திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஆமோஸ்/அதிகாரங்கள் 7 முதல் 9 வரை

"கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன். அவர், 'ஆமோஸ்! என்ன காண்கிறாய்?' என்று கேட்டார்; நான், 'கனிந்த பழங்கள் உள்ள கூடை' என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: 'என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது...'" - ஆமோஸ் 8:1-2

ஆமோஸ் (The Book of Amos) தொகு

அதிகாரங்கள் 7 முதல் 9 வரை

அதிகாரம் 7 தொகு

வெட்டுக்கிளிகளின் காட்சி தொகு


1 தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே:
"அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின்,
இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில்,
அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
2 நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை
தின்று தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் நான்


'இறைவனாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்;
உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்;
யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகிறான்?
அவன் மிகச் சிறியவன் அல்லவா!' என்றேன்.


3 ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்;
'இது நிகழாது,' என்றார் தலைவராகிய ஆண்டவர்."

நெருப்பின் காட்சி தொகு


4 தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே:
"தலைவராகிய ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பாக நெருப்பு மழையை வருவித்தார்;
அந்த நெருப்பு ஆழ்கடலை வற்றச் செய்து நிலத்தையும் விழுங்கிக் கொண்டிருந்தது.


5 நான், 'தலைவராகிய ஆண்டவரே, அதை நிறுத்தியருளும்;
உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்;
யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகின்றான்?
அவன் மிகச் சிறியவன் அல்லவா!' என்றேன்.


6 ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்;
'இதுவும் நிகழாது,' என்றார் தலைவராகிய ஆண்டவர்."

தூக்கு நூல் குண்டின் காட்சி தொகு


7 ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே:
"தூக்கு நூல் குண்டின் துணைகொண்டு கட்டப்பட்ட
ஒரு மதில் அருகில் அவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் கையில் ஒரு தூக்கு நூல் குண்டு இருந்தது.


8 'ஆமோஸ்! நீ காண்பதென்ன?' என்று
ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
நான், 'அது தூக்கு நூல் குண்டு' என்றேன்.
தலைவர் தொடர்ந்து சொன்னார்:
'தூக்கு நூல் குண்டை என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில்
தொங்கவிடப் போகிறேன்;
இனி நான் அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்லப்போவதில்லை'.


9 ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் பழாக்கப்படும்;
இஸ்ராயேலின் புனித இடங்கள் பாலைவெளி ஆக்கப்படும்;
எரொபவாம் வீட்டாருக்கு எதிராக நான் வாளெடுத்து வருவேன்."

ஆமோசும் அமட்சியாவும் தொகு


10 பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன்
இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்:
"இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான்.
11 அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை.
ஏனெனில், 'எரொபவாம் வாளால் மடிவான்;
அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்'
என்று ஆமோஸ் சொல்லுகிறான்."
12 பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து,
"காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு;
யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு;
அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்.
13 பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே;
ஏனெனில், இது அரசின் புனித இடம்,
அரசுக்குரிய இல்லம்" என்று சொன்னான்.


14 ஆமோஸ் அதற்கு மறுமொழியாக
அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்:
"நான் இறைவாக்கினன் இல்லை;
இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை;
நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன்.
15 ஆடுகள் ஓட்டிக் கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து,
'என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று,
இறைவாக்கு உரைத்திடு' என்று அனுப்பினார்.


16 எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்:
'இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே;
ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதே' என்று நீ சொல்கிறாய்!


17 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
"உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்;
உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்;
உன் நிலபுலம் பங்கு போட்டுக் கொள்ளப்படும்,
நீயோ புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்;
இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக் கொண்டு போகப்படும்."


அதிகாரம் 8 தொகு

பழக்கூடையின் காட்சி தொகு


1 தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே:
"கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன்.
2 அவர், 'ஆமோஸ்! என்ன காண்கிறாய்?' என்று கேட்டார்;
நான், 'கனிந்த பழங்கள் உள்ள கூடை' என்றேன்.


ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்:
'என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது;
இனி அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.
3 அந்நாளில் கோவில் பாடல்கள் புலம்பலாய் மாறும்;
கணக்கற்ற பிணங்கள் உரிய மரியாதையின்றித் தூக்கியெறியப்படும்,
எங்கும் ஒரே அமைதி!' என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

இஸ்ரயேலின் வீழ்ச்சி தொகு


4 "வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே,
இதைக் கேளுங்கள்:


5 'நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்?
கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்?
மரக்காலைச் [1] சிறியதாக்கி, எடைக்கல்லைக் [2] கனமாக்கி,
கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்;


6 வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்;
கோதுமைப் பதர்களையும் விற்கலாம்'
என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?


7 ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்;
"அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும்
நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.


8 இதனை முன்னிட்டு நாடு நடுநடுங்காதா?
அதில் வாழ்வோர் அனைவரும் புலம்பமாட்டாரா?
நாடு முழுவதும் நைல்நதியின் வெள்ளமெனச் சுழற்றியெறியப்படாதா?
எகிப்து நாட்டின் நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்காதா?


9 தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்:
'அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து
பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன்.


10 உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும்,
பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்;
எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும்,
அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன்,
ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவதுபோல
நீங்களும் புலம்புமாறு செய்வேன்;
அதன் முடிவு கசப்புமிக்க நாளாய் இருக்கும்."


11 தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்:
"இதோ! நாள்கள் வரப்போகின்றன!
அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்;
அது உணவு கிடைக்காத பஞ்சமோ,
நீரில்லாத வறட்சியோ அன்று;
ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.


12 ஒரு கடல் முதல் மறு கடல்வரை,
வடதிசை முதல் கீழ்த்திசைவரை தேடிச் சென்று
அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள்.
ஆனால், அதைக் கண்டடையமாட்டார்கள்.


13 அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும் இளைஞர்களும்
நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள்.
14 சமாரியா நாட்டு அஸ்மா தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டு,
'தாண் நாடே! வாழும் உன் கடவுள்மேல் ஆணை!' எனவும்
'பெயேர்செபாவில் வாழும் காவலர்மேல் ஆணை!' எனவும்
சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்; மீண்டும் எழவே மாட்டார்கள்.


குறிப்புகள்

[1] 8:5 - "ஏப்பா" என்பது எபிரேய பாடம்.
[2] 8:5 - "செக்கேல்" என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 9 தொகு

ஆண்டவரின் தீர்ப்புகள் தொகு


1 பலிபீடத்தருகில் ஆண்டவர் நிற்பதைக் கண்டேன்.
அவர் சொன்னார்:
தூணின் முகட்டை இடித்துப் போடு;
மேல்தளம் ஆட்டம் கொடுக்கட்டும்;
மக்கள் அனைவருடைய தலையிலும் அதை உடைத்துத் தள்ளு;
அவர்களுள் எஞ்சியிருப்போரை நான் வாளால் கொன்றுபோடுவேன்;
அவர்களில் எவரும் ஓடிப்போக மாட்டார்;
ஒருவர் கூட தப்பிப் பிழைக்கவும் மாட்டார்.


2 பாதாளம் வரையில் அவர்கள் இறங்கினாலும்
அங்கிருந்தும் என் கை அவர்களை இழுத்து வரும்;
வான் மட்டும் அவர்கள் ஏறிப்போனாலும்,
அங்கிருந்தும் நான் அவர்களைப் பிடித்து வருவேன்;


3 கர்மேல் மலையுச்சியில் ஓடி ஒளிந்துகொண்டாலும்,
அவர்களைத் தேடிப் பிடித்து அங்கிருந்து கொண்டு வருவேன்;
என் கண்களுக்குத் தப்பி ஆழ்கடலில் மறைந்தாலும்,
அங்கு அவர்களைக் கடிக்கும்படி பாம்புக்குக் கட்டளையிடுவேன்.


4 தங்கள் பகைவர்முன் அடிமைகளாய்க் கொண்டு போகப்பட்டாலும்,
அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்கு ஆணையிடுவேன்;
அவர்களுக்கு நன்மை செய்யாது தீங்கு செய்வதிலேயே நான் கண்ணாயிருப்பேன்.


5 படைகளின் கடவுளாகிய ஆண்டவர் தொட
மண்ணுலகம் பாகாய் உருகுகின்றது;
அதில் வாழ்வோர் அனைவரும் புலம்புகின்றனர்;
நாடு முழுவதும் நைல்நதியின் வெள்ளமென சுழற்றியெறியப்படுகின்றது;
எகிப்து நாட்டின் நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்குகின்றது.


6 அவர் வானத்தில் தம் மேலறைகளைக் கட்டுகின்றார்;
வானின் வளைவை நிலத்தில் அடித்தளமிட்டு நாட்டுகின்றார்;
கடல்களின் நீரை முகந்தெடுத்து நிலத்தின்மேல் பொழிகின்றார்;
'ஆண்டவர்' என்பது அவரது பெயராம்.

இஸ்ரயேலுக்குத் தனிச் சலுகை இல்லை தொகு


7 "இஸ்ரயேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரைப் போன்றவர்கள்தானே?
இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டினின்றும்,
பெலிஸ்தியரைக் கப்தோரிலிருந்தும்,
சிரியரைக் கீரிலிருந்தும் நான் அழைத்து வரவில்லையா?"
என்கிறார் ஆண்டவர்.


8 தலைவராகிய ஆண்டவரின் கண்கள்
பாவம் செய்யும் அரசை உற்றுப் பார்க்கின்றன;
"மண்ணுலகில் இராதபடி அதை நான் அழித்து விடுவேன்.
ஆயினும் யாக்கோபின் வீட்டாரை நான் முற்றிலும் அழிக்கமாட்டேன்"
என்கிறார் ஆண்டவர்.


9 நான் ஆணை பிறப்பிப்பேன்;
எல்லா மக்களினங்கள் நடுவிலும் இஸ்ரயேல் வீட்டாரைச்
சல்லடையில் தானியத்தைச் சலிப்பதுபோலச் சலிக்கப் போகின்றேன்;
ஆயினும் கோதுமை மணி ஒன்றும் தரையில் விழாது.


10 'தீமை எங்களை அணுகாது, எங்கள்மேல் வராது' என்று
என் மக்களுள் எந்தப் பாவிகள் கூறுகின்றார்களோ,
அவர்கள் அனைவரும் வாளால் மடிவார்கள்.

இஸ்ரயேலின் மறுவாழ்வு தொகு


11 "அந்நாள்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை
மீண்டும் உயர்த்துவேன்.
அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்துச்
சிதைந்தவற்றைச் சீர்படுத்திப் பண்டை நாளில் இருந்ததுபோல்
மீண்டும் கட்டியெழுப்புவேன்.


12 அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும்
எனது பெயரைத் தாங்கியிருக்கும் பிற இனத்தார் அனைவரையும்
அவர்கள் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,"
என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர். [*]


13 "இதோ! நாள்கள் வரப்போகின்றன;
அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும்,
கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்;
மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்;
குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்," என்கிறார் ஆண்டவர்.


14 "என் மக்களாகிய இஸ்ரயேலை
முன்னைய நன்னிலைக்குக் கொண்டுவருவேன்;
அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டி
அவற்றில் குடியேறுவார்கள்;
திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள்.
பழத்தோட்டங்கள் அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள்.


15 அவர்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்;
நான் அவர்களுக்கு அளித்திருக்கும் நாட்டிலிருந்து
இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்படமாட்டார்கள்,"
என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.


குறிப்பு

[*] 9:11-12 = திப 15:16-18.


(ஆமோஸ் நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): ஒபதியா:அதிகாரம் 1