திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

"தொடக்கத்தில் ஆண்டவர் தம் படைப்புகளை உண்டாக்கியபோது, பின்னர் அவற்றின் எல்லைகளை வரையறுத்தபோது, தம் படைப்புகளை என்றென்றைக்கும் ஒழுங்கோடு அமைத்தார்; அவற்றின் செயற்களங்களை எல்லாத் தலைமுறைகளுக்கும் வகுத்தார்." - சீராக்கின் ஞானம் 16::26-27.

அதிகாரம் 15

தொகு


1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் இவற்றையெல்லாம் செய்வார்கள்;
திருச்சட்டத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள் ஞானத்தை அடைவார்கள்.


2 தாய் போன்று ஞானம் அவர்களை எதிர்கொள்ளும்;
இளம் மணமகள்போல அவர்களை வரவேற்கும். [1]


3 அறிவுக் கூர்மை எனும் உணவை அவர்கள் அருந்தக் கொடுக்கும்;
ஞானமாகிய நீரைப் பருக அளிக்கும்.


4 அவர்கள் அதன்மீது சாய்ந்து கொள்வார்கள்; விழமாட்டார்கள்;
அதைச் சார்ந்து வாழ்பவர்கள் இகழ்ச்சி அடையமாட்டார்கள்.


5 அடுத்திருப்பவருக்கு மேலாக அது அவர்களை உயர்த்தும்;
சபை நடுவில் பேச நாவன்மை நல்கும்.


6 அவர்கள் அக்களிப்பையும் மகிழ்ச்சியின் முடியையும் கண்டடைவார்கள்;
நிலையான பெயரை உரிமையாக்கிக் கொள்வார்கள்.


7 அறிவிலிகள் ஞானத்தை அடையமாட்டார்கள்;
பாவிகள் அதைக் காணமாட்டார்கள்; [2]


8 இறுமாப்பினின்று அது விலகி நிற்கும்;
பொய்யர் ஒரு போதும் அதை நினைத்துப்பாரார்.


9 பாவிகளின் வாயிலிருந்து வரும் இறைப்புகழ்ச்சி தகாதது;
அது ஆண்டவரிடமிருந்து அவர்களுக்கு அருளப்படவில்லை.


10 ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி வெளிப்படவேண்டும்;
ஆண்டவரே அதை வளமுறச் செய்வார்.

விருப்புரிமை

தொகு


11 'ஆண்டவரே என் வீழ்ச்சிக்குக் காரணம்' எனச் சொல்லாதே;
தாம் வெறுப்பதை அவர் செய்வதில்லை.


12 'அவரே என்னை நெறிபிறழச் செய்தார்' எனக் கூறாதே;
பாவிகள் அவருக்குத் தேவையில்லை.


13 ஆண்டவர் அருவருப்புக்குரிய அனைத்தையும் வெறுக்கிறார்;
அவருக்கு அஞ்சிநடப்போர் அவற்றை விரும்புவதில்லை.


14 அவரே தொடக்கத்தில் மனிதரை உண்டாக்கினர்;
தங்கள் விருப்புரிமையின்படி செயல்பட அவர்களை விட்டுவிட்டார். [3]


15 நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி;
பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது.


16 உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்;
உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்.


17 மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன.
எதை அவர்கள் விரும்புகிறார்களோ
அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். [4]


18 ஆண்டவரின் ஞானம் பெரிது.
அவர் ஆற்றல் மிக்கவர்;
அனைத்தையும் அவர் காண்கிறார்.


19 ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்;
மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார்.


20 இறைப்பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை;
பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.


குறிப்புகள்

[1] 15:2 = சாஞா 8:2,9.
[2] 15:7 = சாஞா 1:4.
[3] 15:14 = தொநூ 1:26-30.
[4] 15:17 = இச 30:15,19.


அதிகாரம் 16

தொகு

தீயோர் பெறும் தண்டனை

தொகு


1 பயனற்ற பிள்ளைகள் பலரைப் பெற ஏங்காதே;
இறைப்பற்றில்லாத மக்கள் பற்றி மகிழ்ச்சி கொள்ளாதே.


2 அவர்கள் பலராய் இருப்பினும்
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் அவர்களிடம் இல்லையெனில்
அவர்களால் மகிழ்ச்சி அடையாதே.


3 அவர்களின் நீடிய வாழ்வில் நம்பிக்கை வைக்காதே;
அவர்களுடைய எண்ணிக்கையை நம்பியிராதே.
ஓராயிரம் பிள்ளைகளைவிட ஒரே பிள்ளை சிறந்ததாய் இருக்கலாம்;
இறைப்பற்றில்லாத பிள்ளைகளைப் பெறுவதைவிடப்
பிள்ளையின்றி இறப்பது நலம். [1]


4 அறிவுக்கூர்மை படைத்த ஒருவர்
ஒரு நகரையே மக்களால் நிரப்பக்கூடும்;
ஒழுக்க வரம்பு அற்றோரின் ஒரு குலம்
அதைச் சுடுகாடாக மாற்ற இயலும்.


5 இவைபோன்ற பலவற்றை என் கண் கண்டுள்ளது;
இவற்றினும் பெரியனவற்றை என் காது கேட்டுள்ளது.


6 பாவிகளின் கூட்டத்தில் தீ கொழுந்துவிட்டு எரியும்;
கட்டுப்பாடில்லா நாட்டில் சினம் பற்றியெரியும்.


7 தங்கள் வலிமைகொண்டு கிளர்ச்சி செய்த
பழங்கால அரக்கர்களை ஆண்டவர் மன்னிக்கவில்லை. [2]


8 லோத்து என்பவரை அடுத்து வாழ்ந்தவர்களை
அவர் அழிக்காமல் விடவில்லை; [3]
அவர்களின் இறுமாப்பினால் அவர்களை வெறுத்தார்.


9 கேட்டிற்குரிய நாட்டின்மீது அவர் இரக்கம் காட்டவில்லை;
தங்கள் பாவங்களால் அவர்கள் வேருடன் களைந்து எறியப்பட்டார்கள்.


10 தங்கள் பிடிவாதத்தால் திரண்டிருந்த
ஆறு இலட்சம் காலாட்படையினரையும்
அவர் தண்டிக்காமல் விடவில்லை. [4]


11 பிடிவாதம் கொண்ட ஒருவர் இருந்திருந்தால்கூட
அவர் தண்டனை பெறாது விடப்பட்டிருந்தால்
அது வியப்பாக இருந்திருக்கும்!
இரக்கமும் சினமும் ஆண்டவரிடம் உள்ளன.
அவர் மன்னிப்பதில் வல்லவர்;
தம் சினத்தைக் காட்டுவதிலும் வல்லவர்.


12 அவரின் இரக்கம் பெரிது;
அவரது தண்டனை கடுமையானது.
அவரவர் செயல்களுக்கு ஏற்ப அவர் மனிதருக்குத் தீர்ப்பளிக்கிறார்.


13 பாவிகள் தங்கள் கொள்ளைப் பொருள்களுடன் தப்பமாட்டார்கள்.
இறைப்பற்றுள்ளோரின் பொறுமை வீண்போகாது.


14 தருமங்கள் அனைத்தையும் அவர் குறித்து வைக்கிறார்;
மனிதர் எல்லாரும் அவரவர் தம் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு பெறுவர். [5]


15 [6] [ஆண்டவரைப் பார்வோன் அறிந்து கொள்ளாதவாறும்
அதனால் அவருடைய செயல்களை உலகம் தெரிந்து கொள்ளாதவாறும்
அவனுக்குப் பிடிவாதமுள்ள உள்ளத்தைக் கொடுத்தார்.]


16 படைப்பு முழுவதற்கும் அவர் தம் இரக்கத்தை வெளிப்படுத்தினார்;
ஒளியையும் இருளையும் தூக்குநூல் கொண்டு பிரித்துவைத்தார்.

கைம்மாறு பெறுவது உறுதி

தொகு


17 'நான் ஆண்டவரிடமிருந்து ஒளிந்து கொள்வேன்;
உயர் வானிலிருந்து யார் என்னை நினைப்பார்?
இத்துணை பெரிய மக்கள் திரளில் என்னை யாருக்கும் தெரியாது;
அளவற்ற படைப்பின் நடுவே நான் யார்?'
என்று சொல்லிக் கொள்ளாதே.


18 இதோ! அவரது வருகையின்போது வானமும்
வானகத்தின் மேல் உள்ள விண்ணகமும்
கீழுலகும் மண்ணுலகும் நடுங்கும்.


19 அவரது பார்வைப் பட்டதும்
மலைகளும் மண்ணுலகின் அடித்தளங்களும்
அதிர்ந்து நடுங்குகின்றன.


20 இவைபற்றி மனிதர் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
அவருடைய வழிகளை யாரே அறிவர்?


21 புயலை யாரும் காண்பதில்லை;
அவருடைய செயல்களுள் பல மறைந்துள்ளன.


22 அவருடைய நீதியின் செயல்களை யாரால் அறிவிக்கமுடியும்?
அவற்றுக்காக யார் காத்திருக்க முடியும்?
அவரின் உடன்படிக்கை தொலைவில் உள்ளது.


23 மேற்கூறியவை அறிவில்லாதவர்களின் எண்ணங்கள்;
மதிகெட்ட, நெறிபிறழ்ந்த மனிதர்கள் மூடத்தனமானவற்றை நினைக்கிறார்கள்.

படைப்பின் மணிமுடி மானிடர்

தொகு


24 குழந்தாய், நான் சொல்வதைக் கேள்;
அதனால் அறிவு பெறு;
என் சொற்கள்மீது உன் கருத்தைச் செலுத்து.


25 நற்பயிற்சியை உனக்கு நுட்பமாகக் கற்பிப்பேன்;
அறிவை உனக்குச் செம்மையாய் புகட்டுவேன்.


26 தொடக்கத்தில் ஆண்டவர் தம் படைப்புகளை உண்டாக்கியபோது,
பின்னர் அவற்றின் எல்லைகளை வரையறுத்தபோது, [7]


27 தம் படைப்புகளை என்றென்றைக்கும் ஒழுங்கோடு அமைத்தார்;
அவற்றின் செயற்களங்களை எல்லாத் தலைமுறைகளுக்கும் வகுத்தார்.
அவற்றுக்குப் பசியுமில்லை, சோர்வுமில்லை;
தங்கள் பணியிலிருந்து அவை தவறுவதுமில்லை.


28 அவற்றுள் ஒன்று மற்றொன்றை நெருங்குவதில்லை;
அவரது சொல்லுக்கு அவை என்றுமே கீழ்ப்படியாமலில்லை. [8]


29 அதன்பின் ஆண்டவர் மண்ணுலகை நோக்கினார்;
அதைத் தம் நலன்களால் நிரப்பினார்.


30 நிலப்பரப்பை எல்லாவகை உயிரினங்களாலும் நிறைத்தார்.
அவை மண்ணுக்கே திரும்ப வேண்டும். [9]


குறிப்புகள்

[1] 16:3 = சாஞா 4:1-3.
[2] 16:7 = தொநூ 6:4; சாஞா 19:24.
[3] 16:8 = தொநூ 19:24.
[4] 16:10 = எண் 14:35.
[5] 16:14 = யோபு 34:11.
[6] 16:15 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[7] 16:26 - இது எபிரேய பாடம். "தீர்ப்பிடப்பட்டபோது" என்பது கிரேக்க பாடம்.
[8] 16:28 = திபா 14:8.
[9] 16:30 = சஉ 3:20.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை