திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை
2 சாமுவேல் (The Second Book of Samuel)
தொகுஅதிகாரங்கள் 17 முதல் 18 வரை
அதிகாரம் 17
தொகுஊசாயின் தவறான கருத்து
தொகு
1 அப்போது அகிதோபல் அப்சலோமை நோக்கி, "நான் பன்னீராயிரம் ஆள்களைத் தேர்வு செய்து இன்றிரவே புறப்பட்டுத் தாவீதைப் பின்தொடர்வேன்.
2 அவர் களைத்துச் சோர்ந்த வேளையில் அவர் மேல் பாய்ந்து அவரை அச்சுறுத்துவேன். அவரோடிருக்கும் மக்கள் அனைவரும் தப்பி ஓடுவர்; அரசரை மட்டும் நான் வெட்டி வீழ்த்துவேன்.
3 மக்கள் அனைவரையும் உன்னிடம் திருப்பிக் கொணர்வேன். நீ தேடும் ஒரு மனிதனைத் தவிர அனைவரையும் அழைத்து வருவேன். மக்கள் அனைவரும் நலமாய் இருப்பர்."
4 அப்சலோமுக்கும் இஸ்ரயேலின் பெரியோருக்கும் இந்தக் கருத்து பிடித்திருந்தது.
5 அப்சலோம், "அர்க்கியனான ஊசாயை அழையுங்கள். அவன் சொல்ல வேண்டியதையும் கேட்போம்" என்றான்.
6 ஊசாய் அப்சலோமிடம் வர, அப்சலோம், "இது அகிதோபலின் அறிவுரை. இவ்வாறு நாம் செய்யலாமா? இல்லையேல் உன் கருத்து என்ன?" என்று அவனிடம் கேட்டான்.
7 ஊசாய் அப்சலோமை நோக்கி, "அகிதோபல் கூறியுள்ள கருத்து இப்போதைக்குச் சரியானதல்ல" என்றான்.
8 மேலும் ஊசாய் அப்சலோமிடம் கூறியது: "உன் தந்தையும் அவர்தம் ஆள்களும் வலிமைமிகு வீரர் என்பதை நீ அறிவாய். காட்டில் தன் குட்டிகளை இழந்த கரடிபோல் அவர்கள் சினமுற்றிருக்கிறார்கள். உன் தந்தை போர்த்திறன் மிக்கவர்; இரவில் மக்களோடு தங்கமாட்டார்.
9 இப்பொழுது கூட அவர் ஒரு குகையிலோ வேறெந்த இடத்திலோ ஒளிந்து கொண்டிருப்பார். அவர் அவர்களைத் தாக்கியவுடன் அதைக் கேட்பவர்கள், 'அப்சலோமைப் பின்பற்றும் மக்கள் வீழ்ந்தனர்' என்று சொல்வர்" என்றான்.
10 அப்போது சிங்கத்தின் வலிமைகொண்ட அஞ்சா நெஞ்சனும் அச்சத்தால் அறவே நிலைகுலைந்து விடுவான். உன் தந்தை வலியவர் என்றும் அவரோடு இருப்பவர்களும் வலிமைவாய்ந்தவர்கள் என்றும் இஸ்ரயேலர் அனைவரும் அறிவர்.
11 ஆகவே எனது கருத்து என்வென்றால், தாண் முதல் பெயேர்செபா வரை கடற்கரை மணல்திரள் போல் உள்ள இஸ்ரயேலர் அனைவரும் உன்னிடம் ஒன்றுதிரளட்டும். பிறகு நீயே போருக்குச் செல்.
12 நாம் அவரை எதிர்த்துச் சென்று அவர் தங்கியுள்ள இடத்தைக் கண்டுபிடிப்போம். தரையின்மீது விழும் பனிபோல், அவர் மீது நாமும் விழுவோம். அவரும், அவரோடு உள்ள ஆள்கள் அனைவரிலும் எவரும் தப்பமாட்டார்கள்.
13 ஒரு வேளை அவர் ஒரு நகரினுள் நுழைந்திருந்தால், இஸ்ரயேலர் கொண்டுவரும் கயிறுகளால் அந்நகரைக் கட்டியிழுத்து அங்கே ஒரு சிறு கல்லும் இராதபடி கணவாய்க்குள் தள்ளுவோம்."
14 அப்சலோமும் இஸ்ரயேலர் அனவைரும் அர்க்கியனான ஊசாயின் கருத்து அகிதோபலின் அறிவுரையை விடச் சிறந்தது என்று கூறினர். ஆனால், ஆண்டவர் அப்சலோமிற்குத் தீங்கிழைக்குமாறு அகிதோபலின் சிறந்த அறிவுரை எடுபடாதுபோகச் செய்தார்.
தாவீது தப்பியோடல்
தொகு
15 பின் ஊசாய் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் "அப்சலோமுக்கும் இஸ்ரயேலின் பெரியோர்களுக்கும் அகிதோபல் இவ்வாறு அறிவுரை தந்தான், நானோ இவ்வாறு கருத்துச் சொன்னேன்.
16 இப்போது உடனே ஆளனுப்பி, பாலைநில எல்லைப் பகுதிகளில் இரவு தங்க வேண்டாம் என்றும் அரசரும் அவரோடுள்ள மக்களும் இரையாகாதபடி அவர்கள் கண்டிப்பாக வேறிடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் தாவீதிடம் சொல்லுங்கள்" என்றான்.
17 அப்போது யோனத்தானும் அகிமாசும் ஏன்ரோகேலில் காத்திருக்க, ஒரு பணிப்பெண் அவர்களிடம் சென்று செய்தி சொல்ல, அவர்கள் தாவீதிடம் சென்று அதை அறிவித்தார்கள். ஏனெனில் அவர்கள் நகருக்குள் செல்வது, யாரும் காணாமல் இருக்க வேண்டியிருந்தது.
18 ஆனால் சிறுவன் ஒருவன் அவர்களைப் பார்த்துவிட்டு அப்சலோமுக்குத் தெரியப்படுத்தினான். இருவரும் விரைவாகச் சென்று பகூரிமில் ஒருவரின் வீட்டில் நுழைந்தனர். அவரது முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. அவர்கள் அதற்குள் இறங்கினார்கள்.
19 வீட்டுக்காரி கிணற்று முகப்பினை ஒரு போர்வையால் மூடி அதன்மேல் தானியங்களைப் பரப்பினாள். அவர்கள் இறங்கியது யாருக்கும் தெரியவில்லை,
20 அப்சலோமின் பணியாளர் வீட்டினுள் நுழைந்து அப்பெண்ணை நோக்கி, "அனிமாசும் யோனத்தானும் எங்கே?" என்று கேட்க, அவள், "அவர்கள் ஆற்றைக் கடந்து சென்றுவிட்டனர்" என்று சொன்னாள். அவர்கள் தேடியும் கண்டுபிடிக்க இயலாததால் எருசலேம் திரும்பினர்.
21 அவர்கள் அகன்றதும் யோனத்தானும் அகிமாசும் கிணற்றிலிருந்து ஏறி வந்து அரசர் தாவீதிடம் சென்று, "உடனே புறப்பட்டு ஆற்றைக் கடந்து செல்லுங்கள், ஏனெனில், அகிதோபல் உமக்கு எதிராக இவ்வாறு அறிவுரை கூறியுள்ளான்" என்று தாவீதிடம் உரைத்தனர்.
22 தாவீதும் அவரோடிருந்த மக்களும் புறப்பட்டு யோர்தானைக் கடந்து சென்றார்கள். பொழுது புலர்ந்தபோது யோர்தானைக் கடக்காதவன் எவனும் இல்லை.
23 தன் அறிவுரை ஏற்றுக் கொள்ளபடவில்லை என்று கண்டதும் அகிதோபல் தன் கழுதைக்குச் சேணமிட்டு, தன் நகருக்குப் புறப்பட்டுத் தன் வீட்டை அடைந்தான். தன் வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு அவன் நான்றுகொண்டு இறந்தான். அவனை அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.
24 தாவீது மகனயிம் வந்தடைந்தார்; அப்சலோமும் அவனோடு இஸ்ரயேலர் அனைவரும் யோர்தானைக் கடந்தார்கள்.
25 அப்சலோம் யோவாபுக்குப் பதிலாக அமாசாவைப் படைத் தலைவனாக நியமித்திருந்தான். இவன் இஸ்ரயேலன் இத்ரா என்பவனின் மகன். இந்த இத்ராதான் அபிகாலை மணந்தவன். இவள் யோவாபின் தாயும் செரூயாவின் சகோதரியுமான நாகசின் மகள்.
26 இஸ்ரயேலரும் அப்சலோமும் கிலயாது நாட்டில் பாளையம் இறங்கினர்.
27 தாவீது மகனயிம் வந்தடைந்த போது அம்மோனியரின் இரபாவிலிருந்து நாகாசின் மகன் சோபியும் லோதபாரிலிருந்து அம்மியேலின் மகன் மாக்கிரும், ரோகிலிமிலிருந்து கிலயாதியன் பர்சில்லாயும்
28-29 தாவீதிடம் வந்து அவருக்குப் படுக்கைகள், கிண்ணங்கள், மண்பாண்டங்கள், கோதுமை, வாற்கோதுமை, மாவு, வறுத்த தானியம், மொச்சை, அவரை, பயிறு, தேன், தயிர், ஆடுகள், பசும்பாற்கட்டிகள் ஆகியவற்றைக் கொடுத்தனர். பாலைவெளியில் மக்கள் பசித்தும் களைத்தும் தாகமாகவும் இருக்கிறார்கள் என்று சொல்லி, தாவீதும் அவரோடு இருந்தவர்களும் உண்பதற்காக அவர்கள் இவற்றைத் தந்தனர்.
அதிகாரம் 18
தொகுஅப்சலோமின் தோல்வியும் சாவும்
தொகு
1 தாவீது தம்மோடிருந்த வீரர்களைக் கணக்கெடுத்து, அவர்கள் மீது, ஆயிரத்தவர், நூற்றுவர், தலைவர்களை நியமித்தார்.
2 வீரர்கள் மூன்றில் ஒருபகுதியினரை யோவாபின் தலைமையிலும், அடுத்த மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் சகோதரன் செரூயாவின் மகன் அபிசாயின் தலைமையிலும், இன்னும் மூன்றில் ஒரு பகுதியினரைக் கித்தியன் இத்தாயின் தலைமையிலும் தாவீது அனுப்பினார். தாமும் அவர்களோடு புறப்படுவதாக அரசர் வீரர்களிடம் கூறினார்.
3 "நீர் வெளியே வரவேண்டாம். ஏனெனில் நாங்கள் புறமுதுகுகாட்டி ஓடினால், அவர்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். எங்களுள் பாதிப்போர் மடிந்தாலும் எங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். நீர் ஒருவர் எங்களுள் பத்தாயிரம் பேருக்குச் சமம். தற்போது எங்களுக்கு நகரிலிருந்தே நீர் உதவி செய்வது நல்லது" என்று வீரர்கள் அவரிடம் சொன்னார்கள்.
4 "உங்களுக்கு எது நல்லதெனப்படுகிறதோ அதையே நான் செய்வேன்" என்று அரசர் அவர்களிடம் கூறி, வாயிலருகே நின்றார். வீரர்கள் நூறுநூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டுச் சென்றனர்.
5 "என் பொருட்டு அந்த இளைஞன் அப்சலோமுக்குத் தீங்கிழைக்க வேண்டாம்" என்று யோவாபு, அபிசாய், இத்தாய் ஆகியோருக்கு அரசர் கட்டளையிட்டார். எல்லாப் படைத்தலைவருக்கும் அரசர் கட்டளையிட்டதை வீரர்கள் அனைவரும் கேட்டார்கள்.
6 இஸ்ரயேலரை எதிர்கொள்ள வீரர்கள் புறப்பட்டுத் திறந்த வெளிக்குச் சென்றனர்.போர் எப்ராயிம் காட்டில் நடந்தது.
7 இஸ்ரயேலர் தாவீதின் பணியாளரால் தோற்கடிக்கப்பட்டனர். அன்று மாபெரும் அழிவு ஏற்பட்டது. இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
8 நாடெங்கும் போர் பரவியது. அன்று வாளுக்கு இரையானவர்களைவிடக் காட்டுக்கு இரையானவர்களே மிகுதியானவர்.
9 அப்சலோம் தாவீதின் பணியாளரை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் ஒரு கோவேறு கழுதை மீது ஏறி வந்துக் கொண்டிருந்தான். அது ஒரு பெரிய கருவாலி மரத்தின் அடர்த்தியான கிளைகளுக்குக் கீழே சென்று கொண்டிருந்தது. அப்போது அவனது தலை கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கினான். அவன் ஏறிவந்த கோவேறு கழுதை முன்னே சென்றுவிட்டது.
10 இதைக் கண்ட ஒரு வீரன் யோவாபிடம் சென்று "இதோ! அப்சலோம் கருவாலி மரத்தில் தொங்குவதைக் கண்டேன்" என்று கூறினான்.
11 யோவாபு அதைச் சொன்னவனை நோக்கி, "என்ன? நீ கண்டாயா? அவனை ஏன் நீ அங்கேயே வெட்டித் தரையில் வீழ்த்தவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக் காசுகளையும் ஒரு கச்சையையும் தந்திருப்பேனே!" என்று கூறினார்.
12 அதற்கு அம்மனிதன் யோவாபிடம் கூறியது: "என் கையில் ஆயிரம் வெள்ளிக் காசுகளை நீர் நிறுத்துக் கொடுத்தாலும் அரசரின் மகனுக்கு எதிராக நான் கையோங்க மாட்டேன். 'இளைஞன் அப்சலோமுக்குத் தீங்கிழைக்க வேண்டாம்' என்று உமக்கும், அபிசாய்க்கும், இத்தாய்க்கும் அரசர் கட்டளையிட்டதை நாங்கள் கேட்டோமே!
13 மாறாக நான் என் மனச்சான்றுக்கு எதிராக நடந்திருந்தால் - அது அரசருக்குத் தெரியாமல் போகாது - நீர் என்னைக் கைவிட்டிருப்பீர்."
14 "உன்னோடு இவ்வாறு நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டு, யோவாபு தம் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச்சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார்.
15 மேலும் யோவாபின் படைக்கலன் தாங்கிய பத்துப்பேர் அப்சலோமைச் சூழ்ந்து வெட்டிக் கொன்றனர்.
16 யோவாபு எக்காளம் ஊத, வீரர்களை நிறுத்தி அவர்கள் இஸ்ரயேலைப் பின்தொடர்வதை விட்டனர்.
17 அவர்கள் அப்சலோமைத் தூக்கிச் சென்று காட்டில் ஒரு பெருங்குழியில் தள்ளி, அவன்மேல் பெரும் கற்குவியலை எழுப்பினர். அச்சமயம் இஸ்ரயேலர் அனைவரும் தம் வீடுகளுக்கு ஓடி விட்டனர்.
18 அப்சலோம் தனக்கு ஒரு மகன் இல்லாத காரணத்தால் தன் பெயரை நினைவுகூருவதற்காக, தன் வாழ்நாளிலேயே தனக்கென்று அரசக் கணவாயில் ஒரு தூண் நிறுவியிருந்தான். அதற்கு அவன் தன் பெயரையே வைத்தான். இந்நாள்வரை அது அப்சலோமின் நினைவுச் சின்னமாக இருக்கிறது.
தாவீது அப்சலோமின் இறப்பை அறிதல்
தொகு
19 சாதோக்கின் மகனாகிய அகிமாசு, "நான் ஓடி அரசரிடம் சென்று, ஆண்டவர் அவரைத் தன் எதிரிகளிடமிருந்து விடுவித்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்க அனுமதி தாரும்" என்று சொன்னான்.
20 அதற்கு யோவாபு, "இன்று நீ செய்தியை எடுத்துச் செல்ல வேண்டாம்; இளவரசர் இறந்து விட்டதால் இன்று வேண்டாம். வேறொரு நாள் செய்தியை எடுத்துச் செல்லலாம்" என்று சொன்னார்.
21 ஆனால், யோவாபு ஒரு கூசியனிடம் "நீ சென்று கண்டவை அனைத்தையும் அரசரிடம் சொல்" என்று சொல்ல, அவனும் யோவாபை வணங்கிட்டு ஓடிச் சென்றான்.
22 சாதோக்கின் மகன் அகிமாசு மீண்டும் யோவாபிடம், "என்ன நேரிடினும் நானும் கூசியனின் பின் ஓட எனக்கு அனுமதி தாரும்" என்று கேட்டான். "மகனே! இச்செய்தியை சொல்வதனால், உனக்கு எப்பரிசும் கிடைக்கப்போவதில்லை. பின் ஏன் நீ ஓட வேண்டும்?" என்று யோவாபு பதில் கூறினார்.
23 "நடப்பது நடக்கட்டும். நான் ஓட விரும்புகிறேன்" என்று அவன் மீண்டும் சொல்ல, "சரி, ஓடு" என்று யோவாபு மறுமொழி கூறினார். அகிமாசு குறுக்குப்பாதையில் ஓடி கூசியனை முந்திச் சென்றான்.
24 அப்போது தாவீது இரு வாயில்களுக்குமிடையே அமர்ந்துகொண்டிருந்தார். காவலன் மதிலின் வாயிலுக்கு மேல் ஏறிச் சென்று கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். ஓர் ஆள் தனியாக ஓடி வருவதைக் கண்டான்.
25 காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர், "தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது" என்றார். அந்த ஆள் இன்னும் அருகில் வந்துகொண்டிருந்தான்.
26 காவலன் இன்னொரு ஆளும் ஓடிவருவதைக் கண்டான். கண்டு, அவன் குரலெழுப்பி வாயில் காப்போனிடம். "இதோ, இன்னொருவன் தனியாக ஓடிவருகிறான்" என்று கூற அரசர், "இவனும் நற்செய்தி கொண்டு வருகிறான்" என்றார்.
27 "முதலில் வருகிறவனின் ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசின் ஓட்டத்தைப்போல் உள்ளது" என்று காவலன் உரைக்க, அதற்கு அரசர், "இவன் நல்லவன், இவன் நற்செய்தியோடு வருகிறான்" என்றார்.
28 அப்போது அகிமாசு குரலெழுப்பி, "நலம் உண்டாகுக!" என்று அரசரிடம் சொன்னான். அவன் முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அரசரை வணங்கி, "என் தலைவராம் அரசருக்கு எதிராகக் கையோங்கியவர்களை ஒப்படைத்த உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!" என்றான்.
29 "இளைஞன் அப்சலோம் நலமா?" என்று அரசர் வினவ, அகிமாசு, "அரச பணியாளனும் உம்அடியானுமாகிய என்னை யோவாபு அனுப்பும்போது அங்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால் அது என்னவென்று எனக்குத் தெரியாது" என்றான்.
30 அரசர் அவனை நோக்கி, "விலகி, அங்கே நில்" என்று கூற அவனும் விலகி நின்றான்.
31 அப்போது கூசியனும் வந்து, "என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் கரத்தினின்று உம்மை விடுவித்துள்ளார்" என்று கூறினான்.
32 "இளைஞன் அப்சலோம் நலமா?" என்று அரசர் வினவ, கூசியன், "என் தலைவராம் அரசரின் எதிரிகளும் உமக்கு எதிராகத் தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப் போல் ஆவார்களாக!" என்றான்.
33 அப்போது அவர் அதிர்ச்சியுற்று, "என் மகன் அப்சலோமே! என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே!" என்று கதறிக்கொண்டே அவர் வாயிலின் மாடியறைக்குச் சென்றார்.
(தொடர்ச்சி):சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை