திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - முதல் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை
1 மக்கபேயர் (The First Book of Maccabees)
தொகுஅதிகாரங்கள் 11 முதல் 12 வரை
அதிகாரம் 11
தொகுஅலக்சாண்டரின் வீழ்ச்சி
தொகு
1 எகிப்து மன்னன் கடல்மணல்போலப் பெரும் படைகளையும்
திரளான கப்பல்படையையும் ஒன்று கூட்டினான்;
அலக்சாண்டரின் நாட்டை வஞ்சகமாய்க் கைப்பற்றித்
தனது அரசோடு இணைக்க முயன்றான்;
2 அமைதியை விரும்புபவன்போலச் சிரியாவுக்குச் சென்றான்.
நகரங்களின் மக்கள் நகர வாயில்களைத் திறந்து
அவனை வரவேற்றார்கள்;
தாலமி தன் மாமனாராய் இருந்ததால்
அவனை வரவேற்கும்படி அலக்சாண்டர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான்.
3 நகரங்களில் தாலமி நுழைந்தபோது
ஒவ்வொரு நகரிலும் காவற்படையை நிறுவினான்.
4 அவன் அசோத்தை நெருங்கியபோது
தீக்கிரையாக்கப்பட்ட தாகோன் கோவிலையும்
தலைமட்டமாக்கப்பட்ட அசோத்து நகரையும்
அதன் புறநகர்ப்பகுதிகளையும் சிதறிக்கிடந்த பிணங்களையும்
போரில் யோனத்தான் தீயிட்டுக் கரியாக்கிய பிணங்களையும்
மக்கள் அவனுக்குக் காட்டினார்கள்;
ஏனென்றால் அவன் சென்ற வழியில்தான் அவை குவிக்கப்பட்டிருந்தன.
5 யோனத்தான் மீது பழி சுமத்தும் பொருட்டு
அவர் செய்திருந்ததை மக்கள் மன்னனுக்கு எடுத்துரைத்தார்கள்;
ஆனால் மன்னன் பேசாதிருந்தான்.
6 மன்னனை யாப்பாவில் அரச மரியாதையுடன் யோனத்தான் சந்தித்தார்.
அவர்கள் ஒருவர் ஒருவரை வாழ்த்திக்கொண்டார்கள்;
அன்று இரவு அங்குத் தங்கினார்கள்.
7 மன்னனோடு புறப்பட்டு எலூத்தர் ஆறுவரை யோனத்தான் சென்றார்;
பிறகு எருசலேம் திரும்பினார்.
8 தாலமி மன்னன் செலூக்கியா வரை இருந்த
கடலோர நகரங்களை அடிமைப்படுத்தினான்;
அலக்சாண்டருக்கு எதிராகச் சூழ்ச்சிகள் செய்துவந்தான்.
9 தெமேத்திரி மன்னனிடம் தாலமி தூதர்களை அனுப்பி,
"வாரும், ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொள்வோம்.
அலக்சாண்டரோடு வாழும் என் மகளை உமக்குக் கொடுப்பேன்.
நீர் உம் மூதாதையரின் அரசின்மீது ஆட்சிசெலுத்துவீர்.
10 அலக்சாண்டருக்கு என் மகளைக் கொடுத்ததன் பொருட்டு வருந்துகிறேன்;
ஏனெனில் என்னை அவன் கொல்ல வழி தேடினான்" என்று கூறினான்.
11 அலக்சாண்டரின் நாட்டைக் கைப்பற்றத் தாலமி விரும்பியமையால்,
இவ்வாறு அவன்மீது பழி சுமத்தினான்.
12 தன் மகளை அவனிடமிருந்து பிரித்துத் தெமேத்திரிக்குக் கொடுத்தான்;
அலக்சாண்டரோடு கொண்டிருந்த நட்பை முறித்துக் கொண்டான்.
அவர்களின் பகை வெளிப்படையாயிற்று.
13 பிறகு தாலமி அந்தியோக்கி நகருக்குச் சென்று
ஆசியாவின் மணிமுடியைச் சூடிக்கொண்டான்;
இவ்வாறு எகிப்து, ஆசியா நாடுகளின் இரு மணிமுடிகளையும்
தன் தலையில் அணிந்து கொண்டான்.
14 அப்பொழுது அலக்சாண்டர் மன்னன் சிலிசியாவில் இருந்தான்;
ஏனென்றால் அப்பகுதி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
15 அலக்சாண்டர் இதைக் கேள்விப்பட்டுத்
தாலமியை எதிர்த்துப் போரிடச் சென்றான்.
தாலமியும் அணிவகுத்துச் சென்று
வலிமை வாய்ந்த படையோடு அவனை எதிர்த்து விரட்டியடித்தான்.
16 புகலிடம் தேடி அலக்சாண்டர் அரேபியாவுக்கு ஓடினான்.
தாலமி மன்னனின் புகழ் உயர்ந்தோங்கியது.
17 சப்தியேல் என்ற அரேபியன் அலக்சாண்டருடைய தலையைக் கொய்து
தாலமிக்கு அனுப்பி வைத்தான்.
18 மூன்று நாளுக்குப் பிறகு தாலமி மன்னனும் இறந்தான்.
கோட்டைக்குள் இருந்த அவனுடைய வீரர்கள்
கோட்டைவாழ் மக்களால் கொல்லப்பட்டார்கள்.
19 எனவே நூற்று அறுபத்தேழாம் ஆண்டு [1] தெமேத்திரி அரியணை ஏறினான்.
யோனத்தானும் இரண்டாம் தெமேத்திரியும்
தொகு
20 அக்காலத்தில் யோனத்தான்
எருசலேமில் இருந்த கோட்டையைத் தாக்குவதற்கு
யூதேயாவில் இருந்தவர்களைத் திரட்டினார்;
அதற்கு எதிராகப் பயன்படுத்தப் படைப் பொறிகளையும் செய்தார்.
21 நெறிகெட்டவர்களும் தங்கள் இனத்தாரையே பகைத்தவர்களுமான
சில மனிதர்கள் தெமேத்திரி மன்னனிடம் சென்று,
கோட்டையை யோனத்தான் முற்றுகையிட்டிருப்பதாக அறிவித்தார்கள்.
22 அவன் இதைக் கேட்டுச் சினங்கொண்டான்.
உடனே புறப்பட்டுத் தாலமாய் நகருக்குச் சென்றான்;
யோனத்தான் கோட்டையைத் தொடர்ந்து முற்றுகையிடுவதை விடுத்து,
விரைவில் தாலமாய்க்கு வந்து
தன்னைச் சந்தித்துப் பேசும்படி அவருக்கு எழுதினான்.
23 இதை அறிந்த யோனத்தான்,
கோட்டையைத் தொடர்ந்து முற்றுகையிடுமாறு கட்டளையிட்டார்;
இஸ்ரயேலின் மூப்பர்கள் சிலரையும் குருக்கள் சிலரையும் தேர்ந்துகொண்டார்;
தம் உயிரையே பணயம் வைத்து,
24 பொன், வெள்ளி, ஆடைகள்,
இன்னும் பல அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு
தாலமாயில் இருந்த தெமேத்திரி மன்னிடம் சென்றார்;
அவனது நல்லெண்ணத்தைப் பெற்றார்.
25 அவருடைய இனத்தாருள் நெறிகெட்டவர்கள் சிலர்
அவர்மீது குற்றம் சாட்டிய வண்ணம் இருந்தனர்.
26 எனினும் மன்னன் தனக்கு முன்னிருந்தவர்கள் செய்தவண்ணம்
யோனத்தானுக்குச் செய்து தன் நண்பர்கள் அனைவர் முன்பாகவும்
அவரை மேன்மைப்படுத்தினான்.
27 தலைமைக் குருபீடத்தையும்
முன்பு அவர் பெற்றிருந்த மற்றப் பெருமைகளையும்
அவருக்கு உறுதிப்படுத்தி
அவரைத் தன் முக்கிய நண்பர்களுள் ஒருவராகக் கொண்டான்.
28 யூதேயாவையும் சமாரியாவின் மூன்று மாநிலங்களையும்
வரி செலுத்துவதினின்று விலக்கும்படி
மன்னனை யோனத்தான் கேட்டுக்கொண்டார்;
அதற்குப் பதிலாக பன்னிரண்டு டன் [2] வெள்ளி கொடுப்பதாக உறுதியளித்தார்.
29 மன்னன் அதற்கு இசைந்து,
அவையெல்லாவற்றையும் உறுதிப்படுத்தி
யோனத்தானுக்கு எழுதிய மடல் பின்வருமாறு:
30 "தெமேத்திரி மன்னர் தம் சகோதரரான யோனத்தானுக்கும்
யூத இனத்தாருக்கும் வாழ்த்துக் கூறி எழுதுவது;
31 உங்களைப்பற்றி எம் உறவினர் இலாஸ்தேனுக்கு
நாம் எழுதிய மடலின் நகல் ஒன்றை உங்களுக்கு அனுப்பிவைத்தோம்.
இதனால் அதில் உள்ளதை நீங்களும் அறிந்து கொள்ளலாம்.
32 'தெமேத்திரி மன்னர் தம் தந்தை இலாஸ்தேனுக்கு வாழ்த்துக் கூறி எழுதுவது:
33 எம் நண்பர்களும்
எம்பால் தாங்கள் கொண்டுள்ள கடமைகளை
நிறைவேற்றுகிறவர்களுமான யூத இனத்தார்
எம்மட்டில் நல்லெண்ணம் கொண்டுள்ளதால்
அவர்களுக்கு நன்மை செய்ய நாம் முடிவு செய்துள்ளோம்.
34 ஆதலால் யூதேயா நாடு முழுவதும்
சமாரியாவினின்று பிரித்து யூதேயாவில் இணைத்த
அபைரமா, லிதா, இரதாமின் ஆகிய மூன்று மாநிலங்களும்
அவற்றைச் சேர்ந்த அனைத்தும்
அவர்களுக்குச் சொந்தம் என உறுதிப்படுத்துகிறோம்.
முன்பு மன்னர் ஆண்டுதோறும் தண்டிவந்த வரிகளிலிருந்து -
அதாவது, நிலத்தின் விளைச்சல், மரங்களின் கனிகள்
ஆகியவற்றுக்கான வரிகளிலிருந்து,
எருசலேமில் பலியிடுவோருக்கு விலக்கு வழங்குகிறோம். [3]
35 எமக்குச் சேரவேண்டிய பத்திலொரு பங்கு, உப்புவரி,
அரசருக்குரிய சிறப்பு வரி, மற்ற வரிகள் ஆகிய அனைத்திலுமிருந்தும்
இதுமுதல் விலக்கு வழங்குகிறோம்.
36 வழங்கப்பட்ட வரிச் சலுகைகளில் ஒன்றுகூட
இன்றுமுதல் என்றும் திரும்பப் பெறப்படமாட்டாது.
37 ஆகவே இப்போது இந்த மடலின் நகல் ஒன்றை எடுத்து
யோனத்தானுக்குக் கொடுத்துத்
திருமலையில் அனைவரும் காணக்கூடிய இடத்தில்
அதை வைக்கச் செய்யும்.'"
யோனத்தான் தெமேத்திரிக்கு உதவுதல்
தொகு
38 தன் ஆட்சியில் நாடு அமைதியாக இருப்பதையும்
எவரும் தன்னை எதிர்க்காதிருப்பதையும் தெமேத்திரி மன்னன் கண்டு,
பிற இனத்தாரின் தீவுகளிலிருந்து தான் திரட்டியிருந்த
அன்னியப் படைகளைத்தவிரத்
தன் படைவீரர் அனைவரையும் அவரவர் இடத்துக்கு அனுப்பினான்.
இவ்வாறு செய்ததால்
அவனுக்கு முன்னிருந்தவர்களுடைய படைகள் யாவும் அவனைப் பகைத்தன.
39 முன்னர் அலக்சாண்டரின் ஆதரவாளர்களுள் ஒருவனான திரிபோ,
படைகள் அனைத்தும் தெமேத்திரி மீது முறையிடுவதைக் கண்டான்.
அலக்சாண்டரின் இளையமகன் அந்தியோக்கை வளர்த்துவந்த
அரேபியனான இமால்குவிடம் சென்றான்;
40 அந்தியோக்கு தன் தந்தைக்குப் பதிலாய் ஆட்சி செய்வதற்கு
அவனைத் தன்னிடம் ஒப்புவிக்கும்படி
இமால்குலைத் திரிபோ வருந்திக்கேட்டுக் கொண்டான்;
தெமேத்திரி செய்த யாவற்றையும்
படைகள் அவன்மீது கொண்டிருந்த வெறுப்பையும் எடுத்துக்கூறினான்;
பல நாள் அவ்விடத்தில் தங்கியிருந்தான்.
41 எருசலேம் கோட்டையிலும் மற்ற அரண்காப்புகளிலும் இருந்த வீரர்கள்
இஸ்ரயேலுக்கு எதிராய்ப் போர் புரிந்தவண்ணம் இருந்ததால்,
அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும்படி
தெமேத்திரி மன்னனைக் கேட்டுக் கொள்ள
யோனத்தான் ஆளனுப்பினார்.
42 தெமேத்திரி யோனத்தானுக்கு அனுப்பிவைத்த செய்த பின்வருமாறு:
"உமக்கும் உம் இனத்தாருக்கும் நான் இதை மட்டும் செய்யப் போவதில்லை;
வாய்ப்புக் கிடைக்கும்போது உம்மையும் உம் இனத்தாரையும்
மிகவும் பெருமைப்படுத்துவேன்.
43 இப்போது என் படைகள் யாவும் கிளர்ச்சி செய்துவருவதால்
எனக்காகப் போரிட ஆள்களை அனுப்புமாறு உம்மை வேண்டிக் கொள்கிறேன்."
44 ஆகவே யோனத்தான் வலிமை வாய்ந்த படைவீரர்கள் மூவாயிரம் பேரை
அந்தியோக்கி நகருக்கு அனுப்பினார்.
அவர்கள் மன்னனிடம் சேர்ந்ததும் அவர்களின் வரவால் அவன் மகிழ்ச்சி கொண்டான்.
45 ஏனெனில் நகர மக்களுள் ஓர் இலட்சத்து இருபதாயிரம் பேர்
நகரின் நடுவில் ஒன்றுகூடி,
மன்னனைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
46 ஆனால் மன்னன் அரண்மனைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்.
நகரில் இருந்தவர்கள் முக்கிய தெருக்களைக் கைப்பற்றிப் போர்தொடுத்தார்கள்.
47 ஆகவே மன்னன் யூதர்களைத் தன் உதவிக்கு அழைத்தான்.
உடனே அவர்கள் அனைவரும் அணிதிரண்டு அவனிடம் சென்றார்கள்;
பிறகு நகரெங்கும் பிரிந்து சென்று
அன்று ஏறத்தாழ ஓர் இலட்சம் பேரைக் கொன்றார்கள்;
48 நகரைத் தீக்கிரையாக்கி
அன்று ஏராளமான கொள்ளைப் பொருள்களை எடுத்துக் கொண்டார்கள்;
இவ்வாறு மன்னனைக் காப்பாற்றினார்கள்.
49 யூதர்கள் தாங்கள் திட்டமிட்டபடி
நகரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள் என்று
நகரில் இருந்தவர்கள் கண்டார்கள்;
இதனால் துணிவு இழந்து மன்னனிடம் சென்று கதறி மன்றாடினார்கள்;
50 "எங்களுக்கு அமைதி தாரும்;
எங்களுக்கும் நகருக்கும் எதிராகப் போரிடும் யூதர்களைத் தடுத்து நிறுத்தும்"
என்று வேண்டினார்கள்;
51 தங்கள் படைக்கலங்களை எறிந்துவிட்டுச்
சமாதானம் செய்து கொண்டார்கள்.
இவ்வாறு யூதர்கள் மன்னன் முன்பும்
அவனது நாட்டு மக்கள் அனைவர் முன்பும்
பெருமை பெற்றுத் திரளான கொள்ளைப் பொருள்களோடு எருசலேம் திரும்பினார்கள்.
52 தெமேத்திரி மன்னனுடைய அரசு நிலைபெற்றது;
அவனது ஆட்சியில் நாடு அமைதியாய் இருந்தது.
53 பின்னர் அவன் தன் உறுதிமொழிகளையெல்லாம் மீறி,
யோனத்தானோடு கொண்டிருந்த நட்புறவை முறித்துக் கொண்டான்;
அவரிடமிருந்து பெற்றிருந்த நன்மைகளுக்கு நன்றி காட்டாமல்
அவருக்குப் பெரிதும் தொல்லை கொடுத்துவந்தான்.
யோனத்தானும் ஆறாம் அந்தியோக்கும்
தொகு
54 இதன்பிறகு சிறுவன் அந்தியோக்குடன் திரிபோ திரும்பிவந்தான்.
அந்தியோக்கு முடிபுனைந்து அரசாளத் தொடங்கினான்.
55 தெமேத்திரி திருப்பி அனுப்பியிருந்த படைகளெல்லாம்
அந்தியோக்குடன் சேர்ந்து கொண்டு தெமேத்திரியை எதிர்க்கவே
அவன் முறியடிக்கப்பட்டு ஓடினான்.
56 திரிபோ யானைகளைப் பிடித்து
அந்தியோக்கி நகரைக் கைப்பற்றினான்.
57 பின்னர் சிறுவன் அந்தியோக்கு,
"நீர் தலைமைக் குருவாய்த் தொடர்ந்து இருப்பீர் என உறுதிப்படுத்துகிறேன்;
நான்கு மாநிலங்களுக்கு ஆளுநராக உம்மை ஏற்படுத்துகிறேன்;
மன்னரின் நண்பர்களுள் ஒருவராகவும் ஏற்றுக் கொள்கிறேன்"
என்று யோனத்தானுக்கு எழுதியனுப்பினான்.
58 பொன் தட்டுகளையும் உணவுக்கலன்களையும்
அவருக்கு அனுப்பி வைத்தான்;
பொற் கிண்ணத்தில் அருந்தவும் அரச ஆடை உடுத்திக் கொள்ளவும்
பொன் அணியூக்கு அணிந்துகொள்ளவும் அதிகாரம் அளித்தான்;
59 அவருடைய சகோதரரான சீமோனைத்
தீரின் எல்லையில் இருந்த கணவாயிலிருந்து
எகிப்தின் எல்லை வரை இருந்த பகுதிக்கு ஆளுநராக ஏற்படுத்தினான்.
60 யோனத்தான் புறப்பட்டு
யூப்பிரத்தீசு ஆற்றுக்கு மேற்கே இருந்த நகரங்களுக்குச் சென்றார்.
சிரியாவின் படைகள் யாவும் அவரோடு கூட்டுச் சேர்ந்துகொண்டன.
அவர் அஸ்கலோன் நகர் சேர்ந்ததும்
நகரில் இருந்தோர் பெரும் சிறப்போடு அவரை வரவேற்றனர்.
61 அவர் அவ்விடமிருந்து காசாவுக்குச் சென்றார்.
காசாவில் இருந்தவர்கள் வாயில்களை அடைத்து அவரை உள்ளே விடவில்லை.
எனவே அவர் அதை முற்றுகையிட்டுப்
புறநகர்ப் பகுதிகளைக் கொள்ளையடித்துத் தீக்கிரையாக்கினார்.
62 காசா நகரத்தார் யோனத்தானை வேண்டிக் கொள்ளவே
அவரும் அவர்களோடு சமாதானம் செய்து,
அவர்களுடைய தலைவர்களின் மைந்தர்களைப்
பிணைக்கைதிகளாக எருசலேமுக்கு அனுப்பினார்;
நாட்டின் வழியாகச் சென்று தமஸ்கு நகரை அடைந்தார்.
63 தெமேத்திரியின் படைத்தலைவர்கள் தம்மைப் பதவியிலிருந்து நீக்கத் திட்டமிட்டுக்
கலிலேயாவின் காதேசு நகருக்குப் பெரும் படையோடு வந்திருப்பதாக
யோனத்தான் கேள்வியுற்றார்;
64 ஆகையால் அவர்களை எதிர்த்துச் சென்றார்;
தம் உடன்பிறப்பான சீமோனை யூதேயாவிலேயே விட்டுச் சென்றார்.
65 சீமோன் பெத்சூரை முற்றுகையிட்டுப்
பல நாள் அதை எதிர்த்துப் போரிட்டார்;
நகரைச் சூழ்ந்து வளைத்துக்கொண்டார்.
66 அவர்கள் தங்களோடு சமாதானம் செய்து கொள்ளும்படி
அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
அதற்கு அவரும் இசைந்தார்.
அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றி நகரையும் பிடித்து
அங்கு ஒரு காவற்படையை நிறுவினார்.
67 இதற்கிடையில் யோனத்தான் தம் படைகளோடு
கெனசரேத்து ஏரி அருகே பாசறை அமைத்திருந்தார்.
மறுநாள் பொழுது விடியுமுன் அவர்கள் காட்சோர் சமவெளிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
68 அயல்நாட்டுப் படையினர் சமவெளியில் அவரை எதிர்கொண்டு
நேருக்கு நேர் தாக்கினார்கள்;
அவரைத் தாக்குவதற்காகப் பதுங்கிப் பாயும் படை ஒன்றை
மலைகளில் விட்டுவைத்திருந்தார்கள்.
69 பதுங்கியிருந்தவர்கள் தங்கள் இடங்களிலிருந்து எழுந்துவந்து
போரில் கலந்து கொண்டார்கள்.
70 யோனத்தானுடன் இருந்தவர்கள் எல்லாரும் ஓடிப்போனார்கள்.
அப்சலோமின் மகன் மத்தத்தியா, கால்பியின் மகன் யூதா ஆகிய
படைத்தலைவர்களைத் தவிர வேறு ஒருவரும் அங்கு இல்லை.
71 யோனத்தான் தம் ஆடைகளைத் கிழித்துக்கொண்டு
மண்ணைத் தம் தலைமேல் தூவிக்கொண்டு இறைவனை வேண்டினார்.
72 பிறகு அவர் போரிடத் திரும்பிச் சென்று எதிரிகளை முறியடித்ததும்,
அவர்கள் தப்பியோடினார்கள்.
73 யோனத்தானிடமிருந்து ஓடினவர்கள்
இதைக் கண்டு திரும்பி வந்து அவரோடு சேர்ந்து கொண்டார்கள்;
காதேசில் இருந்து எதிரிகளின் பாசறை வரை அவர்களைத் துரத்திச் சென்று
அவ்விடம் பாசறை அமைத்தார்கள்.
74 அன்று அயல்நாட்டு வீரர்களுள் மூவாயிரம் பேர் மடிந்தனர்.
பிறகு யோனத்தான் எருசலேம் திரும்பினார்.
- குறிப்புகள்
[1] 11:19 - கி.மு. 145.
[2] 11:28 - "முந்நூறு தாலந்து" என்பது கிரேக்க பாடம்.
ஒரு தாலந்து வெள்ளி என்பது ஆறாயிரம் தினாரியத்துக்குச் சமம்.
ஒரு தினாரியம் ஒரு நாள் கூலிக்கு இணையான
உரோமை வெள்ளி நாணயம்.
[3] 11:34 = 1 மக் 10:30.
அதிகாரம் 12
தொகுஉரோமையோடும் ஸ்பார்த்தாவோடும் உடன்படிக்கை
தொகு
1 காலம் தமக்கு ஏற்றதாக இருந்ததைக் கண்ட யோனத்தான்
சிலரைத் தேர்ந்தெடுத்து
உரோமையர்களோடு தமக்குள்ள நட்புறவை உறதிப்படுத்திப் புதுப்பிக்க
அவர்களை உரோமைக்கு அனுப்பினார்;
2 அதே நோக்குடன் ஸ்பார்த்தாவுக்கும் மற்ற இடங்களுக்கும் மடல்கள் விடுத்தார்.
3 அவர்கள் உரோமைக்குச் சென்று ஆட்சிமன்றத்தில் நுழைந்து,
"தலைமைக் குரு யோனத்தானும் யூத இனத்தாரும்
உங்களோடு முன்பு கொண்டிருந்த நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க
எங்களை அனுப்பியுள்ளார்கள்" என்று சொன்னார்கள்.
4 இந்தத் தூதர்கள் பாதுகாப்புடன் தங்கள் நாடு சென்றடைய உதவும்படியாக,
அவர்கள் கடந்து செல்ல வேண்டிருந்த நாடுகளின் தலைவர்களுக்கு
எழுதப்பட்டிருந்த மடல்களை உரோமையர்கள் அவர்களிடம் கொடுத்தார்கள்.
5 யோனத்தான் ஸ்பார்த்தர்களுக்கு எழுதிய மடலின் நகல் இதுதான்:
6 "தலைமைக் குருவான யோனத்தானும் நாட்டின் ஆட்சிக்குழுவினரும்
குருக்களும் மற்ற யூத மக்களும்
தங்களின் சகோதரர்களான ஸ்பார்த்தர்களுக்கு வாழ்த்துக் கூறி எழுதுவது:
7 உங்கள் நாட்டை ஆண்டுவந்த ஆரியு, 'நீங்கள் எங்கள் சகோதரர்கள்' என்று எங்கள்
தலைமைக்குருவான ஓனியாவுக்கு முன்பு எழுதியனுப்பியிருந்தார்.
அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
8 நீங்கள் அனுப்பிய தூதரை ஓனியா மரியாதையுடன் வரவேற்றார்;
ஒப்பந்தம், நட்புறவு, ஆகியனபற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருந்த
மடலையும் பெற்றுக் கொண்டார்.
9 எங்களிடம் இருக்கும் திருநூல்கள் எங்களுக்கு ஊக்கம் ஊட்டுவதால்
இத்தகைய ஒப்பந்தம் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.
10 எனினும் உங்களோடு நாங்கள் கொண்டுள்ள சகோதர உணர்வையும்
நட்புறவையும் புதுப்பிக்க உங்களுக்கு மடல் அனுப்பியுள்ளோம்;
ஏனென்றால் உங்களோடு நாங்கள் கொண்டுள்ள நட்புறவை
முறித்துக் கொள்ள விரும்பவில்லை.
மேலும் உங்களிடமிருந்து மடல் வந்து வெகு காலம் ஆயிற்று.
11 நாங்கள் எங்கள் திரு நாள்களிலும் மற்றச் சிறப்பு நாள்களிலும் செய்யும்
பலிகளிலும் வேண்டுதல்களிலும் இடைவிடாமல் உங்களை நினைவுகூர்கிறோம்;
ஏனெனில் சகோதரர்களை நினைவு கூர்வது நல்லதும் பொருத்தமும் ஆகும்.
12 உங்கள் புகழ் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
13 பல துன்பங்களும் போர்களும் எங்களைச் சூழ்ந்துகொண்டிருந்தன;
சுற்றிலும் இருந்த மன்னர்கள் எங்களை எதிர்த்துப் போர் செய்தார்கள்.
14 இந்தப் போர்களில் உங்களுக்கோ மற்ற நட்பு நாடுகளுக்கோ
நம் நண்பர்களுக்கோ தொந்தரவு கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.
15 விண்ணக இறைவனின் உதவி எங்களுக்கு இருந்ததால்
எங்கள் பகைவர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட்டோம்;
எங்கள் பகைவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்.
16 ஆதலால் அந்தியோக்கின் மகன் நூமேனியையும்
யாசோனின் மகன் அந்திப்பாத்தரையும் தேர்ந்தெடுத்து,
உரோமையர்களோடு நாங்கள் முன்பு கொண்டிருந்த நட்புறவையும்
ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க அவர்களிடம் அனுப்பியிருக்கிறோம்.
17 உங்களிடம் வந்து உங்களுக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு
அவர்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறோம்.
நமக்கிடையே உள்ள சகோதர உறவைப் பதுப்பிப்பது தொடர்பான
எங்கள் மடலை அவர்கள் உங்களிடம் கொடுப்பார்கள்.
18 எங்களுடைய மடலுக்குப் பதில் எழுதும்படி இப்போது கேட்டுக்கொள்கிறோம்."
19 ஸ்பார்த்தர்கள் ஓனியாவுக்கு விடுத்த மடலின் நகல் இதுதான்:
20 "ஸ்பார்த்தர்களின் மன்னர் ஆரியு
தலைமைக் குரு ஓனியாவுக்கு வாழ்த்துக்கூறி எழுதுவது:
21 ஸ்பார்த்தர்களும் யூதர்களும் சகோதரர்கள் என்பதும்
ஆபிரகாமின் வழிமரபினர் என்பதும் ஆவணத்தில் காணப்படுகின்றன.
22 நாங்கள் இப்போது இதை அறியவந்திருப்பதால்
உங்கள் நலனைப்பற்றி நீங்கள் எங்களுக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
23 உங்கள் கால்நடைகளும் உடைமைகளும் எங்களுக்குச் சொந்தமாகும்;
எங்களுடையவை உங்களுக்குச் சொந்தமாகும் என்பதை
உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதை உங்களுக்கு எடுத்துரைக்க
எங்கள் தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறோம்."
யோனத்தானும் சீமோனும் புரிந்த போர்கள்
தொகு
24 தெமேத்திரியின் படைத்தளபதிகள்
முந்தியதைவிடப் பெரிய படையோடு
தம்மை எதிர்த்துப் போரிடத் திரும்பிவந்திருப்பதை
யோனத்தான் கேள்வியுற்றார்;
25 தம்முடைய நாட்டுக்குள் அவர்கள் நுழைவதை விரும்பாததால்
எருசலேமைவிட்டுப் புறப்பட்டு
ஆமாத்து நாட்டில் அவர்களை எதிர்கொண்டார்;
26 அவர்களின் பாசறைக்கு ஒற்றர்களை அனுப்பினார்.
அவர்கள் திரும்பி வந்து,
பகைவர்கள் இரவில் யூதர்களைத் தாக்க அணிவகுத்திருப்பதாக
அவருக்கு அறிவித்தார்கள்.
27 கதிரவன் மறைந்தபோது
தம்முடைய ஆள்கள் போருக்கு இரவு முழுவதும்
படைக்கலங்களோடு விழித்திருக்குமாறு யோனத்தான் கட்டளையிட்டார்;
பாசறையைச் சுற்றிலும் காவற்படையினரை நிறுத்தினார்.
28 யோனத்தானும் அவருடைய ஆள்களும்
போருக்கு முன்னேற்பாடாய் இருந்தார்கள் என்று
பகைவர்கள் கேள்விப்பட்டு அஞ்சி மனக்கலக்கமுற்றார்கள்.
தங்களது பாசறைக்கு நடுவே தீமூட்டி விட்டு ஓடிவிட்டார்கள்.
29 யோனத்தானும் அவருடைய ஆள்களும்
தீ எரிவதைக் கண்டார்கள்.
ஆனால் எதிரிகள் ஓடிவிட்டதைப்
பொழுது விடியுமட்டும் அறியவில்லை.
30 யோனத்தான் அவர்களைத் துரத்திச் சென்றார்;
ஆனால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை;
ஏனெனில் எலூத்தர் ஆற்றை அவர்கள் ஏற்னவே கடந்துவிட்டார்கள்.
31 ஆகவே சபதேயர் என்று அழைக்கப்பெற்ற அரேபியரை நோக்கி
யோனத்தான் திரும்பிச் சென்று
அவர்களை முறியடித்துக் கொள்ளையடித்தார்;
32 பிறகு அங்கிருந்து புறப்பட்டுத் தமஸ்கு நகருக்குச் சென்று
அந்த மாநிலம் முழுவதும் சுற்றிப்பார்த்தார்.
33 சீமோனும் புறப்பட்டு அஸ்கலோனுக்கும்
அதை அடுத்த கோட்டைகளுக்கும் சென்றார்;
பின் யாப்பா பக்கம் திரும்பி அதைக் கைப்பற்றினார்;
34 ஏனெனில் தெமேத்திரியின் ஆள்களிடம்
யாப்பாவின் மக்கள் தங்கள் கோட்டையை ஒப்படைக்கத்
திட்டமிட்டிருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருந்தார்;
அதைக் காப்பதற்குக் காவற்படை ஒன்றை நிறுவினார்.
35-36 யோனத்தான் திரும்பி வந்து மக்களின் மூப்பர்களை ஒன்று கூட்டினார்;
யூதேயாவில் கோட்டைகளைக் கட்டவும்,
எருசலேமின் மதில்களை இன்னும் உயரமாக எழுப்பவும்,
கோட்டைக்கும் நகருக்கும் நடுவே உயர்ந்த தடுப்புச்சுவர் எழுப்பிக்
காவற்படையினர் நகருக்குள் சென்று எதையும் வாங்கவோ விற்கவோ கூடாதவாறு
கோட்டையை நகரினின்று துண்டித்து விடவும்
அவர்களோடு சேர்ந்து திட்டமிட்டார்.
37 ஆகவே நகரை வலுப்படுத்த எல்லாரும் கூடிவந்தனர்;
ஏனெனில் கிழக்கே பள்ளத்தாக்குக்கு மேல் இருந்த மதிலின் ஒரு பகுதி
ஏற்கனவே விழுந்து விட்டது.
கப்பனாத்தா என்று அழைக்கப்பெற்ற பகுதியையும் அவர் பழுது பார்த்தார்.
38 அதே போன்று செபேலா பகுதியில் அதிதா நகரைச் சீமோன் கட்டியெழுப்பிக்
கதவுகளும் தாழ்ப்பாள்களும் அமைத்து அதை வலுப்படுத்தினார்.
39 அப்போது ஆசியாவின் அரசனாகி முடிபுனையவும்
அந்தியோக்கு மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யவும்
திரிபோ வழிதேடினான்;
40 அதற்கு யோனத்தான் தன்னை அனுமதிக்கமாட்டார் என்றும்,
தன்னை எதிர்த்துப் போர்செய்வார் என்றும் அஞ்சி
அவரைப் பிடித்துக் கொல்ல முயற்சி செய்தான்;
அங்கிருந்து புறப்பட்டுப் பெத்சானை அடைந்தான்.
41 யோனத்தான் நாற்பதாயிரம் தேர்ந்தெடுத்த படைவீரர்களோடு
திரிபோவை எதிர்த்துப் பெத்சான் சென்றடைந்தார்.
42 யோனத்தான் பெரும் படையோடு வந்திருப்பதைத் திரிபோ கண்டு
அவரை எதிர்த்துத் தாக்க அஞ்சினான்;
43 அதற்கு மாறாக, அவரைச் சிறப்போடு வரவேற்றுத்
தன் நண்பர்கள் அனைவரிடமும் அவரை அறிமுகம் செய்துவைத்து,
அவருக்கு அன்பளிப்புகள் வழங்கினான்;
தனக்குக் கீழ்ப்படிவதுபோலவே அவருக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று
தன் நண்பர்களுக்கும் படை வீரர்களுக்கும் கட்டளையிட்டான்.
44 பின் யோனத்தானை நோக்கி,
"நமக்கிடையே போரே இல்லாத சூழ்நிலையில்
இவ்வீரர்கள் எல்லாருக்கும் இத்துணை தொல்லை கொடுப்பானேன்?
45 ஆதலால் இப்போது இவர்களை வீடுகளுக்கு அனுப்பிவிடும்.
உம்முடன் இருக்கச் சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு
என்னோடு தாலமாய் நகருக்கு வாரும்.
அதையும் மற்றக் கோட்டைகளையும் எஞ்சியிருக்கும் படைகளையும்
அலுவலர்கள் அனைவரையும் உம்மிடம் ஒப்படைத்துவிட்டு நான் வீடு திரும்புவேன்.
இதற்காகவே நான் இங்கு வந்தேன்" என்றான்.
46 யோனத்தான் அவனை நம்பி அவன் சொற்படி செய்து
தம் படைகளை அனுப்பிவிட்டார்.
அவர்கள் யூதேயா நாட்டுக்குத் திரும்பினார்கள்.
47 ஆனால் அவர் தம்மோடு மூவாயிரம் வீரர்களை வைத்துக் கொண்டார்;
இவர்களுள் இரண்டாயிரம் பேரைக் கலிலேயாவில் விட்டுச் சென்றார்;
எஞ்சியிருந்த ஆயிரம் பேர் அவருடன் சென்றனர்.
48 யோனத்தான் தாலமாய் நகருக்குள் நுழைந்தபோது
அந்த நகரத்தார் வாயில்களை அடைத்து அவரைப் பிடித்துக் கொண்டனர்;
அவருடன் சென்றவர்கள் எல்லாரையும் வாளுக்கு இரையாக்கினர்.
49 மேலும் யோனத்தானுடைய வீரர்கள் எல்லாரையும் கொல்வதற்குக்
காலாட்படையினரையும் குதிரைவீரர்களையும்
கலிலேயாவுக்கும் பெரிய சமவெளிக்கும் திரிபோ அனுப்பினான்.
50 யோனத்தானுடைய ஆள்களுடன் அவரும் பிடிபட்டுக் கொல்லப்பட்டார் என்று
அவருடைய மற்ற வீரர்கள் எண்ணி,
ஒருவர் மற்றவருக்கு ஊக்கமூட்டிப் போருக்கு அணிவகுத்துச் சென்றார்கள்.
51 துரத்திவந்த பகைவர்கள்,
தங்கள் உயிருக்காக இவர்கள் போராடத்
துணிந்திருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.
52 இவர்கள் அனைவரும்
பாதுகாப்போடு யூதேயா நாட்டுக்குத் திரும்பிச் சென்ற யோனத்தானுக்காகவும்
அவருடன் மடிந்தவர்களுக்காகவும் துயரம் கொண்டாடினார்கள்.
அவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.
இஸ்ரயேல் நாடு முழுவதும் துயரில் ஆழ்ந்து புலம்பியது.
53 சுற்றியிருந்த பிற இனத்தார் அனைவரும்
அவர்களை அழித்தொழிக்கத் தேடினார்கள்;
ஏனெனில் அவர்கள்,
"இவர்களுக்குத் தலைவனோ உதவியாளனோ இல்லை.
ஆதலால் இப்போது இவாகள்மீது நாம் போர்தொடுத்து,
மனிதர்களிடையே இவர்களின் நினைவு அற்றுப் போகும்படி செய்வோம்"
என்று சொல்லியிருந்தார்கள்.
(தொடர்ச்சி): மக்கபேயர் - முதல் நூல்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை