திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை
எசாயா (The Book of Isaiah)
தொகுஅதிகாரங்கள் 11 முதல் 12 வரை
அதிகாரம் 11
தொகுநீதியுள்ள அரசரின் வருகை
தொகு
1 ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து
தளிர் ஒன்று துளிர்விடும்;
அதன் வேர்களிலிருந்து
கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். [1]
2 ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்;
ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன்,
ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு -
இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
3 அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.
கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்;
காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்;
4 நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்;
நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்;
வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்;
உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். [2]
5 நேர்மை அவருக்கு அரைக்கச்சை;
உண்மை அவருக்கு இடைக்கச்சை. [3]
6 அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்;
அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக் கொள்ளும்.
கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்;
பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும்.
7 பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்;
அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்;
சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்;
8 பால் குடிக்கும் குழந்தை
விரியன் பாம்பின் வளையில் விளையாடும்;
பால்குடி மறந்த பிள்ளை
கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்.
9 என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை;
கேடு விளைப்பார் யாருமில்லை;
ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல,
மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய
அறிவால் நிறைந்திருக்கும். [4]
நாடு கடத்தப்பட்டோர் திரும்பிவரல்
தொகு
10 அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும்
ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்;
அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்தாக இருக்கும்.
11 அந்நாளில், என் தலைவர் மீண்டும் தம் கையை நீட்டி,
அசீரியா, எகிப்து, பத்ரோசு, பாரசீகம், எத்தியோப்பியா,
ஏலாம், சினார், ஆமாத்து முதலிய நாடுகளிலும்,
கடல் தீவுகளிலும் வாழும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரைத்
தம் நாட்டிற்குத் திரும்பக் கொணர்வார்.
12 பிற இனத்தாருக்கென ஒரு கொடியை ஏற்றி வைப்பார்;
இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரை ஒன்று திரட்டுவார்;
யூதாவில் சிதறுண்டு போனவர்களை
உலகின் நாற்புறத்திலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார்.
13 எப்ராயிமரின் பொறாமை அவர்களை விட்டு நீங்கும்,
யூதாவைப் பகைத்தோர் வெட்டி வீழ்த்தப்படுவர்.
எப்ராயிமர் யூதாமேல் பொறாமை கொள்வதில்லை;
யூதாவும் எப்ராயிமரைப் பகைப்பதில்லை.
14 அவர்கள் இருவரும் சேர்ந்து
மேற்கிலுள்ள பெலிஸ்தியரின் தோள்மேல் பாய்வார்கள்;
கீழ்த்திசை நாட்டினரைக் கொள்ளையடிப்பார்கள்;
ஏதோமையும் மோவாபையும் கைப்பற்றிக் கொள்வார்கள்;
அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிவார்கள்.
15 எகிப்தின் கடல் முகத்தை ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்;
பேராற்றின்மேல் கையசைத்து அனல்காற்று வீசச்செய்வார்;
கால் நனையாமல் மக்கள் கடந்து வரும்படி
அந்த ஆற்றை ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார். [5]
16 இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வந்த நாளில்
பெருவழி தோன்றியது போல,
ஆண்டவரின் மக்களுள் எஞ்சியோர் வருவதற்கு
அசீரியாவிலிருந்து பெருவழி ஒன்று தோன்றும்.
- குறிப்புகள்
[1] 11:1 = திவெ 5:5; 22:16.
[2] 11:4 = 1 தெச 2:8.
[3] 11:5 = எபே 6:14; 11:6-9; எசா 65:25.
[4] 11:9 = அப 2:14; 11:10; உரோ 15:12.
[5] 11:15 = திவெ 16:12.
அதிகாரம் 12
தொகுநன்றிப் பா
தொகு
1 அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்:
"ஆண்டவரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்;
நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்;
இப்பொழுதோ, உம் சினம் தணிந்து விட்டது;
நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.
2 இறைவன் என் மீட்பர்,
அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்,
நான் அஞ்சமாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல்,
அவரையே பாடுவேன்,
என் மீட்பும் அவரே. [*]
3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து
நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
4 அந்நாளில் நீங்கள் சொல்வதாவது:
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.
5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
- குறிப்பு
[*] 12:2 = விப 15:2; திபா 118:14.
(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை