திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 23 முதல் 24 வரை

"ஆண்டவரே என் ஆயர்" (திபா 23). கற்பதிகைத் திருவோவியம். காலம்: ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி. காப்பிடம்: ரவேன்னா, இத்தாலி.

திருப்பாடல்கள்

தொகு

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 23 முதல் 24 வரை

திருப்பாடல் 23

தொகு

ஆண்டவரே நம் ஆயர்

தொகு

(தாவீதின் புகழ்ப்பா)


1 ஆண்டவரே என் ஆயர்;
எனக்கேதும் குறையில்லை.


2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; [*]
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.


3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;


4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்
நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.


5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே
எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;
எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.


6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்
உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.


குறிப்பு

[*] 23:2 = திவெ 7:17; 24:1; 1 கொரி 10:26.


திருப்பாடல் 24

தொகு

மாவேந்தரின் வருகை

தொகு

(தாவீதின் புகழ்ப்பா)


1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.


2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்;
ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே.


3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?


4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்;
வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர், [1]


5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.


6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே;
யாக்கோபின் கடவுளது முகத்தைத் [2] தேடுவோர் இவர்களே. (சேலா)


7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.


8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்;
இவரே போரில் வல்லவரான ஆண்டவர்.


9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.


10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்;
இவரே மாட்சிமிகு மன்னர்.


குறிப்புகள்

[1] 24:4 = மத் 5:8.
[2] 24:6 "யாக்கோபே! உனது முகத்தை" என்பது எபிரேய பாடம்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 25 முதல் 26 வரை