திருவிளையாடற் புராணம்/12
நிறைவு கொண்டார். ஆட்சியைத் தந்து அரசனாக்குவதற்கு முன்பு அவனை மணமகனாக்கி இல்லறம் ஏற்கச் செய்ய வேண்டும் என்று கூறினார். முதலில் மணம் முடிக்கவிரும்பினார்.
உற்ற வயது வந்ததும் கற்ற தன் மகனுக்கு மண முடித்து வைக்க வேண்டு மென்று பெற்ற தாயும் தந்தையும் முடிவு செய்தனர். அழகுக்கும் கல்விக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வகையில் போற்றத் தக்க அரசர் குலத்துப் பெண்ணைத் தேட முனைந்தனர். வடபுலத்தில் மணவூர் என்னும் நகருக்கு அரசனாக விளங்கிய சோம சேகரன் என்னும் அரசன் மகள் காந்திமதியே தக்கவள் என முடிவு செய்தனர்.
அன்று இரவே சோமசேகரன் கனவில் இறைவன் எழுந்தருளி "நாம் மதுரையில் உறையும் சோமசுந்தரன்; நீ பாண்டியன் சுந்தரேசனின் மகன் உக்கிர குமாரனுக்கு; உன்மகளை மணம் முடித்துக் கொடு; காந்திமதியை அழைத்துக் கொண்டு சகவ ஏற்பாடுகளுடன் மதுரைக்குச் செல்வாயாக" என்று கூறினார்.
இறைவன் திருவாக்கை அமுத மொழி என ஏற்றுச் சோமசேகரன் அமைச்சர் படைத்தலைவருடன் மதுரையை அடைந்தான். சுந்தரபாண்டியன் அரண்மனையை அடைந்து கனவில்வந்து சொல்லிய செய்தியைச் சொல்லித் தன் மகளையும் அழைத்து வந்திருப்பதாகக் கூறினான். தடாதகை எந்தத் தடையும் சொல்லவில்லை. கண்ணுக்கு இனிய காரிகையைக்கண்டு மருமகள் ஆவதற்கு வேண்டிய கவினும் நலனும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தாள். அங்கலக்ஷணம் அனைத்தும் உடைய அப்பங்கயச் செல்வி போன்ற அரசமகளை அனைவரும் ஆமோதித்தனர். நாள் பார்த்துக் கோள் குறித்து அரசர்களுக்கு ஆள் மூலம் ஓலை போக்கிச் செய்தி சொல்லி மணநாள் ஏற்பாடு செய்தனர்.
தேவர்களும், விட்டுணு, பிரமன் முதலிய தெய்வங்களும் முனிவர்களும் மண்ணுக்குரிய மகிபர்களும் வேத வேதியரும் நகர மாந்தரும் கூடிய அரங்கில் இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
நாட்கள் சில நகர்ந்தன. நாட்டு ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்புவித்து விட்டுச் சுந்தரேசர் விடை பெற விரும்பினார். அதற்கு முன் அவன் சந்திக்க வேண்டிய பகைகளை எடுத்து உரைத்தார். "இந்திரனும் வருணனும் மேருமலையும் உனக்கு இடையூறு செய்வர். அவர்களை வெல்வதற்கு வேல், வளை, செண்டு என்ற மூன்று படைகளைத்தருகிறேன். பெற்றுக் கொள்க" என்று சொல்லி அவற்றை அவனிடம் தந்தார். நீண்ட காலம் மதுரையில் தங்கிவிட்டதால் தானும் தடாதகையாரும் திருக்கோயிலுக்குச் சென்று விட்டனர்; சிவகணங்கள் முன்னை வடிவம் கொண்டு தத்தம் பதவிகளைத் தாங்கக் கயிலை சென்றனர்.
உக்கிர குமாரன் நீதி நெறி கருதி ஆட்சி செய்து வந்தான்; வளங் கொழிக்கும் பாண்டிய நாட்டில் மக்களுக்கு யாதொரு குறையுமில்லை யாதலின் வேள்விகள் செய்து உயர் பதவிகள் பெற நினைத்தான். தொண்ணூற்று