திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை


"பிறகு ஒலோபெரினின் தலைப்பக்கம் இருந்த தூணுக்குச் சென்று, அதில் மாட்டியிருந்த அவனது வாளை யூதித்து எடுத்தார்; அவனது படுக்கையை அணுகி, அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, 'இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும்" என்று வேண்டினார்; பிறகு தம் வலிமையெல்லாம் கொண்டு அவனது கழுத்தை இரு முறை வெட்டித் தலையைத் துண்டித்தார்."- யூதித்து 13:6-8.


அதிகாரம் 13

தொகு

ஒலோபெரினின் தலையை யூதித்து கொய்தல்

தொகு


1 பொழுது சாய்ந்தபோது ஒலோபெரினின் பணியாளர்கள்
விரைவாக வெளியேறினார்கள்.
பகோவா அலுவலர்களைத் தன் தலைவன் முன்னிலையிலிருந்து
வெளியே அனுப்பிவிட்டு, கூடாரத்துக்கு வெளியிலிருந்து தாழிட்டான்.
நீண்ட நேரம் நீடித்த விருந்தினால் களைப்புற்றிருந்ததால்
அவர்களும் படுக்கச் சென்றார்கள்.
2 யூதித்து கூடாரத்திற்குள் தனிமையாய் விடப்பட்டார்.
மது மயக்கத்தில் இருந்த ஒலோபெரின் தன் படுக்கைமேல் விழுந்து கிடந்தான்.


3 யூதித்து தம் பணிப்பெண்ணிடம் படுக்கையறைக்கு வெளியே நிற்கும்படியும்,
நாள்தோறும் செய்துவந்தது போலத்
தாம் வெளியே வரும்வரை காத்திருக்கும்படியும் கூறினார்;
வேண்டுதல் செய்யத் தாம் புறப்படவிருப்பதாக அவளிடம் சொன்னார்;
இதையே பகோவாவிடமும் தெரிவித்திருந்தார்.
4 அனைவரும் அங்கிருந்து அகன்றனர்;
சிறியோர்முதல் பெரியோர்வரை யாருமே
படுக்கையறையில் விடப்படவில்லை.
ஒலோபெரினின் படுக்கை அருகே யூதித்து நின்றுகொண்டு,
"ஆண்டவரே, எல்லாம் வல்ல கடவுளே,
எருசலேமின் மேன்மைக்காக இவ்வேளையில்
நான் செய்யவிருப்பதைக் கண்ணோக்கும்.
5 உமது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலுக்குத் துணை புரியவும்,
எங்களுக்கு எதிராக எழுந்துள்ள பகைவர்களை அழிக்கும்படி
நான் செய்த சூழ்ச்சியைச் செயல்படுத்தவும் இதுவே தக்க நேரம்"
என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.


6 பிறகு ஒலோபெரினின் தலைப்பக்கம் இருந்த தூணுக்குச் சென்று,
அதில் மாட்டியிருந்த அவனது வாளை யூதித்து எடுத்தார்;
7 அவனது படுக்கையை அணுகி,
அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு,
"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே,
எனக்கு இன்று வலிமை அளித்தருளும்" என்று வேண்டினார்;
8 பிறகு தம் வலிமையெல்லாம் கொண்டு
அவனது கழுத்தை இரு முறை வெட்டித் தலையைத் துண்டித்தார்;
9 அவனது உடலைப் படுக்கையிலிருந்து கீழே தள்ளினார்;
மேற்கவிகையைத் தூண்களிலிருந்து இறக்கினார்;
சிறிது காலம்தாழ்த்தி வெளியே சென்று,
ஒலோபெரினின் தலையைத் தம் பணிப்பெண்ணிடம் கொடுத்தார்.

யூதித்து பெத்தூலியாவுக்குத் திரும்புதல்

தொகு


10 பணிப்பெண் ஒலோபெரினின் தலையைத்
தன் உணவுப் பைக்குள் வைத்துக்கொண்டாள்.
பிறகு அவர்கள் இருவரும் தங்கள் வழக்கம்போல
வேண்டுதல் செய்ய ஒன்றாய் வெளியேறினார்கள்;
பாளையத்தின் வழியாய்ச் சென்று,
பள்ளத்தாக்கைச் சுற்றி,
மலைமீது ஏறிப் பெத்தூலியாவுக்குப் போய்,
அதன் வாயிலை அடைந்தார்கள்.
11 வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்தவர்களை நோக்கி
யூதித்து தொலையிலிருந்தே,
"திறங்கள், வாயிலைத் திறங்கள்.
கடவுள், நம் கடவுள் நம்மோடு இருக்கிறார்;
அவர் இஸ்ரயேலருக்குத் தம் வலிமைமையும்
நம் பகைவர்களுக்கு எதிராய்த் தம் ஆற்றலையும்
இன்று வெளிப்படுத்தியுள்ளார்" என்று கத்தினார்.


12 நகர மக்கள் யூதித்துடைய குரலைக் கேட்டபோது,
வாயிலுக்கு விரைவாக இறங்கிவந்து மூப்பர்களை அழைத்தார்கள்.
13 சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் சேர்ந்து ஓடிவந்தார்கள்.
யூதித்து வந்தசேர்ந்ததை அவர்களால் நம்ப முடியவில்லை.
அவர்கள் வாயிலைத் திறந்து, அப்பெண்களை வரவேற்றார்கள்;
தீ மூட்டி ஒளி உண்டாக்கி அவர்களைச் சூழ்ந்து நின்றார்கள்.
14 யூதித்து அவர்களிடம் உரத்தகுரலில்,
"கடவுளை வாழ்த்துங்கள்; போற்றுங்கள், கடவுளைப் போற்றுங்கள்.
இஸ்ரயேல் இனத்தார் மீது அவர் தம் இரக்கத்தைப் பொழிந்துள்ளார்.
நம் பகைவர்களை என் கையால் இன்று இரவே அழித்துவிட்டார்"
என்று அறிவித்தார்.


15 பிறகு பையிலிருந்து ஒலோபெரினின் தலையை வெளியே எடுத்து
அவர்களிடம் காட்டி,
"இதோ, அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரினின் தலை!
இதோ, மேற்கவிகை!
இதன்கீழ்தான் அவன் குடிமயக்கத்தில் விழுந்து கிடந்தான்.
ஆண்டவர் ஒரு பெண்ணின் கையால் அவனை வெட்டி வீழ்த்தினார்.
16 ஆண்டவர்மேல் ஆணை!
நான் சென்ற பாதையில் என்னைக் காப்பாற்றியவர் அவரே.
என் முகத்தோற்றமே அவனை வஞ்சித்து அழித்தது.
நான் கறைபடவோ இழிவுறவோ
அவன் என்னுடன் பாவம் செய்யவில்லை" என்றார்.


17 மக்கள் யாவரும் பெரிதும் மலைத்துப்போயினர்;
தலை குனிந்து கடவுளைத் தொழுது,
"எங்கள் கடவுளே, நீர் போற்றி!
நீரே இன்று உம் மக்களின் பகைவர்களை அழித்தொழித்தீர்"
என்று ஒருவாய்ப்படப் போற்றினர்.
18 பின்னர் ஊசியா யூதித்திடம்
"மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட
நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள்.
விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி!
அவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழ்த்த
உன்னை வழிநடத்தியிருக்கிறார்.
19 கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து
உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது.
20 இதனால் இறவாப் புகழ் பெறக்
கடவுள் உனக்கு அருள்வாராக;
நலன்களால் உன்னை நிரப்புவாராக;
ஏனெனில், நம் மக்களினத்தார் ஒடுக்கப்பட்டபோது
நீ உன் உயிரைப் பணயம் வைத்தாய்;
நம் கடவுள் திருமுன் நேர்மையாக நடந்து,
நமக்கு வரவிருந்த பேரழிவைத் தடுத்துவிட்டாய்" என்றார்.
அதற்கு மக்கள் அனைவரும்,
"அவ்வாறே ஆகட்டும், அவ்வாறே ஆகட்டும்" என்று உரைத்தனர்.


அதிகாரம் 14

தொகு

அசீரியர்மீது இஸ்ரயேலரின் தாக்குதல்

தொகு


1 பிறகு யூதித்து மக்களிடம் பின்வருமாறு கூறினார்:
"சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
இத்தலையை எடுத்துக்கொண்டு போய்
உங்களது நகர மதில்மேல் தொங்கவிடுங்கள்.
2 பொழுது விடிந்து கதிரவன் எழுந்தவுடன்,
நீங்கள் அனைவரும் படைக்கலன்களை எடுத்துக்கொள்ளுங்கள்;
உங்களுள் வலிமை படைத்த அனைவரும் புறப்பட்டு,
தங்களுக்கு ஒரு படைத்தலைவனை அமர்த்திக் கொண்டு,
சமவெளியில் உள்ள அசீரியரின் முன்னணிக் காவலரைத்
தாக்க இறங்குவதுபோல நகரைவிட்டு வெளியேறுங்கள்;
ஆனால் கீழே இறங்கிச் செல்ல வேண்டாம்.
3 உடனே அசீரியக் காவலர்கள் தங்களுடைய படைக்கலங்களை எடுத்துக்கொண்டு
தங்கள் பாளையத்துக்குள் நுழைவார்கள்;
தங்கள் படைத் தலைவர்களை எழுப்புவார்கள்.
இவர்கள் ஒலோபெரினின் கூடாரத்துக்கு ஓடுவார்கள்;
ஆனால், அவனைக் காணமாட்டார்கள்.
ஆகவே அவர்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டு
உங்களிடமிருந்து தப்பியோடுவார்கள்.
4 அப்பொழுது நீங்களும்
இஸ்ரயேல் நாட்டு எல்லைகளில் வாழும் அனைவரும்
அவர்களைத் துரத்திச் சென்று
வழியிலேயே அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்.
5 இதைச் செய்யுமுன் அம்மோனியராகிய அக்கியோரை
என்னிடம் அழைத்து வாருங்கள்.
இஸ்ரயேல் இனத்தாரைப் புறக்கணித்து,
அக்கியோர் சாகும்படி நம்மிடம் அனுப்பிவைத்தவனை
அவர் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்."


6 ஆகவே மக்கள் ஊசியா வீட்டிலிருந்து
அக்கியோரை அழைத்து வந்தார்கள்.
அவரும் வந்து மக்கள் கூட்டத்திலிருந்த ஓர் ஆள் கையில்
ஒலோபெரினின் தலையைக் கண்டவுடன் மயங்கிக் குப்புற விழுந்தார்.
7 மக்கள் அவரைத் தூக்கிவிட,
அவர் யூதித்தின் காலடியில் விழுந்து வணங்கி
அவரிடம், "யூதாவின் கூடாரங்களிலெல்லாம் நீர் புகழப் பெறுவீராக!
எல்லா நாடுகளிலும்
உமது பெயரைக் கேள்விப்படுவோர் அனைவரும் அச்சம் கொள்வர்.
8 இந்நாள்களில் நீர் செய்த அனைத்தையும்
இப்போது எனக்கு எடுத்துச்சொல்லும்" என்று வேண்டினார்.
எனவே யூதித்து தாம் வெளியேறிச் சென்ற நாள்முதல்
அவர்களோடு பேசிக் கொண்டிருந்த அந்நேரம்வரை
ஆற்றியிருந்த செயல்கள் அனைத்தையும்
மக்கள் முன்னிலையில் அக்கியோரிடம் விரித்துரைத்தார்.


9 யூதித்து பேசி முடித்ததும் மக்கள் பேரொலி எழுப்பினார்கள்.
அவர்களது நகரெங்கும் மகிழ்ச்சிக் குரல் ஒலித்தது.
10 இஸ்ரயேலரின் கடவுள் செய்திருந்த அனைத்தையும்
அக்கியோர் கண்டு அவர்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டார்;
விருத்தசேதனம் செய்துகொண்டு
இஸ்ரயேல் இனத்தோடு தம்மை இணைத்துக்கொண்டார்.


11 பொழுது புலர்ந்தவுடன்
இஸ்ரயேலர் ஒலோபெரினின் தலையை
மதில்மேல் தொங்கவிட்டார்கள்;
பிறகு எல்லாரும் தங்கள் படைக்கலங்களை எடுத்துக் கொண்டு,
அணி அணியாக மலைப்பாதைகளில் இறங்கிச் சென்றார்கள்.
12 அசீரியர்கள் இவர்களைக் கண்ணுற்றபோது
தங்கள் தலைவர்களுக்கு ஆளனுப்பினார்கள்;
இவர்கள் படைத்தலைவர்களிடமும் ஆயிரத்தவர் தலைவர்களிடமும்
தங்கள் ஆளுநர்கள் அனைவரிடமும் சென்றார்கள்;
13 ஒலோபெரினின் கூடாரத்துக்குச் சென்று
அவனுடைய உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாய் இருந்தவனிடம்,
"நம் தலைவரை எழுப்பி விடும்.
அந்த அடிமைகள் முழுதும் அழிந்துபோகும்படி
நம்மேல் போர்தொடுக்கத் துணிந்து கீழே இறங்கி வருகிறார்கள்"
என்று கூறினார்கள்.


14 ஆகவே பகோவா உள்ளே சென்று,
கூடாரத்தின் கதவைத் தட்டினான்;
ஏனெனில், ஒலோபெரின் யூதித்துடன் உறங்குவதாக
நினைத்துக்கொண்டிருந்தான்.
15 ஒரு மறுமொழியும் வராததால்,
அவன் கதவைத் திறந்து படுக்கையறைக்குள் சென்றான்.
கட்டில் அருகே ஒலோபெரின் தரையில் இறந்து கிடந்ததையும்
அவன் தலை துண்டிக்கப் பட்டிருந்ததையும் கண்டான்;
16 உடனே பெருங் கூச்சலிட்டான்;
அழுது, புலம்பி, உரக்க அலறித்
தன் ஆடையைக் கிழித்துக் கொண்டான்.
17 பிறகு யூதித்து தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்தான்;
அங்கு அவரைக் காணாததால்
வெளியே மக்களிடம் ஓடிவந்து உரத்த குரலில்,
18 "அந்த அடிமைகள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்.
ஓர் எபிரேயப் பெண் நெபுகத்னேசர் மன்னரின் குடும்பத்துக்கே
இழிவு இழைத்துவிட்டாள்.
இதோ, ஒலோபெரின் தரையில் கிடக்கிறார்.
அவரது தலையைக் காணோம்!" என்று கத்தினான்.


19 அசீரியப் படைத்தலைவர்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டபோது
தங்கள் மேலாடையைக் கிழித்துக்கொண்டார்கள்;
பெரிதும் கலக்கமுற்றார்கள்.
அவர்களுடைய அழுகைக் குரலும் பெரும் கூச்சலும்
பாசறையெங்கும் ஒலித்தன.


(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை