திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/தோபித்து (தொபியாசு ஆகமம்)/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை
தோபித்து (The Book of Tobit)
தொகுஅதிகாரங்கள் 9 முதல் 10 வரை
அதிகாரம் 9
தொகுகடனைத் திரும்பப் பெறுதல்
தொகு
1 பின்னர் தோபியா இரபேலை அழைத்து அவரிடம்,
2 "சகோதரர் அசரியா, நீர் நான்கு பணியாளர்களை அழைத்துக் கொண்டு
இரண்டு ஒட்டகங்களோடு இராகிக்குப் புறப்பட்டுக்
கபேலிடம் செல்லும்.
அவரிடம் ஆவணத்தைக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும்.
அவரையும் உம்முடன் திருமணத்திற்கு அழைத்து வாரும்.
3-4 என் தந்தை நாள்களை எண்ணிக்கொண்டிருப்பார் என்பது உமக்குத் தெரியுமே.
நான் ஒரு நாள் தாமதித்தாலும் அவர் மிகவும் துயருக்குள்ளாவார்.
இரகுவேல் என்ன ஆணையிட்டுள்ளார் எனப் பாரும்.
நான் அவருடைய ஆணையை மீற முடியுமா?" என்றார்.
5 எனவே இரபேல் நான்கு பணியாளர்களை அழைத்துக் கொண்டு,
இரண்டு ஒட்டகங்களோடு
மேதியாவில் இருந்த இராகிக்குச் சென்று கபேலுடன் தங்கினார்;
அவரிடம் ஆவணத்தைக் கொடுத்தார்.
தோபித்துடைய மகன் தோபியாவின் திருமணத்தைப்பற்றிக் கூறி,
திருமணத்திற்கு அவரைத் தோபியா அழைத்துவரச் சொன்னதாக உரைத்தார்.
கபேல் எழுந்து முத்திரையிட்ட பணப்பைகளைச் சரிபார்த்து எடுத்து வைத்தார்.
6 எல்லாரும் வைகறையில் எழுந்து திருமணத்திற்குச் சென்றனர்.
அவர்கள் இரகுவேலின் வீட்டை வந்தடைந்தபொழுது
உணவருந்திக்கொண்டிருந்த தோபியா எழுந்து
கபேலுக்கு வணக்கம் தெரிவித்தார்.
கபேல் மகிழ்ச்சிக் கண்ணீர் மல்க,
"நல்லவனே, சிறந்தவனே,
நன்மையும் சிறப்பும் நேர்மையும்
வள்ளன்மையும் நிறைந்தவரின் மகனே,
ஆண்டவர் உனக்கும் உன் மனைவிக்கும்
அவளுடைய பெற்றோருக்கும் வானகப் பேறுகளை வழங்குவாராக.
என் உறவினர் தோபித்தைப்போலத் தோற்றமுள்ள ஒருவரைக்
காணச் செய்த கடவுள் போற்றி" என்று கூறித் தோபித்தை வாழ்த்தினார்.
அதிகாரம் 10
தொகுதோபித்து, அன்னாவின் கவலை
தொகு
1 இதற்கிடையில், மேதியாவுக்குச் சென்று திரும்ப
எத்தனை நாள்களாகும் என்று
ஒவ்வொரு நாளும் தோபித்து எண்ணிக் கொண்டிருந்தார்.
நாள்கள் நகர்ந்தனவேதவிர மகன் திரும்பிவரவில்லை.
2 "ஒருவேளை அங்குத் தாமதம் ஆகிவிட்டதோ?
கபேல் இறந்திருப்பாரோ?
தோபியாவுக்குப் பணம் கொடுக்க யாரும் இல்லையோ?"
என்றெல்லாம் எண்ணி,
3 கவலைகொள்ளத் தொடங்கினார்.
4 அவருடைய மனைவி அன்னா,
"என் மகன் மறைந்துவிட்டான்.
அவனை இனி உயிரோடு காண முடியாதே!" என்று
மகனை நினைத்து அழுது புலம்பத் தொடங்கினார்.
5 "ஐயோ! என் மகனே,
என் கண்களின் ஒளியான உன்னைப் போகவிட்டேனே!" என்று கலங்கினார்.
6 தோபித்து, "அன்பே, பேசாமல் இரு;
கவலைப்படாதே. நம் மகன் நன்றாய்த்தான் இருக்கிறான்.
அங்கு அவர்களுக்கு எதிர்பாராமல் ஏதாவது நடந்திருக்கலாம்.
அவனுடன் சென்ற மனிதர் நம்பத்தக்கவர்;
நம் உறவினர்களுள் ஒருவர்.
அன்பே, மகனுக்காக வருந்தாதே.
விரைவில் அவன் திரும்பி விடுவான்" என்று தம் மனைவியைத் தேற்றினார்.
7 அதற்கு அன்னா, "என்னிடம் பேசாதீர்கள்.
என்னை ஏமாற்ற வேண்டாம்.
என் மகன் இறந்துவிட்டான்" என்று புலம்பினார்.
நாள்தோறும் அன்னா ஓடிச் சென்று
தம் மகன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருப்பார்;
யாரையும் நம்பமாட்டார்;
கதிரவன் மறைந்ததும் வீடு திரும்புவார்;
இரவெல்லாம் உறங்காமல் அழுதுகொண்டேயிருப்பார்.
தோபியா வீடு திரும்புதல்
தொகு
8 இரகுவேல் தாம் உறுதியிட்டுக் கூறியிருந்தவாறு
தம் மகளுக்காக வழங்கிய பதினான்கு நாள் விருந்து நிறைவு பெற்றது.
பின் தோபியா அவரிடம் சென்று,
"என்னைப் போகவிடுங்கள்.
என் தந்தையும் தாயும் என்னை மீண்டும் காணலாம் என்னும் நம்பிக்கையை
இதற்குள் இழந்திருப்பார்கள் என அறிவேன்.
இப்பொழுது என் தந்தையிடம் செல்ல
விடை அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன்.
மாமா, எந்நிலையில் நான் அவரை விட்டுவந்தேன் என்று
உங்களுக்கு நான் ஏற்கெனவே கூறியுள்ளேன்" என்றார்.
9 ஆனால் இரகுவேல் தோபியாவிடம்,
"தங்கு, மருமகனே; என்னுடன் தங்கியிரு.
உன்னைப்பற்றி உன் தந்தை தோபித்திடம் தெரிவிக்க
நான் தூதர்களை அனுப்புகிறேன்" என்றார்.
அதற்கு அவர், "வேண்டவே வேண்டாம்.
என் தந்தையிடம் செல்ல விடை அளிக்குமாறு
உங்களை வேண்டுகிறேன்" என்று வலியுறுத்தினார்.
10 இரகுவேல் எழுந்து தோபியாவின் மனைவி சாராவையும்
தம் உடைமையிலெல்லாம் பாதியையும்
ஆண் பெண் பணியாளர்களையும்
காளைகள், ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்கள்,
துணி, பணம், வீட்டுக்குரிய பொருள்கள்
ஆகிய அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து,
11 பிரியா விடை கூறினார்.
தோபியாவைக் கட்டித் தழுவியபடி,
"மருமகனே, நலமுடன் போய்வா;
உன் பயணம் இனிதே அமையட்டும்.
விண்ணக ஆண்டவர் உனக்கும்
உன் மனைவி சாராவுக்கும் வளம் அருள்வாராக.
நான் இறக்குமுன் உங்கள் குழந்தைகளைக் காண்பேனாக" என்றார்.
12 பின் தம் மகள் சாராவிடம்,
"மகளே, உன் மாமனாரின் வீட்டிற்குப் புறப்பட்டுச் செல்.
இன்றுமுதல் அவர்கள் உன் பெற்றோருக்கு ஒப்பானவர்கள்.
மனநிறைவோடு போய்வா.
என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பற்றி நல்லதே கேட்பேனாக"
என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்தார்.
13 எதினா தோபியாவிடம்,
"என் அன்புக்குரிய மருமகனே,
ஆண்டவர் உம்மை நலமுற அழைத்துச்செல்வாராக.
நீரும் என் மகள் சாராவும்
பெற்றெடுக்கும் குழந்தைகளை நான் இறக்குமுன் காண்பேனாக.
ஆண்டவர் திருமுன் என் மகளை உம்மிடம் ஒப்படைக்கின்றேன்.
உம் வாழ்நாள் முழுவதும் அவள் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும்.
மருமகனே, மனநிறைவோடு போய்வாரும்.
இன்றுமுதல் நான் உம் அன்னை; சாரா உம் மனைவி.
நம் வாழ்வில் எந்நாளும் வளமாக வாழ்வோமாக" என்று கூறி,
அவர்கள் இருவரையும் முத்தமிட்டு இனிதே வழியனுப்பிவைத்தார்.
14 தோபியா, "என் வாழ்நாளெல்லாம்
உங்களை மதிப்பதே எனக்கு மகிழ்ச்சி" [*] என்று கூறி,
இரகுவேலிடமிருந்தும் அவருடைய மனைவி எதினாவிடமிருந்தும்
நலமோடும் மகிழ்ச்சியோடும் விடைபெற்றார்.
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரும்,
அனைத்துக்கும் மன்னருமானவரே தம் பயணத்தை
வெற்றியாக நடத்திக் கொடுத்தமைக்காக அவரைப் போற்றினார்.
- குறிப்பு
[*] 10:14 - இது மிகவும் சிதைவுற்ற வாக்கியம்.
" 'அவர்களின் வாழ்நாளெல்லாம் உன் பெற்றோரை மதிக்கக்
கடவுள் உனக்கு அருள்வாராக'
என்று இரகுவேல் தோபித்திடம் கூறினார்" என்றும்
மொழிபெயர்க்கலாம்.
(தொடர்ச்சி): தோபித்து: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை