திருவிளையாடற் புராணம்/37
இராசேந்திரனுக்குப் பிறகு அவன் மரபில் வந்தவன் சுந்தரேச பாதசேகரன் என்பான். நாட்டில் வரிப்பணத்தில் ஈட்டியவை கொண்டு சிவப்பணிக்கே செலவிட்டான். நாட்டுக்காவலுக்கு வேண்டிய சேனைகளைத் திரட்டவில்லை. படை பலம் குறைந்திருந்த அவனைச் சோழன் முற்றுகை இட்டான். 'ஆயிரத்துக்கு ஒரு வீரன்' என்று புகழப்பட்ட அச்சோழன் முன் இவன் நிற்க முடியவில்லை. இவன் இறைவனிடம் முறையிட அவர் 'அனைத்துக்கும் ஒரு வீரன்' என்று அறிவித்துக் கொண்டு வேடுவத்தலைவனாக வந்து அவர்களை விரட்டி அடித்தார். அவர்தலை மறைந்ததும் மறுபடியும் சோழன் வந்து தாக்கத் தொடங்கினான்.
இறைவன் சோழனுக்குத் தக்க அறிவு வரவில்லை என்பதால் அவன் அழிவிற்கு வழி செய்தார். இருவரும் மடு ஒன்றில் விழுந்து தவித்தனர். பாண்டியன் இறை அருளால் கரை ஏறினான்,சோழன் ஏறமுடியாமல் இறந்து ஒழிந்தான். மடுவில் வீழ்த்தி அவனை ஒழித்துக் கட்டினார்.