திருவிளையாடற் புராணம்/59
ஆடி மாதம் முடிவதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று ஓடி அரசனிடம் உரையுங்கள் என்று சொல்லப் படைத் தலைவர்களை வாதவூரர் அனுப்பிவைத்தார். அதே சமயத்தில் கோடிப் பொன் கொண்டு கோயிற் பணி செய்து அழித்ததையும் அவர்கள் சென்று உரைத்தனர்' அரசன் அவசரப்பட்டு ஆவேசம் கொள்ளாமல் அவர்குறிப்பிட்ட மாதம் ஆடி வரை உரையாடாமல் காத்திருந்தான்.
ஆடி இறுதியில் மாணிக்க வாசகரை அழைத்துப் பாண்டிய அரசன் "இனிக்குதிரைகள் எப்பொழுதுவரும்?" என்று விசாரித்தான். அவர் "இன்று முதல் மூன்று நாட்களில் அவை வந்து விடும்". என்று கூறி அவை நிற்றற்குக் கொட்டகைகளையும், குடித்தற்கு நீர்த் தொட்டிகளையும், கட்டி வைக்கக் கயிறுகளையும் தயாரித்து வைக்கச் சொன்னார்.
அவர் குறிப்பிட்ட மூன்று நாட்களும் கழிந்தன நம்பிக்கை இழந்து அரசன் அவரைக் கட்டி இழுத்து வந்து ஒறுக்குமாறு கட்டளை இட்டான்.
கொலையாட்கள் அவரை இழுத்து வந்து அவர் மீது கற்களை அடுக்கி வைத்துச் சுமை ஏற்றினர், சொற்களைக் கடுமையாக்கி வருத்தினர். கால்களில் விலங்கிட்டு இழுத்துச் சென்றனர். கைகளில் கிட்டி இட்டு இறுக்கினர். அவர்கள் கடுமையான தண்டனைக்கு அஞ்சாது இறைவனை நினைத்து அவர் திருவடிகளே சரணம் என்று செயலிழந்து நின்றார். இறைவன் திருவருளால் அவரை அவர்கள் எவ்வளவு வாட்டினாலும் அவர் அதனால் பாதிக்கப்படவில்லை.
அதற்கு மேலும் காலம் தாழ்த்தக் கூடாது என்று இறைவன் கருணை கூர்ந்து ஆடி முடிவதற்குள் அன்று மாலைப் பொழுது காட்டில் உள்ள நரிகளைப் பரிகளாக்கி (பரி-குதிரை) கண நாதர்களைக் குதிரைச் சேவகர்களாக மாறச் செய்து, தானும் அவர்களுள் ஒருவனாகத் தலைமை தாங்கிக் குதிரைகளோடு நகர் வந்து சேர்ந்தார். வரவை எதிர்பார்த்த அரசனுக்கு அக்காட்சி துயர் தீர்க்கும் மருந்து ஆகியது.
குதிரை வீரர்களுள் தலைமை தாங்கி வந்த இறைவன் அக்குதிரைகளை அரசனிடம் சேர்ப்பித்தார். "அரசனே! உமது அமைச்சர் உமது பொருளைக் கொண்டு எமக்கும் எம்மவர்க்கும் கொடுத்துச் செலவிட்டார்; அதற்கு ஈடாக விலை மதித்தற்கு அரிய குதிரைகளை உம்மிடம் சேர்க்கிறோம், அதற்கு அடையாளமாக நீர் கயிறு மாற்றிக் கொள்க" என்று கூறி அவனிடம் அடையாளத்துக்கு ஒரு குதிரையின் சேனக் கயிற்றை மாற்றிக் கொடுத்து ஒப்படைத்தார்.
"இன்று குதிரைகளை உம்மிடம் ஒப்படைத்து விட்டோம், இனி அவற்றைக் காப்பதும் காவாததும் உம்முடைய பொறுப்பு. மாணிக்க வாசகரிடம் நீர் ஒப்புவித்த கடமை முடிந்து விட்டது" என்று கூறி இறைவன் விடை பெற்றார்.
சேவகனாக வந்த இறைவனின் தனித்தோற்றம் பாண்டியனைக் கவர்ந்து விட்டது தன்னையும் அறியாமல் எழுந்து நின்று வரவேற்றுப் பேசினான். அதே போல விடை கொடுத்து அனுப்பிய போதும் கரங்குவித்து விடை தந்தான்.
மாணிக்கவாசகர் விடுதலை செய்யப் பெற்றார். குதிரை வீரர்களுக்குப் பொன் பட்டாடை தந்து அவர்களைச் சிறப்பித்தான், இறைவனுக்கும் உயரிய பட்டாடை அணிவித்துச் சிறப்புச் செய்தான். குதிரைகள் கொட்டிலில் கட்டி வைக்கப்பட்டன. வேதமாகிய குதிரையில் ஏறிவந்த இறைவன் அந்த ஒரு குதிரையை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு மற்றையவற்றை அரசனிடம் ஒப்புவித்தார். அரசனுடைய பணியாட்கள் குதிரைகளை வரிசையாகக் கட்டி வைத்து அன்று இரவு பராமரித்தார்கள்.
விடுதலை பெற்ற வாசகரை அவர் மாளிகைக்கு அனுப்பி வைத்து அரசன் வந்திருந்தவருக்கு உபசாரம் செய்து பிரிந்து தன் அரண்மனையை அடைந்தான். வாசகர் நேரே சோமசுந்தரர் திருக்கோயிலை அடைந்து அவர் அற்புதத் திருவிளையாட்டை எண்ணி எண்ணி இறைவனுக்குத் தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.