39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

மதுரை நகரில் செட்டித் தெருவில் வணிகன் ஒருவன் செல்வனாய் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் தனபதி, அவன் மனைவியின் பெயர் சுசீலை. மக்கட்செல்வம் இன்றித் தன் தங்கையின் மகனைத் தத்து எடுத்து வளர்த்தனர். குழந்தை தன் உடைமை ஆகியதும் தன் தங்கையை அவனும் அவன் மனைவியும் மதிக்காமல் புறக்கணித்தனர்.

அவளுக்கு அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை; தன் மகனைக் கேட்டுத் திரும்பப் பெற்றுக் கொண்டாள். அதற்குப் பிறகு அவர்களுக்கு அந்த ஊரில் இருக்கப் பிடிக்கவில்லை. தன் சொத்து முழுவதையும் அந்தச் சிறுவனுக்கு எழுதி வைத்து விட்டுத் தேசாந்திரம் போய் விட்டனர். சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. தங்கையின் கணவரும் இறந்து விட்டார்; அந்தக் குடும்பத்திற்கு ஆண்திக்கு இல்லை; அதனால் அந்தச் செல்வனின் தாயாதியர் முரடடுத் தனமாக அவள் சொத்துக்களைக் கைப்பற்றி அவர்களை ஆதரவு அற்ற வர்களாக்கி விட்டனர்.

அவள் இறைவனிடம் சென்று முறையிட்டாள். நீ அவர்கள் மீது வழக்குத் தொடு; நான் வந்து உதவுகிறேன்' என்று கனவில் வந்து கூறினார்.

அதன்படி துணிந்து அவர்களை வழக்கு மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினாள். இறைவன் அச்சிறுவனின் மாமன் வடிவில் வந்து சாட்சி சொன்னார்.

"யான் போட்ட அணிகள் என்ன ஆயிற்று? முடிக்குப் போட்ட தலைமுடி என்ன ஆயிற்று? கழுத்துச் சங்கிலி எங்கே? பட்டு உடை தந்தேன்; இன்று துட்டு எதுவும் இல்லாமல் துவள்கின்றாய். என் சொத்து உனக்கு என்று எழுதி வைத்தேன். அதுமட்டுமல்ல நான் உயிரோடு இருக்கும்போது தாயாதியர்க்கு என்ன உரிமை இருக்கிறது" என்று வழக்குப்பேசினார்.

அவர்கள் இவன் போலி மனிதன் என்று வற்புறுத்தினர் அவர்களிடம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத நெருக்கமான நிகழ்ச்சிகளைச் சொல்லித் தான் தான் மாமன் என்பதைக் கூறினான்.

தாயாதியர் தோல்வி அடையத் தங்கை அண்ணனை வீட்டுக்கு அழைத்தாள். சிவபெருமான் தன்பணியை முடித்துவிட்டு மறைந்து விட்டார். சாட்சி சொன்னது இறைவன் என்பதை அறிந்து வியப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/39&oldid=1113090" இலிருந்து மீள்விக்கப்பட்டது