திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 111 முதல் 112 வரை
திருப்பாடல்கள்
தொகுஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 111 முதல் 112 வரை
திருப்பாடல் 111
தொகுஆண்டவரைப் போற்றுதல்
தொகு
1 அல்லேலூயா!
நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்;
நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும்
அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;
அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும்
அவற்றை ஆய்ந்துணர்வர்.
3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது;
அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.
4 அவர் தம் வியத்தகு செயல்களை
என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்;
அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.
5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு
உணவு அளிக்கின்றார்;
தமது உடன்படிக்கையை
என்றும் நினைவில் கொள்கின்றார்;
6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத்
தம் மக்களுக்கு அளித்தார்;
இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை
அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை;
நீதியானவை;
அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை.
8 என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை;
உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை.
9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;
தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;
அவரது திருப்பெயர் தூயது;
அஞ்சுதற்கு உரியது.
10 ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்;
அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்
நல்லறிவுடையோர்;
அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. [*]
- குறிப்பு
[*] 111:10 = யோபு 28:8; நீமொ 1:7;9:10.
திருப்பாடல் 112
தொகுகடவுளுக்கு அஞ்சி நடப்போர்
தொகு
1 அல்லேலூயா!
ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்;
அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2 அவர்களது வழிமரபு பூவுலகில்
வலிமைமிக்கதாய் இருக்கும்;
நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும்.
3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்;
அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4 இருளில் ஒளியென அவர்கள்
நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்;
அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.
5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்;
அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்;
நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது;
ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால்
அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்;
அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;
இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.
9 அவர்கள் வாரி வழங்கினர்;
ஏழைகளுக்கு ஈந்தனர்;
அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். [*]
10 தீயோர் அதைப் பார்த்து எரிச்சல் அடைவர்;
பல்லை நெரிப்பர்;
சோர்ந்து போவர்;
தீயோரின் விருப்பமெல்லாம் வீணாய்ப்போம்.
- குறிப்பு
[*] 112:9 = 2 கொரி 9:9.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 113 முதல் 114 வரை