திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை
சாலமோனின் ஞானம் (The Book of Wisdom)
தொகுஅதிகாரங்கள் 13 முதல் 14 வரை
அதிகாரம் 13
தொகுஇயற்கை வழிபாடு
தொகு
1 கடவுளை அறியாத மனிதர் அனைவரும்
இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள்.
கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று
இருப்பவரைக் கண்டறிய முடியாதோர் ஆனார்கள்.
கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும்
கைவினைஞரை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
2 மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ,
விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ,
வானத்தின் சுடர்களேதாம்
உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று
அவர்கள் கருதினார்கள்.
3 அவற்றின் அழகில் மயங்கி
அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால்,
அவற்றிற்கெல்லாம் ஆண்டவர்
அவற்றினும் எத்துணை மேலானவர்
என அறிந்துகொள்ளட்டும்;
ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே
அவற்றை உண்டாக்கினார்.
4 அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு
அவர்கள் வியந்தார்கள் என்றால்,
அவற்றையெல்லாம் உருவாக்கியவர்
அவற்றைவிட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை
அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும்.
5 ஏனெனில் படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும்
அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்.
6 இருப்பினும், இம்மனிதர்கள் சிறிதளவே குற்றச்சாட்டுக்கு உரியவர்கள்.
ஏனெனில் கடவுளைத் தேடும்போதும்
அவரைக் கண்டடைய விரும்பும்போதும்
ஒருவேளை அவர்கள் தவறக்கூடும்.
7 அவருடைய வேலைப்பாடுகளின் நடுவே வாழும்பொழுது
கடவுளை அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
தாங்கள் காண்பதையே நம்பிவிடுகின்றார்கள்;
ஏனெனில் அவை அழகாக உள்ளன.
8 இருப்பினும், அவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது!
9 உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு ஆற்றல்
அவர்களுக்கு இருந்த போதிலும்,
இவற்றுக்கெல்லாம் ஆண்டவரை
இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்? [1]
சிலை வழிபாடு
தொகு
10 ஆனால் பொன், வெள்ளியால்
திறமையாக உருவாக்கப்பட்டவையும்,
விலங்குகளின் சாயலாய்ச் செய்யப்பட்டவையுமான
மனிதக் கைவேலைப்பாடுகளையோ
பண்டைக் காலக் கைவேலைப்பாடாகிய
பயனற்றக் கல்லையோ
தெய்வங்கள் என்று அழைத்தவர்கள் இரங்கத் தக்கவர்கள்;
செத்துப் போனவற்றின்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள்.
11 திறமையுள்ள தச்சர் ஒருவர்
எளிதில் கையாளக்கூடிய மரம் ஒன்றை வெட்டுகிறார்;
அதன் மேற்பட்டைகளையெல்லாம் நன்றாக உரிக்கிறார்;
பிறகு அதைக் கொண்டு வாழ்வின் தேவைகளுக்குப்
பயன்படும் ஒரு பொருளைச் சிறந்த வேலைப்பாடுகளுடன் செய்கிறார்.
12 வேலைக்குப் பயன்படாத மரக்கழிவுகளை எரித்து,
உணவு தயாரித்து, வயிறார உண்கிறார்.
13 ஆயினும் அவற்றுள் எஞ்சியதும்,
ஒன்றுக்கும் உதவாததும்,
கோணலும் மூட்டுமுடிச்சுகளும் நிறைந்ததுமான
ஒரு மரத்துண்டை அவர் எடுத்து,
ஓய்வு நேரத்தில் அதைக் கருத்தாய்ச் செதுக்கி,
கலைத்திறனோடு அதை இழைத்து,
மனிதரின் சாயலில் அதை உருவாக்குகிறார்.
14 அல்லது ஒரு பயனற்ற விலங்கின் உருவத்ததைச் செய்து,
செந்நிறக் கலவையால் அதைப் பூசி,
அதன் மேற்பரப்பில் உள்ள சிறு பள்ளங்களை
அவர் சிவப்பு வண்ணம் பூசி மறைக்கிறார்.
15 அதற்குத் தகுந்ததொரு மாடம் செய்து,
அதைச் சுவரில் ஆணியால் பொருத்தி,
அதில் சிலையை வைக்கிறார்;
16 தனக்குத்தானே உதவி செய்ய முடியாது என்பதை அறிந்து,
அது விழாதபடி பார்த்துக் கொள்கிறார்;
ஏனெனில் அது வெறும் சிலைதான்;
அதற்கு உதவி தேவை.
17 அவர் தம்முடைய உடைமைகளுக்காகவும்
திருமணத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் வேண்டும்போது
உயிரற்ற ஒரு சிலையுடன் பேச வெட்கப்படுவதில்லை;
வலிமையற்ற ஒன்றிடம் உடல்நலத்திற்காக வேண்டுகிறார்.
18 செத்துப்போன ஒன்றிடம் வாழ்வுக்காக மன்றாடுகிறார்;
பட்டறிவு இல்லாத ஒன்றிடம் உதவி கேட்கிறார்;
ஓர் அடிகூட எடுத்து வைக்கமுடியாத ஒன்றிடம்
நல்ல பயணத்திற்காக இறைஞ்சுகிறார்.
19 பொருள் ஈட்டலிலும் அலுவலிலும் செயல்பாட்டிலும்
வெற்றி தரும்படி
வலுவற்ற ஒன்றிடம் அவர் வேண்டுகிறார். [2]
- குறிப்புகள்
[1] 13:1-9 = உரோ 1:20-32.
[2] 13:10-14:31 = எசா 44:9-20; எரே 10:1-16; பாரூ 6:3-72.
அதிகாரம் 14
தொகு
1 மேலும், கடற்பயணம் செய்யும் நோக்குடன்
கொந்தளிக்கும் அலைகடலைக் கடக்கவிருக்கும் ஒருவர்
தம்மைத் தாங்கிச் செல்லும் மரக்கலத்தைவிட
எளிதில் உடைபடும் மரக்கட்டையிடம் மன்றாடுகிறார்.
2 செல்வம் சேர்க்கும் ஆவல் அந்த மரக்கலத்தைக்
கட்டத் திட்டமிட்டது.
ஞானம் கைவினைஞராகச் செயல்பட்டு
அதைக் கட்டி முடித்தது.
3 ஆனால், தந்தையே உமது பாதுகாப்பு அதை இயக்கி வருகிறது;
ஏனெனில் கடலில் அதற்கு ஒரு வழி அமைத்தீர்;
அலைகள் நடுவே பாதுகாப்பான பாதை வகுத்தீர்.
4 இவ்வாறு எல்லா இடர்களிலிருந்தும்
நீர் காப்பாற்ற முடியும் எனக் காட்டினீர்.
இதனால், திறமையற்றோர் கூடக் கடலில் பயணம் செய்யமுடியும்.
5 உமது ஞானத்தின் செயல்கள்
பயனற்றவை ஆகக்கூடா என்பது உமது திருவுளம்.
எனவே மனிதர்கள் மிகச் சிறிய மரக்கட்டையிடம்
தங்கள் உயிரையே ஒப்படைத்து,
கொந்தளிக்கும் கடலில் அதைத் தெப்பமாகச் செலுத்தி,
பாதுகாப்புடன் கரை சேர்கின்றார்கள்.
6 ஏனெனில் தொடக்க காலத்தில் கூட,
செருக்குற்ற அரக்கர்கள் அழிந்தபோது,
உலகின் நம்பிக்கை ஒரு தெப்பத்தில் புகலிடம் கண்டது.
உமது கை வழிகாட்ட, அந்நம்பிக்கை
புதிய தலைமுறைக்கு வித்திட்டது.
7 நீதியை உருவாக்கும் மரம் வாழ்த்துக்குரியது.
8 ஆனால் கைவேலைப்பாடாகிய சிலை சபிக்கப்பட்டது.
அதைச் செய்தவரும் அவ்வாறே சபிக்கப்பட்டவர்.
ஏனெனில் அவரே அதைச் செய்தார்.
அது அழியக்கூடியதாயிருந்தும்,
தெய்வம் என்று அழைக்கப்பட்டது.
9 இறைப்பற்றில்லாதோரையும்
அவர்களது இறைப்பற்றின்மையையும்
கடவுள் ஒருங்கே வெறுக்கின்றார்.
10 ஏனெனில் செய்தவரோடு
அவர் செய்த வேலையும் ஒருமிக்கத் தண்டிக்கப்படும்.
11 எனவே வேற்றினத்தாரின் சிலைகளும்
தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகும்;
ஏனெனில் கடவுளின் படைப்புகளேயாயினும்,
அவை மிக அருவருப்பானவையாக மாறிவிட்டன;
அவை மனிதரின் ஆன்மாக்களுக்கு இடறல்கள்;
அறிவிலிகளின் கால்களுக்குக் கண்ணிகள்.
சிலைவழிபாட்டின் தொடக்கம்
தொகு
12 சிலைகள் செய்யத் திட்டமிட்டதே விபசாரத்தின் [*] தொடக்கம்.
அவற்றைக் கண்டுபிடித்ததே வாழ்வின் அழிவு.
13 அவை தொடக்கமுதல் இருந்ததில்லை;
என்றென்றும் இருக்கப் போவதுமில்லை.
14 மனிதரின் வீண்பெருமையினால் அவை உலகில் நுழைந்தன;
எனவே அவை விரைவில் முடியும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
15 இளமையில் தம் மகன் இறந்ததால்,
ஆறாத்துயரில் மூழ்கியிருந்த தந்தை ஒருவர்
விரைவில் தம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட
அவனது சிலையைச் செய்தார்.
முன்பு இறந்து விட்ட மனிதப் பிறவியைப்
பின்பு தெய்வப் பிறவியாகக் கொண்டாடினார்.
மறைவான சமயச் சடங்குகளையும் வழிபாடுகளையும்
வழிவழியாகச் செய்யுமாறு தம் பணியாளரைப் பணித்தார்.
16 இந்தத் தீய பழக்கம் காலப் போக்கில் வேரூன்றி
சட்டம்போலப் பின்பற்றப்படலாயிற்று.
17 மன்னர்களின் ஆணைப்படி
மக்கள் சிலைகளை வணங்கலானார்கள்.
தாங்கள் தொலையில் வாழ்ந்துவந்த காரணத்தால்,
தங்கள் மன்னரை நேரில் பெருமைப்படுத்த முடியாத மக்கள்
தொலையிலிருந்தே அவருடைய உருவத்தைக் கற்பனை செய்தார்கள்;
அதைக் காணக்கூடிய சிலையாக வடித்து
அதற்கு வணக்கம் செலுத்தினார்கள்;
இவ்வாறு, தொலைவில் இருந்தவரை
எதிரில் இருந்தவர் போலக் கருதி,
தங்கள் ஆர்வத்தில் அவரை மிகைப்படப் புகழ்ந்தார்கள்.
18 மன்னரை அறியாதவர்கள் நடுவிலும்
'மன்னர் வழிபாட்டைப்' பரப்ப,
சிற்பியின் புகழார்வம் அவர்களைத் தூண்டிற்று.
19 ஏனெனில் சிற்பி தம்மை ஆள்பவரை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்குடன்
தம் திறமையெல்லாம் கூட்டி,
அச்சிலையை மிக அழகாகச் செய்திருக்கலாம்.
20 அவருடைய வேலைப்பாட்டின் அழகில் மயங்கிய மக்கள்திரள்
சற்றுமுன்பு வெறும் மனிதராகப் போற்றிய ஒருவரைப்
பின்னர் வழிபாட்டுக்குரியவராகக் கருதியிருக்கலாம்.
21 இது மன்பதையை வீழ்த்தும் ஒரு சூழ்ச்சி ஆயிற்று.
ஏனெனில் மனிதர் பேரிடருக்கோ
கொடுங்கோன்மைக்கோ ஆளாகி,
கடவுளுக்கே உரிய பெயரைக்
கற்களுக்கும் மரங்களுக்கும் கொடுத்தனர்.
சிலைவழிபாட்டின் விளைவுகள்
தொகு
22 கடவுளைப்பற்றிய அறிவில் மனிதர்கள் தவறியது மட்டுமன்றி,
அறியாமையால் பெரும் போராட்டத்தில் வாழ்கிறார்கள்;
இத்தகைய தீமைகளை 'அமைதி' என்று அழைக்கிறார்கள்.
23 புகுமுகச் சடங்குகளில் அவர்கள் குழந்தைகளைப் பலியிட்டாலும்,
மறைவான சமயச் சடங்குகளைக் கொண்டாடினாலும்,
வேற்றினப் பழக்கவழக்கங்கள் கொண்ட
வெறியூட்டும் களியாட்டங்களை நடத்தினாலும்,
24 தங்கள் வாழ்வையும் திருமணத்தையும்
மாசுபடாமல் காப்பதில்லை.
அவர்கள் நயவஞ்சமாக ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்;
அல்லது விபசாரத்தால் ஒருவர் மற்றவருக்குத்
துயர் விளைவிக்கிறார்கள்.
25 இதன் விளைவாக எங்கும் ஒரே குழப்பம், குருதி,
கொலை, களவு, வஞ்சகம்,
ஊழல், பற்றுறுதியின்மை,
கிளர்ச்சி, பொய்யாணை.
26 நல்லவைப் பற்றிய குழப்பம், செய்நன்றி மறத்தல்,
ஆன்மாக்களைக் கறைப்படுத்துதல்,
இயல்புக்கு மாறான காமவேட்கை,
மணவாழ்வில் முறைகேடு,
விபசாரம், வரம்புமீறிய ஒழுக்கக்கேடு!
27 பெயரைக்கூடச் சொல்லத் தகாத சிலைகளின் வழிபாடே
எல்லாத் தீமைகளுக்கும் முதலும் காரணமும் முடிவும் ஆகும்.
28 அவற்றை வணங்குவோர் மகிழ்ச்சியால் வெறிபிடித்தவர் ஆகின்றனர்;
அல்லது பொய்யை இறைவாக்காக உரைக்கின்றனர்.
அல்லது நேர்மையாக வாழ்வதில்லை;
அல்லது எளிதாகப் பொய்யாணையிடுகின்றனர்.
29 உயிரற்ற சிலைகள் மீது நம்பிக்கை வைப்பதால்,
அவர்களை பொய்யாணையிட்டாலும்
தங்களுக்குத் தீங்கு நேரிடும் என எதிர்பார்ப்பதில்லை.
30 இரு காரணங்களுக்காக அவர்கள் நீதியுடன் தண்டிக்கப்படுவார்கள்;
சிலைகளுக்குத் தங்களை அர்ப்பணித்ததன்மூலம்
கடவுளைப்பற்றிய தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள்;
தூய்மையை இகழ்ந்து,
வஞ்சகத்தோடு நீதிக்கு முரணாக ஆணையிட்டார்கள்.
31 ஏனெனில் எவற்றைக் கொண்டு மனிதர்கள் ஆணையிடுகிறார்களோ
அவற்றின் ஆற்றல் அவர்களைத் தண்டிப்பதில்லை.
மாறாக, பாவிகளுக்குரிய நீதித் தீர்ப்பே
நெறிகெட்டோரின் குற்றங்களை எப்பொழுதும் தண்டிக்கிறது.
- குறிப்பு
[*] 14:12 - உடன்படிக்கை வழியாக இறைவனுக்கும்
இஸ்ரயேலுக்கும் இடையே
மணமகன்-மணமகள் உறவு மலர்ந்தது.
இதனால் இஸ்ரயேல் தன் இறைவனைக் கைவிட்டு
வேற்றுத் தெய்வங்களை நாடிச் சென்றது
விபசாரமாகக் கருதப்பட்டது.
(தொடர்ச்சி): சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை