திருவிளையாடற் புராணம்/51
மதுரையில் சங்கம் இருந்தது என்றும், நாற்பத்தெட்டு புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர் என்றும், நாற்பத்து ஒன்பதாவது புலவராகச் சோமசுந்தரர் அங்குத் தலைமை ஏற்றார் என்றும் கூறப்படுகின்றன. பிரமனுக்கு மூன்று மனைவியர்; சரசுவதி, சாவித்திரி, காயத்திரி என்பவர் ஆவார். இம்மூவருடன் பிரமன் காசிப்பதியில் எட்டு அசுவமேத யாகம் செய்து முடித்தபின் கங்கையில் முழுகிக் காசி விசுவநாதரை வழிபடச் சென்றான். வழியில் சரசுவதி வித்தியாதரப் பெண் ஒருத்தி பாடிக் கொண்டிருந்த இசை கேட்டு மயங்கிக் காலம் தாழ்த்தினாள். பிரமன் மற்றைய இருவரோடும் முழுகி எழுந்து கரை ஏறினான்.
காலம் தாழ்த்தி வந்த கலைமகளைப் பிரமன் கடிந்து கொண்டான். "நீ மானிட உலகுக்குச் சென்று பல காலம் உழல்வாயாக" என்று சபித்தான். உன் நாவில் குடி கொண்டிருக்கும் நான் உன்னைவிட்டு எப்படிப் பிரிய முடியும்? கல்வித் துணையில்லாமல் வாழ்க்கைத்துணைக்கு மற்றவர்கள் இருந்தால் உனக்குப் போதுமா? பிரமனிடம் உலகம் ஞானத்தை எதிர்பார்க்கிறது. அதை எடுத்துச் சொல்லக் கல்வித் துணையாக நான் இல்லாமல் எப்படி இயங்க முடியும். நான் அப்படிப் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லையே; இசைக் கலை என்னை இழுத்தது; அதை நீர் வசைச் செயலாகக் கருதுவது பொருந்துமா? ஊனப் பிறவி எடுத்து உழல்வதைத் தவிர்த்து ஞானப் பிறவி எடுக்கும்படி சபியுங்கள்' என்றாள்.
அவ்வாறே அதனை மாற்றிப் பாண்டிய நாட்டில் அகரம் நீங்கலாக மற்றய எழுத்துக்கள் நாற்பத்து எட்டும் நாற்பத்தெட்டுப் புலவராகப் பிறக்கட்டும் என்று சாபத்தை மாற்றித் தந்தார். அகரம் முதல் எழுத்து; அது போல் ஆதிபகவனே உலகத்துக்கு முதல்வனாவான்; சோமசுந்தரர் தாம் அம்முதலிடத்துக்குப் புலவராக வருவார்' என்று கூறி அருளினார்.
அவ்வாறே நாற்பத்தெட்டு எழுத்துக்களும் நூற் புலவர்களாகத் தோன்றினர். அவர்கள் வடமொழியும் தமிழும் நன்கு கற்றவராக விளங்கினர். அகத்தியர் முதலாகத் தொல்காப்பியர் வரை எழுதிய இலக்கண நூல்களை ஆராய்ந்தனர். முன்னோர் பாடிய பாடல்களைத் தொகுத்து அருளினர். அவர்களும் அகம் புறம் என்னும் பொருள் பற்றிப் பலபாடல்களைப் புனைந்தனர். அவர்களை எல்லாம் அழைத்துச் சோமசுந்தரர் ஒரு புலவராக அவதரித்து மதுரைக்குக் கொண்டு வந்தார்.
பாண்டியன் வம்மிச சேகரனைச் சுந்தரர் கோயிலுக்கு வடமேற்கே மண்டபம் ஒன்றைக் கட்டி அதிலே அவர் களை அமர்த்தினார். அது கண்டு பழம் புலவர்கள் சிலர் மனம் புழுங்கினர். புதுப்புலவர்கள் சிலர் அங்கு இடம் தேடி வந்தனர். அவர்கள் இந்த நாற்பத்து எட்டுப் புலவருடன் வாதிட்டும் புதிய கவிதைகள் புனைந்தும் கல்வித்திறம் காட்டியும் அங்கு இடம் பிடிக்க முனைந்தனர் வந்தவர்கள் அனைவரும் தோற்று அங்கு இடமின்றித் திரும்பினர்.
இந்த வாதுகளையும் மோதல்களையும் தவிர்க்கப் புலவர்கள் சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டனர். அவர்கள் குறை கேட்டுக் கறை மிடற்றன் ஆகிய சுந்தரர் புலவர் வடிவில் வந்து கையில் ஒரு பலகையை ஏந்தி வந்தார். "இது ஒரு முழம் சதுர அளவு கொண்டது; ஓர் ஆள் அமரக் கூடியது; புலவர்கள் அமர இது நீளும் தன்மையது; தகுதி உடைவர்க்கே இது இடம் கொடுக்கும்" என்றார். சங்கப் பலகை அம்மண்டபத்தில் வைக்கப்பட்டது. பரம் பொருளாகிய இறைவனைத் தலைமைப் புலவராகக் கொண்ட அந்தத் தமிழ்ச் சங்கம் பல பாடல்களைப் படைத்துத் தந்தது. முன்னோர் பாடிய பாடல்கள் பலவற்றை ஆராய்ந்தது. அவற்றை யார் பாடியது என்று இனம் காண முடியாமல் அவர்கள் தடுமாறினர். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என வழங்கும் சங்கப் பாடல்களைப் புலவர்கள் பெயர் அறிவித்து இன்னார் பாடியவை என்று தெரிந்து சுந்தரர் பிரித்துக் காட்டினார். மற்றும் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, பரிபாடல், பத்துப்பாட்டு எனப் பொருள் பற்றியும் அடி வரையறை பற்றியும் அவற்றைத் தொகுத்துத் தந்தனர். அச்சங்கத்தில் பங்கு கொண்டவர்களுள் கபிலர், பரணர், நக்கீரர். அல்லையார் முதலிய புலவர்கள் குறிப்பிடத் தக்கவர் ஆவர். இவர்கள் ஆய்வு மன்றங்களுக்குச் சோமசுந்தரரே தலைமை வகித்தார்; இவர்கள் முன்னோர் செய்த நூல்களையே யன்றிச் சம காலத்து நூல்களையும் தரம் கண்டு பிரித்து வகைப்படுத்தினர்.
சைவம் தழைத்த மதுரையில் தமிழ் மணமும் கலந்து வீசியது. கோயில் வழிபாடுகள் மட்டும் பேசப்பட்ட அக்கோயில் வளாகத்தில் தமிழ்க் கவிதையும் இடம் கொண்டது. தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பாண்டியர்கள் தமிழ் வளர்க்க முற்பட்டனர். மதுரைத் தலவரலாற்றிலேயே இது ஒரு திருப்பு முனையாக அமைந்தது இதுவரை சோழரோடு பாண்டியர்கள் செய்த போர்களும் அத்தலத்தில் வழிபட்டோர் அடைந்த சிறப்புகளுமே கூறப்பட்டு வந்தன. இனிப் புலவர்களின் வரவும் தமிழ் வளர்ச்சியும் மதுரைக்குப் பெருமை சேர்க்க இச்சங்கம் பெரிதும் உதவியது என்ற செய்தியும் கூறப்படுகின்றன.