2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

ஆசிரியனை மதிக்காமல் அவதிப்பட்ட இந்திரன் மறுபடியும் ஒரு தவறு செய்து விட்டான். அசுரர்களை வென்று வெற்றி வாகை சூடி நகரில் சுற்றி உலாவந்த போது செல்வச் சிறப்பு மிக்க தேவர்கள் தந்த கையுறைகளை ஆர்வத்தோடு பெற்று அவர்களைக் கவுரவித்தான். அவனுக்காகத் துர்வாச முனிவர் தந்த தாமரை மலரை உதாசீனம் செய்தான்; அதனால் அவன் பெற்ற சாபங்கள் இரண்டு. ஒன்று அவன் தலைமுடி பாண்டியன் ஒருவனால் சிதற வேண்டும் என்பது; மற்றொன்று அவன் ஊர்ந்து சென்ற வெள்ளையானை மண்ணுலகில் சென்று காட்டு யானையாக உழல வேண்டும் என்பது இரண்டாவதே இந்தக் கதை.

துர்வாச முனிவர் சிவலிங்கத்தை வழிபட்டுப் பூசனை செய்து அர்ச்சனை செய்து கொண்டிருந்த போது சிவன் சூடியிருந்த தாமரை மலர் ஒன்று விண்ணில் இருந்து விழுந்து அவர் கரத்தில் தங்கியது; இறைவன் தந்த மலரை நிறை மகிழ்வோடு எடுத்துக் கொண்டு வானவர் நகருக்குச் சென்றார். இந்திரனை வாழ்த்த வேண்டும் என்னும் உயரிய நோக்கில் அம்மலரைத் தம் பரிசாக அவனிடம் தந்தார்; சிவன் சிரத்தில் இருந்த மலரை அவன் கரத்தில் தந்த போது அவன் அதனை மதித்து வாங்கவில்லை; ஒரு கையாலேயே வாங்கி அதனை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான்.

செருக்குற்ற அந்த யானையும் பெருங்குற்றம் ஒன்று செய்தது; அதனைத் தன் துதிக்கையால் எடுத்துத் தன் காலில் வைத்து மிதிக்கத் தொடங்கியது; கசங்கிய அந்த மலர் அம்முனிவன் கண்களில் நெருப்புப் பொறியைக் கக்க வைத்தது. உருத்திரம் கொண்டு எழுந்த முக்கண் கடவுள் போலக் காத்திரம் கொண்டு தன் நேத்திரத்தைத் திறந்து பார்த்தார். அதில் கோபக் கனல் பொறிப்பட்டது. சாபம் உடனே அவர் வாயில் வெளிப்பட்டது.

"தலைக்கணம் மிக்க உன் தலையைப் பாண்டியன் ஒருவன் நிலைகுலையச் செய்வான் என்றும், மதிக்காமல் பூவை மிதித்த உன் மதயானை காட்டு யானையாக நூறு ஆண்டுகள் பூமியில் உழல்வதாக என்றும் சாபம் இட்டார். தலைவனை இழந்து நிலை கெட விரும்பாத தேவர்கள் முனிவனிடம் முறையிட்டு அவன் உயிரைப் போக்க வேண்டாம் என்று இரந்து கேட்டுக் கொண்டனர். தலைக்கு வந்தது அவன் தலை மணி முடியோடு போகட்டும் என்று திருத்தி அருள் செய்தார். வெள்ளை யானை கருப்பு யானையாக மாறியது. வேளைக்கு உணவும் நாளைக்கு ஒரு பவனியும் வந்த யானை காட்டு நிலங்களிலும் மேட்டு நிலங்களிலும் மழை வெய்யில் என்று பாராது வெறி கொண்டு திரிந்து உழன்றது. மண்ணுலகில் நூறு ஆண்டுகள் தன் நினைவு அற்று உழன்று திரிந்தது. பின்னர் ஆலவாயில் கடம்ப வனம் சென்ற போது கடந்த கால நினைவு தோன்றியது முன்பிறவியில் தான் பெற்றிருந்த பதவியையும் அதனை இழந்த அவதியையும் அறிந்தது. சிவனைச் சீர் பெற வணங்க விழைந்தது.

அங்கே பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி நறுந்தாமரை மலர்களைப் பறித்துக் கொண்டு இறைவன் திருத்தாளை வணங்கச் சிவலிங்கத்தைத் தேடியது. அங்கே சொக்கேசனின் திரு உருவத்தை நினைவுபடுத்தும் சிவலிங்கத்தைக் கண்டது. இந்திரன் வழிபட்டு விமானம்விட்டுச் சென்ற திருக்கோயில் அது என்பதை அறிந்தது. நீரும் மலரும் இட்டு நிமலனை வழிபட்டுப் போற்றியது. யானை செய்த வழிபாட்டுக்கு இறைவன் திருவுளம் இரங்கிக் காட்சி தந்து வேண்டுவது யாது?" என்று வினவினார்.

இந்திர விமானத்தைத் தாங்கும் எட்டு யானைகளோடு தானும் ஒரு சிற்பமாக அங்கு நிலைத்திருக்க வேண்டும் என வேண்டியது. அதன் கற்பனையைக் கேட்டுக் "கற்பக நாட்டில் இருக்க வேண்டிய நீ கடம்ப வனத்தில் இருப்பது ஏற்பது அன்று; இந்திரன் ஏறிச் செல்ல ஊர்தியின்றி அங்கே வாடுவான்; அவனை நாடிச் செல்வதே நீ எனக்குச் செய்யும் உயர் பணியாகும். தெய்வச் சிந்தனை உயர்ந்தது தான்; எனினும் உன் கடமையை விட்டு இங்கே இருக்க நினைப்பது மடமை யாகும்" என்று அறிவித்தார். "உடனே புறப்படுக" என்று பணித்தார்.

இந்திரன் ஏவல் ஆட்களும் யானையைத் தேடிவந்து அழைத்துச் செல்ல நின்றனர்; தன் ஆவல் அங்குச் சில பணிகள் செய்வது என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பியது. விரைவில் அப்பணிகளைச் செய்து முடித்து விட்டு விண்ணுலகம் வருவதாகச் செய்தி சொல்லி அனுப்பியது.

சிவலிங்கத்தின் மேற்குத் திசையில் தீர்த்தக் குளம் ஒன்றைத் தன் கூரிய கொம்புகளால் வெட்டித் தன் துதிக்கையால் மண்ணை வாரிப்போட்டு அழகிய கரை அமைத்துக் கட்டி முடித்தது. அதன் அருகே சிவனுக்கு ஒரு ஆலயமும் விநாயகர்க்கு ஒரு கோயிலும் அமைத்து வைத்தது. அதன்பின்னர்க் கிழக்குப் பக்கம் ஐராவதம் என்ற பெயரில் ஒரு நகரை உண்டாக்கி அங்கும் தன் தலைவன் பெயரால் 'இந்திரேச்சுவரம்' என்ற சிவன் கோயில் ஒன்று நிறுவியது. அது வைகையின் தென் கரையில் உள்ளது. இவ்விரு பணிகளையும் செய்துமுடித்து இந்திரன் அழைப்பை ஏற்றுத் தன் சொந்த நகருக்குத் திரும்பிச் சென்றது.

வெள்ளை யானை ஏற்படுத்திய இந்த மூன்று கோயில்களிலும் பக்தர்கள் சென்று வழிபட்டுப் பயன் அடைந்தனர். யானை வெட்டிய குளத்தில் நீராடி மேற்கே உள்ள சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டுப் பின் கிழக்கே சென்று யானை சென்ற வழியே வைகையை அடைந்து அதில் நீராடி இந்திரேச்சுரவரையும் வழிபட்டுப் பயன் அடைந்தனர்.

இந்திரன் கண்டெடுத்த விமானம் எழுப்பிய திருக்கோயில், அதனை அடுத்து யானை எடுத்த கோயில்கள் மக்களை ஈர்த்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/02&oldid=1110606" இலிருந்து மீள்விக்கப்பட்டது