திருவிளையாடற் புராணம்/23
மதம் கொண்ட யானை ஊழித்தியெனப் புறப்பட்டு வந்தது. அதன் வேகத்தையும் சீற்றத்தையும் கண்டு பாண்டியனின் படையினர் அஞ்சி அதனை எதிர்க்க முடியாது என்பதால் ஓடி ஒளித்தனர். பாண்டியனிடம் பதை பதைப்போடு இச் செய்தியைப் பகர்ந்தனர். விக்கிரமன் தன்னால் அதனை எதிர்த்து ஒழிக்க முடியாது என்பதை அறிந்தவனாய்க் காத்தற் கடவுளாகிய சோமசுந்தரரிடம் சென்று முறையிட்டான்.
அவன் குறை கேட்ட இறைவன் தான் அதனைக் கொல்வதற்கு ஓர் உதவி செய்ய வேண்டும்; உயர இருந்து அம்பு எய்வதற்கு ஏற்றபடி, அட்டாலை மண்டபம் ஒன்று கட்டித் தரக் கேட்டான். பதினாறு தூண்களை உடைய அம்மண்டபம் தற்காப்புடையதாக அமைந்தது.
வில்லைக் கையில் ஏந்தி அம்பறாத்துாணியை முதுகில் தாங்கிக் கரு நிறமுள்ள காளைப்பருவத்து வில் வீரனாக இறைவன் வந்து தோன்றி அம்மண்டபத்தின் மீது ஏறி யானை வரும் திக்கில் நின்று நரசிங்க அத்திரத்தை யானை மீது தொடுத்தார். அது இரணியனைப் போலக் கதறிக் கொண்டு விழுந்தது. அந்த நரசிம்ம வடிவத்தோடு அந்த அம்பு அங்கு நிலைத்து விட்டது. முனிவர்கள் பலர் வந்து வழிபட்டனர். பிரகலாதனும் அங்குவந்து தவம்,செய்து மேன்மைகளைப் பெற்றான் என்று கூறப்படுகிறது.
விக்கிரமன் ஆட்சி செய்து வரும் நாளில் மதுரையில் விருபாக்கன் என்னும் வேதியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி சுபவிரதை; இருவருக்கும் நெடுங்காலம் குழந்தைகளின்றிப் பின் தான தருமங்கள் செய்ய நிதானமாக ஒரு குழந்தை பிறந்தது. கவுரி என்பது அவள் பெயர்; இளம் வயது முதல் சிவனிடம் சிந்தை கொண்டு சைவ நெறியினைப் போற்றி வழிபட்டு வந்தாள். மணப்பருவம் வந்தது. மனத்துக்கு உகந்த மணாளன் அமையவில்லை; அதனால் பெற்றோர் வருந்தி இருந்தனர்.
வேதியர் குலத்து இளைஞன் ஒருவன் இவர்கள் வீட்டுக்கு விருந்தினனாக வந்தான். கோத்திரம் குலம் விசாரித்துச் சாத்திரப்படி அவனுக்கு மணம் முடிப்பது என்று நிச்சயித்தனர். மதம் மட்டும் மாறுபட்டிருந்தது; வைணவ குலத்தைச் சார்ந்தவன்; இம்முரண்பாடு ஒத்துப் போவதாக இல்லை; எனினும் நிச்சயித்த அவனை உதறித் தள்ள இயலவில்லை.
இருவருக்கும் திருமணம் நடந்தது; வாழ்க்கைப்பட்ட இடத்தில் சிக்கல் ஏற்பட்டது; அவளை அவர்கள் மதித்து நடத்தவில்லை. வீட்டை விட்டு வெளியேறும் போது அவள் சமையல் கட்டுக்குப் போகாதபடி தடுக்கப் பேரறையில் விட்டுப் பூட்டி வைத்தனர். அவள் கையால் சமைக்கக் கூடாது என்பது அவர்கள் விதி.
சிவனடியாருக்குச் சோறு போட்டுப் பழகிய அவள் இப்பொழுது வெறும் சடமாக அறையில் கிடப்பதை வெறுத்தாள். அவள் விழிகள் சிவனடியார் யாராவது வருவார்களா என்று தேடின. எதிர்பார்த்தபடி வயது முதிர்ந்த சிவனடியார் ஒருவர் பசியால் இளைத்து இவள் வீட்டுப்படியில் காலடி எடுத்து வைத்தார்.
வெளிக்கதவைத் திறந்து அவரை உள்ளே விட்டாள்.
சமைக்க முடியாதபடி பூட்டும் தாளும் அவளைத் தடுத்து நிறுத்தின. சிவனடியார் இதை உணர்ந்து அவர் ஒரு பார்வை பார்த்தார். தாளும் பூட்டும் தாமாகக் திறந்து கொண்டன; உள்ளே சென்று அடுப்புப் பற்ற வைத்தாள். சோறு சமைத்துக் கறியும் செய்தாள். இலை போட்டுச் சோறு பரிமாறி அவர் பசியையும் போக்கினாள்
வள்ளியை மணக்கவந்த முருகன் போல முதிய தோற்றத்தில் வந்த சிவனடியார் காளைப்பருவத்தில் அவள் கண்முன் நின்றார்; கற்பிற் சிறந்த அப்பொற்புடை நங்கை ஆடவன் ஒருவன் தனித்துத் தன் முன் நிற்பதைக் கண்டு அஞ்சினாள்; வியர்த்தாள்; ஒரு புறம் ஒதுங்கினாள்.
வெளியூருக்குச் சென்றிருந்த அவள் மாமனும் மாமியும் கணவனும் அலுத்துக் களைத்து வீட்டுக்குள் நுழைந்தனர்.
அவள் அவப்பெயருக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்நியன் ஒருவனோடு அவள் பேசிக் கொண்டிருந்தாள். அவள் நிலை அதோ கதி தான்; பாலகனாக அவர்கள் முன் தாவத் தொடங்கினார். முதியவராக வந்தவர் காளைப்பருவத்தோடு காட்சி அளித்துக் குழந்தையாகத் தவழ்வதைக் கண்டு கவுரி வியப்படைந்தாள்; இறைவன் திருவிளையாடல் இது என்பது அவள் அறிந்து கொண்டாள்.
"பக்கத்து வீட்டுத் தத்தனுடைய குழந்தை அது; பார்த்துச் கொள்ளச் சொல்லிச் சென்றார்கள்" என்று பக்குவமாக விடை சொன்னாள். எனினும் அக்குழந்தை சைவ வீட்டுப் பிள்ளை என்பதால் அவர்கள் கடிந்து கொண்டனர். "தூக்கி வெளியே எறி" என்று சொல்லி அக்குழந்தையை வெளியே போட்டார்கள். அவளையும் வீட்டைவிட்டு வெளியே போகச் சொன்னார்கள்.
சமய வெறுப்பின் அடிப்படையில் மிருகத்தனமாக நடந்து கொண்டதைக் கண்டு அவள் வருந்தினாள். குழந்தை விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது; அதனைச் சமய அடிப்படையில் அவர்கள் வெறுத்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
குழந்தையோடு வெளியே நடந்தாள். சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டு அழுதாள்; உமையாரிடத்து அதிக பக்தி இளமை முதல் கொண்டவளாயிற்று; மந்திரம் செபித்தாள்; அதற்கு மேல் அவளைச் சிவனார் சோதிக்க விரும்பவில்லை. அவள் காணும்போதே குழந்தை உருவம் மாறிப் பரம் பொருளாகிய சிவனார் பார்வதியோடு காட்சியளித்தார். இக்காட்சியைப் பாண்டிய நாட்டில் உள்ளவர்களும் கண்டு பேரானந்தம் அடைந்தனர்.
விக்கிரம பாண்டியனுக்குப் பின் அவன் மகன் இராசசேகர பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன் கலைகள் அறுபத்தி நான்கினையும் கற்க வேண்டியவன்; பரதத்தை ஒழித்து ஏனையவற்றை மட்டும் கற்றவனாக விளங்கினான். இறைவன் திருக்கூத்துக் கண்டு அப்பரதத்தைக் கற்பது மரியாதைக் குறைவு என்று விட்டு விட்டான்; அக்கலை பரமனுக்கே உரியது; பாமரனாகிய தான் கற்பது தவறு என்று பரதம் ஒன்று மட்டும் பயிலாத வனாக இருந்தான்.
அவன் வாழ்ந்த காலத்தில் சோழ நாட்டு அரசன் கரிகாற் சோழன் பரதத்தையும் கற்றிருந்தான். அவன் நாட்டில் இருந்து வந்த புலவன் ஒருவன் அதை ஒரு குறையாகச் சுட்டிக் காட்டினான். "சோழன் அறுபத்து நான்கு