திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 45 முதல் 46 வரை

படிமம்:FierceSnake.jpg
"எகிப்து...நழுவிச் செல்லும் பாம்பு போன்று சீறுகின்றாள்." - எரேமியா 46:20,22

அதிகாரம் 45

தொகு

பாரூக்குக்கு ஆண்டவரின் வாக்குறுதி

தொகு


1 யோசியாவின் மகனும்
யூதாவின் அரசனுமான யோயாக்கிம்
ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில்
இறைவாக்கினர் எரேமியா சொன்ன சொற்களை
நேரியாவின் மகன் பாரூக்கு
ஏட்டுச்சுருளில் எழுதி வைத்த பின்னர்,
எரேமியா பாரூக்கிடம் கூறிய செய்தியாவது: [*]
2 பாரூக்கு! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்
உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்:
3 எனக்கு ஐயோ கேடு!
ஏனெனில், ஆண்டவர் எனக்குத்
துன்பத்திற்குமேல் துன்பத்தை அனுப்பியுள்ளார்;
நான் கடுந்துயரில் ஆழ்ந்து தளர்வுற்றுப் போனேன்.
எனக்கு நிம்மதியே கிடையாது என்று நீ சொன்னாய்.
4 இவ்வாறு நீ அவனிடம் சொல்:
ஆண்டவர் கூறுவது இதுவே:
நான் கட்டியதை நானே அழிப்பேன்;
நான் நட்டதை நானே பிடுங்குவேன்.
இந்நாடு முழுவதற்கும் இவ்வாறு நிகழும்.
5 நீ மகத்தானவற்றை உனக்கெனத் தேடுகிறாயா?
அவ்வாறு தேடாதே;
ஏனெனில் எல்லா மனிதர்க்கும்
நான் தண்டனை அளிக்கப் போகிறேன்,
என்கிறார் ஆண்டவர்.
ஆனால் நீ எங்குச் சென்றாலும்,
அங்கெல்லாம் நான் உன் உயிரைக்
கொள்ளைப் பொருளாகக் கொடுப்பேன்.


குறிப்பு

[*] 45:1 = 2 அர 24:1; 2 குறி 36:5-7; தானி 1:1-2.


அதிகாரம் 46

தொகு

எகிப்துக்கு எதிராக

தொகு


1 மக்களினத்தாரைக் குறித்து
இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:
2 எகிப்தைக் குறித்தும்
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான
யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில்,
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த
கர்க்கெமீசில் முறியடித்த
எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின்
படையைப் பற்றியும்:


3 பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்;
போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள்.


4 குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்;
படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்;
தலைக் கவசங்களுடன் அணிவகுத்து நில்லுங்கள்;
ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்.
மார்புக் கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்.


5 நான் காண்பது என்ன?
அவர்கள் திகிலடைந்து புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்;
அவர்களுடைய படைவீரர்கள்
முறியடிக்கப்படுகிறார்கள்;
திரும்பிப் பாராது தப்பி ஓடுகிறார்கள்;


6 ஓட்டத்தில் வல்லவர் ஓடிப்போக முடியாது;
படைவீரரும் தப்பியோட இயலாது;
வடக்கே யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில்
அவர்கள் தடுமாறிக் கீழே விழுவர்.


7 நைல்நதி போல் பொங்கி எழுந்து,
அலைமோதும் நதிகளெனப் பாய்ந்து வரும் இவன் யார்?


8 நைல்நதிபோல் பொங்கி எழுந்து
அலைமோதும் நதிகளெனப் பாய்ந்து வருகின்றது எகிப்து.
நான் பொங்கி எழுந்து,
மண்ணுலகை மூடிக்கொள்வேன்;
நகரையும் அதன் குடிகளையும் அழித்தொழிப்பேன்
என்று அவன் சொல்லிக்கொள்கிறான்.


9 குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்;
தேர்களே, விரைந்து ஓடுங்கள்;
படைவீரர்களே, முன்னேறிச் செல்லுங்கள்.
எத்தியோப்பியரும் லீபியரும் கேடயம் ஏந்தட்டும்!
லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றட்டும்!


10 அந்த நாள், படைகளின் ஆண்டவராகிய தலைவரின் நாள்;
ஆண்டவர் தம் எதிரிகளைப் பழிவாங்கும் நாள்,
வாள் உண்டு நிறைவுகொள்ளும்;
குருதி குடித்து வெறிகொள்ளும்.
வடக்கு நாட்டு யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில்
படைகளின் ஆண்டவராகிய தலைவருக்குப் பலியிடப்படும்.


11 கன்னிப் பெண் எகிப்தே!
கிலயாதுக்குச் சென்று,
பொன் மெழுகு கொண்டுவா.
பல்வகை மருந்துகளை நீ பயன்படுத்துவது வீணே!
உன் காயங்கள் ஆறவே ஆறா.


12 மக்களினத்தார் உன் இழிவுபற்றிக் கேள்வியுற்றனர்;
உன் அழுகுரல் மண்ணுலகை நிறைந்தது;
படைவீரன் படைவீரனோடு இடறிக்கொள்ள
இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர்.


13 பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர்
எகிப்து நாட்டைத் தாக்க வருவதைப் பற்றி,
ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:


14 எகிப்தில் அறிவியுங்கள்;
மிக்தோலில் பறைசாற்றுங்கள்;
மெம்பிசிலும் தகபனகேசிலும் முரசறையுங்கள்;
அணிவகுத்து நில்; தயாராய் இரு!
உன்னைச் சுற்றிலும் உள்ளவை வாளுக்கு இரையாகும்.


15 உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்?
அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்?
ஆண்டவர் அவனைத் தள்ளிவிட்டதால் அன்றோ!


16 அவர் பலரை இடறிவிழச் செய்தார்.
'எழுந்திருங்கள், கொடுங்கோலன் வாளினின்று தப்பிப்போம்;
நம் சொந்த மக்களிடம்
நம் தாய் நாட்டுக்கே திரும்பிச் செல்வோம்' என்று
ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டனர்.


17 'வாய்ப்பை நழுவவிடும் வாயாடி' என்று
எகிப்திய மன்னன் பார்வோனுக்குப் பெயர் சூட்டுங்கள்.


18 படைகளின் ஆண்டவர்
என்னும் பெயருடைய மன்னர் கூறுகிறார்:
வாழும் என் மேல் ஆணை!
மலைகளுக்குள் தாபோர் போலவும்
கடலோரத்துக் கர்மேல் போலவும்
ஒருவன் ஆற்றலுடன் வருவான்.


19 மகள் எகிப்தே!
அடிமைத்தனத்துக்கென மூட்டை கட்டிக்கொள்;
மெம்பிசு அழிந்துபோகும்;
குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்.


20 எகிப்து ஓர் அழகான இளம்பசு!
வடக்கினின்று உண்ணி ஒன்று
அவள்மீது வந்து அமர்ந்துள்ளது.


21 அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர்
கொழுத்த கன்று போன்றவர்கள்;
அவர்களும் புறமுதுகுகாட்டி ஒருமிக்க ஓடிவிட்டார்கள்.
அவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை.
அவர்களுடைய அழிவின் நாள்,
அவர்களது தண்டனையின் காலம்
அவர்கள்மேல் வந்துற்றது.


22 நழுவிச் செல்லும் பாம்பு போன்று
அவள் சீறுகின்றாள்;
அவள் எதிரிகள் வலிமையோடு அணிவகுத்து வருகின்றார்கள்;
மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடு
அவளை எதிர்த்து வருகின்றார்கள்.


23 அவளது காடு ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது.
அவர்கள் அதை வெட்டுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட மிகுதியானவர்கள்.
அவர்களைக் கணக்கிட முடியாது.


24 மகள் எகிப்து இகழ்ச்சிக்கு உள்ளாவாள்;
வடக்கு நாட்டு மக்களிடம் அவள் கையளிக்கப்படுவாள்.


25 இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
இதோ, நோ நகரத்து ஆமோனையும்,
பார்வோனையும் எகிப்தையும்
அவளுடைய தெய்வங்களையும் அரசர்களையும்,
பார்வோனையும் அவனில் நம்பிக்கை வைப்போரையும்
நான் தண்டிக்கப் போகிறேன்.
26 அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும்,
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் கையிலும்
அவனுடைய அலுவலர் கையிலும்
அவர்களை நான் ஒப்புவிப்பேன்.
அதன் பின்னர் முன்னாளில் போன்று
எகிப்தில் மக்கள் குடியேறுவார்கள்,
என்கிறார் ஆண்டவர். [1]


27 என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே;
இஸ்ரயேலே, கலங்காதே!
தொலை நாட்டினின்று உன்னை நான் மீட்பேன்;
அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன்;
யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்;
அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.


28 என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே,
என்கிறார் ஆண்டவர்.
நான் உன்னோடு இருக்கிறேன்;
எந்த மக்களினத்தாரிடையே உன்னைத் துரத்தியடித்தேனோ,
அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்;
உன்னையோ முற்றிலும் அழிக்க மாட்டேன்;
உன்னை நீதியோடு தண்டிப்பேன்;
உன்னை எவ்வகையிலேனும் தண்டியாது விடேன். [2]


குறிப்புகள்

[1] 46:2-26 = எசா 19:1-25; எசே 29:1-32:32.
[2] 46:27-28 = எரே 30:10-11.



(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 47 முதல் 48 வரை