதுமறை கூறிய வள்ளுவப் பேராசானும் திருக்குறளின் முதல் அதிகாரத்தின் ஏழு இடங்களில் இறைவன் திருவடியைப் பற்றியே பேசுகின்றார்.

புத்தம், சைனம் முதலிய எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாயினும், அவர்கள் தமிழர்களாக இருப்பின் திருவடிப் பெருமை பேசாமல் இரார்.