திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 49 முதல் 51 வரை

"
திராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம்வரை என் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது; என் காலடிகள் நேரிய வழியில் சென்றன. என் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன்." - சீராக்கின் ஞானம் 51:15.

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)

தொகு

அதிகாரங்கள் 49 முதல் 51 வரை

அதிகாரம் 49

தொகு

யோசியா

தொகு


1 யோசியாவின் நினைவு, நறுமணப் பொருள் தயாரிப்பவரால் செய்யப்பட்ட
தூபக் கலவைபோன்றது;
எல்லாருடைய வாயிலும் தேனைப்போலும்,
திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தின் இன்னிசைபோலும் இனியது.


2 மக்களைச் சீர்படுத்துவதில் நேர்மையாக நடந்துகொண்டார்;
தீநெறியின் அருவருப்பை நீக்கினார்.


3 ஆண்டவரிடம் தம் உள்ளத்தைச் செலுத்தினார்;
தீநெறியாளர்களின் காலத்தில் வாழ்ந்த இறைப்பற்றுள்ளோரை உறுதிப்படுத்தினார். [1]

எரேமியா

தொகு


4 தாவீது, எசேக்கியா, யோசியா, ஆகியோரைத்தவிர
மற்ற அனைவரும் பாவத்திற்குமேல் பாவம் செய்தனர்.
ஏனெனில் உன்னத இறைவனின் திருச்சட்டத்தைக் கைவிட்டனர்;
யூதாவின் மன்னர்களும் மறைந்துபோயினர்.


5 அவர்கள் தங்களுடைய வலிமையைப் பிறருக்கு விட்டுக்கொடுத்தார்கள்;
தங்களுடைய மாட்சியை அயல் நாட்டாருக்குக் கையளித்தார்கள்.


6 திருவிடம் அமைந்திருந்த தெரிந்தெடுக்கப்பட்ட நகரை அவர்கள் தீக்கிரையாக்கினார்கள்;
எரேமியா கூறியபடி அதன் தெருக்களைப் பாழாக்கினார்கள்.


7 தாயின் வயிற்றிலேயே இறைவாக்கினராகத் திருநிலைப்படுத்தப்பெற்று,
பிடுங்கவும் துன்புறுத்தவும் இடிக்கவுமின்றி,
கட்டியெழுப்பவும் நட்டுவைக்கவும் ஏற்படுத்தப்பெற்ற எரேமியாவை
அவர்கள் கொடுமையாய் நடத்தினார்கள். [2]

எசேக்கியேல்

தொகு


8 எசேக்கியேல் கடவுளுடைய மாட்சியின் காட்சியைக் கண்டார்;
கெருபுகள் தாங்கின தேரின்மேல் மிளிர்ந்த அம்மாட்சியை ஆண்டவர் அவருக்குக் காட்டினார்.


9 பகைவர்களை நினைவுகூர்ந்து புயலை அனுப்பினார்;
நேரிய வழியில் நடந்தோருக்கு நலன்கள் புரிந்தார். [3]


10 பன்னிரண்டு இறைவாக்கினர்களின் எலும்புகள்
அவர்களது கல்லறையிலிருந்து புத்துயிர் பெற்றெழுக.
அவர்கள் யாக்கோபின் குலத்தாரைத் தேற்றினார்கள்;
பற்றுறுதி கொண்ட நம்பிக்கையால் அவர்களை விடுவித்தார்கள்.

செருபாபேல், யோசுவா

தொகு


11 செருபாபேலை எவ்வாறு நாம் மேன்மைப்படுத்துவோம்?
வலக்கையின் கணையாழிபோல் அவர் திகழ்ந்தார். [4]


12 அவரைப்போலவே யோசதாக்கின் மகன் யோசுவாவும் விளங்கினார்.
அவர்கள் தங்கள் காலத்தில் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டினார்கள்;
என்றுமுள மாட்சிக்கென நிறுவப்பட்ட திருக்கோவிலை ஆண்டவருக்கு எழுப்பினார்கள். [5]

நெகேமியா

தொகு


13 நெகேமியாவின் நினைவும் பெருமைக்குரியது.
இடிந்து விழுந்த மதில்களை அவர் நமக்காக எழுப்பினார்;
கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் பொருத்தினார்;
நம் இல்லங்களை மீண்டும் கட்டினார். [6]

ஏனோக்கு

தொகு


14 ஏனோக்குபோன்ற எவரும் மண்ணுலகின்மீது படைக்கப்படவில்லை.
அவர் நிலத்திலிருந்து மேலே எடுத்துக் கொள்ளப்பெற்றார். [7]


15 யோசேப்பைப் போன்றவர் எவரும் பிறந்ததில்லை;
அவர் சகோதரர்களின் தலைவராகவும் மக்களின் ஊன்றுகோலாகவும் திகழ்ந்தார்.
அவருடைய எலும்புகளும் காக்கப்பட்டன. [8]


16 சேம், சேத்து ஆகியோர் மனிதருக்குள் மாட்சிமைப்படுத்தப்பெற்றனர்.
படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுள்ளும் ஆதாம் சிறந்து விளங்குகிறார்.


குறிப்புகள்

[1] 49:1-3 = 2 அர 22:1-2, 11-13; 23:3-25; 2 குறி 34:14.
[2] 49:6-7 = எரே 1:4-10; 37:21.
[3] 49:8-9 = எசே 1:3-28; 14:14-20.
[4] 49:11 = ஆகா 2:23; எஸ்ரா 3:2.
[5] 49:12 = ஆகா 1:1; 12:15.
[6] 49:13 = நெகே 2:11-4:15; 6:1-5.
[7] 49:14 = சாஞா 4:10-14; தொநூ 5:24.
[8] 49:15 = தொநூ 37:1-50:26.

அதிகாரம் 50

தொகு

தலைமைக் குரு சீமோன்

தொகு


1 ஓனியாவின் மகன் சீமோன் தலைமைக் குருவாய்த் திகழ்ந்தார்;
அவர் தம் வாழ்நாளில் ஆண்டவருடைய இல்லத்தைப் பழுதுபார்த்தார்;
தமது காலத்தில் கோவிலை வலிமைப்படுத்தினார்.


2 அவர் உயரமான இரட்டைச் சுவருக்கு அடிக்கல் நாட்டினார்;
கோவிலைச்சுற்றி உயர்ந்த சுவர் அணைகளை அமைத்தார்.


3 அவருடைய காலத்தில் நீர்த் துறை ஒன்று தோண்டப்பட்டது.
அந்நீர்த்தேக்கம் கடலைப்போன்று பரந்தது.


4 தம் மக்களை அழிவினின்று காப்பாற்றக் கருத்தாயிருந்தார்;
முற்றுகையை எதிர்த்து நிற்க நகரத்தை வலிமைப்படுத்தினார்.


5 திரையிட்டியிருந்த தூயகத்திலிருந்து அவர் வெளியே வந்த வேளையில்
மக்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது எத்துணை மாட்சிமிக்கவராய்த் திகழ்ந்தார்!


6 முகில்களின் நடுவே தோன்றும் விடிவெள்ளி போன்று விளங்கினார்;
விழாக் காலத்தில் தெரியும் முழு நிலவுபோல் ஒளி வீசினார்.


7 உன்னத இறைவனின் கோவிலுக்குமேல் ஒளிரும் கதிரவன் போலவும்
மாட்சிமிகு முகில்களில் பளிச்சிடும் வானவில் போலவும் காணப்பட்டார்.


8 முதற்கனிகளின் காலத்தில் மலரும் ரோசாபோன்றும்,
நீரூற்றின் ஓரத்தில் அலரும் லீலி மலர்போன்றும்
கோடைக்காலத்தில் தோன்றும் லெபனோனின் பசுந்தளிர்போன்றும் திகழ்ந்தார்.


9 தூபக் கிண்ணத்தில் இருக்கும் தீயும் சாம்பிராணியும் போலவும்
எல்லாவகை விலையுயர்ந்த கற்களாலும் அணி செய்த
பொற்கலத்தைப்போலவும் விளங்கினார்.


10 கனி செறிந்த ஒலிவ மரம்போலவும்
முகிலை முட்டும் சைப்பிரசுமரம்போலவும் இருந்தார்.


11 அவர் மாட்சியின் ஆடை அணிந்து பெருமைக்குரிய அணிகலன்கள் புனைந்து
தூய பலிபீடத்தில் ஏறியபோது திருஇடம் முழுவதையும் மாட்சிப்படுத்தினார். [1]


12 எரிபலி பீடத்தின் அருகே அவர் நிற்க,
மற்றக் குருக்கள் மாலைபோல் அவரைச் சூழ்ந்து கொள்ள,
அவர் அவர்களின் கைகளிலிருந்து பலியின் பாகத்தைப் பெற்றுக் கொண்டபோது,
லெபனோனின் இளங் கேதுரு மரம்போல விளங்கினார்.
அவர்கள் பேரீச்சைமரம்போல் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.


13 ஆரோனின் மைந்தர்கள் எல்லாரும் தங்களது மாட்சியில்
ஆண்டவருக்குரிய காணிக்கைகளைத் தங்கள் கைகளில் ஏந்தி
இஸ்ரயேலின் சபை முழுவதற்கும் முன்பாக நின்றார்கள்.


14 சீமோன் பலிபீடப் பணிகளை முடித்துக்கொண்டு,
எல்லாம் வல்ல உன்னத இறைவனுக்குச்
செலுத்தவேண்டிய காணிக்கையை ஒழுங்குபடுத்தினார்.


15 பின் தமது கையை நீட்டிக் கிண்ணத்தை எடுத்தார்;
திராட்சை இரசத்தை அதில் வார்த்தார்;
பீடத்தின் அடியில் அதை ஊற்றினார்.
அது அனைத்திற்கும் மன்னரான உன்னதருக்கு
உகந்த நறுமணப் பலியாய் அமைந்தது.


16 அதன்பின் ஆரோனின் மைந்தர்கள் ஆர்ப்பரித்தார்கள்;
வெள்ளியாலான எக்காளங்களை முழங்கினார்கள்;
உன்னத இறைவனை நினைவுபடுத்தப் பேரொலி எழச் செய்தார்கள். [2]


17 எல்லா மக்களும் ஒன்றுசேர்ந்து விரைந்தார்கள்;
தரையில் குப்புற விழுந்தார்கள்;
எல்லாம் வல்ல உன்னத ஆண்டவரை வணங்கினார்கள்.


18 பாடகர்கள் தங்கள் குரல்களால் அவரைப் புகழ்ந்தார்கள்;
அதன் பேரொலி இன்னிசையாய் எதிரொலித்தது.


19 ஆண்டவருக்குரிய வழிபாட்டுமுறை முடியும்வரை
இரக்கமுள்ளவர் திருமுன் மக்கள் வேண்டினார்கள்;
உன்னத ஆண்டவரை மன்றாடினார்கள்.
அதனோடு அவருடைய திருப்பணி நிறைவு பெற்றது.


20 ஆண்டவருடைய பெயரில் பெருமை கொள்ளவும்
அவருடைய ஆசியைத் தம் வாயால் மொழியவும்
சீமோன் இறங்கி வந்து இஸ்ரயேல் மக்களின் முழுச் சபைமீதும்
தம் கைகளை உயர்த்தினார். [3]


21 உன்னத கடவுளிடமிருந்து ஆசி பெற்றுக்கொள்ள
அவர்கள் மீண்டும் தலை தாழ்த்தி வணங்கினார்கள்.

அறிவுரையும் ஆசியும்

தொகு


22 இப்பொழுது அண்டத்தின் கடவுளைப் போற்றுங்கள்;
எல்லா இடங்களிலும் அரியன பெரியன செய்பவரை,
பிறப்பிலிருந்து நம் வாழ்வை மேன்மைப்படுத்துபவரை,
தம் இரக்கத்திற்கு ஏற்ப நம்மை நடத்துகிறவரைப் புகழுங்கள்.


23 அவர் நமக்கு மனமகிழ்ச்சியை அளிப்பாராக;
இஸ்ரயேலில் முந்திய நாள்களில் இருந்ததுபோல
நம் நாள்களிலும் அமைதி நிலவுவதாக.


24 அவருடைய இரக்கம் நம்முடன் என்றும் இருப்பதாக;
நம் நாள்களில் அவர் நம்மை விடுவிப்பாராக.

அருவருப்பான மக்களினத்தார்

தொகு


25 இரண்டு வகை மக்களினத்தாரை என் உள்ளம் வெறுக்கிறது;
மூன்றாம் வகையினர் மக்களினத்தாரே அல்ல.


26 அவர்கள்: சமாரியா மலைமீது வாழ்வோர், பெலிஸ்தியர்,
செக்கேமில் குடியிருக்கும் அறிவற்ற மக்கள்.

முடிவுரை

தொகு


27 எருசலேம்வாழ் எலயாசரின் மகனான சீராக்கின் மைந்தர் ஏசுவாகிய நான்
ஞானத்தை என் உள்ளத்திலிருந்து பொழிந்தேன்;
கூர்மதியையும் அறிவாற்றலையும் தரும்
நற்பயிற்சி அடங்கியுள்ள இந்நூலை எழுதியுள்ளேன்.


28 இவற்றில் ஈடுபாடு காட்டுவோர் பேறுபெற்றோர்;
தம் உள்ளத்தில் இவற்றை இருத்துவோர் ஞானியர் ஆவர்.
29 இவற்றைக் கடைப்பிடிப்போர் அனைத்திலும் ஆற்றல் பெறுவர்.
ஆண்டவருடைய ஒளியே அவர்களுக்கு வழி.


குறிப்புகள்

[1] 50:11 = சாஞா 18:24.
[2] 50:16 = எண் 10:10.
[3] 50:20 = எண் 6:24-27.

அதிகாரம் 51

தொகு

பிற்சேர்க்கை

தொகு

நன்றிப் பாடல்

தொகு


1 மன்னராகிய ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துவேன்;
என் மீட்பராகிய கடவுளே, உம்மைப் புகழ்வேன்;
உமது பெயருக்கு நன்றி சொல்வேன்.


2 நீரே என் பாதுகாவலரும் துணைவரும் ஆனீர்;
அழிவிலிருந்து என் உடலைக் காப்பாற்றினீர்;
பழிகூறும் நாவின் கண்ணியிலிருந்தும்
பொய்யை உருவாக்கும் உதடுகளிலிருந்தும் விடுவித்தீர்;
என்னை எதிர்த்து நின்றவர்முன் நீரே என் துணையானீர்;
என்னை விடுவித்தீர். [1]


3 உம் இரக்கப் பெருக்கத்திற்கும் பெயருக்கும் ஏற்ப,
என்னைக் கடிந்து விழுங்கத் துடித்தவர்களின் பற்களிலிருந்தும்
என் உயிரைப் பறிக்கத் தேடியவர்களின் கைகளிலிருந்தும்
நான் பட்ட பல துன்பங்களிலிருந்தும் என்னை விடுவித்தீர்.


4 என்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும்
நான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர்.


5 பாதாளத்தின் ஆழத்தினின்றும் மாசு படிந்த நாவினின்றும்
பொய்ச் சொற்களினின்றும் என்னைக் காத்தீர்.


6 மன்னரிடம் பழி சாற்றும் அநீதியான நாவினின்றும் என்னை விடுவித்தீர்.
என் உயிர் சாவை நெருங்கி வந்தது;
என் வாழ்க்கை ஆழ்ந்த பாதாளத்தின் அண்மையில் இருந்தது. [2]


7 என்னை எப்புறத்திலும் அவர்கள் வளைத்துக்கொண்டார்கள்.
எனக்கு உதவி செய்வோர் யாருமில்லை.
மனிதரின் உதவியைத் தேடினேன்; உதவ யாருமில்லை. [3]


8 அப்போது ஆண்டவரே,
உம் இரக்கத்தையும், என்றென்றும் நீர் ஆற்றிவரும் செயல்களையும் நினைவுகூர்ந்தேன்;
உமக்காகக் காத்திருப்போரை எவ்வாறு விடுவிக்கிறீர் என்பதையும்
பகைவரின் கையிலிருந்து அவர்களை எவ்வாறு மீட்கீறீர் என்பதையும் எண்ணிப்பார்த்தேன்.


9 என் மன்றாட்டுகளை மண்ணுலகிலிருந்து எழுப்பினேன்;
சாவிலிருந்து விடுவிக்க வேண்டினேன்.


10 'என் ஆண்டவரின் தந்தாய்,
என் துன்ப நாள்களிலும்
செருக்குற்றோருக்கு எதிராய் எனக்கு உதவியே இல்லாத காலத்திலும்
என்னைப் புறக்கணியாதீர்.
இடைவிடாமல் உம் பெயரைப் புகழ்வேன்;
நன்றிப் பாடல் பாடுவேன்' என்று சொல்லி ஆண்டவரை வேண்டினேன்.


11 என் மன்றாட்டு கேட்கப்பட்டது.
அழிவிலிருந்து நீர் என்னை மீட்டீர்;
தீங்கு விளையும் நேரத்திலிருந்து என்னை விடுவித்தீர்.


12 இதன்பொருட்டு உமக்கு நன்றி கூறுவேன்; உம்மைப் புகழ்வேன்;
ஆண்டவருடைய பெயரைப் போற்றுவேன்.

ஞானத்தைத் தேடல்

தொகு


13 நான் இளைஞனாய் இருந்தபோது, பயணம் மேற்கொள்ளுமுன்
என்னுடைய வேண்டுதலில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன்.


14 கோவில்முன் அதற்காக மன்றாடினேன்;
இறுதிவரை அதைத் தேடிக்கொண்டேயிருப்பேன்.


15 திராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம்வரை
என் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது;
என் காலடிகள் நேரிய வழியில் சென்றன.
என் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன்.


16 சிறிது நேரமே செவி சாய்த்து அதைப் பெற்றுக் கொண்டேன்;
மிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக் கண்டடைந்தேன்.


17 ஞானத்தில் நான் வளர்ச்சி அடைந்தேன்;
எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன்.


18 ஞானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்தேன்;
நன்மைமீது பேரார்வம் கொண்டேன்; நான் ஒருபோதும் வெட்கமுறேன்.


19 நான் ஞானத்தை அடையப் போராடினேன்;
திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருந்தேன்;
உயர் வானத்தை நோக்கி என் கைகளை உயர்த்தினேன்;
ஞானத்தை நான் இதுவரை அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன்.


20 அதன்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்;
தூய்மையில் அதைக் கண்டுகொண்டேன்;
தொடக்கத்திலிருந்தே என் உள்ளத்தை அதன்மேல் பதித்தேன்;
இதன்பொருட்டு நான் என்றுமே கைவிடப்படேன்.


21 என் உள்மனம் அதைத் தேடி அலைந்தது.
இதனால் நான் நல்லதொரு சொத்தினைப் பெற்றுக்கொண்டேன்.


22 ஆண்டவர் எனக்கு நாவைப் பரிசாகக் கொடுத்தார்.
அதைக்கொண்டு நான் அவரைப் புகழ்வேன்.


23 நற்பயிற்சி பெறாதோரே, என் அருகே வாருங்கள்;
நற்பயிற்சியின் இல்லத்தில் தங்குங்கள்.


24 'இவற்றில் நாங்கள் குறையுள்ளவர்களாய் இருக்கிறோம்' என ஏன் சொல்கிறீர்கள்?
உங்கள் உள்ளம் பெரிதும் தவிப்பது ஏன்?


25 நான் வாய் திறந்து சொன்னேன்:
'பணம் இல்லாமலேயே உங்களுக்கென ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்;


26 ஞானத்தின் நுகத்தைத் தலை தாழ்த்தி ஏற்றுக்கொள்ளுங்கள்;
உங்கள் கழுத்துகளை வளைந்து கொடுங்கள்.
உங்கள் உள்ளம் நற்பயிற்சிபெறுவதாக.
அருகிலேயே அதைக் கண்டுகொள்ளலாம்.


27 உங்கள் கண்களால் பாருங்கள்;
நான் சிறிதே முயன்றேன்; மிகுந்த ஓய்வை எனக்கெனக் கண்டுகொண்டேன்.


28 மிகுந்த பொருள் கொடுத்து நற்பயிற்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
அதனால் பெருஞ்செல்வத்தை அடைந்து கொள்வீர்கள்.


29 ஆண்டவரின் இரக்கத்தில் உங்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்வதாக;
அவரைப் புகழ்வதில் என்றும் நாணம் கொள்ளாதிருப்பீர்களாக.


30 குறித்த காலத்திற்குமுன்பே உங்கள் பணிகளைச் செய்துமுடியுங்கள்.
அவ்வாறாயின் குறித்த காலத்தில் கடவுள் உங்களுக்குப் பரிசு வழங்குவார்.


குறிப்புகள்

[1] 51:2 = திபா 120:2.
[2] 51:6 = திபா 88:3.
[3] 51:7 = திபா 22:11.


(சீராக்கின் ஞானம் நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): பாரூக்கு: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை