திருவிளையாடற் புராணம்/54
செருக்குமிக்க புலவனாகிய நக்கீரன் தமிழிலக்கியம் கற்றவன்;ஆனால் பொருள் இலக்கணம், முழுவதும் கற்றிலன். தமிழ் மொழிக்கு எழுத்து, சொல் இவற்றிற்கேயன்றிப் பொருளுக்கும் இலக்கணம் உண்டு என்பதை மறந்து விட்டான்; அதை அவன் சரியாக அறியவில்லை என்பது தெரியவந்தது.
வழு நிலை, வழா நிலை, வழு அமைதி என்ற மூன்று நிலைகள் உண்டு. வழு நிலை என்பது தவறாகக் கூறுதல் என்பதாகும். பானை உடைந்தது என்று கூற வேண்டியதைப் பானை உடைந்தான் என்று கூறுவது வழு நிலையாகும். இது பிழை பட்ட தொடராகும்.
பாவை வந்தாள்; பூங்கொடி வந்தாள் என்பவை பாவை போன்றவள் வந்தாள், பூங்கொடி போன்றவள் வந்தாள் என்று பொருள் தருவனவாகும். இவை உயர்திணை முடிவு கொண்டது வழு எனவும் அவை பெண்ணை உணர்த்துவதால் வழு அமைதியாகும் என்றும் கூறுவர்.
அதே போலக் காதல் உணர்வால் தன் காதலியின் கூந்தல் மணம் இயற்கையானது என்று கருதுவது தக்கதாகும்.
இந்த நுட்பத்தை எல்லாம் அறியாமல் எல்லாத் தொடர்களும் வழா நிலையாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது போதிய இலக்கண்ப் பயிற்சி இன்மையே யாகும். அதனால் நக்கீரன் பொருள் இலக்கணம் கற்க வேண்டும் என்று இறைவன் விரும்பினார்.
அதற்குத் தக்க ஆசிரியர் யார் என்று ஆராய்ந்தார். அகத்தியர் தம்மிடம் பொருள் இலக்கணம் கற்றுப் பொதிகை மலையில் தங்கி இருப்பது அவருக்குத் தெரியும். அவரை வரவழைத்து நக்கீரனுக்குத் தமிழ் வழாநிலை வழு அமைதிகள் பற்றிய இலக்கணம் அறிவித்தார்.
கவிஞன் உணர்வுபடப் பாடும் போது அதில் பொருட் குற்றம் காண்பது அறியாமையாகும்.
"நிலா நிலா ஒடிவா நில்லாமல் இங்கு ஓடிவா" என்று பாடுவதாகக் கொண்டால் நிலா எப்படி நிலம் நோக்கி வரும் என்று கேட்டால் அந்தப் பாட்டுக்கே வாழ்வு இல்லாமல் போய்விடும்.
சிறுவர்களுக்குக் கதைகள் கூறும்போது காக்கை நரி பேசுவதைக் சொன்னால் அது எப்படிப் பேசும் என்று கேட்டால் கதைகளே சொல்ல முடியாமற் போய்விடும்.
புராணங்களும் தெய்வங்களைப் பற்றியும் கடவுளரைப் பற்றியும் கதைகள் கூறுகின்றன. இந்திர உலகம் எங்கே இருக்கிறது. சிவ லோகம் எங்கே உள்ளது. வைகுந்தம் பிரம லோகம் என்பவை வரை படங்களில் இல்லையே என்று கேட்டால் இப்புராணங்களுக்கே இடமில்லாமல் போய்விடும். இவை எல்லாம் மானிடர் உயர்வதற்குச் சொல்லப்படும் கதைகள். இவற்றில் பொருள்குற்றம் காண்பது பிழையாகும்.
அகத்தியர் சென்ற பின்பு மீனாட்சி அம்மையார் அகத்தியரைக் கொண்டு ஏன் நீர் இலக்கணம் சொல்லித் தர வேண்டும்? நீரே நேரில் சொல்லித் தரக் கூடாதா என்று சோமசுந்தரரைக் கேட்டார். அதற்கு அவர் "நக்கீரன் எதிர்க்கட்சியில் இருந்து பழகியவன். அதனால் ஆளும் கட்சி எது சொன்னாலும் குற்றம் காண்பது அவன் இயற்கை; செவி கொடுத்துக் கேட்க மாட்டான் . நம்பவும் மாட்டான். அதனால் தான் அகத்தியரைக் கொண்டு சொல்ல வேண்டுவதாயிற்று" என்று விளக்கினார்.