திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை
எசாயா (The Book of Isaiah)
தொகுஅதிகாரங்கள் 3 முதல் 4 வரை
அதிகாரம் 3
தொகுஎருசலேமில் குழப்பம்
தொகு
1 படைகளின் ஆண்டவரான நம் தலைவர்,
எருசலேமின் ஊன்றுகோலை ஒடித்து விடுவார்;
யூதாவின் நலத்தை நலியச் செய்வார்;
ஊன்றுகோலாகிய உணவையும்
நலமாகிய நீரையும் அகற்றிவிடுவார்.
2 வலிமைமிகு வீரன்,
போர்க்களம் செல்லும் போர்வீரன்,
தீர்ப்பு வழங்கும் நீதிபதி,
இறைவாக்கு உரைக்கும் இறைவாக்கினன்,
குறி சொல்லும் நிமித்திகன்,
அறிவு முதிர்ந்த முதியோன்
இவர்கள் அனைவரையும் அழித்து விடுவார்.
3 ஐம்பதின்மர் தலைவன்,
உயர்பதவி வகிக்கும் சான்றோன்,
அறிவுரை வழங்குபவன்,
திறன் வாய்ந்த மந்திரவாதி,
மாயவித்தை புரிவதில் நிபுணன்
ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார்.
4 சிறுவர்களை மக்கள் தலைவர்களாய் மாற்றுவார்;
பச்சிளங் குழந்தைகள் அவர்கள்மேல் அரசாட்சி செலுத்துவார்கள்.
5 மக்கள் ஒருவரை ஒருவர் ஒடுக்குவர்;
எல்லோரும் தமக்கு அடுத்திருப்பவரைத் துன்புறுத்துவர்;
இளைஞர் முதியோரை அவமதிப்பர்;
கீழ்மக்கள் மாண்புமிக்கவரைப் புறக்கணிப்பர்.
6 தன் தந்தையின் இல்லத்தில் வாழும் தமையனின்
கையைத் தொட்டு ஒருவன்,
"நீ ஒருவனாவது ஆடை உடுத்தியுள்ளாய்;
நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக;
பாழடைந்து கிடக்கும் இந்த நாடு
உன் கைக்குள் வருவதாக" என்பான்.
7 அந்நாளில் அவன், "நான் காயத்திற்குக் கட்டுப்போடுகிறவன் அல்ல;
இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ,
உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை;
மக்களின் தலைவனாய் என்னை நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்"
எனச் சொல்லி மறுத்துவிடுவான்.
8 எருசலேம் நிலைகுலைந்து தடுமாற்றம் அடைந்து விட்டது;
யூதா வீழ்ச்சி அடைந்து விட்டது;
ஏனெனில், அவர்களுடைய சொல்லும், செயலும்
ஆண்டவரின் திருவுளத்திற்கு எதிராய் உள்ளன;
மாட்சிமைமிகு அவர்தம் கண்களுக்குச் சினமூட்டின.
9 அவர்களின் ஓரவஞ்சனை அவர்களுக்கு எதிராய்ச்
சான்று கூறுகின்றது;
அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல்
சோதோம் மக்களைப்போல் பறைசாற்றுகிறார்கள்.
ஐயோ! அவர்கள் உயிருக்குக் கேடு;
ஏனெனில், தங்களுக்குத் தாங்களே
தீமையை வருவித்துக்கொண்டார்கள்.
10 ஆனால், மாசற்றோர் நலம் பெறுவர் என நவிலுங்கள்;
அவர் தம் நற்செயல்களின் கனியை உண்பது உறுதி.
11 தீச்செயல் புரிவோர்க்கு ஐயோ கேடு!
தீமை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்;
அவர்களின் கைகள் செய்த தீவினைகள் அனைத்தும்
அவர்கள் மேலேயே விழும்.
12 என் மக்களே, சிறுவர் உங்களை ஒடுக்குகின்றார்கள்;
பெண்கள் உங்கள்மேல் ஆட்சி செலுத்துகின்றார்கள்;
என் மக்களே, உங்கள் தலைவர்கள் உங்களைத்
தவறாக வழி நடத்துகின்றார்கள்;
உங்களை ஆள்பவர்கள் நீங்கள் நடக்கவேண்டிய
நெறிமுறைகளைக் குழப்புகின்றார்கள்.
13 ஆண்டவர் வழக்காடுவதற்கு ஆயத்தமாகிறார்;
மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்க எழுந்து நிற்கிறார்.
14 தம் மக்களின் முதியோரையும் தலைவர்களையும்
தம் நீதித் தீர்ப்புமுன் நிறுத்துகிறார்;
இந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தின்றழித்தவர்கள் நீங்கள்;
எளியவர்களைக் கொள்ளையிட்ட பொருள்கள்
உங்கள் இல்லங்களில் நிறைந்துள்ளன;
15 என் மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன?
எளியோரின் முகத்தை உருக்குலைப்பதன் பொருள் என்ன?"
என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
எருசலேம் பெண்களுக்கு எச்சரிக்கை
தொகு
16 மேலும் ஆண்டவர் கூறியது இதுவே:
"சீயோன் மகளிர் செருக்குக் கொண்டுள்ளார்கள்;
தங்கள் கழுத்தை வளைக்காது நிமிர்ந்து நடக்கின்றார்கள்;
தம் கண்களால் காந்தக் கணை தொடுக்கின்றார்கள்;
தங்கள் கால்களிலுள்ள சிலம்பு ஒலிக்கும்படி
ஒய்யார நடை நடந்து உலவித் திரிகிறார்கள்.
17 ஆதலால், ஆண்டவர் சீயோன் மகளிரின்
உச்சந்தலைகளில் புண்ணை வருவிப்பார்;
வழுக்கைத் தலையர்களாய் அவர்களை ஆக்குவார்;
ஆண்டவர் அவர்களின் மானத்தைக் குலைப்பார்.
18 அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள்,
சுட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள்,
19 ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள்,
20 கைவளையல்கள், தலை அணிகலன்கள்,
கூந்தல்கட்டும் பட்டு நாடாக்கள்,
அரைக்கச்சைகள், நறுமணச் சிமிழ்கள்,
21 காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள்,
22 வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள்,
போர்வைகள், கைப்பைகள்,
23 கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள்,
குல்லாக்கள், முக்காடுகள்
ஆகியவற்றை ஆண்டவர் களைந்துவிடுவார்.
24 நறுமணத்திற்குப் பதிலாக அவர்கள்மேல் துர்நாற்றம் வீசும்;
கச்சைக்குப் பதிலாகக் கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள்;
வாரிமுடித்த கூந்தலுக்குப் பதிலாக அவர்கள்
வழுக்கைத் தலை கொண்டிருப்பார்கள்;
ஆடம்பர உடைகளுக்குப் பதிலாக
அவர்கள் சாக்குடை உடுத்துவார்கள்.
அழகிய உடல்கொண்ட அவர்கள்
மானக்கேடு அடைவார்கள்.
25 உங்கள் ஆண்கள் வாளுக்கு இரையாவார்கள்;
வலிமை மிக்க உங்கள் வீரர்கள் போரில் மடிவார்கள்.
26 சீயோன் வாயில்கள் புலம்பி அழும்;
அவள் எல்லாம் இழந்தவளாய்த் தரையில் உட்காருவாள்.
அதிகாரம் 4
தொகு
1 அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு பெண்கள் பிடித்துக்கொண்டு,
"நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்டு வாழ்வோம்;
எங்கள் சொந்த ஆடைகளை உடுத்திக் கொள்வோம்;
உமது பெயரை மட்டும் எங்களுக்கு வழங்கி
எங்கள் இழிவை நீக்குவீராக" என்பார்கள்.
எருசலேமின் மறுவாழ்வு
தொகு
2 அந்நாளில் ஆண்டவரால் துளிர்க்கும் தளிர்,
அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்;
நாட்டில் விளையும் நற்கனிவகைகள்,
இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின்
பெருமையும் மேன்மையுமாய் அமையும்.
3 அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும்,
எருசலேமில் தப்பி வாழ்வோரும்,
'புனிதர்' எனப் பெயர் பெறுவர்;
உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில்
பெயர் எழுதப்பட்டோரும் 'புனிதர்' எனப்படுவர்.
4 என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக்
கழுவித் தூய்மைப்படுத்துவார்;
நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும்
நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும்
எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி
அதனைத் தூய்மைப்படுத்துவார்.
5 சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும்,
அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும்,
மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்;
புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும்
நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்;
ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல்
ஒரு விதான மண்டபம் இருக்கும்.
6 அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும்,
புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும்
அரணாகவும் அமையும்.
- குறிப்பு
[*] 4:5 = விப 13:21; 24:16.
(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை