திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - முதல் நூல்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை
1 & 2 சாமுவேல் என்னும் நூல்களில் இஸ்ரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. 1 & 2 அரசர்கள் என்னும் இந்நூல்கள் அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளன.
1 அரசர்கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:
1) இஸ்ரயேல் மக்களினம் முழுவதன் மேலும் சாலமோன் அரசுரிமை பெறுதல்; அவர் தந்தை தாவீது இறத்தல். 2) சாலமோனின் ஆட்சியும் மாட்சியும்; எருசலேமில் அவர் எழுப்பிய கோவிலின் சிறப்பு. 3) நாடு தெற்கு வடக்கு என்ற இரண்டு அரசுகளாகப் பிரிதல்; அவற்றைக் கி.மு. 850 வரை ஆண்ட அரசர்களின் வரலாறு.
இவ்விரு நூல்களிலும் ஒவ்வொரு அரசனும் ஆண்டவருக்கு அவன் காட்டிய பற்றுறுதிக்கேற்ப, தீர்ப்பு வழங்கப்படுகிறான்; ஆண்டவரிடம் காட்டும் பற்றுறுதி நாட்டுக்கு வெற்றியைத் தருகின்றது; மாறாக, வேற்றுத் தெய்வ வழிபாடும் கீழ்ப்படியாமையும் அழிவையே கொணர்கின்றன. இந்த அளவுகோலின்படி வடநாட்டு அரசர்கள் எல்லாருமே தீயவழியில் நடந்தார்கள் என்றும், தென்னாட்டு அரசர்களில் சிலரும் அவ்வாறு நடந்தார்கள் என்றும் காட்டப்படுகிறது.
பல இறைவாக்கினர் சிலைவழிபாட்டினின்றும் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமையினின்றும் மக்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களுள் எலியா தலைசிறந்தவராக இந்நூலில் காட்டப்படுகின்றார்.
1 அரசர்கள்
தொகுநூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. தாவீது அரசரின் இறுதி நாள்கள் | 1:1 - 2:12 | 508 - 512 |
2. சாலமோன் அரசராதல் | 2:13 - 46 | 512 - 514 |
3. சாலமோனின் ஆட்சி
அ) ஆட்சியின் முற்பகுதி
|
3:1 - 11:43
3:1 - 4:34
|
514 - 534
514 - 517
|
4. பிளவுபட்ட நாடு
அ) வடகுலங்களின் கிளர்ச்சி
|
12:1 - 22:53
12:1 - 14:20
|
535 - 559
535 - 540
|
1 அரசர்கள்
தொகுஅதிகாரங்கள் 1 முதல் 2 வரை
அதிகாரம் 1
தொகுதாவீதின் முதுமைப் பருவம்
தொகு
1 தாவீது அரசர் முதுமைப் பருவம் அடைந்தார். அத்தள்ளாத வயதில் போர்வைகளால் அவரைப் போர்த்தியும் அவரால் குளிரைத் தாங்க இயலவில்லை.
2 எனவே அவருடைய அலுவலர் அவரிடம், "அரசே! எம் தலைவராகிய உமக்கென ஓர் இளம் கன்னிப் பெண்ணைத் தேடப்போகிறோம். அவள் அரசராகிய உமக்குத் தாதியாக இருந்து பணிவிடை புரிவாள்; அவள் உமக்கருகில் படுத்து எம் தலைவரும் அரசருமாகிய உமது குளிரைப் போக்குவாள்" என்றனர்.
3 அவ்வாறே அவர்கள் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று அழகிய ஓர் இளம் பெண்ணுக்காகத் தேடி அலைந்து, சூனேம் ஊரைச் சார்ந்த அபிசாகு என்பவளைக் கண்டு, அவளை அரசரிடம் அழைத்து வந்தார்கள்.
4 பேரழகியான அந்த இளம்பெண் அரசருக்குத் தாதியாயிருந்து பணிவிடை புரிந்து வந்தாள். ஆனால், அரசர் அவளோடு கூடி வாழவில்லை.
அதோனியா அரசுரிமை நாடல்
தொகு
5 அகித்து என்பவளிடம் பிறந்தவனான அதோனியா, "நானே அரசனாவேன்" என்று செருக்குடன் சொல்லிக் கொண்டு தனக்கெனத் தேர்ப்படையையும், குதிரைப்படையையும் தன்முன் கட்டியம் கூறிச் செல்ல ஐம்பது பேரையும் பயிற்சி செய்து வைத்திருந்தான். [1]
6 "நீ ஏன் இப்படிச் செய்கிறாய்" என்று அவன் தந்தை அவனை ஒருபோதும் கண்டித்ததே இல்லை. அவன் அழகு மிக்கவன்; அப்சலோமுக்குப் பின் பிறந்தவன்.
7 அவன் செரூயாவின் மகனான யோவாபுடனும் குருவாகிய அபியத்தாருடனும் கூடி ஆலோசனை செய்தான். அவர்கள் அதோனியாவுக்குத் துணை நின்றார்கள்.
8 ஆனால், குருவாகிய சாதோக்கும் யோயாதாவின் மகன் பெனாயாவும் இறைவாக்கினர் நாத்தானும் சிமயி, இரேயி என்பவர்களும் தாவீதின் மெய்க்காப்பாளர்களும் அதோனியாவின் பக்கம் சேரவில்லை.
9 அதன் பிறகு ஏன்ரோகேல் அருகேயுள்ள சோகலேத்து என்ற பாறையின் மேல் அதோனியா ஆடுகளையும் எருதுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். அரசரின் மைந்தரான தன் உடன் பிறந்தார் அனைவரையும் அரச அலுவலரான யூதாவைச் சேர்ந்த அனைவரையும் அதற்கு அழைத்திருந்தான்.
10 ஆனால் அவன் இறைவாக்கினர் நாத்தானையோ, பெனாயாவையோ மெய்க்காப்பாளர்களையோ தன் சகோதரன் சாலமோனையோ அழைக்கவில்லை.
சாலமோன் அரசராதல்
தொகு
11 இப்படியிருக்க, நாத்தான் சாலேமோனின் தாயான பத்சேபாவிடம் "அகித்தின் மகன் அதோனியா அரசனாகிவிட்டான். இது நம் தலைவர் தாவீதுக்குத் தெரியாது. நீர் இதுபற்றிக் கேள்விப்படவில்லையா? [2]
12 உம் உயிரையும் உம் மகன் சாலமோன் உயிரையும் காத்துக்கொள்ள, நான் உமக்கு ஆலோசனை ஒன்று கூறுகிறேன்;
13 உடனே அரசர் தாவீதைப் போய்ப் பாரும். அவரிடம் 'என் தலைவரே! என் அரசே! நீர் உம் அடியவளாகிய எனக்கு, 'உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் அமர்வான்' என்று ஆணையிட்டுக் கூறவில்லையா? அப்படியாயின் அதோனியா அரசனாகியிருப்பது எப்படி?' என்று கேளும்.
14 அங்கு நீர் அரசரோடு பேசிக்கொண்டிருக்கையில் நானும் உமக்குப்பின் வருகிறேன். வந்து நீர் பேசியவற்றை உறுதிப்படுத்துகிறேன்" என்றார்.
15 அவ்வாறே பத்சேபா பள்ளியறையில் இருந்த வயது முதிர்ந்த அரசரைப் பார்க்கச் சென்றார். அங்கே சூனேமைச் சார்ந்த அபிசாகு அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.
16 பத்சேபா, அரசரைத் தாள் பணிந்து வணங்க, அரசர் "என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
17 அவரோ அவரிடம், "என் தலைவரே! நீர் உம் அடியவளாகிய எனக்கு, 'உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் அமர்வான்' என்று உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறவில்லையா?
18 ஆனால் என் தலைவராகிய அரசே! இதோ உமக்குத் தெரியாமலே அதோனியா அரசனாகி விட்டான்.
19 அவன் மிகுதியான எருதுகளையும் கொழுத்த கன்றுகளையும் ஆடுகளையும் பலியிட்டிருக்கிறான். அரசரின் மைந்தர் அனைவரையும் குருவாகிய அபியத்தாரையும் படைத்தலைவன் யோவாபையும் அழைத்திருக்கிறான். ஆனால் உம் அடியான் சாலமோனை மட்டும் அழைக்கவில்லை.
20 என் தலைவராகிய அரசே! உமக்குப் பின் அரியணை ஏறுபவன் யார் என்று நீரே அறிவிக்க வேண்டுமென்று இஸ்ரயேல் மக்கள் அனைவரும் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
21 அப்படி அறிவிக்காவிடில் என் தலைவராகிய அரசர் தம் மூதாதையரோடு துயில் கொள்ளும் நாளில் நானும் என் மகன் சாலமோனும் குற்றவாளிகளாகக் கருதப்படுவோம்" என்றார்.
22 அவர் இவ்வாறு அரசரோடு பேசிக்கொண்டிருக்கையில், இறைவாக்கினர் நாத்தான் உள்ளே வந்தார்.
23 அங்கே இருந்தவர்கள் அரசரிடம், "இறைவாக்கினர் நாத்தான் இங்கு வந்திருக்கிறார்" என்றார்கள். அவர் உள்ளே நுழைந்து அரசர்முன் சென்று தரைமட்டும் பணிந்து வணங்கினார்.
24 அப்பொழுது, நாத்தான், "என் தலைவராகிய அரசே! உமக்குப் பின் அதோனியா அரசாள்வான்; அவன் உம் அரியணைமீது அமர்வான் என்று நீர் கூறினதுண்டா?
25 ஏனெனில் அதோனியா இன்று இங்கிருந்து போய் மிகுதியான எருதுகளையும், கொழுத்த கன்றுகளையும் ஆடுகளையும் பலியிட்டிருக்கிறான். அரசரின் மைந்தர் அனைவரையும் படைத்தலைவராகிய யோவாபையும் [3] குருவாகிய அபியத்தாரையும் அதற்கு அழைத்திருக்கிறான். அவர்கள் அவனோடு உண்டு குடித்து 'அரசர் அதோனியா வாழ்க!' என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
26 ஆனால் உம் அடியானாகிய என்னையும் குரு சாதோக்கையும் யோயாதாவின் மகன் பெனாயாவையும் உம் அடியான் சாலமோனையும் அவன் அழைக்கவில்லை.
27 என் தலைவரும் அரசருமாகிய உமக்குப் பின் அரியணையில் யார் அமர வேண்டுமென்று அடியேனுக்கு இதுவரை நீர் தெரிவிக்கவில்லை. அவ்வாறிருக்க இவையெல்லாம் என் தலைவராகிய அரசரது சொற்படி நடந்திருக்கக்கூடுமா?" என்று கேட்டார்.
28 அப்பொழுது தாவீது அரசர் மறுமொழியாக, "பத்சேபாவை என் முன்னே வரவழையுங்கள்" என்றார். அவரும் அரசரிடம் வந்து அவர் முன்னிலையில் நின்றார்.
29 அரசர், "எல்லாத் துன்பங்களினின்றும் என் உயிரைக் காத்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை!
30 'உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் எனக்குப் பதிலாக அமர்வான்' என்று இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்மேல் ஆணையிட்டு முன்பு நான் சொன்னதை இன்று நான் செய்து முடிப்பேன்" என்றார்.
31 அப்பொழுது பத்சேபா முகம் தரையில்படத் தாழ்ந்து அரசரை வணங்கி, "என் தலைவராகிய தாவீது அரசர் நீடூழி வாழ்க!" என்றார்.
32 தாவீது அரசர், "குரு சாதோக்கையும் இறைவாக்கினர் நாத்தானையும் யோயாதாவின் மகன் பெனாயாவையும் என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் அரசர்முன் வந்தார்கள்.
33 அரசர் அவர்களிடம், "உங்கள் தலைவனுடைய அலுவலரும் நீங்களும் சேர்ந்து என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின்மேல் அமர்த்திக் கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
34 அங்கே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்யட்டும். எக்காளம் முழங்க, 'சாலமோன் அரசர் வாழ்க!' என்று வாழ்த்துங்கள்.
35 அதன்பின் அவனை இங்கே அழைத்து வாருங்கள். அவன் வந்து என் அரியணைமீது அமர்ந்து, எனக்குப் பதிலாக அரசாள்வான். இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் அவனைத் தலைவனாக நியமிக்கிறேன்" என்றார்.
36 யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக "அப்படியே ஆகுக! என் தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக!
37 ஆண்டவர் என் தலைவரான அரசருடன் இருந்தது போல் சாலமோனுடனும் இருப்பாராக! அவரது அரியணையை என் தலைவர் தாவீது அரசர் அரியணையைவிட மாண்பு மிக்கதாக ஆக்கியருள்வாராக!" என்றான்.
38 அவ்வாறே குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோர் அங்கிருந்து போய், சாலமோனைத் தாவீது அரசரின் கோவேறு கழுதையின் மேல் அமர்த்தி, கீகோனுக்கு அழைத்துச் சென்றனர்.
39 அங்கே குரு சாதோக்கு கூடாரத்திலிருந்து எண்ணெய்க் கொம்பை எடுத்து வந்து, சாலமோனை திருப்பொழிவு செய்தார். அப்பொழுது எக்காளம் முழங்க எல்லா மக்களும், "சாலமோன் அரசர் வாழ்க!" என்றனர்.
40 எல்லா மக்களும் தாரை ஊதிக் கொண்டு மிகுந்த அக்களிப்போடும் ஆர்ப்பரிப்போடும் அவர் பின்னால் சென்றனர். அவர்கள் எழுப்பிய பேரொலியால் நிலமே நடுங்கிற்று.
41 அதோனியாவும் அவனோடிருந்த அனைத்து விருந்தினரும் உண்டு முடித்த வேளையில், இப்பேரொலி அவர்கள் காதுக்கு எட்டியது. எக்காள ஒலி காதில் விழவே யோவாபு, "நகரில் ஏன் இத்துணை ஆரவாரம்?" என்று வினவினார்.
42 அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது குரு அபியத்தாரின் மகன் யோனத்தான் அங்கு வந்தான். அதோனியா "உள்ளே வா; நீ திறமை மிக்கவன்; நல்ல செய்தியே கொண்டு வருவாய்" என்றான்.
43 யோனத்தான் அதோனியாவிடம் கூறியது: "அதுதான் இல்லை; நம் தலைவராகிய அரசர் தாவீது சாலமோனை அரசராக்கி விட்டார்.
44 குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோரை அவனோடு அனுப்பி விட்டார். அவர்கள் அவனை அரசரின் கோவேறு கழுதைமேல் அமர்த்தினர்.
45 குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனைக் கீகோனில் அரசனாகத் திருப்பொழிவு செய்துவிட்டனர். பிறகு அங்கிருந்து அக்களிப்போடு அவனை அழைத்து வந்துள்ளனர். எனவேதான் நகரில் இத்துணை ஆரவாரம்!
46 நீங்கள் கேட்டது அந்த இரைச்சல்தான். சாலமோனும் இப்பொழுது அரச அரியணைமீது அமர்ந்துள்ளான்.
47 மேலும், அரசரின் அலுவலர் நம் தலைவராகிய தாவீது அரசரிடம் வந்து, 'உம் கடவுள் உமது பெயரைவிடச் சாலமோன் பெயரைச் சிறப்புடையதாய் ஆக்குவாராக! உமது அரியணையை விட அவரது அரியணையை மாண்புடையதாய் ஆக்குவாராக!' என்று வாழ்த்தினர். அரசரும் தம் படுக்கையில் வணங்கித் தொழுது,
48 "இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி! அவர் இன்று என் அரியணைமீது ஒருவனை அமர்த்தியுள்ளார்! அதை நான் கண்குளிரச் கண்டேன்!" என்றார்.
49 உடனே அதோனியாவின் விருந்தினர் அனைவரும் அச்சமுற்று எழுந்து மூலைக்கு ஒருவராக ஓட்டம் பிடித்தனர்.
50 அதோனியா சாலமோனுக்கு அஞ்சி ஓடி, பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டான்.
51 அப்பொழுது சாலமோனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது: "அதோனியா, சாலமோன் அரசருக்கு அஞ்சிப் பலி பீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டிருக்கிறான். மேலும் அவன், அரசர் சாலமோன், 'என் அடியானாகிய உன்னை வாளால் கொல்லமாட்டேன்' என்று இன்றே ஆணையிட்டுக் கூறட்டும் என்று வேண்டுகிறான்."
52 சாலமோனும், "அவன் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டால், அவன் தலைமுடி ஒன்றுகூடத் தரையில் விழாது. ஆனால் அவனிடம் வஞ்சனை எதுவும் காணப்பட்டால் அவன் சாக வேண்டும்" என்று பதிலளித்தார்.
53 எனவே சாலமோன் அரசர் ஆளனுப்பிப் பலிபீடத்திலிருந்து அவனை இழுத்துக்கொண்டு வரச் செய்தார். அவனும் வந்து சாலமோன் அரசர்முன் வீழ்ந்து வணங்கினான். சாலமோன் அவனிடம் "நீ உன் வீட்டுக்குப் போகலாம்" என்றார்.
- குறிப்புகள்
[1] 1:5 = 2 சாமு 3:4.
[2] 1:11 = 2 சாமு 12:24.
[3] 1:25 'படைத்தலைவர்கள்' என்பது எபிரேய பாடம்.
அதிகாரம் 2
தொகுதாவீது சாலமோனுக்குத் தந்த இறுதி அறிவுரை
தொகு
1 தாவீதின் இறுதி நாள் நெருங்கினபோது அவர் தம் மகன் சாலமோனுக்குப் பணித்துக் கூறியது இதுவே:
2 "அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண்டவனாயிரு.
3 உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்படி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி. இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய்.
4 ஏனெனில் ஆண்டவர் என்னை நோக்கி, 'உன் மைந்தர்கள் தங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் என் முன்னிலையில் உண்மையுடன் நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கேற்ற ஒருவன் அவர்களுள் இல்லாமல் போவதில்லை' என்று எனக்குக் கொடுத்த வாக்கு அப்போதுதான் நிலைத்திருக்கும்."
5 இஸ்ரயேலின் இரு படைத்தலைவர்களான நேரின் மகன் அப்னேர், எத்தேரின் மகன் அமாசா ஆகியோருக்கு செரூயாவின் மகன் யோவாபு செய்ததும் அதனால் எனக்கு நேர்ந்ததும் உனக்குத் தெரியும். அவன், போர்க்காலத்தில் சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்கச் சமாதான காலத்தில் அவர்களைக் கொன்றான். அவ்வாறு செய்து, அவன் தன் அரைக்கச்சையிலும் தன் மிதியடிகளிலும் இரத்தக்கறை படியச் செய்தான். [1]
6 ஆகையால் அவனுடன் விவேகமாய் நடந்துகொள். அவன் நரைமுடியனாய் மன அமைதியுடன் பாதாளத்தில் இறங்க விட்டுவிடாதே.
7 கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் மைந்தர்களுக்கோ இரக்கம் காட்டு. உன் பந்தியில் உண்பவர்களோடு அவர்களும் இருக்கட்டும். ஏனெனில் உன் சகோதரன் அப்சலோமுக்கு அஞ்சி நான் ஓடியபொழுது எனக்கு அவர்கள் துணைநின்றார்கள். இன்னும் கேள். [2]
8 பகுரிம் ஊரைச் சார்ந்த பென்யமினனாகிய கேராவின் மகன் சிமயி உன்னோடு இருக்கிறான் அல்லவா? அவன், மகனயிமுக்கு நான் சென்றபோது, மிகவும் இழிவான முறையில் பேசி என்னைச் சபித்தான். ஆயினும் யோர்தானுக்கு அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, 'உன்னை வாளால் கொல்லமாட்டேன்' என்று ஆண்டவர்மேல் ஆணையிட்டு அவனுக்கு நான் சொன்னேன். [3]
9 எனினும் நீ அவனைக் குற்றமற்றவனென எண்ணி விடாதே. நீ விவேகமுள்ளவன். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியும். அவன் நரைமுடியனாய் இரத்தத்தில் தோய்ந்து பாதாளத்தில் இறங்கும்படி செய்."
தாவீதின் இறப்பு
தொகு
10 பின்னர் தாவீது தம் மூதாதையருடன் துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.
11 தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள். அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார். [4]
12 சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது. [5]
அதோனியா கொலை செய்யப்படல்
தொகு
13 அகித்தின் மகன் அதோனியா சாலமோனின் தாய் பத்சேபாவிடம் வந்தான். "நீ வருவதன் நோக்கம் என்ன? சமாதானமா?" என்று அவர் கேட்டார்.
14 அதற்கு அவன், "ஆம்; சமாதானமே" என்றான். பிறகு அவன், "நான் உம்மிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றான். அவரும் "சொல்" என்றார்.
15 அதற்கு அவன், "அரசுரிமை என்னுடையதே. நான் அரசனாக வேண்டும் என்று இஸ்ரயேல் மக்கள் அனைவரும் விரும்பினர். இது உமக்குத் தெரிந்ததே. ஆனால் நடந்தது வேறு. அரசுரிமை என் சகோதரனுக்குப் போய்விட்டது.
16 அது ஆண்டவரின் திருவுளம். ஆயினும் உம்மிடம் ஒன்று வேண்டிக் கொள்ள விரும்புகிறேன். அதை நீர் எனக்கு மறுக்கக்கூடாது" என்றான்.
17 அதற்கு அவர், "அது என்ன? சொல்" என, அவன், "அரசர் சாலமோன் உம் சொல்லைத் தட்டமாட்டார். சூனேமைச் சார்ந்த அபிசாகை எனக்கு மணமுடித்து வைக்கும்படி அவரிடம் சொல்லும்" என்றான். [6]
18 அதற்குப் பத்சேபா, "நல்லது; நான் உனக்காக அரசரிடம் பரிந்து பேசுகிறேன்" என்றார்.
19 பத்சேபா அதோனியாவுக்காக அரசர் சாலமோனிடம் பரிந்து பேசும்படி போனார். அப்போது அரசர் எழுந்து அவரை எதிர்கொண்டு வந்து வணங்கியபின், தம் அரியணையில் அமர்ந்து கொண்டார். அரசரின் தாய்க்கு அவரது வலப்புறத்தில் ஓர் இருக்கை போடப்பட்டது. அவரும் அதில் அமர்ந்தார்.
20 அப்போது அவர், "நான் உன்னிடம் கேட்க விரும்பும் சிறு வேண்டுகோள் ஒன்று உண்டு. அதை நீ மறுக்கக்கூடாது" என்றார். அதற்கு அரசர், "கேளுங்கள் அம்மா! நான் மறுக்கமாட்டேன்" என்றார்.
21 அப்போது அவர், "சூனேமைச் சார்ந்த அபிசாகை உன் சகோதரன் அதோனியாவுக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும்" என்றார்.
22 அரசர் சாலமோன் தம் தாய்க்கு மறுமொழியாக, "சூனேமைச் சார்ந்த அபிசாகை அதோனியாவுக்காக நீர் கேட்பானேன்? இந்த அரசையும் அவனுக்காக நீர் கேட்டிருக்கலாமே? அவன்தான் என் மூத்த சகோதரனாயிற்றே! மேலும் குரு அபியத்தாரும் செரூயாவின் மகன் யோவாபும் அவர் பக்கம் இருக்கின்றனரே!" என்று சொன்னார்.
23 பிறகு அரசர் சாலமோன் ஆண்டவர் மேல் ஆணையிட்டு "அதோனியா சொன்ன இந்த வார்த்தை அவன் உயிருக்கே கேடு விளைவிக்கும். இல்லையேல் கடவுள் எனக்குத் தகுந்த தண்டணை அளிப்பாராக!
24 எனவே என் அரசுரிமையை நிலைநிறுத்தி என் தந்தை தாவீதின் அரியணையில் என்னை அமர்த்தித் தாம் சொன்னபடி என் குடும்பத்தை அரச பரம்பரையாக்கியவரான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அதோனியா இன்றே கொல்லப்படுவான்" என்று சொன்னார்.
25 சாலமோன் அரசர் யோயாதாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார். அவனும் அதோனியாவைத் தாக்கவே, அவனும் இறந்தான்.
அபியத்தார் நாடுகடத்தப்படல்
தொகு
26 பிறகு அரசர் குரு அபியத்தாரை நோக்கி, "உம் நிலங்கள் இருக்கிற அனத்தோத்திற்குப் போய்விடும். நீர் சாகவேண்டியவர். இருப்பினும், இன்று நான் உம்மைக் கொல்ல மாட்டேன். ஏனெனில், நீர் என் தந்தை தாவீதுக்கு முன்னால் தலைவராகிய ஆண்டவரின் பேழையைத் தூக்கி வந்தீர். மேலும் என் தந்தைக்குத் துன்பம் வந்த போதெல்லாம் நீரும் அவரோடிருந்து துன்பம் அனுபவித்தீர்" என்றார். [7]
27 இவ்வாறு அபியத்தார் ஆண்டவரின் குருவாய் இராதபடி சாலமோன் அவரை விலக்கிவிட்டார். ஆண்டவர் சீலோவில் ஏலியின் வீட்டாரைப் பற்றி உரைத்த வார்த்தை இவ்வாறு நிறைவேறியது. [8]
யோவாபு கொலை செய்யப்படல்
தொகு
28 இந்தச் செய்தி யோவாபுக்கு எட்டியது. அவர் அப்சலோமின் பக்கம் சாராமல், அதோனியாவின் பக்கம் சார்ந்திருந்தவர். ஆகையால் அவர் ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப் பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டார்.
29 யோவாபு ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப்போனார் என்றும் பலிபீடத்தின் அருகே அவர் நிற்கிறார் என்றும் சாலமோன் அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சாலமோன் யோயாதாவின் மகன் பெனாயாவை அனுப்பி, "நீ போய் அவனை வெட்டி வீழ்த்து" என்றார்.
30 பெனாயா ஆண்டவரின் கூடாரத்திற்குப் போய் அவரைக் கண்டு, "வெளியே வா; இது அரச கட்டளை" என்றான். அதற்கு அவர் மறுமொழியாக, "முடியாது; நான் இங்கேயே சாவேன்" என்றார். எனவே பெனாயா அரசரிடம் திரும்பி வந்து யோவாபு தனக்குக் கூறிய மறுமொழியைத் தெரிவித்தான்.
31 அப்போது அரசர் அவனை நோக்கி, "அவன் சொன்னபடியே செய். அவனைக் கொன்று அடக்கம் செய். இவ்வாறு, யோவாபு சிந்திய குற்றமற்ற இரத்தத்தின் பழி என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் விட்டு நீங்கச் செய்.
32 இந்த இரத்தப் பழியை ஆண்டவர் அவன் தலைமேலேயே விழச் செய்வாராக! ஏனெனில், அவன் தன்னை விட நேர்மையிலும் பண்பிலும் சிறந்தவர்களான நேரின் மகனும் இஸ்ரயேலின் படைத் தலைவனுமான அப்னேர், எத்தேரின் மகனும் யூதாவின் படைத்தலைவனுமான அமாசா ஆகியோரை என் தந்தை தாவீதுக்குத் தெரியாமல் தாக்கி வாளால் கொன்றான்.
33 இந்த இரத்தப்பழி யோவாபின் தலைமேல் மட்டுமன்று; அவன் வழிமரபினர் தலை மேலும் என்றென்றும் இருப்பதாக! ஆனால் தாவீது, அவர் வழிமரபினர், அவர் வீட்டார் ஆகியோர் மீதும் அவர் அரியணை மீதும் என்றென்றும் ஆண்டவரின் சமாதானம் தங்கி இருப்பதாக!" என்றார்.
34 அவ்வாறே யோயாதாவின் மகன் பெனாயா புறப்பட்டுப் போய் யோவாபைத் தாக்கிக் கொன்றான். அவர் பாலை நிலத்திலிருந்த தம் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்.
35 அப்பொழுது அரசர் யோவாபுக்குப் பதிலாக யோயாதாவின் மகன் பெனாயாவைப் படைத்தலைவனாக நியமனம் செய்தார். மேலும் அபியத்தாருக்குப் பதிலாகச் சாதோக்கைக் குருவாக நியமித்தார்.
சிமயி கொலை செய்யப்படல்
தொகு
36 பிறகு அரசர் சிமயியை வரவழைத்து அவனை நோக்கி, நீ எருசலேமில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு வேறெங்கும் செல்லாமல் அங்கேயே குடியிரு.
37 என்று நீ வெளியேறித் கிதரோன் நீரோடையைக் கடப்பாயோ, அன்றே நீ கொல்லப்படுவது உறுதி. இதைத் திண்ணமாய் அறிந்துகொள். உன் இரத்தத்தின் பழி உன் தலைமேலேயே விழும்" என்றார்.
38 சிமயி அரசரைப் பார்த்து, "நல்லது, அரசே! என் தலைவராகிய நீர் சொன்னபடியே அடியேன் செய்வேன்" என்றான்.
39 அவ்வாறே சிமயி நெடுநாள் எருசலேமில் குடியிருந்தான். மூன்று ஆண்டுகளுக்குப் பின் சிமயியின் அடிமைகளில் இருவர் காத்தின் மன்னனாகிய மாக்கா மகன் ஆக்கிசிடம் ஓடிவிட்டனர். அந்த அடிமைகள் காத்தில் இருப்பதாகச் சிமயி கேள்விப்பட்டான்.
40 உடனே சிமயி தன் கழுதைக்குச் சேணம் பூட்டித் தன் அடிமைகளைத் தேடப் புறப்பட்டான். அவன் காத்திலிருந்து ஆக்கிசிடம் சென்று, தன் அடிமைகளைக் கண்டு அங்கிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தான்.
41 சிமயி எருசலேமிலிருந்து காத்துக்குப் போய்த் திரும்பி வந்தான் என்று சாலமோனுக்கு அறிவிக்கப்பட்டது.
42 அப்போது அரசர் சிமயியை வரவழைத்து "என்று நீ வெளியேறி வேறெங்காவது போவாயோ, அன்றே நீ கொல்லப்படுவது உறுதி. இதைக் திண்ணமாய் அறிந்து கொள் என்று நான் உனக்கு முன்பே எச்சரிக்கை செய்து, உன்னையும் ஆண்டவர்மேல் ஆணையிடச் செய்யவில்லையா? நீயும் அதற்கு, 'நல்லது, நீர் சொன்னபடி கேட்கிறேன்' என்று பதில் கூறவில்லையா?
43 அப்படியிருக்க ஆண்டவர்மேல் நீ இட்ட ஆணையையும் உனக்கு நான் இட்ட கட்டளையையும் மீறியது ஏன்?" என்று கேட்டார்.
44 மேலும் அரசர் சிமயியைப் பார்த்து, "என் தந்தை தாவீதுக்கு நீ இழைத்த தீங்குகள் அனைத்தையும் பற்றி உன் நெஞ்சே அறியும். ஆகையால் நீ செய்த தீங்கு உன்னையே அழிக்கும்படி ஆண்டவர் செய்வார்.
45 ஆனால் அரசராகிய சாலமோன் ஆசி பெற்றவராய் இருப்பார். தாவீதின் அரியணையும் ஆண்டவர் முன்னிலையில் என்றென்றும் நிலைத்து நிற்கும்" என்று சொன்னார்.
46 பின்னர் யோயாதாவின் மகன் பெனாயாவுக்கு அரசர் கட்டளையிட, அவன் சென்று சிமயியைத் தாக்கவே, அவனும் இறந்தான். இவ்வாறு சாலமோனின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது.
- குறிப்புகள்
[1] 2:5 = 2 சாமு 3:27; 20:10.
[2] 2:7 = 2 சாமு 17:27-29.
[3] 2:8 = 2 சாமு 16:5-13; 19:16-23.
[4] 2:11 = 2 சாமு 5:4-5; 1 குறி 3:4.
[5] 2:12 = 1 குறி 29:23.
[6] 2:17 = 1 அர 1:3-4.
[7] 2:26 = 1 சாமு 22:23; 2 சாமு 15:24.
[8] 2:27 = 1 சாமு 2:27-36.
(தொடர்ச்சி): அரசர்கள் - முதல் நூல்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை