திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 33 முதல் 34 வரை
எரேமியா (The Book of Jeremiah)
தொகுஅதிகாரங்கள் 33 முதல் 34 வரை
அதிகாரம் 33
தொகுமற்றொரு வாக்குறுதி
தொகு
1 காவல்கூடத்தில் எரேமியா இன்னும்
அடைபட்டிருக்கையில்,
ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை
அவருக்கு அருளப்பட்டது:
2 உலகைப் படைத்தவரும்
அதை உருவாக்கி நிலைநாட்டியவருமான ஆண்டவர் -
'ஆண்டவர்' என்பது அவர் பெயராகும் -
இவ்வாறு கூறுகிறார்:
3 என்னிடம் மன்றாடு;
உனக்கு நான் செவிசாய்ப்பேன்;
நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும்
மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்.
4 முற்றுகைத் தளங்கள், வாள் முதலியவற்றால்
தகர்க்கப்பட்டுக் கிடக்கும் இந்நகரின்
வீடுகளைக் குறித்தும்,
யூதா அரசர்களின் அரண்மனைகளைக் குறித்தும்
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
5 எதிர்த்துப் போரிடவும்,
சினம்கொண்டு, சீற்றமுற்று
நான் வெட்டி வீழ்த்திய மனிதர்களின் பிணங்களால்
வீடுகளை நிரப்பவும்,
இதோ கல்தேயர் வந்துகொண்டிருக்கின்றனர்.
ஏனெனில் இந்நகரின் தீச்செயல் அனைத்தையும் முன்னிட்டு
அதனின்று நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
6 ஆயினும், நான் அந்நகரின் காயங்களை ஆற்றிக்
குணப்படுத்துவேன்;
அம்மக்களுக்கு நலன் அளித்து
நிலையான நிறைவாழ்வை வழங்குவேன்.
7 யூதாவை அதன் அடிமைத்தனத்தினின்றும்
இஸ்ரயேலை அதன் அடிமைத்தனத்தினின்றும்
நான் அழைத்துவருவேன்;
முன்பு இருந்தது போன்று
அவற்றைக் கட்டி எழுப்புவேன்.
8 எனக்கு எதிராக அவர்கள் செய்துள்ள
பாவங்களினின்று
அவர்களை நான் தூய்மைப்படுத்துவேன்;
அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்துள்ள குற்றங்கள்,
கிளர்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையும் நான் மன்னிப்பேன்.
9 நான் எருசலேமுக்குச் செய்துவரும்
எல்லா நன்மைகளையும் பற்றிக் கேள்வியுறும்
உலகின் மக்களினத்தார் அனைவரின் முன்னிலையில்
அது எனக்கு மகிழ்ச்சி, புகழ்ச்சி,
மாட்சி தரும் நகராய் விளங்கும்.
நான் அதற்கு வழங்கும் அனைத்து நலத்தையும்
வளத்தையும் கண்டு அவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்.
10 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
'ஆளரவமற்ற பாழ்நிலம்' என நீங்கள் அழைக்கும் இவ்விடத்தில் -
மனிதனோ, குடிமகனோ, விலங்கோ இன்றிப்
பாழடைந்து கிடக்கும் யூதாவின் நகர்களிலும்
எருசலேமின் தெருக்களிலும் -
11 மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும்,
மணமகன் மணமகள் குரலொலியும் மீண்டும் கேட்கும்.
'படைகளின் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
ஏனெனில் அவர் நல்லவர்;
அவரது பேரன்பு என்றென்றுமுள்ளது'
எனப் பாடியவாறு
ஆண்டவர் இல்லத்திற்கு
நன்றிப் பலிகளைக் கொண்டுசெல்வோரின்
பேரொலியும் கேட்கும்;
ஏனெனில், நாட்டை நான்
அடிமைத்தனத்தினின்று விடுவித்து
முன்னைய நன்னிலைக்கு உயர்த்துவேன்,
என்கிறார் ஆண்டவர்.
12 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
மனிதனோ விலங்கோ இன்றிப்
பாழடைந்து கிடக்கும் இவ்விடத்திலும்,
இதை அடுத்த எல்லா நகர்களிலும்
இடையர் தம் மந்தைகளை இளைப்பாற்றும் குடியிருப்புகள்
மீண்டும் தோன்றும்.
13 மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும்,
செபேலாவைச் சார்ந்த நகர்களிலும்,
நெகேபைச் சார்ந்த நகர்களிலும்,
பென்யமின் நாட்டிலும்,
எருசலேமின் சுற்றுப் புறங்களிலும்,
யூதாவின் நகர்களிலும்
ஆடுகளை எண்ணிச் சரிபார்ப்பவனின் கண்காணிப்பில்
அவை மீண்டும் கடந்து செல்லும், என்கிறார் ஆண்டவர்.
14 இதோ, நாள்கள் வருகின்றன,
என்கிறார் ஆண்டவர்.
அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும்
யூதா வீட்டாருக்கும்
நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
15 அந்நாள்களில் - அக்காலத்தில் -
நான் தாவீதிலிருந்து
நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்.
அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்.
16 அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்;
எருசலேம் பாதுகாப்புடன் வாழும்.
'யாவே சித்கேனூ' [1] என்னும் பெயரால்
இந்நகர் அழைக்கப்படும். [2]
17 ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே:
இஸ்ரயேல் வீட்டின் அரியணையில்
வீற்றிருக்கத்தக்க ஒருவர்
தாவீதுக்கு இராமல் போகார். [3]
18 என் திருமுன் எரிபலிகள் செலுத்தவும்,
தானியப் படையல்கள் ஒப்புக்கொடுக்கவும்,
என்றென்றும் பலிகள் நிறைவேற்றவும்
தக்க ஒருவர் லேவி குலத்துக் குருக்களிடையே
இராமல் போகார். [4]
19 ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
20 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
பகலும் இரவும் முறைப்படி வராதவாறு
அவற்றோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை
உங்களால் உடைத்தெறியப்படுமாயின்,
21 என் ஊழியன் தாவீதோடு நான் செய்துகொண்ட
உடன்படிக்கையும் உடைத்தெறியப்படும்,
தாவீதின் அரியணையேறி ஆட்சிசெய்யும் மைந்தன்
அவனுக்கு இருக்கமாட்டான்;
என் பணியாளர்களான லேவி குலத்துக்
குருக்களுக்கும் இவ்வாறே நிகழும்.
22 எண்ணமுடியாத விண்மீன்களையும்
அளக்க முடியாத கடல் மணலையும் போல,
என் ஊழியன் தாவீதின் வழி மரபினரையும்
என் பணியாளரான லேவியரையும்
நான் பெருகச் செய்வேன்.
23 ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
24 ஆண்டவர் தேர்ந்துகொண்ட இரண்டு குடும்பங்களையும்
அவர் தள்ளிவிட்டார் என்று
இம்மக்கள் பேசிக்கொள்வதை
நீ கவனித்ததில்லையா?
என் மக்கள் ஓர் இனமாகத் திகழாத அளவுக்கு,
என் மக்களை அவர்கள் இழிவாக நடத்துகிறார்கள்;
அவர்களை ஓர் இனமாகக் கூடக் கருதுவதில்லை.
25 ஆண்டவர் கூறுவது இதுவே:
நான் பகலோடும் இரவோடும்
உடன்படிக்கை செய்திராவிடில்,
விண்ணுக்கும் மண்ணுக்கும் உரிய
ஒழுங்கு முறைகளை நிறுவியிராவிடில்,
26 யாக்கோபின் வழிமரபினரையும்,
என் ஊழியன் தாவீதின் வழிமரபினரையும்
உண்மையாகவே தள்ளிவிடுவேன்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு
ஆகியோரின் வழிமரபினரை ஆள்வதற்குத்
தாவீதின் வழிமரபினரிலிருந்து
யாரையும் தேர்ந்துகொள்ளமாட்டேன்.
ஆனால் இப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து
அவர்களை விடுவிப்பேன்;
அவர்கள்மீது இரக்கம் காட்டுவேன்.
- குறிப்புகள்
[1] 33:16 - எபிரேயத்தில் 'ஆண்டவரே நமது நீதி' என்பது பொருள்.
காண்: எரே 23:6.
[2] 33:14-16 = எரே 23:5-6.
[3] 33:17 = 2 சாமு 7:12-16; 1 அர 2:4; 1 குறி 17:11-14.
[4] 33:18 = எண் 3:5-10.
அதிகாரம் 34
தொகுசெதேக்கியாவுக்கு எதிராக
தொகு
1 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும்,
அவருடைய எல்லாப் படைகளும்,
அவரது ஆட்சிக்கு உட்பட்ட உலகின் அரசுகள்,
மக்களினங்கள் அனைத்தும்
எருசலேமையும் அதன் நகர்களையும் எதிர்த்துப்
போரிட்டுக்கொண்டிருந்த வேளையில்,
ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:
2 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நீ போய், யூதா அரசன் செதேக்கியாவிடம் சொல்லவேண்டியது:
ஆண்டவர் கூறுவது இதுவே:
பாபிலோனிய மன்னனிடம் இந்நகரைக் கையளிக்கப்போகிறேன்.
அவன் அதைத் தீக்கிரையாக்குவான்.
3 நீ அவனுடைய கைக்குத் தப்பமாட்டாய்;
மாறாகத் திண்ணமாய்ப் பிடிபட்டு,
அவன் கையில் ஒப்புவிக்கப்படுவாய்.
பாபிலோனிய மன்னனை நீ முகத்துக்குமுகம் பார்ப்பாய்;
அவனோடு நேருக்கு நேர் பேசுவாய்;
நீ பாபிலோனுக்குப் போவாய்.
4 ஆயினும், யூதாவின் அரசனே! செதேக்கியா!
ஆண்டவரின் வாக்கைக் கேள்.
உன்னைப் பற்றி ஆண்டவர் கூறுவது இதுவே:
நீ வாளால் மடியமாட்டாய்;
5 ஆனால் அமைதியாகவே சாவாய்.
உனக்குமுன் வாழ்ந்த பண்டைய அரசர்களான
உன் மூதாதையரின் நினைவாக
மக்கள் நறுமணப் பொருள்களை எரித்தது போன்று,
உன் நினைவாகவும் எரிப்பார்கள்;
'ஐயோ, தலைவா!' எனச் சொல்லி
உன்பொருட்டுப் புலம்புவார்கள்!
இது உறுதி, என்கிறார் ஆண்டவர்.
6 பின்னர் இறைவாக்கினர் எரேமியா
எருசலேமில் யூதா அரசன் செதேக்கியாவிடம்
இவற்றை எல்லாம் கூறினார்.
7 அப்பொழுது எருசலேமுக்கு எதிராகவும்,
யூதாவின் அரண்சூழ் நகர்களுள் எஞ்சியிருந்த
இலாக்கிசு, அசேக்காவுக்கு எதிராகவும்
பாபிலோனிய மன்னனின் படை போரிட்டுக் கொண்டிருந்தது.
விடுதலை பெற்ற அடிமைகள்
தொகு
8 விடுதலையை அறிவிப்பதற்காக,
அரசன் செதேக்கியா எருசலேம் மக்கள் அனைவரோடும்
உடன்படிக்கை செய்துகொண்டபின்,
ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.
9 யூதா நாட்டினர் எவரும்
தம் சகோதரரை அடிமைப்படுத்தாமல்,
அவரவர் தம் எபிரேய அடிமைகளான
ஆண், பெண் அனைவரையும்
விடுதலை செய்ய வேண்டும் என்பதே அவ்வுடன்படிக்கை.
10 உடன்படிக்கை செய்துகொண்ட தலைவர்கள்,
மக்கள் ஆகிய எல்லாரும்,
தம் அடிமைகளான ஆண், பெண் அனைவரும்
தொடர்ந்து அடிமைகளாய் இராதவாறு,
அவர்களுக்கு விடுதலை அளிக்க உடன்பட்டு
அவர்களை விடுதலை செய்தார்கள்.
11 ஆனால் பின்னர் அவர்கள்
தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டார்கள்;
தாங்கள் ஏற்கெனவே விடுதலை செய்திருந்த
ஆண், பெண்களை மீண்டும் அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.
12 எனவே ஆண்டவரிடமிருந்து
எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது;
13 இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே:
அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று
உங்கள் மூதாதையரை அழைத்துவந்த நாளில்
நான் அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டேன்.
14 'உங்களிடம் அடிமைகளாய் விற்கப்பட்ட
உங்கள் எபிரேய சகோதரர்கள் அனைவரும்,
ஆறு ஆண்டுகள் உங்களுக்குப் பணிவிடை புரிந்தபின்,
ஏழாம் ஆண்டின் முடிவில் அனைவரும்
உங்களிடமிருந்து விடுதலை பெறவேண்டும்'
என்று நான் அப்போது உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்.
உங்கள் மூதாதையரோ எனக்கு கீழ்ப்படியவில்லை;
செவி சாய்க்கவுமில்லை.
15 ஆனால் நீங்கள் சற்றுமுன்பு மனம் வருந்தி,
ஒவ்வொருவரும் தம் சகோதருக்கு
விடுதலை கொடுத்ததன் மூலம்
என் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்டீர்கள்;
என் பெயர் விளங்கும் இல்லத்தில்
என் திருமுன் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டீர்கள்.
16 ஆனால் உங்கள் மனத்தை நீங்கள்
மீண்டும் மாற்றிக் கொண்டீர்கள்;
என் பெயருக்குக் களங்கம் வருவித்தீர்கள்;
தங்கள் விருப்பம்போல் செல்லும்படி
நீங்கள் ஒவ்வொருவரும் விடுதலை செய்திருந்த
ஆண், பெண்களை நீங்கள் மீண்டும்
அடிமைப்படுத்திக் கொண்டீர்கள்.
17 எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை;
உங்கள் சகோதரருக்கும் அடுத்திருப்பவருக்கும்
விடுதலை அறிவிக்கவுமில்லை.
ஆகவே வாள், கொள்ளைநோய், பஞ்சம்
ஆகியவற்றால் அழிவதற்கான 'விடுதலை'யை
நான் உங்களுக்கு வழங்குவேன், என்கிறார் ஆண்டவர்.
உலக அரசுகள் அனைத்துக்கும் திகிலூட்டும்
சின்னமாய் உன்னை மாற்றுவேன்.
18-19 இளங் காளையின் துண்டங்களுக்கு நடுவே கடந்து போன
யூதாவின் தலைவர்கள்,
எருசலேமின் தலைவர்கள்,
அரசவையோர், குருக்கள்,
நாட்டுமக்கள் அனைவரும்
என் திருமுன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி
அதன் உடன்பாடுகளை நிறைவேற்றத் தவறினார்கள்.
எனவே, இரண்டாக வெட்டப்பட்டு,
அத்துண்டங்களிடையே
கடந்து செல்வதற்காகப் பயன்படுத்திய
இளங்காளையைப் போல்
அவர்களை நான் ஆக்குவேன்.
20 அவர்களை அவர்தம் பகைவர் கையிலும்,
அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும்
நான் ஒப்புவிப்பேன்.
அவர்களுடைய பிணங்கள்
வானத்துப் பறவைகளுக்கும்
வையகத்து விலங்குகளுக்கும் இரையாகும்.
21 யூதா அரசன் செதேக்கியாவையும்
நாட்டுத் தலைவர்களையும்
அவர்தம் பகைவர் கையிலும்,
அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும்,
உங்களிடமிருந்து பின்வாங்கி நிற்கும்
பாபிலோனிய மன்னனது படையின் கையிலும் ஒப்புவிப்பேன்.
22 இதோ! நான் கட்டளையிடப்போகிறேன்,
என்கிறார் ஆண்டவர்.
நான் அவர்களை இந்நகருக்குத்
திரும்ப அழைத்துவருவேன்.
அவர்கள் அதைத் தாக்கிக் கைப்பற்றித்
தீக்கிரையாக்குவார்கள்.
யூதாவின் நகர்கள்
குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்படி செய்வேன்.
- குறிப்புகள்
[1] 34:1 = 2 அர 25:1; 2 குறி 36:17-21.
[2] 34:14 = விப 21:2; இச 15:12.
(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 35 முதல் 36 வரை