திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை
சீராக்கின் ஞானம் (The Book of Sirach)
தொகுஅதிகாரங்கள் 11 முதல் 12 வரை
அதிகாரம் 11
தொகுஏமாற்றும் தோற்றங்கள்
தொகு
1 நலிவுற்றோரின் ஞானம் அவர்களைத் தலைநிமிரச் செய்யும்;
பெரியார்கள் நடுவில் அவர்களை அமரச் செய்யும்.
2 உடல் அழகுக்காக ஒருவரைப் புகழ வேண்டாம்;
தோற்றத்துக்காக ஒருவரை இகழவும் வேண்டாம்;
3 பறப்பனவற்றுள் சிறியது தேனீ;
எனினும், அது கொடுக்கும் தேன் இனியவற்றுள் சிறந்தது. [1]
4 நீ அணிந்திருக்கும் ஆடைகுறித்துப் பெருமை பாராட்டாதே;
நீ புகழ்பெறும் நாளில் உன்னையே உயர்த்திக்கொள்ளாதே.
ஆண்டவரின் செயல்கள் வியப்புக்குரியவை;
அவை மனிதரின் கண்ணுக்கு மறைவாய் உள்ளன.
5 மாமன்னர் பலர் மண்ணைக் கவ்வினர்;
எதிர்பாராதோர் பொன்முடி புனைந்தனர்.
6 ஆட்சியாளர் பலர் சிறுமையுற்றனர்;
மாட்சியுற்றோர் மற்றவரிடம் ஒப்புவிக்கப் பெற்றனர். [2]
எண்ணித் துணிக
தொகு
7 தீர ஆராயாமல் குற்றம் சுமத்தாதே;
முதலில் சோதித்தறி; பின்னர் இடித்துரை.
8 மற்றவருக்குச் செவிசாய்க்குமுன்பே மறுமொழி சொல்லாதே;
அடுத்தவர் பேசும்போது குறுக்கே பேசாதே. [3]
9 உன்னைச் சாராதவை பற்றி வாதிடாதே;
பாவிகள் தீர்ப்பு வழங்கும்போது அவர்களோடு அமராதே.
10 குழந்தாய்,
பல அலுவல்களில் ஈடுபடாதே;
ஈடுபட்டால் குற்றப்பழி பெறாமல் போகமாட்டாய்;
செய்யத் தொடங்கினாலும் முடிக்கமாட்டாய்;
தப்ப முயன்றாலும் முடியாது.
11 சிலர் மிகவும் கடுமையாய் உழைக்கின்றனர்;
போராடுகின்றனர்; விரைந்து செயல்புரிகின்றனர்;
எனினும் பின்தங்கியே இருக்கின்றனர்.
கடவுளையே நம்பு
தொகு
12 வேறு சிலர் மந்தமானவர்கள்;
பிறர் உதவியால் வாழ்பவர்கள்;
உடல் வலிமை இல்லாதவர்கள்;
வறுமையில் உழல்பவர்கள்.
ஆண்டவர் அவர்களைக் கடைக்கண் நோக்குகின்றார்;
தாழ்நிலையினின்று அவர்களை உயர்த்தி விடுகிறார்;
13 அவர்களைத் தலைநிமிரச் செய்கிறார்;
அவர்களைக் காணும் பலர் வியப்பில் ஆழ்கின்றனர்.
14 நன்மை தீமை, வாழ்வு சாவு, வறுமை வளமை
ஆகிய அனைத்தும் ஆண்டவரிடமிருந்தே வருகின்றன. [4]
15 [5] [ஞானம், அறிவாற்றல், திருச்சட்டம் பற்றிய அறிவு
ஆகியவை ஆண்டவரிடமிருந்தே வருகின்றன.
அன்பும் நற்செயல் செய்யும் பண்பும் அவரிடமிருந்தே உண்டாகின்றன.]
16 [6] [தவறும் இருளும் பாவிகளுக்காகவே உண்டாக்கப்பட்டன.
தீவினைகளில் செருக்குறுவோரிடம் தீமை செழித்து வளரும்.]
17 இறைப்பற்றுள்ளோரிடம் ஆண்டவரின் கொடைகள் நிலைத்து நிற்கும்;
அவரது பரிவு என்றும் வெற்றியைக் கொணரும்.
18 சிலர் தளரா ஊக்கத்தினாலும்
தன்னல மறுப்பினாலும் செல்வர் ஆகின்றனர்.
அவர்களுக்கு உரிய பரிசு அதுவே.
19 'நான் ஓய்வைக் கண்டடைந்தேன்;
நான் சேர்த்துவைத்த பொருள்களை இப்போது உண்பேன்' என
அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்வர்.
