திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை
எண்ணிக்கை
தொகுஅதிகாரங்கள் 3 முதல் 4 வரை
அதிகாரம் 3
தொகுஆரோனின் புதல்வர்
தொகு
1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயுடன் பேசிய காலத்தில் ஆரோன், மோசே ஆகியோரின் வழிமரபினர் இவர்களே:
2 ஆரோனின் புதல்வர் பெயர்கள் இவையே: தலைமகன் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். [1]
3 இவை குருத்துவப் பணிக்கென அருள்பொழிவு பெற்றுத் திருநிலைப்படுத்தப்பட்ட குரு ஆரோனின் புதல்வர் பெயர்கள்;
4 ஆனால் நாதாபும் அபிகூவும் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் திருமுன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்ததால் ஆண்டவர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே எலயாசரும் இத்தாமரும் தங்கள் தந்தை ஆரோன் முன்னிலையில் குருக்களாகப் பணியாற்றினர். [2]
குருவுக்குப் பணிவிடை செய்ய லேவியர் ஏற்படுத்தப்படல்
தொகு
5 மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
6 லேவிக் குலத்தை அழைத்து வந்து குரு ஆரோன் முன் அவர்களை நிறுத்து; அவர்கள் அவனுக்குப் பணிவிடை செய்யட்டும்.
7 திருஉறைவிடத்தில் அவர்கள் பணிசெய்யும்போது, சந்திப்புக் கூடாரத்தின் முன் அவனுக்காகவும் அனைத்து மக்கள் கூட்டமைப்புக்காகவும் தங்களுக்குரிய பொறுப்பை நிறைவேற்றுவர்.
8 சந்திப்புக் கூடாரத்தின் அனைத்துப் பணிப் பொருட்களுக்கும் பொறுப்பு அவர்களே; திருஉறைவிடத்தில் அவர்கள் பணி செய்கையில் இஸ்ரயேல் மக்களுக்கானத் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவர்.
9 லேவியரை ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் ஒப்படைத்துவிடு; இஸ்ரயேல் மக்களுள் அவர்கள் முற்றிலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டடிருக்கிறார்கள்.
10 நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் அவர்கள் குருத்துவப் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு நியமனம் செய். ஆனால் வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.
11 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
12 இதோ! நான் இஸ்ரயேல் மக்களிலிருந்து லேவியரைப் பிரித்தெடுத்துள்ளேன்; இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறக்கும் தலைப்பேறனைத்திற்கும் இவர்கள் ஈடாக இருப்பார்கள். லேவியர் எனக்கே உரியவர்.
13 ஏனெனில் எல்லாத் தலைப்பேறும் என்னுடையது. எகிப்து நாட்டில் தலைப் பேறனைத்தையும் நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும் மனிதரையும் விலங்கையும், எனக்கெனப் புனிதப்படுத்தினேன்; அவர்கள் எனக்கே உரியவர்கள்; நானே ஆண்டவர். [3]
லேவியரைக் கணக்கெடுத்தல்
தொகு
14 பின்னர் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
15 மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக லேவியின் புதல்வரைக் கணக்கெடு; ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஒவ்வோர் ஆண்பிள்ளையையும் நீ எண்ண வேண்டும்.
16 ஆண்டவர் கட்டளையிட்டுக் கூறிய அவர் வார்த்தையின்படி மோசே அவர்களை எண்ணினார்.
17 பெயர் வாரியாக லேவியின் புதல்வர் இவர்களே: கேர்சோன், கோகாத்து, மொராரி ஆகியோர்.
18 குடும்ப வாரியாகக் கேர்சேன் புதல்வர் பெயர்களாவன: லிப்னி, சிமயி.
19 குடும்ப வாரியாக கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எபிரோன், உசியேல் ஆகியோர்.
20 குடும்ப வாரியாக மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி ஆகியோர். மூதாதையர் வீடு வாரியாக லேவியர் குடும்பங்கள் இவைகளே.
21 கேர்சோனிலிருந்து லிப்னியர், சிமயியர் ஆகிய குடும்பங்கள் தோன்றின; இவை கேர்சோனியக் குடும்பங்கள்.
22 எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஏழாயிரத்து ஐந்நூறு.
23 திருஉறைவிடத்துக்குப் பின்னால் மேற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கேர்சோனியக் குடும்பங்கள்.
24 இவர்களோடிருக்கும் எல்யாசாபு கேர்சோனிய மூதாதையர் வீட்டுக் குடும்பங்களின் தலைவன், இவன் இலாவேலின் மகன்.
25 சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோன் புதல்வரின் பொறுப்பில் உள்ளவை: திருஉறைவிடம், கூடாரத்துடன் அதன் அடைப்பு, சந்திப்புக் கூடாரத்தின் வாயில் திரை,
26 தளத்திலுள்ள தொங்கு திரைகள், திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள வாயில்திரை, அதன் கயிறுகள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.
27 கோகாத்திலிருந்து தோன்றியவை அம்ராமியர் குடும்பம், எபிரோனியர் குடும்பம், உசியேலியர் குடும்பம் ஆகியவை. இவை கோகாத்தியர் குடும்பங்கள்.
28 எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் எண்ணாயிரத்து அறுநூறு பேர்; இவர்கள் தூயகத்திற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர்.
29 திருஉறைவிடத்துக்குத் தெற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கோகாத்துப் புதல்வர் குடும்பங்கள்.
30 இவர்களோடிருக்கும் எலிட்சாபான் கோகாத்தியக் குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன்; இவன் உசியேலின் மகன்.
31 அவர்களின் பொறுப்பில் உள்ளவை பேழை, மேசை, விளக்குத் தண்டு, பலிபீடங்கள், குரு தூயகப் பணிகளுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், திரை ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.
32 மேலும் குரு ஆரோன் புதல்வன் எலயாசர் லேவியர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்; தூயகத்துக்குப் பொறுப்பானவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியவன் இவனே.
33 மெராரியிடமிருந்து தோன்றியவை மக்லியர் குடும்பமும் மூசியர் குடும்பமுமாகும். இவை மெராரியின் குடும்பங்கள்.
34 எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஆறாயிரத்து இருநூறு.
35 மொராரி குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன் சூரியேல்; இவன் அபிகயிலின் மகன்; இவர்கள் திருஉறைவிடத்துக்கு வடக்கே பாளையமிறங்க வேண்டியவர்கள்.
36 மெராரி புதல்வரின் பொறுப்பில் ஒப்புவிக்கப்பட்டவை: திருஉறைவிடத்தின் சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள், அனைத்துத் துணைக்கலன்கள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.
37 சுற்றுத்தளத் தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள் ஆகியவையும் அவர்கள் பொறுப்பே.
38 திருஉறைவிடத்தின் கிழக்கே சந்திப்புக் கூடாரத்தின் முன் கதிரவன் உதிக்கும் திசையில் பாளையமிறங்க வேண்டியோர் மோசே, ஆரோன், அவன் புதல்வர். திருஉறைவிடத்தில் இஸ்ரயேல் மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்திற்கும் பொறுப்பும் உரிமையும் இவர்களுக்கே உண்டு. வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.
39 ஆண்டவர் வார்த்தைப்படி மோசேயும் ஆரோனும் லேவியரைக் குடும்பங்கள் வாரியாக எண்ணியபோது அவர்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்பிள்ளைகள் அனைவரின் தொகை இருபத்தீராயிரம்.
தலைப்புதல்வரின் இடத்தை லேவியர் எடுத்துக்கொள்ளல்
தொகு
40 மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரையும் அவர்கள் பெயர்கள் வாரியாகக் கணக்கெடு.
41 இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறான ஆண்கள் அனைவருக்கும் பதிலாக லேவியரையும் இஸ்ரயேல் மக்களுடைய கால்நடைகளின் தலையீற்றுகள் அனைத்துக்கும் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் எனக்கென்று பிரித்தெடு; நானே ஆண்டவர்.
42 ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறுகள் அனைத்தையும் எண்ணினார்.
43 பெயர்களின் எண்ணப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரின் தொகை இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று.
44 பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
45 இஸ்ரயேல் மக்களுள் எல்லாத் தலைப்பேறுகளுக்கும் பதிலாக லேவியரையும் அவர்கள் கால்நடைகளுக்குப் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் பிரித்தெடு; லேவியர் எனக்கே உரியவர்; நானே ஆண்டவர்.
46 இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகளில் எண்ணிக்கைக்கு மேலாக, மீட்கப்பட வேண்டியவர் இருநூற்று எழுபத்து மூன்றுபேர்.
47 இருபது கேரா மதிப்புடைய தூயகத்து செக்கேலில் தலைக்கு ஐந்து செக்கேல் வீதம் வாங்கிக்கொள்.
48 எண்ணிக்கைக்கு மேலாக இருப்போர் மீட்கப்படுவதற்காக வரும் இப்பணத்தை நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுக்க வேண்டும்.
49 லேவியரால் மீட்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாயிருந்தோரிடமிருந்து வந்த மீட்புப் பணத்தை மோசே எடுத்துக் கொண்டார்.
50 இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறாயிருந்தோரிடமிருந்து அவர் எடுத்த பணம் தூயகத்து செக்கேல் கணக்குப்படி ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து செக்கேல்.
51 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டுக் கூறியபடியே மோசே மீட்புப் பணத்தை ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் கொடுத்தார்.
- குறிப்புகள்
[1] 3:2 = எண் 26:60.
[2] 3:4 = லேவி 10:1-2; எண் 26:61.
[3] 3:13 = 13:2.
அதிகாரம் 4
தொகுகோகாத்து என்னும் லேவியர் குலமரபினரின் கடமைகள்
தொகு
1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2 லேவியின் புதல்வர்களிலிருந்து கோகாத்தின் புதல்வரை அவர்கள் மூதாதையர், வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.
3 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு.
4 சந்திப்புக் கூடாரத்தில் கோகாத்துப் புதல்வரின் மிகப் புனிதமானப் பணி இதுவே:
5 பாளையத்தினர் பறப்பட்டுச் செல்லும்போது ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று மூடுதிரையை இறக்கி அதனைக் கொண்டு உடன்படிக்கைப் பேழையை மூடுவர்.
6 பின் வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடி கருநீலமான ஒரு துணியை அதன் மேல் விரித்து நிலைக்கால்களில் வைப்பர்.
7 திருமுன் அப்பத்து மேசையின் மேல் அவர்கள் ஒரு நீலத்துணியை விரிப்பர்; அதன் மேல் தட்டுகள், பூக்கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை வைப்பர்; அப்பம் அதன் மேல் எப்போதும் இருக்கும்;
8 பின் அவர்கள் அவற்றின்மேல் ஒரு கருஞ்சிவப்புத் துணியை விரித்து, அவற்றை வெள்ளாட்டுத் தோலால் மூடி, நிலைக்கால்களில் வைப்பர்.
9 பின்னர் அவர்கள் ஒரு நீலத்துணியை எடுத்து அதை விளக்குத்தண்டு, அதன் விளக்குகள், அதன் திரிகள், அதன் சாம்பல் தட்டுகள் ஆகியவற்றின் மேலும் எண்ணெய்க்காகப் பயன்படுத்தும் பாத்திரங்கள் அனைத்தின் மேலும் விரிப்பர்.
10 அவர்கள் அதனை அதன் துணைக்கலன்களோடு ஒரு வெள்ளாட்டுத் தோலால் மூடி அதனைச் சுமக்கும் சட்டத்தின் மேல் வைப்பர்.
11 பின் பொற்பீடத்தின் மேல் ஒரு நீலத்துணியை அவர்கள் விரித்து, வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடிநிலைக்கால்களில் வைப்பர்.
12 தூயகப்பணியில் பயன்படுத்தும் அனைத்துப் பாத்திரங்களையும் அவர்கள் எடுத்து, அவற்றை ஒரு நீலத் துணியில் வைத்து வெள்ளாட்டுத் தோலால் அவற்றை மூடிச் சுமக்கும் சட்டத்தின்மேல் வைப்பர்.
13 அவர்கள் பலிபீடத்திலிருந்து சாம்பலை வெளியே எடுத்து அதன் மேல் ஊதாத் துணியொன்றை விரிப்பர்.
14 திருப்பணியில் பயன்படுத்தும் துணைக்கலன்களான தீச்சட்டிகள், முள்குறடுகள், சாம்பற் கரண்டிகள், கலங்கள் ஆகிய பலிபீடத்துத் துணைக்கலன்கள் அனைத்தையும் அவர்கள் அதன்மேல் வைப்பர்; வெள்ளாட்டுத்தோலை அதன் மேல் பரப்பி மூடி, அதன் நிலைக்கால்களில் வைப்பர்.
15 ஆரோனும் அவன் புதல்வரும் திருஉறைவிடத்தையும் திருஉறைவிடத்துப் பணிக்கலன்கள் அனைத்தையும் மூடியதும் பாளையத்தினர் புறப்பட்டுச் செல்வர். உடனே கோகாத்தின் புதல்வர் இவற்றைத் தூக்கிச் செல்ல வருவர்; ஆனால் சாகாதபடிக்குத் தூய பொருள்களை அவர்கள் தொடக்கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்கு உள்ளாவார்; கோகாத்தின் புதல்வர் எடுத்துச் செல்ல வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவையே.
16 விளக்கிற்கான எண்ணெய், வாசனைத் தூபம், அன்றாட உணவுப் படையல், திருப்பொழிவு எண்ணெய் ஆகியவற்றின் பொறுப்பு குரு ஆரோன் புதல்வன் எலயாசருடையது; திருஉறைவிடம் முழுவதையும், அதிலிருக்கும் அனைத்தையும், தூயகத்தையும் அதிலிருக்கும் பாத்திரங்களையும் அவனே மேற்பார்வை செய்ய வேண்டும்.
17 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
18 லேவியருள் கோகாத்து மரபைச் சார்ந்த குடும்பங்கள் அழிந்துபடாதிருக்கட்டும்.
19 எனவே புனிதமிகு பொருள்களை அவர்கள் நெருங்கி வருகையில் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது: ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று அவர்களில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டியது பற்றியும் தூக்கிச் செல்ல வேண்டியது பற்றியும் பணிப்பர்.
20 ஆயினும் புனிதப் பொருள்கள் மூடப்படும்போது கோகாத்தியர் உள்ளே சென்று பார்க்கக் கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்குள்ளாவார்.
கேர்சோன் என்னும் லேவியர் குலமரபினரின் கடமைகள்
தொகு
21 பின்னர் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
22 கேர்சோன் புதல்வர்களையும் அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.
23 சந்திப்புக் கூடாரவேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரையுள்ள அனைவரையும் கணக்கெடு.
24 பணி செய்ய வேண்டியோரும் சுமைகள் தூக்க வேண்டியோருமான கேர்சோனியர் குடும்பங்களின் பணி இதுவே:
25 அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை: திருஉறைவிடத்தின் திரைகள், மூடுதிரையோடு சேர்ந்து சந்திப்புக் கூடாரம், அதன் மேலே உள்ள வெள்ளாட்டுத் தோல், மூடுதிரை, சந்திப்புக் கூடாரத்தின் வாயில்திரை,
26 சுற்றுமுற்றத் தொங்கு திரைகள், திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியிருக்கும் முற்றத்தின் வாயில்திரை, அவற்றின் கயிறுகள், அவர்களின் வேலைக்கான அனைத்துக் கருவிகள் ஆகியவை. அவை தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவர்கள் செய்வார்கள்.
27 ஆரோன், அவன் புதல்வர் கட்டளையிட்டபடியே கேர்சோனியர் புதல்வர் செய்யவேண்டிய எல்லா வேலைகளும், அதாவது அவர்கள் செய்ய வேண்டியவை, சுமக்க வேண்டியவை அனைத்தும் இருக்கும்; தூக்கிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்தையும் நீங்கள் அவர்களிடம் விட்டுவிடுங்கள்.
28 இதுவே சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோனியர் குடும்பங்கள் செய்ய வேண்டிய பணி; அவர்களின் பணி குருவாகிய ஆரோன் மகன் இத்தாமரின் மேற்பார்வையின் கீழ் இருக்கும்.
மெராரி என்னும் லேவியர் குலமரபினரின் கடமைகள்
தொகு
29 மெராரி புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.
30 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு.
31 சந்திப்புக் கூடாரத்தின் மொத்த வேலையில் அவர்கள் தூக்கிச் செல்ல வேண்டியவற்றிற்கான ஏற்பாடு இதுவே: திருஉறைவிடச் சட்டங்கள், அதன் குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள்,
32 சுற்றுமுற்றத்தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான எல்லாக் கருவிகள் அவை தொடர்பான அனைத்துப் பணிகளே. அவர்கள் தூக்கிச்செல்ல வேண்டிய பொருள்களைப் பெயர் குறித்து அவர்களிடம் ஒப்புவி.
33 இதுவே சந்திப்புக் கூடாரத்தில் மெராரியர் குடும்பங்கள் செய்யவேண்டிய மொத்தப்பணி; அவர்கள் குரு ஆரோனின் மகன் இத்தாமரின் கீழ் இருப்பர்.
லேவியரைக் கணக்கெடுத்தல்
தொகு
34 மோசேயும் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களும் சேர்ந்து கோகாத்தியர் புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடுத்தனர்.
35 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரையும் கணக்கெடுத்தனர்.
36 குடும்பங்கள் வாரியாக, எண்ணப்பட்டவர்களின் தொகை இரண்டாயிரத்து எழுநூற்றைம்பது;
37 மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கோகாத்தியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப்பணி செய்தோரின் மொத்தத்தொகை இதுவே.
38 தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக கேர்சோன் புதல்வருள் எண்ணப்பட்டோர்:
39 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரிலும்,
40 தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.
41 ஆண்டவர் வார்த்தையின்படி மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கேர்சோனியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப் பணி செய்தோரின் மொத்தத் தொகை இதுவே.
42 தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர்:
43 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரிலும்,
44 குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் மூவாயிரத்து இருநூறு பேர்.
45 மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர் இவர்களே.
46 மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் தலைவர்களும் எண்ணியதில் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் எல்லோரும்:
47 சந்திப்புக் கூடார வேலையில் சுமை தூக்கும் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்தவர்கள்,
48 அவர்களில் எண்ணப்பட்டோர் எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பது பேர்.
49 மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே அவர்களில் ஒவ்வொருவரும் பணி செய்யவும், சுமை சுமக்கவும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர் அவர்களைக் கணக்கெடுத்தார்.
(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை