திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 33 முதல் 34 வரை
எண்ணிக்கை
தொகுஅதிகாரங்கள் 33 முதல் 34 வரை
அதிகாரம் 33
தொகுவிடுதலைப் பயணத்தின் தொகுப்பு
தொகு
1 மோசே, ஆரோன் ஆகியோர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டுப் படைத்திரளாக வெளியேறிச் சென்றபோது அவர்கள் பயணம் செய்த பகுதிகள் இவையே:
2 அவர்கள் புறப்பட்ட இடங்களை மோசே ஆண்டவர் கட்டளைப்படி படிப்படியாக எழுதி வைத்தார்; அவர்கள் படிப்படியாகத் தங்கிப் புறப்பட்ட இடங்கள் இவையே:
3 முதல் மாதம் பதினைந்தாம் நாள் அவர்கள் இராம்சேசிலிருந்து புறப்பட்டனர்; பாஸ்காவின் மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் எகிப்தியர் அனைவரின் பார்வையிலும் வெற்றிக்கை ஓங்கியவராய் வெளியேறினர்.
4 ஆண்டவர் அவர்களுக்குச் சாகடித்த தங்கள் எல்லாத் தலைப்பேறுகளையும் அவர்கள் புதைத்துக் கொண்டிருந்தபோது இது நடந்தது; அவர்கள் தெய்வங்கள் மேலும் ஆண்டவர் நீதித் தீர்ப்பு வழங்கினார்.
5 இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து புறப்பட்டுச் சுக்கோத்தில் பாளையமிறங்கினர்.
6 அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டு பாலை நிலத்தின் ஓரத்திலுள்ள ஏத்தாமில் பாளையமிறங்கினர்.
7 பின் அவர்கள் ஏத்தாமிலிருந்து பயணமாகிப் பாகால் செபோனுக்குக் கிழக்கே பிசுகிரோத்துக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன் பாளையமிறங்கினர்.
8 அகிரோத்தின் முன்னிருந்து கிளம்பி அவர்கள் கடல் நடுவே பாலைநிலத்துக்குள் கடந்து சென்றனர்; அவர்கள் ஏத்தாம் பாலை நிலத்தில் மூன்றுநாள் பயணம் செய்து மாராவில் பாளையம் இறங்கினர்.
9 பின்பு மாராவிலிருந்து புறப்பட்டு அவர்கள் ஏலிமுக்கு வந்தனர். ஏலிமில் பன்னிரு நீரூற்றுகளும், எழுபது பேரீச்சை மரங்களும் இருந்தன. அவர்கள் அங்கே பாளையமிறங்கினர்.
10 அவர்கள் ஏலிமிலிருந்து பயணமாகிச் செங்கடல் அருகில் பாளையம் இறங்கினர்.
11 பின்பு செங்கடலிலிருந்து கிளம்பி அவர்கள் சீன் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.
12 அவர்கள் சீன் பாலை நிலத்திலிருந்து புறப்பட்டுத் தொப்காவில் பாளையம் இறங்கினர்.
13 அவர்கள் தொப்காவிலிருந்து பயணமாகி ஆலுசில் பாளையம் இறங்கினர்.
14 அவர்கள் ஆலுசிலிருந்து கிளம்பி இரபிதிமில் பாளையம் இறங்கினர். அங்கு மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை.
15 பின் அவர்கள் இரபிதிமிலிருந்து புறப்பட்டு, சீனாய்ப் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.
16 சீனாய்ப் பாலை நிலத்திலிருந்து பயணமாகி, அவர்கள் கிப்ரோத்து அத்தாவில் பாளையம் இறங்கினர்.
17 கிப்ரோத்து அத்தாவிலிருந்து கிளம்பி, அவர்கள் அட்சரோத்தில் பாளையம் இறங்கினர்.
18 அவர்கள் அட்சத்ரோத்திலிருந்து புறப்பட்டு, ரித்மாவில் பாளையம் இறங்கினர்.
19 பின் அவர்கள் ரித்மாவிலிருந்து பயணமாகி, ரிம்மோன் பாரேசில் பாளையம் இறங்கினர்.
20 ரிம்மோன் பாரேசிலிருந்து கிளம்பி, அவர்கள் லிப்னாவில் பாளையம் இறங்கினர்.
21 லிப்னாவிலிருந்து புறப்பட்டு, அவர்கள் இரிசாவில் பாளையம் இறங்கினர்.
22 பின்னர் இரிசாவிலிருந்து அவர்கள் பயணமாகிக் கெகேலாதாவில் பாளையம் இறங்கினர்.
23 கெகேலாதாவிலிருந்து கிளம்பி, அவர்கள் செபேர் மலையில் பாளையம் இறங்கினர்.
24 பின்பு அவர்கள் செபேர் மலையிலிருந்து புறப்பட்டு, அராதாவில் பாளையம் இறங்கினர்.
25 அராதாவிலிருந்து அவர்கள் பயணமாகி, மக்கலோத்தில் பாளையம் இறங்கினர்.
26 மக்கலோத்திலிருந்து கிளம்பி, அவர்கள் தாகாத்தில் பாளையம் இறங்கினர்.
27 அவர்கள் தாகாத்திலிருந்து புறப்பட்டு, தெராகில் பாளையம் இறங்கினர்.
28 தெராகிலிருந்து பயணமாகி, அவர்கள் மித்காவில் பாளையம் இறங்கினர்.
29 மித்காவிலிருந்து கிளம்பி, அவர்கள் அசுமோனாவில் பாளையம் இறங்கினர்.
30 பின்பு அசுமோனாவிலிருந்து புறப்பட்டு மோசரோத்தில் பாளையம் இறங்கினர்.
31 மோசரோத்திலிருந்து அவர்கள் பயணமாகிப் பெனயாக்கானில் பாளையம் இறங்கினர்.
32 பெனயாக்கானிலிருந்து கிளம்பி, அவர்கள் ஓரகித்துகாதில் பாளையம் இறங்கினர்.
33 ஓரகித்துகாதிலிருந்து புறப்பட்டு, அவர்கள் யோற்றுபாவில் பாளையம் இறங்கினர்.
34 பின்பு யோற்றுபாவிலிருந்து பயணமாகி, அப்ரோனாவில் பாளையம் இறங்கினர்.
35 அப்ரோனாவிலிருந்து கிளம்பி அவர்கள் எட்சியோன்கெபேரில் பாளையம் இறங்கினர்.
36 எட்சியோன்கெபேரிலிருந்து அவர்கள் புறப்பட்டு, காதேசு என்னும் சீன் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.
37 அவர்கள் காதேசிலிருந்து பயணமாகி, ஏதோம் நாட்டின் ஓரத்திலிருந்த ஓர் மலையில் பாளையம் இறங்கினர்.
38 பின்பு குரு ஆரோன் ஆண்டவர் கட்டளைப்படி ஓர் மலைக்கு ஏறிச் சென்றார்; அவர் அங்கேயே இறந்தார்; இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாற்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் முதலாம் நாளில் இது நடந்தது. [1]
39 ஓர் மலையில் ஆரோன் இறந்தபோது அவருக்கு வயது நூற்று இருபத்து மூன்று.
40 கானான் நாட்டிலுள்ள நெகேபில் வாழ்ந்த கானானியனான அராது மன்னன் இஸ்ரயேல் மக்கள் வருவதைக் கேள்விப்பட்டான். [2]
41 பின்னர் 'ஓர்' மலையிலிருந்து அவர்கள் புறப்பட்டு, சல்மோனாவில் பாளையம் இறங்கினர்.
42 சல்மோனாவிலிருந்து பயணமாகி, அவர்கள் பூனோனில் பாளையம் இறங்கினர்.
43 பூனோனிலிருந்து கிளம்பி, அவர்கள் ஒபோத்தில் பாளையம் இறங்கினர்.
44 அவர்கள் ஒபோத்திலிருந்து புறப்பட்டு, மோவாபின் எல்லையிலுள்ள இய்யாபரிமில் பாளையம் இறங்கினர்.
45 இய்யாபரிமிலிருந்து அவர்கள் பயணமாகி, தீபோன்காதில் பாளையம் இறங்கினர்.
46 தீபோன் காதிலிருந்து கிளம்பி, அவர்கள் அல்மோன் திப்லாத்தாயிமில் பாளையம் இறங்கினர்.
47 அல்மோன் திப்லாத்தாயிமிலிருந்து புறப்பட்டு, அவர்கள் நெபோவுக்கு முன் அபாரிம் மலைகளில் பாளையம் இறங்கினர்.
48 அபாரிம் மலைகளிலிருந்து அவர்கள் பயணமாகி, எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையம் இறங்கினர்.
49 அவர்கள் யோர்தானை அடுத்த மோவாபுச் சமவெளியில் பெத்தசிமோத்திலிருந்து ஆபெல் சித்திம் வரை இருந்த பகுதியில் பாளையம் இறங்கினர்.
யோர்தானைக் கடக்குமுன் தரப்பட்ட அறிவுரைகள்
தொகு
50 எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
51 நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்: யோர்தானைக் கடந்து நீங்கள் கானான் நாட்டுக்குள் செல்லுகையில்,
52 உங்கள் முன்னிலிருந்து நாட்டின் குடிகள் அனைவரையும் துரத்திவிடுங்கள்; அவர்களின் செதுக்கிய சிலைகள் அனைத்தையும் அழித்துவிடுங்கள்; அவர்களின் வார்ப்புப் படிமங்கள் அனைத்தையும் உடைத்து விடுங்கள்.
53 நீங்கள் நாட்டை உடைமையாக்கி அதில் குடியிருப்பீர்கள்; நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி அதை உங்களுக்குத் தந்துள்ளேன்.
54 உங்கள் குடும்பங்கள் வாரியாகத் திருவுளச் சீட்டுப் போட்டு நீங்கள் நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுங்கள். குலங்களுள் பெரியவற்றுக்குக் கூட்டியும், சிறியவற்றுக்குக் குறைத்தும் உரிமைச் சொத்து வழங்க வேண்டும். எவ்விடத்திற்காக ஒருவனுக்குச் சீட்டு விழுகிறதோ, அது அவனுக்குரியது. உங்கள் மூதாதையரின் குலங்களின்படியே நீங்கள் உரிமைச் சொத்து பெறுவீர்கள். [3]
55 நாட்டின் குடிகளை உங்கள் முன்னின்று நீங்கள் துரத்தவில்லையெனில் நீங்கள் தங்கியிருக்க அனுமதிப்போர் உங்கள் கண்களைக் குத்தும் கூராணிகளாகவும் உங்கள் விலாவைக் கீறும் முட்களாகவும் இருந்து நீங்கள் குடியிருக்கும் நாட்டில் உங்களைத் துன்புறுத்துவார்கள்.
56 நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்கே செய்வேன்.
- குறிப்புகள்
[1] 33:38 = எண் 20:22-28; இச 10:6; 32:50.
[2] 33:40 = 21:1.
[3] 33:54 = எண் 26:54-56.
அதிகாரம் 34
தொகுநாட்டின் எல்லைகள்
தொகு
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்: கானான் நாட்டின் முழுப்பரப்பும் உங்களுக்கு உரிமைச் சொத்தாக வந்து சேரும். கானான் நாட்டில் நீங்கள் நுழையும் போது,
3 உங்கள் தெற்குப் பகுதி சீன் பாலை நிலத்திலிருந்து ஏதோமின் ஓரமாகச் செல்லும். அதன் எல்லை கிழக்கில் உப்புக் கடலின் முடிவிலிருந்து துவங்கும் பகுதியாகும்.
4 அந்த எல்லை அக்கிரபிம் மேட்டுக்குத் தெற்கே சுற்றிச் சீனைத் தாண்டிக் காதேசு பர்னேயாவுக்குத் தென்புறத்தை அடையும்; பின் அது அட்சராதாருக்குச் சென்று அட்சமோன் ஓரமாகக் கடந்து செல்லும்.
5 அந்த எல்லை அட்சமோனிலிருந்து எகிப்தின் சிற்றாறு வரைக்கும் சுற்றிப் போய்ப் பெருங்கடலில் முடிவுறும்.
6 உங்கள் மேற்கு எல்லை பெருங்கடலும், அதன் கரையோரமும்; இதுவே உங்கள் மேற்கு எல்லை.
7 உங்கள் வட எல்லையாகப் பெருங்கடலிலிருந்து ஓர் மலை வரை நீங்கள் எல்லையை வரையறுத்துக் கொள்ளுங்கள்.
8 ஓர் மலையிலிருந்து காமாத்தின் நுழைவாயில் வரை அதனைக் குறிப்பீர்கள்; எல்லையின் முடிவு செதாதில் இருக்கும்.
9 அந்த எல்லை சிப்ரோன் வரை தொடர்ந்து சென்று அட்சரேனோனில் முடிவுறும்; இதுவே உங்கள் வடஎல்லை.
10 உங்கள் கிழக்கு எல்லையாக அட்சரேனோனிலிருந்து செபாம் வரைக்குமுள்ள பகுதியைக் குறித்துக் கொள்ளுங்கள்.
11 அந்த எல்லை அயினுக்குக் கிழக்கே செபாம் முதல் ரிப்லா வரைக்கும் செல்லும்; அந்த எல்லை கிழக்கு நோக்கிச் சென்று கினரேத்துக் கடலின் சரிவை வந்தடையும்;
12 அந்த எல்லை யோர்தானுக்குச் சென்று பின் உப்புக் கடலில் முடிவுறும்.
13 மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: திருவுளச் சீட்டு மூலம் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாடு இதுவே; இதனை ஒன்பது குலங்களுக்கும் பாதிக் குலத்துக்கும் கொடுக்க ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்;
14 மூதாதையர் வீடுகள் வாரியாக ரூபன் புதல்வர் குலமும், தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் காத்து புதல்வர் குலமும் மனாசேயின் பாதிக் குலமும் தங்கள் உரிமைச் சொத்தினைப் பெற்றுவிட்டனர்.
15 இரண்டு குலங்களும் பாதிக் குலமும் யோர்தானுக்கு அப்பால் எரிகோவின் கிழக்கே கதிரவன் உதயம் நோக்கித் தங்கள் உரிமைச் சொத்தைப் பெற்றுள்ளார்கள். [*]
16 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
17 உரிமைச் சொத்துக்காக உங்களுக்கு நாட்டைப் பங்கிட்டுத் தருவோரின் பெயர்களாவன: குரு எலயாசர்; நூனின் மகன் யோசுவா.
18 இவர்களைத் தவிர உரிமைச் சொத்துக்காக நாட்டைப் பங்கிடும்படி ஒவ்வொரு குலத்திலிருந்தும் தலைவன் ஒருவனை நீங்கள் தேர்ந்து கொள்ள வேண்டும்.
19 அவர்களின் பெயர்கள்: யூதாக் குலத்திலிருந்து எபுன்னேயின் மகன் காலேபு;
20 சிமியோன் மக்களின் குலத்திலிருந்து அம்மிகூதின் மகன் செமுவேல்.
21 பென்யமீன் குலத்திலிருந்து கிஸ்லோனின் மகன் எலிதாது;
22 தாண் மக்களின் குலத்திலிருந்து வரும் தலைவன், யோக்லியின் மகன் புக்கி.
23 யோசோப்பின் மக்களில் மனாசே புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன் எப்போத்தின் மகன் கன்னியேல்;
24 எப்ராயிம் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், சிப்தானின் மகன் கெமுவேல்;
25 செபுலோன் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், பர்னாக்கின் மகன் எலிசாபான்;
26 இசக்கார் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அசானின் மகன் பல்தியேல்;
27 ஆசேர் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், செலோமியின் மகன் அகிகூத்து;
28 நப்தலி புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அம்மிகூத்தின் மகன் பெதாவேல்;
29 கானான் நாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கு உரிமைச் சொத்தைப் பங்கிடும்படி ஆண்டவரால் பணிக்கப்பட்டவர்கள் இவர்களே.
- குறிப்பு
[*] 34:13-15 = யோசு 14:1-5.