திருவிளையாடற் புராணம்/26
வகையில் பத்தினிப் பெண் மற்றொருத்தியைத் தேடி மணம் செய்து கொண்டான்.
பாண்டியன் குலோத்துங்கன் ஈசுவரன் திருச்சந்நிதியை அடைந்து, "கருணாநிதியே! பழி அஞ்சும் பரம்பொருளே! என் விழி திறந்து உண்மை காணச் செய்தாய்" என்று கூறிப் போற்றி வணங்கித் தம் அரண்மனை நோக்கிச் சென்றான். பின் தன் ஆட்சியைச் செம்மையுற நடத்திச் செங்கோலுக்குச் சிறப்புச் சேர்த்தான்.
குலோத்துங்கன் ஆட்சி செய்த காலத்தில் பாண்டிய நாட்டில் அவந்தி என்னும் நகரில் பார்ப்பனன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தும் அவன் தாழ்ந்த ஒழுக்கத்தை உடையவனாக இருந்தான்; காமம், களவு, கொலை இவற்றுக்கு அஞ்சாதவனாக இருந்தான்.
அவன் தவறான ஒழுக்கத்தை அவன் தந்தை கடிந்து வந்தார். அப்பொழுதும் அவன் திருந்தியபாடு இல்லை. தன் தந்தை தன்னைக் கண்டிப்பதை அவன்விரும்பவில்லை. தாய் தடுத்தும் அவன் தன் தந்தையைக் கொலை செய்து விட்டான்; அவர் உடலை வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்து விட்டான்.
அங்கே இருந்தால் அரசன் ஆட்கள் பிடித்துச் சிறையில் இடுவார்கள் என்று அஞ்சி வீட்டில் உள்ள விலை மிக்க பொருள்களை எடுத்துச் சுருட்டிக் கொண்டு வேற்றூர் சென்று பிழைக்கலாம் என்று புறப்பட்டான். அவனோடு அவன் தாயையும் அழைத்துச் சென்றான்.
காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது முரட்டுக் கள்வர் சிலர் வழிமடக்கி அவன் பொருள்களைக் கவர்ந்தனர்; அவன் தாயை இழுத்துச் சென்று அவளைக் கொடுமைப்படுத்தினர். அவள் வாழ்க்கை சீரழிந்தது. இவன் மட்டும் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொண்டு ஓடி வந்து விட்டான். கைப்பொருளை இழந்தான்: தாயையும் பிரிந்தான்; தந்தையையும் கொலை செய்து விட்டான்.
அரசன் ஆணையில் இருந்து தப்பித்துக் கொண்டான் என்றாலும் அவன் மனம் அமைதியை இழந்து விட்டது. அவன் பழைய காலத் தவறுகள், அந்த நினைவுகள் அவனை அலைக்கழித்தன. சட்டத்தில் இருந்து தப்பியவன் தன்னிடமிருந்தே தப்ப முடியவில்லை. கால் சென்ற வழியே அவன் பித்துப் பிடித்தவன் போல் அலைந்து திரிந்தான். எதுவும் பிடிப்பு இல்லாமல் அடிபட்ட நாய் போல் வேதனையோடு உலாவினான்.
மதுரைத் தெருக்களில் நடந்து சென்றான். மீனாட்சி அம்மை திருக்கோயில் முன் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது சொக்கேசர் தம் திருக்கோயிலுக்கு வெளிவயே மீனாட்சி அம்மையாரோடு சொக்கட்டான் ஆடிக் கொண்டு இருந்தார். கோயிலுள் அடைபட்டு இருந்த அவர்கள் விடுபட்டு வேடுவனும் வேடுவச்சியுமாக அங்கே அமர்ந்து ஆடிக் கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த அப்பார்ப்பன இளைஞன் இவர்கள் பக்கம் வந்து நின்றான்.
மீனாட்சி அம்மை இவனைக் கண்ணெடுத்துப் பார்க்க விரும்பவில்லை. கொலைப்பாதகன் என்பதால் அவனை வெறுத்து ஒதுக்கினாள்; ஒளிபெற வேண்டிய மாணிக்கம் சகதியில் விழுந்து விட்டதைப் போன்று அறிவு மிக்க வாழ்க்கை வாழ வேண்டியவன் பாவக் குழியில் விழுந்து பரிதாபத்துக்கு உரியவனாக இருந்தான்; பரமசிவன் அருள் உள்ளம் கொண்டு இந்த மருட்சி கொண்டவனைக் காப்பாற்ற நினைத்தார் வேட்டுவ உருவில் அவனிடம் அங்கு வந்து ஏன் என்று கேட்டு அறிய முற்பட்டார்.
அவன் தான் செய்த பழிபாவங்களை எடுத்துச் சொல்லி விமோசனம் தேட வந்ததாக உரைத்தான். அவன் திருந்தி வாழ முடியும் என்பதை இறைவன் அறிந்தவர். மானுடன் தவறு செய்துவிட்டாலே அவன் வாழத் தகுதியற்றவன் அல்லன் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. சட்டங்கள் மற்றவர்கள் அந்தத் தவறுகள். செய்யக்கூடாது என்பதைக் காட்டி அச்சுறுத்தவே கடுந்தண்டனைகள் விதிக்கின்றன. இறைவன் பாவ மன்னிப்புத் தந்து புனர்வாழ்வு தர விரும்பினார். பாவம் தீர வழி வகைகளைக் கூறினார்.
"அதோ எதிரே இருக்கும் பொற்றாமரைக் குளத்தில் முழுகி இறைவன் நற்றாளை நாள்தோறும் வணங்கி வழிபடு, ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி நீ வாழ முற்படு; விரதங்களை மேற் கொண்டு தூயவனாக நடந்து கொள்க. நாளைச்கு ஒரு முறைதான் உணவு உட் கொள்ள வேண்டும்; வேளைக்கு மூன்று முறை சுற்றி வலம் வரவேண்டும்.
மற்றும் நீ எப்பொழுதும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்; மனம் நம்மை ஏமாற்றி விடும்; யாரும் பாக்கவில்லையே, நாம் தவறு செய்தால் என்ன என்று நினைக்கலாம், நீயே உனக்குச் காட்சியாக இருந்து மனம் நொந்து கொள்ள வேண்டி வரும்; அதுமட்டுமல்ல நமக்கு எல்லாம் மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் நம் செயல்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்; பாவங்களில் இருந்து தப்பமுடியாது; அவன் அருள் வேண்டி மனம் கரைந்து அழுதால் இறைவன் மன்னிப்பான்; நெருப்பில் புடம் வைத்துக் காய்ச்சும் பொன்போல நீ புத்தொளி பெறுவாய்; மறுபடியும் நீ மனிதனாக வாழலாம்; இளம் வயது; உன் வாழ்வு பாழாகக் கூடாது; திருந்தி வாழ்க' என்று சொல்லி அனுப்பினார்.
அவனும் அப்புண்ணிய தீர்த்தத்தில் முழுகி நீராடிப் பாவங்கள் தீர்த்து இறைவனை வழி பட்டு மேல்நிலை அடைந்தான்; அவன் செய்த மாபாதகங்கள் மன்னிக்கப்பட்டன. அவன் புதிய மனிதனாக மாறி அத்தகைய தவறுகள் செய்யக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து உயர்வு அடைந்தான். மறுபடியும் அந்தணனுக்கு உரிய நல்லொழுக்கமும், தெய்வ வழிபாடும், கல்வி நலமும் வாய்ந்தவனாகத் திகழ்ந்தான். சமுதாயத்தில் அவனும் ஒரு நல்ல குடிமகனாக வாழ்ந்து காட்டினான்.
இதுவும் குலோத்துங்க சோழன் காலத்து நிகழ்ச்சியாகும். பரதேசி ஒருவன் மதுரைக்கு வந்து சுதேசி போலப் பழகித் தேசிகனாக இருந்து இளைஞர்களுக்கு வாள் பயிற்சி கற்றுத் தந்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் நாளும் இறைவன் தாளை வணங்கி வழிபட்டு வரும் நற்பழக்கம் உடையவனாக இருந்தான். அவன் மானவருள் ஒருவன் சித்தன் என்பான் வாள் பயிற்சியில் தேர்ச்சி பெற்றுத் தன்னிகரற்று விளங்கினான். ஆசிரியருக்குப் போட்டியாகப் பயிற்சிக் கூடம் அமைத்து மாணவர்களை ஈர்த்தான். ஆசிரியனைவிட மாணவனே மிக்க வருவாய் பெற்று வந்தான். எனினும் ஆசிரியனை ஒன்றும் இல்லாதவனாகச் செய்ய வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டான்.
இது அவன் செய்த தவறு; அடுத்தது அவன் மனைவியை அடைய ஆசைப்பட்டான்; ஆசிரியர் இல்லாத போது வீட்டுக் கதவைத் தட்டி வெளியே வரவழைத்து அவள் கையைப்பிடித்து இழுத்துத் தகாத உறவு கொள்ள விழைந்தான். அவள் அவனை வெளியே தள்ளித் தாளிட்டுக்கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.
கற்பிற் சிறந்த அப்பொற்பினாள் சித்தன் செய்யும் சிறுமைகளைக் கணவனிடம் எடுத்துக் கூறாது மனத்தில் அடக்கிக் கொண்டாள்; சொன்னால் கணவனும் அவனும் மோதிக்கொள்ள வேண்டிவரும். இல்லாவிட்டாலும்