திருவிளையாடற் புராணம்/63
கூன் பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்த அற்புதம் பெரிய மாற்றத்தை விளைவித்தது; பாண்டியனின் உடல் நோயும் தீர்ந்தது; மன இருளும் அகன்றது. மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அதனைத் தொடர்ந்து சமண சமயத்தை ஒழித்துச் சைவ சமயத்தை நிலை நாட்ட முயன்றனர். சமண சமயம் மக்களையும் மன்னனையும் இறுகப் பிடித்து இருந்த அப்பிடிப்பினை அகற்றிச் சமணருக்கு சிறந்தபடிப்பினையைப் புகட்ட விரும்பினார்.
மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் திருஞான சம்பந்தரை அணுகிச் சைவ சமயத்தை நிலை நாட்ட அதன் தத்துவங்களையும் கொள்கைகளையும் பரப்ப உதவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களோடு வாதம் செய்து சைவத்தின் பெருமையை நிலை நாட்ட வேண்டும் என்று விவரித்தனர். அரசனிடமும் அனுமதி பெற்றனர். சமண்ர்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பப்பட்டது. அவர்களும் அதற்குச் சளைக்கவில்லை. நோய் தீர்த்து விட்டதாலேயே சைவம் உயர்ந்தது என்று கூற முடியாது அது தனிப்பட்ட மனிதரின் மந்திர சக்தியாக இருக்கலாம். வாதிட்டு வெல்வதே சாதனை என்று அறிவித்தனர்.
அவர்கள் இரண்டு தேர்வுகள் வைத்தனர். ஒன்று அவரவர் சமயக் கோட்பாடுகளை எழுதி வைக்கும் ஓலையை நெருப்பில் இடுவது; அவற்றுள் எது எரியாமல் நிலைத்து இருக்கிறதோ அதுவே வென்றது என்று ஒப்புக் கொள்வது; மற்றொன்று வைகையில் அவ்வேடு களை ஒடும் வெள்ளத்தில் இடுவது; எது எதிரேறி வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் நிலைத்து நிற்கிறதோ அதுவே வெற்றி கொண்டது என்று ஏற்பாடு செய்தார்கள்.
இரண்டு தேர்வுகளிலும் அவர்கள் தோல்வியையே கண்டனர். அவர்கள் முதலில் இட்ட ஏடு தீக்கு இரையாகியது. ஞானசம்பந்தர் இட்ட ஏடு எரியாமல் பசுமையாகவே நின்றது. அதே போல வெள்ளத்தில் சமணர் இட்ட ஏடு பள்ளம் நோக்கி அடித்துச் சென்றது. ஞானசம்பந்தரின் ஏடு எதிரேறிச் சென்று கரையில் ஒதுங்கியது.
திருஞான சம்பந்தர் அவர்களை மன்னித்து இனியேனும் சைவ சமயத்தின் உயர்வை ஒப்புக் கொள்ளும்படி அறிவித்தார். ஒரு சிலர் திருநீறு அணிந்து சைவர்களாக மாறினர். பலர் தாம் அடைந்த தோல்வியை ஒப்புக் கொண்டு வலியக் கழுவில் ஏறி உயிர் துறந்தனர். எஞ்சியவர் ஆணைக்கு உட்பட்டுக் கழுவில் ஏற்றப்பட்டன்ர். சமணம் தலைசாய்ந்தது; சைவம் தலை நிமிர்ந்தது.
மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அரசனைச் சைவ வழிக்குக் கொண்டு வந்து அவனைச் சைவனாக்கியதோடு நாட்டு மக்களிடமும் சைவத்தைப் பரப்பினர்.