திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/பாரூக்கு (எரேமியாவின் மடல்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

"வெள்ளரித் தோட்டத்தில் வைக்கப்படும் பொம்மை காவல்புரிவதில்லை. மரத்தால் செய்யப்பட்டு, பொன், வெள்ளியால் வேயப்பட்ட தெய்வச் சிலைகளும் அத்தகையனவே." - பாரூக்கு 6:69

பாரூக்கு (The Book of Baruch)

தொகு

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5

தொகு


1 எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு;
கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள்.


2 கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்து கொள்;
என்றுமுள்ளவரின் மாட்சியை மணிமுடியாக உன் தலைமீது சூடிக்கொள். [1]


3 கடவுள் வானத்தின்கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார்.


4 'நீதியில் ஊன்றிய அமைதி', 'இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி'
என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார்.


5 எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில்.
கீழ்த்திசையை நோக்கு;
கீழ்த்திசைமுதல் மேற்றிசை வரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும்
உன் மக்கள் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு,
கடவுள் தங்களை நினைவு கூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார்.


6 பகைவர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள்
உன்னைவிட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்;
ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது
அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல்
உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள்.


7 கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்துவரும் பொருட்டு,
உயர் மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும்
பள்ளத்தாக்குகள் நிரம்பவும்
இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார். [2]


8 மேலும், காடுகளும் நறுமணம் வீசும் மரங்கள் அனைத்தும்
கடவுளின் கட்டளையால் இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன.


9 கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும்,
தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும்
இஸ்ரயேலை அழைத்து வருவார்.


குறிப்புகள்

[1] 5:1-2 = எசா 52:1; 61:3,10.
[2] 5:7 = எசா 40:4.

அதிகாரம் 6

தொகு

எரேமியாவின் மடல்

தொகு

பாபிலோனுக்கு அந்நாட்டு மன்னரால் நாடுகடத்தப்படவிருந்த
இஸ்ரயேலருக்கு அறிவிக்குமாறு எரேமியா
தமக்குக் கடவுள் கட்டளையிட்டிருந்த செய்தியை எழுதி அனுப்பிய மடலின் நகல்:


1 கடவுள் முன்னிலையில் நீங்கள் செய்துள்ள பாவங்களை முன்னிட்டு,
பாபிலோனிய மன்னர் நெபுகத்னேசர் உங்களை நாடுகடத்தவிருக்கிறார்.
2 நீங்கள் பாபிலோனை அடைந்தபின் பல ஆண்டுகள் - நெடுங்காலம் -
அதாவது, ஏழு தலைமுறைக்கு அங்குத் தங்கியிருப்பீர்கள்.
அதன்பின் நான் உங்களை அங்கிருந்து அமைதியுடன் அழைத்து வருவேன்.
3 பொன், வெள்ளி, மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகளை
மனிதர் பாபிலோனில் தோளில் சுமந்து செல்லக் காண்பீர்கள்.


4-5 அவை வேற்றினத்தாரிடையே அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன.
எனவே அவற்றுக்கு முன்னும் பின்னும் மக்கள் திரளாகச் சென்று,
அவற்றை வழிபடுவதை நீங்கள் பார்க்கும் பொழுது எச்சரிக்கையாய் இருங்கள்;
வேற்றினத்தார்போல மாறிவிடாதீர்கள்;
அவற்றைக் கண்டு அஞ்சாதீர்கள். [1]
6 மாறாக, "ஆண்டவரே, உம்மையே நாங்கள் வழிபடவேண்டும்" என்று
உங்கள் உள்ளத்தில் சொல்லிக் கொள்ளுங்கள்.
ஏனெனில் என் தூதர் உங்களோடு இருக்கிறார்;
அவரே உங்கள் வாழ்வைப் பாதுகாப்பார். [2]


7 அச்சிலைகளின் நாக்குகள் கைவினைஞரால் தேய்த்துப் பளபளப்பாக்கப்பட்டவை;
அவை பொன், வெள்ளியால் வேயப்பட்டவை.
ஆனால் அவை பொய்யானவை, பேச முடியாதவை. [3]
8 அணிகலங்களை விரும்பும் இளம் பெண்ணுக்குச் செய்வது போன்று
மனிதர் பொன்னை எடுத்து, தங்கள் தெய்வங்களின் தலைகளுக்கு முடி செய்கின்றனர்.
9 சில நேரங்களில் அர்ச்சகர்கள் தங்கள் தெய்வங்களின் பொன், வெள்ளியைக் கவர்ந்து,
அவற்றைத் தங்களுக்கென்று பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அவற்றில் ஒரு பகுதியைத் தேவதாசிகளுக்கும் கொடுக்கிறார்கள்.
10 மனிதர்களுக்கு அழகு செய்வதுபோன்று
பொன், வெள்ளி, மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட
தெய்வச்சிலைகளுக்கு அழகு செய்கிறார்கள்.
துரு, அந்துப்பூச்சி ஆகியவற்றினின்று
தங்களையே காப்பாற்றிக்கொள்ள அச்சிலைகளால் முடியாது.
11 கருஞ்சிவப்பு பட்டாடைகளை அவை அணிந்திருந்தபோதிலும்,
கோவில் புழுதி அவற்றின்மேல் அடர்த்தியாகப் படிவதால்,
அவற்றின் முகங்கள் துடைக்கப்படவேண்டியுள்ளன.
12 மாநில ஆளுநர்போன்று அவை ஒவ்வொன்றும் செங்கோல் ஏந்தியுள்ளன;
ஆயினும் தங்களுக்குத் தீங்கிழைப்போரை அழித்தொழிக்க அவற்றால் முடியாது.
13 தங்கள் வலக்கையில் கத்தியும் கோடரியும் வைத்துள்ளன;
இருப்பினும் போரிலிருந்தும் கள்வரிடமிருந்தும்
தங்களையே காத்துக்கொள்ள அவற்றால் இயலாது.
14 அவை தெய்வங்கள் அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகும்.
ஆகவே அவற்றுக்கு அஞ்சாதீர்கள்.


15 மனிதர் பயன்படுத்தும் ஏனம் உடைந்துவிட்டால், அது ஒன்றுக்கும் உதவாது.
கோவில்களில் வேற்றினத்தாரால் நிறுவப்படும் தெய்வச் சிலைகள் அதைப் போன்றவையே.
16 உள்ளே நுழைவோருடைய கால்புழுதியால் அவற்றின் கண்கள் நிரப்பப்படுகின்றன.
17 மன்னருக்கு எதிராகக் குற்றம் புரிந்து சாவுத் தண்டனை பெற்ற ஒருவரை
எவ்வாறு அடைத்துவைத்து எப்புறமும் காவல்புரிகின்றார்களோ,
அவ்வாறே தங்கள் தெய்வச்சிலைகளைக் கள்வர் கவர்ந்து சென்றுவிடாதவாறு
அர்ச்சகர்கள் கோவில் கதவுகளைத் தாழிட்டுப் பாதுகாக்கிறார்கள்.
18 அர்ச்சகர்கள் தங்களுக்குத் தேவையானதைவிட
மிகுதியான விளக்குகளைத் தங்கள் தெய்வச் சிலைகளுக்கு ஏற்றிவைக்கிறார்கள்.
ஆயினும், அவ்விளக்குகளில் ஒன்றையேனும் அவற்றால் காண முடியாது. [4]
19 தெய்வச் சிலைகளின் உட்பகுதி
கோவிலின் உத்திரத்தைப் போலவே உளுத்துவிடுகிறது என்பர்.
மண்ணில் ஊர்ந்து வரும் புழுக்கள் அச்சிலைகளையும்
அவற்றின் உடைகளையும் அரித்துத் தின்கின்றன;
ஆனால் அவை அதை உணர்வதில்லை.
20 கோவிலில் எழும் புகையினால் அவற்றின் முகங்கள் கறுத்துவிடுகின்றன;
21 அவற்றின் உடல்மீதும் தலைமீதும்
வெளவால்களும் குருவிகளும் மற்றப் பறவைகளும் உட்காருகின்றன;
பூனைகளும் அவ்வாறே செய்கின்றன.
22 அவை தெய்வங்கள் அல்ல என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள்;
ஆகவே அவற்றுக்கு அஞ்சாதீர்கள்.


23 அழகுக்காக அவை பொன்னால் வேயப்பட்டுள்ளன;
ஆயினும் அவற்றின் மீதுள்ள துருவை யாராவது அகற்றினாலன்றி, அவை ஒளிவீசா.
அவை வார்க்கப்பட்ட பொழுதுகூட அவற்றுக்கு உணர்வு இருந்ததில்லை.
24 மிக உயர்ந்த விலைக்கு அவை வாங்கப்படுகின்றன;
25 எனினும், அவற்றுக்கு உயிரில்லை.
காலில்லாத இத்தெய்வச் சிலைகளை மனிதர் தோளில் சுமந்து செல்கின்றனர்.
இதனால் தாங்கள் பயனற்றவை என்பதை அவை மனிதர் அறியச் செய்கின்றன.
அவற்றை வணங்குவோர் இழிவுக்கு உள்ளாகின்றனர்;
ஏனெனில் அவை கீழே விழ நேரிட்டால்
அவர்கள்தாம் அவற்றைத் தூக்கி நிமிர்த்தி வைக்கவேண்டியிருக்கிறது.
26 யாராவது அவற்றைத் தூக்கி நிமிர்த்தி வைத்தாலும்
அவை தாமாகவே அசைய இயலாது;
அவை தடுமாறிக் கீழே விழுந்தால், தாமாகவே நிமிர முடியாது.
இறந்தோர்முன் வைப்பது போன்று,
அவற்றின்முன் மக்கள் காணிக்கைப் பொருள்களைப் படைக்கிறார்கள். [5]
27 அவற்றுக்குப் படைக்கப்படும் காணிக்கைப் பொருள்களை அர்ச்சகர்கள் விற்று,
பணத்தைத் தங்களுக்கென்று செலவிடுகிறார்கள்.
அதே போன்று அவர்களின் மனைவியரும்
காணிக்கைப் பொருள்களில் ஒரு பகுதியை உப்பிட்டுப் பாதுகாக்கின்றனர்.
அவற்றில் சிறிதுகூட அவர்கள் ஏழை எளியவர்க்குக் கொடுப்பதில்லை.
மாதவிலக்குப் பெண்டிரும் பேறுகாலத் தீட்டு நீங்காப் பெண்டிரும்
காணிக்கைப் பொருள்களைத் தொடுகின்றனர்.
28 அவை தெய்வங்கள் அல்ல என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள்.
ஆகவே அவற்றுக்கு அஞ்சாதீர்கள்.


29 பொன், வெள்ளி, மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகளுக்குப்
பெண்கள் உணவுப்பொருள்களைப் படைக்கிறார்கள்.
இவ்வாறிருக்க அவற்றைத் தெய்வங்கள் என்று அழைப்பது எவ்வாறு பொருந்தும்?
30 அவற்றின் அர்ச்சகர்கள் தலையையும் தாடியையும் மழித்துக்கொண்டு,
தலையில் முக்காடின்றி,
கிழிந்த ஆடைகளை அணிந்த வண்ணம் கோவில்களில் அமர்ந்திருக்கிறார்கள்.
31 இறந்தோர் நினைவு விருந்தின்போது சிலர் செய்வதுபோன்று
அர்ச்சகர்கள் தங்கள் தெங்வங்களின் முன்னிலையில் ஓலமிட்டுக் கதறுகிறார்கள்.
32 தங்கள் தெய்வச் சிலைகளுக்கு அணிவித்த உடைகளில் சிலவற்றைத் திருடி,
தங்கள் மனைவி மக்களுக்கு உடுத்தக் கொடுக்கிறார்கள்.
33 ஒருவர் அவற்றுக்கு நன்மை செய்தாலும் தீமை செய்தாலும்,
அவற்றால் கைம்மாறு செய்ய முடியாது.
மன்னர் ஒருவரை அரியணையில் ஏற்றவோ, இறக்கவோ அவற்றால் இயலாது.
34 அதே போன்று ஒருவருக்குச் செல்வமோ பணமோ வழங்க அவற்றால் முடியாது.
ஒருவர் அவற்றுக்கு நேர்ச்சை செய்து அதைச் செலுத்தத் தவறினால்,
அதைச் செலுத்துமாறு அவரைக் கட்டாயப்படுத்த அவற்றால் இயலாது.
35 இறப்பிலிருந்து ஒருவரை விடுவிக்கவோ,
வலியோரிடமிருந்து எளியோரைக் காக்கவோ அவற்றால் முடியாது.
36 பார்வையற்றோருக்குப் பார்வை கொடுக்கவோ,
துன்பத்தில் உழல்வோரைக் காப்பாற்றவோ அவற்றால் இயலாது.
37 கைம்பெண்களுக்கு இரக்கங் காட்டவோ,
கைவிடப்பட்டோர்க்கு உதவி செய்யவோ அவற்றால் முடியாது.
38 பொன், வெள்ளியால் வேயப்பட்ட இம்மரச் சிலைகள்
மலையினின்று குடைந்து எடுக்கப்படும் கற்களுக்கு ஒப்பானவை.
அவற்றை வணங்குவோர் இகழ்ச்சிக்கு உள்ளாவர்.
39 அவ்வாறிருக்க அவற்றைத் தெய்வங்கள் என
ஒருவர் எண்ணுவதும் அழைப்பதும் எவ்வாறு பொருந்தும்?


40 கல்தேயர்கூட அவற்றை மதிப்பதில்லை.
பேசமுடியாத ஒருவரை மனிதர் பார்க்க நேரிட்டால்,
அவரைப் பேல் என்னும் தெய்வத்திற்குமுன் கொண்டுவந்து நிறுத்துகின்றனர்;
அவருக்குப் பேசும் ஆற்றலைக் கொடுக்குமாறு பேலைக் கெஞ்சி மன்றாடுகின்றனர்.
அவர்களது மன்றாட்டு அத்தெய்வத்துக்குப் புரியும் என்பது அவர்களது எண்ணம்போலும்!
41 அவர்கள் இதைக்கூடப் புரிந்து கொள்வதில்லை;
அவற்றைக் கைவிடுவதுமில்லை;
42 ஏனெனில் அவர்கள் அத்துணை அறிவிலிகள்!
பெண்கள் தங்கள் இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு,
சாலையோரங்களில் அமர்ந்து,
சாம்பிராணிக்கு மாறாக உமியை எரித்துக்கொண்டிருப்பார்கள்.
43 வழிப்போக்கர் ஒருவர் அவர்களுள் ஒருத்தியை
அழைத்துக் கொண்டுபோய் அவளைப் புணர்ந்தால்
அவள் தன் அருகே இருப்பவளை ஏளனம் செய்கிறாள்;
இவள் தன்னைப் போல் அழகு உள்ளவளாக மதிக்கப்படவில்லை என்றும்,
இவளது இடுப்பில் கட்டப்பட்ட கயிறு
இன்னும் அறுபடவில்லை என்றும் எள்ளி நகையாடுகிறாள்.
44 இத்தெய்வங்களுக்குச் செய்யப்படுவது அனைத்தும் பொய்.
பின்னர் அவற்றைத் தெய்வங்கள் என
ஒருவர் எண்ணுவதும் அழைப்பதும் எவ்வாறு பொருந்தும்?


45 அவை தச்சராலும் பொற்கொல்லராலும் செய்யப்பட்டவை;
கைவினைஞரின் விருப்பப்படிதான் அவை செய்யப்படுகின்றன. [6]
46 அவற்றை உருவாக்கியவர்களே நீண்ட நாள் வாழ்வதில்லை.
அவ்வாறிருக்க. அவர்கள் உருவாக்கிய சிலைகள் மட்டும்
எவ்வாறு தெய்வங்களாய் இருக்க முடியும்?
47 அவர்கள் தங்கள் பிற்காலத் தலைமுறையினர்க்குப்
பொய்யையும் இகழ்ச்சியையுமே விட்டுச் சென்றுள்ளார்கள்.
48 ஏனெனில், போரோ பெருந்தீங்கோ உண்டாகும்பொழுது
அர்ச்சகர்கள் தங்கள் தெய்வங்களோடு எங்குச் சென்று ஒளிந்து கொள்ளலாம் என்று
தங்களுக்குள் கலந்து பேசுகிறார்கள்.
49 போரிலிருந்தோ பெருந் தீங்கிலிருந்தோ
தங்களையே காத்துக்கொள்ள முடியாத இச்சிலைகள் தெய்வங்கள் அல்ல என
மனிதர் அறியாமல் இருப்பது எவ்வாறு?
50 அவை வெறும் மரத்தால் செய்யப்பட்டு, பொன், வெள்ளியால் வேயப்பட்டவை.
ஆகவே அவற்றின் பொய்ம்மை பின்னர்த் தெரியவரும்.
அவை தெய்வங்கள் அல்ல, மனிதரின் வெறும் கைவேலைப்பாடுகளே என்பதும்,
அவற்றுக்குக் கடவுளின் ஆற்றல் ஒன்றுமில்லை என்பதும்
மக்களினத்தார், மன்னர்கள் அனைவர்க்கும் தெளிவாகும்.
51 பின் அவை தெய்வங்கள் அல்ல என்பதை யாரே அறியார்?
52 அவை நாட்டுக்கு மன்னர்களை ஏற்படுத்துவதுமில்லை;
மனிதருக்கு மழை பொழியச் செய்வதுமில்லை.
53 அவை தங்களுக்கே தீர்ப்பு வழங்கிக் கொள்வதுமில்லை;
முறைகேடான தீர்ப்புப் பெற்றவரை விடுவிப்பதுமில்லை;
ஏனெனில் இது அவற்றால் இயலாத செயல்.
அவை வானத்திற்கும் நிலத்திற்கும் இடையே
அலைந்து திரியும் காக்கைகளைப் போன்றவை.
54 பொன், வெள்ளியால் வேயப்பட்ட
மரச் சிலைகள் உள்ள கோவில்களில் தீப்பற்றினால்
அவற்றின் அர்ச்சகர்கள் தப்பியோடித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வார்கள்.
அவையோ உத்திரங்களைப் போல் எரிந்துபோகும்.
55 மேலும், மன்னர்களையோ பகைவர்களையோ எதிர்த்து நிற்க அவற்றால் முடியாது.
56 பின்பு அவற்றைத் தெய்வங்கள் என எண்ணுவதோ ஏற்றுக்கொள்வதோ எவ்வாறு பொருந்தும்?


57 மரத்தால் செய்யப்பட்டு, பொன், வெள்ளியால் வேயப்பட்ட சிலைகளால்
கள்வரிடமிருந்தும் கொள்ளையரிடமிருந்தும் தங்களையே காத்துக் கொள்ள இயலாது.
அவற்றின் பொன்னையும் வெள்ளியையும்
அவை அணிந்திருக்கும் உடைகளையும்
வலியோர் கவர்ந்து செல்லும்பொழுது
அவற்றால் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாது.
58 எனவே இத்தகைய பொய்த் தெய்வங்களாய் இருப்பதைவிட,
ஆற்றல் படைத்த ஒரு மன்னராய் இருப்பதே மேல்!
இத்தகைய பொய்த் தெய்வங்களாய் இருப்பதைவிட,
தன் உரிமையாளருக்கு வீட்டில் பயன்படும் ஏனமாய் இருப்பதே மேல்!
இத்தகைய பொய்த் தெய்வங்களாய் இருப்பதைவிட,
வீட்டிலுள்ள பொருள்களைப் பாதுகாக்கும் ஒரு கதவாய் இருப்பதே மேல்!
இத்தகைய பொய்த் தெய்வங்களாய் இருப்பதைவிட,
அரண்மனையில் ஒரு மரத்தூணாய் இருப்பதே மேல்!
59 கதிரவன், நிலா, விண்மீன்கள் ஆகியவை ஒளிவீசித்
தங்களுக்குக் குறித்த அலுவலைச் செய்வதால் கீழ்ப்படிகின்றன. [7]
60 அதேபோன்று மின்னல் வெட்டும் பொழுது அதைப் பரவலாகப் பார்க்கலாம்.
அவ்வாறே காற்றும் எல்லா நாடுகளிலும் வீசுகிறது.
61 உலகெங்கும் சென்று பரவும்படி கடவுள் முகில்களுக்குக் கட்டளையிட,
அவர் கட்டளையிட்டவாறே அவை செல்கின்றன.
மலைகளையும் காடுகளையும் அழிக்கும் பொருட்டு
மேலிருந்து அனுப்பப்படும் நெருப்பும்
தனக்குக் கட்டளையிடப்பட்டவாறே செயல்படுகிறது.
62 ஆனால் இத்தெய்வச் சிலைகள் தோற்றத்திலோ ஆற்றலிலோ
மேற்சொன்ன படைப்புப் பொருள்களோடு ஒப்பிடமுடியாதவை.
63 மனிதருக்குத் தீர்ப்பு வழங்கவோ நன்மை செய்யவோ அவற்றால் முடியாது.
எனவே அவற்றைத் தெய்வங்கள் என ஒருவர் எண்ணவோ அழைக்கவோ கூடாது.
64 அவை தெய்வங்கள் அல்ல என நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்;
ஆகவே அவற்றுக்கு அஞ்சாதீர்கள்.


65 அவை மன்னர்களைச் சபிப்பதுமில்லை;
அவர்களுக்கு ஆசி வழங்குவதுமில்லை.
66 அவை மக்களினத்தார் நடுவே வானத்தில்
அடையாளங்கள் காட்டுவதுமில்லை;
கதிரவனைப் போலச் சுடரொளிவிடுவதுமில்லை;
நிலாவைப் போல் ஒளிவீசுவதுமில்லை.
67 அச்சிலைகளைவிடக் காட்டு விலங்குகள் மிகவும் மேலானவை;
ஏனெனில் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பியோடித்
தங்களையே காப்பாற்றிக்கொள்ள விலங்குகளால் இயலும்.
68 அச்சிலைகள் தெய்வங்கள் என்பதற்கு எவ்வகைச் சான்றுமில்லை.
ஆகவே அவற்றுக்கு அஞ்சாதீர்கள்.


69 வெள்ளரித் தோட்டத்தில் வைக்கப்படும் பொம்மை காவல்புரிவதில்லை.
மரத்தால் செய்யப்பட்டு, பொன், வெள்ளியால் வேயப்பட்ட
தெய்வச் சிலைகளும் அத்தகையனவே. [8]
70 பொன், வெள்ளியால் வேயப்பட்ட மரச் சிலைகள்,
பறவைகளெல்லாம் வந்து உட்காரும் தோட்டத்து முட்செடிக்கும்,
இருளில் எறியப்பட்ட பிணத்துக்கும் ஒப்பானவை.
71 அவற்றின் மீது உள்ள கருஞ்சிவப்புப் பட்டாடை,
மெல்லிய உடை [9] ஆகியவற்றைப் பூச்சி அரித்துவிடுகிறது.
இதிலிருந்தே அவை தெய்வங்கள் அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இறுதியில் அவையும் அரித்துத் தின்னப்பட்டு நாட்டுக்கு இகழ்ச்சியாய் அமையும்.
72 எனவே சிலைகளை வழிபடாத நீதிமானே சிறந்தவர்.
இகழ்ச்சி அவரை அணுகாது.


குறிப்புகள்

[1] 6:4-5 = 2 மக் 2:2-3.
[2] 6:6 = விப 23:20.
[3] 6:7 = திபா 115:5; 135:16.
[4] 6:18 = திபா 115:5.
[5] 6:26 = சாஞா 13:16.
[6] 6:45 = எசா 40:19-20.
[7] 6:59 = திபா 104:19.
[8] 6:69 = எரே 10:5.
[9] 6:71 - "பளிங்கு" என்பது மூலபாடம்.


(பாரூக்கு நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): தானியேல்:இணைப்புகள்: இணைப்பு 1: இளைஞர் மூவரின் பாடல்