திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - முதல் நூல்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை
மத்தத்தியாவின் மூன்றாம் மகன் யூதா, கிரேக்கமயமாக்கல்மூலம் யூதர்களைப் பலவாறு துன்புறுத்திவந்த செலூக்கிய ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு யூதர்களை வழிநடத்தியதால், "மக்கபே" என்று அழைக்கப்பெற்றார் ("மக்கபே" என்னும் சொல்லுக்குச் "சம்மட்டி" எனச் சிலர் பொருள் கொள்வர்). காலப்போக்கில் அவருடைய சகோதரர்கள், ஆதரவாளர்கள், பிற யூதத் தலைவர்கள் ஆகிய அனைவருமே "மக்கபேயர்" என்று குறிப்பிடப்பெற்றனர்.
அந்தியோக்கு எப்பிபானின் ஆட்சி தொடங்கி யோவான் இர்க்கான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதுவரை (கி.மு. 175-134) யூத வரலாற்றில் இடம் பெற்ற குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது. ஏறத்தாழ கி.மு. 100இல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த யூதர் ஒருவரால் இந்நூல் எபிரேயத்தில் எழுதப்பெற்றிருக்க வேண்டும். அது தொலைந்துவிட, அதன் கிரேக்க மொழிபெயர்ப்பு இன்று மூலபாடமாக விளங்குகிறது.
இஸ்ரயேலைக் காப்பதற்காகக் கடவுள் மக்கபேயரைத் தேர்ந்தெடுத்து, வரலாற்றில் அவர்களோடு இருந்து செயல்படுகிறார், அவர்மீது பற்றுறுதி கொள்வோருக்கு வெற்றி அருள்கிறார் என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது.
1 மக்கபேயர்
தொகுநூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முகவுரை | 1:1-9 | 215 |
2. யூதர்களின் துன்பமும் மக்கபேயரின் கிளர்ச்சியும் | 1:10 - 2:70 | 215 - 221 |
3. யூதா மக்கபேயின் தலைமை | 3:1 - 9:22 | 221 - 241 |
4. யோனத்தானின் தலைமை | 9:23 - 12:53 | 241 - 256 |
5. சீமோனின் தலைமை | 13:1 - 16:24 | 256 - 266 |
1 மக்கபேயர் (The First Book of Maccabees)
தொகுஅதிகாரங்கள் 1 முதல் 2 வரை
அதிகாரம் 1
தொகு1. முகவுரை
தொகுமாமன்னர் அலக்சாண்டர்
தொகு
1 மாசிடோனியராகிய பிலிப்பு மகன் அலக்சாண்டர்
முதலில் கிரேக்க நாட்டை ஆண்டுவந்தார்;
பின்னர் கித்திம் நாட்டினின்று புறப்பட்டுப்
பாரசீகருடையவும் மேதியருடையவும் மன்னரான தாரியுவை வென்று
அவருக்குப் பதிலாக ஆட்சிபுரிந்தார்.
2 அவர் போர்கள் பல புரிந்து, கோட்டைகள் பல பிடித்து,
மண்ணுலகின் மன்னர்களைக் கொலைசெய்தார்.
3 மண்ணுலகின் கடையெல்லைவரை முன்னேறிச் சென்று
பல நாடுகளைக் கொள்ளையடித்தார்;
மண்ணுலகு முழுவதும் அவரது ஆட்சியில் அமைதியாக இருந்தபோது
அவர் தம்மையே உயர்வாகக் கருதினார்; அவரது உள்ளம் செருக்குற்றது.
4 ஆகவே அவர் வலிமைமிக்க படையைத் திரட்டிப்
பல மாநிலங்கள், நாடுகள், மன்னர்கள்மீது ஆட்சிசெலுத்திவந்தார்.
அவர்களும் அவருக்குத் திறை செலுத்தி வந்தார்கள்.
5 அதன்பிறகு அவர் கடின நோயுற்றுத் தாம் சாகவிருப்பதை உணர்ந்தார்.
6 ஆதலால் இளமைமுதல் தம்முடன் வளர்க்கப்பெற்றவர்களும்
மதிப்புக்குரியவர்களுமான அலுவலர்களை அழைத்து,
தாம் உயிரோடு இருந்தபோதே தம் பேரரசை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
7 அலக்சாண்டர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சிசெய்த பின் இறந்தார்.
8 அலக்சாண்டருடைய அலுவலர்கள்
தங்களுக்குரிய இடங்களில் ஆட்சி செலுத்தத் தொடங்கினார்கள்.
9 அவர் இறந்தபின் அவர்கள் எல்லாரும் முடி சூடிக்கொண்டார்கள்.
அவர்களுக்குப்பின் அவர்களின் மைந்தர்களும்
பல ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.
அவர்களால் மண்ணுலகெங்கும் தீமைகள் பெருகின.
யூதர்களின் துன்பமும் மக்கபேயரின் கிளர்ச்சியும்
தொகுஅந்தியோக்கு எப்பிபானும் நெறிகெட்ட யூதரும்
தொகு
10 அவர்கள் நடுவிலிருந்து பொல்லாத வழிமரபினன் ஒருவன் தோன்றினான்;
அவன் மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்;
முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன்
கிரேக்கப் பேரரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு [1]
ஆட்சி செய்யத் தொடங்கினான்.
11 அக்காலத்தில் இஸ்ரயேலில் தீநெறியாளர் சிலர் தோன்றி,
"வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு
நாம் உடன்படிக்கை செய்துகொள்வோம்;
ஏனெனில் நாம் அவர்களைவிட்டுப் பிரிந்ததிலிருந்து
நமக்குப் பல வகைக் கேடுகள் நேர்ந்துள்ளன" என்று கூறி,
மக்கள் அனைவரையும் தவறான வழியில் செல்லத் தூண்டினார்.
12 இது அவர்களுக்கு ஏற்புடையதாய் இருந்தது.
13 உடனே மக்களுள் சிலர் ஆர்வத்தோடு மன்னனிடம் சென்றனர்.
அவர்கள் கேட்டதற்கு இணங்க,
வேற்றினத்தாரின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு
அவன் அவர்களுக்கு உரிமை அளித்தான்.
14 வேற்றினத்தாருடைய பழக்கவழக்கத்திற்கு ஏற்ப
அவர்கள் எருசலேமில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்;
15 விருத்தசேதனத்தின் அடையாளத்தை மறைத்து,
தூய உடன்படிக்கையை விட்டுவிட்டு,
வேற்றினத்தாரோடு கலந்து, எல்லாவகைத் தீமைகளையும் செய்தார்கள். [2]
அந்தியோக்கு எகிப்தைக் கைப்பற்றல்
தொகு
16 அந்தியோக்கு தன் சொந்த நாட்டில் ஆட்சியை நிலைநாட்டிய பின்,
இரு நாடுகளுக்கு மன்னனாகும் எண்ணத்துடன்
எகிப்திலும் ஆட்சிபுரிய விரும்பினான்;
17 ஆதலால் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை,
பெரும் கப்பற்படை அடங்கிய வலிமைமிக்க படைத்திரளோடு
எகிப்து நாட்டில் புகுந்தான். [3]
18 எகிப்து மன்னனான தாலமியோடு அவன் போர் தொடுக்கவே,
தாலமி அவனுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடினான்;
அவனுடைய வீரர்களுள் பலர் வெட்டுண்டு மடிந்தனர்.
19 எகிப்து நாட்டின் அரண்சூழ் நகர்கள் பல பிடிபட்டன.
அந்தியோக்கு எகிப்திலிருந்து கொள்ளைப் பொருள்களை எடுத்துச் சென்றான்.
அந்தியோக்கு யூதர்களைத் துன்புறுத்தல்
தொகு
20 நூற்று நாற்பத்து மூன்றாம் ஆண்டில் [4]
அந்தியோக்கு எகிப்தை வென்று திரும்புகையில்
வலிமைமிக்க படையோடு இஸ்ரயேலைத் தாக்கி எருசலேமை அடைந்தான்;
21 அகந்தையோடு திருஉறைவிடத்திற்குள் புகுந்து,
பொற்பீடம், விளக்குத்தண்டு, அதோடு இணைந்தவை,
22 காணிக்கை அப்பமேசை,
நீர்மப் படையலுக்கான குவளைகள், கிண்ணங்கள்,
பொன் தூபக் கிண்ணங்கள், திரை, பொன் முடிகள்,
கோவில் முகப்பில் இருந்த பொன் அணிகலன்கள்
ஆகிய அனைத்தையும் சூறையாடினான்;
23 வெள்ளியையும் பொன்னையும்
விலையுயர்ந்த கலன்களையும் கைப்பற்றினான்;
ஒளித்து வைத்திருந்த செல்வங்களையும்
கண்டுபிடித்து எடுத்துக் கொண்டான்; [5]
24 இஸ்ரயேலில் பலரைக் கொன்று குவித்தபின்,
கொள்ளைப் பொருள்களோடு தன் நாடு திரும்பினான்;
தன் செயல்கள்பற்றிப் பெருமையாகப் பேசிவந்தான்.
25 இஸ்ரயேல் மக்கள் தாங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும்
இஸ்ரயேலைக் குறித்து அழுது புலம்பினார்கள்.
26 தலைவர்களும் மூப்பர்களும் அழுது அரற்றினார்கள்;
கன்னிப்பெண்களும் இளைஞர்களும் நலிவுற்றார்கள்;
பெண்கள் அழகுப்பொலிவினை இழந்தார்கள்.
27 மணமகன் ஒவ்வொருவனும் புலம்பி அழுதான்;
மணவறையில் இருந்த மணமகள் ஒவ்வொருத்தியும் வருந்தி அழுதாள்.
28 தன் குடிமக்கள் பொருட்டு நாடே நடுநடுங்கியது;
யாக்கோபின் வீடே வெட்கித் தலைகுனிந்தது.
29 இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மன்னன்
வரி தண்டுவதற்காக ஒருவனை
யூதேயாவின் நகரங்களுக்கு அனுப்பி வைத்தான்.
அவன் பெரும் படையோடு எருசலேம் சேர்ந்தான்.
30 அமைதிச் செய்தியுடன் தான் வந்திருப்பதாக
அவன் எருசலேம் மக்களிடம் நயவஞ்சகமாகக் கூறி,
அவர்களது நம்பிக்கையைப் பெற்றான்.
ஆனால் அவன் திடீரென்று நகர்மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கி,
அவர்களுள் பலரைக் கொன்றான்;
31 நகரைக் கொள்ளையடித்துத் தீக்கிரையாக்கி,
வீடுகளையும் சுற்று மதில்களையும் தகர்த்தெறிந்தான்.
32 அவனும் அவனுடைய வீரர்களும்
பெண்களையும் பிள்ளைகளையும் நாடு கடத்திக்
கால் நடைகளைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்; [6]
33 தாவீதின் நகரில் உயர்ந்த, உறுதியான மதில்களையும்
வலுவான காவல்மாடங்களையும் கட்டியெழுப்பி,
அதைத் தங்கள் கோட்டையாக்கிக் கொண்டார்கள்;
34 தீநெறியாளர்களான பொல்லாத மக்களினத்தை அங்குக் குடியேற்றினார்கள்;
இவ்வாறு தங்கள் நிலையை வலுப்படுத்தினார்கள்;
35 படைக்கலங்களையும் உணவுப்பொருள்களையும் அங்குச் சேர்த்து வைத்தார்கள்;
எருசலேமில் கொள்ளையடித்த பொருள்களை ஒன்று திரட்டி வைத்தார்கள்;
இதனால் இஸ்ரயேலருக்குப் பேரச்சம் விளைவித்து வந்தார்கள்.
36 அந்தக்கோட்டை, திருஉறைவிடத்தைத் தாக்குவதற்கு ஏற்ற
பதுங்கிடமாக அமைந்தது;
இஸ்ரயேலுக்குக் கொடிய எதிரியாகத் தொடர்ந்து இருந்தது.
37 அவர்கள் திருஉறைவிடத்தைச் சுற்றிலும்
மாசற்ற குருதியைச் சிந்தினார்கள்;
திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
38 அவர்களை முன்னிட்டு எருசலேமின் குடிகள் அதைவிட்டு ஓடிவிட்டார்கள்.
எருசலேம் அன்னியரின் குடியிருப்பு ஆயிற்று;
தன் குடிகளுக்கோ அன்னியமானது.
அதன் மக்கள் அதனைக் கைவிட்டார்கள்.
39 அதன் திருஉறைவிடம் பாழடைந்து பாலைநிலம்போல் ஆயிற்று;
திருநாள்கள் துயர நாள்களாக மாறின;
ஓய்வுநாள்கள் பழிச்சொல்லுக்கு உள்ளாயின;
அதன் பெருமை இகழ்ச்சிக்கு உட்பட்டது. [7]
40 அதன் மாட்சியின் அளவுக்கு மானக்கேடும் மிகுந்தது;
அதன் பெருமை புலம்பலாக மாறியது.
41-42 எல்லாரும் ஒரே மக்களினமாய் இருக்கவேண்டும் என்றும்,
தனிப்பட்ட பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும் என்றும்
அந்தியோக்கு மன்னன் தன் பேரரசு முழுவதிலும் ஆணை பிறப்பித்தான்.
மன்னனின் கட்டளைப்படி நடக்கப் பிற இனத்தார் அனைவரும் இசைந்தனர்.
43 இஸ்ரயேலருள் பலர் மன்னனுடைய வழிபாட்டுமுறைகளை
மனமுவந்து ஏற்றுக்கொண்டனர்;
சிலைகளுக்குப் பலியிட்டனர்;
ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தினர்.
44 மன்னன் தன் தூதர்கள் வழியாக எருசலேமுக்கும்
யூதாவின் நகரங்களுக்கும்
மடல்களை அனுப்பி வைத்தான்:
யூதர்கள் தங்கள் நாட்டு மரபுக்குப் புறம்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவேண்டும்;
45 எரிபலிகளோ மற்றப் பலிகளோ நீர்மப் படையல்களோ
திருஉறைவிடத்தில் நிகழ்வதைத் தடுக்க வேண்டும்;
ஓய்வுநாள்களையும் திருவிழாக்களையும் தீட்டுப்படுத்த வேண்டும்;
46 திருஉறைவிடத்தையும் அதைச் சேர்ந்த தூய பொருள்களையும் கறைப்படுத்த வேண்டும்;
47 பிற இனத்தாரின் பலிபீடங்கள், கோவில்கள்,
சிலைவழிபாட்டுக்குரிய இடங்கள் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும்;
பன்றிகளையும் தீட்டுப்பட்ட விலங்குகளையும் பலியிடவேண்டும்;
48 அவர்கள் தங்கள் திருச்சட்டத்தை மறந்து,
தங்கள் விதிமுறைகளையும் மாற்றிக்கொள்ளும் பொருட்டு,
தங்கள் மைந்தர்களுக்கு விருத்தசேதனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்;
49 தங்களை எல்லாவகை மாசுகளாலும் தீட்டுகளாலும்
அருவருப்புக்குரியோர் ஆக்கிக்கொள்ள வேண்டும்.
50 மன்னனின் கட்டளைப்படி நடவாதவர்கள் சாவார்கள்.
51 மன்னன் இந்த கட்டளைகளையெல்லாம் எழுதித்
தன் பேரரசு முழுவதற்கும் அனுப்பி வைத்தான்;
இவற்றை மக்கள் எல்லாரும் செயல்படுத்த
மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான்;
யூதாவின் நகரங்கள் ஒவ்வொன்றும் பலியிடவேண்டும் என்று கட்டளையிட்டான்.
52 மக்களுள் பலர்,
அதாவது திருச்சட்டத்தைப் புறக்கணித்தோர் அனைவரும்
அந்த மேற்பார்வையாளர்களோடு சேர்ந்துகொண்டனர்;
நாட்டில் தீமைகள் செய்தனர்;
53 இஸ்ரயேலர் தங்களுக்கு இருந்த எல்லாப் புகலிடங்களையும் நோக்கி
ஓடி ஒளிந்து கொள்ளக் கட்டாயப்படுத்தினர்.
54 நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு [8]
கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள்
அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும்
பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்;
யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்; [9]
55 வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்;
56 தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து
நெருப்பிலிட்டு எரித்தார்கள்.
57 எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ,
யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ
அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்பது மன்னனது கட்டளை.
58 இவ்வாறு ஒவ்வொரு மாதமும்
நகரங்களில் காணப்பட்ட இஸ்ரயேலருக்கு எதிராக
அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தினார்கள்;
59 எரிபலிபீடத்தின்மேல் அமைக்கப்பட்டிருந்த சிலைவழிபாட்டுப் பீடத்தின்மீது
ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்தாம் நாள் பலியிடுவார்கள்;
60 தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்வித்த பெண்களை
மன்னனின் கட்டளைப்படி கொன்றார்கள். [10]
61 பிள்ளைகளை அவர்களுடைய அன்னையரது கழுத்தில் கட்டித் தொங்க விட்டார்கள்;
அவர்களின் குடும்பத்தினரையும்
அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தவர்களையும் கொலைசெய்தார்கள்.
62 எனினும் இஸ்ரயேலருள் பலர் உறுதியாய் இருந்தனர்;
தூய்மையற்ற உணவுப்பொருள்களை உண்பதில்லை என்று
தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்;
63 உணவுப்பொருள்களால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதைவிட,
தூய உடன்படிக்கையை மாசுபடுத்துவதைவிடச்
சாவதே சிறந்தது என்று கருதினர்; அவ்வாறே இறந்தனர். [11] [12]
64 இவ்வாறு இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.
- குறிப்புகள்
[1] 1:10 - கி.மு. 175.
[2] 1:10-15 = 2 மக் 4:7-17.
[3] 1:17 = 2 மக் 5:1.
[4] 1:20 - கி.மு. 169
[5] 1:20-23 = 2 மக் 5:11-21.
[6] 1:29-32 = 2 மக் 5:24-26.
[7] 1:39 = ஆமோ 8:10; தோபி 2:6.
[8] 1:54 - கி.மு. 167.
[9] 1:54 = தானி 11:31; மத் 24:15.
[10] 1:60 = 2 மக் 6:10.
[11] 1:63 = 2 மக் 6:19.
[12] 1:44-63 = 2 மக் 6:1-11; 18:7-41.
அதிகாரம் 2
தொகுமத்தத்தியாவின் பற்றுறுதி
தொகு
1 அக்காலத்தில் யோவாபின் குடும்பத்தைச் சேர்ந்த குருவான
சிமியோனின் பேரனும் யோவானின் மகனுமான மத்தத்தியா
எருசலேமைவிட்டுப் புறப்பட்டு மோதயினில் குடியேறினார்.
2 அவருக்கு ஐந்து மைந்தர்கள் இருந்தார்கள்;
அவர்கள் காத்தி என்ற யோவானும்,
3 தாசீ என்ற சீமோனும்,
4 மக்கபே என்ற யூதாவும்,
5 அவரான் என்ற எலயாசரும்,
அப்பு என்ற யோனத்தானும் ஆவார்கள்.
6 யூதேயாவிலும் எருசலேமிலும் மக்கள் இறைவனைப் பழிப்பதைக் கண்ட மத்தத்தியா,
7 "ஐயோ, எனக்கு கேடு!
என் மக்களின் இழிவையும்
திருநகரின் அழிவையும் பார்க்கவோ நான் பிறந்தேன்!
பகைவரின் பிடியில் நகர் சிக்கியிருக்க
திருஉறைவிடம் அயல் நாட்டவர் கையில் அகப்பட்டியிருக்க,
நான் இங்குக் குடியிருக்கலாமோ!
8 அதன் கோவில் மாண்பு இழந்த மனிதனைப்போல் ஆனது.
9 அதன் மாட்சிக்குரிய கலன்கள் கொள்ளைப்பொருள்களாய்க் கொண்டு செல்லப்பட்டன;
அதன் குழந்தைகள் தெருக்களில் கொலையுண்டார்கள்;
அதன் இளைஞர்கள் பகைவரின் வாளுக்கு இரையானார்கள்.
10 அதன் அரசை உரிமையாக்கிக் கொள்ளாத இனத்தார் யார்?
அதன் கொள்ளைப்பொருள்களைக் கைப்பற்றாதார் யார்?
11 அதன் அணிகலன்களெல்லாம் பறியோயின;
உரிமை நிலையிலிருந்து அது அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டது.
12 நம் தூய இடமும் நம் அழகும் மாட்சியும் பாழடைந்தன;
அவற்றை வேற்றினத்தார் தீட்டுப்படுத்தினர்.
13 இனியும் நாம் ஏன் வாழவேண்டும்?" என்று புலம்பினார்.
14 மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தங்கள் ஆடைகளைக் கிழித்து,
சாக்கு உடை உடுத்திக் கொண்டு மிகவும் புலம்பினார்கள்.
15 இதற்கிடையில் கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக
மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள்,
மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள்.
16 இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர்.
மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள்.
17 மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி,
"நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர்.
உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு.
18 ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்;
பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர்
ஆகிய அனைவரும் செய்தவண்ணம்
நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும்.
அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்;
பொன், வெள்ளி மற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்"
என்று கூறினார்கள்.
19 அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில்,
"மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும்
அவருக்குக் கீழ்ப்படிந்து,
தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு,
அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும்,
20 நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும்
எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம்.
21 திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும்
நாங்கள் கைவிட்டு விடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக!
22 மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியமாட்டோம்;
எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழமாட்டோம்" என்று கூறினார்.
23 மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும்,
மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட
யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான்.
24 மத்தத்தியா அதைப் பார்த்ததும்
திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்;
முறையாக சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து
பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார்.
25 அதே நேரத்தில்,
பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று
பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார்.
26 இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல,
திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை
மத்தத்தியா வெளிப்படுத்தினார். [1]
மத்தத்தியாவின் எதிர்ப்பும் போரும்
தொகு
27 பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று,
"திருச்சட்டத்தின்பால் பேரார்வமும்
உடன்படிக்கைமீது பற்றுதியும் கொண்ட எல்லாரும்
என் பின்னால் வரட்டும்" என்று உரத்த குரலில் கத்தினார். [2]
28 அவரும் அவருடைய மைந்தர்களும்
நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு
மலைகளுக்குத் தப்பியோடினார்கள்.
29 அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர்
பாலைநிலத்தில் தங்கிவாழச் சென்றனர்.
30 அவர்களும் அவர்களுடைய மைந்தர்களும் மனைவியரும்
கால்நடைகளோடு அங்குத் தங்கினார்கள்;
ஏனெனில் கடுந்துயரங்கள் அவர்களை வருத்தின.
31 மன்னனின் கட்டளையை அவமதித்தோர்
பாலைநிலத்து மறைவிடங்களுக்குப் போய்விட்டனர் என்று
தாவீதின் நகராகிய எருசலேமில் இருந்த அரச அலுவலர்களுக்கும்
படைவீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
32 உடனே படை வீரர்கள் பலர் அவர்களைத் துரத்திச் சென்று,
அவர்கள் தங்கியிருந்த இடத்தை அடைந்து,
அதற்கு எதிராகப் பாசறை அமைத்து,
ஓய்வுநாளில் அவர்கள்மீது போர்தொடுக்க ஏற்பாடு செய்தனர்.
33 அவர்கள் இஸ்ரயேலரை நோக்கி,
"போதும் இந்தப் போராட்டம்.
வெளியே வாருங்கள்;
மன்னரின் கட்டளைப்படி செயல்படுங்கள்; நீங்கள் பிழைப்பீர்கள்" என்றார்கள்.
34 அதற்கு அவர்கள்,
"ஓய்வுநாள் தீட்டுப்படாதவாறு நாங்கள் வெளியே வரவும் மாட்டோம்;
மன்னரின் சொற்படி நடக்கவும் மாட்டோம்" என்று பதிலளித்தார்கள்.
35 உடனே பகைவர்கள் அவர்களோடு போர்புரிய விரைந்தார்கள்.
36 ஆனால் இஸ்ரயேலர் அவர்களை எதிர்க்கவுமில்லை;
அவர்கள்மேல் கற்களை எறியவுமில்லை;
தாங்கள் ஒளிந்திருந்த இடங்களை அடைத்துக்கொள்ளவுமில்லை.
37 மாறாக, "எங்கள் மாசின்மையில் நாங்கள் எல்லாரும் மடிவோம்.
நீங்கள் எங்களை அநியாயமாகக் கொலை செய்கிறீர்கள் என்பதற்கு
வானமும் வையகமும் சான்றாக இருக்கும்" என்றார்கள்.
38 ஆகவே பகைவர்கள் ஓய்வு நாளில் அவர்களைத் தாக்க,
அவர்களுள் ஆயிரம் பேர் இறந்தனர்;
அவர்களுடைய மனைவி மக்களும் கால்நடைகளும் மாண்டார்கள். [3]
39 இதை அறிந்த மத்தத்தியாவும் அவருடைய நண்பர்களும்
அவர்களுக்காகப் பெரிதும் அழுது புலம்பினார்கள்.
40 அப்பொழுது அவர்கள் ஒருவர் ஒருவரைநோக்கி,
"நம் சகோதரர்கள் செய்ததுபோல நாம் அனைவரும் செய்து
நம் உயிரையும் விதிமுறைகளையும் காப்பாற்றும்பொருட்டு
வேற்றினத்தாரோடு போரிட மறுத்தால்,
பகைவர்கள் விரைவில் நம்மையும் மண்ணுலகினின்று அழித்தொழித்து விடுவார்கள்"
என்று சொல்லிக்கொண்டார்கள்.
41 அன்று அவர்கள்,
"ஓய்வுநாளில் யார் நம்மைத் தாக்கினாலும்,
அவர்களை எதிர்த்து நாமும் போர்புரிவோம்;
நம் சகோதரர்கள் தாங்கள் ஒளிந்திருந்த இடங்களில் மடிந்ததுபோல
நாமும் மடிய மாட்டோம்" என்னும் முடிவுக்கு வந்தார்கள்.
42 இஸ்ரயேலருள் வலிமையும் துணிவும் கொண்ட கசிதேயர் [4] குழுவினர்
அவர்களோடு சேர்ந்துகொண்டனர்.
இவர்கள் எல்லாரும் திருச்சட்டத்தைக் காப்பாற்ற மனமுவந்து முன்வந்தனர்.
43 கடுந்துயருக்குத் தப்பியோடியவர்கள் அனைவரும்
அவர்களோடு சேர்ந்து கொண்டதால்
அவர்கள் கூடுதல் வலிமை பெற்றார்கள்.
44 அவர்கள் எல்லாரும் படையாகத் திரண்டு,
பொல்லாதவர்களைச் சினங்கொண்டு தாக்கினார்கள்;
நெறிகெட்டவர்களைச் சீற்றங்கொண்டு தாக்கினார்கள்.
தாக்கப்பட்டோருள் உயிர் தப்பியவர்கள் பாதுகாப்புக்காகப்
பிற இனத்தாரிடம் ஓடிவிட்டார்கள்.
45 மத்தத்தியாவும் அவருடைய நண்பர்களும் எங்கும் சென்று
சிலைவழிபாட்டுக்கான பீடங்களை இடித்துத் தள்ளினார்கள்;
46 இஸ்ரயேலின் எல்லைக்குள் விருத்தசேதனமின்றி வாழ்ந்துவந்த சிறுவர்களுக்கு
வலுக்கட்டாயமாக விருத்தசேதனம் செய்தார்கள்;
47 செருக்குற்ற மக்களை விரட்டியடித்தார்கள்.
அவர்களின் முயற்சி அன்றாடம் வெற்றிகண்டது.
48 வேற்றினத்தாரிடமிருந்தும் மன்னர்களிடமிருந்தும்
அவர்கள் திருச்சட்டத்தை விடுவித்தார்கள்;
பொல்லாதவனான அந்தியோக்கு வெற்றிகொள்ள விடவில்லை.
மத்தத்தியாவின் இறப்பு
தொகு
49 இறக்கும் காலம் நெருங்கியபோது மத்தத்தியா தம் மைந்தர்களை நோக்கி,
"இப்போது இறுமாப்பும் ஏளனமும் மேலோங்கிவிட்டன;
பேரழிவுக்கும் கடுங் சீற்றத்துக்கும் உரிய காலம் இது.
50 ஆதலால், என் மக்களே,
இப்போது திருச்சட்டத்தின்பால் பற்றார்வம் கொண்டிருங்கள்;
நம் மூதாதையரின் உடன்படிக்கைக்காக உங்கள் உயிரைக் கொடுங்கள்.
51 நம் மூதாதையர் தங்கள் காலத்தில் செய்த செயல்களை நினைவுகூருங்கள்;
இதனால் பெரும் மாட்சியும் நிலைத்த பெயரும் பெறுவீர்கள்.
52 ஆபிரகாம் சோதிக்கப்பட்ட வேளையிலும்
பற்றுறுதி உள்ளவராய்க் காணப்படவில்லையா?
அதனால் இறைவனுக்கு ஏற்புடையவர் என்று மதிக்கப்படவில்லையா? [5]
53 யோசேப்பு தமக்கு இடர்பாடு நேரிட்ட காலத்தில் கட்டளையைக் கடைப்பிடித்தார்;
எகிப்தின் ஆளுநர் ஆனார். [6]
54 நம் மூதாதையான பினகாசு பற்றார்வம் மிக்கவராய் இருந்ததால்
என்றுமுள குருத்துவத்தின் உடன்படிக்கையைப் பெற்றுக்கொண்டார். [7]
55 யோசுவா கட்டளையை நிறைவேற்றியதால் இஸ்ரயேலின் நீதித்தலைவர் ஆனார்.
56 காலேபு சபைமுன் சான்று பகர்ந்ததால் நாட்டை உரிமைச்சொத்தாக அடைந்தார். [8]
57 முடிவில்லாத அரசின் அரியணையைத் தாவீது தம் இரக்கத்தால் உரிமையாக்கிக் கொண்டார். [9]
58 எலியா திருச்சட்டத்தின்பால் பற்றார்வம் கொண்டிருந்ததால்
விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்றார். [10]
59 அனனியா, அசரியா, மிசாவேல் ஆகியோர்
தங்கள் பற்றுறுதியால் தீயினின்று காப்பாற்றப்பெற்றார்கள். [11]
60 தானியேல் தமது மாசின்மையால்
சிங்கத்தின் பிடியினின்று விடுவிக்கப்பெற்றார். [12]
61 இவ்வாறே, கடவுளை நம்பினோர் ஆற்றலில் சிறந்தோங்குவர் என்பதை
ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். [13]
62 தீவினை புரியும் மனிதனின் சொல்லுக்கு அஞ்சாதீர்கள்;
ஏனெனில் அவனது பெருமை கழிவுப்பொருளாக மாறும்; புழுவுக்கு இரையாகும்.
63 அவன் இன்று உயர்த்தப்படுவான்; நாளை அடையாளமின்றிப் போய்விடுவான்;
ஏனெனில் தான் உண்டான புழுதிக்கே திரும்பிவிடுவான்;
அவனுடைய திட்டங்கள் ஒழிந்துபோகும்.
64 என் மக்களே,
நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் மனஉறுதியும் வலிமையும் கொண்டிருங்கள்;
ஏனெனில் அதனால் மாட்சி அடைவீர்கள். [14]
65 "உங்கள் சகோதரனாகிய சிமியோன் அறிவுக்கூர்மை படைத்தவன் என்பதை நான் அறிவேன்.
அவனுக்கு எப்பொழுதும் செவிசாயுங்கள்.
அவன் உங்களுக்குத் தந்தையாக இருப்பான்.
66 இளமைமுதல் வலிமையும் துணிவும் கொண்டவனாகிய யூதா மக்கபே
உங்களுக்குப் படைத்தலைவனாய் இருந்து
பகைவர்களை எதிர்த்துப் போர்புரிவான்.
67 திருச்சட்டத்தின்படி நடக்கிறவர்கள் எல்லாரையும் உங்களோடு ஒன்று சேர்த்து
உங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகப்
பகைவர்களைப் பழிவாங்குங்கள்;
68 வேற்றினத்தார் உங்களுக்குச் செய்ததை
அவர்களுக்குத் திருப்பிச் செய்யுங்கள்;
திருச்சட்டத்தின் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்"
என்று அறிவுரை கூறினார்.
69 இவ்வாறு சொல்லி மத்தத்தியா அவர்களுக்கு ஆசி வழங்கியபின்
தம் மூதாதையரோடு துயில்கொண்டார்.
70 அவர் நூற்று நாற்பத்தாறாம் ஆண்டு இறந்தார்;
மோதயின் நகரில் இருந்த தம் மூதாதையரின் கல்லறையில்
அடக்கம் செய்யப்பெற்றார்.
இஸ்ரயேலர் அனைவரும் அவருக்காகப் பெரிதும் துயரம் கொண்டாடினர். [15]
- குறிப்புகள்
[1] 2:26 = எண் 25:7-8; திபா 106:30; சீஞா 45:23.
[2] 2:27 = 2 மக் 5:27.
[3] 2:32-38 = 2 மக் 6:11.
[4] 2:42 - எபிரேயத்தில் "கசிதேயர்" என்றால் "பக்தர்கள்"
"சமயப் பணியார்வமுடையோர்" எனப் பொருள்.
இவர்களே "எஸ்ஸேனியர்", "பரிசேயர்" ஆகியோருக்கு முன்னோடிகள்.
[5] 2:52 = தொநூ 15:6; 22:1-19; சாஞா 10:5.
[6] 2:53 = தொநூ 39:1:45-28.
[7] 2:54 = எண் 25:13; சீஞா 45:23-34.
[8] 2:55-56 = எண் 13:1-14:22.
[9] 2:57 = 2 சாமு 7:16.
[10] 2:58 = 1 அர 19:10-14; 2 அர 2:9-12.
[11] 2:59 = தானி 3:8-30.
[12] 2:60 = தானி 6:1-29; 3:31-42.
[13] 2:61 = சீஞா 2:10.
[14] 2:64 = இச 31:6.
[15] 2:70 - கி.மு. 166.
(தொடர்ச்சி): மக்கபேயர் - முதல் நூல்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை