திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/செக்கரியா/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை
செக்கரியா நூலை இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
முதற் பகுதி: 1 - 8 அதிகாரங்கள். இப்பகுதி கி.மு. 520 முதல் 518 வரையுள்ள காலத்தைச் சார்ந்தது. இதில் எட்டுக் காட்சிகள் அடங்கியுள்ளன. எருசலேமின் மீட்பு, கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற வாக்குறுதி, இறைமக்கள் தூய்மைப்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பு, மெசியாவின் வருங்கால ஆட்சி ஆகியன சிறப்பாக எடுத்துரைக்கப்படுகின்றன.
இரண்டாம் பகுதி: 9 - 14 அதிகாரங்கள். இப்பகுதியில் அடங்கியுள்ள குறிப்புகள் அனைத்தும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதி மெசியாவைப் பற்றியும் இறுதித் தீர்ப்பைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது (9:9).
செக்கரியா
தொகுநூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. எச்சரிப்பும் நல்லன குறித்த அறிவிப்பும் | 1:1 - 8:23 | 1394 - 1401 |
2. வேற்றினத்தாருக்கு வரும் தண்டனைத் தீர்ப்பு | 9:1-8 | 1401 |
3. வருங்கால வாழ்வும் செழுமையும் | 9:9 - 14:21 | 1401 - 1408 |
செக்கரியா (The Book of Zechariah)
தொகுஅதிகாரங்கள் 1 முதல் 2 வரை
அதிகாரம் 1
தொகுமக்கள் தம்மிடம் திரும்பிவர ஆண்டவரின் அழைப்பு
தொகு
1 தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் எட்டாம் மாதத்தில்
இத்தோவின் பேரனும், பெரக்கியாவின் மகனுமான
இறைவாக்கினர் செக்கரியாவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: [1]
2 "ஆண்டவர் உங்கள் மூதாதையர்மேல் கடுஞ்சினம் கொண்டிருந்தார்.
3 ஆகவே நீ அவர்களை நோக்கி இவ்வாறு சொல்:
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
'என்னிடம் திரும்பி வாருங்கள்,' என்கிறார் படைகளின் ஆண்டவர்.
4 உங்கள் மூதாதையரைப்போல் இருக்கவேண்டாம்;
முந்தைய இறைவாக்கினர் அவர்களை நோக்கி,
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
'உங்களுடைய தீய நெறிகளையும் தீச்செயல்களையும்விட்டுத் திரும்புங்கள்'
என்று முழக்கமிட்டனர்.
ஆனால் அவர்கள் எனக்குச் செவி சாய்க்கவில்லை;
என் சொல்லைப் பொருள்படுத்தவுமில்லை' என்கிறார் ஆண்டவர்.
5 உங்கள் மூதாதையர் இப்போது இருக்கிறார்களா?
இறைவாக்கினரும் என்றென்றும் உயிரோடிருப்பார்களா?
6 என் ஊழியராகிய இறைவாக்கினருக்கு நான் கட்டளை இட்ட
என் வாக்குகளும் நியமங்களும் உங்கள் மூதாதையர் மட்டில் பலிக்கவில்லையா?
ஆகையால் அவர்கள் மனம் வருந்தி,
'படைகளின் ஆண்டவர் எங்கள் செயலுக்கும் நடத்தைக்கும் ஏற்ப
எங்களுக்குச் செய்யத் திருவுளங்கொண்டு அவ்வாறு செய்தார்'
என்று சொல்லவில்லையா?"
குதிரைகள் பற்றிய காட்சி
தொகு
7 அரசன் தாரியு ஆட்சி செய்த இரண்டாம் ஆண்டின்
பதினோராம் மாதமாகிய செபாத்தின் இருபத்தி நான்காம் நாளன்று,
இத்தோவின் பேரனும் பெரக்கியாவின் மகனுமான
இறைவாக்கினர் செக்கரியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
அவர் கூறியது:
8 இதோ, சிவப்புக் குதிரைமேல் ஏறிவந்த மனிதர் ஒருவரை நேற்றிரவு கண்டேன்;
அவர் ஒரு பள்ளத்தாக்கின் நடுவே நறுமணம் வீசும்
பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்தார்;
அவருக்குப் பின்னால் சிவப்புக் குதிரைகளும் இளம் சிவப்புக் குதிரைகளும் நின்றன. [2]
9 அப்பொழுது நான், "என் தலைவரே, இவை எதைக் குறிக்கின்றன?" என்று கேட்க,
என்னோடு பேசிய தூதர்,
"இவை எதைக் குறிக்கின்றன என்று உனக்குக் காட்டுவேன்" என்றார்.
10 பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்த அவர் மறுமொழியாக,
"இவை உலகெங்கும் சுற்றி வரும்படி
ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்களைக் குறிக்கின்றன" என்றார்.
11 பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்த ஆண்டவருடைய தூதரிடம் அவர்கள்,
"நிலவுலகம் முழுவதும் நாங்கள் சுற்றிவந்தோம்;
மண்ணுலகம் முழுவதும் அமைதியில் ஆழந்துள்ளது" என்று கூறினார்கள்.
12 ஆண்டவரின் தூதர், "படைகளின் ஆண்டவரே,
இன்னும் எத்துணைக் காலத்திற்கு எருசலேமின் மேலும்
யூதாவின் நகர்கள் மேலும், கருணை காட்டாதிருப்பீர்?
இந்த எழுபது ஆண்டுகளாய் உமது சினத்தைக் காட்டினீரே" என்று பதில் அளித்தார்.
13 அதற்கு ஆண்டவர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரிடம்
இன்சொற்களையும் ஆறுதல் மொழிகளையும் கூறினார்.
14 ஆகவே, என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர் என்னை நோக்கி,
"நீ உரக்கக் கூவி அறிவிக்க வேண்டியது:
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
நான் எருசலேம் மீதும் சீயோன் மீதும் பெரிதும் அக்கறை கொண்டுள்ளேன்.
15 ஆனால் அமைதியுடன் இனிது வாழ்கின்ற
வேற்றினத்தார்மேல் கடும் சினம் கொண்டுள்ளேன்.
நான் சிறிதே சினமுற்றிருந்தபோது அவர்கள் பெரிதும் தீவினை செய்தார்கள்.
16 ஆதலால் இரக்கத்துடன் எருசலேமுக்குத் திரும்பி வருகிறேன்,"
என்கிறார் ஆண்டவர்.
"அங்கே என் இல்லம் கட்டப்படும்;
எருசலேமின்மேல் அளவு நூல் பிடிக்கப்படும்,"
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
17 மீண்டும் உரத்த குரலில் இவ்வாறு அறிவிப்பாயாக:
படைகளின் ஆண்டவர் அறிவிப்பது இதுவே:
என் நகர்கள் சீரும் சிறப்புமாய் இருக்கும்.
ஆண்டவர் சீயோனை மீண்டும் தேற்றுவார்;
எருசலேமைத் திரும்பவும் தேர்ந்துகொள்வார்.
கொம்புகள் பற்றிய காட்சி
தொகு
18 நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ,
நான்கு கொம்புகளைக் கண்டேன்.
19 என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி,
'இவை எதைக் குறிக்கின்றன?' என்று நான் வினவினேன்.
அதற்கு அவர், 'இவைதாம் யூதாவையும் இஸ்ரயேலையும்
எருசலேமையும் சிதறடித்த கொம்புகள்' எனப் பதிலளித்தார்.
20 அப்போது ஆண்டவர் கொல்லர்கள் நால்வரை எனக்குக் காண்பித்தார்.
21 'இவர்கள் எதற்காக வருகிறார்கள்?' என்று நான் கேட்டேன்.
அதற்கு அத்தூதர், 'எவரும் தலையெடுக்காதபடி
யூதாவைச் சிதறடித்த கொம்புகள் இவையே;
யூதா நாட்டைச் சிதறடிக்கும்படி தங்கள் கொம்புகளை உயர்த்திய
வேற்றினத்தாரின் கொம்புகளை உடைத்தெறியவும்
அவர்களைத் திகில் அடையச் செய்யவுமே இவை வந்திருக்கின்றன' என்று பதிலுரைத்தார்.
- குறிப்புகள்
[1] 1:1 = எஸ்ரா 4:24-5:1; 6:14.
[2] 1:8 = திவெ 6:2-8.
அதிகாரம் 2
தொகுஅளவு நூலைக் குறித்த காட்சி
தொகு
1 நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது,
இதோ, அளவு நுலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன்.
2 'எங்கே போகிறீர்?' என்று நான் அவரை வினவினேன்.
அதற்கு அவர், 'எருசலேமை அளந்து,
அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்" என்றார்.
3 என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில்
மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார்.
4 வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்:
ஒடிச்சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது:
'எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும்
திரளான கால்நடைகளும் இருப்பதால்
அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப்போல் இருக்கும்!
5 ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்;
அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்,' என்கிறார் ஆண்டவர்.
நாடுகடத்தப்பட்டோர் திரும்பிவர அழைப்பு
தொகு
6 "எழுந்திருங்கள், வடநாட்டிலிருந்து ஓடிவாருங்கள்,
என்கிறார் ஆண்டவர்;
உலகின் நான்கு திசைகளுக்கும் உங்களைச் சிதறடித்தவர் நானே,
என்கிறார் ஆண்டவர்.
7 பாபிலோனில் குடியிருக்கும் சீயோனே! தப்பிப் பிழைத்துக்கொள்.
8 என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர்
உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து,
'உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்' என்கிறார்."
9 'இதோ, அவர்களுக்கு எதிராக என் கையை ஓங்கப் போகிறேன்;
தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் ஆவார்கள்;
அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது
படைகளின் ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள்.
10 மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி;
இதோ நான் வருகிறேன்;
வந்து உன் நடுவில் குடிகொள்வேன்" என்கிறார் ஆண்டவர்.
11 அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்;
அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள்.
அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்;
நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார்
என்பதை அறிந்து கொள்வீர்கள்.
12 ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில்
தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார்.
எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார்."
13 மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாயிருங்கள்;
ஏனெனில் அவர் தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.
(தொடர்ச்சி): செக்கரியா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை