திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/முன்னுரை


தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் ஆகிய ஏழு நூல்களும் எஸ்தர், தானியேல் நூல்களில் காணப்படும் கிரேக்க இணைப்புகளும் எபிரேய விவிலியத்தில் இடம்பெறவில்லை. இருப்பினும், "செப்துவசிந்தா" (எழுபதின்மர் மொழிபெயர்ப்பு) எனப்படும் கிரேக்க விவிலியத்தில் மேற்காணும் நூல்கள் இடம்பெறுகின்றன.

இணைத் திருமுறை உள்ளிட்ட பழைய ஏற்பாட்டு நூல்களிடையிலான தொடர்பைக் காட்டும் வரைபடம்.


இணைத் திருமுறை (Deutero-canonical Books) [1]

தொகு

முன்னுரை

இந்நூல்களின் இறைஏவுதல் பற்றிக் கிறிஸ்தவர்கள் நடுவில் கருத்து வேறுபாடு தொடக்கத்திலிருந்தே நிலவிவந்துள்ளது. திரெந்து நகரில் கூடிய திருச்சங்கம் இவற்றை இறைஏவுதலால் எழுதப்பட்ட திருநூல்கள் என்று கி.பி. 1546இல் அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டது. இதனால் இவை "இணைத் திருமுறை நூல்கள்" (Deutero-canonical Books) எனப் பெயர் பெறுகின்றன.

திருச்சபைச் சீர்திருத்தத்தில் ஈடுபட்ட மார்ட்டின் லூத்தர் இந்நூல்களை விவிலியத்தைச் சேர்ந்த நூல்களாக ஏற்றுக்கொள்ளவில்லை; எனினும் இவை பயனுள்ளவை, படிக்கத் தகுந்தவை என்று ஒப்புக்கொண்டார். 1534இல் தாம் வெளியிட்ட ஜெர்மன் விவிலிய மொழிபெயர்ப்பில் இவற்றைப் பழைய ஏற்பாட்டின் இறுதியில் "திருமுறைப் புற நூல்கள்" (Apocrypha) என்னும் தலைப்பின்கீழ் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து வெளிவந்த பல மொழிபெயர்ப்புகளும் இம்முறையையே பின்பற்றின.

சீர்திருத்தச் சபைகளின் அமைப்பான விவிலியச் சங்கங்களின் இணையமும் கத்தோலிக்கத் திருச்சபையின் கிறிஸ்தவ ஒன்றிப்புச் செயலகமும் இணைந்து பொது விவிலிய மொழிபெயர்ப்புக்குரிய விதிமுறைகளை 1968இல் வெளியிட்டன. பின் அவ்விதிமுறைகளை 1987இல் திருத்தியமைத்தன. இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் பொது விவிலிய மொழிபெயர்ப்புகள் எல்லாமே மேற்கண்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. அவற்றின்படி இணைத் திருமுறை நூல்களைப் புதிய ஏற்பாட்டு நூல்களுக்கு முன்னர் அச்சிடும் வழக்கம் இப்பதிப்பில் பின்பற்றுள்ளது.

முனைவர் ஆல்பிரட் ரால்வ்ஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு, 1935இல் ஜெர்மன் விவிலியச் சங்கத்தால் ஸ்டுட்கார்ட் நகரில் வெளியிடப்பட்ட "செப்துவசிந்தா" கிரேக்கப் பதிப்பு இப்பகுதிக்கு மூலபாடமாய் அமைகிறது.

கிறிஸ்து பெருமான் தோன்றுவதற்குச் சற்றே முற்பட்ட யூத வரலாறு, வாழ்க்கை முறை, சிந்தனை, சமயப் பழக்கவழக்கங்கள் முதலியன பற்றிப் பல செய்திகள் இந்நூல்களிலிருந்து நமக்குக் கிடைப்பதால், வரலாற்று இயேசுவைப் புரிந்துகொள்ள இவை நமக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. இதனால் பிரிவு மனப்பான்மையை விடுத்துத் திறந்த உள்ளத்தோடு இந்நூல்களைப் படிக்கும் நிலை இன்று உருவாகிவருகிறது.


(தொடர்ச்சி): தோபித்து: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை