திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தானியேல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை
தானியேல் (The Book of Daniel)
தொகுஅதிகாரங்கள் 11 முதல் 12 வரை
அதிகாரம் 11
தொகு
1 "ஆனால் நான், மேதியனான தாரியுவின் முதல் ஆண்டிலிருந்தே
அவனைத் திடப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் அவனுக்கு அருகில் நின்றேன்."
2 "இப்பொழுது, நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துகிறேன்;
இதோ! இன்னும் மூன்று மன்னர்கள் பாரசீகத்தில் அரியணை ஏறுவார்கள்;
நான்காம் அரசன் மற்ற எல்லாரையும் விடப்
பெருஞ் செல்வம் படைத்தவனாய் இருப்பான்.
அவன் தன் செல்வத்தால் வலிமை பெற்ற பிறகு,
கிரேக்க அரசுக்கு எதிராக எல்லாரையும் தூண்டியெழுப்புவான்.
3 பிறகு வலிமைமிக்க அரசன் ஒருவன் தோன்றி,
மிகுதியான ஆற்றலோடு அரசாண்டு, தான் விரும்பியதை எல்லாம் செய்வான்.
4 அவன் உயர்நிலை அடைந்தபின், அவனது அரசு சிதைக்கப்பெற்று,
வானத்தின் நான்கு திசையிலும் பிரிக்கப்படும்;
ஆயினும் அது அவனுடைய வழிமரபினருக்குத் தரப்படாது.
அவனது ஆட்சிக்காலத்திலிருந்த வலிமையும் அதற்கு இராது.
ஏனெனில் அவர்களிடமிருந்து அவனுடைய அரசு பறிக்கப்பட்டு
வேறு சிலருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.
5 பின்பு தென்திசை மன்னன் வலிமை பெறுவான்.
ஆயினும் அவனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன்
அவனை விட வலிமை பெற்று ஆட்சி செய்வான்;
அவனது அரசும் மிகப் பெரியதாய் விளங்கும்.
6 சில ஆண்டுகள் சென்றபின்,
அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்து கொள்வார்கள்;
இந்தச் சமாதான உறவை உறுதிப்படுத்தத்
தென்திசை மன்னனின் மகள் வடதிசை மன்னனிடம் வந்து சேர்வாள்;
ஆனால் அவளது செல்வாக்கு நீடிக்காது;
அவனும் அவனது வழிமரபும் அற்றுப் போவார்கள்.
அவளும் அவளை அழைத்துவந்தவரும்,
அவளைப் பெற்றவனும், அவளைக் கைப்பிடித்தவனும் கைவிடப்படுவார்கள்.
7 அந்நாள்களில் அவளுடைய வேர்களிலிருந்து
அவனது இடத்தில் ஒரு முளை தோன்றும்.
அவ்வாறு தோன்றுபவன் பெரும் படையுடன் வந்து,
வடதிசை மன்னனின் கோட்டைக்குள் புகுந்து
அவர்களைத் தாக்கி முறியடிப்பான்.
8 அவர்களுடைய தெய்வங்களையும் சிலைகளையும்
விலையுயர்ந்த வெள்ளி,பொன் பாத்திரங்களையும்
எகிப்துக்குக் கொண்டு போவான்;
சில காலத்திற்கு வடதிசை மன்னன் மேல் படையெடுக்காமல் இருப்பான்.
9 பின்பு, வடதிசை மன்னன் தென்திசை மன்னனது
நாட்டின்மேல் படையெடுத்து வருவான்;
ஆனால் அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிருக்கும்.
10 பிறகு அவனுடைய மைந்தர்கள் திரளான,
வலிமைமிக்க படையைத் திரட்டிக்கொண்டு வருவார்கள்;
அவர்கள் பெருவெள்ளம் போலத் திடீரெனப் பாய்ந்துவந்து
மீண்டும் தென்னவனின் கோட்டைவரை சென்று போரிடுவார்கள்.
11 அப்பொழுது தென்திசை மன்னன் வெகுண்டெழுந்து புறப்பட்டுப்போய்
வடதிசை மன்னனோடு போரிடுவான்.
வடநாட்டான் பெரியதொரு படை திரட்டியிருந்தும்,
அப்படை பகைவன் கையில் அகப்படும்.
12 அப்படையைச் சிறைப்பிடித்ததால் தென்னவன் உள்ளம் இறுமாப்புக் கொள்ளும்.
பல்லாயிரம் பேரை அவன் வீழ்த்துவான்;
ஆயினும் அவன் முழு வெற்றி அடையமாட்டான்.
13 ஏனெனில் வடதிசை மன்னன் முன்னதைவிடப்
பெரிய படையை மீண்டும் திரட்டுவான்;
சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் திடீரெனப் பெரிய படையோடும்
மிகுந்த தளவாடங்களோடும் தாக்க வருவான்.
14 அக்காலத்தில் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பலர் எழும்புவர்.
உன் சொந்த இனத்தாரின் மக்களுள் வன்முறையில் ஈடுபடுகிறவர்களும்
காட்சியை நிறைவேற்றும்படி எழும்புவார்கள்.
ஆனால் அவர்கள் தோல்வியுறுவார்கள்.
15 வடதிசை மன்னன் வந்து முற்றுகையிட்டு
நன்கு அரண் செய்யப்பட்ட நகரத்தைக் கைப்பற்றுவான்;
தென்னகப் படைகள் எதிர்க்க வலிமையற்றுப் போகும்;
அப்படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும்
எதிர்த்து நிற்க முடியாது போவார்கள்;
ஏனெனில் அவர்களிடம் வலிமையே இராது.
16 வடதிசை மன்னன் தென்திசை மன்னனுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து
தன் மனம் போலச் செய்வான்;
அவனை எதிர்த்து நிற்பவன் எவனும் இல்லை;
சிறப்புமிக்க நாட்டினுள் நுழைந்து அது முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்துவான்.
17 அவன் முழு அரசின் வலிமையோடு படையெடுக்கத் திட்டமிடுவான்;
ஆகவே தென்திசை மன்னனோடு நட்புக் கொண்டாடுவது போல நடித்து,
அவனை வஞ்சகமாய் ஒழித்துக் கட்டும்படித்
தன் புதல்வியருள் ஒருத்தியை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான்;
ஆனால் அவன் நினைத்து நிறைவேறாது;
அந்த நாடும் அவனுக்குச் சொந்தமாகாது.
18 பிறகு அவன் தன் கவனத்தைக் கடலோர நாடுகள் மேல் திருப்பி,
அவற்றுள் பலவற்றைப் பிடிப்பான்;
ஆனால் படைத் தலைவன் ஒருவன் அவன் திமிரை அடக்கி
அத்திமிர் அவனையே அழிக்கும்படி செய்வான்.
19 ஆகையால் அவன் தன் சொந்த நாட்டின்
கோட்டைக்குள் திரும்பிவிட முடிவுசெய்வான்;
ஆனால் அவன் தடுமாறி விழுந்து அடையாளமின்றி அழிந்து போவான்.
20 நாட்டின் செழிப்பான பகுதிகளுக்கு
வரிவசூலிப்பவனை அனுப்பும் வேறொருவன்
அவனுக்குப் பதிலாகத் தோன்றுவான்.
அவன் எவரது சினத்தின் காரணமாகவோ போர் முனையிலோ சாகாமல்,
தானே மடிந்து போவான்.
21 அவனது இடத்தில் இழிந்தவன் ஒருவன் எழும்புவான்;
அவனுக்கு எவ்வித அரசுரிமையும் கிடையாது;
ஆயினும் எதிர்பாராத நேரத்தில் வந்து
முகப்புகழ்ச்சியால் அரசைக் கைப்பற்றிக் கொள்வான்.
22 அவனை எதிர்த்துப் போர் புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும்.
அவ்வாறே உடன்படிக்கை செய்து கொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான்.
23 உடன்படிக்கை செய்து கொண்ட பிறகும் அவன் வஞ்சகமாய் நடந்துகொள்வான்.
அவன் குடிமக்கள் சிலரே ஆயினும், அவன் வலிமை பெற்று விளங்குவான்.
24 செல்வச் சிறப்புமிக்க நகரங்களுள்
அவன் முன்னெச்சரிக்கை இன்றி நுழைந்து,
தன் தந்தையரும் முன்னோரும் செய்யாததை எல்லாம் செய்வான்;
அந்நகரங்களில் கொள்ளையடித்த பொருள்களையும்
கைப்பற்றிய செல்வங்களையும் வாரியிறைப்பான்;
அந்நகரங்களின் அரண்களைப் பிடிக்கப்
பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வான்;
ஆயினும் இந்த நிலை சிறிது காலமே நீடிக்கும்.
25 பிறகு அவன் தன் வலிமையை நம்பித் தென்திசை மன்னனுக்கு எதிராகப்
பெரும்படையோடு போரிடத் துணிந்து செல்வான்.
அப்பொழுது, தென்திசை மன்னனும் வலிமைமிக்க பெரும் படையோடு வந்து
போர்முனையில் சந்திப்பான்;
ஆனால் அவனுக்கு எதிராகச் சதித்திட்டங்கள் செய்யப்பட்டிருந்தபடியால்,
அவன் நிலைகுலைந்து போவான்.
26 அவனோடு விருந்துணவு உண்டவர்களே
அவனுக்கு இரண்டகம் செய்வார்கள்.
அவனுடைய படை முறியடிக்கப்படும்;
பலர் கொலையுண்டு அழிவார்கள்;
27 இரு அரசர்களும் ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய நினைப்பார்கள்;
ஒரே பந்தியில் இருந்து கொண்டே பொய் பேசுவார்கள்;
ஆயினும் அது அவர்களுக்குப் பயன் தராது;
ஏனெனில், முடிவு குறிக்கப்பட்ட காலத்தில் வரவிருக்கின்றது.
28 வடநாட்டு மன்னன் மிகுந்த கொள்ளைப் பொருள்களோடு
தன் நாட்டுக்குத் திரும்பிப் போவான்.
அவனுடைய உள்ளம் புனிதமான உடன்படிக்கைக்கு எதிராக இருக்கும்.
தான் நினைத்ததைச் செய்துமுடித்தபின் அவன் தன் நாட்டுக்குத் திரும்புவான்.
29 குறிக்கப்பட்ட காலத்தில் அவன் மறுபடியும் தென்னாட்டுக்கு வருவான்;
ஆனால் இம்முறை முன்புபோல் இராது.
30 அவனுக்கு எதிராக இத்தியர்கள் கப்பல்களில் வருவார்கள்;
அவனோ அவர்களுக்கு அஞ்சிப் பின் வாங்கிப் புறமுதுகிட்டு ஓடுவான்;
அவன் கடுஞ்சினமுற்று புனித உடன்படிக்கைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பான்;
மீண்டும் வந்து, புனித உடன்படிக்கையைக் கைவிட்டவர்கள்மேல்
தன் கவனத்தைத் திருப்புவான்.
31 அவனுடைய படை வீரர்கள் வந்து
திருக்கோவிலையும் கோட்டையையும் தீட்டுப்படுத்தி,
அன்றாடப் பலியை நிறுத்திவிட்டு,
'நடுங்கவைக்கும் தீட்டை' அங்கே அமைப்பார்கள். [1]
32 உடன்படிக்கையை மீறுகிறவர்களை அவன்
பசப்புமொழிகளால் தன் பக்கம் ஈர்ப்பான்.
ஆனால் தங்கள் கடவுளை அறிந்திருந்கும் மக்கள்
திடம் கொண்டு செயலில் இறங்குவார்கள்.
33 ஞானமுள்ள பலர் மக்களுக்கு அறிவூட்டுவார்கள்;
சில காலம் அவர்கள் வாளாலும் நெருப்பாலும்
சிறைத் தண்டனையாலும் கொள்ளையினாலும் மடிவார்கள்.
34 அவர்கள் வீழ்ச்சியுறும்போது,
அவர்களுக்கு உதவி செய்ய ஒருசிலர் இருப்பர்;
ஆயினும் அவர்களது துணைக்கு வருபவர்
தன்னல நோக்குடனே உதவி செய்வர்.
35 ஞானிகள் சிலர் கொல்லப்படுவர்.
இதன்மூலம் மக்கள் புடம்போடப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு
வெண்மையாக்கப்பெறுவர்.
இறுதியாக, குறிக்கப்பட்ட முடிவு காலம் வரும்.
36 "அரசன் தன் மனம்போன போக்கில் நடந்துகொள்வான்.
அவன் தன்னையே உயர்த்திக்கொள்வான்;
எல்லாத் தெய்வத்திற்கும் மேலாகத் தன்னையே
பெருமைப்படுத்திக் கொண்டு தெய்வங்களுக்கெல்லாம்,
இறைவனானவர்க்கே எதிராகப் பழிச்சொற்களைப் பேசுவான்.
இறைவனின் சினம் நிறைவேறும் நாள் வரும்வரை
அவன் வாழ்க்கை வளம்பெறும்;
ஏனெனில், குறிக்கப்பட்டது நடந்தேற வேண்டும். [2]
37 அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ
வேறெந்தத் தெய்வத்தையோ பொருட்படுத்தாமல்,
அவற்றுக்கெல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக் கொள்வான்.
38 அவற்றிற்குப் பதிலாக, அரண்களின் தெய்வத்தை மட்டும் வணங்குவான்.
தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்தை
அவன் பொன்னாலும் வெள்ளியாலும் மாணிக்கக் கல்லாலும்
விலையுயர்ந்த பொருள்களாலும் பெருமைப்படுத்தி வழிபடுவான்.
39 தன் வலிமைமிக்க கோட்டைகளின் காவலர்களாக,
அயல் தெய்வத்தை வழிபடும் மக்களை நியமிப்பான்.
அவனை அரசனாக ஏற்றுக்கொண்டவர்களைச் சிறப்பித்து,
மக்களின் அதிகாரிகளாக நியமித்து,
பணத்திற்காக நிலத்தைப் பிரித்துக் கொடுப்பான்.
40 முடிவுக்காலம் வரும்போது தென்திசை மன்னன் அவனைத் தாக்குவான்;
வடதிசை மன்னனும் தேர்ப்படை, குதிரை வீரர்கள்,
கப்பற்படை ஆகியவற்றுடன் சுழற்காற்றைப் போல் அவனை எதிர்த்து வருவான்;
அவன் நாடுகளுக்குள் வெள்ளம்போல் பாய்ந்து
அழிவு விளைவித்துக்கொண்டே போவான்;
41 பிறகு அவன் சிறப்புமிக்க நாட்டினுள் நுழைவான்.
பல்லாயிரக் கணக்கானோர் அழிக்கப்படுவர்;
ஆனால் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியரின் தலைவர்கள்
ஆகியோர் மட்டும் தப்பித்துக்கொள்வர்.
42 அவன் மற்ற மாநிலங்கள் மேலும் தன் கையை ஓங்குவான்.
43 அவன் கைக்கு எகிப்து நாடும் தப்பாது.
அங்குள்ள பொன், வெள்ளி முதலிய செல்வங்களையும்,
விலையுயர்ந்த எல்லாப் பொருள்களையும் கைப்பற்றிக்கொள்வான்.
லிபியரும் எத்தியோப்பியரும் அவன் பின்னே செல்வார்கள்.
44 ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள்
அவனைக் கலங்கச் செய்யும்.
பலரைக் கொன்றொழிப்பதற்கு அவன் பெரும் சீற்றத்துடன் புறப்பட்டுச் செல்வான்.
45 பிறகு கடலுக்கும் மாட்சிமிகு திருமலைக்கும் இடையே
தன் அரச கூடாரங்களை அமைப்பான்;
ஆயினும் உதவி செய்வார் யாருமின்றி அவன் தன் முடிவைக் காண்பான்.
- குறிப்புகள்
[1] 11:31 = தானி 9:27; 12:11; மத் 24:15; மாற் 13:4.
[2] 11:36 = 2 தெச 2:3-4; திவெ 13:5-6.
அதிகாரம் 12
தொகுமுடிவின் காலம்
தொகு
1 அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார்.
மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும்.
அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர்.
நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ,
அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். [1]
2 இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்;
அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்;
வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். [2]
3 ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும்,
பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும்,
என்றென்றம் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
4 தானியேல்! நீ குறித்த முடிவுகாலம் வரும்வரை
இந்த வார்த்தைகளை மூடி வைத்து இந்த நூலை முத்திரையிட்டுவை.
உலகில் நிகழ்வதைப் பலர் தெரிந்து கொள்ள வீணிலே முயற்சிசெய்வர்." [3]
5 அப்பொழுது, ஆற்றுக்கு இக்கரையில் ஒருவரும்
அக்கரையில் ஒருவருமாக இருவர் நிற்பதைத் தானியேல் ஆகிய நான் கண்டேன்.
6 அப்பொழுது, மெல்லிய பட்டாடை உடுத்தி
ஆற்றுநீரின்மேல் நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி,
"இந்த விந்தைகள் எப்பொழுது முடிவுக்கு வரும்?" என்று கேட்டேன்.
7 அப்பொழுது, மெல்லிய பட்டாடை உடுத்தி
ஆற்று நீரின்மேல் நின்றுகொண்டிருந்த அந்த மனிதர்
தம் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி,
"இன்னும் மூன்றரை ஆண்டுகள் கடந்தபின்,
புனித மக்களின் ஆற்றலைச் சிதறடிப்பது முடிவுறும் வேளையில்,
இவை யாவும் நிறைவேறும்" என்று
என்றும் வாழ்பவரின் பெயரால் ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டேன். [4]
8 நான் அதைக்கேட்டும் அதன் பொருளை அறிந்து கொள்ளவில்லை.
அப்பொழுது அவரை நோக்கி,
"என் தலைவரே! இவற்றிற்குப் பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டேன்.
9 அதற்கு அவர், "தானியேல்! நீ போகலாம்;
குறிக்கப்பட்ட நாள் வரையில் இந்தச் சொற்கள் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும்.
10 பலர் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வர்; புடம்போடப்படுவர்;
தம்மை வெண்மையாக்கிக் கொள்வர்;
பொல்லாதவர் தீய வழியில் நடப்பர்;
அவர்கள் அதை உணரவும் மாட்டார்கள்;
ஆனால் ஞானிகள் உணர்ந்து கொள்வார்கள். [5]
11 அன்றாடப் பலி நிறுத்தப்பட்டு
'நடுங்கவைக்கும் தீட்டு' அமைக்கப்படும் காலம்வரை
ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும். [6]
12 ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்வரை காத்திருப்பவரே பேறு பெற்றவர்.
13 நீயோ தொடர்ந்து வாழ்வை முடி;
நீ இறந்து அமைதி பெறுவாய்;
முடிவு காலம் வந்தவுடன் உனக்குரிய பங்கைப்
பெற்றுக் கொள்ள நீ எழுந்து வருவாய்" என்றார்.
- குறிப்புகள்
[1] 12:1 = மத் 24:21; மாற் 13:19; திவெ 7:14; 12:7.
[2] 12:2 = எசா 26:19; மத் 25:46; யோவா 5:29.
[3] 12:4 = திவெ 22:10.
[4] 12:7 = திவெ 10:5; 12:14.
[5] 12:10 = திவெ 22:11.
[6] 12:11 = தானி 9:27; 11:31; மத் 24:15; மாற் 13:14.
(தானியேல் நூல் நிறைவுற்றது)
(தொடர்ச்சி): ஒசேயா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை