திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்/அதிகாரங்கள் 27 முதல் 29 வரை
1 குறிப்பேடு (The First Book of Chronicles)
தொகுஅதிகாரங்கள் 27 முதல் 29 வரை
அதிகாரம் 27
தொகுபடைத்தலைவர்களும் குலத்தலைவர்களும்
தொகு
1 இஸ்ரயேல் மக்களின் குடும்பத் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள், மற்றும் அரச அலுவலர்கள் ஆகியோர் இவர்களே: ஆண்டின் ஒவ்வொருமாதமும் வெவ்வேறு பிரிவினர் மாறி மாறி அரசருக்கான பணியில் பங்கேற்றனர். அப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
2 முதல் மாதத்தில், முதல் படைப்பிரிவுக்குச் சப்தியேலின் மகன் யாசொபியாம் தலைவராய் இருந்தார். அவரது பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
3 பெரேட்சு வழிவந்த அவர், முதல் மாதத்தில் எல்லாப் படைத் தலைவர்களுக்கும் தலைவராய் இருந்தார்.
4 இரண்டாம் மாதத்தில் இரண்டாம் படைப்பிரிவுக்கு அகோகியரான தோதாய் தலைவராய் இருந்தார். மிக்லோத்து இவரின்கீழ் படைத்தலைவராய் இருந்தார். இவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
5 மூன்றாம் மாதத்தில் மூன்றாம் படைப்பிரிவுக்கு குரு யோயாதாவின் மகன் பெனாயா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
6 இந்த பெனாயா முப்பதின்மருக்குள் ஆற்றல்மிக்கவரும், அவர்களுக்குத் தலைவருமாய் இருந்தவர். அவர் மகன் அம்மிசபாது அவர் பிரிவை மேற்பார்வை செய்து வந்தார்.
7 நான்காம் மாதத்தில், நான்காம் படைப்பிரிவுக்கு யோவாபின் சகோதரராகிய அசாவேலும் அவருக்குப் பின் அவர் மகன் செபதியாவும் தலைவராய் இருந்தனர். அவர்களுக்குக்கீழ் இருபத்துநாலாயிரம் பேர் இருந்தனர்.
8 ஐந்தாம் மாதத்தில் ஐந்தாம் படைப்பிரிவுக்கு இஸ்ராகியரான சங்கூத்து தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
9 ஆறாம் மாதத்தில், ஆறாம் படைப்பிரிவுக்கு தெக்கோவாவியரான இக்கேசு மகன் ஈரா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
10 ஏழாம் மாதத்தில், ஏழாம் படைப்பிரிவுக்கு எப்ராயிம் குலத்துப் பெலோனியரான ஏலேசு தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
11 எட்டாம் மாதத்தில், எட்டாம் படைப்பிரிவுக்கு சர்கியைச் சார்ந்த ஊசாயரான சிபக்காய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
12 ஒன்பதாம் மாதத்தில், ஒன்பதாம் படைப்பிரிவுக்கு பென்யமின் குலத்து அனத்தோத்தியரான அபியேசர் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
13 பத்தாம் மாதத்தில், பத்தாம் படைப்பிரிவுக்கு சர்கியைச் சார்ந்த நெற்றோபாயரான மகராய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
14 பதினொன்றாம் மாதத்தில், பதினொன்றாம் படைப்பிரிவுக்கு எப்ராயிம் குலத்து பிராத்தோனியரான பெனாயா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
15 பன்னிரண்டாம் மாதத்தில், பன்னிரண்டாம் படைப்பிரிவுக்கு ஒத்னியேல் வழிவந்த நெற்றோபாயரான கெல்தாய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
இஸ்ரயேலின் குல நிர்வாகம்
தொகு
16 இஸ்ரயேலில் குலத் தலைவர்களாய் இருந்தவர்கள் வருமாறு: ரூபனியருக்குத் தலைவர் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காலின் மகன் செபற்றியா;
17 லேவியருக்குக் கெமுயேல் மகன் அசபியா; ஆரோனியருக்குச் சாதோக்கு;
18 யூதாவினர்க்குத் தாவீதின் சகோதரரில் ஒருவராகிய எலிகூ; இசக்கார் குலத்துக்கு மிக்கேல் மகனான ஓம்ரி;
19 செபுலோனியருக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலி குலத்துக்கு அஸ்ரியேல் மகன் எரிமோத்து;
20 எப்ராயிம் மக்களுக்கு அசரியாவின் மகன் ஓசேயா; மனோசேயின் பாதிகுலத்துக்கு பெதாயாவின் மகன் யோவேல்;
21 கிலயாதிலுள்ள மனாசேயின் பாதிக் குலத்துக்குச் செக்கரியாவின் மகன் இத்தோ, பென்யமினியருக்கு அப்னேரின் மகன் யாகசியேல்;
22 தாண் குலத்துக்கு எரொகாமின் மகன் அசரியேல்; இவர்கள் இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர்களாய் இருந்தனர்.
23 "இஸ்ரயேலை வானத்தின் விண்மீன்களைப் போல் பெருகச் செய்வேன்" என்று ஆண்டவர் வாக்களித்திருந்ததால், அரசர் தாவீது இருபது வயதுக்குட்பட்டோரைக் கணக்கிடவில்லை. [1]
24 செருயாவின் மகன் யோவாபு கணக்கெடுக்கத் தொடங்கியபொழுது, இஸ்ரயேலின்மேல் கடுஞ்சினம் வீழ்ந்ததால், அவர் அதை முடிக்கவில்லை. எனவே, அரசர் தாவீதின் குறிப்பேட்டில் எண்ணிக்கை இடம் பெறவில்லை. [2]
அரச உடைமைகளின் நிர்வாகம்
தொகு
25 அரசரது கருவூலத்திற்கு அதியேல் மகன் அஸ்மாவேத்து பொறுப்பேற்றிருந்தார். வயல்வெளிகள், நகர்கள், சிற்றூர்கள், கோட்டைகள் ஆகியவற்றிலிருந்த கருவூலங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பேற்றிருந்தார்.
26 வயல்வெளியில் உழைக்கும் விவசாயிகளுக்குக் கெலூபின் மகன் எஸ்ரி கண்காணியாய் இருந்தார்.
27 திராட்சைத் தோட்டங்களுக்கு இராமாவைச் சார்ந்த சிமயி; திராட்சை இரசக் கிடங்குகளுக்கு சிபிமியரான சப்தி;
28 செபேலாவின் ஒலிவமரங்களுக்கும் அத்திமரங்களுக்கும் கெதேரியரான பாகால்கானான்; எண்ணெய்க் கிடங்குகளுக்கு யோவாசு;
29 சாரோனின் மாட்டு மந்தைகளுக்கு சாரோனியரான சித்ராய்; பள்ளத்தாக்குகளின் மாட்டு மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாபாத்து;
30 ஒட்டகங்களுக்கு இஸ்மயேலரான ஓபில்; கழுதைகளுக்கு மெரோனோவியரான எகுதியா,
31 ஆட்டு மந்தைகளுக்கு ஆகாலியரான யாசிசு. இவர்கள் எல்லாரும் அரசர் தாவீதின் உடைமைகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.
தாவீதின் சிறப்பு ஆலோசகர்
தொகு
32 தாவீதின் சிற்றப்பா யோனத்தான் விவேகமிகு ஆலோசகரும், எழுத்தருமாய் இருந்தார். அவரும் அக்மோனியின் மகனான எகியேலும் அரசரின் புதல்வருக்குப் பொறுப்பேற்றிருந்தனர்.
33 அகித்தோபல் அரசரின் ஆலோசகர்; அர்கியரான ஊசாய் அரசரின் நண்பர்.
34 அகித்தோபலுக்குப் பின் பெனாயாவின் மகன் யோயாதாவும், அபியத்தாரும் அவர் பதவியை ஏற்றனர். யோவாபு அரசரின் படைத் தலைவராய் இருந்தார்.
- குறிப்புகள்
[1] 27:23 = தொநூ 15:5; 22:17; 26:4.
[2] 27:24 = 2 சாமு 24:1-15; 1 குறி 21:1-4.
அதிகாரம் 28
தொகுகோவிலுக்கான தாவீதின் ஆணைகள்
தொகு
1 பின்பு தாவீது, குலத்தலைவர்கள், அரசருக்குப் பணியாற்றிவந்த பிரிவுகளின் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள், அரசருக்கும் அவர் புதல்வருக்கும் உடைமையான அனைத்துச் சொத்துக்கள் மற்றும் மந்தைகளைக் கண்காணித்து வந்த தலைவர்கள் ஆகிய இஸ்ரயேலின் அனைத்துத் தலைவர்களையும், மற்றும் அரண்மனை அலுவலர்கள், போர்வீரர்கள், வலிமைமிகு எல்லா வீரர்கள் ஆகியோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தார்.
2 பின்பு அரசர் தாவீது எழுந்து நின்று கூறியது: "என் சகோதரரே! என் மக்களே! எனக்குச் செவி கொடுங்கள். நம் கடவுளின் கால்மணையாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்குக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு என் மனத்தில் எண்ணினேன்; அதைத் கட்டுவதற்குரிய முன்னேற்பாடுகளையும் செய்தேன்.
3 ஆனால் கடவுள், 'நீ என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டாம், ஏனெனில் நீ போர் பல செய்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்' என்றார்.
4 ஆயினும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேல்மேல் என்றென்றும் அரசனாய் இருப்பதற்கு என் தந்தை வீட்டாரிலெல்லாம் என்னைத் தேர்ந்துகொண்டார். தலைமை ஏற்குமாறு யூதா குடும்பத்தையும், யூதா குடும்பத்தில் என் தந்தை வீட்டையும் தேர்ந்து கொண்ட என் தந்தையின் புதல்வருள் என்மேல் விருப்பமுற்று இஸ்ரயேல் அனைவர் மேலும் என்னை அரசன் ஆக்கினார்.
5 ஆண்டவர் எனக்குப் புதல்வர் பலரை அளித்துள்ளார். அவர்களுள், இஸ்ரயேலில் ஆண்டவரது அரசின் அரியணைமீது அமர்வதற்கு, என் மகன் சாலமோனைத் தேர்ந்து கொண்டார்.
6 அவர் என்னை நோக்கி, 'உன் மகன் சாலமோனே என் இல்லத்தையும் என் முற்றங்களையும் கட்டியெழுப்புவான். அவனை நான் எனக்கு மகனாகத் தேர்ந்து கொண்டுள்ளேன். நானும் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்.
7 அவன் என் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் இன்றுபோல் உறுதியுடன் கடைப்பிடித்து வந்தால் நான் அவன் அரசை என்றென்றும் நிலைநாட்டுவேன்' என்றார். [*]
8 எனவே இப்பொழுது ஆண்டவரின் சபையாகிய இஸ்ரயேலர் எல்லாரின் கண் காண, நம் கடவுளின் செவி கேட்க, நான் கூறுவது: உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் விதிமுறைகள் அனைத்தையும் நாடிக் கடைப்பிடிப்பீர்களாக! அப்போது நீங்கள் இந்த நல்ல நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குப் பின் உங்கள் புதல்வர் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
9 என் மகனே, சாலமோன்! நீயோ, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு மனத்தோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்; ஏனெனில் ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆய்ந்தறிகிறார்; எல்லாத் திட்டங்களையும், எல்லா எண்ணங்களையும் பகுத்தறிகிறார்; நீ அவரைத் தேடினால் கண்டடைவாய், நீ அவரைப் புறக்கணித்தால் அவர் உன்னை என்றென்றும் கைவிடுவார்.
10 இதோ பார்! திருத்தலமாகக் கோவில் ஒன்று கட்டுவதற்கு ஆண்டவர் உன்னைத் தெரிந்தெடுத்துள்ளார்; துணிவுடன் அதைச் செய்வாயாக!"
11 தாவீது தம் மகனிடம் கோவிலின் மண்டபம், அதன் அறைகள், அதன் கருவூல அறைகள், அதன் மேல்மாடிகன், அதன் உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கைக்கான அறை ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.
12 மேலும் தம் மனத்தில் எண்ணியபடி, ஆண்டவரது இல்லத்தின் முற்றங்கள், அதைச் சுற்றியுள்ள அறைகள், கடவுளின் கோவிலுக்கான கருவூலங்கள், நேர்ச்சைப் பொருள்களின் கருவூலங்கள் ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.
13 அவர், குருக்கள், லேவியர் ஆகியோரின் பிரிவுகள், ஆண்டவரின் இல்லப் பணிக்கான அனைத்து முறைவேலை, ஆண்டவரது இல்லப் பணிக்கான அனைத்துக் கலங்கள் ஆகியவற்றின் செய்முறைக் குறிப்புகளைக் கொடுத்தார்.
14 ஒவ்வொரு திருப்பணிக்கும் தேவையான பொன், வெள்ளிக் கலங்களைச் செய்வதற்கான பொன், வெள்ளியின் செக்கேல் நிறையையும்,
15 பொன் விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் பொன் அகல்களுக்கும் தேவையான பொன்னின் நிறையையும், வெள்ளி விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் அகல்களுக்கும் தேவையான வெள்ளியின் நிறையையும்,
16 திருமுன்னிலை அப்ப மேசை ஒவ்வொன்றிற்குமான பொன் நிறையையும், வெள்ளி மேசைக்கான வெள்ளி நிறையையும்,
17 அள்ளுக்கருவிகளுக்கும், கலங்களுக்கும், கிண்ணங்களுக்குமான பசும்பொன்னின் நிறையையும் பொற்கலங்களில் ஒவ்வொரு கலத்திற்கும் தேவையான நிறையையும் வெள்ளிக் கலங்களின் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் தேவையான நிறையையும் கொடுத்தார்.
18 தூபபீடத்திற்கான புடமிடப்பட்ட பொன்னின் நிறையையும் கொடுத்தார். இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை மூடும் பொற்கெருபுகளைக் கொண்ட பொன் தேரின் மாதிரி வடிவத்தையும் கொடுத்தார்.
19 தாவீது, "இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார்" என்றார்.
20 தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, "நீ மன வலிமை கொள்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே! செயல்படு! கடவுளாகிய ஆண்டவர், என் கடவுள் உன்னோடும் இருக்கிறார். ஆண்டவரின் இல்லப்பணி அனைத்தும் நிறைவு பெறும்வரை அவர் உன்னைவிட்டு விலகார்; உன்னைக் கைவிடார்.
21 இதோ, கடவுளது கோவிலின் அனைத்துத் திருப்பணிக்கெனவும், குருத்துவ, லேவியப் பிரிவுகள் தயாராய் உள்ளன; எல்லா வகைப் பணியிலும் உனக்கு உதவி செய்ய, எந்த ஒரு பணியையும் செய்வதற்குத் திறமை வாய்ந்தோரும் ஆர்வமிக்கோரும் உன்னோடு இருக்கின்றனர். மேலும் தலைவர்களும் மக்கள் யாவரும் உன் கட்டளைகள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.
- குறிப்புகள்
[*] 28:2-7 = 2 சாமு 7:1-16; 1 குறி 17:1-14.
அதிகாரம் 29
தொகுகோவிலுக்கான காணிக்கை
தொகு
1 தாவீது அரசர் சபையார் அனைவரையும் நோக்கி, "என் மகன் சாலமோனை மட்டுமே கடவுள் தேர்ந்து கொண்டார். அவன் அனுபவமற்ற இளைஞன். செய்ய வேண்டிய பணியோ பெரிது. கட்டவிருக்கும் இல்லமோ மனிதனுக்கு அன்று, கடவுளாகிய ஆண்டவருக்கே!
2 நான் என்னால் முடிந்தவரைக்கும் என் கடவுளின் கோவிலுக்கென்று, பொன் வேலைக்குரிய பொன், வெள்ளி வேலைக்குரிய வெள்ளி, வெண்கல வேலைக்குரிய வெண்கலம், இரும்பு வேலைக்குரிய இரும்பு, மரவேலைக்குரிய மரம் ஆகியவற்றையும், பதிப்பதற்கான கோமேதகக் கற்கள், மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், எல்லாவகை விலையுயர்ந்த கற்கள், சலவைக் கற்கள் ஆகியவற்றையும் பெருவாரியாகச் சேர்த்து வைத்துள்ளேன். [1]
3 என் கடவுளின் கோவிலின் மேல் நான் வைத்துள்ள பற்றார்வத்தால், திருத்தலத்திற்கென்று நான் சேர்த்து வைத்துள்ள யாவற்றையும் தவிர, என் சொந்தக் கருவூலத்திலிருந்து என் கடவுளின் கோவிலுக்குப் பொன்னையும் வெள்ளியையும் வழங்குகிறேன்.
4 கோவிற்சுவர்களில் பொதிவதற்காக மூவாயிரம் தாலந்து ஓபீரின் பொன்னும் ஏழாயிரம் தாலந்து தூய வெள்ளியும் கொடுக்கிறேன்.
5 மற்றும் திறன் மிக்க கைவினைஞரால் செய்யப்பட வேண்டிய அனைத்துப் பணிக்காக பொன் வேலைக்காகப் பொன்னும், வெள்ளி வேலைக்காக வெள்ளியும் தருகிறேன். இன்று இப்பணிக்கெனத் தம் கையிலிருந்து தாராளமாக ஆண்டவருக்குக் கொடுப்பது வேறு யார்?" என்றார்.
6 அப்போது மூதாதைவீட்டுத் தலைவர்களும் இஸ்ரயேல் குலத் தலைவர்களும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களும் அரசப் பணிக்கான அலுவலர்களும் தன்னார்வக் காணிக்கை செலுத்தினார்கள்.
7 அவர்கள், கடவுளின் கோவில் வேலைக்கென்று, ஐயாயிரம் தாலந்து பொன்னும் பத்தாயிரம் பொற்காசுகளும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியும், பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலமும், ஓர் இலட்சம் தாலந்து இரும்பும் செலுத்தினார்கள்.
8 விலையுயர்ந்த கற்கள் வைத்திருந்தோர் ஆண்டவரின் இல்லக் கருவூலத்தில் சேர்ப்பதற்கென்று கேர்சோனியனான எகியேலின் கையில் கொடுத்தனர்.
9 அவர்களின் தன்னார்வக் காணிக்கையை முன்னிட்டு மக்கள் மகிழ்ந்தனர். ஏனெனில் அவர்கள் முழுமனத்தோடும் ஆர்வத்தோடும் ஆண்டவருக்குக் கொடுத்தனர். தாவீது அரசரும் பெரிதும் மகிழ்ந்தார்.
தாவீது இறைவனைப் புகழ்தல்
தொகு
10 ஆதலால் சபையார் அனைவரின் பார்வையில் தாவீது ஆண்டவரை வாழ்த்தினார். அவர் கூறியது: "எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக!
11 ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர். [2]
12 செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம்கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன.
13 இப்பொழுது எங்கள் கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி உம் மாட்சிமிகு பெயரைப் போற்றுகிறோம்.
14 இவ்வாறு இந்தத் தன்விருப்பக் காணிக்கையை அளிப்பதற்கான ஆற்றலை நாங்கள் பெறுவதற்கு, நான் யார்? என் மக்கள் யார்? யாவும் உம்மிடத்திலிருந்து வந்தவை. உம் கையினின்று நாங்கள் பெற்றுக்கொண்டவற்றையே நாங்கள் உமக்குக் கொடுத்துள்ளோம்.
15 உம் திருமுன் நாங்கள் எம் மூதாதையரைப் போலவே அன்னியரும் நாடோடிகளுமாய் இருக்கிறோம். மண்ணுலகில் எங்கள் வாழ்நாள்கள் நிழல் போன்றவை; நிலையற்றவை.
16 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம் புனித பெயருக்கென்று உமக்குக் கோவில் கட்டுவதற்கு நாங்கள் சேர்த்து வைத்துள்ள இந்தப் பெருங்குவியல் முழுமையும் உம் கையிலிருந்து வந்தது; உமக்கே உரியது.
17 என் கடவுளே, நீர் இதயத்தை ஆய்ந்தறிபவர் என்றும், நேரியனவற்றை நாடுபவர் என்றும் நான் அறிவேன். நான் நேரிய மனத்தினனாய்த் தாராளமனத்துடன் இவை அனைத்தையும் கொடுத்துள்ளேன். இங்கே குழுமியிருக்கும் உம் மக்களும் இப்பொழுது தாராள மனத்துடன் கொடுத்ததைக் கண்டு மகிழ்கிறேன்.
18 ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்னும் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களின் இத்தகைய இதய நோக்கங்களையும் எண்ணங்களையும் என்றென்றும் காத்து, அவர்களின் நெஞ்சங்களை உம்பால் திருப்பியருளும்.
19 என் மகன் சாலமோன் உம் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும், நியமங்களையும் கடைப்பிடித்து ஒழுகுவதற்கும், இவை அனைத்தையும் செய்து நான் வைத்துள்ள இந்த இல்லத்தைக் கட்டியெழுப்பவும் நிறைவான உள்ளத்தையும் அவனுக்கு அளித்தருளும்."
20 பின்பு தாவீது சபையார் அனைவரையும் நோக்கி, "உங்கள் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்துங்கள்" என்றார். உடனே சபையார் அனைவரும் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரை வாழ்த்திப் பணிந்து தொழுதனர்; அரசனையும் வணங்கினர்.
21 அவர்கள் ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் அவர்கள் ஆண்டவருக்குரிய எரிபலியாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கிடாய்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் நீர்மப் படையல்களையும் இஸ்ரயேலர் யாவருக்காகவும் பல்வேறு பலிகளையும் செலுத்தினர்.
22 அவர்கள் அன்று உண்டு, குடித்து ஆண்டவர் திருமுன் பெரிதும் மகிழ்ந்தனர். தாவீதின் மகன் சாலமோனை இரண்டாம் முறையாக அரசன் ஆக்கினார்கள். ஆண்டவரின் பெயரால் அவரைத் தலைவராகவும் சாதோக்கைக் குருவாகவும் திருப்பொழிவு செய்தனர்.
23 அவ்வாறே, சாலமோனும் தம் தந்தை தாவீதுக்குப் பதிலாக ஆண்டவரின் அரியணையில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செலுத்தினார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்குப் பணிந்திருந்தனர். [3]
24 எல்லாத் தலைவர்களும், வீரர்களும், தாவீது அரசரின் புதல்வர் அனைவரும் சாலமோன் அரசரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டனர்.
25 ஆண்டவர் சாலமோனை உயாத்தி, இஸ்ரயேலர் அனைவர் பார்வையிலும் பெருமைக்குரியவர் ஆக்கினார். அவருக்குமுன் இருந்த இஸ்ரயேல் அரசர் எவரும் பெறாத அரச மாண்பை அவருக்கு அளித்தார்.
நிறைவுரை
தொகு
26 இவ்வாறு ஈசாயின் மகன் தாவீது இஸ்ராயேல் அனைத்தின் மேலும் ஆட்சி செலுத்தினார்.
27 அவர் இஸ்ரயேலில் ஆட்சி செலுத்திய நாள்கள் நாற்பது ஆண்டுகள்; எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார். [4]
28 அவர் முதிர்ந்த வயதினராய்ச் செல்வமும் மேன்மையும் பெற்று நெடுநாள்கள் வாழ்ந்தபின் இறந்தார். அவர் மகன் சாலமோன் அவருக்குப் பதிலாக ஆட்சி செலுத்தினார்.
29 தாவீது அரசரின் செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை, திருக்காட்சியாளர் சாமுவேலின் குறிப்பேட்டிலும், இறைவாக்கினர் நாத்தானின் குறிப்பேட்டிலும் திருக்காட்சியாளர் காத்தின் குறிப்பேட்டிலும் எழுதப்பட்டுள்ளன.
30 அக்குறிப்பேடுகளில் அவரது ஆட்சி பற்றியும், அவரது ஆற்றல் பற்றியும், அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் பற்றியும் இஸ்ரயேலுக்கும் அதைச் சுற்றியிருந்த அரசுகளுக்கும் நேர்ந்தவை பற்றியும் காணக்கிடக்கின்றன.
- குறிப்புகள்
[1] 29:1-2 = 1 குறி 22:5.
[2] 29:11 = மத் 6:13.
[3] 29:23 = 1 அர 2:12.
[4] 29:27 = 2 சாமு 5:4-5; 1 குறி 3:4.
(குறிப்பேடு - முதல் நூல் நிறைவுற்றது)
(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை