திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை
சாலமோனின் ஞானம் (The Book of Wisdom)
தொகுஅதிகாரங்கள் 9 முதல் 10 வரை
அதிகாரம் 9
தொகுஞானம் அருளும்படி மன்றாட்டு
தொகு
1 "மூதாதையரின் கடவுளே,
இரக்கத்தின் ஆண்டவரே,
நீர் எல்லாவற்றையும் உமது சொல்லால் உண்டாக்கினீர்.
2 நீர் உண்டாக்கிய படைப்புகளின் மேல் ஆட்சி செலுத்தவும்,
தூய்மையோடும் நீதியோடும் உலகை ஆளவும்,
3 நேர்மையான உள்ளத்தோடு தீர்ப்பு வழங்கவும்,
உமது ஞானத்தால் மானிடரை உருவாக்கினீர்.
4 உமது அரியணை அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும்;
உம் பிள்ளைகளிடமிருந்து என்னைத் தள்ளிவிடாதீர்.
5 நான் உம் அடியான்; உம்முடைய அடியவளின் மகன்;
வலுவற்ற மனிதன்; குறுகிய வாழ்வினன்;
நீதித்தீர்ப்பும், திருச்சட்டமும்பற்றிச் சிற்றறிவு படைத்தவன்.
6 மன்பதையில் ஒருவர் எத்துணை நிறைவு உள்ளவராய் இருந்தாலும்,
உம்மிடமிருந்து வரும் ஞானம் அவருக்கு இல்லையேல்,
அவர் ஒன்றும் இல்லாதவராய்க் கருதப்படுவார்.
7 "உம் மக்களுக்கு மன்னராகவும்,
உம் புதல்வர் புதல்வியருக்கு நடுவராகவும் இருக்க
நீர் என்னைத் தெரிந்தெடுத்தீர். [1]
8 தொடக்கத்திலிருந்தே நீர் ஏற்பாடு செய்திருந்த
தூய கூடாரத்தை மாதிரியாகக் கொண்டு
உம் தூய மலைமேல் கோவில் கட்டவும்,
உமது உறைவிடமான நகரில் பலிபீடம் எழுப்பவும்
நீர் எனக்கு ஆணையிட்டீர்.
9 ஞானம் உம்மோடு இருக்கின்றது;
உம் செயல்களை அது அறியும்;
நீர் உலகத்தை உண்டாக்கியபோது அது உடனிருந்தது;
உம் பார்வைக்கு உகந்ததை அது அறியும்;
உம் கட்டளைகளின்படி முறையானது எது எனவும் அதற்குத் தெரியும்.
10 உமது தூய விண்ணகத்திலிருந்து அதை அனுப்பியருளும்;
உமது மாட்சிமிக்க அரியணையிலிருந்து அதை வழங்கியருளும்.
அது என்னோடு இருந்து உழைக்கட்டும்.
அதனால் உமக்கு உகந்ததை நான் அறிந்துகொள்வேன்.
11 அது எல்லாவற்றையும் அறிந்து உய்த்துணரும்;
என் செயல்களில் விவேகத்துடன் என்னை வழி நடத்தும்;
தன் மாட்சியில் அது என்னைப் பாதுகாக்கும்.
12 அப்பொழுது என் செயல்கள் உமக்கு ஏற்புடையனவாகும்.
உம்முடைய மக்களுக்கு நேர்மையுடன் நீதி வழங்குவேன்;
என் தந்தையின் அரியணையில் வீற்றிருக்கத் தகுதி பெறுவேன்.
13 "கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்?
ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?
14 நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை;
நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை.
15 அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது.
இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.
16 மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது!
அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம்.
இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்?
17 நீர் ஞானத்தை அருளாமலும்,
உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால்,
உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்?
18 இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன.
உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக்கொண்டனர்;
ஞானத்தால் மீட்பு அடைந்தனர்." [2]
- குறிப்புகள்
[1] 9:7 = 1 குறி 28:5.
[2] 9:1-18 = 1 அர 3:6-9; சாஞா 7:7.
அதிகாரம் 10
தொகு3. மீட்பு வரலாற்றில் ஞானம்
தொகுஆதாமிலிருந்து மோசேவரை
தொகு
1 உலகின் முதல் தந்தை தனிமையாகப் படைக்கப்பட்டபொழுது
ஞானம் அவரைப் பேணிக் காத்தது;
அவருடைய குற்றங்களிலிருந்து அவரை விடுவித்தது.
2 அனைத்தையும் ஆளும் ஆற்றலை அவருக்கு அளித்தது.
3 நீதியற்றவன் ஒருவன் தன் சினத்தினால் ஞானத்தைவிட்டு அகன்றான்;
சீற்றத்தினால் தன் உடன்பிறப்பைக் கொன்றதால் அவனும் அழியலானான்.
4 அவன்பொருட்டு மண்ணுலகைப் பெரும் வெள்ளம் மூழ்கடித்தபொழுது,
ஞானம் மீண்டும் அதைக் காப்பாற்றியது;
நீதிமானை ஒரு சிறிய மரத்துண்டால் வழி நடத்தியது.
5 மக்களினங்கள் தீமையுடன் கூட்டுச்சேர்ந்து
குழப்பத்திற்கு உள்ளானபோது
ஞானம் நீதிமானைக் கண்டுகொண்டது;
அவரைக் கடவுள் திருமுன் மாசற்றவராகக் காத்தது;
தம் பிள்ளைபால் கொண்டிருந்த பற்றை மேற்கொள்ள
அவருக்குத் துணிவை அளித்தது.
6 இறைப்பற்றில்லாதவர்கள் அழிந்தபோது
ஞானம் நீதிமானைக் காப்பாற்றியது.
ஐந்து நகர்கள்மீது இறங்கி வந்த நெருப்பிலிருந்து
அவரும் உயிர் தப்பினார்.
7 அவர்களது தீயொழுக்கத்துக்குச் சான்றாக
அந்த நகரங்கள் புகை உமிழும் பாழ்வெளியாக மாற்றப்பட்டன;
அங்குச் செடிகள் என்றுமே கனியாத காய்களைக் கொடுக்கின்றன;
பற்றுறுதியில்லா ஆன்மாவின் நினைவுச்சின்னமான உப்புத்தூணும்
அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறது.
8 அவர்கள் ஞானத்தை ஒரு பொருட்டாகக் கருதாததால்,
நன்மையைக் கண்டுணர இயலாமற்போனார்கள்;
மேலும், தங்கள் அறிவின்மையின் அடையாளத்தை
மனித இனத்திற்கு விட்டுச் சென்றார்கள்.
அதனால் அவர்கள் செய்த தவறுகள் புலப்படாமற் போகா.
9 ஆனால் தனக்குப் பணிபுரிந்தவர்களை
ஞானம் துன்ப துயரங்களிலிருந்து விடுவித்தது.
10 தம் சகோதரனின் சினத்துக்குத் தப்பியோடிய நீதிமான் ஒருவரை
ஞானம் நேர்மையான வழியில் நடத்திச் சென்றது;
இறையரசை அவருக்குக் காட்டியது;
வானதூதர்பற்றிய அறிவை அவருக்குக் கொடுத்தது;
உழைப்பில் அவர் வளமையுறச் செய்தது;
அவரது உழைப்பின் பயனைப் பெருக்கியது.
11 அவரை ஒடுக்கியோர் பேரவாக் கொண்டபோது
அது அவருக்குத் துணை நின்று, அவரைச் செல்வராக்கியது.
12 பகைவரிடமிருந்து அது அவரைப் பாதுகாத்தது;
தாக்கப் பதுங்கியிருந்தோரிடமிருந்து அவரைக் காப்பாற்றியது;
கடும் போராட்டத்தில் அவருக்கு வெற்றி தந்தது.
இவ்வாறு இறைப்பற்று எல்லாவற்றையும்விட
வலிமை மிக்கது என்று அவர் உணரச் செய்தது.
13 நீதிமான் ஒருவர் விலைக்கு விற்கப்பட்டபொழுது
ஞானம் அவரைக் கைவிடவில்லை;
பாவத்திலிருந்து அவரை விடுவித்தது.
14 இருட்டறைக்குள் அவரோடு அது இறங்கிச் சென்றது;
அரச செங்கோலையும்,
அவரை ஒடுக்கியோர்மீது அதிகாரத்தையும்
அவருக்கு அளிக்கும்வரை
விலங்கிடப்பட்டிருந்த அவரை விட்டு
அது விலகவில்லை.
அவர்மேல் குற்றம் சுமத்தியோர் பொய்யர் என்பதை மெய்ப்பித்தது;
அவருக்கோ முடிவில்லா மாட்சியை அளித்தது.
விடுதலைப் பயணம்
தொகு
15 ஒடுக்கிய மக்களினத்தாரிடமிருந்து தூய மக்களையும்
மாசற்ற வழி மரபினரையும் ஞானம் விடுவித்தது.
16 அது ஆண்டவருடைய ஊழியர் ஒருவரின் ஆன்மாவில் நுழைந்தது.
கொடிய மன்னர்களை வியத்தகு செயல்களாலும்
அடையாளங்களாலும் எதிர்த்து நின்றது.
17 தூயவர்களின் உழைப்புக்கு அது கைம்மாறு கொடுத்தது;
வியப்புக்குரிய வழியில் அவர்களை நடத்திச் சென்றது;
பகலில் அவர்களுக்கு நிழலாகவும்
இரவில் விண்மீன் சுடராகவும் இருந்தது.
18 செங்கடல்மீது அது அவர்களை அழைத்துச்சென்றது;
ஆழ்கடல் வழியாக அவர்களை நடத்திச் சென்றது.
19 அவர்களின் பகைவர்களை அது நீரினுள் அமிழ்த்தியது;
பின், ஆழ்கடலிலிருந்து அவர்களை வெளியே உமிழ்ந்தது.
20 ஆகையால் நீதிமான்கள்
இறைப்பற்றில்லாதவர்களைக் கொள்ளையடித்தார்கள்;
ஆண்டவரே, உமது திருப்பெயரைப் பாடிப் புகழ்ந்தார்கள்;
வெற்றி அளிக்கும் உமது கைவன்மையை ஒருமிக்கப் போற்றினார்கள்.
21 ஏனெனில் பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது;
குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது.
- குறிப்புகள்
[1] 10:1-2 = தொநூ 1:26-28.
[2] 10:3 = தொநூ 4:1-14.
[3] 10:4 = தொநூ 6:9-8:19.
[4] 10:5 = தொநூ 11:1-9; 12:1-3; 22:1-19.
[5] 10:6-9 = தொநூ 19:1-29.
[6] 10:10 - "தூயவை" (காண் தொநூ 28:10-15) என்றும்,
"திருவிடம்" (தொநூ 31:13) என்றும்
பொருள் கொள்ளலாம்.
[7] 10:10-12 = தொநூ 27:42-46; 28:10-22; 30:43; 32:24-30.
[8] 10:13-14 = தொநூ 37:12-36; 39:1-23; 41:37-44.
[9] 10:15-21 = விப 1:1-15:21.
(தொடர்ச்சி): சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை