திருவிளையாடற் புராணம்/33
முற்பிறவியில் அவனை அடைய முடியாமல் ஏங்கித் தவிர்த்தவர்கள் இப்பிறவியில் கூடி இன்பம் பெற்றனர். அவன் அவர்களை விட்டு மறைந்ததும் வந்தவன் வைசியன் அல்லன்; மதுரைக் கடவுள் என்று அறிந்தனர். பிறவிப் பயன் பெற்றோம் என்று மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் நன்மைந்தர்களைப் பெற்று மன நிறைவோடு வாழ்ந்தனர். அப்பிள்ளைகளும் வலிமையும் ஆற்றலும் அறிவும் சீலமும் பெற்றுப் பெருமை சேர்த்தார்கள்.
ரிஷிகள் ஆணவம் அடங்கினர். அவர் பத்தினிமார்கள் இறைவனைக் கூடும் பேறு பெற்றனர். அதற்காக ஒரு பிறவி எடுத்து அவனுக்காகவே காத்திருந்து நன்மை அடைந்தனர்.
திருக்கைலாயமலையில் ஆலமர நிழலில் சிவனாரின் திருத்தொடையின் மீது உமையம்மையார் இருந்து கொண்டு அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்க, பூதத் தலைவர்களுக்கும் சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் சிவ நெறிகளையும் தருமங்களையும் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது முருகனுக்குப் பர்ல் ஈந்த இயக்கப் பெண்கள் அறுவரும் அடக்கமாக விபூதியும் ருத்திராட்சிதமும் அணிந்து கொண்டு இறைவனிடம் "எமக்கு அட்டமாசித்திகளை அறிவித்தருள்க" என்று வேண்டினார்.
இறைவனும் அவர்களுக்கு அவற்றை உபதேசிக்க அவர்கள் உடனே அவற்றை மறந்துவிட்டனர். மறதி அவர்களுக்கு இழப்பைத் தந்தது. சிவனார் கோபித்துப் பொறுப்பற்ற நீங்கள் பட்டமங்கை என்னுரை ஊரில் பாறாங்கல்லாகக் கிடக்கக்கடவது என்று சபித்தார். "விமோசனம்" எப்படி என்று கேட்டார்கள். ஆயிரம் ஆண்டுகள் அங்கே கல்லாகக் கிடந்த பின் அங்கு மதுரையில் இருக்கும் சோம சுந்தரக் கடவுளாக யாம்வருவோம். அட்டமாசித்திகளின் பெயர்களும் அவற்றின் விவரமும் அங்கு மீண்டும் கூறுவோம்" என்று அறிவித்தருளினார்.
அவ்வாறே அவ்வியக்கியர் அனைவரும் பட்ட மங்கையில் கெட்டொழிந்த கற்களாய்க் கிடந்தனர். ஆயிரம் வருடம் அகன்றபின் சோம சுந்தரர் ஆசிரிய உருவில் அங்கு வந்து அவர்களை எழுப்பினர்; எழுந்த கன்னியர் அறுவரும் ஆசிரியனின் அருளைப் பெறக் காலில் விழுந்து வணங்கினர். அவர் அவர்கள் சிரமேற் கரம் வைத்து அட்டமாசித்திகள் இவை என அறிவித்து அருளினார்.
1) அணிமா | — | சிறிய உயிரினும் தான் பரமாணுவாய்ச் சென்றிருக்கும் சிறுமையாகும். |
2) மகிமா | — | பொருள்களின் உள்ளும் புறமும் வியாபித்திருக்கும் பெருமையாகும். |
3) வகிமா | — | மேருமலையைப் போலச் சுமையாக இருக்கும் பொருளைத் தூக்கினால் எளிதாக (இலகுவாக) இருப்பதாம். |
4) கரிமா | — | எளியதும் வலியதாகத் தோன்றுதல். |
5) பிராப்தி | — | நினைத்த இடத்துக்குச் செல்லுதல். |
6) பிராகாமியம் | — | கூடுவிட்டுக் கூடு பாய்தல்; எங்கிருக்கும் பொருளையும் தருவித்து அடைதல்
எதையும் காணுதல் முதலியன. |
7) ஈசத்துவம் | — | முத்தொழிலையும் தன் விருப்பப்படி செய்தலும் சூரியன் முதலிய கிரகங் கள் தன் ஏவலைக் கேட்டலும். |
8) வசித்துவம் | — | இந்திரன் முதலான தேவர்களையும் அசுரர்களையும் மனிதர்களையும் விளங்குகளையும் தன்வசியம் ஆக்கிக் கொள்ளுதல். |
இறைவனை அறிந்த யோகியர்கள் இந்தச் சித்திகளை அறிவார்கள்; ஆனால் செயல்படுத்த மாட்டார்கள்; இவை நாடிய பொருளைத் தரும்; தேடிய தகவல்களைத் தரும்; எனினும் அற்ப சுகத்துக்கு ஆசைப்பட்டுச் சித்திகளை அடைய உத்தம யோகியர்கள் விரும்பமாட்டார்கள்; அதை விட உயர்ந்த மனநிலையில் வாழவேண்டுவார்கள் என்று அறிவித்தார்.
ஆசிரியரிடம் சித்திகளைப்பற்றி அறிந்தவர்கள் உமா பார்வதியை மனத்தில் தியானித்து அதன் பயனாக அட்டமாசித்திகளை நன்கு பயின்று விண்வழியே சென்று தாம் உறையும் திருக்கைலாய மலையை அடைந்தனர்.
சோழனுக்கும் பாண்டியனுக்கும் அக்காலத்தில் நல்லுறவு இல்லாமல் இருந்தது. பொதுவாகச் சோழர்கள் அக்காலத்தில் சமண சமயத்தை ஆதரித்து வந்தனர். விதி விலக்காக ஒரு சோழன் இருந்தான். அவன் காடு வெட்டிச் சோழன் என்று அழைக்கப்பட்டான்.