இது எத்துணைக் காலத்துக்கு நீடிக்கும் என்பதையும்
தங்கள் சொத்துகளைப் பிறரிடம் விட்டுவிட்டு இறக்க நேரிடும் என்பதையும்
அவர்கள் அறியார்கள். [7]
20 நீ செய்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டிரு;
அதில் ஈடுபாடு கொண்டிரு;
உன் உழைப்பிலே முதுமை அடை.
21 பாவிகளின் செயல்களைக் கண்டு வியப்பு அடையாதே;
ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்;
உன் உழைப்பில் நிலைத்திரு.
நொடிப்பொழுதில் ஏழையரைத் திடீரென்று செல்வராய் மாற்றுவது
ஆண்டவரின் பார்வையில் எளிதானது.
22 ஆண்டவரின் ஆசியே இறைப்பற்றுள்ளோருக்குக் கிடைக்கும் பரிசு.
அவர் தம் ஆசியை விரைந்து தழைக்கச் செய்வார்.
23 'எனக்குத் தேவையானது என்ன இருக்கிறது?
இனிமேல் வேறு என்ன நன்மைகள் எனக்குக் கிடைக்கும்?' எனச் சொல்லாதே.
24 'எனக்குப் போதுமானது உள்ளது.
இனி எனக்கு என்ன தீங்கு நேரக்கூடும்?' எனவும் கூறாதே.
25 வளமாக வாழும்போது, பட்ட துன்பங்கள் மறந்து போகின்றன;
துன்பத்தில் உழலும்போது, துய்த்த நன்மைகள் மறந்து போகின்றன.
26 அவரவர் நடத்தைக்கு ஏற்ப
இறுதிநாளில் மனிதருக்குப் பரிசு அளிப்பது
ஆண்டவர்க்கு எளிதானது.
27 சிறிது நேரத் துன்பம், முன்னர் துய்த்த இன்பத்தை மறக்கச் செய்கிறது.
வாழ்வின் முடிவில் மனிதரின் செயல்கள் வெளிப்படுத்தப்படும்.
28 இறக்குமுன் யாரையும் பேறுபெற்றவர் எனப் போற்றாதே;
பிள்ளைகள் வழியாகவே ஒருவரது தகைமை வெளிப்படும்.
தீயவரை நம்பாதே
தொகு
29 எல்லா மனிதரையும் உன் வீட்டுக்கு அழைத்து வராதே;
இரண்டகர் பல சூழ்ச்சிகள் செய்வர்.
30 இறுமாப்புப் படைத்தோர்
பறவைகளைப் பொறிக்குள் சிக்கவைக்கப் பயன்படும் கௌதாரி போன்றோர்;
அவர்கள் உளவாளி போல் உன் வீழ்ச்சியைக் கவனித்துக் கொண்டிருப்பர்.
31 நன்மைகளைத் தீமைகளாக மாற்ற
அவர்கள் பதுங்கிக் காத்திருப்பார்கள்;
புகழத்தக்க செயல்களில் குறை காண்பார்கள்.
32 ஒரேயொரு தீப்பொறி கரிமலையையே எரிக்கும்;
ஒரு பாவி பிறரைத் தாக்கப் பதுங்கிக் காத்திருப்பான். [8]
33 தீச்செயல் புரிவோர் குறித்து விழிப்பாய் இரு;
அவர்கள் தீங்கு விளைவிக்கச் சூழ்ச்சி செய்கிறார்கள்.
இதனால் உன் பெருமைக்கு என்றும் இழுக்கு ஏற்படுத்தலாம்.
34 அன்னியரை உன் வீட்டில் வரவேற்றால்,
அவர்கள் உனக்குத் தொல்லைகளைத் தூண்டிவிடுவர்;
கடைசியில் உன் வீட்டாருக்கே உன்னை அன்னியன் ஆக்கிவிடுவர்.
- குறிப்புகள்
[1] 11:3 = நீத 14:18.
[2] 11:6 = 1 சாமு 15:28.
[3] 11:8 = நீமொ 18:13.
[4] 11:14 = 1 சாமு 2:6-7.
[5] 11:15 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
[6] 11"16 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
[7] 11:19 = திபா 49:10; லூக் 12:16-21.
[8] 11:32 = நீமொ 1:11.
அதிகாரம் 12
தொகுநன்மை செய்யும் முறை
தொகு
1 நீ நன்மை செய்தால் யாருக்குச் செய்கிறாய் என்பதைத் தெரிந்து செய்;
உன் நற்செயல்களுக்கு நன்றி பெறுவாய்.
2 இறைப்பற்றுள்ளோருக்கு நன்மை செய்;
உனக்குக் கைம்மாறு கிடைக்கும்.
அவர்களால் இயலாவிடினும்
உன்னத இறைவன் கைம்மாறு செய்வார். [1]
3 தீமையில் விடாப்பிடியாய் இருப்போருக்கு நன்மை பிறவாது;
தருமம் செய்யாதோருக்கும் அவ்வாறே நிகழும்.
4 இறைப்பற்றுள்ளோருக்குக் கொடு;
பாவிகளுக்கு உதவாதே. [2]
5 நலிவுற்றோருக்கு நன்மை செய்;
இறைப்பற்றில்லாதோருக்குக் கொடாதே.
அவர்களுக்குரிய உணவைக்கூட நிறுத்திவை;
அவர்களுக்கு அதை அளிக்காதே;
அதைக்கொண்டே அவர்கள் உன்னை வீழ்த்த நேரிடும்.
நீ அவர்களுக்குச் செய்த நன்மைகளுக்கெல்லாம் கைம்மாறாக
அவற்றைப்போல் இரு மடங்கு தீமை அடைவாய்.
6 உன்னத இறைவனும் பாவிகளை வெறுக்கிறார்;
இறைப்பற்றில்லாதோரை ஒறுக்கிறார். [3]
7 நல்லாருக்குக் கொடு; பாவிகளுக்கு உதவாதே.
நல்ல, தீய நண்பர்கள்
தொகு
8 இன்பத்தில் உண்மையான நண்பனை அறிந்துகொள்ள முடியாது;
துன்பத்தில் உன் பகைவனைக் கண்டு கொள்ள முடியும்.
9 ஒருவரது உயர்வு அவருடைய பகைவருக்கு வருத்தம் தரும்;
அவரது தாழ்வு நண்பரையும் விலகச் செய்யும். [4]
10 ஒருகாலும் உன் பகைவரை நம்பாதே;
அவர்களின் தீய குணம் செம்பில் பிடித்த களிம்பு போன்றது.
11 அவர்கள் தங்களையே தாழ்த்திக் கொண்டாலும்,
இச்சகம் பேசினாலும்,
அவர்களைக் குறித்து விழிப்பாய் இருந்து உன்னையே காத்துக்கொள்.
கண்ணாடியைத் துடைப்போர்போன்று அவர்களிடம் நடந்து கொள்.
அது முழுதும் கறைபடவில்லை என்பதை நீ அறிந்துகொள்வாய்.
12 உன் எதிரிகளை உன் அருகில் நிற்கவிடாதே;
அவர்கள் உன்னை வீழ்த்தி,
உன் இடத்தைக் கைப்பற்றிக்கொள்ளலாம்.
உன் வலப்புறத்திலும் அவர்களை அமர்த்தாதே;
உன் இருக்கையைப் பறிக்கத் தேடலாம்.
நான் சொன்னதெல்லாம் உண்மை என இறுதியில் உணர்வாய்;
என் சொற்கள் உன்னை உறுத்திக் கொண்டே இருக்கும்.
13 பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால்
யாரே அவருக்கு இரங்குவர்?
காட்டு விலங்குகளின் அருகில் செல்வோர்மீதும்
யாரே பரிவு காட்டுவர்?
14 அவ்வாறே, பாவிகளோடு சேர்ந்து பழகி,
அவர்களுடைய பாவங்களிலும் ஈடுபாடு காட்டுவோர்மீது
யாரே இரக்கம் காட்டுவர்?
15 சிறிது நேரம் அவர்கள் உன்னுடன் உறவாடுவார்கள்;
நீ தடுமாற நேர்ந்தால் உன்னைத் தாங்கிக்கொள்ளமாட்டார்கள்.
16 பகைவர் உதட்டில் தேன் ஒழுகப்பேசுவர்;
உள்ளத்திலோ உனக்குக் குழி பறிக்கத் திட்டமிடுவர்.
உனக்கு முன் கண்ணீர் சிந்துவர்;
வாய்ப்புக் கிடைக்கும் போது அவர்களது கொலை வெறி அடங்காது. [5]
17 உனக்குத் துன்பம் நேர்ந்தால்
அங்கே உனக்குமுன் அவர்களைக் காண்பாய்;
உனக்கு உதவி செய்வதுபோல் உன் காலை இடறிவிடுவர். [6]
18 அவர்கள் தங்களது முகப்பொலிவை மாற்றிக்கொண்டு
எள்ளி நகையாடும்படி தலையாட்டுவர்;
கை கொட்டுவர்; புரளிகளைப் பரப்புவர்.
- குறிப்புகள்
[1] 12:2 = மத் 10:41.
[2] 12:4 = தோபி 4:17.
[3] 12:6 = திபா 1:5-6.
[4] 12:9 = நீமொ 19:4,7.
[5] 12:16 = நீமொ 26:24.
[6] 12:17 = திபா 41:9.
(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை