திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 147 முதல் 148 வரை

"அவர் வானத்தை மேகங்களால் மறைக்கின்றார்; பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்; மலைகளில் புல்லை முளைக்கச் செய்கின்றார்" (திருப்பாடல்கள் 147:8)

திருப்பாடல்கள்

தொகு

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 147 முதல் 148 வரை

திருப்பாடல் 147

தொகு

எல்லாம் வல்ல இறைவன் போற்றி!

தொகு


1 அல்லேலூயா!
நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது;
அவரைப் புகழ்வது இனிமையானது;
அதுவே ஏற்புடையது.


2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்பிகின்றார்;
நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார்;


3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்;
அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.


4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,
அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார்.


5 நம் தலைவர் மாண்புமிக்கவர்;
மிகுந்த வல்லமையுள்ளவர்;
அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.


6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்;
பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.


7 ஆண்டவருக்கு நன்றி செலுத்திப் பாடுங்கள்;
நம் கடவுளை யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.


8 அவர் வானத்தை மேகங்களால் மறைக்கின்றார்;
பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்;
மலைகளில் புல்லை முளைக்கச் செய்கின்றார்.


9 கால்நடைகளுக்கும்
கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும்,
அவர் இரை கொடுக்கின்றார்.


10 குதிரையின் வலிமையில் அவர் மகிழ்ச்சி காண்பதில்லை;
வீரனின் கால்வலிமையையும் அவர் விரும்புவதில்லை.


11 தமக்கு அஞ்சி நடந்து தம் பேரன்புக்காக
நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம் அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.


12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!


13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்;
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.


14 அவர் உன் எல்லைப்புறங்களில்
அமைதி நிலவச் செய்கின்றார்;
உயர்தரக் கோதுமை வழங்கி
உன்னை நிறைவடையச் செய்கின்றார்.


15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்;
அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.


16 அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்;
சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார்;


17 பனிக்கட்டியைத் துகள் துகள்களாக விழச் செய்கின்றார்;
அவர் வரவிடும் குளிரைத் தாங்கக் கூடியவர் யார்?


18 அவர் தம் கட்டளையால் அவற்றை உருகச் செய்கின்றார்;
தம் காற்றை வீசச் செய்ய, நீர் ஓடத் தொடங்குகின்றது.


19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும்
இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்
நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.


20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை;
அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது;
அல்லேலூயா!


திருப்பாடல் 148

தொகு

அனைத்துலகே, ஆண்டவரைப் போற்றிடு!

தொகு


1 அல்லேலூயா!
விண்ணுலகில் உள்ளவையே,
ஆண்டவரைப் போற்றுங்கள்;
உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.


2 அவருடைய தூதர்களே,
நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்;
அவருடைய படைகளே,
நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.


3 கதிரவனே, நிலாவே,
அவரைப் போற்றுங்கள்;
ஒளிவீசும் விண்மீன்களே,
அவரைப் போற்றுங்கள்.


4 விண்ணுலக வானங்களே,
அவரைப் போற்றுங்கள்;
வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே,
அவரைப் போற்றுங்கள்.


5 அவை ஆண்டவரின் பெயரைப் போற்றட்டும்;
ஏனெனில், அவரது கட்டளையின்படி
எல்லாம் படைக்கப்பட்டன;


6 அவரே அவற்றை என்றென்றும் நிலைபெறச் செய்தார்;
மாறாத நியமத்தை அவற்றிற்கு ஏற்படுத்தினார்.


7 மண்ணுலகில் ஆண்டவரைப் போற்றுங்கள்;
கடலின் பெரும் நாகங்களே, ஆழ்கடல் பகுதிகளே,


8 நெருப்பே, கல்மழையே,
வெண்பனியே, மூடுபனியே,
அவரது ஆணையை நிறைவேற்றும் பெருங்காற்றே,


9 மலைகளே, அனைத்துக் குன்றுகளே,
கனிதரும் மரங்களே, அனைத்துக் கேதுரு மரங்களே,


10 காட்டு விலங்குகளே, அனைத்துக் கால்நடைகளே,
ஊர்ந்து செல்லும் உயிரினங்களே, சிறகுள்ள பறவைகளே,


11 உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே,
தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,


12 இளைஞரே, கன்னியரே,
முதியோரே மற்றும் சிறியோரே,
நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.


13 அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக;
அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது;
அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.


14 அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்;
அவருடைய அனைத்து அடியாரும்
அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய
இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள்.
அல்லேலூயா!


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 149 முதல் 150 வரை